கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 3,926 
 
 

இன்றைய வாழ்க்கையின் சோகம் என்னவென்றால், சமுதாயம் ஞானத்தை சேகரிக்கும் வேகத்தை விட அறிவியல் அறிவை வேகமாக சேகரிக்கிறது. – ஐசக் அசிமோவ், மறைந்த அறிவியல் புனைவு எழுத்தாளர்.

ஆனந்த் என் கையை அழுத்தமாக குலுக்கிவிட்டு, அலுவலகத்தின் நடுவில் இருந்த பழுப்பு நிற தோல் நாற்காலியில் அமர்ந்தான். இருபத்தி ஒரு வயது. பொறியியல் பட்டம். சாதிக்கத் துடிக்கும் வேகம். இன்றைய காலகட்டத்தின் பிரதி நிதி.

“உங்கள் நிறுவனம் என்ன செய்கிறது என்று விளக்கமாக சொல்லுங்கள்.” என்றான்.

நான் என் நாற்காலியை சற்று முன்னோக்கி நகர்த்தினேன். இந்த விளக்கத்தை ஆனந்த் போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது புதிதாகவே தோன்றும்.

“ஆனந்த், மனிதன் எப்போதும் தன் வாழ்க்கையின் சரியான பாதையைத் தேடிக்கொண்டே இருக்கிறான். ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் முன்பே அவன் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. நாங்கள் இந்த பிரச்சினைக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு கண்டு பிடித்திருக்கிறோம்.”

“எப்படி?”

“நரம்பியல், உளவியல், கணினி அறிவியல் – இந்த மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து நாங்கள் உருவாக்கிய ‘நியூரோ-மேப்பிங்’ தொழில்நுட்பம் மூலம்.”

ஆனந்த் கண்களில் ஆர்வம் தெரிந்தது. விஞ்ஞானம் என்றால் எல்லா இளைஞர்களுக்கும் ஒரு ஈர்ப்பு.

நான் மேற்கொண்டு தொடர்ந்தேன். “முதலில் உங்கள் மூளையின் முழுமையான டிஜிட்டல் பிரதியை உருவாக்குவோம். உங்களின் நியூரான் இணைப்புகள், சிந்தனை முறைகள், உணர்ச்சிபூர்வ எதிர்விளைவுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான டிஜிட்டல் பிரதி. நாங்கள் இதை ‘நகல் மூளை’ என்று அழைக்கிறோம்.”

“இது எப்படி சாத்தியம்?”

“குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் நரம்பியல் வலைப்பின்னல் தொழில்நுட்பத்தின் கலவை. இருபது வருடங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கியது.”

“என்னுடைய மூளைக்கும் இந்த நகல் மூளைக்கும் எந்த வேறுபாடும் கிடையாதா?”

“உங்கள் மூளை உங்கள் உடலில் இயங்குகிறது. உங்கள் நகல் மூளை ஒரு மென் பொருளில் இயங்குகிறது. அதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. உங்கள் மூளையை சிந்திக்க வைக்கும் ஒரு சில தூண்டுதல்கள் உங்கள் நகல் மூளையையும் அதே வகையில் சிந்திக்க வைக்கும். ஒரு சில தூண்டுதல்களினால் உங்கள் மூளை சில இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. அதே தூண்டுதல்களை கொடுத்தால் உங்கள் நகல் மூளையும் அதே இன்ப துன்பங்களை அனுபவிக்கும்.”

“சரி. இந்த நகல் மூளையை வைத்து என்ன செய்வீர்கள்?”

“முதலில் உங்கள் நகல் மூளையின் நூறு பிரதிகளை உருவாக்குவோம். பிறகு அந்த நூறு நகல் மூளைகளையும் நாங்கள் இயக்கி வரும் Metaverse என்னும் செயற்கை உலகில் வாழ விடுவோம். உங்கள் நகல் மூளையைப் போலவே பல கோடி நகல் மூளைகள் வாழும் மாபெரும் டிஜிட்டல் உலகம் அது.”

“நூறு எதற்கு?”

“நல்ல கேள்வி. எங்கள் செயற்கை உலகில் உங்கள் நகல் மூளை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிலில் ஈடுபடும் – பொறியாளர், மருத்துவர், கலைஞர், தொழிலதிபதி, விஞ்ஞானி, எழுத்தாளர் – இப்படி நூறு வெவ்வேறு வாழ்க்கைகளை உங்கள் நகல் மூளைகள் வாழும். ஒரு வருடம் கழித்து உங்களுடைய எந்த நகல் மூளை அதிக மகிழ்ச்சியுடனும் அதிக வெற்றியுடனும் இருக்கிறதோ அதன் பாதை தான் உங்களுடைய பாதை. ரத்தமும் சதையுமான ஆனந்த் என்னும் நீங்கள் அந்த பாதையில் சென்றால் நீங்களும் அதே மகிழ்ச்சியையும் அதே வெற்றியையும் நிஜ உலகில் அடைவீர்கள்.”

ஆனந்தின் முகத்தில் மலர்ச்சி. கண்களில் ஆச்சரியம். “நிஜ உலகில் நான் இந்த சோதனையை செய்ய வேண்டுமென்றால் அதற்கு நூறு வருடங்கள் பிடிக்கும். ஆனால் உங்கள் செயற்கை உலகில் இதற்கு தேவை ஒரு வருடமே. பிரில்லியன்ட்!”

நான் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தேன். ஆனந்த் போன்ற புத்திசாலி இளைஞர்கள் தாங்களாகவே அதை யூகித்து விடுவார்கள் என்று எனக்கு தெரியும்.

திடீரென்று ஆனந்த், “இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில்?” என்றான்.

“கடந்த பத்து வருடங்களாக நாங்கள் இதை நடைமுறையில் செயல்படுத்தி வருகிறோம். வெற்றி விகிதம் 97 சதவீதம்!” என்றேன் நான் பெருமையுடன்.

ஆனந்த் சில நொடிகள் எதுவும் பேசாமல் என் மேஜையிலிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் நிமிர்ந்து என் கண்களை சந்தித்தான் . “சரி, இதற்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்கிறீர்கள்?”

நான் உள்ளூர குதூகலித்தேன். இந்தக் கேள்வியை கேட்ட எந்த இளைஞனும் பின் வாங்கியதில்லை. கிட்டத்தட்ட விற்பனை முடிந்தது போல் தான்.

நான் குரலை கனைத்துக் கொண்டு, “நீங்கள் முன்கூட்டி பணம் எதுவும் தர வேண்டியதில்லை. உங்கள் எதிர்கால வருமானத்தில் பத்து சதவீதம் தந்தால் போதும்.” என்றேன்.

ஆனந்த் முகம் சுருங்கியது. “பத்து சதவீதமா? அது மிக அதிகம்!”

“யோசித்துப் பாருங்கள். தவறான தொழிலில் வாழ்நாள் முழுவதும் போராடுவதா, அல்லது சரியான பாதையில் வெற்றிகரமாக வாழ்வதா? பத்து சதவீதம் கழித்தாலும் நீங்கள் சம்பாதிக்கும் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும்.”

அரை மணி நேரம் கழித்து ஆனந்த் கையெழுத்திட்ட ஒப்பந்தம் என் மேசையில் இருந்தது.


பதிமூன்று மாதங்கள் கழித்து டாக்டர் ராம்ஜி என் அலுவலகத்திற்கு வந்தார். எங்கள் நிறுவனத்தின் தலைவர். முகத்தில் பெரிய புன்னகை.

“ஆனந்தின் நகல் மூளை ரிபோர்டைப் பார்த்தேன். அசாதாரணமான திறமை. அவன் ஒரு பெரும் விஞ்ஞானியாக உருவாகப் போகிறான். அவன் கண்டு பிடிக்கப் போகும் தொழில் நுட்பங்கள் இந்த உலகையே மாற்றி விடும். நமக்கு பல கோடி வருமானம் வரும்.”

நான் புன்னகைத்தேன். “மிக நல்ல செய்தி. அந்த ரிபோர்டில் கவலை தரக் கூடிய விஷயம் வேறு ஏதேனும்இருந்ததா?”

“இருந்தது. ஆனால் அது நமக்குத் தெரிந்தது தான். ஆனந்தைப் போன்ற ஏதாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற தாகம் கொண்ட விஞ்ஞானிகளின் பொதுவான பிரச்சினை. அவர்களுக்கு பெரும் கண்டு பிடிப்பை நோக்கி உழைப்பது தான் இன்பம். அப்படி வேலை செய்யாத நேரங்களில் அவர்கள் உளச் சோர்வுக்கு ஆளாவார்கள். ஆனந்தின் விஞ்ஞானி நகல் மூளையின் ஒரு வருட வாழ்க்கையிலும் இந்த பிரச்சினை இருந்தது.”

“சரி. அதற்கு தீர்வு, ஆனந்த் உடனடியாக ஒரு தீவிர கண்டிபிடிப்பு வேலையில் ஈடுபடுவது தான்.”

“ஆம். அந்த வேலையும் ரெடி. நான் ஏற்கனவே ரோபோக்களை வடிவமைப்பு செய்யும் ஒரு பெரிய நிறுவனத்திடம் பேசி விட்டேன். அவர்கள் ஆனந்த்தை சந்திப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நீ உடனே ஆனந்த்தைக் கூப்பிட்டு பேசி விடு.”

டாக்டர் ராம்ஜி கிளம்பியதும் நான் உடனே ஆனந்தின் போன் நம்பரை அழைத்தேன். பதினைந்து முறை ஒலித்தது. பதில் இல்லை. கடைசியில் ஒரு வயதான பெண் குரல்.

“ஹலோ?”

“நான் நியூரோமேப் நிறுவனத்திருந்து அழைக்கிறேன். ஆனந்திடம் பேச வேண்டும்.”

நீண்ட மௌனம்.

“ஆனந்த்… அவன் இப்போது எங்களுடன் இல்லை. கடந்த மாதம் அவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.”

போன் என் கையிலிருந்து நழுவியது.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *