நீலகண்டன் ஹோட்டல்





(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23
22. தமயந்தியின் தந்தை!
“வானப்பிரகாசம்” ஹோட்டலை இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியும் தம்பித்துரையும் அடைந்தபோது, நீலகண்டன் ஓரளவு பிரக்ஞை பெற்றிருந்தார். அவர் அருகில் தமயந்தி உட்கார்ந்திருந்தாள்.

“இந்தப் பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது?” என்று மெதுவாகக் கேட்டார் பரஞ்சோதி.
நீலகண்டன், தன் தலையணையருகே இருந்த சாவிக் கொத்தைச் சுட்டிக்காட்டினார். பரஞ்சோதி அந்த சாவிக் கொத்தை எடுத்து, தன் கையிலிருந்த கருப்புப் பெட்டியைத் திறந்தார். அதற்குள் ஒரு நீண்ட கவர் மாத்திரந்தான் இருந்தது.
‘இதை என்ன செய்யப் போகிறாய், நீலகண்டன் கொளுத்தி விடப்போகிறாயா?” என்று கேட்டார் பரஞ்சோதி.
நீலகண்டன், தமயந்தியின் முகத்தைப் பார்த்தார். தமயந்தி பலமாகத் தலையை ஆட்டிவிட்டு, “வேண்டாம்! அது தான் என்னுடைய ஜனன ஸர்டிபிகேட் என்றால் அதை அழித்து விடாதீர்கள். நான் யார் என்பதற்கு, புருவ அடையாளத்தைத் தவிர வேறு அத்தாட்சியும் வேண்டும்!” என்றாள்.
பரஞ்சோதி நீலகண்டனையும் தமயந்தியையும் மாறி மாறிப்
பார்த்தார். தந்தையின் அவயவங்களில் ஏதாவது ஒன்று, குழந்தையிடமும் அப்படியே அமைந்திருக்கும் என்று அவருக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் பக்கம் பக்கமாகப் பார்த்தபொழுது, அவர் சந்தேகம் தீர்ந்தது.
“தமயந்தி உன் மகளா?” என்று கேட்டார்.
“ஆம்!–இதுவரை……என் மகளாக இருந்து வந்தாள்…..இனி…..அவள்…..உங்கள் மகள்…..” என்று ஈனஸ்வரத்தில் கூறிய நீலகண்டன் அதற்குமேல் பேச முடியாமல், கண்களை மூடிக்கொண்டார்.
“நிச்சயமாக–நிச்சயமாக!” என்று பரபரப்புடன் கூறிய பரஞ்சோதி, நீலகண்டனின் கைகளை ஆதரவாக எடுத்து தனது கைகளுக்கிடையே அழுத்திப் பிடித்துக் கொண்டார்.
தமயந்தியின் கண்களில் கானாறு போலக் கண்ணீர் வழிந்தது. தம்பித்துரை ஒன்றும் பேசாமல் நீலகண்டனின் முகத்தையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
நீலகண்டன் அதன் பிறகு எதுவும் பேசவே இல்லை. அவருக்கு பிரக்ஞை தவறியது. வெள்ளி முளைக்கும் நேரத்தில் அவரது ஆவி பிரிந்தது.
23. நீலகண்டனின் புராணம்
மர்மத்தின் மேல் மர்மமாக விளங்கிய இந்த விவகாரத்தைப்பற்றி, உதவி சூபரின்டென்டென்டிடம், இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியும் தம்பித்துரையும், ஒருவர் மாற்றி ஒருவராக விளக்கம் கூறிக்கொண்டு இருந்தனர்.
தம்பித்துரை தனக்குத் தெரிந்த விபரங்களை கூறிக் கொண்டு இருந்தார்:
“மாரப்பனின் மற்றொரு பெயர் தான் நீலகண்டன்! அவனும் பொன்னம்பலம் என்ற பெயர் படைத்த தங்கையாவும் இலங்கையில், ஒரு கொள்ளைக் குற்றத்திற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். மாரப்பன் கைதேர்ந்த கொள்ளைக்காரன். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஆயுதத்தையும், அவன் கையிலெடுத்துச் செல்லுவதில்லை. அதோடு, அவன் ரொம்ப கௌரவமானவனும் கூட!
“இருவரும் சேர்ந்து தான் சிறைவாசத்திலிருந்து தப்பினார்கள். தங்கையா தனது கூட்டாளியை விட்டுப் பிரிந்து இலங்கையிலேயே தங்கிவிட்டான். மாரப்பன் மாத்திரம் தாய் நாடான இந்தியாவிற்குத் திரும்பி விட்டான். மாரப்பன் திருடனென்றாலும், அவனிடம் சில ஒழுக்க முறைகளிலிருந்தன. வாழ்நாள் பூராவும், தான் ஒரு கொள்ளைக்காரனாகத் தான் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்குமென்று அவன் புரிந்து கொண்டான். அவனுக்கொரு பெண் குழந்தை பிறந்ததும் அவன் மனைவி இறந்துவிட்டாள். தன் தந்தை ஒரு கொள்ளைக்காரன் என்பது தெரியாமல், அந்தப் பெண் குழந்தையை வளர்த்து வரத் திட்டமிட்டான் மாரப்பன்.
“தான் கொள்ளையடிக்கும் சொத்தில் ஒரு பகுதியை, தனியாக அந்தக் குழந்தையின் பெயரில் போட்டு, ஒரு நிதி ஏற்படுத்தினான். அந்த நிதியும் பெருகிக் கொண்டே வந்தது. ஏர்க்காடு கான் வென்டில் தான் யாரென்று தெரியாமலே தமயந்தி வளர்ந்து வந்தாள். தனது தாய், தந்தையர் இறந்து விட்டதாகவும், நீலகண்டன் தனது தந்தைக்கோ, அல்லது சித்தப்பாவுக்கோ நண்பர் என்றும் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
“மாரப்பனாகிய நீலகண்டன் சென்னையில் ஒரு வக்கீலை நியமித்து தமயந்தியின் நிதியைப் பரிபாலித்து வரச்செய்தான். அந்த வக்கீலுக்கு நீலகண்டத்தைப் பற்றிய ரகசியம் தெரியும். ஓய்வு நாட்களில் தமயந்தியை, தான் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அந்த வக்கீலிடம் ஏற்பாடு செய்திருந்தான் நீலகண்டன்…..
“நீலகண்டன் தாம்பரத்திற்கு வந்தபோது, அவன் கையில் கொஞ்சம் பணம்தான் இருந்தது. அதை வைத்துக்கொண்டு, வானப்பிரகாசம் ஹோட்டலை நடத்த அவன் முயற்சித்தபோது, அவனுக்குப் பலத்த நஷ்டமேற்பட்டது. கடன் நெருக்கடி தாங்கமுடியாமல், ரொம்பவும் அவதிப்பட்டான். ஆகவே தான் மேற்கொண்ட கௌரவமான வாழ்க்கையை விட்டு அவன் மீண்டும் கொள்ளைத் தொழிலுக்குச் செல்ல நேர்ந்தது.
“பைத்தியக்காரக் கிழவன் ஆஸ்பத்திரியை விட்டுத் தப்பித்து வந்ததும், தாம்பரத்தில் அமளி துமளி ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் பைத்தியக்காரக் கிழவனைப் போலவே நீலகண்டன், தாடி அணிந்து கொண்டு மக்களை கதிகலங்கச் செய்து கொள்ளைத் தொழில் நடத்தி வந்திருக்கிறான்…..
“அம்மாதிரிக் கொள்ளையடித்த சாமான்களை வானப்பிரகாசம் ஹோட்டலில் பதுக்கி வைத்திருந்து, அவற்றை விற்க நினைத்தபோது தான், லாட்டரி மூலம் அவனுக்குப் பெரும் தொகை பரிசாகக் கிடைத்தது.
“இந்தக் கொள்ளைகளைப் பற்றி எனக்குத் தகவல் கிடைத்ததும், மாரப்பன் தான் இதற்குக் காரணமென்று எனக்குத் தோன்றியது. மாரப்பன் இங்கு இருந்தால், என் பெண்ணை ஏமாற்றித் துரோகம் செய்துவிட்டு ஓடி வந்த தங்கையாவும் இங்குதான் இருக்கக்கூடும் என்று தீர்மானித்தேன். நான் உடனே: இங்கு புறப்பட்டு வந்தேன். நீலகண்டனாக நடித்த மாரப்பனை அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு எதிர்பாராதவிதமாக பொன்னம்பலமாக உருமாறிய தங்கையாவையும் சந்தித்தேன்…..
“தனக்கு லாட்டரியின் மூலம் அதிருஷ்டம் வந்ததும், இயற்கையிலேயே யோக்கியனான மாரப்பன் தான் கிழவனுருவில் திருடிய சொத்துக்களை திருப்பிக் கொண்டுபோய் வைக்க ஆரம்பித்தான். உண்மைக்கிழவன் தப்பித்து வந்ததுமே குளத்தில் விழுந்து செத்திருக்க வேண்டுமென்று, (நாம் ராமையாவின் பிணத்தை யானைக்குட்டையில் இருந்தெடுத்துப் போட்ட சோதனையில் கிடைத்த) அவனுடைய எலும்புகளின் மூலம் நமக்குத் தெரிந்து விட்டது.
“ஆனால், ஒரு விஷயம் மாத்திரம் எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது. தீ விபத்தில் ராணிபவானியைக் காப்பாற்றிய நீலகண்டன் எதற்காக அவளுடைய நல்ல பெயரைக் காப்பாற்ற அவ்வளவு தூரம் பாடுபட்டானென்று எனக்குத் தெரியவில்லை” என்றார் தம்பித்துரை.
“அதற்குக்காரணம், எனக்கு மிகத்தெளிவாகத் தெரியும்!” என்று இடைமறித்துக் கூறிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “நீலகண்டத்தின் உயிரை அவள் ஒரு தடவை காப்பாற்றி இருக்கிறாள்–அதாவது, நீலகண்டன் கிழவன் வேஷத்தில் ராஜாபகதூர் வீட்டில் திருட நுழைந்தபோது, ராஜாபகதூர் தனது கைத்துப்பாக்கியால் அவனைச் சுட முயற்சித்தார். அப்போது ராணிபவானி தான் அவரது கையைத் தட்டிவிட்டு, அவன் உயிரைக் காப்பாற்றினாள். அந்த நன்றியறிதல் உணர்ச்சியில்தான் நீலகண்டன் அவளைக் காட்டிக் கொடுக்காமல் மறைக்க முயன்றான். மேலே சொல்லுங்கள்” என்றார்.
தம்பித்துரை தொடர்ந்து பேசினார்: “அதன் பிறகு தங்கையா பொன்னம்பலமாக இங்கு வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும், நீலகண்டன் பேரதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். அதைப் பயன் படுத்திக் கொண்டு நீலகண்டனைப் பயமுறுத்திக் கொள்ளையடிக்க பொன்னம்பலம் திட்டமிட்டான். அதனால், பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மோசடி செக் எழுதிக்கொடுத்து, அதற்குப் பணம் கொடுக்கும்படி நீலகண்டனை மிரட்டினான். எல்லாவற்றையும் விட அவன் செய்த பயங்கரமான செய்கை எதுவென்றால், நீலகண்டனின் பெண்ணாகிய தமயந்தியை கெடுப்பதற்கு அவன் துணிந்தது தான்….
“நீலகண்டனுக்கு வாழ்க்கையிலேயே மிகப் புனிதமான பற்றுக் கோடு அவனுடைய புதல்விதான். தமயந்தியின் புருவத்தைப் பார்த்ததும், அவள் நீலகண்டத்தின் மகள்தான் என்று புரிந்து கொண்டான் பொன்னம்பலம் என்ற தங்கையா. அதை வைத்துக் கொண்டு பயமுறுத்தியதாலோ என்னவோ, தங்கையாவை தீர்த்துக் கட்டிவிட நீலகண்டன் தீர்மானித்தான் என்று நினைக்கிறேன். அதற்கு மேல், இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி என்னை விட நன்றாக விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்” என்று நிறுத்தினார் தம்பித்துரை.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி பேச ஆரம்பித்தார்: “ராஜாபகதூர் தனது கத்திகளில் ஒன்றை உள்ளே எடுத்து வைக்க மறந்துவிட்டார். அதுதான் சரித்திர பிரசித்தி பெற்ற குடக்கண்ணதீசனின் கத்தி. அந்தக் கத்தி நீலகண்டனின் கையில் சிக்கியது. அதை அவனுடைய கையிலே நான் பார்த்தேன். ராஜாபகதூர் அறையில் அதைக் கொண்டுபோய் வைக்கப் போவதாகவும், அதற்காகச் சாவியை எடுத்துப் போவதாகவும் என்னிடம் அபிநயித்தான். ஆனால் ராஜாபகதூர் தன்னுடைய அறைச் சாவியைத் தன் சட்டைப் பையிலேயே வைத்துக் கொண்டு போய் விட்டாரென்று நான் தெரிந்து கொண்டேன். ஆகவே நீலகண்டன் எனது கண்ணை மறைத்து ஏதோ வேலை செய்கிறானென்று புரிந்து கொண்டேன். அவன் என் பார்வையை விட்டு அப்பால் சென்றதும் அந்த கத்தியைத் தன் இடுப்பில் எங்கோ ஒளித்து வைத்துக் கொண்டு மீண்டும் திரும்பி வந்து சாவியை மாட்டுவதைப்போல் அபிநயித்திருக்கிறான்.
“எனக்குக் கிடைத்த இரண்டாவது தடயம், சரியாக 11:30 அடித்ததும் பொன்னம்பலம் கொலையுண்டான் என்பது தான். அந்த நேரத்தில் சரியாக 11:30 அடித்து இரண்டு நிமிஷங்களில், நீலகண்டன் பொன்னம்பலத்தின் அறை வாசலில் நின்று அவனை நோக்கி ஏதோ பேசுவது போல் பேசிக்கொண்டு இருந்தான். ஆகவே நீலகண்டன் தான் பொன்னம்பலத்தைக் கொலை செய்திருக்க வேண்டும். அவன் கையில் ரத்தமிருந்தது. அவன் மாடியை விட்டு இறங்கி வரும்போது தனது கைகளை கால் சட்டைப் பைக்குள் விட்டுக்கொண்டு வந்தான் என்பதும் எனக்குப் பிறகு நினைவிற்கு வந்தது. அவன் அணிந்திருந்த பட்டு கால்சட்டைப் பைகளை மிக ஜாக்கிரதையாக கத்தரித்து ஒரு புதர் மறைவில் வேண்டுமென்றே வீசியெறிந்து போலீஸாரைத் தடுமாற விட்டிருக்கிறான்.
“நிச்சயமாக, அவனது கால் சட்டையிலும் ரத்தக்கறை இருந்திருக்கும். ஆனால், அவற்றை இன்ஸ்பெக்டர் ருத்ரபதி சோதனைக்குப் பறிமுதல் செய்யாமல் விட்டுவிட்டார். அதோடு, அந்த கால் சட்டையில் பெட்ரோலை ஊற்றி, தோட்டத்தின் கோடியிலே வைத்து கொளுத்தி விட்டிருக்கிறான். அதைத் தான் நாம் யாரோ குளிர் காய்வதற்காக மூட்டிய தீ என்று நினைத்தோம். அதற்குத் தீ வைக்கு முன் தன் கையிலுள்ள ரத்தக் கறைகளை சோப்பு போட்டு அருகிலிருந்த ஒரு நீர் நிலையில் கழுவி இருக்கிறான் நீலகண்டன். அந்த சோப்புக் கட்டியும் எனக்கு கிடைத்தது. இது தான், இந்த விவகாரத்தில் அடங்கிய மர்மம்!” என்றார் பரஞ்சோதி.
“இனி தமயந்தியின் நிலை என்ன?” என்று கேட்டான் செல்வராஜ்.
“அவளுக்குத்தான் நீ இருக்கிறாயே? ஒரு நல்ல முகூர்த்தம் பார்த்து அவளை மணந்து கொள்!” என்றார் பரஞ்சோதி.
பவானி குறுக்கிட்டு, “ஆனால் அநாவசியமாக மனைவியை சந்தேகிக்க கூடாதென்று புத்திமதி கூறுங்கள். அவ்வாறே சொந்த புருஷனையே சந்தேகிக்கத் தொடங்கிய பிறகுதான் சில மனைவியருக்கு சிறிது சபலமும் உண்டாகிறது!” என்றாள்.
“இந்தப் புத்திமதி செல்வராஜுக்கு அல்ல! எனக்கு!” என்றார் ராஜாபகதூர்.
சாபம் நீங்கிய அகல்யாவைப்போல் பவானி புத்தொளியுடன் புன்முறுவல் செய்தாள்!
முற்றும்.
– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.