நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…!






அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3
நேரம்: 04:05:21 சனிக்கிழமை
வெளியே சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது. மைக்கேல் கடற்கழுகின் அப்பர்டெக்கில் உள்ள யன்னல் வழியாகக் கடலை நோட்டம் விட்டான். வெளியே பயங்கர இருட்டில் காற்றோடு சேர்ந்து கரும்பூதம் போல அலைகள் ஆரவாரித்துக் கொண்டிருந்தன. எப்படியும் காலையில் அடங்கி விடும் என்ற அசையாத நம்பிக்கை அவன் மனதில் இன்னமும் இருந்தது. சில்லென்ற கடற் காற்றில் உடம்பு நடுங்கியது. தனது கபினுக்குச் சென்று ஸ்வெட்டரை எடுத்து மாட்டிக் கொண்டான். இப்போ உடம்பின் மெல்லிய சூடு உள்ளே பரவி குளிருக்கு இதமாக இருந்தது. அவனுக்குத் தன்னை அறியாமலே சிரிப்பு வந்தது. இதமாக இருப்பதற்கு ஸ்வெட்டர் மட்டும் காரணமல்ல லாரிஸா தன் கைப்பட ஆசையாய்ப் பின்னிக் கொடுத்தது தான் காரணம் என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்!

இப்படித்தான் அன்றும் இந்த ஸ்வெட்டரை அணிந்து கொண்டு அந்தக் குளிரில் அவன் அவளுக்காகக் காத்திருந்தான். வானம் கறுத்துப் பொட்டுப் பொட்டாய் விழுந்த மழைத் துளிகளில் நனைந்தபடி அவள் அவனைத் தேடி வேகமாய் வந்தாள்.
‘ஏய் லாரிஸா! என்ன இது இப்படி நனைஞ்சு போய் வர்றியே உடம்பு என்னத்திற்காகும்?’
அவன் பதட்டப் பட்டு தனது கைக்குட்டையை எடுத்துத் தலையைத் துவட்டி விட்டான்.
‘எனக்கு ஒன்றும் ஆகாது! பரவாயில்லை விடு நானே துடைச்சுக்கிறேன்’ அவள் அவனிடம் இருந்து விலகி தனது கைக்குட்டையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள்.
அவள் அப்படி அவசரமாக அவனிடம் இருந்து விலகிய விதம் அவனுக்கு என்னவோ வழக்கத்துக்கு மாறாக சற்று வித்தியாசமாக இருப்பதாகத் தெரிந்தது. ஆனாலும் தன்னைத் தேடி இந்த மழைக் குளிரில் அவள் வந்து விட்டாளே என்ற பெருமிதத்தின் சந்தோஷ ஊற்று உடம்பெல்லாம் பரவி அவள் மீது இரக்கம் கொள்ள வைத்தது.
அவள் அவனுக்கு எதிரே ஆனால் சற்று விலகி மௌனமாய் அமர்ந்தாள்.
மாலை நேரத்து இருட்டில் மின்னல் ஒன்று வெட்டிப் போக அவள் முகம் வாடி சோகம் குடி கொண்டிருப்பது பளீச்சென்று தெரிந்தது.
‘என்ன லாரிஸா.. பேசமாட்டேன் என்கிறாய்? என்னாச்சு உனக்கு?’
அவன் சொன்னது எதுவுமே கேட்காதது போல அவள் பதில் எதுவும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையில் தலை குனிந்திருந்தாள்.
‘என்னோட கோபமா?’
‘………’
‘ப்ளீஸ்… சொல்லேன்!’
இல்லை என்று மட்டும் தலையசைத்தாள்.
‘அப்போ வீட்டிலே ஏதாவது பிரச்சனையா?’
‘ஆமா..’
‘என்கிட்ட சொல்லக் கூடாதா?’
தலை குனிந்திருந்தவள் சட்டென்று விம்மி வெடித்தாள்.
அவன் பதறிப் போய் அவளருகே சென்று அவள் முகத்தை நிமிர்த்தினான். அவன் தொட்டதும் அதற்காகவே காத்திருந்தது போல அவன் கைகளில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்.
அவளது விம்மலும் கேவலும் அதிகரிக்க, அவனை அறியாமலே அவனது கண்களும் கலங்கத் தொடங்;கின.
‘அழாதே லாரிஸா பிளீஸ்!’
அவள் அவனது கைகளை விலத்தி விட்டு அவனை நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தாள்.
‘ப்ளீஸ்! என்ன நடந்தது.. சொல்லேன்!’

‘வீட்டிலே ஒரே ரகளை! அப்பா நம் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். தான் பார்த்த பையனையே கட்டிக் கொள்ளும்படி என்னைக் கட்டாயப் படுத்துகிறார், எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை. என்னால எங்க வீட்டில நிம்மதியே குலைஞ்சு போச்சு!’
‘ஏன் அப்பா உன்னைக் கட்டாயப் படுத்திறார்? அவனை நீ திருமணம் செய்வதால் அப்பாவிற்கு என்ன லாபம்?’
‘அவர் வேறுயாருமில்லை அப்பாவின் மேலதிகாரி. இளமையிலேயே தனது கெட்டித்தனத்தால் பதவி உயர்வுகள் பெற்று மேலதிகாரியானவர். அப்பாவிற்குப் பிடித்தமானவர்.’
‘உனக்கு அவனை ஏற்கனவே தெரியுமா?’
‘ஆமா, கடற்படையினரின் கிறிமஸ் பாட்டிக்கு நாங்க போயிருந்த போது அவரும் அங்கே வந்திருந்தார். அங்கேதான் அப்பா என்னை அவருக்கு அறிமுகப் படுத்திவைத்தார். நடன நிகழ்ச்சியின் போது தன்னோடு நடனமாட முடியுமா என்று மிகவும் மரியாதையோடு அவர் கேட்டபோது என்னாலே மறுக்க முடியவில்லை.’
‘அப்புறம்…?’
‘நடனமாடிவிட்டு இரவு விருந்தில் கலந்து கொண்டோம். அப்போது தான் அவர் என்னைத் தனக்குப் பிடித்திருப்பதாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பமா என்றும் கேட்டார்.’
‘அதற்கு நீ என்ன சொன்னாய்?’
‘நான் ஒன்றுமே சொல்லவில்லை, சிரித்துச் சமாளித்து விட்டேன்!’
‘ஏன்;;.. உனக்கொரு பாய்ஃபிரண்ட் இருப்பதாகச் சொல்லியிருக்கலாமே?’
‘சொல்லியிருக்கலாம், அவர் மூலம் எங்கள் காதல் அப்பாவிற்குத் தெரிய வந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்!’
‘சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டதன் பலன் என்னவென்று இப்போ உனக்குப் புரியுதா?’
‘நான் என்ன வேண்டும் என்றா சொல்லாமல் மறைச்சேன்? உன்னை எங்க வீட்டிலே அறிமுகப்படுத்து முன் இதை எப்படி அவரிடம் சொல்வது என்று தான் தயங்கினேன்.’
‘சரி இப்போ என்ன செய்வதாய் உத்தேசம்?’
‘அவர் என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக அப்பாவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த அப்பாவும் உடனேயே சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அப்பாவின் பதவி உயர்வு அவர் கையில் தான் தங்கியிருக்கிறது.’
‘கேவலம் அப்பாவின் பதவி உயர்வுக்காக உன்னைப் பலிகொடுக்கப் போகிறாயா?’
‘அந்தப் பதவிக்கு உயர வேண்டும் என்பது தான் அப்பாவின் நீண்ட நாள் கனவு. அதுமட்டுமல்ல, அவருக்குக் கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. அரசாங்க பங்களா இருக்கிறது. குடும்பப் பொறுப்பு எதுவுமில்லை. எங்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. கல்யாணச் செலவைக் கூட அவரே ஏத்துக் கொள்வதாகச் சொல்கிறார். இதை விட அப்பாவிற்கு வேறு என்ன வேணும்? அதனாலே தான் என்னைக் கூடக் கேட்காமல் சம்மதம் சொல்லி விட்டார்!’
எங்கேயோ இடி முழங்கியது. இங்கே அவன் இதயம் வலித்தது.
‘உன்னுடைய மௌனத்திற்கு நீ கொடுத்த விலை என்ன என்று உனக்குத் தெரியுமா லாரிஸா?’
அவள் எதுவும் பேசாது மௌனமாக இருந்தாள்.
‘அப்போ நீ என்ன தான் முடிவு எடுத்திருக்கிறாய்?’
‘இந்தக் கல்யாணம் நடக்காவிட்டால் அப்பா தன்னை உயிரோடு பார்க்க மாட்டாய் என்று சொல்கிறார். உனக்கு என்னுடைய நிலைமை புரியும் என்று நினைக்கின்றேன்.’
‘அம்மா என்ன சொன்னா?’
‘அம்மாவும் அப்பாவின் பக்கம்தான். அப்பாவிற்கு ஏதாவது ஒன்றென்றால் அம்மா தானும் பேயிடுவேன் என்கிறா.’
‘நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னமும் பதில் சொல்லலையே.’
‘நான் என்ன சொல்ல? உனக்கு என்னுடைய நிலைமை என்னவென்று புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.’
லாரிஸா சொல்ல வந்ததை நாசுக்காகச் சொல்லிவிட்டாள்.
‘அப்போ நீ என்னோடு பழகியது, என்னைக் காதலித்தது எல்லாம்…..?’
‘எல்லாமே நிஜம்! என்னுடைய நிலையில் நீ இருந்தால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வாய் மைக்கேல்?’
அவள் கண்ணீருக்கிடையில் அவனைப் பார்த்துக் கேட்ட போது அவன் பதில் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போய் நின்றான்.
‘இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கா சொல்லு மைக்கேல்?’
அவன் என்ன சொல்ல முடியும்? அவன் எப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறான் என்பது அவனுக்குத் தான் தெரியும்! இந்த நிலையில் அவனால் அவளுக்கு எப்படி, என்ன வாக்குக் கொடுக்க முடியும்?
அவனது மௌனம் தான் அவளது கேள்விக்குப் பதிலாயிற்று.
‘அப்பா அம்மாவை பலி கொடுத்து எங்கள் காதல் வாழணுமா? சொல்லு மைக்கேல்?’
‘பலியா? நம்ம காதலுக்கு பலி கொடுக்கணுமா…..?’
அவன் அதிர்ந்து போய் நின்றான்.
– தொடரும்…
– நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 2020, ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை.