நெஞ்சமடி நெஞ்சம்






(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
“மகாலட்சுமி ஜவுளி ஸ்டோர்ஸ்’ என்ற பெயர் பல கையைப் பார்த்தபடி அந்த நெரிசலான ரோட்டில் நடந் தாள் ரூபிணி. விழுப்புரம் ரெயில்வே ஜங்ஷனிலிருந்து அவளைப் போலவே வெளியே வந்த மக்கள் கூட்டம் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த ஜனக் கூட்டத்தில் கலந்தது. ரெயில் நிலையத்திற்கு முன்னாலிருந்த சாலை பாண்டிச்சேரி செல்லும் சாலையாக இருந்ததால் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. ஒரு கையில் பெரிய சூட்கேஸுடன் மறு கையில் டிராவல் பேக்குட னும் இருந்த ரூபிணி பற்றாக்குறைக்கு தோளில் ஹேன்ட் பேகோடு இன்னும் இரண்டு தோள் பைகளை மாட்டி யிருந்தாள். ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்ததும் “ஆட்டோ… என்று அழைத்தாள்.

“ஏறுங்கம்மா… என்றான் முதலில் நின்று கொண் டிருந்த ஆட்டோவின் அருகே நின்று கொண்டிருந்த டிரைவர்.
ஆட்டோவுக்குள் தன் கையிலிருந்த பெட்டி, பைகளை அடுக்கி விட்டு அதன் பக்கத்திலேயே ஏறி அமர்ந்து கொண்டாள் ரூபிணி.
ஆட்டோவைக் கிளப்பிய டிரைவர் அவளைத் திரும் பிப் பார்த்து “எங்கே போகனும்மா?” என்று கேட்டான். “கலைவாணி லேடிஸ் ஹாஸ்டலுக்குப் போகணும்.” ஆட்டோ நேராகச் சென்று வளைந்து திரும்பி சென்னை செல்லும் மெயின் ரோட்டின் போக்குவரத்தில் கலந்தது. சற்று தூரம் சென்றதும் திரும்பி அகலமான சாலையில் சென்று ஒரு பெரிய மூன்று மாடிக் கட்டிடத்தின் முன் னால் நின்றது.
சுற்றிலும் காம்பவுண்டு சுவருடன் உள்ளே விஸ்தீர மான தோட்டத்தின் நடுவே நின்றிருந்த அக்கட்டிடத் தின் முகப்பிலும் வெளியே காம்பவுண்டு சுவரிலும்,
‘கலைவாணி லேடிஸ் ஹாஸ்டல்’ என்ற பெயர் பலகை தொங்கியது.
ஆட்டோவை விட்டு இறங்கி தன் பெட்டி பைகளை இறக்கி வாசலில் வைத்த ரூபிணி.
“எவ்வளவு ஆச்சு?” என்று வினவினாள்.
ஆட்டோ டிரைவர் கேட்ட பணத்தை வாக்குவாதம் செய்யாமல் எடுத்துக் கொடுத்து விட்டுத் தன் பெட்டி பைகளை தூக்கிக் கொள்ள ரூபிணி குனிந்தாள்.
“இருங்கம்மா.. நான் பெட்டியை எடுத்துக்கிட்டு வருகிறேன்.”
ஆட்டோ டிரைவர் அவளது பதிலை எதிர்பார்க்காமல் குனிந்து பெட்டியை ஒரு கையிலும்.. டிராவல் பேக்கை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டு காம்பவுண்டு வாசலைத் தாண்டி உள்ளே நடந்து சென்றான்.
சுமை குறைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட ரூபிணி மீதமிருந்த பைகளையும் ஹேண்ட் பேகையும் எடுத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள். உள்ளே நீண்ட முன்புற ஹாலில் சேர்கள் போடப்பட் டிருக்க நடுவிலிருந்த டீப்பாயில் வார.. மாதப் பத்திரிகை களும் தினசரியும் கிடந்தன. ஹாலின் மூலையில் இருந்த ஸ்டாண்டில் டி.வி. வைக்கப்பட்டிருந்தது. அது அதி காலை நேரம். அதனால் நைட்டியுடன் இருந்த பெண்கள் காபியை உறிஞ்சியவாறு அங்கிருந்த சேர்களில் அமர்ந்து படித்துக் கொண்டும்… டி.வி. பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
ஆட்டோ டிரைவர் ஹாலில் பெட்டியையும்.. டிராவல் பேக்கையும் வைத்தான்.
“தேங்க்ஸ்… என்றாள் ரூபிணி உண்மையான நன்றி யுடன்.
“தேங்க்ஸ்ஸெல்லாம் எதுக்கும்மா… காலங்கார்த் தால.. விடிஞ்சும் விடியாம இருக்கிற இந்தப் பொழுதில என் ஆட்டோவில் ஏறிய முதல் சவாரியே நீங்கதான். கேட்ட துட்டை வாக்குவாதம் பண்ணாம கொடுத் திங்க.. முதல் போணியே தகராறா இருந்தால் அன் னைக்கு நாள் பூராவும் தகராறா பூடும்மா. இன்னைக்கு எந்த விடியா மூஞ்சியும் என் ஆட்டோவில முத முதலா ஏறிடக் கூடாதேன்னு பயந்துகிட்டு நின்னேன். மகா லட்சுமி போல நீங்க வந்து நாளைத் தொடங்கி வைச்சிருக்கீங்க… இன்னைக்கு பொழுது நல்ல பொழுதா எனக்கு விடிஞ்சிருச்சு. மனுசருக்கு மனுசர் இந்த உதவிகூடச் செய்யலைன்னா எப்படிம்மா?”
“நீங்க கேட்டது கரெக்டான ரேட்தான். கூடக் கேட்கலையே…”
“அது உங்களுக்குத் தெரிந்த மாதிரி எத்தனை பேருக்குத் தெரியுது? ஆட்டோக்காரன்னா… அடாவடிக் காரன்னு பெயராகிப் போச்சு. எங்களோட நாணயம் பத்தி உங்களுக்குத் தெரிந்தது போல் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறதுன்னு சொல்லுங்க… ? வரேன்ம்மா…”
ஆட்டோ டிரைவர் போய்விட ரூபிணி தயக்கமாய் அங்கே அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தாள். அவர்களில் ஒரு பெண்.
“ஹாய்…ஐ ஆம் ஜமுனா…” என்றாள்.
“ஐ ஆம் ரூபிணி… வார்டனைப் பார்க்கணுமே.”
“என்கூட வாங்க போகலாம்.”
“பெட்டி பையெல்லாம்… “
“ஆளுக்கு ஒன்னாய் தூக்கிக் கொண்டு போனால் போகிறது.”
“உங்களுக்கேன் வீண் சிரமம்.”
“அட.. இதில் என்னங்க சிரமம்? ஒரு ஆட்டோ டிரை வர் அரை மணி நேரமாய் டயலாக் பேசி பெட்டி பைகளை தூக்கிக் கொண்டு வந்து வைக்கும்போது.. ஹாஸ்டல் மேட். நான் உதவி செய்ய மாட்டேனா…”
அவளின் இயல்பான பேச்சில் கவரப்பட்ட ரூபிணி அவள் பின்னால் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். ரூபிணியின் டிராவல் பேக்கைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்த ஜமுனா நீண்டிருந்த வராண்டாவில் ஒரு அறையின் முன் நின்று கொண்டு கதவை ஒரு விரலால் மிக மெதுவாய்.. நாசுக்காய் தட்டினாள்.
”யார் அது?”
“ஜமுனா மேடம்..”
“பேஸ் வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. என்ன விஷயம்”
“நியூ பேஸ் ஒருத்தங்க வந்திருக்காங்க.. அதுதான் விசயம்.”
ரூபிணிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஜமுனாவோ இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டு ரூபிணியைப் பார்த்து,
“எத்தனை முறை வாஷ் பண்ணினாலும் அந்த பேஸ் தடித்த பேஸ் தான் இருக்கப் போகுது. இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை” என்று கூறினாள்.
இப்போது ரூபிணி வாய் விட்டே சிரித்தாள். அறைக் கதவு திறந்தது. ஈர முகத்தை டவலால் துடைத்தபடி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து நின்றாள்.
“ரூபிணி… இவங்கதான் மணிமேகலை மேடம். நம்ம வார்டன். நான் இப்போது உங்கள்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேனே… பால் வடியும் முகம் இவங்களுடைய துன்னு.. அந்த அழகு முகத்தைக் கொண்டவங்க இவங்க தான்.”
“என்னைப் புகழா விட்டால் உனக்குப் பொழுதே போகாது. ஜமுனா… உன் பெயர் என்னம்மா?”
“ரூபிணி மேடம்.”
“எங்கே வேலை பார்க்கிறாய்?”
“எல்.ஐ.ஸி.யில் வேலை கிடைத்திருக்கிறது மேடம். போனில் உங்களிடம் போன வாரம் பேசினேனே… நீங்கள் தான் ரூம் இருக்கிறது உடனே வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள்.”
“யெஸ்.. யெஸ்.. ஐ ரிமம்பர் இட்.. சும்மா உன்னை வெரி பை பண்ண கேட்டேன். நீதானா.. அது என்று கன்பர்ம் பண்ணிக் கொண்டேன்.” மணிமேகலை சமாளித்தாள்.
“பொய்.. பொய்.. அம்மணிக்கு மறதி அதிகம். மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டே கண்ணாடியைத் தேடும் ரகம். ஞாபகசக்தி பிட்டுக்குச்சுன்னு ஒத்துக்காது. கப்ஸா விடும் பாருங்களேன். நீங்க பேசின விவரத்தை மறந்துவிட்டு நீதானா அந்தக் குயில்ன்னு டெஸ்ட் பண்ணினேன் என்று கதை விடுவதை… ரூபிணியின் காதோரமாய் ஜமுனா முணுமுணுத்தாள்.
“ஜமுனா என்ன சொல்கிறாள்?” மணிமேகலை வினவ ரூபிணி சங்கடத்துக்கு உள்ளானாள்.
“உங்களைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொண் டிருந்தேன் மேடம். உங்களுக்கு அபார ஞாபக சக்தின்னு எனக்குத் தெரியும். ரூபிணிக்குத் தெரியாதே…” ஜமுனா சிரிக்காமல் கூறினாள்.
“ஜமுனாவிற்கு என்னைப் பற்றிப் பேசுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி… அவ்வளவு பிடிக்கும். நீ உன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரின் ஜெராக்ஸ் காபி இருந் தால் கொடும்மா.. மற்ற பயோ டேட்டாவைச் சொல்லு.”
மணிமேகலை ஒரு விண்ணப்பப் படிவத்தை எடுத்து ரூபிணியிடம் விவரம் கேட்டுக் கொண்டே மளமள வென்று பூர்த்தி செய்தாள். ரூபிணி தயாராய் வைத் திருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரின் ஜெராக்ஸ் காபியைக் கொடுத்தாள்.
“பரவாயில்லையே ரெடியாய் வைத்திருக்கிறாயே.”
“நீங்கள் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரின் ஜெராக்ஸ் காபி வேண்டுமென்று போனில் சொல்லியிருந்தீர்கள் மேடம்.”
“மேடம் அவங்க சொன்னதை நீங்க நினைவில் வைத்திருந்தீங்களான்னு செக் பண்ணுகிறாங்க ரூபிணி. நான் சொல்வது சரிதானே மேடம்…” மீண்டும் ஜமுனா சிரிக்காமல் கூற ரூபிணிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.
“கரெக்டாகச் சொல்லி விட்டாய் ஜமுனா. நீ நான் சொன்னதை மறந்து விடாமல் இருக்கியான்னு செக் பணணினேன்ம்மா. இங்கே கையெழுத்துப் போடு..”
மணிமேகலை நீட்டிய விண்ணப்பப் படிவத்தில் கையொப்பம் இட்டு அவளிடம் திருப்பிக் கொடுத்தாள் ரூபிணி.
”சரி நீ போம்மா… மணிமேகலை எதையோ தேடிய வாறு கூற,
“எங்கே போவது?” என்று தெரியாமல் ரூபிணி விழித்தாள்.·
“பார்த்தீர்களா.. மறதி மணிமேகலை பண்ணும் அட்ட காசத்தை. ரூமை அலாட் பண்ணாமல் போகச் சொல் லுதே.. சன்னமாய் ரூபிணியிடம் கூறிவிட்டு மணி மேகலையிடம் சத்தமாய்,
“மேடம் நீங்க எந்த ரூமுன்னு சொன்னீங்க. எனக்கு மறந்து விட்டதே. நான்தான் இவங்களுக்கு வழிகாட்ட ணும்?” என்று கேட்டாள் ஜமுனா.
‘எந்த ரூமைச் சொன்னோம்?’ என்று மணிமேகலை விழித்தவாறு ஜமுனாவைப் பார்த்துக் கேட்டாள்.
“உன் ரூமில் யார் யார் இருக்கிறீங்க.”
“நான் மட்டும்தான் மேடம்.”
“ஏன் உன் ரூம் மேட் என்ன ஆனாள்.”
“வேலை மாறுதல் வாங்கிக் கொண்டு போனாள்.”
“எப்போது…?”
“நேற்றுச் சாயங்காலம்தான் மேடம்.. நீங்கள் கூட அவளைக் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்தீங்களே… “
ஜமுனா எடுத்துக் கொடுக்கவும் அதைப் பிடித்துக் கொண்ட மணிமேகலை.
“யெஸ்.. யெஸ்.. இவங்களை உன் ரூமில்தான் தங்க வைக்கப் போகிறேன்.. அழைத்துக் கொண்டு போ..” என்று கூறினாள்.
“தேங்க் யு மேடம்…” என்று மணிமேகலையிடம் கூறி விட்டு,
“வாங்க… ஓடிப்போயிடலாம்… இன்னும் கொஞ்சம் நேரம் இங்கேயே நின்றால் நம்மையே யாருன்னு கேட்டு விடும் இந்தம்மா…” என்று ரூபிணியிடம் கிசுகிசுத்த வாறு பெட்டியை எடுத்துக் கொண்டாள் ஜமுனா.. அவளைப் பின் தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்த ரூபிணிக்கு ‘அப்பாடி..’ என்றிருந்தது.
“இவங்க எப்பவுமே இப்படித்தான் பேசுவாங்களா?” ரூபிணி கவலையாய் விசாரித்தாள்.
“இப்படித்தான் எப்பவுமே பேசும். அதுக்கு நீங்க ஏன் கவலைப்படறீங்க? அது மறதி அதுக்கு. நமக்கென்ன வந்தது?” என்றவாறு மாடிப்படியில் கால் வைத்த ஜமுனா.
“ஆமாம்.. நீங்க இன்னும் காபி சாப்பிடலையே..” என்று கேட்டு விட்டு அங்கே மாடிப்படியை பெருக்கிக் கொண்டிருந்த வேலையாளிடம்,
“ரோஸ்.. எங்க ரூமுக்கு ரெண்டு காபி வாங்கிட்டு வாயேன்” என்று கூறினாள்.
“ஏம்மா.. என் பெயர் எவ்வளவு அழகா இருக்கும். அதை ரோஸ் ரோஸ்ன்னு கொலை பண்றியே.. என் பேரை சரி யாச் சொல்லிக் கூப்பிட்டால்தான் வாங்கிக்கிட்டு வரு வேன்” அந்த ரோஸ் என்று அழைக்கப்பட்ட வேலையாள் நொடித்தாள்.
“இதுக்குப் போய் ஸ்டிரைக் பண்ணலாமா? உன் பெயர் ரோஜாரமணிதான். முழுப் பெயரையும் சொல்லி ரோஜாரமணின்னு கூப்பிட எனக்கும் ஆசைதான். அதில பாரு ரோஸ்.. எனக்கு வாய் தவறி ஜில் ஜில் ரமா மணின்னே உன்னைக் கூப்பிட வருது…”
“சரி சரி . போ.. ரூமுக்கு காபியைக் கொண்டாரேன். ஆமாம் இது யாரு புதுமுகமாய் இருக்கே.”
“இந்த புதுமுகத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன் கேள். இவங்க பெயர் ரூபிணி. எல்.ஐ.ஸி.யில் வேலை பார்க்கிறாங்க.”
“ஆமாம். இது என்னா புதுசா கீது ? உன் ரூம் மேட் எல் லாத்தையும் வாடி போடின்னு கூப்பிடுவே. இதைப் போயி அவங்க இவங்கன்னு மரியாதையாய் கூப்பிடு றயே.. என்னா விஷயம்?”
“உன்னைப் போல் நாலு பெரிய மனிதர்கள் இந்த விஷயத்தை இவங்க காதில் போட்டு வாடி போடின்னு கூப்பிட பெர்மிசன் வாங்கிக் கொடுக்கட்டும்ன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுதான் விஷயம்.” ரூபி ணியைப் பார்த்தவாறு ரோஜாரமணியிடம் கூறினாள் ஜமுனா.
“பெர்மிசன் கிராண்டட்” ரூபிணி சிரித்தாள்.
“அப்பா.. இப்போதுதான் நிம்மதியாச்சு. தேங்க் யூ ரோஸ். நீ போய் எனக்கும் இவளுக்கும் காபி கொண்டு வா…”
இப்படித்தான் விழுப்புரத்தில் ரூபிணி காலடி எடுத்து வைத்த ஒரு மணி நேரத்திற்குள் ஜமுனா அவளுக்குத் தோழியானாள்.
அத்தியாயம்-2
“இதுதான் உங்கள் சீட். வேலையில் சந்தேகம் வந்தால் ப்ரீதியிடம் கேளுங்கள். ஷி இஸ் எக்ஸ்பர்ட்.” என்று கூறியவாறு பக்கத்து சீட்டிலிருந்த ப்ரீதியை பார்வையால் விழுங்கினான் ஜவஹர்.
அவன் கூறிய எக்ஸ்பர்ட் அவனை மேல் பார்வை பார்த்து முறைத்தாள். ரூபிணி பேசாமல் தன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஜவஹர் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.
“ஆள் பார்க்க சிம்பிளா இருக்காங்கன்னு நினைத்து விடாதீங்க. இவங்க உடம்பெல்லாம் மூளை. நீங்களும் நானும் நாள் பூராவும் செய்யும் வேலையை இவங்க ஒரு நொடியில் செய்து முடித்து விடுவாங்க.”
“மிஸ்டர் ஜவஹர். நான் ஒரு நொடியில் செய்யும் வேலையை இந்த ஆபிஸிலேயே நீங்கள் ஒருவர்தான் ஓர் நாள் முழுவதும் செய்வீர்கள். இதில் புதிதாய் வந்திருக்கும் அவங்களை ஏன் நீங்களும் நானும் என்று கூட்டுச் சேர்க்கிறீர்கள். அப்படியிருக்கையில் இங்கே நின்று கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி பொழுதை ஓட்டாவிட்டால்தான் என்ன? போங்க சார் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்.”
‘ஜெயம்’ திரைப்படத்தில் ‘சதா’ கையை நீட்டி ‘போ… என்று சொல்வதுபோல் ப்ரீதி கையை நீட்டி அவனைப் போகச் சொன்னாள்.
“ஹி… ஹி.. ப்ரீதி என்னிடம் எப்போதுமே இப்படித் தான் ஜாலியாய் பேசுவாங்க” ஜவஹர் ப்ரீதியின் மேல் பதித்த பார்வையை விலக்கிக் கொள்ளாமல் ரூபிணி யிடம் கூறினான்.
‘இதுவா ஜாலியாய் பேசுவது?’ ரூபிணி தலையில் கை வைத்துக் கொண்டு ப்ரீதியைப் பார்த்தாள்.
”ஏன் சார்… வேலையில் சேர்ந்த முதல் நாளே அவங்களைப் பயமுறுத்தப் பார்க்கறீங்க… பாவம் சார். விட்டு விடுங்க” ப்ரீதி எரிச்சலுடன் கூறினாள்.
“ஆக்சுவலாய் ப்ரீதி… இவங்களை சீட்டுக்குப் போகச் சொல்லி அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர் சொல்லி விட்டார். இவங்களுக்கு சீட் தெரியாமல் விழித்தார்கள். நான்தான் நம்ம ப்ரீதியின் சீட்டிற்கு பக்கத்து சீட் என்று சொல்லி அழைத்து வந்தேன்…”
“நம்ம ப்ரீதி…?”
“ஆமாம்… “
“இப்ப உங்கள் சீட்டிற்குப் போகப் போறீர்களா… இல்லை… நான் ஆபிஸர்கிட்ட போய் கம்ப்ளெயின்ட் பண்ணவா?”
“அப்பச்சரி ப்ரீதி… நாம் ஈவினிங் மீட் பண்ணலாம்.”
“நீங்க அடங்கவே மாட்டீங்களா.”
“பை.. ப்ரீதி… பைபை.. “
“இம்சையைக் கிளப்பாமல் போங்க சார். அதோ இருக்கிற உங்கள் சீட்டிற்கு போவதற்கு டாட்டா சொல்லி உயிரை எடுப்பீர்கள்… சபாபதி.. எனக்கு நம்ம ஆபிஸ் கேண்டினிலிருந்து ஒரு கப் காபி வாங்கிட்டு வாப்பா…” ப்ரீதி தலையைப் பிடித்து நீவ ஆரம்பித்தாள்.
“இந்தாங்க மேடம்..” பியூன் சபாபதி அவள் டேபி ளில் காபிக் கோப்பையை வைத்தான்.
“எப்படிப்பா கரெக்டா வாங்கி வந்தாய்?” ப்ரீதி ஆச் சர்யமாய் வினவினாள்.
“ஜவஹர் சார் உங்கள் டேபிள்கிட்ட வந்து நின்னா உங்களுக்கு தலைவலியை வரவைக்காமல் போக மாட்டார். அவர் உங்க சீட்டுக்கிட்ட வந்து நின்னவுடன் நான் காபி வாங்கப் போய் விட்டேன்.. ” சபாபதி காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
“நீ நல்லாயிருப்பா… காபியைக் கொடு..”
சற்று உயரம் கம்மியாய்… பூசின உடல் வாகுடன் சிவந்த நிறத்தில் இருந்த ப்ரீதி பார்க்க அழகாக இருந்தாள்.
முதுகுவரை வெட்டிவிடப்பட்டக் கூந்தலை ஒரு கிளிப் பில் அடக்கி முதுகில் விரிய விட்டிருந்தாள். பச்சைக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள்.
“பச்சைக்கிளி முத்துச்சரம். முல்லைக் கொடி யாரோ..” பாடியவாறு ஏதோ வேலையிலிருப்பது போல் ப்ரீதியைத் தாண்டிச் சென்றான் ஜவஹர்.
“இவருக்கு இந்தச் சிச்சுவேஷன் சாங்கெல்லாம் எப்படிப்பா… உடனே நினைவுக்கு வருது?” சபாபதி யிடம் கேட்டாள் ப்ரீதி.
“அதைத் தான் மேடம் நானும் யோசிச்சுக்கிட்டு இருக் கேன். நேத்து நீங்க மஞ்சள் கலரில் சுடிதார் போட்டுக் கிட்டு வந்தீங்க. ஜவஹர் சார் நேத்து பூராவும் ‘மஞ்சக் காட்டு மைனா.. என்னை கொஞ்சிக் கொஞ்சிப் போனா’ன்னு பாடிக்கிட்டு அலைஞ்சார். முந்தா நாள் பூராவும் ‘கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு’ன்னு பாடிக்கிட்டு இருந்தார். என்னடான்னு நான் திரும்பிப் பார்த்தால் நீங்கள் கருப்புக் கலர் சுடிதார் போட்டிருந்தீங்க…”
“இந்த ஆளை நாடு கடத்தணும் சபாபதி.”
“அது எதுக்கு கருமாயமா…? பேசாமல் ஆபிஸ் கடத்துங்கள்…”
“அதுக்குத்தான் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
“அவரைக் கடத்த முடியாவிட்டால் நீங்கள் ஆபிஸ் மாறி விடுங்களேன்.”
சபாபதி யோசனை கூறினான்.
“எப்படிப் போவது சபாபதி… நான் செலக்ட் ஆகி வேலை பார்த்தது திருநெல்வேலியில்.. இந்த விழுப்புரம்தான் எனக்கு சொந்த ஊர்.. என் அப்பா அலையாய் அலைந்து யார் யாரையோ சிபாரிசுக்கு பிடித்து விழுப்புரத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வந்தார். சொந்த ஊரை விட்டு நான் வேறு எந்த ஊருக்குப் போக?”
”ச்ச்ச்…”
‘இப்ப எதுக்குப்பா சூள் கொட்டுகிறாய்?”
“உங்க கதையைக் கேட்டால் பரிதாபமா இருக்கு மேடம்…”
“நீயெல்லாம் பரிதாபப்படும் நிலைமைக்கு என்னை ஆளாக்கி வைத்திருக்கும் அந்த ஜவஹரை இதுக்காகவே கழுவில் ஏத்தனும்…”
ப்ரீதி பல்லைக் கடித்துக் கொண்டு கூறிக் கொண் டிருந்தபோது ஜவஹர் மீண்டும் “பச்சை நிறமே. பச்சை நிறமே” என்று பாடியவாறு அவளைக் கடந்து சென்றான்.
“போகிறதைப் பார்.. ஆந்தை மாதிரி முழிச்சுக்கிட்டு.”
“நீங்க வேற மேடம்.. அவருடைய கண்ணழகைப் பார்த்து விட்டு கண்ணன்னு பெயர் வைக்கணும்னு அவருடைய பாட்டி சொன்னாங்களாம்.”
“அப்புறம் இவர் ஜவ்வு மாதிரி சவசவன்னு ஆளாய் இருக்கிறதைப் பார்த்து விட்டு ஜவஹர்ன்னு பெயர் வைத்து விட்டார்களா?”
ப்ரீதி கிண்டலாய் வினவ ரூபிணி ‘களுக்’கென்று சிரித்தாள். ப்ரீதி அவளைப் பார்த்தாள். ஒல்லியாய்.. உயரமாய். கோதுமை நிறத்தில் ஆளைக் கவரும் அழ கோடு இருந்தாள் ரூபிணி… ப்ரீதியின் பொறாமையைத் தூண்டி விட்டது அவளுடைய நீண்ட பின்னல். ப்ரீதி தன்னைக் கவனிப்பதை உணர்ந்ததும் நிமிர்ந்து அவளைப் பார்த்தவளின் கண்கள் பெரியதாய் அழகாய் இருந்தன.
“நீங்க எந்த ஊர்?” ப்ரீதி கேட்டாள்.
“கோவில்பட்டி… “
“இங்கே எங்கே தங்கி இருக்கிறீர்கள்?”
“கலைவாணி லேடிஸ் ஹாஸ்டலில்…”
”ஓ…! அதுவா? நல்ல ஹாஸ்டல்தான். பாதுகாப் பாகவும் வசதியாகவும் இருக்கும். இங்கு போன வருடம் வரை வேலை பார்த்த எலிஸபெத். அங்குதான் தங்கி யிருந்தாள். இப்போது சென்னையில் வேலை பார்க்கிறாள்.”
“அப்படியா?”
“நீங்கள் என்ன மேஜர்.”
“பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.”
“எந்த காலேஜ்?”
“விருதுநகர் காலேஜ்.”
“அங்கேயிருந்து இங்கே வேலைக்கு வந்திருக்காங்க…பாவம்.”
“நீயென்ன சபாபதி எல்லாவற்றிற்கும் பாவம் போடுகிறாய். எனக்குக் கூட பர்ஸ்ட் அப்பாயின்மென்ட் கிடைச்சது திருநெல்வேலியில் தான்… வேலைக்குத்தானே வந்திருக்கிறோம். இதில் பாவப்பட என்ன இருக்கிறது?”
ரூபிணி சபாபதியைப் பார்த்துப் புன்னகைத்தாள். சபாபதிக்கு அவளைப் பிடித்து விட்டது. ப்ரீதி கேள்விக் கணைகளை தொடர்ந்து தொடுக்க ஆரம்பித்தாள்.
“அப்பா அம்மா என்ன செய்கிறாங்க?”
“இரண்டு பேருமே பேங்க் எம்ப்ளாயி.”
“ஒ… என் அப்பா ரயில்வேயில் வொர்க் பண்ணு கிறார். அம்மா ஹவுஸ் வொய்ப். கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு?”
“அக்காவும், தம்பியும் இருக்கிறாங்க… அக்கா கம்ப் யூட்டரில் சாப்ட்வேர் என்ஜினியர்… மேரேஜ் முடிஞ்சிடுச்சு.. அக்காவின் ஹஸ்பெண்டும் சாப்ட்வேர் என் ஜினியர்தான்… இரண்டு பேரும் பெங்களூரில் இருக்கிறார்கள். தம்பி என்ஜினியரிங் தேர்ட் இயர் படிக்கிறான்.”
“எனக்கு இரண்டு அண்ணன்கள். இரண்டு பேருமே ரயில்வேயில் அப்பாவைப் போல நுழைந்து விட்டார்கள். என் மேரேஜ் முடிவதற்காக அவர்களது மேரேஜை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.”
ரூபிணியிடம் பேசியவாறு எழுந்து வந்து அவளின் சேரிற்கு அருகே ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்த ப்ரீதி.
“கம்ப்யூட்டரை ஓப்பன் பண்ணுங்க.. உங்க சீட் வொர்க்கை சொல்லிக் கொடுக்கிறேன்…” என்றாள்.
“தேங்க்ஸ்ங்க… நான் எப்படி உங்களைக் கேட்பதுன்னு பயந்து கொண்டு இருந்தேன்.”
“எதுக்கு பயம்? உங்க சீட் வொர்க்கை நான் கொஞ்ச நாள் பார்த்தேன். என்ன சந்தேகம்ன்னாலும் என்னைக் கேளுங்க.”
அந்த சீட்டின் வேலைகளை அக்கு வேறு ஆணி வேராக விளக்கினாள் ப்ரீதி. அவள் சொல்லிக் கொடுத்ததை உடனுக்குடன் புரிந்து கொண்டாள் ரூபிணி.
“குட்… சீக்கிரமாய் கத்துக்கிட்டிங்க. என்ன சந்தேகம் என்றாலும் என்னிடம் கேளுங்க” ப்ரீதி அவளுடைய இடத்திற்குப் போனாள்.
ரூபிணி ஆர்வமாய் வேலையைத் தொடங்கினாள். மதிய உணவு நேரத்தின்போது ப்ரீதி எழுந்து அவளருகில் வந்தாள்.
“சாப்பிடப் போகலாமா..”
“இதோ வந்து விட்டேன்.”
“என்ன சாப்பாடு கொண்டு வந்தீங்க?”
“தெரியவில்லைங்க.. ஹாஸ்டலில் பொட்டலம் போட்டு வைத்திருந்தாங்க. காலை டிபன் சாப்பிட்டதும் கையோடு எல்லோரும் எடுத்துக் கொண்டோம்.”
“சரி வாங்க..”
டைனிங் ஹாலில் இருவரும் நுழைந்தனர். ப்ரீதி மற்ற பெண்களுக்கு ரூபிணியை அறிமுகப்படுத்தி வைத்தாள். ரூபிணி எல்லோரிடமும் பேசி அவர்கள் கேட்ட விவ ரங்களை கூறிவிட்டு தன் உணவுப் பொட்டலத்தைப் பிரித்தாள்.
“வாசனையே அமர்க்களமாய் இருக்கு.. என்ன சாதம்?”
“தக்காளி சாதம்.”
“அந்த ஹாஸ்டலில் தினமும் வெரைட்டியாய் சமையல் செய்து போடுவார்கள். சாப்பாடும் டேஸ்டாய் இருக்கும்.”
பேசியவாறு தனது கேரியரைத் திறந்து சாப்பாடை எடுத்து ஒரு தட்டில் வைத்து ரூபிணியின் பக்கம் நீட்டி னாள் ப்ரீதி. அவள் தயங்கவும்.
“ஈஸி ரூபிணி… குடும்ப விசயங்கள் முதற் கொண்டு ஷேர் பண்ணிக் கொள்கிறோம்… சாப்பாட்டை ஷேர் பண்ணிக்க வேண்டாமா?” என்று கூறினாள்.
பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். கை கழுவ எழுந் திருக்கும்போது ஒருவரை ஒருவர் ‘வா… போ’ என்று இயல்பாய் கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு மனதால் நெருங்கி விட்டார்கள்.
“ஆமாம் ப்ரீதி. அந்த ஜவஹர் ஏன் உன்னையே சுற்றி வருகிறார்…?”
“லவ்வாம்.”
“உனக்கு அவரைப் பிடிக்காதா?”
“பிடிக்காது.”
“அதைச் சொல்லிவிட வேண்டியதுதானே.”
“நிறைய முறை சொல்லிவிட்டேன். சொல்லித் திருந்துற ஜென்மமில்லை அது… “
“அதுவா… எது ?”
“இந்நேரம் வரை எந்த ஜந்துவைப் பற்றி நீ பேசிக் கொண்டிருந்தாயோ அதுதான்… புரியாதது போல என்ன கேள்வி ?”
அவர்கள் இருவரும் அவரவர் சீட்டிற்கு வந்து அமர்ந்த போது,
“ஹாய் ரூபிணி… வேலையெல்லாம் பழகியாகி விட் டதா?” என்று ப்ரீதியை பார்த்தபடி ரூபிணியிடம் கேட்டான் ஜவஹர்.
“பழகி விட்டேன் சார்.”
“ஒரே நாளில் எப்படிப் பழக முடியும்? மெல்ல மெல்லத்தான் எல்லாம் புரியும்..” ஜவஹர் ப்ரீதியை ஜாடையாய் நோக்கியவாறு கூறினான்.
“சில மண்டூகங்களுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் புரியாது.” ப்ரீதி பல்லைக் கடித்தாள்.
“புரியா விட்டால் புரிய வைக்க முயற்சி பண்ணுவது தானே…” ஜவஹர் நேரடியாய் ப்ரீதியிடம் கேட்டான்.
“எப்படி…?” ப்ரீதி கேட்டதுதான் தாமதம்.. அவன் பாட ஆரம்பித்து விட்டான்.
“அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால், உலகம் புரியாதா…?”
சபாபதி ஆச்சரியப்பட்டான்.
“அது எப்படி சார் நீங்க மட்டும் உடனே ஒரு சிச்சுவேசன் சாங்கை போட்டுத் தாக்கறீங்க?”
“காதல் வந்து விட்டால் பாடல் வந்து விடும் சபாபதி” ஜவஹர் பெருமையுடன் ப்ரீதியைப் பார்த்துக் கொண்டான்.
“சபாபதி…” ப்ரீதி அழைத்தாள்.
“என்ன மேடம்…?”
“இப்ப சார் பேசினாரே.. ஒரு வசனம்.. அது முழுதாக உனக்குத் தெரியுமா?”
“அது பாட்டு மேடம்.. “
“அதை நீதான் சொல்ல வேண்டும். எனக்கு அது வசனம்தான்.”
“இல்லை மேடம்… அது நான் உன்னை அழைக்கவில்லைன்னு ஆரம்பிக்கும் பாட்டு…”
“எப்படி ஆரம்பிக்கும்.”
“நான் உன்னை அழைக்கவில்லை.”
“அதை அப்படியே அந்த பிரகிருதிகிட்ட நான் பாடி னேன்னு பாடிக்காட்டி வேலையைப் பார்க்க அனுப்பு.”
ஜவஹர் அவள் என்னவோ அவனைப் பார்த்து ‘ஐ லவ் யூ…’ என்று சொல்லிவிட்டதுபோல் முகமலர்ச்சியுடன் அவனது இருக்கைக்குப் போனான். ப்ரீதி தலையில் அடித்துக் கொண்டாள்.
அத்தியாயம்-3
வானம் நீலநிறமாய் காட்சி அளித்தது. அதில் வெண் ணிற மேகங்கள் பஞ்சுப் பொதியாய் நகர்ந்து கொண் டிருந்தன. ஒரு மேகத்தின் மீது பட்டுக் கம்பளத்தில் அமர்ந்திருப்பது போல் ரூபிணி அமர்ந்திருந்தாள். வட்ட வடிவமான நிலவு வானில் மிதந்து கொண்டிருந்தது. அதன் அருகே சென்ற மேகத்திலிருந்த ரூபிணி நிலவை எட்டித் தொட்டாள்.
“ஸ்ஸ்… ஆ.. கன்னத்தில் ஈர ஸ்பரிசம் பட கண் விழித்தாள். ஜமுனா ஈரக்கையுடன் அவளைத் தொட்டு எழுப்பிக் கொண்டிருந்தாள். கண் விழித்த ரூபிணி தூக்கம் கலையாதவளாய் சுற்று முற்றும் பார்த்தாள்.
“நான் எங்கேயிருக்கிறேன்?”
“சரியாப் போச்சு போ.. மயக்கம் தெளிந்து ஹாஸ் பிடலில் கண் விழிக்கும் சினிமா ஹீரோயின் கேள்வி கேட்பது போல் கேட்கிறாயே… இது ஹாஸ்பிடல் ரூம் இல்லேம்மா… ஹாஸ்டல் ரூம்.. தாச்சிக்கிட்டது போதும்… எழுந்துக்கோ பாப்பா.”
“ஆவ்…” என்று அழகாய் கொட்டாவி விட்டபடி எழுந்த ரூபிணி கைகளை தூக்கி சோம்பல் முறித்தாள்.
“இதைப் பாருடா.. இவள் சோம்பல் முறிக்கறதை.. ஹலோ.. நேற்று நான் உன்னிடம் என்ன சொன்னேன்? நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்…?”
“என்ன சொன்னாய்..” தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு குப்புறப் படுத்துக் கொண்ட ரூபிணி மீண் டும் தூங்க ஆரம்பித்தாள்.
“நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். இவள் பாட்டுக்கு தூங்குகிறாளே…” ஜமுனா தலையணையை எடுத்து ரூபிணியின் முதுகில் ஒரு போடு போட்டாள்.
“ஏண்டி.. என்னைத் தூங்க விடாமல் இந்தப் பாடு படுத்துகிறாய்…” ரூபிணி எழுந்து கட்டிலில் அமர்ந்து தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
“இன்றைக்கு என்ன கிழமை?”
“ஞாயிறு.. அதனால்தானே ஆபிஸ் போக வேண்டிய டென்சன் இல்லாமல் தூங்குகிறேன்.. வாரத்தில் ஒரு நாள்.. நிம்மதியாய் என்னைத் தூங்க விடுகிறாயா?”
“ஏண்டி.. அதைத்தான் ஒவ்வொரு ஞாயிறும் உனக் கையாய் தூங்கி எழுகிறாயே.. இந்த ஞாயிறு மட்டும் உன் பகல் தூக்கத்தை தியாகம் செய்யக் கூடாதா?”
‘“ஏன்..?” என்று கேட்டவாறு மீண்டும் சுருண்டு படுக்கப் போனவளை ஒரு கிள்ளு கிள்ளினாள் ஜமுனா.
“ஆ… ஏண்டி பேயே கிள்ளுகிறாய்…?”
“உன் தூக்கத்தை வேறு எப்படி விரட்டுவது? உனக்குப் போய் யாருடி ரூபிணின்னு பெயர் வைத்தது? ஆக்சுவலா உனக்கு கும்பகர்ணி என்கிற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்… “
“பெயரை வேண்டுமானால் உன் இஷ்டத்திற்கு மாற்றி வைத்துக் கொள். இப்போது என்னைத் தூங்க விடு… “
“தூங்குவதிலேயே குறியாக இரு.. என்னை விஷ் பண்ண வேண்டுமென்ற எண்ணமே உனக்கு இல்லையா?”
“எதற்காக..? ஓ. இன்று உன் பர்த்டே… ஜமுனா… மெனி மோர் ரிடர்ன்ஸ் ஆப் தி டே.. அன்ட் ஹேப்பி பர்த்டே டு யு.”
“வாழ்த்து மட்டும்தானா?”
“பரிசும் உண்டே..”.
தூக்கம் பறந்தோட ரூபிணி எழுந்து சென்று ஓர் அட்டைப் பெட்டியை அவளது பெட்டியிலிருந்து எடுத்து ஜமுனாவின் கையில் கொடுத்தாள்.
“வாவ்… புது சுடிதார்.. என்னுடைய பேவரைட் ப்ளூ கலர்.. தேங்க் யூ ரூபிணி.. தேங்க் யு வெரிமச். பட் எனக்கு இது போதாதே…”
“வேறு என்ன வேண்டும்?”
“இன்று எங்களுடன் பாண்டிச்சேரி வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறாய்.. மறந்துவிடாதே…”
“ஜமுனா.. ப்ளீஸ்… எனக்கு அவுட்டிங் போவதென் றாலே அலர்ஜி…”
“எனக்காக ப்ளீஸ்… “
“அதற்கு பாண்டிச்சேரிக்கு ஏன் போக வேண்டும்? இங்கேயே கோவிலுக்குப் போய் விட்டு வரலாமே..”.
“கூப்பிடு தூரத்தில் பாண்டிச்சேரியை வைத்துக் கொண்டு கோவிலுக்கு மட்டும் போய் வருவதென்றால் எப்படி ரூபிணி.”
“நீ மற்ற பிரண்ட்ஸுகளுடன் போய் விட்டு வாயேன்.”
“நீயும் ஹாஸ்டலுக்கு வந்து ஆறு மாதங்களாகி விட்டது. ஒரு நாள் கூட எங்களுடன் வெளியே வந்ததில்லை… இன்று மட்டுமாவது வாடி போகலாம்… “
ஜமுனா ரூபிணியின் அருகே அமர்ந்து அவள் கன்னம் திருப்பிக் கெஞ்சினாள்.
“ஓகே.. வா போகலாம்… பட் இருட்டுவதற்குள் திரும்பி வந்து விட வேண்டும். அப்படியென்றால்தான் வருவேன்.”
“வந்து விடலாம்.”
ரூபிணி எழுந்து குளிக்கக் கிளம்பிய போது அறைக் கதவு தட்டப்பட்டது. ஜமுனா போய் கதவைத் திறந்தாள். கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த வார்டன் மணி மேகலை நேராய் ரூபிணியிடம் போய் பூங்கொத்தை நீட்டி,
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்… “என்றாள். ரூபிணி அடக்கிக் கொண்டு, “மேடம் பர்த்டே எனக்கில்லை. ஜமுனாவுக்கு..” என்றாள்.
“அப்படியா… சரிம்மா பூங்கொத்தை கொடு” என்று வாங்கி.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்..” என்றபடி ஜமுனாவிடம் கொடுத்தாள் மணிமேகலை.
“தேங்க் யூ மேடம்.”
“புது டிரெஸ் போட்டுக்கலையா யமுனா…”
“பர்த்டேன்னா புது டிரெஸ்தான் போட்டுக்கணும். புதுப்பெயரை வைத்துக் கொள்ளக் கூடாது. என் பெயர் ஜமுனா மேடம்.”
“நான் அப்படித்தானே சொன்னேன். உனக்கும் நான் பேசியது சரியாய் கேட்கவில்லை போல.”
ஜமுனா கோபத்துடன் ரூபிணியின் காதுகளில் முணுமுணுத்தாள்.
“இந்தம்மா மறதி மணிமேகலையாய் இருந்துக்கிட்டு எனக்கு செவிடுன்னு பட்டம் கட்டுவதைப் பார்த்தாயா… இந்தக் கொடுமையைத்தான் சலிக்காம பண்ணுது… “
“ஜமுனா என்ன சொல்கிறாள் ரூபிணி.”
“வார்டன் மேடம் எனக்கு பெற்ற தாய் மாதிரி என்கிறாள் மேடம்.”
ஜமுனா அதிசயப்பட்டுப் போய்,
“தேறிட்டடி… நீ… என்று முணுமுணுத்தாள். மணிமேகலையிடம் புன்னகைத்தவாறு ரூபிணியிடம் உதடு அசையாமல்,
“உன் ரூம் மேட்டாய் இருக்கேனில்ல? இதுகூடப் பண்ணாவிட்டால் எப்படி?” என்றாள்.
“எங்கேயோ கிளம்ப ரெடியாகிக்கிட்டு இருக்கீங்க போல…”
ரூபிணியின் கைகிள்ளி ஜமுனா ஜடையாய் எதையோ உணர்த்த வைக்க முயல… அது புரியாதவளாய்,
“பாண்டிச்சேரிக்கு போகிறோம் மேடம்…” என்றாள் ரூபிணி.
ஜமுனா ரகசியமாய் முறைக்க புரியாமல் “என்ன?” என்று சைகையால் கேட்டாள் ரூபிணி.
“ஈஸிட்… நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?”
‘இதற்குத்தான் சொன்னேன்…’ என்ற குறிப்புடன் ஜமுனா ரூபிணியைப் பார்க்க அவள் தவறு செய்து விட்ட உணர்வுடன் நாக்கைக் கடித்துக் கொண்டு மணி மேகலை அறியாமல் ஜமுனாவிடம் தனது காதைப் பிடித்து மன்னிப்புக் கேட்டாள்.
‘சரி.. விடு… நான் பார்த்துக் கொள்கிறேன்..’ ஜாடை காட்டிய ஜமுனா.. மணிமேகலையிடம்.
“தாராளமாய் வாங்க மேடம். குப்பத்துக்கு போகும் போது உங்களைப் போல பெரியவங்க.. எங்க கூட வந்தால்.. எங்களுக்கும் பாதுகாப்பாய் இருக்கும்” என்றாள்.
“குப்பத்துக்கா.. எந்தக் குப்பத்துக்கு…?”
“நெல்லிக்குப்பம்.. அரியாங்குப்பம்.. பாண்டிச்சேரியில் குப்பத்துக்கா பஞ்சம்? நாங்கள் அங்குதான் போகப் போகிறோம்.’
“அங்கே எதற்குப் போகிறீர்கள்?” மணிமேகலை சந்தேகமே படாமல் விவரம் கேட்டாள்.
“குப்பத்து ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து ஒரு தீஸிஸ் செய்யப் போகிறேன் மேடம். என் காலேஜில் நான் பாடம் எடுக்க இது எனக்கு ஹெல்ப் பாக இருக்கும்…” தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் லெக்சரராக பணியாற்றும் ஜமுனா கூறினாள்.
“நீ எம்.ஈ. படித்து விட்டு இன்ஜினியரிங் காலேஜில் தானே வேலை பார்க்கிறாய்? குப்பத்தைப் பற்றிய ஆராய்ச்சி உனக்கு எதற்கு?”
“இப்ப மட்டும் மறதி ஓடி விடும். பார் எப்படி கரெக்டாக கேள்வி கேட்குது?” ஜமுனா வாய்க்குள் பேசினாள்.
ரூபிணி வாயைத் திறக்கவேயில்லை.
‘ஓர் முறை வாயைத் திறந்து வம்பில் மாட்டிக் கொண்டது போதாதா..?’
“இது வேறு மாதிரியான தீஸிஸ் மேடம். குப்பையிலிருந்து எப்படி எரிபொருள் தயார் பண்ணுவதுன்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறோம்… நீங்களும் வருகிறீர்கள்தானே…?”
“எனக்குத் தலையை வலிக்கிறதும்மா.. வெயிலில் அலைய என்னால் முடியாது…” மணிமேகலை கிளம்பி விட்டாள்.
”உஷ்… அப்பாடா…” என்று தளர்ந்து உட்கார்ந்த ஜமுனாவிடம்,
“குப்பையிலிருந்து எப்படிடீ எரிபொருள் தயார் பண்ணுவது?’ என்று விளக்கம் கேட்டாள் ரூபிணி.
“அடித்தே கொன்று விடுவேன்.. மறதி மணிமேகலை கிட்டப் பேசும்போது ஜாக்கிரதையாய் பேச வேண்டும்… பூனையை மடியில் கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கப் போனது மாதிரி. இதைக்கூட வைத்துக் கொண்டு எப்படிடீ நாம் என்ஜாய் பண்ணுவது?”
“சரி… போனதை விடு. நான் கேட்டதற்கு பதில் சொல்லு.”
“குப்பையைக் காய வைத்து.. தீயைப் பற்ற வைத்தால்.. அது எரிபொருள்…”
“அடடா… என்னே உன் அறிவு.. என்னே உன் அறிவு… “
“கன்னத்தில் போட்டு எனக்கு சாம்பிராணி காட்டியது போதும்… போய் குளித்து கிளம்பி வரும் வழியைப் பார்…”
“நீ…?”
“நான் அப்போதே குளித்து விட்டேண்டி. டிரஸ் சேன்ஜ்தான் பண்ணிக் கொள்ள வேண்டும்.”
ரூபிணி குளித்து உடைமாற்றி வந்தபோது அவர்களது அறைக்குள் வாசவியும், கோமளாவும் வந்தார்கள்.
“ரெடியா… போகலாமா?”
“பொறுடி.. டிராவல் ஏஜன்ஸிக்கு போன் பண்ணினேன் கார் வரட்டும்…”
“காரிலேயே போய்விட்டு வந்து விடலாமா?”
“அதுதான் பெட்டர் அன்ட் சேஃப்.”
“டிராவல் ஏஜன்ஸி நடத்துகிறவர்கள் தெரிந்தவர்கள் தானே.”
“ஏன் ரூபிணி.. இவ்வளவு பயம் பயப்படுகிறாய்?”
“தெரியாத ஊர் ஜமுனா..”
“ஆபிஸ்… ஆபிஸ் விட்டால் ஹாஸ்டல் ரூமுன்னு இருந்தால் எப்படி ஊரைத் தெரியும்? வெளியில் வந்து பழகுடி…”
“மாதம் ஒரு முறை கோவில்பட்டிக்கு போவதெல்லாம் உனக்குத் தெரியாதாக்கும்?”
“சொந்த ஊருக்குப் போவதுதான் வெளியில் வருவதா?”
“நீ விட்டால் என்னை வாருவதிலேயே குறியாய் இருப்பாய். டிராவல் ஏஜன்ஸியை நடத்துகிறவர்கள் தெரிந்தவர்களா.. தெரியாதவர்களா?”
“எங்க காலேஜ் ஸ்டூடண்டோட அண்ணன்தான் நடத்துகிறார்…போதுமா?”
“போதும்.. வா.. போகலாம்…”
அவர்கள் கீழே இறங்கி டைனிங் ஹாலுக்குப் போகப் போனபோது ஹாஸ்டல் வாசலில் கார் வந்து நின்றது. டைனிங் ஹாலுக்குள் மணிமேகலை நின்று கொண்டிருந்தாள்.
“ரூபிணி… வாசவி… ஸ்டாப்”.
“என்னடி….”
“நமக்கு டிபனே வேணாம்.. வாங்கடி கம்பி நீட்டி விடலாம்?”
“எதுக்குடி கோமளா இவள் இப்படி அலறுகிறாள்… “
“டைனிங் ஹாலுக்குள் பார். மறதி மணிமேகலை நிற்குது.”
“ஏண்டி.. அதுக்கு பயந்து டிபன் சாப்பிடாமல் போவதா? இன்னைக்கோ சன்டே ஸ்பெஷல். வெரைட்டியா செய்து வைத்திருப்பாங்க. ஹோட்டலில் போய் காசைக் கொட்டி னாலும் இந்த டேஸ்ட் கிடைக்காது.”
“வேண்டாம் வாசவி.. நாக்கைக் கட்டுப்படுத்து.. அது நம்கூடவே வந்து காரில் தொத்திக்கும்.. காரில் இடமும் பத்தாது.. அப்புறம் நான் அதை உன் மடியில் உட்கார வைத்து விடுவேன்.”
“நான் அதைத் தூக்கி டிரைவர் மடியில் உட்கார வைத்து விடுவேன் ஏண்டி… அதுக்குப் பெயரே மறதி மணிமேகலை. உன் பர்த்டேயை அது இந்நேரம் மறந்தே போயிருக்கும் வா..வா.”
வாசவி வழக்கடித்துக் கொண்டிருக்கும்போது டைனிங் ஹாலை விட்டு வெளியே வந்த மணிமேகலை அவர்களை பார்த்து விட்டாள்.
“என்ன ஜமுனா… உனக்கு காய்ச்சல்ன்னு சொன்னாயே… இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு…?”
புத்தம் புது மலர்போல் நீலக்கலர் சுடிதாரில் நின்று கொண் டிருந்த ஜமுனாவைப் பார்த்து வாசவி கண் சிமிட்டினாள். “நான் சொல்லலை… ? இது குணம் உனக்குத் தெரியாதா?”
“வாசவி என்ன சொல்கிறாள் ஜமுனா…?”
“இதை மட்டும் மறக்காமல் கேட்டு விடுகிறது பார்…” பல்லைக் கடித்தபடி பதில் சொன்னாள் ஜமுனா…
“ஹாஸ்பிடலுக்குப் போகலாம் வாங்கிறா மேடம். நான்தான் வெறும் வயிறோடு போகக் கூடாது. எதை யாவது வயிற்றுக்குள் போட்டுக் கொண்டு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”
“அப்படியா..” என்று கேட்டபடி மணிமேகலை போய் விட்டாள்.
– தொடரும்…
– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.