நொண்டிக் கிளி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 132
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எனக்கு அண்ணன் தம்பி, அக்காள் தங்கை யாரும் இல்லை. நான் ஒரு தாய்க்கு ஒரு பெண். என் தகப்பனார் ஒரு பணக்கார வக்கீல். பணம் தாத்தா தேடி வைத்த பணம். ‘எங்கப்பாவும் கோர்ட்டுக்குப் போய்’ வந்தார். எதற்காக என்று கேட்டால், ஒரே ஒரு காரணந்தான் எனக்குத் தோன்றுகிறது.தாத்தா தேடிவைத்த பணத்துக்குச் செலவு வேண்டாமா? அதற்காகத்தான் எங்கள் அப்பாவுக்குக் கோர்ட்டு, கிளப்பு, மோட்டார், வைரம் இவையெல்லாம்.எங்கள் வீட்டுக்கு ஆடிக்கு ஒரு கட்சிக்காரன், ஆவணிக்கு ஒரு கட்சிக்காரன் தான் வருவான். வாசலில் தொங்கவிட் டிருக்கும் போர்டின் நீள அகலத்தைப் பார்த்து மயங் கும் கட்சிக்காரனாகவே அவன் இருப்பான். கட்சிக் காரன் வந்ததும், முதல் முதலில் ஒரு ரகசியத்தை அவனுக்குத் தெளிவாக்கிவிட்டுத்தான் வழக்கு விவரத்தை அப்பா கேட்பார்: “கேஸ் ஜயிப்பதோ தோற்பதோ ஆண்டவன் கையில் இருக்கிறது. என்னால் முடிந்தமட்டும் சிரமப்பட்டு நான் நன்றாக வழக்கை ஆடுகிறேன். முடிவு எப்படியானாலும் என்னைக் கேட்கக் கூடாது. சம்மதமா?” என்பார். இதைக் கேட்டதுமே சிலர், “அப்புறம் வறேனுங்க” என்று சொல்லிப் போய் விடுவார்கள். எங்கள் அப்பா மிகவும் கண்டிப்பாகப் பேசுகிறவர்.தலையிலே கிராப் என்றாலும், நெற்றியிலே விபூதியும் அதன் நடுவே குங்குமமும் உண்டு. பெட்டியிலே கொள்ளைப் பணம்; வாயிலே கம்யூனிஸம். படிப்பதெல்லாம் நாஸ்திக வாதம்; போவதெல்லாம் பெருமாள் கோவி லுக்கு. இப்படியே இன்னும் பல விஷயங்களிலும் அவர் பகலும் இரவும் கூடும் சந்தியா காலம் மாதிரி இருந்தார். “இதென்ன ராஜி?” என்று சில நண்பர் கள் அப்பாவைக் கேட்டுக் கேலி செய்வார்கள். “வாழ் வென்பது என்ன? அதுவே பிறப்புக்கும் சாவுக்கும் இடைப்பட்ட ஒரு ராஜிதானே?” என்பார் அப்பா. இதற்கு என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. அப்பாவைத்தான் கேட்க வேண்டும்.
“வாழ்க்கையிலே பொய்யும் புளுகும் மிக அவசியம்” என்று கூசாமல் வாய் நிறையச் சொல்லு வார் அப்பா. ஆனால் அவர் ஒரே ஒரு பொய் சொல்லி, நான் கேட்டதில்லை. கட்சிக்காரர்களை அவர் மிரட்டும் மிரட்டலால்தான் தொழில் வலுக்கவில்லையே தவிர, அதற்கு அப்பாவின் திறமைக் குறைவு காரணம் அல்ல. அவர் எடுத்த கேஸ் எதுவும் தோற்றதில்லை. அவர் மகாபுத்திமான்;ஆனால்,விசித்திரமான குணஸ் தன். ஊருக்கெல்லாம் இது தெரியும்.
எங்கள் அம்மா ராஜாத்தி மாதிரி இருப்பாள். உபசாரமாகச் சொன்னால், அப்பா மாநிறம்; அம்மாவோ எலுமிச்சம்பழம்போல் சிவப்பு. அவள் படித்திருக் கிறாள்; ஆனால். அவளுக்குப் பாடத் தெரியாது. அவளைத் தற்காலத்துக்கு ஏற்ற நாகரிகக்காரி என்று சொல்ல முடியாது. வீட்டுக் காரியம் முழுவதும் தானே செய்வாள். வேலைக்காரர்களுக்கு எங்கள் வீட்டிலே வெகு கொண்டாட்டம். அவர்களுக்கு அம்மா ஒரு வேலையும் இடமாட்டாள். இதற்காக அவர்களை அவள் ஒரு குறையும் சொல்லவும் மாட்டாள். அவர்கள் அம்மாவைக் கொண்டாடாமல் வேறே என்ன செய்வார்கள்?
இனி எங்கள் குடும்பத்தில் நான் மிச்சம். அப்பா வையும் அம்மாவையும்பற்றிச் சொன்ன பிறகு, என் னைப்பற்றி வேறே தனியாகச் சொல்ல வேண்டுமா? ‘நூலைப்போல் சேலை, தாயைப்போல் சேய்!’ ஆமாம்; நான் அம்மா மாதிரிதான் இருக்கிறேனாம். எதிலே?
உருவத்திலே. ஊரார் சொல்லுவது இது. அப்பா வைப்போல் நான் சியாமள வர்ணம் அல்ல; ஆனால் அம்மாவைப்போல் எலுமிச்சம்பழ நிறம் என்றும் சொல்ல முடியாது. அதில் ஒரு மாற்றுக் குறைவு தான். எல்லாரும் அவரவருக்கு அவரவரே ரதி அல்லது மன்மதன். ஆனால், அம்மா மகா அழகி. என் கண்ணாரக் கண்டு இதை நான் சொல்லுகிறேன். நான் அம்மாவையே உரித்து வைத்திருப்பதாகப் பார்ப்பவ ரெல்லாம் சொல்லுகிறார்கள். என்னைப்பற்றி இவ் வளவுதான் நான் சொல்லிக்கொள்ள முடியும்: நான் ரதியல்ல; ரதியின் மகள்; என் மூக்கிலும் உதடு களிலும் மட்டும் அப்பாவின் சாயல் கொஞ்சம் உண்டு. அப்பாவின் மூக்குக் கூர்மையானது; உதடுகள் தடித் தவை; அவை தச்சன் கடைசல் பிடித்தமாதிரி இருக் கும். மூக்குக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டாம்; உதட்டுக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தம் உண்டாம். இப்படிச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மூக்கின் கூர்மை புத்தி கூர்மையையும் உதடுகளின் தடிப்பு உணர்ச்சி வேகத்தையும் காட்டுமாம். எனக்காக நான் இதைச் சொல்லிக்கொள்ளவில்லை. எங்கள் அப்பா விஷயத்தில் இந்த இரண்டு லட்சணப் பொருள்களும் உண்மை என்றுமட்டும் நான் கண்டிருக்கிறேன்.
எனக்கு வயசு பதினெட்டு. இன்று எங்கள் வீடு திமிலோகப்படுகிறது. பிள்ளையும் பிள்ளை வீட்டாரும் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். வீட்டின் செல்வ மகள் நான். எனக்கு விவாக ஏற்பாடு என்றதுமே என் பெற்றோர் என்ன என்னவோ விமரிசைகளைக் கோடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பிள்ளை பார்த்துத் திருப்தியடைய வேண்டும்; பிள்ளை வீட்டார் சம் மதிக்கவேண்டும். அதற்குப் பிறகுதான் நிச்சய தார்த்தம். ஆனால், என் சம்மதத்தைப்பற்றி யாருமே. கவலைப்படவில்லை. ஏன், நானுங்கூடக் கவலைப்பட வில்லை. ஆனால், என் உள்ளத்திலே எனக்கே புரியாத ஒரு திகிலும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தன. என் அத்தைமார் இருவரும் அவர்களுடைய குழந்தைகளும் வந்திருந்தார்கள். என் விவாகம் முடிகிற வரையில் இருந்துவிட்டுத்தான் அவர்கள் போகப்போகிறார் களாம். இந்த வருஷம் எப்படியும் கண்டிப்பாக எனக்கு விவாகம் நடந்தேற வேண்டுமாம். இந்த வரன் இல்லையானால், வேறு எந்த வரனாவது; வரனா முக்கியம்? விவாகந்தானே முக்கியம்?
என்னை ஓர் அறையிலே உட்காரவைத்துச் சிங்கா ரிக்கத் தொடங்கினார்கள். இரண்டாவது அத்தை தலை வாரிப் பின்னிப் பூச்சூட்டினாள். மூத்த அத்தை திலகம் இட்டாள். குழந்தைகள் கண்ணாடி காட்டின. தமயந்தியைச் சுயம்வர மண்டபத்துக்கு அழைத்துச் செல் லுமுன், இப்படித்தான் அலங்கரித்திருப்பார்கள். வேறே எப்படி? பாதம் மறைய அரிய பட்டுச் சிற்றாடை ஒன்றை எனக்கு உடுத்துவிட்டார்கள். யாதம் மறைய…. ஆமாம், பாதம் மறையத்தான். பூமாதேவி என் பாதத்தைத் தாங்கமாட்டாள்!…. சீ! என்ன உலகம் இது? ஏமாற்று, சூழ்ச்சி, மேல் பகட்டு!
கூடத்திலே ஒரு சிறு கூட்டம் கூடியிருக்கிறது. பேச்சுக்குரல் கேட்கிறது. அவர்கள் என்ன என்னவோ பேசிக்கொள்கிறார்கள். நான் அறையிலே உட்கார்ந் திருந்தேன். அத்தைமார்கூட, அந்தப் பேச்சை ஓட்டுக் கேட்கப் போய்விட்டார்கள். என் மனசு சிறிது நேரம் ஒரே குழப்பமாக இருந்தது. பிறகு, ஒரே சூன்யமாகிவிட்டது. அலைகடலின் துரும்பு போல், உள்ளமும் உடலும் இயக்கம் இறந்து போயின. இந்த நிலையில் ஒரு பாட்டுக் குரல் என் அறைக்குள்ளே கேட்டது. இரண்டாவது அத்தையின் சிறு பெண் பாடுகிறாள். ஏதோ குழந்தைப் பாட்டு:
நொண்டிக் கிளி ஒன்று வந்தது – அதை
நோஞ்சல் பூனைஒன்று கண்டது
அண்டிப் பிடிக்கத் துணிவின்றி-உயர்
அம்பரம் பார்த்தது நின்றது.
என்ன பாட்டு இது! ஐயோ! என்ன பாட்டு! இதைப் பாடுவது ஒரு குழந்தையின் குரலா? இல்லை. என்னை ஆள வந்த அசரீரியின் குரல்! அப்படித்தான்; அப்படித்தான் நினைக்க வேண்டும். நான் அடியோடு மறந்திருந்த பழைய ஞாபகங்களையெல்லாம் இது என்னிடம் கிளறிவிட்டது.
இரண்டொரு வருஷங்களுக்கு முன்புதான் அது நிகழ்ந்தது. அப்போது நான் பதினாறு வயசுப் பால குமாரி. அன்று பூத்துப் பனி படிந்த காலைப் புது மலர்போல் நான் இருந்தேன். என் மனசிலே எண்ணாத எண்ணமெல்லாம் எழுந்தன. என் கற்பனை வானம் முட்ட எட்டியது. வாழ்க்கையிலே ஒரு குதூகலம் நிறைந்தது. உலகம் ஒரே ஒளியும் வர்ணமும் நாதமுமாகத் தென்பட்டது. இவையெல் லாம் திடீரென்று என்னிடம் உற்றன. என்னை அறியாத ஒரு செருக்கும், காட்டாற்றைப் போன்ற ஓர் உல்லாசமும் எனக்கு ஏற்பட்டன. ஆடவர்களைக் கண்டால் ஓர் ஓய்யாரமும் என்னை எப்படியோ வந்து பற்றிக்கொள்ளும். ஆனால், அவர்களை நான் முகம் கொடுத்துப் பார்க்க மாட்டேன். ஆண்குலத்தையே அலட்சியம் செய்வதுபோல் ஒரு மிடுக்குடனே நடந்து கொள்வேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாது; அதனால் நான் அடைந்த உணர்ச்சி இன்பமா, ஏக்கமா என்று கேட்டால், அதையும் என்னால் பகுத்துச் சொல்ல முடியாது. உள்ளம் குறுகுறுக்கும் ஒரு பரபரப்பு மாத்திரம் எனக்கு உண்டானது தெரியும். இதற்கு முன், ஆண்பிள்ளைகளுடன் நான் பழகிய தில்லையா? நிறையப் பழகியிருக்கிறேன். என் படிப்பு முழுவதும் வீட்டிலேதான் நடந்தது. இங்கிலீஷ் வாத்தியார், பாட்டு வாத்தியார், தமிழ் வாத்தியார் ஆக மூன்று பேர் வந்து சொல்லிக்கொடுத்தார்கள்.
மூன்று பேரும் ஆண்பிள்ளைகள்; இளைஞர்கள். என் பதினைந்தாவது வயசிலே இந்த மூன்று படிப்பும் நின்றன. அதுவரையில் அந்த வாத்தியார்களுடன் சர்வசரளமாகப் பழகியிருக்கிறேன். இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஒய்யாரம்? இந்த ஒய்யாரத் துக்குள்ளே ஒரு கூச்சமும் ஒளிந்தே கிடந்தது. ‘நான் பெண், நான் பெண், நான் பெண் – சீதை போல், தமயந்தி போல், சம்யுக்தை போல்’ என்று எனக் குள்ளே ஒரு குரல் தனக்குத்தானே ஜபித்துக்கொண் டிருந்தது. ஆனால், சீதையின் உருவம் என் மனத் திலே எழுவதில்லை; தமயந்தியின் உருவம் எழுவ தில்லை; சம்யுக்தையின் உருவம் எழுவதில்லை. ராமனின் உருவந்தான் எழும்; நளனின் உருவம் எழும்; பிரித்வியின் உருவம் எழும். என்ன வேடிக்கை!
இந்த நாட்களிலேதான் அந்த நிகழ்ச்சி நடந்தது. எங்கள் வீட்டின் எதிரே, எதிர் சாரியில் ஒரு சின்ன வீடு இருந்தது. அதில் குஞ்சும் குளுவானுமாக நாலைந்து சிறுவர்களும் இரண்டொரு சிறுமிகளும் ஒரு நாள் அதுவரை இல்லாமல் புதிதாகத் தென் பட்டார்கள். குழந்தைகள் படிப்பதற்காக நகரத் துக்கு வந்த ஒரு புதுக் குடித்தனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பின்னால் அறிந்தேன். சிறுவர் களுக்கு எதைப்பற்றிக் கவலை? ‘பரலோக ராஜ்யம் அவர்களுடையது என்று ஏசுநாதர் சொன்னார். பூதவிழிக்குத் தெரியாத எங்கேயோ உள்ள பரலோக ராஜ்யம் எப்படிப்பட்டதோ? இந்தப் பூலோக சொர்க்கம் அவர்களுக்கே சொந்தம். வாழ்க்கையை நாசமாக்கும் வேற்றுமை விஸ்தாரங்களெல்லாம் அவர்களுக்கு இல்லை. தம்மவர், அயலார் என்றெல்லாம் பிரித்துக் காண அவர்கள் அறியார். அன்பு கண்ட இடத்திலே அவர்கள் ஒட்டிக் கொள்வார்கள். அந்நியருடன் அவர்கள் வெகு சீக்கிரத்திலே பழகி விடுவார்கள். ஆண்டவன் படைத்தபடி அவர்கள் பூலோகத்தின் நுழைவாயிலை அடைந்திருக்கிறார்கள். மனிதன் செய்துவைத்திருக்கும் நூற்றுக்கணக்கான பொறிகளில் விழுந்த பிறகல்லவா அவர்களுக்கு வேற்றுமைகளெல்லாம் தெரியும்? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் வளர்கிறார்கள். தினம் ஒரு விலங்கும் கணம் ஒரு தளையுமாக அவர்களுக்கு நாம் மாட்டி வருகிறோம். தெய்வம் சிரிக்கிறது; கருணையற்ற தெய்வம்!
எதிர்வீட்டுச் சிறுவர் சிறுமியரைப்பற்றி அல்லவா சொல்ல வந்தேன்? எங்கள் வீட்டு வாயிலில் ஒரு வாதாமரம் இருந்தது. அந்தச் சிறுவர்கள் வெகு சீக்கிரத்திலே இங்கே வந்து வாதாங்கொட்டை பொறுக்கத் தொடங்கினார்கள். அதிலிருந்து என் னுடன் சிநேகமானார்கள். கொஞ்சம் பழகியபின், சிறுமிகள் வந்து, என்னிடம் சில புதிய பாட்டுக்கள் கற்றுக்கொண்டு போவார்கள். அப்புறம், அவர்கள் வீட்டிலிருந்து, எனக்குப் படிக்க நாவல்கள் கொண்டு வந்து தருவார்கள். என்னிடமிருந்தும் யாரோ படிக்க நாவல்கள் வாங்கிக்கொண்டு போவார்கள். முதலில் அது யார் என்று அறிய நான் கவலைகொள்ளவில்லை. ஆனால், இரண்டொரு நாவல்களின் வரவு செலவு முடியு முன்பே, விவரம் தெரிந்துவிட்டது: அந்த ஆசாமி நல்ல தேகக் கட்டும் லட்சணமும் வாய்ந்த ஒரு வாலிபன்.
வாலிபன் எதிர் வீட்டுத் திண்ணையிலே உட்காரத் தொடங்கினான். சிறுவரும் சிறுமியரும் பள்ளி செல்லும் வரையிலும் அவர்களோடு அவர்களுக்குச் சமமாகப் பேரிரைச்சலும் பேச்சும் சிரிப்புமாக விளையாடுவான். நடுநடுவே, தான் அவர்களை விடப் பெரியவன் என்ற ஞாபகம் வந்தவன்போல் மதிப்பாக உட்கார்ந்து கம்பீரமாக ஏதோ படிப்பான். படிக்கவா வது மண்ணாங்கட்டியாவது! படிப்பது போல் ஒரு பாவனை, பாசாங்கு. அப்போதிருந்து நானுந்தான் எங்கள் திண்ணையிலே உட்காரத் தொடங்கினேன். ஆனால், தன்னந்தனியே. எனக்கு யாரும் தோழமை இல்லை. படிப்பு பாசாங்கெல்லாம் செய்யவில்லை. வெறுமையே உட்கார்ந்திருப்பேன். அதிலே எனக்குத் துளியும் அலுப்புத்தட்டவில்லை.
சிறுவரெல்லாம் அகன்ற பின்பு வாலிபன் என்னைக் கள்ளனைப்போல வெறித்து வெறித்துப் பார்ப்பான். ஐயோ! அந்த விழியிலேதான் என்ன குரூரம்! விழுங்க வரும் அக்கினி போல் என்ன வெம்மை! அந்த வெம்மைக்கு நடுவே ஓர் ஏக்கமும் கெஞ்சும் பாவனையும் இருந்தன. அந்த ஏக்கம் எனக்கு வெறுப் பாக இருந்தது. அந்தக் குரூரமே, வெம்மையே எனக்கு ஹிதமாக இருந்தது. ஏன்? ஏனென்றால் வாழ்வின் எத்தனையோ புதிர்களை என்னால் விடுவிக்கமுடியவில்லை; அதுபோல்தான் இதுவும். ஒரு விஷயம் சொல்ல வில்லையே. அவன் என்னை ஓயாமல் உறுத்துப் பார்த்தான். நான் அவனை நேருக்கு நேரே ஏறெடுத்து பார்க்கவில்லை, என் கடைவிழிதான் அவனுக்கு அருளினேன். எனக்குத் தைரியம் இல்லாமல் இல்லை; மனம் இல்லை. எதற்காக முழுவிழியும் அவனிடம் நான் செலுத்தவேண்டும்? அவன் மதுவுண்ட ஈயைப் போல் மயங்கித்தவித்தான். அதை நான் உணர்ந்தேன். அதுவே எனக்குப் பரவசமாக இருந்தது. ‘நான் மாய மான், மாய மான்’ என்று எனக்குள் நானே சொல்லிக் கொள்வேன். எனக்குச் சிரிப்பு வரும்.
காலையில் அவன் வருமுன், நான் திண்ணையில் உட்கார்ந்துவிடுவேன். அவன் உள்ளே போகும் வரையில் நான் திண்ணையை விட்டு எழுந்திருப்பதே இல்லை. இரண்டொரு சமயம் நானும் அவனை,ஒரு குறும்புத்தனத்துடன் நோக்கத் தொடங்கினேன். நான் அப்படி நோக்கும்போது அவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே; என்ன அசடு வழியும்! என் பார்வைக்கு அது நன்றாகத் தெரிந்தது. அதில் நான் அடைந்த ஆனந்தத்தைச் சொல்லி முடியாது. இப் படியே பல நாள் கழிந்தன. அவனுக்கு முன்னே நான் எழுந்து உள்ளே செல்லுவதே இல்லை. அதில் மாத்திரம் எனக்கு ஒரு பயம் இருந்தது. ஏன்? ஏன்? அதை நான் எப்படிச் சொல்லுவேன்! என் குழந்தைப் பருவத்திலே – தெய்வம், குருட்டுத்தெய்வம் – என்… என்-அதை உங்களிடம் சொல்லவே எனக்குக் கூச்ச மாக இருக்கிறதே; இளம் பிள்ளை வாதம் – காலிலே கணுக்காலிலே.. சிறிது கோணல். ஆனால், வெளியே தெரியாது. என் வீட்டாரையன்றி வேறு யாருக்கும் அது தெரியாது. யாரும் தெரிந்து கொள்ளமுடியாத படி நான் சமாளித்து நடந்துவிடுவேன். என் நடையை அன்னநடை என்றே எவரும் நினைப்பார்கள். அப்படி நடப்பேன். தரையில் சிற்றாடை புரள, பையப்பைய, நாகரிகமாக நடப்பேன்.ஆனால், அவனுக்கு முன்னே நடக்க மட்டும் என்னால் முடியவில்லை. அதில் ஒரு பயம் வந்து என்னைப் பற்றிக்கொண்டது.
என் வீட்டுத் திண்ணையிலே நான்; எதிர் வீட்டுத் திண்ணையிலே அவன். என் கவனம் எப்போதும் பராமுகந்தான். இரண்டொரு முறைதான் ‘கடைக் கண்’ அருள்வேன். அப்படிப்பட்ட சில சமயங்களில் அவன் புன்சிரிப்புச் சிரிக்க முயல்வான். அதை நான் துளியும் லட்சியம் செய்யாதவளாகத் திரும்பிவிடு வேன். ஒரு சமயம் அவன் நன்றாகப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டான். எனக்கு அது இன்பமாகத்தான் இருந்தது. ஆனால், என் முகம்மட்டும் பரம கடுகடுப் புடன், ‘உர்ர்ர்’ என்று திரும்பிக்கொண்டது. பின்னால், மூன்று நாள்வரையில் ஏதோ பெரும் குற்றம் செய்த வன்போல், என்னைப் பார்க்கத் தைரியமின்றி, உள்ளும் புறமுமாக அவன் நடமாடிக்கொண் டிருந்தான், திண் ணையில் உட்காரக்கூட அவனுக்குப் பயம். நாவல்கள் வரவு செலவும் இரண்டொரு நாள் நின்றுவிட்டது.
இதோ அத்தையின் சிறு பெண் – இல்லை, என்னை ஆள வந்த அசரீரி – பாட்டின் அடுத்த அடிகளைப் பாடுகிறது:
பச்சைக் கிளிஒன்று வந்தது அதைப்
பஞ்சைப் பூனை ஒன்று கண்டது
இச்சை இறந்த தவசிபோல் – மனம்
ஏங்கிடக் கண்மூடிக் கொண்டது.
உண்மை; இந்தப் ‘பஞ்சைப் பூனை’ எங்கே? பிரித்வியும் சம்யுக்கையும் எங்கே? இந்தப் ‘பஞ்சைப் பூனை’கள், பெண் குலம் முழுவதையுமே ஒரு பெரிய ‘தாசி மண்டலம்’ என்று நினைத்திருக்கின் றனவாக்கும்! இவைகளுக்கு மனோதர்மம் புரியாது; ஆசை புரியாது; ஆதர்சம் புரியாது. இதையெல்லாம் நான் அன்று அறியவில்லை. எல்லாமே எனக்கு ஓர் இன்ப விளை யாட்டாக இருந்தது. ஆழந் தெரியாத சமுத்திரத் திலே காலை விட்டுவிட்டேன்.
நாவல்கள் பரிமாற்றத்தை மறுபடியும் நான் ஆரம்பித்து வைத்தேன். அப்புறந்தான் அவனுக்குத் தைரியம் வந்தது. பழையபடி கொஞ்சம் கொஞ்சமாக என்னை நிமிர்ந்து பார்க்கத் துணிவுகொண்டான். இப்போது நான் சிறிது சிறிது புன்சிரிப்புப் பூத்தேன். இதே சமயத்தில் என் வாய்மட்டும் துடுக்குத்தனமாய் அந்தக் குழந்தைகளிடம் அவனைப்பற்றி என்னவோ சொல்லிவிட்டது. உண்மையில் துடுக்கு அல்ல; அவன் யார் என்று அறிய ஆசை. நேராகக் கேட்கப் பயம். “உங்கள் வீட்டுத் திண்ணையிலே, ‘திரு திரு’ என்று விழித்துக்கொண்டு, குரங்கு மாதிரி உட்கார்ந் திருக்கிறானே; அந்தப் பிள்ளை யாரடீ?” என்று எதிர் வீட்டுச் சிறுமி ஒருத்தியைக் கேட்டுவிட்டேன். இதைச் சிறுவர்கள் அவனிடம் போய் எப்படிச் சொன்னார்களோ! மறுபடியும் ஒரு வாரம் வரையில் அவன் வாசல்பக்கமே வரவில்லை; திரும்பவும் நானே நாவல் வரவு செலவுமூலம் அவனுடைய தாபத்தைப் போக்கினேன்.
இவ்வளவோடு நின்றுவிடுவதா? நிற்கத்தான் முடியுமா? ஒரு நாவல் அவனிடம் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அதன் ஒரு பக்கத்தைப் பிரித் தேன். பென்ஸிலை எடுத்தேன். ஓர் ஓரத்தில், ‘என் ராஜா’ என்ற இரண்டு வார்த்தைகளை எழுதினேன். என் இருதயம் ‘திக்குத் திக்கு’ என்று அடித்துக் கொண்டது. யாரோ என்னைப் பார்த்துவிட்டது போல் பயந்தேன். சட்டென்று புத்தகத்தை மூடி னேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமே இல்லை. வெறும் பிரமை. கிரமப்படி புத்தகம் எதிர்வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தது. அன்றிரவு எனக்குச் சரியான தூக்கம் இல்லை. நல்லதும் பொல்லாததுமான என்ன என்னவோ கனவுகள். ‘புத்தகம் பத்திரமாக அவ னிடம் போய்ச் சேர்ந்ததோ? சேதியை அவன் கண் டானோ? அதன் அர்த்தத்தை அறிந்தானோ?’-இப்படி ஏதேதோ மாளாத யோசனை.
அடுத்த நாள் அவனிடமிருந்து மறுபுத்தகம் வந்து சேர்ந்தது. ஆவலுடன் தனிமையில் ஏகாந்த மாகப் போய்க் கதவை உட்புறம் தாழிட்டுவிட்டு உட்கார்ந்தேன். புத்தகத்தைப் பரபரவென்று ஏடு ஏடாகப் புரட்டினேன். ஒரு பக்கத்துக் கோடியிலே பதில் இருந்தது: ‘என் ராணி’ என்ற இரண்டு சொற்கள்! என் உள்ளம் பொங்கியது; தேகம் புளகித் தது: கண்ணிலே நீர் துளும்பியது! ஒரு பெருமூச்சு; அதன் உஷ்ணத்திலே, காமன் வெந்துபோயிருப்பான். பித்துப் பிடித்தாற்போல் புத்தகத்தை வாரி எடுத்து, அந்த இரண்டு சொற்களையும் கண்ணில் ஒத்திக் கொண்டேன்; முத்தமிட்டுக்கொண்டேன். “கருப் பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ?.. சொல்லாழி வெண்சங்கே’ என்று பாடி, ஆடிவிட்டேன். ஏதோ ஒரு மதுவெறியில் இருப்பதுபோல், சிறிது நேரம் தலை கால் புரியாமல் நடந்து கொண்டேன். வெறி தணிந் தது. சுவரிலே மாட்டியிருந்த நிலைக் கண்ணாடியை எடுத்து முகம் பார்த்துக்கொண்டேன். ‘அடி ராணி’ என்று புன்சிரிப்புடன் அந்த முக பிம்பத்தைப் பார்த்துக் கூவினேன். அதன் கன்னத்தைக் கையால் நிமிண்டவும் முயன்றேன். இப்போது நினைத்தால், அத்தனையும் என்ன பித்துக்கொள்ளித்தனமாகத் தோன்றுகிறது!
இதற்குமேல், வெகு சீக்கிரத்திலே, இந்த நாட கத்தின் பல படிகள் கடந்துவிட்டன. ஒவ்வொன்றும் எனக்குத் தெள்ளத் தெளிய ஞாபகம் வருகிறது. ஆனால், அது என்ன வேதனை! அவன் மெல்ல மெல்ல எங்கள் வீட்டுத் திண்ணைக்கு மிக அருகிலே நடக்கத் தொடங்கினான். தெருவிலே குறுக்கும் நெடுக்குமாக, ஏதோ காரியம்போல் பாவனை செய்துகொண்டு, அடிக் கடி எங்கள் வீட்டுத் திண்ணையின் பக்கமாக அவன் நடமாடுவான். அப்போது எனக்கு ஒரு விசித்திர யோசனை தோன்றியது. ஒரு பை நிறையச் சிறு மணியாம் பருக்கைக் கற்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டேன். அவன் போகும்போதும் வரும்போ தும் அவைகளை ஒவ்வொன்றாக, மெல்ல மெல்ல, அவன் முதுகிலே குறும்புத்தனமாக எறிந்தேன். அவன் சிரித்துக்கொண்டே, “ஈசனே கல்லால் எறியுண்டான். அதற்கு முன்னே இது எம்மாத்திரம்?” என்று சொல்லி, அந்தக் கற்களில் இரண்டொன்றை எடுத் துப் பத்திரமாக ஜேபியிலே போட்டுக்கொண்டு போனான். இதையெல்லாம் நினைக்க நினைக்கத் தாங் காத வேதனைதான் உண்டாகிறது. முடியாது!இன் னும் நடந்ததை எல்லாம் விரித்து வர்ணித்துச் சொல்ல என்னால் முடியாது! இதன் பின்பு, சிறு சிறு துண்டுக் கடிதப் போக்குவரத்துக்களில் தொடங்கிக் கடைசியில் நேருக்கு நேரே சந்திக்கும்வரையில் நிலைமை முற்றி விட்டது. அந்தப் பாவி நள்ளிரவு நேரத்திலே கரியி னும் தடித்த மாய இருளில், என்னைக் கட்டி அணைந்து கொண்டான். இல்லாத பிரமாணமெல்லாம் செய்து கொடுத்தான். அதற்கு எங்கள் வீட்டு முன்புள்ள வாதாமரமே சாட்சி. அதன் பரந்த கிளைகளுக்குக் கீழேதான் நாங்கள் சந்தித்தோம். மறுநாள் காலை யில், அதற்கு முன் என்றும் இல்லா தபடி, முதல் முதலாக, அந்த மரத்தை நான் கூர்ந்து பார்த்தேன். “தாயே! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று அதைக் கெஞ்சுவதுபோல் இருந்திருக்க வேண்டும் என் பார்வை. அப்போது அதன் இலை களிலே உறங்கிய பனித்துளிகள் பொலபொலவென்று உதிர்ந்தன. இப்போதுதான் அதன் மர்மம் எனக்குத் தெரிகிறது.’ஐயோ, மகளே!’ என்று அது கண்ணீர் சொரிந்திருக்கிறது. வருங்காலமெல்லாம் அதற்குத் தெரிந்திருக்கிறது.
என் உள்ளத்திலே ஒரு புதிய பரவசம் உண்டாயிற்று: ஒரு புதிய வேதனையும் உண்டாயிற்று. அவனை இப்போது, என் கைக்கு எட்டாத ஓர் அந்நியனாக நான் நினைக்கவில்லை. நானும் அவனும் ஒன்று என்று நினைக்கத் தொடங்கினேன். ஆயினும் இந்தச் சந்திப்புக்கு மேல் வேறே சந்திப்புக்கள் நடக்க வில்லை; நடக்க வசதி இல்லை. நாட்கள் கழிந்தன. பகலிலே அவனைக் கண்டால், எனக்கு ஒரு வெட்கம் உண்டாயிற்று. தலை குனிந்து எழுந்து மரியாதை செய்வேன். “இது என்ன விநோதம்!” என்று எங்கேயோ பார்த்தபடி சொல்லிக்கொண்டு அவன் சிரிப்பான்.
ஒரு நாள் எப்படியோ அவன் எங்கள் அப்பாவைச் சிநேகம் பிடித்துக்கொண்டு, எங்கள் வீட்டுக்கு வந்தான். நான் சட்டென்று எழுந்து, பரபரப்புடன் அவனுக்கு முன்னே உள்ளே ஓடினேன். அவன் பார்த்துவிட்டான். அவசரத்திலே விந்தி விந்தி நான் நடப்பதை அவன் பார்த்துவிட்டான். ஐயோ! இறைவன் படைத்த படைப்பிலே துளிக் கோணல் கூடாதா? அது என் குற்றமா? நான் என்ன நாட்டியமா ஆடப் போகிறேன்? சாமுத்திரிகா லட்சணத்தைக் கரைகண்ட சித்திரகாரனோ அவன்? சீ! மனித உள்ளத்தின் பெருமையை அறியாத, மதி யாத மூடன் அவன்! போய்விட்டான்! வேடனைக் கண்டு பயந்தோடும் விலங்கைப்போல் அவன் போய் விட்டான்! போகும்போது, அவன் எழுதி என்னிடம் போட்ட ஒரு சிறு நறுக்குத்தான் என் மனசை என்றென்றும் உறுத்திக்கொண் டிருக்கிறது: ‘நொண்டி பெற்ற சொல் செல்லாது!’ ஏன் செல்லாது? அட *பாவி! ஏன் செல்லாது? உன் சொல்லைத் துஷ்யந்தன் கொடுத்த கணையாழி என்றல்லவா நான் மதித்தேன்?பேதை! நான் ஒரு பேதை!
அப்புறம் பல மாதங்கள் கழிந்தன. காதல்! மண்ணாங்கட்டி! அதெல்லாம் வெறும் புரளி. உண்மை யில். மனிதனின் கற்பனையில் தோன்றிய உருவெளி தானே காதல், கற்பு, ஏகபத்தினி விரதம் என்பவை எல்லாம்? அவை வெறும் மனமயக்கம்; கள்வெறி போன்ற மனமயக்கம். துளித்துளியாக இந்தச் சம்பவத்தை யெல்லாம் நான் மறக்க முயன்றேன்; ஓரளவு மறந்தே போனேன். அலைகடல் துரும் பானேன். விதிச்சுழல் இழுத்த இழுப்பிலே செல்ல மனம் பண்பட்டேன்.
எனக்கு நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு நடக் கிறது. பிள்ளையும் பிள்ளைவீட்டாரும் வந்திருக்கிறார் கள். கூடத்திலே பேச்சு நடக்கிறது. இந்தச் ‘சுயம்வர மண்டபத்துக்குச் செல்வதற்காக எனக்கு அலங்காரம் நடந்திருக்கிறது!
அத்தையின் சிறுபெண் – என்னை ஆள வந்த அசரீரி – மறுபடியும் பாடுகிறது. அந்தக் குழந்தைப் பாட்டின் கடைசி அடிகள்:
கொண்டைக் கிளி ஒன்று வந்தது – அதைக்
கோயில் பூனை ஒன்று கண்டது
மண்டிடும் ஆசையொ டம்புபோல் – பாய
மாயக் கிளி அங்கே செத்தது.
சாவதா? இந்தக் கிளி சாகாது. அது செத்தது; இது சாகாது. அந்தப் ‘பஞ்சைப் பூனை’க்குப் பின்னே. இந்தக் ‘கோயில் பூனை’ வந்திருக்கிறது. பணக்கார வரனாம்! பெரிய இடமாம்! இது எந்த முடிவுக்கோ?’ வேண்டாம். இனி ஒருவனைத் தொட்டு நான் மாலை யிடமாட்டேன். என் உடம்பெல்லாம் ஒரு வேதனை எடுத்தது; மனத்திலே ஒரு வெறி பிடித்தது; வாக்கிலே ஒரு தெளிவு பிறந்தது.
கூடத்துக்கு ஓடினேன். அப்போது, என் அளகங் தான் அவிழ்ந்ததோ; ஆடைதான் குலைந்ததோ; பணி கள்தாம் சிதறினவோ? எனக்கு ஒன்றும் பிரக்ஞை இல்லை. யாராரோ கூடத்திலே உட்கார்ந்திருந்தார் கள். யாரையும் நான் பார்க்கவில்லை. அவர்களெல்லாம் ஏதோ நிழல்கள் போல்தான் எனக்குத் தோன்றினார் கள். எங்கள் அப்பாவிடம் நேரே சென்றேன். “அப்பா, நான் எவனுக்கும் மாலையிடமாட்டேன். கண்டிப்பாய் மாட்டேன். இது சத்தியம்!” என்று கத்தினேன். அப்படியே மூர்ச்சித்து விழுந்து விட்டேன்.
அத்தைமாரும் அம்மாவும் என்னை வந்து பிடித்துக் கொண்டார்கள்.
பிரக்ஞை வந்தபோது, மனமும் மிகத் தெளிந்து விட்டது “என்ன, கண்ணகிபோல் ஆடிவிட்டாயே! அவர்களெல்லாம் பயந்தேபோனார்கள். இப்படிச் செய்யலாமா? உன் மனசிலே என்ன குறை?” என்று அப்பா கேட்டார்.
“அப்பா, இது ஒரு நொண்டிக்கிளி. சாகாத நித்திய கன்னிகையாக இருக்க விரும்புகிறது” என்றேன்.
அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை; புரிந்திருக்க முடியாது. எப்படி முடியும்?
“யாரும் குழந்தையைத் தொல்லை செய்யாதீர்கள். அவள் மனசு இன்னமும் என்னவோ குழம்பியிருக் கிறது. அது தெளியட்டும்” என்று அப்பா எல்லாரை யும் அப்பால் போகச் சொன்னார். “என் ராணி. நீ தூங்கு. உன் இஷ்டப்படி செய்யலாம்” என்றார். அவர் கண்களினின்றும் சில நீர்த்துளிகள் முத்துப் போல் உதிர்ந்தன.
அதை என்னால் தாள முடியவில்லை.என் கண்களை மூடிக்கொண்டேன்; பல்லைக் கடித்த வண்ணம் இறுக மூடிக்கொண்டேன்.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.