நீ சிரித்தால் நான் சிரிப்பேன்…!





சோமன் ரொம்பவே நல்லவன். வெள்ளந்தி என்பார்களே அப்படி! வேலைக்கு என்று வந்துவிட்டால் வாங்குகிற சம்பளத்திற்கு நாயாய் உழைப்பான்.
ஆனால் அப்படிப்பட்டவர்களைத்தான் துரதிஷ்டம் துரத்தும் அவன் மனைவியும் அவனும் ஒரு புறம்போக்கு நிலத்தில் கூரை வேய்ந்து குடியிருந்தார்க்ள். பகலில் வேலைக்கு இருவரும் போய்விட்டால் வீட்டிலிருக்கும் தகரக்குவளை அலுமினிய தட்டுமுட்டுச் சாமாங்களுக்கு அந்த ஆண்டவந்தான் பொறுப்பு.

அருகில் குடியிருந்தான் ஒரு நல்ல மனுஷன். அவனும் புறம்போக்குவாசிதான். ஒருநாள் எதோ சோமன் அவன் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாகப்புகார் கொடுக்க சோமனுக்கு சோதனை தொடங்கியது. வேய்ந்த கூரை நடுவில் ‘டொங்கு’விழுந்த கப்பலாய்த் தொங்கியது. புறம்போக்கை விட்டுவிட்டு புறப்பட நச்சரித்தான் அந்த நல்லவன். ‘திக்கற்றவர்க்குத் தெய்வம்தானே துணை?! சோமன் மனைவியோடு போய் ரோட்டு முட்டுச் சந்து பிள்ளையாரிடம் முறையிட்டான்.
அவரே பாவம் அன்னாடம் பாலுக்கோ படைப்புக்கோ வழியில்லாமல் முட்டுச் சந்து நிலத்தை வாங்கியவனுக்காகத் தன்னை முட்டுக் கொடுத்து நிற்க, சோமன் அழுத கண்ணீர் சொக்கேசன் மகனை சுட்டெரித்தது.
‘டேய் சோமா.. உன் கப்பல் எப்பட கவிழும்?!’ இருப்ப்வர்கள் இருந்த குடிசையை எள்ளி நகையாட சோமனுக்கு மனைவி ஆறுதல் சொன்னாள், ’கடவுள் நல்லவர்களுக்குச் சோதனையை கழுத்துவரை தந்து அழுத்துவார். ஆனால், கைதொழுபவனைக் காப்பாற்றியே தீருவார்’.
அவனும், அவன் மனைவியும் அழுதார்கள் விடிய விடிய..! விடியத்தான் அழுதார்கள். ஆனால் விடிய விடிய அழுதார்கள். உலகம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியாய் மனைவிமார்களைத் தான் தருகிறது.. நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே! நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே! என்று ஆற்றுப்படுத்தவும் அறுதல் தரவும் மனைவியைத் தந்திருக்கிறது என்பதை.. ‘உன் கப்பல் எப்போடா கவிழும்?!’ என்றவனுக்கு.. ‘இது நிச்சயம் தலைநிமரும் கவிழாது!’ என்று பதில் தந்தாள் சோமன் மனைவி இறுமாப்பாக. தெய்வ வாக்காக அவர்களுக்கு ஊர்பஞ்சாய்த்து வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட கடன் சேங்க்ஷனானது! ஆனால், அவர்கள் சட்டப்படிதானே எதையும் செய்வார்கள்?! அஸ்வாரம் வரை கட்டி முடித்தால் ஒரு பகுதி லோன், லிண்டன் வந்தால் ஒரு பகுதி காங்க்கிரீட் போட்டு நிறுத்தினால் மீதிப்பகுதி என உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவிக் கொண்டுதான் உதவுவார்கள்.
எவனோ ஒரு நல்லவன் சோமனின் நல்ல மனுஷுக்காக தன் வீட்டு கட்டிட எக்ஃஸ்டிரா மெட்டீரியல்ஸை எடுத்துப் போக விட்டதால் சோமன் சொந்த வீட்டில் குடியேறிய சுகவாசியானான்.
ஆனால் நன்றி மறக்காமல் முட்டுச் சந்து மூலை கணபதிக்கு ஒருநாள் சுண்டல் கொழுக்கட்டை வைத்து நிவேதினம் செய்ய பசியாறினார் அந்த முட்டுச் சந்து மூல கணபதி.
உலகம் ஒரு கண்ணாடி அது, நாம் சிரித்தால் சிரிக்கிறது அழுதால் அழுகிறது…! எதற்கு அதன்முன்னமர்ந்து அழவேண்டும்?!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |