நீலகண்டன் ஹோட்டல்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 8,677
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
1. வெள்ளைத் தாடியின் நடமாட்டம்!
ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தைந்தாம் ஆண்டிலே வெள்ளைக்காரக் கம்பெனியார் ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டு இருந்த சமயத்தில், மெக்காலே பிரபுவின் சிபார்சின் பேரில், தாம்பரத்திற்கு ஒரு மைல் தூரத்தில் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. அதற்கு முன்னாலெல்லாம், பைத்தியம் பிடித்த குற்றவாளிகளை என்ன செய்வதென்று புரியாமல் அதிகாரிகள் தவித்துக் கொண்டு இருந்தார்கள். தாம்பரத்தின் அருகே கட்டப்பட்ட பைத்தியக்கார (மன நோய்) ஆஸ்பத்திரி, அவர்களுடைய பிரச்சினையை ஒருவாறு தீர்த்து வைத்தது.
ஆனால் அந்தச் சமயத்தில் தாம்பரத்தில் வசித்த பல பிரமுகர்கள் அந்த இடத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்டப்படுவதை, பலமாக எதிர்த்தார்கள். ஏராளமான மனுக்கள் எழுதப்பட்டு, கவர்னர் துரைக்கும், கவர்னர் ஜெனரல் ஆக்லண்டு பிரபுவுக்கும் நாள் தவறாமல் அனுப்பப்பட்டன. ஆனால் அப்பொழுது ஆக்லண்டு பிரபு ஆப்கானிஸ்தானில் ஒரு இமாலயத் தவறைச் செய்துவிட்டு பதினாயிரம் ராணுவ வீரர்களைப் பலி கொடுத்து ஏமாந்ததால், தான், தாம்பரத்திற்குப் போவதா, அல்லது சீமைக்கே திரும்பிவிடுவதா, என்று நிச்சயிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும்; ஏனென்றால் அவர் அந்த மனுக்களைப் பற்றி கவலை செலுத்தவே இல்லை! அதற்குள் அவர் சீமைக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, எல்லன்பரோ பிரபு என்பவர் கவர்னர் ஜெனரலாக வந்து சேர்ந்தார். ஆக்லண்டு பிரபுவுக்கு எழுதப்பட்ட ஆட்சேப மனுக்கள் அவர் கூட கப்பல் ஏறிவிட்டன என்று தான் சொல்லவேண்டும்! ஏனென்றால் தாம்பரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி எத்தகைய தவக்கமும் இல்லாமல் ரொம்பப் பிரமாதமாகக் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது!
இதெல்லாம் பழைய கதை. அந்தக்காலத்தில் அட்சயலிங்கம் ஒரு வாலிபப் பையனாக இருந்தான். அந்த வயதில், தனது விசித்திரக் கனவுகளோடும், விபரீதத் திட்டங்களுடனும் நாட்டிலே நடமாடிக் கொண்டு இருந்தான். ஆனால் ஆட்சியாளர் அவனைச் சிறு வயதிலேயே சிறைப்பிடித்து விட்டனர். அவனுடைய, பயங்கரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அவனுக்கு அவகாசம் கொடுக்காமல், மூன்று டாக்டர்களைக் கொண்டு பரிசோதித்து, அவனுக்கு மூளைக்கோளாறு என்று தீர்மானித்து, தாம்பரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் “அபாயகரமானவன் என்ற முத்திரையுடன் அடைத்து விட்டார்கள்.
தாம்பரம் ஆஸ்பத்திரியில் அவன் எவ்வளவோ வருஷங்களைப் போக்கிவிட்டான் எத்தனையோ கவர்னர் துரைகள் வந்து போய்விட்டார்கள்; எவ்வளவோ நவாபுகளும், சுல்தான்களும், மகாராஜக்களும், முடியிழந்து பிடி சாம்பலானார்கள். விக்டோரியா மகாராணி கூட, தனது ஆட்சியின் தங்கவிழா கொண்டாட்டம் நடத்தினாள்! அதாவது, அவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்கப்பட்டு நாற்பத்தெட்டு வருஷங்கள் ஆகிவிட்டன! தாம்பரத்தின் களிமண் ரோடுகள் கப்பி ரஸ்தாக்கள் ஆகிவிட்டன! மாட்டு வண்டிகள் குறைந்து பீட்டன் வண்டிகள் தலை தூக்கின. அதிகாரிகள் பலர் மோட்டார் வாகனமும் வைத்திருந்தார்கள்! இந்தப் புதிய மாறுதல்களைப் பற்றி, தாம்பரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் விவாதங்கள் நடைபெற்றன. இளைஞர்களெல்லாம், இந்த மாறுதல்களை, “கால முன்னேற்றம்” என ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அட்சயலிங்கமும், அவனது “சர்வீஸ்” உள்ள சில வயதானவர்களும், இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனமான செய்கை என்றே முடிவு கட்டினார்கள்!
அட்சயலிங்கத்தின் மனதிலே, அவ்வப்போது சில பயங்கர ஆசைகள், கட்டுமீறிய வேகத்துடன் வந்து மோதுவது வழக்கம். அம்மாதிரி சமயங்களில், கட்டுக் காவல்களை எல்லாம் தகர்த்துக் கொண்டு, தான் அடைபட்டு இருக்கும் இடத்தையே நிர்மூலமாக்கிக் கொண்டு, வெளியே கிளம்ப வேண்டுமென்று துடித்தெழுவான். அப்பொழுது, ஏழெட்டு வார்டர்கள் ஒன்று சேர்ந்து, பலாத்காரத்தைப் பிரயோகித்து, அவனைப் படுத்த படுக்கை ஆக்கிவிடுவார்கள். சில தினங்கள் படுக்கையில் கிடந்த பிறகு, அட்சயலிங்கத்தின் மனக் கொந்தளிப்பு அடங்கிவிடும்.
ஆனால் ஒருநாள், இந்தக் கொந்தளிப்பு எல்லை மீறி போய்விட்டது. தாம்பரத்தின் மலைச்சாரலை ஒட்டி அடர்ந்திருந்த காட்டிலே, சுயேச்சையாக, எந்த விதக் கட்டு திட்டமும் இன்றி சுற்றி அலைய தீர்மானித்தான் அட்சயலிங்கம். அந்தக்காட்டுப் பிராந்தியத்திலே, சிறு சிறு குகைகள் இருந்தன. அந்தக் காலத்தில் அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்னால், அவன் சிறுவனாக இருந்த பொழுது, அந்த குகைகளில் போய் உட்கார்ந்து, பகற்கனவு காணுவது அவன் வழக்கம். குகைகளைத் தவிர, அங் கு “யானைக் குட்டை’ என்றொரு சிறு நீர்த்தேக்கம் ஒன்றிருந்தது. தாம்பரம் மலைச்சாரலில் யானைகள் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் அந்த “யானைக் குட்டையில்” யானைகள் வந்து நீர் பருகுவது வழக்கமென்று அந்த வட்டாரத்தில் ஒரு கதை உலாவுகிறது.
அட்சயலிங்கம் சிறு பையனாக இருந்த பொழுது, யானைக் குட்டையின் கரையில் தான், மணிக்கணக்கில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டு இருப்பான். அப்பொழுது ராட்சஸத்தனமான பல கற்பனைகள் அவன் மனதிலே உருப்பெறுவது வழக்கம்……
ஐம்பது வருஷங்களுக்கு பிறகு, அன்றைய தினம், தான் யானைக் குட்டைக்கு கட்டாயம் போய்த் தீரவேண்டும் என்ற வெறி அவனுக்கு ஏற்பட்டது. முன்னேற்பாடாக, அன்று பகல் பொழுதிலேயே ஓர் முரட்டு சம்மட்டியை தயாராக எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான்……
அன்று இரவு, எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபொழுது அட்சயலிங்கம், சம்மட்டியுடன் மெதுவாக தான் இருந்த இடத்தை விட்டு புறப்பட்டான். காவலுக்காக நியமிக்கப்பட்டு இருந்த வார்டர் ஒருவன், வழியிலே ஒரு நாற்காலியில் சாய்ந்தபடி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தான்.
அட்சயலிங்கம் தன் கையிலிருந்த சம்மட்டியால், பல தடவைகள் அந்த வார்டரின் தலையிலே முழுபலத்துடன் தாக்கினான். ஆரம்பத்திலிருந்து, கடைசிவரை அந்த வார்டர் ஒரு சிறு முனகல் சத்தம் கூட எழுப்பவில்லை. ஒருக்கால் முதல் அடியிலேயே, அவன் பரலோக பிராப்தி அடைந்து இருக்கக்கூடும்!
அந்த வார்டரிடம் இருந்த சாவிக் கொத்தை எடுத்து, கதவுகளைத் திறந்து கொண்டு, அட்சயலிங்கம் தப்பித்து வெளியேறினான். அப்பொழுது, விடியற்காலை மூன்று மணி இருக்கலாம். காட்டு மிராண்டித்தனமாக வளர்ந்திருந்த அவனது நீண்ட தாடிகளில் ரத்தம் தோய்ந்து பயங்கரமாகக் காட்சியளித்தது. வேகமாக யானைக் குட்டையை நோக்கி நடந்தான் அட்சயலிங்கம். அந்தக் கரையில் உட்கார்ந்து, சலனமற்ற அந்த நீர் நிலையை வெறிக்கப் பார்த்தான்.
நீர் நிலைக்குள், அவனது காலஞ்சென்ற தாயார் நின்று கொண்டு, அவனை வாஞ்சையாக அழைப்பது போலிருந்தது……
தாம்பரத்திலே, அந்தச் சமயத்தில் நீலகண்டன் என்ற விசித்திரமான ஒரு தொழிலதிபர், “வானப்பிரகாசம்” என்ற பெயரில் ஒரு பெரிய ஹோட்டலை நடத்தி வந்தார். அட்சயலிங்கம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிவிட்டான் என்ற செய்தி, தாம்பரம் வாசிகளை எல்லாம் கதிகலங்க அடித்த போதிலும் நீலகண்டன் அதைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. தாம்பரம் காட்டுக்குள் போலீஸாருடன் சேர்ந்து கொண்டு, அந்த ஊர்வாசிகள் எல்லாம் அட்சயலிங்கத்தைப் பிடிக்க தேடியலைந்த போதும், நீலகண்டன் அந்த முயற்சியில் ஈடுபடாமல் அலட்சியமாக விலகி ஒதுங்கி விட்டார்.
நீலகண்டன் பார்வைக்கு முரட்டு ஆகிருதி யுள்ளவர். அவர் முகத்தில் எப்பொழுதும் ஒரு “கடுமை” உணர்ச்சி தாண்டவமாடிக் கொண்டு இருக்கும். ஆட்களை அடக்கி வேலை வாங்குவதில், அவருக்கு இணையானவர் யாருமில்லை. பொது விஷயங்களில் அவருக்கு கொஞ்சம் கூட அக்கரை இருந்ததாகத் தெரியவில்லை. தாம்பரத்திற்கு, அவர் மிகச் சமீபத்தில் தான் வந்து சேர்ந்தார். அவருடைய “வானப் பிரகாசம்” ஹோட்டல், அவருக்கு ஏராளமான நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். குதிரைப் பந்தயம் முதலிய சூதாட்டங்களில், அவருக்கு அலாதிப்பற்று உண்டு. தொடர்ச்சியாகவும், சாஸ்திரீய முறைப்படியும் அவர் அந்த சூதாட்டங்களை ஆடி வந்தார். ஆனால், சூதாட்டத்தில் புத்தியைச் செலுத்தியதால், தனது ஹோட்டல் தொழிலை அவர் புறக்கணித்து விடவில்லை.
“வானப் பிரகாசம்” ஹோட்டலுக்கு சென்னையில் இருந்து பல வாடிக்கைக்காரர்கள் வருவது வழக்கம். தங்கள் விடுமுறை நாட்களைக் கழிக்கவும், நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்ளவும் “வானப் பிரகாசம்” ஹோட்டல் அவர்களுக்குச் சிறந்த இடமாகத் தோன்றியது. மிகப் பழங்கால கட்டிடமான அந்த ஹோட்டல் கட்டிடத்தை, நீலகண்டன் பலவாறாகப் புதுப்பித்து பகட்டாக அழகுபடுத்தி வைத்திருந்தார். அந்தக் கட்டிடத்தைச் சுற்றி மிக அழகிய தோட்டம் ஒன்றையும் நிர்மாணித்து இருந்தார்.
தப்பித்து ஓடிய பைத்தியக்காரனைத் தேடிக் கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைக்க தனக்கு அவகாசமில்லை என்றும் தன்னை அம்மாதிரி வேலைகளுக்கு இழுக்க வேண்டாமென்றும், நீலகண்டன் முரட்டுத்தனமாகக் கூறிவிட்டதால், அங்குள்ள அதிகாரிகளுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.
இந்த நிலைமையில், பல பத்திரிகை நிரூபர்கள் தாம்பரத்தில் வந்து சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு, ”வானப்பிரகாசம்” ஹோட்டல் ரொம்ப வசதியாக இருந்த போதிலும் அவர்கள் எதிர்பார்த்து வந்த பல விஷயங்கள், அவர்களுக்கு கிடைக்கவில்லை. தாம்பரம் காட்டைப் பற்றியும், அங்குள்ள குகைகளைப் பற்றியும், யானைக் குட்டையைப் பற்றியும், பக்கம் பக்கமாக வரிந்து தள்ளினார்களே தவிர, பைத்தியக்காரனான அட்சயலிங்கத்தைப் பற்றி அவர்களால், எந்தவித உருப்படியான தகவலும் கொடுக்க முடியவில்லை. அருகிலுள்ள சில கிராமவாசிகள், நள்ளிரவிலே ஒரு தாடிக்காரன் தனக்குத்தானே பேசிக்கொண்டு பயங்கரமான வேகத்திலே நடந்து செல்வதைப் பார்த்ததாக அடிக்கடி கூறி வந்தார்கள். அந்தச் செய்தியைத் தவிர, அட்சயலிங்கத்தைப் பற்றி உருப்படியான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த அமளியால், தாம்பரத்திலுள்ள இரும்புக் கடைகளில் வியாபாரம் ரொம்ப சுறுசுறுப்பாக நடந்தது. தாம்பரம் வாசிகள் எல்லோரும், புதுப்பூட்டுகளும், புது தாழ்ப்பாள்களும் வாங்கினார்கள்! அவற்றை எல்லாம் மிக அக்கறையோடு, ஒரு கதவு பாக்கிவிடாமல் பொருத்தினார்கள். இரவு நேரங்களில், வீதியில் ஆண்களையோ, பெண்களையோ பார்க்க முடியாது. அம்பிகாபதிகளும், மஜ்னுகளும் கூட தங்கள் காதல் லட்சியத்தை மறந்து, நடு நடுங்கிப்போய் வீட்டில் அடைபட்டுக் கிடந்தார்கள்.
இந்த நிலையில், தாம்பரம் கொஞ்ச காலம் அமளி குமளிபட்டது. பிறகு, ஒருவாரம் கழித்து அந்தக் கலவரம் அடங்கியது. மீண்டும், தாம்பரம் வாசிகள், சிறிது தைரியத்துடன் வெளியே நடமாட ஆரம்பித்தனர். பைத்தியக்காரக் கிழவனான அட்சயலிங்கம் ஒன்று இறந்திருக்க வேண்டும், அல்லது எங்காவது ஓடிப்போய் இருக்க வேண்டுமென்று நினைத்தார்கள். ஒரு நாள் இரவு, அதாவது அட்சயலிங்கம் அந்த எல்லையை விட்டு மறைந்து விட்டதாகக் கருதப்பட்ட அன்றிரவு, நள்ளிரவில், ஏதோ ஒரு மோட்டார் கார் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டதைப் பார்த்ததாகச் சிலர் கூறினார்கள்……
மீண்டும் “வானப்பிரகாசம்” ஹோட்டலுக்கு, ஓய்வு எடுப்பதற்காக ஏராளமான பேர் வர ஆரம்பித்தார்கள். ஹோட்டல் முதலாளி நீலகண்டனிற்குப் பல பணக்கார நண்பர்களும் ஏற்பட்டார்கள். சென்னையில் இருந்து, தனிமையைத் தேடி தாம்பரத்திற்கு சென்றிருந்த அம்பிகாபதிகளும் அமராவதிகளும், தாம்பரம் காட்டுக்குள், வெகு தூரம் வரை தைரியமாக நுழைந்து, இயற்கை இன்பத்தைப் பருகினார்கள். ஆராய்ச்சி வெறி கொண்ட சில இளைஞர்கள், குகைகளை ஆராயும் வேலையிலும் ஈடுபட்டார்கள். அந்தச் சமயத்தில் மீண்டும் அட்சயலிங்கத்தின் நடமாட்டம் ஏற்பட ஆரம்பித்தது!
ஒரு நாள் இரவு, தாம்பரத்தில் இருந்த சூரக்கோட்டை மிட்டாதார் வீட்டிலே பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி சாமான்கள் களவு போயின. அந்தத் திருட்டு, இரவு இரண்டு மணிக்கு மேல் நான்கு மணிக்குள் நடந்திருக்கிறது!…..அன்றிரவு, பகலைப் போல் நிலவு காய்ந்து கொண்டு இருந்தது. தாம்பரத்தில் உள்ள ஒரு தொழிலாளியின் மனைவி பிரசவ வேதனையால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். மருத்துவச்சியை அழைப்பதற்கு ஒரு ஆளை அனுப்பிவிட்டு, அந்த தொழிலாளி நிம்மதியில்லாமல் வீட்டுக்கு வெளியே உலாவிக் கொண்டு இருந்தான். அப்பொழுது, ஒரு உருவம் வேலி ஓரமாகக் காட்சி அளித்தது. வேலிப் பக்கத்தில் இருந்து, அந்த உருவம் ரஸ்தாவைக் கடந்து, வேகமாக ஒரு தோப்புக்குள் நுழைந்தது.
இரவு நேரத்தில் மீன் பிடிக்கச் செல்லும் நபர் யாரோ செல்கிறார் என நினைத்த அந்த தொழிலாளி, “யார் அது?” என்று கேட்டார்.
உடனே அந்த உருவம் திரும்பியது. அதைத் தெளிவாகப் பார்த்தான் அந்த தொழிலாளி. வெள்ளைத் தலை முடியுடனும், வெண்ணிற தாடியுடனும், கூனல் முதுகுடனும், காட்சியளித்தது அந்த உருவம்! அதன் கண்கள் பயங்கரமாக ஒளிவீசின…
அந்த உருவத்தைப் பார்த்ததும், அந்த தொழிலாளி மயக்கம் போட்டு விழுந்து விட்டான்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தாம்பரத்தில் வீட்டுக் கதவுகள் மீண்டும் தாளிடப்பட்டன; சன்னல் கதவுகள் இறுக்கி மூடப்பட்டன! சென்னைப் போலீஸ் தலைமைக் காரியாலயத்தில் இருந்து துப்பறிவாளர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். செங்கல்பட்டு ஜில்லா போலீஸ் அதிகாரிகள் எல்லாம் தாம்பரத்தில் வந்து குழுமினார்கள். மிட்டாதார் வீட்டில் கொள்ளை அடித்தது அட்சயலிங்கம் தான் என்று தீர்மானித்தார்கள் அதிகாரிகள். அவனை எப்படியும் கண்டுபிடித்து விடுவது என்ற முடிவுடன், மகாநாடு கூடி யோசித்தார்கள். அவர்கள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே, மற்றொரு கொள்ளையும் தாம்பரத்தில் நடந்தது. சென்னையில் இருந்து, செங்கல்பட்டுக்கு சென்று கொண்டு இருந்த ஒரு கோச் வண்டியை வழிமறித்து, அந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. அந்தக் கோச் வண்டியை ஓட்டிச் சென்றவன், அந்த வெள்ளைத்தாடி கிழவனைத் தன் கண்ணால் பார்த்ததாகக் கூறினான்.
சென்னையில் இருந்த போலீஸ் தலைமைக் காரியாலயத்தைச் சார்ந்த இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, தாம்பரத்திற்குப் புறப்பட்டு வந்து, அட்சயலிங்கத்தின் கடந்தகால ரிகார்டுகளை சோதித்துப் பார்த்தார். அவனைப் பற்றி, பயங்கரமான குறிப்புகள் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை.
“அட்சயலிங்கம் சிறுவனாக இருந்த பொழுது, பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்க வேண்டும். அல்லது, ஆஸ்பத்திரியில் அவன் இருந்த பொழுது அந்தத் தொழிலை அவன் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும்!” என்றார் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி.
மூன்றாவது கொள்ளை, ராஜாபகதூர் தில்லையம் பலத்தின் வீட்டில் நடந்தது! இரவு தூங்கிக் கொண்டு இருந்த ராஜாபகதூர் தில்லையம்பலம், ஏதோ சத்தம் கேட்டு எழுந்து, தம் இளம் மனைவி படுத்திருந்த அறைக்குள் சென்றார்.
“ஏதோ ஜன்னல் உடைப்பதை போன்ற சத்தம் கேட்டது” என்று மெதுவான குரலில் கூறிய ராஜாபகதூர், “நான் கீழ்த் தளத்தில் போய் பார்க்கப் போகிறேன்” என்றார்.
“வேலைக்காரர்களைக் கூப்பிடக் கூடாதா?” என்று கலவரத்துடன் கேட்டாள் அவரது மனைவி, ராணி பவானி.
ராஜாபகதூர், எந்தவிதப் பதிலும் சொல்லாமல், படிக்கட்டை நோக்கி பூனை போல் நடந்து சென்றார். ராணி பவானியும், கலவரத்தோடு அவரைப் பின் தொடர்ந்தாள். அவளைத் திரும்பி செல்லுமாறு மிக ரகசியமான குரலில் கூறினார் ராஜாபகதூர். ஆனால், தன் கணவனை தனியே விட்டுச் செல்ல, ராணி பவானி விரும்பவில்லை.
கீழ் தளத்தை அடைந்த ராஜாபகதூர், தன் ஆபீஸ் அறையை நோக்கி நடந்தார். அந்த அறையில், மேல் நாட்டு நாகரிகப்படி, கம்பியில்லா ஜன்னல்கள் வைக்கப்பட்டு இருந்தன. அறைக் கதவை ராஜாபகதூர் திறந்தாரோ இல்லையோ, ஒரு கருத்த உருவம் இருட்டுக்குள் இருந்து குபீரென ஜன்னல் பக்கம் தாவியது. அந்த உருவத்தின் நீண்ட தாடி, அந்த இருட்டில் கூட வெண்மையாகக் காட்சி அளித்தது. ராஜாபகதூர், சட்டென்று கைத்துப்பாக்கியை உயர்த்தி சுட்டார். பயங்கரமான வெடிச்சத்தமும் ஜன்னலின் மேற்புறத்தில் இருந்த கண்ணாடி ‘காற்றுப் போக்கி’ கலகலவென நொறுங்கி விழும் சத்தமும் கேட்டன.
“ஏன் என் கையை தட்டிவிட்டாய்?” என்று ஆத்திரமாகக் கேட்டார் ராஜாபகதூர். அவர் துப்பாக்கியால் சுடும் பொழுது, ராணி பவானி, அவருடைய கையை மேலே தட்டி விட்டதால் தான், குறி தவறிப்போய் விட்டது.
ராணிபவானி சாந்தமாக, “பாவம், அந்தக் கிழவனை எதற்காக சுட்டீர்கள்?” என்று கேட்டாள்.
ராஜாபகதூருக்கு அளவுகடந்த ஆத்திரம் ஏற்பட்டது.
“திருடனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்றால் தான், நீங்கள் அவனைச் சுடலாம்! கண்ணால் பார்த்த உடனேயே, திருடனைச் சுட்டுத் தள்ளும்படி எந்த சட்டமும் கூறவில்லை!” என்று தொடர்ந்து கூறினாள் ராணிபவானி.
“அவனிடம், அபாயகரமான ஆயுதம் இருந்திருக்கக் கூடும்” என்று குமுறினார் ராஜாபகதூர்.
பவானி சிரித்தபடி அறைக்குள் நுழைந்து, திறந்திருந்த ஜன்னல் வழியாக தோட்டத்திற்குள் பார்த்தாள். தாடிக்காரக் கிழவன் போன இடம் தெரியவில்லை. துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்ட வேலைக்காரர்கள் எல்லாம் பதறிக் கொண்டு எழுந்து ஓடி வந்தார்கள். அறையில் இருந்த சாமான்களில், ஏதாவது திருட்டுப் போய் இருக்கிறதா என்று அவசர அவசரமாக சோதனை செய்து பார்த்தார்கள்.
ராஜாபகதூர் தில்லையம்பலத்தின் பாட்டனார் ஆயிரத்து எழுநூற்று தொண்ணுற்று ஒன்பதாம் வருஷம், நான்காவது மைசூர் யுத்தம் நடந்த சமயத்தில், திப்புசுல்தானுக்கு துரோகம் செய்துவிட்டு, ஆங்கிலேயருக்கு நாட்டை அடிமைப்படுத்த உதவி செய்ததால், அந்த சமயத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு அவருக்கு ஒரு பெரிய தங்கக் கோப்பையை பரிசாகக் கொடுத்திருந்தார். அந்தக் கோப்பை திருட்டுப் போயிருந்தது!
அந்தக் கவலையால் ஒரு வாரம் வரையில், ராஜாபகதூர் தில்லையம்பலம் சாப்பாட்டையே மறந்திருந்தார்.
மீண்டும், வெள்ளைத் தாடிக்காரனான அட்சயலிங்கத்தைப் பற்றிய செய்திகள் பிரமாத முக்கியத்துவம் பெற்றன. இலங்கை மலேயா முதலிய இடங்களுக்கும் இந்த தகவல் பரவியது. இலங்கையில், ஒரு காலத்தில் போலீஸ் இலாக்காவில் வேலை பார்த்து வந்த தம்பித்துரை, இந்த தகவலைக் கேள்விப்பட்டார். அட்சயலிங்கம் நடத்திய கொள்ளைகளைப் பற்றி பூரா விவரங்களையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தார். அவருக்கு என்ன சுவாரசியம் தட்டியதோ தெரியவில்லை; உடனே இலங்கையை விட்டு நேராக சென்னைக்குப் புறப்பட்டு வந்தார்.
துப்பறியும் தம்பித்துரை இலங்கையை விட்டு புறப்பட்ட அந்த தினம், “வானப்பிரகாசம்” ஹோட்டல் முதலாளியான நீலகண்டனுக்கு,
ஒரு லாட்டரி சீட்டில் நாலு லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது. இடைக்காலத்தில் சிறிது சங்கடப்பட்டுக் கொண்டு இருந்த நீலகண்டனுக்கு, பண நெருக்கடி அடியோடு தீர்ந்தது.
தம்பித்துரை நேராகச் சென்னை போலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு சென்றார். இலங்கை அதிகாரிகளிடம் இருந்து தான் வாங்கி வந்திருந்த அறிமுகக் கடிதத்தை பிரதம அதிகாரியிடம் கொடுத்து விட்டு, தாம் வந்த வேலையை விளக்கிக் கூறினார்.
“எங்களால் முடிந்த எல்லா உதவியையும் உங்களுக்கு செய்கிறோம்” என்று கூறிய சென்னைப் பிரதம போலீஸ் அதிகாரி, ஆனால் ஒரு விஷயம்; தாம்பரம் விவகாரத்தில் சென்னை போலீஸுக்கு நேரடியான அதிகாரம் கிடையாது. அது செங்கல்பட்டு போலீஸாரின் எல்லையைச் சேர்ந்தது. செங்கல்பட்டு போலீஸார், இந்தக் கொள்ளைகளுக்கு காரணம் அட்சயலிங்கம் தான் என்றும், அவன் இந்தக் கொள்ளைத் தொழிலை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கற்றுக் கொண்டு இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். அவனுடைய பழைய ரிகார்டுகளை சோதனை செய்து பார்த்ததில், அவன் கொள்ளைக்காரனாகத் தோன்றவில்லை. ஆனால் ‘பதுக்கி வைப்பதில்’ அவன் பெரிய நிபுணன் என்று தோன்றுகிறது. அவனுடைய பைத்திய சேஷ்டைகளில் ‘பதுக்கி வைப்பதும்’ ஒன்றென்று தெரிகிறது. திருட்டு சாமான்களை வாங்கக் கூடிய ஆட்கள் யார் யாரென்று எங்களுக்கு தெரியும். அந்த இடங்களில் எல்லாம், நாங்கள் சோதனையிட்டு பார்த்த போதிலும், களவாடப்பட்ட சாமான்கள் ஒன்றை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்ளையடிக்க வேண்டுமென்ற வெறியில் தான் அட்சயலிங்கம் கொள்ளை அடிக்கிறானே தவிர, அப்படி கொள்ளை அடித்த சாமான்களை, எங்கோ ஓரிடத்தில் ஜாக்கிரதையாக பதுக்கி வைத்திருக்கிறான்!” என்றார்.
“ஒருக்கால், குகைகளில் அவற்றைப் பதுக்கி வைக்கிறானா?” என்று கேட்டார் தம்பித்துரை.
“அந்த குகைகளை எல்லாம், இன்னும் சரியாக சோதனைப் போடவில்லை” என்று கூறிய பிரதம அதிகாரி, “அந்த குகைகளின் அமைப்பு ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. தரைமட்டத்திற்கு மேல் ஒரு குகையும், அதற்கடியில் மற்றொரு குகையும், அதற்கடியில் மற்றொரு குகையுமாக, பாதாளத்தை நோக்கி நாலைந்து அடுக்குகள் இருக்கின்றன. அட்சயலிங்கம் இறந்துவிட்டால், அவை (திருட்டுப் பொருள்கள்) எந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது என்று கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்! ஆனால் ஒன்று; அட்சயலிங்கம், எதையாவது வெறித்தனமாக செய்துவிட்டு, நம்முடைய கையில் வந்து சிக்கிக் கொள்வான் என்பது நிச்சயம்!–ம்…….நீங்கள், கொள்ளைக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ரொம்பவும் நிபுணர் என்று கேள்விப்பட்டேன்”–என்று நிறுத்தினார்.
“ஆம்; நான் அதைப்பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதி இருக்கிறேன்!” என்று புன்னகையுடன் கூறினார் துப்பறியும் தம்பித்துரை.
அன்று மாலை, அவர் தாம்பரத்தை நோக்கிச் சென்ற பொழுது, அவர் மனதில் ஒரே ஒரு பிரச்சனை தான் தலை தூக்கி நின்றது.
மாரப்பன் தான் தாம்பரத்தில் இருக்கக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவனோடு அவன் கூட்டாளியும் இருப்பானா என்பது அவருக்கு சந்தேகமாகவே இருந்தது!
2. ராஜாபகதூரும் ராணி பவானியும்!
ராஜாபகதூர் தில்லையம்பலத்தின் முதல் கல்யாணம், ஒரு சோக நாடகமாகவே முடிந்துவிட்டது.
அந்தக் காலத்தில் அதாவது, 1867-ஆம் வருஷம் வரை, பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் இம்மூன்றும், இந்திய சர்க்காரின் ஆளுகைக்குள் தான் இருந்தன. ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தேழாம் வருஷம் தான் அவை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடியான ஆட்சிக்கு (கிரௌன் காலனியாக) மாற்றப்பட்டது. அதுவரை, அந்த இடங்களுக்கு, இந்திய சர்க்கார் யாராவது பிரபலஸ்தரை தூதுவராக நியமித்து அனுப்புவது வழக்கம். அதுபோல, ராஜாபகதூர் தில்லையம்பலம் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்றாம் வருஷம், இந்திய சர்க்காரின் பிரதிநிதியாக சிங்கப்பூருக்கு, அப்போதைய கவர்னர் ஜெனரலான டப்ரின் பிரபுவால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தான், அந்த துரதிருஷ்டமான சம்பவம் நடைபெற்றது.
சிங்கப்பூரில் ராஜாபகதூர் பதவியேற்ற கொஞ்ச காலத்தில், அவரது பங்களா தோட்டத்தில், அவருடைய காரியதரிசிகளில் ஒருவர், தோள்பட்டையில் துப்பாக்கி காயத்துடன் ஒரு நாளிரவு மயங்கிக் கிடந்தார்! அதே இரவு, ராஜாபகதூரின் முதல் மனைவி அளவு கடந்த கலவரத்தோடு கதறிக் கொண்டு, அவரது அந்தரங்கக்-காரியதரிசி வீட்டில் அடைக்கலம் புகுந்தாள்!
அதைத் தொடர்ந்து, தம் தூதுவர் வேலையை ராஜாபகதூர் ராஜினாமா செய்து விட்டு, சிங்கப்பூர் நீதிமன்றம் ஒன்றிலே தம் மனைவியின் மீது விவாகரத்து வழக்கையும் தொடர்ந்தார். அந்த வழக்கில் துப்பாக்கி காயம்பட்ட அவரது காரியதரிசியும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.
எவ்விதமாகவோ, விவாகரத்தும் அளிக்கப்பட்டது. உடனே சென்னைக்குப் புறப்பட்டு வந்த ராஜாபகதூர் தில்லையம்பலம், கொஞ்ச காலத்தில், பவானியை இரண்டாந்தாரமாக மணந்து முதல் மனைவியை அடியோடு தன் நினைவை விட்டே போக்கிவிட்டார்.
ராஜாபகதூர், பார்வைக்கு வாட்ட சாட்டமாக இருப்பார். ஆனால் மிதமிஞ்சிய களியாட்டங்களால், வாழ்வின் தேய்பிறைக் கட்டத்திலே இருந்து வந்தார். பார்வைக்கு அழகாகவும், பேச்சிலே நிபுணராகவும் அவர் இருந்ததால், பவானிக்கு அவரை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில், தன் கணவனிடம் கண்மூடித்தனமான காதல் கொண்டு இருந்தாள். ஆனால் நாள் செல்லச் செல்ல, ராஜாபகதூரின் உண்மை உருவம் அவளுக்குத் தென்பட ஆரம்பித்தது. வாழ்க்கையில் சலிப்பு தட்டியவராகவும், சந்தேகப் பிராணியாகவும், அவர் இருந்து வருவதைக் கண்ட பவானியின் மனம் வேதனையில் ஆழ்ந்தது.
முதல் மனைவி செய்த துரோகத்தால், அவருக்குப் பெண் குலத்தின் மீதே அவநம்பிக்கை ஏற்பட்டு இருந்தது. இரண்டாவது மனைவியும் துரோகம் செய்ய தயங்கமாட்டாள் என்று அவர் எதிர்பார்த்தார். அதனால், அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் ஜாக்கிரதையாக கண்காணித்தார். தான் வீட்டில் இல்லாத சமயத்தில், அவள் என்ன செய்து கொண்டு இருந்தாளென்று மிக நுணுக்கமாக விசாரித்தார். எங்கோ வெளியூருக்கு புறப்பட்டுச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டை விட்டு புறப்பட்டு சென்று விட்டு, பிறகு திடீரென திரும்பி வந்து, இரவு நேரத்தில் அவளைக் கண்காணிப்பார்.
அவருடைய இந்த செய்கைகளைக் கண்ட பவானி ரொம்பவும் திடுக்கிட்டுப் போய்விட்டாள்; அவமானத்தால், அவள் உடல் குன்றியது; ஒரு தடவை, அவரிடம் ஆத்திரமாகவே அதைப் பற்றி பேசினாள்.
தன்னுடைய தவறை உணர்ந்து அவர் வருந்தினால் நிலைமை சீர்திருத்தம் அடையுமென்று எதிர்பார்க்கலாம். ஆனால், தான் செய்ததெல்லாம் நியாயமென்று நிலை நாட்டும் “பலவீனம்” அவருக்கு இருந்தது.
“என் மீது ஆத்திரப்படாதே, பவானி! எனக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை நினைத்தாவது, என்னிடம் நீ அனுதாபம் காட்ட வேண்டும். அவளை, நான் மனப்பூர்வமாக நம்பியிருந்தேன்–”
“உங்களுடைய முதல் கல்யாணத்தைப் பற்றி என்னிடம் பேசவேண்டாம்! எனக்கு, அதில் எந்தவித சிரத்தையும் கிடையாது!” என்று கடுகடுப்புடன் கூறிய ராணி பவானி, உங்களுடைய முதல் மனைவியை நான் சந்திக்க நேர்ந்தால், என்னை நடத்துவது போலவே, அவளையும் மிகக் கேவலமாக நீங்கள் நடத்தி வந்தீர்கள் என்று சொல்லுவாள் என்பது நிச்சயம்!” என்றாள்.
இதைக் கேட்டதும் ராஜாபகதூர் மனவேதனை அடைந்தார். அவர் வேதனை அடைந்தால், அன்னம் தண்ணீர் சாப்பிடமாட்டார்.
ராணி பவானியின் சகோதரனான செல்வராஜ் அங்கு புறப்பட்டு வந்து அவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த சண்டையை சமாதானப்படுத்தி வைத்தான்.
“செல்வராஜ்! உன் சகோதரி, ரொம்ப அநியாயமாக நடந்து கொள்ளுகிறாள்” என்று சலித்துக் காண்ட ராஜாபகதூர் தில்லையம்பலம், “சிங்கப்பூரில் எனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம் உனக்கு தெரியும். அந்தத் தழும்பு, இன்னும் என் இதயத்தை விட்டு மாறவில்லை. அது மாறுவதற்கு, இன்னும் பல வருஷங்கள் ஆகலாம். நான் ஒரு சந்தேகப்பிராணி என்று ஒப்புக்கொள்ளுகிறேன். அந்த நெஞ்சு பிளக்கும் சம்பவத்திற்குப் பிறகு நான் அம்மாதிரி இருப்பதில் என்ன தவறு? பவானி ரொம்ப மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறாள்; சகிப்புத் தன்மையே அவளுக்குக் கிடையாது; நான் சொல்லுவதில் உள்ள நியாயமே அவளுக்குத் தென்படுவதில்லை. அன்றைய தினம், அந்த தாடிக்கார கிழவன் திருட நுழைந்த பொழுது நான் துப்பாக்கியால் சுட்டேன் அதற்காக, அவள் ஆத்திரப்பட்டாள்.” என்றார்.
செல்வராஜ் புன்னகை பூத்தபடி, “அவள் உங்கள் மீது ஆத்திரப்பட்டது நியாயம் தான். நீங்கள் அந்த கிழவனை சுட்டுக் கொன்றிருந்தால் உங்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டு இருக்கும்! சில நூறு ரூபாய் பெறுமானமுள்ள சாமானை ஒருவன் திருடியதற்காக, அவனைக் கொலை செய்து விட முடியாது! அந்தக் காலமாக இருந்தால் நம் இஷ்டப்படி யாரையும் ஏதாவது செய்யலாம்! ஆனால், இப்பொழுது அதெல்லாம் செல்லாது!” என்றான்.
“மற்றவர்கள் சொல்லும் பொழுது ஒப்புக் கொள்ளாத பல விஷயங்களை தன் மைத்துனன் கூறும் பொழுது ராஜாபகதூர் ஒப்புக் கொள்வது வழக்கம். ஆகவே, செல்வராஜ் கூறியபடி அந்தத் தகராறில் சமாதானம் ஆகிவிட்ட ராஜாபகதூர் அந்த சமாதானத்தின் அறிகுறியாக தன் மனைவிக்கு ஸ்விட்சர்லாந்து தேசத்திலிருந்து ஒரு கைக் கடிகாரமும் தருவித்துக் கொடுத்தார். அவரது கழிவிரக்கத்தைப் பார்த்து பவானி மனம் உருகிவிட்டாள்.
சில மாதங்கள் கழிந்த பிறகு, ராஜாபகதூர் தில்லையம்பலம் அவசர வேலையாக இலங்கைக்குச் செல்லவேண்டி நேர்ந்தது. இந்த சமயத்தில், தன் மனைவியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இரண்டு மூன்று துப்பறிவாளர்களை ரகசியமாக நியமித்து விட்டுப் போயிருந்தார். இந்த விஷயம் பவானிக்கு தனது வேலைக்காரியின் மூலம் எட்டியது. பவானி அதை அறிந்ததும், சமாதானத் தூதனான செல்வராஜ் அவளிடம் படாதபாடுபட்டான்.
ஆகவே, இலங்கையில் இருந்து ராஜாபகதூர் திரும்பியதும், மீண்டும் அவர்களிடையே சமாதானம் செய்து வைக்க செல்வராஜ் ஒரு வடநாட்டு பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்தான். எல்லோரும், முதலில் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு போன சில தினங்களில், கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு மாறிவிட்டது. பம்பாயில், ஒரு பிரபல ஹோட்டலில், பொன்னம்பலம் என்ற ஒரு பணக்கார இளைஞனைச் சந்தித்தார் ராஜாபகதூர். அவன், இலங்கைத் தீவில் யாழ்ப்பாணத்தில் வசிப்பவன் என்றும், கொழுத்த பணக்காரன் என்றும் அவருக்குத் தெரியவந்தது. அவன் பழகிய முறை ரொம்ப சுமுகமாக இருந்தது. பார்வைக்கு ரொம்ப அமர்க்களமாகக் காணப்பட்ட போதிலும், மிக மரியாதையுடன் நடந்து கொண்டான். அவனுக்குப் பவானியின் விஷயத்தில் எந்தவித அக்கரையும் இருந்ததாகத் தெரியவில்லை. தனக்கு ஒரு காதலி கொழும்பு நகரத்தில் இருப்பதாகவும், அவள் கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கு வரப்போவதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், ராஜாபகதூரிடமே அந்தப் பொன்னம்பலம் நேரில் கூறினான்.
அவனிடமிருந்த பல நல்ல குணங்களுக்கும் சிகரம் வைத்தது போல, ஒரு அற்புதமான குணவிசேடம் அவனிடம் அமைந்திருந்தது. ராஜாபகதூர் எவ்வளவு நேரம் பேசினாலும், இடையில் குறுக்கிடாமலும், பொருத்தமான நேரத்தில் தன்னுடைய வியப்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தும், அவரிடம் நல்ல பிள்ளையென்று பெயரெடுக்கும் அளவிற்கு சகிப்புத்தன்மை அவனிடம் இருந்தது!
சிங்கப்பூரில் இந்தியரின் தொழிலைப் பெருக்க ராஜாபகதூர் தயாரித்திருந்த 480 பக்க ரிப்போர்ட் ஒன்றை வரிவிடாமல் அவன் படித்தான்; அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் படித்தது எல்லாவற்றையும் புரிந்து கொண்டான்! சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு, தான் தயார் செய்திருந்த, ஒரு திட்டத்தைப் பற்றி மூன்று மணி நேரம் ராஜாபகதூர் விடாமல் பேசியதையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டு இருந்தான். கடைசியாக தனது விவாகரத்து நிகழ்ச்சியை ராஜாபகதூர் கூறியபோது, மிக ஈனசுரத்தில், தனது வேதனையை வெளிப்படுத்தி அனுதாப மொழிகள் கூறினான்.
அவனைப் பார்க்கப் பார்க்க செல்வராஜுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் விஷயத்தில், பவானிக்கும் அக்கறை தட்டியது.
ஒருநாள் இரவு பம்பாயில் ஒரு தியேட்டரில் எல்லோரும் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அன்றைய தினம் செல்வராஜ், நாடகத்திற்கு செல்லாமல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டான். ராஜாபகதூர் தில்லையம்பலத்தை தியேட்டரில் அவருடைய பழைய நண்பரொருவர் சந்தித்தார். அவர் ஒரு சுதேச சமஸ்தானத்தில் திவானாக இருந்தார்.
தன்னுடைய ஜாகைக்கு கொஞ்ச நேரம் வந்து விட்டுப் போகும்படி ராஜாபகதூரை அந்த திவான் வற்புறுத்தி அழைத்தார். அந்த அழைப்பைத் தட்டமுடியாமல், ராஜாபகதூர் தனது மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துப் போகும்படி பொன்னம்பலத்திடம் கூறி விட்டு, அந்தத் திவானுடன் புறப்பட்டுச் சென்றார். பொன்னம்பலமும் பவானியும் ஒரு பீட்டன் வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். இருவரும், உள்ளே நெருக்கமாக உட்கார்ந்திருந்த பொழுது, பொன்னம்பலம் பவானியின் கையை எடுத்து, தன் கரங்களுக்குள் வைத்து பிடித்துக் கொண்டான். எக்காரணத்தாலோ தன் கையை இழுத்துக்கொள்ள வேண்டுமென்று பவானிக்குத் தோன்றவில்லை! அதன் பிறகு, பொன்னம்பலத்தின் இடது கரம், அவள் இடுப்பைச் சுற்றி வளைந்தது…..
ஹோட்டலுக்கு முன்னால் அவர்கள் இருவரும் போய் இறங்கிய பொழுது, பொன்னம்பலத்தின் முகத்தில் விழிக்கவே பவானிக்கு வெட்கமாய் இருந்தது!
இப்படியாக, அவர்கள் இருவரிடையே பழக்கம் வளர்ந்தது!…
பம்பாயில் இருந்தபடி ராஜாபகதூரும் பவானியும் காஷ்மீரத்திற்குச் சென்றார்கள். காஷ்மீரத்தில் குளிர் காலமானதால், அவர்களுக்குப் பொழுது அவ்வளவு சுவாரசியமாகக் கழியவில்லை. அங்கிருந்து கல்கத்தாவுக்குச் செல்லலாமென்று கூறினார் ராஜாபகதூர். சில தினங்களில் எல்லோரும் கல்கத்தாவை அடைந்தனர்.
கல்கத்தாவில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ஒரு நாள் பிற்பகல் ஏதோ வேலையாகக் கிளம்பினாள், பவானி. அப்பொழுது ஹோட்டலுக்கு எதிரே சிறிது தூரத்தில் ஒரு வாட்ட சாட்டமான மனிதன் நின்று கொண்டு இருந்தான். அவனை பவானி பார்த்தபொழுதிலும், அவன் யாராக இருக்கக்கூடும் என்று கவலைப்படவில்லை. ஆனால் அன்று மாலை பவானி தன் சகோதரனான செல்வராஜுடன் கடைத்தெருவில் ஒரு கடையில் நின்று கொண்டு இருந்த பொழுது, சிறிது தூரத்தில் அதே வாட்டசாட்டமான மனிதன் நின்று கொண்டு இருந்தான்.
செல்வராஜிடம் அவனைச் சுட்டி காண்பித்த, பவானி, “பார்வைக்கு சிலோன் காரன் மாதிரி தெரிகிறது!” என்றாள்.
“சிலோன் காரனுக்குத் தனி அடையாளமென்ன இருக்கிறது?” என்று விளையாட்டாகக் கூறிய செல்வராஜ், தன் குரலை மாற்றிக் கொண்டு மிக அக்கரையுடன், “இந்த பொன்னம்பலம் நம்மோடு எவ்வளவு காலம் தங்கியிருக்கப் போகிறான்?” என்று கேட்டான்.
“ஏன்?” என்று கேட்டாள் பவானி.
“பொன்னம்பலம், நமது கோஷ்டியோடு ஒட்டிக்கொண்டு விட்டானா?”
பவானி அலட்சியமாகத் தன் தோளை உலுக்கியபடி, “அவனை ராஜாபகதூருக்கு பிடித்திருக்கிறது! அதோடு, அவன் ரொம்ப அழகாகப் பழகுகிறான்!” என்றாள். பிறகு பேச்சை வேறு விஷயத்திற்கு திருப்பி, “எனக்கு ஊரிலிருந்து கடிதம் வந்தது. அதில் அந்தக் கிழவனைப் பற்றி தான் முழுக்க முழுக்க எழுதியிருந்தது!” என்றாள்.
செல்வராஜ் அந்தக் கிழவனை மறந்து விட்டான். பவானி மீண்டும் விளக்கமாகக் கூறிய பிறகுதான் அவனுக்கு வெள்ளைத் தாடிக்காரனான அட்சயலிங்கத்தின் நினைவு வந்தது.
“செல்வா! உனக்கு இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியை நினைவிருக்கிறதா?–அவர், இந்த பைத்தியக்காரக் கிழவன் எதையாவது விசித்திரமாக செய்யப்போகிறான் என்று சொன்னாரல்லவா?” என்று கேட்டாள் பவானி.
“ஆமாம்” என்றான் செல்வராஜ்.
“அதே மாதிரி அந்தக் கிழவன் செய்திருக்கிறான்! சூரக்கோட்டை மிட்டாதார் வீட்டில் திருடிய சாமான்களை திரும்பக் கொண்டுபோய் அவர் வீட்டிலேயே வைத்துவிட்டான்! ஒரு நாள் காலை, ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கவனித்த வேலைக்காரர்கள், வீடு முழுவதும் நன்றாகச் சோதித்துப் பார்த்த பொழுது, எந்தெந்த சாமான் எந்தெந்த இடத்திலிருந்து களவாடப்பட்டு இருந்ததோ, அந்தந்த சாமான் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்திருக்கிறார்கள்! அந்தக் கிழவன் ஒரு மூட்டையை தோளில் போட்டுக் கொண்டு நடமாடியதை, முதல் நாள் நடுநிசியில் யாரோ பார்த்திருக்கிறார்கள்! இது ரொம்ப விசித்திரமாக இல்லையா? இதேபோல நமது வீட்டில் திருடிய தங்கக் கோப்பையையும் அவன் திரும்பக் கொண்டு வந்து வைத்துவிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும்! அந்த திருட்டுக்கு நான் தான் பொறுப்பாளி என்று சதா காலமும் ராஜாபகதூர் இடித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார்!” என்றாள் பவானி.
“பொன்னம்பலமும் நம்மோடு சென்னைக்கு வருகிறானா!” என்று சட்டென்று கேட்டான் செல்வராஜ்.
“ஏன்?” என்று கடுமையாகக் கேட்டாள் பவானி “இல்லை, கேட்டேன்…” என்று மழுப்பினான் செல்வராஜ்.
“அதை அவனையே கேட்பது தானே? அவன் என்ன செய்யப் போகிறானென்று எனக்குத் தெரியாது! இதோ பார், செல்வராஜ்! இம்மாதிரி அபத்தக் கேள்விகள் கேட்கும் வேலையை ராஜாபகதூருக்கே விட்டுவிடு!”
“நேற்று மாலை நீ எங்கே போயிருந்தாய்?” என்று விடாமல் கேட்ட செல்வராஜ், “நீ பொன்னம்பலத்தோடு போனாயே!” என்றான்.
“எங்களோடு வேலைக்காரனும் வந்தான்” என்று கடுகடுப்பாகக் கூறிய பவானி, ”நாங்கள் ஹௌரா ஜங்ஷன் அருகேயுள்ள ஓர் ஹோட்டலுக்குச் சென்றோம். அந்த ஹோட்டலின் பெயர், எனக்குத் தெரியாது. ராஜாபகதூருக்குத் தான் அது தெரியும். அவர் தான், எங்களை அங்கு வரச் சொன்னார். நாங்கள் அங்கு சென்ற பொழுது, அவர் எங்களுக்காக காத்துக் கொண்டு இருந்தார்!” என்றாள்.
செல்வராஜ் மெதுவாகத் தலையை ஆட்டியபடி, “ராஜாபகதூரை நீ நாலரை மணிக்கு சந்தித்தாய்; அந்த நேரத்தில் தான், அவர் தன்னை சந்திக்கும் படி கூறி இருந்தார். ஆனால், நீ ஒரு மணிக்கே ஹோட்டலை விட்டுப் புறப்பட்டுவிட்டாய், அரைமணி நேரத்தில் நீ ஹௌரா ஜங்ஷனை அடைந்து விடமுடியும்!” என்றான்.
பவானி பொறுமை இழந்து பெருமூச்சுவிட்டபடி, “நாங்கள் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றோம். இடையில் எங்கோ சிற்றுண்டி அருந்தினோம். பிறகு கொஞ்சம் ஊர்சுற்றி வேடிக்கை பார்த்தோம். நீ கேட்க வேண்டிய கேள்விகள் இன்னும் பாக்கியிருக்கிறதா? எங்களோடு கூட வேலைக்காரனும் இருந்தான்!” என்று சீறினாள்.
“வேலைக்காரனை, நீ மிருகக்காட்சி சாலைக்கு வெளியேயே நிற்க வைத்துவிட்டாய். பிறகு, இரண்டு மணிநேரம் கழித்து தான் அவனைப் பார்த்திருக்கிறாய்?” என்று நிதானமாகக் கூறிய செல்வராஜ், “என்னை அம்மாதிரி விழுங்கி விடுவதை போல் பார்க்காதே! நான் வேவு பார்த்துக்கொண்டு அலையவில்லை. எதிர்பாராதவிதமாக, நான் மிருகக்காட்சி சாலைக்கு வர நேர்ந்தது. அப்பொழுது, வேலைக்காரனை வெளியே பார்த்து, உன்னைப் பற்றி விசாரித்தேன்–இம்மாதிரி, முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே!” என்றான் செல்வராஜ்.
இதற்கு, ராணி பவானி எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை.
கல்கத்தாவிலும் நாகபுரியிலும், ராஜாபகதூர் தில்லையம்பலம் ரொம்பவும் சிடுசிடுப்பாக இருந்தார். அவர் அம்மாதிரி சிடுசிடுப்பாக இருப்பதற்கும் காரணம் இருந்தது, பொன்னம்பலம் ஒருவனைத் தவிர, மற்ற எல்லோரிடமும் கடுகடுப்பாக நடந்து கொண்டார். அம்மாதிரி அவர் மன சஞ்சலத்திற்கு அடிமையானதின் முக்கிய காரணம், ராணி பவானி தன் கல்யாண சமயத்தில் செய்து போடப்பட்ட வைரகங்கணம் ஒன்றை கெட்டுப் போக்கி விட்டாள். கல்கத்தாவில் ஒரு தியேட்டருக்குப் போய்விட்டு பிரபலமான ஹோட்டல் ஒன்றில் சென்று, இரவு விருந்து சாப்பிட்டு விட்டு, அன்றைய தினம் பவானி தங்கள் ஜாகைக்கு திரும்பி வந்திருக்கிறாள். தன் நகைகள் எல்லாவற்றையும் ஒரு கழற்றி மேஜையின் மீது வைத்து விட்டு இரவு படுக்கச் சென்றிருக்கிறாள். காலையில், வைரகங்கணத்தை மாத்திரம் காணவில்லை! இரவு அவள் தூங்கும் பொழுது, கதவு உட்புறம் தாளிடப்பெற்று இருந்தது. அவள் இருந்த அறை ஜன்னலுக்கு கம்பிகள் கிடையாது. அவற்றில் ஒரு ஜன்னல் மாத்திரம் திறந்திருந்தது. பவானி, ஒரு சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக் கொள்ளக் கூடியவள். இது ராஜாபகதூருக்கே நன்றாகத் தெரியும்.
கல்கத்தா ரகசியப் போலீசைச் சேர்ந்த மூன்று பிரபல அதிகாரிகள் அந்தத் திருட்டை விசாரிக்க வந்தார்கள். தோட்டத்துப் பக்கமிருந்த ஜன்னல் வழியாக திருடன் வந்திருக்க முடியாதென்று அதிகாரிகளெல்லாம் தீர்மானித்தனர். அறையோடு சேர்ந்து கட்டப்பட்டிருந்த ஸ்நான அறையின் வழியாக ஒருக்கால் திருடன் வந்திருக்கலாம். ஆனால், ஸ்நான அறைக்கதவையும் நன்றாகத் தாளிட்டு படுத்துக் கொண்டது பவானிக்கு நினைவிருந்தது.
அந்த வைரகங்கணம் பவானியின் தாய் வீட்டில் போடப்பட்டது என்றாலும், ராஜாபகதூர் அளவு கடந்த ஆத்திரமடைந்தார்!
“எனக்குக் கொஞ்சம் கூட விஷயம் என்னவென்று புரியவில்லை! உள்ளபடியே, புரியவில்லை, பவானி!” என்று சீறிய ராஜாபகதூர், “நீ அறைக்குள் நுழைந்த பொழுது அந்த வைரகங்கணம் உன் கையில் இருந்திருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால், மற்ற எல்லா நகைகளையும் விட்டுவிட்டு, திருடன் அதை மாத்திரம் எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்.
“எனக்குத் தெரியாது போலீசைக் கேளுங்கள்!” ராணி பவானியின் முகம் வெளுத்துப் போயிருந்தது. அவளது சகிப்புத்தன்மை, அவளிடமிருந்து விடுதலை பெற்று சென்றுவிட்டதை போல் தோன்றியது: “வைர கங்கணத்தை நேற்றிரவு இங்கு கழற்றி வைத்தேனா இல்லையா என்று நான் உறுதியாகச் சொல்வதற்கில்லை! என்னை அறியாமல், அது ஹோட்டலில் கழன்று விழுந்திருக்கலாம்!” என்றாள்.
ஆனால் போலீசார் ஹோட்டலிலும் விசாரித்துப் பார்த்துவிட்டனர். வைரகங்கணம் கிடைக்கவில்லை. சதா, ராஜாபகதூர் அந்த நகையைப் பற்றியே, ‘தொண தொண’வென்று பேசிக் கொண்டு இருந்தார்.
“ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமான நகை… உன்னுடைய அலட்சிய சுபாவத்தால் தொலைந்து போய்விட்டது–எந்த இடத்தில் விழுந்திருக்கும் என்று உன்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லையா, பவானி?”
கல்கத்தாவை விட்டு அவர்கள் புறப்பட தீர்மானித்த அன்று, காளிகட்டத்திற்கு சென்று அம்மனை வணங்கிவிட்டு திரும்பி வந்தார்கள்.
திரும்பி வரும்பொழுது, எதேச்சையாக ரஸ்தாவைக் கவனித்தார்கள். அந்த வாட்டசாட்டமான சிலோன்காரன் அவளுக்கு பின்னால், எங்கோ பார்த்தபடி நடந்து வந்து கொண்டு இருந்தான். பவானி சட்டென்று–வேறொரு தெருவில் திரும்பி, சிறிது தூரம் நடந்தாள். அப்பொழுதும் அந்த மனிதன் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது அவளுக்கு தெரிந்தது.
இதைப் பற்றி, மீண்டும் செல்வராஜிடம் பேசினாள். செல்வராஜ் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!
“இந்த சிலோன்காரர்கள், எல்லா இடத்திலும் இருப்பார்கள்!” என்று அலட்சியமாகக் கூறிய செல்வராஜ், விஷயத்தை வேறு வழியில் திருப்பி, “ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்; வைரகங்கணம் திருட்டு போனது சம்பந்தமாக ராஜாபகதூருக்கு வேறொரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது” என்று ஆரம்பித்தான்.
“அவருடைய சந்தேகங்கள் எல்லாம், அர்த்தம் இல்லாதது.!” என்று ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறினாள் ராணி பவானி.
நாகபுரியிலும், பவானிக்கு மனநிம்மதியே இல்லை. அங்கு வந்த பிறகும், ராஜாபகதூர் சதா அந்த திருட்டைப்பற்றி பேச்செடுப்பதைக் கவனித்த பவானி, அளவு கடந்த ஆத்திரத்துடன், “தயவு செய்து இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதீர்கள்!” என்று கடுகடுப்பாகக் கூறினாள்.
சென்னை திரும்பும் வரை, ராஜாபகதூர் அந்தப் பேச்சை எடுக்கவேயில்லை!
3. தமயந்தி விஜயம்! சூதாடிக்கு கீதோபதேசம்!
பொன்னம்பலத்திற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை. இதை ராஜாபகதூரிடமே அவன் தெளிவாகக் கூறினான். சென்னையில், அவனுக்கு எந்தவிதமான நண்பர்களும் இல்லை ஆதலால், தன் வருங்கால மனைவி இந்தியாவுக்கு திரும்பும் வரையில் எங்காவது ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கத் தீர்மானித்தான்.
சென்னைக்கு வந்துவிட்டு, அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பது, ராஜாபகதூருக்கு அடியோடு பிடிக்கவில்லை.
“என்னுடைய பங்களாவிற்கு வந்து இரண்டொரு வாரங்கள் தங்கியிருக்கலாம். உன்னிடம், எனது ரயில்வே திட்டம் ஒன்றை விளக்கிக் காட்டுகிறேன்…….”
தான் சந்தித்த நபர்களிலேயே பொன்னம்பலம் தான் ரொம்ப புத்திசாலி என்றும், மரியாதை உள்ளவனென்றும் நினைத்தார் ராஜாபகதூர். அவனிடம் அவர் பாராட்டிய ஒரு முக்கிய பண்பாடு, அவன் தன் மனைவியிருக்கும் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பதும், அவசியம் ஏற்பட்டாலொழிய அவளிடம் பேச்சு கொடுப்பதில்லை என்பதும் தான்!
பெரும்பாலான நேரத்தை, ராஜாபகதூரிடம் பேசிக் கொண்டு இருப்பதிலேயே கழித்து வந்தான் பொன்னம்பலம். ராஜாபகதூர் சொல்வதையெல்லாம் ஒரு எழுத்துவிடாமல் கிரகித்துக் கொண்டு, சந்தர்ப்பம் நேரும் பொழுது, அவற்றை அவரிடமே திருப்பிக்கூறி, அவர் பாராட்டுதலைப் பெறுவான்.
சுற்றுப் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்ததும் செல்வராஜ், ‘வானப்பிரகாசம்’ ஹோட்டலுக்குச் சென்று அதன் முதலாளி நீலகண்டனோடு பேசிக் கொண்டு இருந்தான்.
“நாளுக்கு நாள், இந்த ஹோட்டல் ரொம்ப நாகரிகம் அடைந்து வருகிறது!” என்று பெருமையாகக் கூறினான் செல்வராஜ்.
நீலகண்டன் புன்னகையுடன், “அந்தப் பைத்தியக் காரக் கிழவன் அட்சயலிங்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றி இங்கு பலத்த பீதி ஏற்பட்டிருந்த போதிலும், ஏராளமான பேர், ‘வானப்பிரகாசம்’ ஹோட்டலில் வந்து தங்குகிறார்கள்” என்றார்.
“அவனை இன்னும் போலீஸார் பிடிக்க வில்லையா?”
“பிடிக்கவும் இல்லை, பிடிக்கப்போவதும் இல்லை!” என்று தீர்க்கமாகக் கூறிய நீலகண்டன், தன் குரலை சிறிது தாழ்த்திக் கொண்டு “கிழவன் என்று ஒருவன் கிடையாது. இந்த திருடன் தான் திருடிய சொத்துக்களை எல்லாம் திரும்ப கொண்டு போய் வைத்துக் கொண்டு இருக்கிறான்! இவனுக்கு இந்த வட்டாரம் பூராவும் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த திருடன் இங்கு வசிப்பவனாகவோ, அல்லது வசித்தவனாகவோ இருக்க வேண்டும். எக்காரணத்தாலோ இந்த திருடன் மூன்று தடவை ‘வானப்பிரகாசம்’ ஹோட்டலுக்குள் நுழைய முயற்சித்து இருக்கிறான். அதாவது, கிழவனை மூன்று தடவை ஹோட்டல் வராந்தாவில் பார்த்திருக்கிறோம். அவன் இங்கு வாடகைக்கு அறை எடுக்க வந்தானென்று நினைக்கவில்லை!” என்றார்.
“அவனைக் கடைசியாக எப்பொழுது பார்த்தீர்கள்?”
அதற்கு நீலகண்டன் சில வினாடிகள் யோசித்தார்: “உங்கள் கோஷ்டி சுற்றுப் பிரயாணம் புறப்பட்ட பிறகு அவன் இங்கு காணப்படவே இல்லை!” என்றார்.
அவரை செல்வராஜ் வெறிக்க பார்த்தபடி, சூரக்கோட்டை மிட்டாதார்” வீட்டில் திருட்டுச் சாமான்கள் திரும்ப கொண்டுபோய் வைக்கப்பட்டு இருந்தனவே–?” என்றான்…
நீலகண்டன் தலையை ஆட்டியபடி, “ஆம்; அது, நீங்கள் புறப்படுவதற்கு முதல் நாளிரவு நடந்தது! அதன் பிறகு, அந்தக் கிழவன் காணப்படவே இல்லை. ராஜாபகதூரின் வீட்டில் யாரோ நுழைய முயன்றதாக இங்கு பேசிக் கொண்டார்கள். ஆனால் கிழவனை யாரும் கண்ணால் பார்க்கவில்லை!” என்று கூறினார்.
செல்வராஜ் சில வினாடிகள் மௌனமாக இருந்தான். நீலகண்டமே தொடர்ந்து பேச ஆரம்பித்தார்: “உங்களோடு யாரோ ஒரு இளைஞர் வந்திருக்கிறாரே; அவர் எனக்குப் புதிதாக இருக்கிறார்” என்றார்.
“யார், பொன்னம்பலமா?”
“பார்வைக்கு அழகாக இருக்கும் ஒரு வாலிபர்! என்று கூறிய நீலகண்டன், “இன்று காலை ராணி சாகிப்புடன் அவர் காரில் எங்கோ சென்று கொண்டு இருந்தார்” என்றார்.
“பொன்னம்பலம்தான்!” என்று திருப்பிக் கூறிய செல்வராஜ் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிட்டான்.
“எனக்கு வயதாகிவிட்டது இங்கு, கிழவனின் புரளி அளவு கடந்து தலை தூக்கி இருப்பதால், நிரந்தரமாக வேலைக்காரர்கள் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. எல்லோரும், பயந்து ஓடி விடுகிறார்கள்!” என்று குறைபட்டார் நீலகண்டம். அந்த சமயத்தில், ஒரு பருமனான ஸ்திரீ அந்தப் பக்கமாக கையில் ஒரு வாளியுடன் நடந்து சென்றாள்.
“இந்த வேலைக்காரி மாத்திரம் பயந்து ஓடுவதில்லை போலிருக்கிறது!” என்று புன்னகையுடன் கூறினான் செல்வராஜ்.
“இல்லை; நிரந்தரமாக இவள் இங்கு இருக்கிறாள். இவளுடைய பெயர் குஞ்சம்மாள். இங்கு எல்லா வேலைகளையும் அவள் செய்வாள். வாரத்தில் குறைந்தபட்சம் ஏழெட்டு தடவையாவது நான் அவளை வேலையை விட்டு நிறுத்தி விடுவது வழக்கம். ஆனால், அவள் போவது கிடையாது–ஆண்டவனுக்கு நன்றி! சில சமயங்களில் அவளைத் தவிர வேறு யாருமே ‘வானப் பிரகாசம்’ ஹோட்டலில் இல்லாமல் போய் விடுவதுண்டு!’ என்றார்.
அந்தச் சமயத்தில், வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த நீலகண்டன் வெகு வேகமாக வெளியே ஓடினார். சில நிமிஷங்களில் பதினெட்டு வயது மதிக்கக் கூடிய ஓர் அழகிய இளம் பெண்ணுடன் உள்ளே திரும்பி வந்தார். அவளுடைய பெட்டி, நீலகண்டத்தின் கையிலிருந்தது. என்னவோ ‘சள சள’வென்று அவளிடம் பேசியபடி வந்து கொண்டு இருந்தார். இருவரும்,
மாடிப்படிக்கட்டில் ஏறி மேல் தளத்திற்குச் சென்றார்கள். செல்வராஜ் கீழ்தளத்திலேயே காத்துக்கொண்டு நின்றான். கொஞ்ச நேரத்தில், நீலகண்டன் மாத்திரம் திரும்பி வந்தார்.
“அந்த அம்மாள் யார்?” என்று செல்வராஜ் கேட்டான்.
“ஹோட்டலில் தங்க வந்திருக்கிறாள்!”
“ரொம்பநாள் பழக்கமுள்ளவர்போல் தெரிகிறதே?”
“அவளுடைய சித்தப்பாவை எனக்குத் தெரியும்!” என்று கூறிய நீலகண்டன், “சென்ற வருஷம் அவள் ஒருவாரம் இங்கு தங்கியிருந்தாள். அவள் ஏர்க்காட்டில் கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். அவள் பெயர் தமயந்தி!” என்றார். இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் மாடிப்பக்கம் திரும்பிப் பார்த்ததார். மறுபடியும் அவள் திரும்பி வருவாளென்று எதிர்பார்த்ததாகத் தோன்றியது: அவளுடைய சித்தப்பா, எனக்கு பல வருஷங்களுக்கு முன்னால் ஒரு உதவி செய்ய வாய்ப்பு ஏற்பட்டதைக் குறித்து ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவளுக்கு தாய் தந்தை யாருமில்லை.”
செல்வராஜ் அவரை விசித்திரமாகப் பார்த்தான். நீலகண்டனுக்குக் கூட இருதயம் இருக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“நீலகண்டன்!” என்றழைக்கும் குரலைக்கேட்டு இருவரும் மாடிப்படிக்கு பின்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். படிக்கட்டின் உயரத்தில் நின்றபடி தமயந்தி, “நான் கீழே வரலாமா?” என்று கேட்டாள்.
“தாராளமாக, வரலாம் அம்மா!” என்றார் நீலகண்டன்.
தமயந்தி கீழே வந்ததும், செல்வராஜிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தார் நீலகண்டன். சில நிமிஷங்களில் அவர்கள் இருவரும் பல காலம் பழகிய நண்பரைப் போலாகி விட்டார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து, அவர்களிருவரும் ரொம்ப சுவாரசியமாகப் பேசியபடி தோட்டத்தில் நடந்து கொண்டு இருந்த பொழுது, நீலகண்டன் ஹோட்டலுக்குள் இருந்தபடியே விசித்திரமாக தலையைச் சாய்த்து அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் முகத்திலே, ஒரு புன்னகை அரும்பியது.
தமயந்தியைப் பற்றி ராணி பவானியிடம் ரொம்ப உற்சாகமாகப் பேசினான் செல்வராஜ்.
“அவள் அவ்வளவு அழகாக இருக்கிறாளா?” என்று புன்னகையுடன் கேட்ட ராணி பவானி, “அவள் இங்கு என்ன செய்கிறாள்?” என்று கேட்டாள்.
“அவள் லீவில் வந்திருக்கிறாள். ஏர்க்காடு கான்வென்ட்டில் படித்துக் கொண்டு இருக்கிறாளாம். அவள் எவ்வளவு புத்திசாலி தெரியுமா? அவளைப் போன்ற புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!” என்று வானளாவப் புகழ்ந்தான் செல்வராஜ்.
பவானி அவனை விநோதமாகப் பார்த்தபடி, “உன் வர்ணனை ரொம்ப ஆபத்தாக இருக்கிறதே!” என்று கிண்டலாகக் கூறினாள்.
அன்றையத் தினம், பவானி மனமகிழ்ச்சியோடு காணப்பட்டாள். ராஜா சாகிப்பின் தொணதொணப்பு கூட அவள் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. அன்றிரவு சாப்பிடும் பொழுது, காணாமற்போன வைரகங்கணத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தக் கங்கணம், கல்கத்தா போலீஸாரால் திருட்டு நகை வாங்கும் ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், திருடன் யாரென்று போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த திருடன், மூவாயிரம் ரூபாய்க்கு அதை விற்றுவிட்டுப் போயிருக்கிறான்.
“ஹோட்டலில் நடமாடிய யாரோ ஒரு திருடன் தான் அதைத் திருடியிருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு பொன்னம்பலத்தின் பக்கம் ராஜாபகதூர் திரும்பி புன்னகையுடன், “உனக்கு ஒரு சிறு புத்திமதி சொல்ல ஆசைப்படுகிறேன்!” என்று சிரித்தார்.
பொன்னம்பலத்தின் முகம் கற்சிலை போல் சலனமற்றிருந்தது.
“அப்படியானால், அந்தப் புத்திமதி அவசிய மானதாகத் தான் இருக்கும்!” என்று பவ்வியமாகக் கூறினான் பொன்னம்பலம்.
“குதிரைப் பந்தயத்திற்குப் போகாதே” என்று கூறிய ராஜாபகதூர், “உன் தந்தை மிகப் பெரிய கோடீசுவரராக இருக்கலாம். ஆனால், பந்தயம் நடத்தும் சூதாடிகள் உனது பணம் பூராவையும் பறித்துக் கொண்டு விடுவார்கள்! இந்த ஊரிலுள்ள ‘வானப்பிரகாசம்’ ஹோட்டலின் முதலாளி, ஒரு பெரிய சூதாடி! அவன் பேச்சைக் கேட்டு நீ எதிலாவது சிக்கிக்கொண்டு விடாதே!” என்றார்.
“ஏன் இந்த கீதோபதேசம்?” என்று கேட்டாள் பவானி.
“ஏனென்றால், பம்பாயில் கண் மூடித்தனமாகப் பொன்னம்பலம் சூதாட்டத்தில் சிக்கி இருந்ததைப் பார்த்தேன்.”
பொன்னம்பலம் புன்னகை பூத்தபடி, “அந்தக் கலையில் எனக்கு நல்ல தேர்ச்சி இருக்கிறது என்று எனக்கு எப்பொழுதுமே ஒரு மமதையுண்டு” என்றான்.
பவானி சட்டென்று அவன் முகத்தை வெறிக்கப் பார்த்ததையும் பிறகு அந்தப் பார்வையை சட்டென்று வேறுபுறம் திருப்பிக் கொண்டதையும் செல்வராஜ் கவனித்தான். எக்காரணத்தாலோ, செல்வராஜின் மனம் ஒரு வினாடி வேதனை அடைந்தது.
ராஜாபகதூர் அதையெல்லாம் கவனித்ததாகத் தெரியவில்லை: “நம்மூர் வானப்பிரகாசம் ஹோட்டலில் ஒரு ருசிகரமான விருந்தாளி வந்து தங்கியிருப்பதாக பவானி கூறினாள்!” என்று உற்சாகமாகக் கூறினார்.
செல்வராஜ் திடுக்கிட்டு, “ம்!–ஆமாம்; தமயந்தி…
ஏர்க்காட்டிலிருந்து வந்திருக்கிறாள்” என்றான்.
ராஜாபகதூர் தில்லையம்பலம் தலையை ஒரு தினுசாக ஆட்டியபடி, “எதையும் தீரயோசித்து முடிவு செய்” என்று கூறினார். அவர் பேசிய தோரணையில், ஏதோ ஓர் விபரீத அர்த்தம் தொனிப்பதை செல்வராஜ் கவனித்தான்.
– தொடரும்…
– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.