ந.பிச்சமூர்த்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2025
பார்வையிட்டோர்: 366 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு சமயம், வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் (திருவல்லிக்கேணீ ) பிச்சமூர்த்தி அவர்களின் வீட்டுக்குப் போயிருந்த சமயத்தில், அவர் அப்போதுதான் ஸ்நானம் செய்துவிட்டுக் குளியலறையிலிருந்து வெளிப்பட்டுக்கொண் டிருந்தார்.(என்ன மெலிந்த உடல்!) அவர் கழுத்தில் மாலை யாகத் தொங்குவது கண்டு, நானும் என் பூணூலை மாலை யாகப் போட்டுக்கொண்டு, வீட்டில் ஒரு வாரம் வளையம் வந்தேன். 

ஆனால், நிமிஷமாக, அம்மா இதற்கு முற்று வைத்து விட்டாள். என் மனைவியிடம் சொல்லி அனுப்பினாள்: “அவனை ஒழுங்காயிருக்கச் சொல்லு. எனக்கு என் ஈமக் கடன்களுக்கு இன்னும் வேளை வரவில்லை.” 

இதை அவள் என்னிடம் நேரிடையாகச் சொல்லி யிருக்கலாம். ஆனால், உடனே கீழ்ப்படிய வேண்டிய கட்டளையானால். அது யார் மூலமேனும்தான் வரும். உடனே நிறைவேறியும்விடும். அதுதான் என் அம்மா. 

எனக்குப் பிச்சமூர்த்தி “ஸ்டார்”. இந்த நாளில் சினிமா ஸ்டார்கள் ஓங்கியிருந்தால்,நான் குறிப்பிட்ட காலத்தில் எழுத்தாளனுக்கு ‘மவுஸ்’ கூடியிருந்தது. இத்தனைக்கும் அவனுடைய ரசிகர் வட்டம் குறுகல்தான். மிக்கக் குறுகல் ஆனால் அதனுள் அவன் ஒரு ‘க்ளாமரை அனுபவித்தான். இப்பவும்தான் சினிமா நடிக நடிகையர் எத்தனை விளம்பரம் அனுபவித்தாலும், அவர்களுக்கும் எழுதிப் பிரபலமடையத் தனி ஆசை. ஏனோ தெரியவில்லை.
 
நான் எழுத்தாளன். ஆனால் பிச்சமூர்த்தி எனக்கு ‘ஸ்டார்’ பிச்சமூர்த்தியின் எழுத்துக்குத்தான் நான் முதலில் பரிச்சயமானேன். அப்போதுதான் நான், எழுத்துலகில் அடி வைத்திருந்த காலம். என் நிலை, சின்னக் குழந்தை தட்டுத் தடுமாறி, தடுக்கி விழுந்து, எழுந்து, நடை பழகு வதுபோல. அப்போது, இன்னும் புத்தக உருவில் வராது, ஒன்றை நான்காக மடித்த ‘ரோஸ்’ டின்ட்பேப்பரில் ஒருநாள் அவர் கதை கண்டேன். கதைத் தலைப்பு “வெண்கலப் யானை” கதை ஞாபகமில்லை. ஐம்பது வருஷ சமாச்சாரம் பேசுகிறேன். 

இப்பவே சொல்லிவிடுகிறேன், இங்கே நீங்கள் காண்ப தெல்லாம் அனேகமாக முப்பது நாற்பது வருஷ சமாச்சாரங்கள்தான். 

ஆனால் மல்லனுக்கு மல்லன், கைகலக்கு முன்னர், கண் ணோட்டத்திலேயே, எதிரி பலம் உணர்வதுபோல, அந்தச் சொல் அழுத்தமும், தன்னம்பிக்கையும், கதையில் ஏற்றி யிருக்கும் மன தீர்க்கமும் Concentration – அம்மாடி!- இந்த உன்னதத்துக்கெதிர் நான் எந்த மூலை? உண்மை யிலேயே ஒடுங்கிப்போனேன். 

அப்போது எழுத்துலகில் எனக்கு ஆதரவு, தைரியம், அடைக்கலம் எல்லாமே தி.ஜ.ர.தான். 

எனக்குப் பிச்சமூர்த்தி மாதிரி எழுத வருமா, ஸார்?” என் குரலின் தீனம், இப்போது லேசான சிரிப்புடன் நினைவு வருகிறது. 

தி.ஜ.ர. கனிவுடன், “பிச்சமூர்த்தி என்ன, அவருக்கு மேலாகவே உன்னால் எழுத முடியும், மண்டைக்கனம் காணாமல் இருந்தால், அவரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 

இது நடந்த ஒரு வாரத்துக்குள் மாலை, மெரீனா கடற்கரையில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கூடிப் பேசு மிடத்தில் பிச்சமூர்த்தியைச் சந்தித்தேன் – இல்லை பார்த்தேன். பல நாள்கள் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. நா எழவில்லை. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. புதுமைப்பித்தன், சி.சு செல்லப்பா. தி.ஜ.ர.பி.எஸ் ராமையா, ந.தம்பர சுப்ரமணியன், சிட்டி முதலியோர் இருக்கும் இந்த ‘ஸதஸ்’ஸில் நான் யார்? – கோழிக் குஞ்சு. 

“என்னவோய், பூச்சாண்டி காட்டுகிறீர்களா?” என்று இப்போ கேட்பவர் கேட்கக்கூடும். 

நண்பனே, அப்படி அன்று. 

இவர்களைப் பார். இவர்கள் வெறும் எழுத்தாளர்கள் ல்லை. இவர்கள் எழுத்தின் உபாஸகர்கள். இவர்கள் பொருளாதாரம் மிக்க நலிவானது. என்றுமே சுளுவா யிருந்ததில்லை.ஏசு.ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்கள் போன்று, இவர்கள் எழுத்தின் பைராகிகள். அது காந்தி யுகம். இவர்களுக்கு லக்ஷியங்கள் உண்டு நாளைச் சூரியனுக்கு நாம் இருக்கிறோமோ இல்லையோ, நாளைக்குச் சூரியன் உண்டு’ என்கிற திட நம்பிக்கை கொண்டவர்கள். அந்த நம்பிக்கையில், நம்பிக்கைக்காகவே வாழ்ந்தவர்கள். எழுத்தில் ஏதோ தரிசனம் கிடைத்து, அதுவே பித்தாய் அலைபவர்கள். எழுத்தில் சம்பிரதாயமான முகப்புக்களுக்கு எதிர்நீச்சல் போட்டு புது முகடுகளைத் தேடி நீந்துபவர்கள். 

இவர்களுக்குச் சமுதாயத்தின் வெகுமதி பட்டினி, கஷ்டம், ஓயாத நெருக்கடி, சோதனைகள். இவர்களுடைய எழுத்தாற்றலுக்கு மட்டும் இவர்களை நான் வணங்கவில்லை. இவர்களிடம் ஒரு அடிப்படையான நாணயம், மானுடத்தின் சுயகௌரவம் இருந்தது. 

தீக்குள் விரலை 
வைத்தால் நந்தலாலா 
நின்னைத் தீண்டும் இன்பம் 

தோன்றியிருப்பது இவர்கள் சிலரிடம், சில சமயங்களில் அடையாளம் தெரிந்தது. இவர்களிடையே பிச்சமூர்த்தி, தன் தாடியுடன், ரிஷிபோல் விளங்கினார். 

தி.ஜ.ர. அவரிடம் என்னைச் சற்றுமுன் தள்ளினார். “இந்தப் பையனை நீங்கள் படித்துப் பார்க்கணும் – இவ னிடம் நல்ல அடையாளங்கள் தெரிகின்றன. உங்கள் எழுத்தில் ஒரேயடியாய்ச் சொக்கிப் போயிருக்கிறான். 

அவர் கன்னங்களில் — தாடி தாண்டித் தெரிந்தவரை சந்தோஷகரமான லஜ்ஜைச் சிவப்பு ஏறிற்று. ஏற்கெனவே செவந்த மேனி. என்மேல் கண்கள் – வீக்ஷண்யம் நிறைந்து துருவும் கண்கள், கோபமற்ற அக்னி. பெரிய மேட்டு விழிகள். நடுவகிடிலிருந்து மயிர்ச் சுருள்கள் செவியோரங்களில் கரும்பட்டுக் குஞ்சங்களென ஆடின. இந்த மனிதனின் காந்த சக்தியை உணர நேரம் தேவையில்லை. 

அவர் முன்னிலையில் எனக்கு நாக்கு அவிழ நாள்கள் ஆயின. அதனால் என்ன, எனக்கு அவருடைய பாவனை களையும் இப்போதைக்குக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். 

சில சமயங்களில், இதுபோல் நேர்ந்துவிடுகிறது காரணமேயில்லாத அபிமானம். பின்னால் அந்தக் காரணங் கள் நேரலாம். நேராமலுமிருக்கலாம். ஆனால் காரணம் ரண்டாம் பக்ஷம். சில சமயங்களில் இதுபோல் நேர்ந்து விடுகிறது. 

இது சாக்கில் உரக்கச் சிந்திக்கிறேன். பக்தி ருசி, பக்தி பண்ணுபவன்தான் அறிவான். பக்தி என்பதே என்ன? 

முதல் சந்திப்பின் தணியாத புதுமை. 
பழகப் பழக ஊறிப் பெருகும் ப்ரேமை.
மரியாதை. 
கூடவே இனம்புரியாத ஒரு பயம். 
தொடர்ந்து, பிறவியின் தனிமையின் ஏக்கம். 
வைகளின் கலவையின் அமிர்தம்தான் பக்தி. 

பிச்சமூர்த்தியிடம் ஒரு நாயகத் தன்மையிருந்தது. அந்தக் கூட்டத்தில்–கூட்டம் என்ன கூட்டம், அதிகப்படி யானால் எட்டு, பத்து, குறைந்தால் அஞ்சு, ஆறு! ஆனால் அங்கு புரண்ட விஷயங்களுக்கு, அதுதான் உண்மையான இலக்கியப் பட்டறை – 

அந்தக் கூட்டத்தில் அவர் என்ன பேசினாலும், அவரிடம் யாவரும் கண்ணும் செவியும் கவனமும் ஒருமித்து இருந்தனர். அவர்தான் வயதிலும், அனுபவத்திலும், ஞானத்திலும் பெரியவர் என்பதில் அங்கு யாவருக்கும் சந்தேகமேயில்லை. தன் குரல் முன்னால் கேட்கவேண்டும் எனும் ஆசைகொண்டவர் அங்கு யாருமில்லை. 

பிச்சமூர்த்தியின் பேச்சில் வர்ணங்கள்,கர்ணங்கள் வார் (Bar) விளையாட்டுக்கள் காணமுடியாது. எப்பவும் ஒரு கச்சிதம், ரத்னச் சுருக்கம். பேசி நிறுத்தியதும், இன்னும் கொஞ்சம் சொல்லமாட்டாரா எனும் ஆசை தூண்டம். பட்டுத் தவிக்கும். 

“ராஜகோபாலா!” 

(கு.ப.ரா.வை முழுப் பெயர் சொல்லி அவர்தான் அழைத்துப் பார்த்தேன்!) 

‘செல்லப்பா! 

‘சிட்டி!” 

‘ராமையா!’ 

குரலில் லேசான நடுக்கம். என்ன கனிவு ! அப்பவே என் ஆசை; என்னை அப்படி எப்போது அழைப்பார் என்று எதிர் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அந்தப் பேறு எனக்குக் கடைசிவரை கிட்டவில்லை. ‘வாங்கோ, போங்கோ’ என்று தான் விளித்தார். பன்முறை ஆக்ஷேபித் தும் பார்த்துவிட்டேன். இத்தனைக்கும் நான் பதினைந்து வயதேனும் சிறியவன். 

சரி, என்ன அந்தக் கூட்டத்தில் பேசினார்? இலக்கியம், வசனம், கவிதை, விமர்சனம் எல்லாம்தான். என் நல் அதிர்ஷ்டம். எனக்கு அவருடைய பரந்த வீச்சு இல்லா விட்டாலும் என் தகப்பனார் எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்திருந்த முறையில் எனக்கு அந்த பாஷையில் ருசி ஏற்பட்டு, மேனாட்டு இலக்கியத்துடன் அந்த வயதிலேயே கணிசமான புழக்கம் இருந்தமையால் அவருடைய விவாதங் களையும், விவாத நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு ரஸிக் கவும் முடிந்தது. அதனால் என் திருஷ்டி விரிவடைந்து பயனும் அடைந்தது. 

மேற்கண்ட விவரங்கள், பொதுவாகப் பிச்சமூர்த்தி பேச மனமில்லாதவர். தன் தந்தக் கோபுரத்தைவிட்டு இறங்காதவர் என்கிற தப்பு அபிப்பிராயம் தந்தால், அது, என் துர்ப்பாக்கியமே. அவர் கோபுரமே கொண்டாடியதில்லை. பேச்சு கச்சடாவாக இருக்காதே தவிர, கலகலப் பானவர்தான். சகஜமாகப் பழகும் தன்மையுடையவர். அவருடைய சான்னித்யம் எனக்கு அவரைச் சுற்றிக் கயிறு கட்டினால், அதற்கு அவர் என்ன செய்வார்? 

பிச்சமூர்த்தியின் எழுத்தும் அவருடைய பேச்சுப் போலத் தான். படாடோபம், படபடப்பு, அலங்காரங்கள் ல்லாமல் நறுக்குத் தெறித்த நடை. செறிந்த உலக அனுபவத்தில் தோய்ந்து, அதிலேயே விளைந்து, விஷயத்திற்கு அழுத்தம் தரும் உவமைகள். பின்னோக்கில் இன்னொரு சிறப்பும் அவர் பாணியில் படுகிறது. இன்னமும் படிக்க மறு பக்கத்தைத் திருப்பினால், ஆச்சர்யம், அங்கு ஒன்றும் இருக்காது. ஏனெனில், முந்திய பக்கத்திலேயே முடிந்துவிட்டது இப்படி, கதை முழுமை அடையாமல் ஏமாற்றிவிட்டதா? அப்படி எண்ணினால் தவறு. விளக்கப்புகின், எனக்குத் தோன்றுவதைச் சொல்லுகிறேன் – படித்து முடித்த பின்னரும் விஷயத்தின் உயிர்மூச்சு படித்தவன் நெஞ்சில் மிதப்பலாடு கிறது. அதாவது என்னதான் நீ கதையாகவும்,நாவலாகவும். கவிதையாகவும், காவியமாகவும் எழுதித் தள்ளினாலும் ஓவியமாகத் தீட்டினாலும், தத்துவமாகப் பேசித் தள்ளி னாலும் வாழ்க்கை நூலின் மறுநுனி காணவே முடியாத நூல் கண்டு என்கிற உணர்வு நினைவில் இடறிக்கொண்டேயிருக் கிறது. இதைஒரு அபூர்வ சாதனையாகவே கருதவேண்டும் The endless continuous mystery and mysticism of life- அவரைக் கொடியின் இயல்பு ஓயாத, முடிவற்ற படர்ச்சி. 

வாழ்க்கை, ஒரு சட்டையுரிப்பு என்று பிச்சமூர்த்தி அடிக்கடி சொல்வார். இது ஒன்றும் புதிதல்ல, வெங்காயத் தோல் தத்துவம்தான் என்றாலும், அனுபவத்தின் முத்திரை யுடன் அவரிடமிருந்து வெளிப்படும்போது, அழுந்தத்தான்’ கவனம், அவர் பேச்சை வாங்கிக்கொண்டது. 

கலைமகளில் ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். குறு நாவல் என்பதைவிட, நீண்ட கதை. அதில் இரவு வேளைதில் இரவு வேளை யில் இயற்கையின் வருணனை வருகிறது. இரவின் இருளில் இரவின் ஓசைகளுடன், நட்சத்திரங்களுடன் உவமைகளை வாரியிறைத்து, இரவே நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. அப்பப்ப! என் ப்ரமிப்பை அவரிடம் தெரிவித்துக்கொள்ள முயன்றபோது, (எப்படி எழுதினீர்கள்?’) அவர் அதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட்டார். “என்னமோ வந்தது எழுதிவிட்டேன்.” 

அப்படியானால், இவர் அடித்துத் திருத்துவதில்லையா? இடங்களைத் திருப்பி எழுதுவதில்லை. Fair Copy என்பதே இல்லையா? மேற்கூறியவையெல்லாம் இன்னமும் என் அவஸ்தைகள். ஆனால், எங்கள் இடையில் வயது வித்தியா சத்தில், ஏற்கெனவே நான் வகுத்துக்கொண்டுவிட்ட வேறு வித்தியாசங்களில், என் கேள்விகளை அவரிடம் எப்படிக் கேட்பேன்? 

இதையொட்டி அவர்: “”Creative urge, energy ஆக மாறும்போது, செலவாகிவிட வேண்டுமென்பதுதான். 

அதன் ஒரே வேதனை, ஒரே அவஸ்தை, ஒரே function. கடலில் உருவாகித் திரண்டுவிட்ட அலை, கரையில் மோதி உடைந்து பரவித்தானே ஆகவேண்டும். அதனால் வேறு என்னதான் முடியும்? அவரை நாங்கள் ஏகமாக மதித் தோம். ஆனால், அவர் தன்னைப்பற்றி என்னதான் எண்ணிக்கொண்டிருந்தார்? கடைசிவரை புதிர். அவரிடம் போலி அமரிக்கையில்லை. அமரிக்கைகூட இல்லை. அவர் சுபாவமே தன்னைப்பற்றி நினைத்துக்கொள்ளாததுதான். அதுபோன்ற விஷயத்துக்குச் சிந்தனையைத் தந்ததாகத் தெரியவில்லை. எப்படி ஒரு எழுத்தாளனால், தன் சிந்தனையே இல்லாமல் இருக்க முடிந்தது? முதலில் இது சாத்தியமா? 

இல்லை அவருக்குத் தன்னைப்பற்றித் தெரியும். வெளிக் காண்பித்துக் கொள்ளவில்லை. என் எழுத்தைக்கூட நேரிடையாக என்னிடம் அபிப்பிராயம் தெரிவித்ததில்லை. கண்களை மலர விழித்துக்கொண்டு, என் தோளைத் தொட்டு, ராமாமிருதம், உங்களுக்குத் தெரியுமா? என் வீட்டில் என் கதைகளைவிட, உங்களுடைய கதைகள்தான் அவர்களுக்குப் பிடிக்கும். 

நான் மகிழ்ந்துபோய்விடவில்லை. கொஞ்சம் எரிச்சலாகத்தான் வந்தது. இந்த ரிஷி என்னைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை… 

புதுக்கவிதை பற்றிப் பேச்சு வந்தது. 

“புதுக்கவிதையை ஒரு movement- ஆ ஆக்கணும்னு செல்லப்பா ரொம்பப் பாடுபடுகிறான். அதில் என் பங்கைப் பெரிசாக்கிக் கொண்டாடறான்.புதுசா ஒண்ணைப் புகட்ட துன்னா Public இடம் அவ்வளவு சுருக்க சாத்யமா? people have to be educated first before they can appreciated a thing’ பேச்சில் விரக்தி தொனித்தது. 

அவருடன் விவாதிக்கவோ, அவருக்கு ஆறுதல் சொல் லவோ, எந்தவிதத்தில் நான் தகுதி? வாளாகிவிட்டேன் ஆனால், செல்லப்பாவின் முயற்சி வீணாகவில்லை. புதுக் கவிதைப் பரம்பரையே உருவாகிவிட்டதை முற்றிலும் காணப் புதுக்கவிதையின் பிதாமகர் இருந்தார் என்று சொல்லமுடியாது. 

அவருடைய மூத்த பெண் அல்ல, அடுத்தவளா. அறியேன். வாய்ப்பாட்டுப் பயின்று கச்சேரி அந்தஸ்துக்கு வந்து, 

அவளும் அவள் தங்கையும் உடன் பாட, சில கச்சேரிகள்கூட நடைபெற்றன. ஆனால் மேடையில் நன்கு ஊன்றிக்கொள்ளுமுன், கலியாணம் கூடிவிட்டது. 

பிசுக்காரம் செய்துகொள்ளாமல் கேட்டவுடனே அமர்ந்து பாடுவார்கள். மூத்தவளுக்கு நல்ல குரல். 

“ராமாமிருதம், உங்களுக்கு வேணுமென்கிற பாட்டு ஏதேனும் பாடச் சொல்லுங்கள். பாடுவார்கள். அவர்களுக்கும் ஒரு பிராக்டிஸ்தானே!” 

சாமா ராகம் ஆலாபனை பண்ணிப் பாடும்படி கேட் டேன். அப்போது மவுசில் இருந்த ‘மானஸ ஸஞ்சரரே பாடுவார்கள் என்று என் எண்ணம். ஆனால் அவர்கள் அந்தப் பாட்டைப் பாடவில்லை. மிக்க அவாவுடன் நான் ஆலாபனையும் செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த வில்லை. சட்டெனப் பாட்டில் இறங்கிவிட்டார்கள். (‘குரு குஹாய என்று நினைக்கிறேன்) அதுவும் மனமில்லாமல், ஏதோ தயக்கத்துடன்தான், என்று எனக்குத் தோன்றியது. 

அவர்களுக்குப் பாடமில்லை என்று பிச்சமூர்த்தி சமா தானம் கூறினார். தவிர, இந்த ராகம் நினைத்தமாதிரி யில்லை. சுத்தமாகப் பாடவேண்டுமானால் நிரடல் உள்ளது, நாம் இப்போ சாதாரணமாகக் கச்சேரியில் கேட்கிற ஆபேரி ஆபேரியில்லை. ஹிந்தோளம். ஹிந்தோளமில்லை. தேவகாந் தாரி தேவகாந்தாரியில்லை. அதுமாதிரிதான். ஜனரஞ்ச கத்தில், சம்பந்தமில்லாத ஸ்வரங்கள் கலக்க ஆரம்பித்து, பாடமே அதுதான் என்று ஸ்தாபிதமும் ஆகிவிட்டது. கலப்படம் எங்குதான் என்றில்லை. Music – is it a changing fashion?”” 

சின்ன விஷயம், இதில் என்ன இருக்கிறது என்று நினைப்பவர் நினைக்கலாம். எனக்கு அப்படியில்லை. 

கேட்கும் சூழ்நிலையில், வேளையில், சந்தர்ப்பத்தில் அதனதன் இடத்தில் அது அது பெரிதுதான். எழுத்து, ஸங்கீதம், கலை, இவைகளுடன் நல்தன்மையும் சேர்ந்து அந்தச் சமயத்துக்கு ஏற்படுத்தும் ஒரு ஆறுதல், உற்சாகம் தீவிரம் – இதுவே சௌந்தர்ய உபாசனைதான். பொழுதை ஒரு உயர்ந்த தடத்தில் கழிக்க, அதற்கே பேறு வேண்டும். 

உத்யோக ரீதியில் இடமாற்றம் என்னைக் கிட் த்தட்ட நாட்டின் தென்கோடிக்குத் தள்ளிற்று. நானும் அவரும் இது வரை இருந்த அளவுக்குக்கூடச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. 

அவரைக் கடைசியாகச் சந்தித்தது சிதம்பர சுப்ரஹ் மணியனின் ஸஷ்டியப்த முகூர்த்தத்தில். சொற்பகாலத்துள் எப்படி இந்த மூப்பு? அப்பவும் அழகன்தான். 

“கும்பகோணத்துக்கே போயிடலாமான்னு பாக்கறேன். இங்கேயிருந்து என்ன பண்றேன்?” 

குரலில் சலிப்புத் தெரிந்தது. 

ஆனால் கும்பகோணம் போகவில்லை. நோய்வாய்ப் பட்டு சொன்னையில் ஆஸ்பத்திரியில் காலமான செய்தி யைத் தினமணியில் படித்தேன். 

வருத்தம், துக்கம்? தனியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று–கலைஞன், தன் கலை மூலம், மக்களின் இரத்த ஓட்டத்திலே, அவர்கள் அறியாமலே கலந்து விடுகிறான். 

மனிதனே மனிதனின் அமுதகலசம். 

பிச்சமூர்த்தியைப் பற்றி என் பார்வையில் சாயம் தோய்ந்திருக்கிறதல்லவா? 

ஆனால் அதுபற்றி எனக்கு ரோசமில்லை 

பிச்சமூர்த்தி கெட்டிச்சாயம்.

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *