நீதி வாக்கிய மந்திரி சொல்லிய பஹுசுருதன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 147 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதற்பகுதி: பூர்வ கதை

கதை – 1 | கதை – 2 | கதை – 3

2. நீதி வாக்கிய மந்திரி சொல்லிய பஹுசுருதன் கதை

விசாலை என்ற நகரில் பிரசித்தி வாய்ந்த நந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். தன்னுடைய பலம் பொருந்திய கை வலிமையினால் அவன் எல்லா விரோதி அரசர்களையும் வென்று தன் காலடியில் விழச் செய்து நிகரற்றவனாய் ஆட்சி புரிந்து வந்தான். அதற்கெல்லாம் துணை புரிந்தவன் பஹுசுருதன் என்னும் பெயருடைய மந்திரியாவான். நந்தமன்னனுக்கு ஜெயபாலன் என்ற ஒரு குமாரனும் இருந்தான். அவன் முப்பத்தாறு வகை ஆயுதங்களை நன்கு கையாளும் திறமை வாய்ந்தவன். அரசனுக்கு பானுமதி என்று ஒரு பட்டமகிஷி இருந்தாள். அவளுடைய அழகிற்கு நிகரானவள் திரிபுவனத்தில் எவளும் இல்லையென்னும்படி விளங்கினாள். அவளுடைய உடல் வனப்பில் கட்டுக்கடங்காத ஒரு வசீகரம் குடிகொண்டு கண்டவர் எவர் சித்தத்திலும் சிறிதாவது சலனம் உண்டாகாமலிராது. அப்படிப்பட்ட வசிகரமானவளை வையகத்து வேந்தன் விண்ணமுதெனப் பெரிதும் காதலித்தான். மனையாளின் மையலி லே மூழ்கிக் கிடந்த மன்னன் சதா அவளருகிலே இருந்து வந்தான். ராஜசபையில் சிங்காதனத்தில் அமரும்போதுகூட பானுமதி அவன் பக்கத்திலே உட்கார்வாள். ஒரு கணங்கூட அவளை விட்டுப் பிரிந்திருக்க மன்னனால் முடியவில்லை.

ஒரு சமயம் பஹுசுருதன் என்னும் மந்திரி பின்வருமாறு எண்ணினார். மன்னன் மானம் கெட்டவனாகி விட்டான். அவன் உட்கார வேண்டிய இடத்தில் பேரழகியான ஒரு பெண்ணைத் தன்னுடன் பொதுச் சபையில் உட்கார வைத்துக் கொள்கிறான் மக்கள் அவளைப் பார்க்கிறார்கள். மக்கள் கூட்டத்தில் வாலி பர்களும் இருப்பார்கள். காணாத கனியைக் காண்பவர்கள் போலவே பலர் பட்டமகிஷியைப் பெருமூச்சுடன் பார்க்கிறார்கள். ஆடவனின் ஆசை வழியும் விழிகளை ஆரணங்கு பார்ப்பாளேயாகில் அவளால் நிஷ்டூரமாகப் புறக்கணிக்கமுடியாது. அவளுடைய சித்தமும் குழம்பக் கூடும்; இதை நினைக்கவே சகிக்கவில்லையே? மோகத்தில் உள்ளவன் காணக் கூடியது எது காணக் கூடாதது எது என்பதை அறியமட்டான்.

‘இல்லை யென்றால், நீலோத் பலம் போன்ற கண்க ளுடைய தேவ கன்னிகைகள் இருக்க தேவர்களின் அரசனான இந்திரன் ரிஷிபத்தினி அகல்யையிடம் ஆசை கொள்வானேன் ஓலைக் குடிசை நெருப்பில்பற்றி எரிவது போன்ற காதல் தீயிலே உள்ளம் தவிக் கும் போது ஒருவன் எவ்வளவுதான் அறிவாளியாயிருந்தாலும் எது சரியானது எது சரியில்லை என்பதை எப்படி உணர்வான்?”

“இன்னும் பெண்களுடைய கருவிழிகளின் பாணத்தால் துளைக்கப்படாமலிருக்கும் வரையில் தான் ஒருவன் தன்னுடைய உறுதியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.”

“பால் போன்ற வெண்மை நுரைகளுடன் கூடிய கடற் கரையில் வந்து மோதும் அலைகளைப்போன்று, சலன புத்தியுள்ள பெண்களுடைய கண்களின் அசைவுகளினால் ஒருவனின் உள்ளம் தாக்கப்படாத வரையிலும், தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்தி அவன் நடக்கும் வரையிலும் நீதி சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட வழிகளின்படி அவன் நடந்து வரும் வரையிலும், பூவுலகத்தின் உயர்ந்த பிரகாசம் அவனுடைய உள்ளத்திலே பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். கலைகளில் சிறந்து விளங்குபவனையும் மோகம் வருத்துகிறது.”

“கரும்பை வில்லாகவும் நறுமணம் கமழும் பூக்களை அம்பாகவும் உபயோகிக்கும் காதல் தெய்வமான மன்மதன் கலைகளில் சிறந்த ரசிகனை அதிகமாக வேதனையடையச் செய்கிறான். பரிசுத்தமானவனைக் கண்டு சிரிக்கிறான். அறிவாளியைக் கண்டு கேலி செய்கிறான். மன உறுதி படைத்தவனைக் கீழான நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறான். எல்லாவற்றையும் ஒரே நொடியில் செய்துவிடுகிறான்.”

“இது மட்டுமல்ல”

“அறநெறி நூல்கள் நேர்மை, துறவு, தர்மம், அறிவு ஆகியவற்றை விறகுகளாக்கிக் கொண்டு எரியும் மோக வெறித் தீயிலே முட்டாள் ஒருவனே நுழைவான்”

“அவனுடைய செல்வமும் செல்வாக்கும் கரைந்துவிடுகிறது. குடும்பத்துக்கு கெட்ட பெயர் உண்டாகிறது. மரணமும் கிட்டிவிடலாம். மோகத்தில் சிக்கியுள்ள ஒருவன் இவைகளைக் கொஞ்சமும் நினைப்பதில்லை”

இவ்விதம் நினைத்த மந்திரி பஹுசுருதன் நல்ல சமயம் நேர்ந்தபோது நந்த மன்னனிடம் அதுபற்றிப் பேசலானார்: “அரசே உங்களிடம் ஒரு விஷயம் தெரிவிக்க வேண்டும்” என்றார் மந்திரி.

“என்ன சொல்லவேண்டும் சொல் என்றான் நந்த மன்னன்”

“அரச சபை நடுவில் தங்கள் அருகில் சிம்மாசனத்தில் சரிசமமாகப் பட்டமகிஷி அமர்வது அவ்வளவாக நல்லதல்ல! நீதிசாஸ்திரங்களை எழுதுவோர், ராஜபத்தினி எப்போதும் அந்தப்புரத்திற்குள்ளேயே இருக்கவேண்டும். என்று சொல்வார்கள். சபைக்குப் பலதரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். அவர்களுக்குச் சௌந்தர்யவதியைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அப்போது தேவியின் மனது என்ன பாடுபடும்” என்றார் மந்திரி பஹுசுருதன்.

“அது எனக்குத் தெரியும். ஆனால் நான் என்ன செய்வது பானுமதியிடம் அதிகப் பிரியம் கொண்டிருக்கிறேன். அவளை விட்டு ஒருகணங்கூட என்னால் தனியாக இருக்கமுடியாது” என்று பதிலளித்தான் மோகாந்தகாரனான நந்தமன்னன்.

“அப்படியானால் இவ்விதம் செய்யுங்கள்…”

“எப்படி? சொல்!” என்று கேட்டான் நந்தமன்னன்.

“கை தேர்ந்த சித்திரக்காரன் ஒருவனை வரவழையுங்கள். துணியில் பானுமதியின் உருவத்தைத் தத்ரூபமாக வரையச் செய்து தங்கள் கண் பார்வைக்குப் படும்படி சுவரிலே மாட்டி வைக்கச் செய்யலாம். அவளுடைய உருவம் உங்களுக்கு எப்போதும் தெரிந்து கொண்டேயிருக்கும்” என்றார் மந்திரி பஹுசுருதன்.

மதியமைச்சரின் யோசனை மன்னனுக்குச் சரியாகவே பட்டது. ஆகவே கைதேர்ந்த ஒரு சித்திரக்காரனை வரவழைத்து மஹாராணியின் உருவத்தைத் துணியில் எழுத வேண்டும் என்று தெரிவித்தான்.

“நந்த மன்னரே! என் கண்களினால் மஹா ராணியாரின் உருவத்தை ஒருமுறை பார்த்து விட்டேனானால், பிறகு சிறு வித்தியாசமும் இன்றி தத்ரூபமாக மஹாராணியாரின் உருவத்தைச் சித்திரத்தில் தீட்ட முடியும்”! என்றான் சித்திரக்காரன்.

உடனே மன்னவன் தன் பட்டமகிஷி பானுமதியை அந்தப்புர மாளிகையில் நிலா உப்பரிகையில் பூரண அலங்காரத்துடன் நிற்க வைத்துச் சித்திரம் எழுதுவோனைப் பார்க்கச் செய்தான். “பத்மினி” என்ற வகையில் சேர்க்கப்பட வேண்டியவள் அவள் என்பதைக் கண்ட சித்திரக்காரன் அந்த வகைக்கான லக்ஷணங்களை உடையவளாகச் சித்திரம் எழுதினான்.

பத்மினி என்ற வகையில் சேர்க்கப்பட வேண்டியவள், தாமரை இதழ்களைப் போன்று மிருதுவாக இருப்பாள், நன்றாக இதழ்கள் விரிந்து பூரண மலர்ச்சி பெற்ற தாமரையைப் போன்ற பிரகாசம் பொருந்தியவள். அவள் உடலில் கமகமவென ஒருவி த நறுமணம் கமழும். மருண்ட மான்களின் கண்களைப் போன்று மருட்சி நிறைந்த கண்களை உடையவள்; ஓரங்களில் செவ்வரி உடையனவாக அவளுடைய கருவிழிகள் இருக்கும். அவளுடைய நெஞ்சகம் வில்வப் பழங்களை போன்று அழகாக இருக்கும்.

அவளுடைய மூக்கு விரிந்த எள்ளுப் பூ போன்று இருக்கும். அறநெறியாளர்கள், பெரியோர்கள், தெய்வங்கள் ஆகியோர்களைக் போன்ற அழகும், சம்பகப் பூவின் சோபையும், நன்றாக மலர்ந்த தாமரைப் பூவின் கொடி போன்ற உடலும் உடையவளாக அவள் சோபிப்பாள். மோகவெறித் தீயின் உஷ்ணம் தாக்காமல் தடுத்து மறைக்கும் குடை என்று அவளைச் சொல்லலாம்.

அவள் அன்னம் போன்று மெதுவாக மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்படியாக நடப்பாள். அவள் இடை மூன்று மடிப்புகளைக் கொண்டதாக இருக்கும்; அன்னம் போன்ற குரலுடையவள் அவள். அவள் அழகாக அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அதி ருசியாகவும் சுத்தமாகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் சாப்பிடுவாள். சந்தேகச் சுபாவம் உடையவள். அதிக நாணமுள்ளவள். சோபையோடு கூடிய புஷ்பங்கள் போன்று கவர்ச்சிகரமான ஆடைகளுடனிருப்பாள்.

இவ்விதக் குணங்களோடு கூடிய பத்மினி வகைப் பெண்ணான பானுமதி தேவியின் சித்திரத்தை வரைந்து பார்த்திபனிடம் கொண்டு வந்து கொடுத்தான் ஓவியன். ஆசைக் கிழத்தியின் படத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த நந்த மன்னன் ஓவியனுக்கு அநேக விதமான பரிசுகளெல்லாம் வழங்கினான்.

அப்போது மஹாராஜாவின் குருவான சாரதாநந்தனர் அங்கு வரவே, அவரும் படுதாவில் வரையப்பட்டிருந்த பானுமதியின் சித்திரத்தைப் பார்த்தார். “தன்னைப்போல் உயிரோவியங்களைத் தத்ரூபமாக வரையக்

கூடியவர்கள் உலகில் காண்பது அபூர்வம், என்பதுபோல் சித்திரக்காரன் பெருமையடித்துக் கொண்டான். அதைக் கேட்ட ராஜகுரு சாரதாநந்தனர் சிரித்தார். பிறகு அவர் சித்திரக்காரன் பக்கம் திரும்பி, “ஓவியனே! நீ பானுமதியின் உருவத்தை அப்படியே வரைந்திருப்பது உண்மையே. ஆனால் தத்ரூபமாகத் தோன்றும் ஒன்றைக் குறிப்பிட நீ மறந்துவிட்டாய்!” என்றார் குரு.

“குருஸ்வாமி! நான் எதை மறந்துவிட்டேன் என்பதைத் தயவு செய்து தெரிவிக்கும்படி வேண்டுகின்றேன்!” என்றான் சித்திரக்காரன்.

“மஹாராணியின் இடது துடையில் எள்ளு போன்ற மச்சம் ஒன்று உண்டு. அதை நீ தத்ரூபமான உயிரோவியத்தில் குறிப்பிட மறந்துவிட்டாய்!” என்றார் ராஜகுரு.

சாரதாநந்தனர் சொன்ன வார்த்தைகளை நந்த மன்னனும் கேட்டான், ராஜகுருவின் வார்த்தைகள் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை அறிய விரும்பினான். அதற்காக அவன் தன் பானுமதியுடன் தனித்திருக்கையில் அவளைப் பரிசோதித்தான். குரு சாரதாநந்தனர் குறிப்பிட்டபடி இடது துடையில் அந்த மச்சம் இருந்தது. அவருக்கு இந்த மச்சம் எப்படித் தெரிந்தது? அவருக்கும் பானுமதிக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும்! இல்லையேல் அவருக்கு இவ்விடமுள்ள இம்மச்சம் தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பெண்கள் விஷயத்தில் இம்மாதிரிச் சம்பவங்களைச் சந்தேகப்படாமலிருக்க முடியாது.

“பெண்கள் ஒருவனுடன் வாயால் பேசுகிறார்கள். அதே சமயம் கருவிழிகளால் மற்றவனின் மனதைக் கிளறும் விதமாகப் பார்க்கிறார்கள் : மூன்றாம் மனிதனைப் பற்றி மனதிலே நினைக்கிறார்கள். ஒருவனோடு பெண்கள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்பது இல்லை.

எரிப்பதற்கு விறகுக்கட்டை எவ்வளவு கிடைத்தாலும் நெருப்புக்குப் போதாது; ஆற்று நீர் எவ்வளவு விழுந்தாலும் கடல் நீரின் மட்டம் உயர்ந்துவிடாது; எல்லா ஜீவ வர்க்கங்களின் உயிர்களைத் தின்றாலும், கூற்றுவன் திருப்தி அடைந்துவிட மாட்டான்; அவ்வி தமே அழகிய கண்களை உடைய பெண்களும் ஆடவர்கள் விஷயத்தில் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.

ஒளிவிடம், ஏற்ற சந்தர்ப்பம், விழையும் காதலன் இம்மூன்றும் இல்லாது போக வேண்டும்; நாரதரே! பெண்களின் தூய்மை அப்போதுதான் பங்கப்படாமல் இருக்க முடியும்.

“என் காதலியான இவள் என்னிடமேதான் உயிராக இருக்கிறாள்” என்று கனவு காணும் முட்டாள், அவளுடைய கைப்பொம்மையாக அவள் இஷ்டப்படியெல்லாம் ஆடுவான்.

‘விளையாட்டாகவோ அல்லது வினையாகவோ எப்படியிருந்தாலும் மங்கையரின் வார்த்தையை அப்படியே எடுத்துக்கொண்டு அதன்படி நடக்க முயலும் மனிதன் உலகத்தாரின் ஏச்சுக்கு இரையாவான்!

“மோகத்தில் உள்ள மனிதனைப் பெண்ணாகப்பட்டவள் அரக்கைப் பிழிந்துவிட்டுக் கடைசியில் வேகமாகத் தூக்கி எறிந்துவிடுவாள்!”

இவ்விதம் சிந்தித்த நந்தமன்னன் தன் மதி மந்திரியை வரவழைத்து எல்லா விபரங்களையும் அவரிடம் தெரிவித்தான். அரசனின் அப்போதைய புத்திக்குத் தகுந்தவாறு அந்தச் சமயத்தில் அரசனின் அப்போதைய புத்திக்குத் தகுந்தவாறு அந்தச் சமயத்தில் மட்டும் பேச விரும்பிய பஹுசுருதன் அரசே மற்றவர்களின் நெஞ்சில் இருப்பவற்றை யார்தான் அறியமுடியும் நீங்கள் நினைப்பது போல் நடந்தாலும் நடந்திருக்கலாம் என்றார்.

“மந்திரி நீ என்னுடைய நண்பனாக இருக்கும் பட்சத்தில் உடனே குரு சாரதாநந்தனருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்!” என்றான் நந்த மன்னன்.

“அவ்விதமே ஆகட்டும்!” என்றார் மந்திரி பஹுசுருதன். உடனே அவர் எல்லோருடைய முன்னிலையிலும் ராஜகுரு சாரதாநந்தனரைப் பிடித்துக் கட்டினார். இதனால் குரு கலக்கம் அடைந்தார்.

“அரசன் எந்த மனிதனுக்கும் நண்பன் அல்ல என்பது எவ்வளவு உண்மையாகிவிட்டது!” என்று அவர் எண்ணமிடலானார்.

“செல்வம் வந்து அடைந்தவன் எவன்தான் கர்வம் கொள்வதில்லை? காமாதுரர்களுக்கு நேரும் கெடுதிகளுக்கு முடிவுதான் உண்டா? பூமியில் உள்ள மனிதர்களில் யாருடைய உள்ளம் பெண்களால் கவரப்படாதது? அரசர்களுக்கு யார் நண்பர்கள்? கால கதிக்கு அதாவது சாவுக்கு இலக்காகாதவர் யார்? எந்தப் பிச்சைக்காரன் மேன்மையடைந்தான்? துஷ்டர்களிடம் சிக்கிக் கொண்டவன் எவன்தான் துன்பம் அடையாமல் தப்பினான்?

ஆகவே,

காக்கையினிடம் சுத்தம், சூதாடியினிடம் நியாயம், பேடியிடம் வீரம், குடிகாரனிடம் வாக்குறுதி, பாம்பினிடம் தயை, பெண் களிடையே நிரந்தரமான மோகவிகாரம் இல்லாமை, அரசர்களிடையே நிரந்தரமான நட்பு – ஆகியவற்றை யார்தான் கண்டும் கேட்டும் இருக்கிறார்கள்?

“இன்னும் ஒருவன் எவ்வளவுதான் நிரபராதியாயிருந்தாலும், ஆட்சியாளனின் ஆத்திர வெறிக்கு ஆளாகிவிட்டால், அவன் குற்றம் செய்தவனாகவே கருதப்படுவான் அல்லவா.

ஆள்பவனின் கோபத்தினால் நிரபராதி குற்றவாளியாகிறான். உதவி பெற்றுள்ளவன் உதவி கிடைக்காமல் திண்டாடுகிறான். வீ ரன் கோழையாகிறான். அதிக நாட்கள் வாழக்கூடியவன் குறுகிய காலத்திலே உயிரை இழக்கிறான். உயர்ந்த குலத்தில் பிறந்தவன் கீழ்மகனாகிறான்!”

இவ்விதம் சிந்தித்த ராஜகுரு சாரதாநந்தனர் கொலைக் களத்துக்கு இட்டுச் செல்லப்படும்போது மந்திரி பஹுசுருதனை நோக்கிச் சில வார்த்தைகளைச் சொன்னார்:

“காட்டின் நடுவிலோ, சண்டையின் மத்தியிலோ, எதிரிகளின் நடுவிலோ, தண்ணீரிலோ நெருப்பிலோ, ஆழமான பள்ளத்திலோ, உயரமான மலையுச்சியிலோ, விழித்திருக்கும் போதோ மயக்கத்திலோ, அல்லது பெரிய அபாயத்தில் சிக்கி இருக்கையிலோ மனிதர்கள் அவரவர் செய்துள்ள நல்ல காரியங்களாலே காப்பாற்றப்படுகிறார்கள்.”

இதைக் கேட்ட மந்திரி ‘இது உண்மையோ, பொய்யோ? எதற்காக ஒரு குருவைக் கொல்லவேண்டும் இது பெரிய தவறு! என்று எண்ணமிட்டார். ஆகவே ஒருவருக்கும் தெரியாமல் சாரதாநந்தனரை மந்திரி தம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை ரகசிய அறையொன்றில் அடைத்து வைத்து அது விஷயம் யாருக்கும் தெரியாவண்ணம் மறைத்துவிட்டார்.

பிறகு மந்திரி திரும்பி மகாராஜாவின் சமூகத்திற்கு வந்து “நந்தமன்னரே தங்கள் உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டது!” என்றார்.

மாமன்னனும் “மிகவும் நல்லது” என்றான்.

சில நாட்களுக்குப் பிறகு, அரசகுமாரன் ஜெயபாலன் வேட்டைக்குப் புறப்படுவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தான். கிளம்பும் போது சகுனத் தடை ஏற்பட்டது.

காலமில்லாக் காலத்தில் மழை: பூமியதிர்ச்சி: புயற்காற்று: பாய்ந்து மறையும் எரிநக்ஷத்திரம்; இவை போன்ற கெடுதலை அறிவிக்கும் சம்பவங்களில் ஒன்று அப்போது நிகழ்ந்தது. அத்துடன் நண்பன் ஒருவனின் குரலும் அவனைத் தடுத்தது.

ஆகவே, மந்திரி பஹுசுருதனின் புத்திரனான புத்திசாகரன் சிந்தனையுடன் அரசகுமாரனை நோக்கிச் சொல்ல ஆரம்பித்தான். “ஜெயபாலா! இன்று வேட்டைக்குப் போக வேண்டாம். மிகவும் கடுமையான சகுனத்தடை ஏற்பட்டுள்ளது.”

அதற்கு ஜெயபாலன், “நண்ப கெட்ட சகுனத்தின் காரியத்தை அறிய வேண்டும்!” என்றான்.

“ராஜகுமாரா. கெட்ட சகுனமோ துர்க்குறியோ நேர்ந்து விட்டால், புத்திசாலி அதை ஒரு போதும் பரீட்சித்துப் பார்க்க முற்பட மாட்டான். புத்திசாலி, விஷத்தை அருந்த மாட்டான், பாம்புகளுடன் விளையாட மாட்டான். துறவிகளை நிந்திக்க மாட்டான்; அறிஞர்களை விரோதித்துக் கொள்ளமாட்டான்.

இவ்விதம் மந்திரிகுமாரன் சொல்லி அரசகுமாரனைத் தடுத்தான். ஆனால், அரசகுமாரனோ புத்திசாகரன் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வேட்டைக்குப் புறப்படுவதற்கு அவன் ஆயத்தமானான். மந்திரிகுமாரன் அவனை மறுபடியும் தடுத்து நிறுத்திச் சொல்லலானான்.

“ஜெயபாலா! உன்னுடைய அழிவுகாலம் வந்துவிட்டது. இல்லையேல் நீ இவ்விதம் என் வார்த்தைகளை மீறிக்கொண்டு கிளம்ப மாட்டாய்! பொன் மான் ஒரு போதும் உண்டாக்கப் பட்டதல்ல; அதைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதோ கண்டதோ கிடையாது. இருந்தும் சீதாதேவிக்காக அதைப்பிடிக்க ரகு புத்திரனான ராமபிரான் ஆசை கொண்டார். அழிவு காலம் நெருங்கும்போது புத்தி எதிர்மாறாகக் கிளம்பி விடுகிறது. இருந்தாலும் ஏற்கனவே இச்சம்பவங்களை நன்கு உணரும் போது அழிவு காலம் எப்படி வரும்? வேசிகளிடம் நிலைத்து நிற்கும் செல்வம், முட்டாள்களிடம் அறிவு, வினைப்பயன்களில் அழிவு ஆகியவை ஒருபோதும் கிடையாது என்பார்கள். இவற்றையெல்லாம் ஆலோசித்துப் பார்!” என்றான் புத்திசாகரன்.

அப்புறமும் அரசகுமாரன் அவன் வார்த்தைகளைக் கேட்காமல் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான். வேட்டையில் பல மிருகங்களைக் கொன்ற பிறகு புள்ளி மான் ஒன்றை இளவரசன் காண நேர்ந்தது. அதைப் பின்பற்றித் துரத்திச் சென்ற ஜெயபாலன் பெருங்காடு ஒன்றில் நுழைந்தான். சிறிது தூரம் சென்ற பிறகு அவன் திரும்பிப் பார்க்கையில் அவனுடன் வந்த பரிவாரங்கள் நகரை நோக்கிச் சாலையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அதே சமயம் அவனைக் கவர்ந்து இழுத்து வந்த புள்ளிமானும் மறைந்து விட்டது.

தன்னந்தனியாகக் குதிரை மீது அமர்ந்து கொண்டிருந்த அரசகுமாரன் எதிரில் அழகிய ஏரி ஒன்று இருப்பதைக் கண்டான். குதிரை மேலிருந்து அவன் கீழிறங்கி மரத்தின் கிளையிலே குதிரையைக் கட்டிவிட்டுத் தண்ணீரில் இறங்கிக் கை கால்களைக் கழுவிக் கொண்டு, இரண்டு வாய் தெளிந்த நீரை அள்ளிப் பருகினான். அதன் பின்னர் இளவரசன் ஓய்வு பெற விரும்பி கரையின் மீது இருந்த பெரிய மரத்தின் நடுவே உட்கார்ந்தான்.

அப்போது பயங்கரமாக உறுமிக் கொண்டு புலி ஒன்று அவ்விடத்திற்கு வந்தது. புலியைக் கண்ட குதிரை மிரண்டு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டமெடுத்தது. ஆனால் ராஜ குமாரனோ தப்பித்து ஓட முடியாமல் பயத்தால் நடுங்கியவனாய் மளமளவென மரத்தின் மீது ஏறினான். மரத்தின் மேலே கரடி ஒன்று உட்கார்ந்திருந்தது. கரடியைக் கண்டதும் இளவரசனின் பயம் அதிகரித்துவிட்டது. அவனால் மேலே போக முடியவில்லை. கீழேயும் இறங்க முடியவில்லை. இரண்டுங்கெட்டான் நிலையில் தவிக்கும் அவனைப் பார்த்து கரடி பின்வருமாறு சொல்லியது.

“அரசகுமாரா, பயப்படாதே! இன்று என்னிடம் அடைக்கல மென்று ஓடி வந்தாய். ஆகவே உனக்கு ஒரு கெடுதியும் செய்ய மாட்டேன். புலியைப் பற்றி பயப்படாதே என்னை நம்பு!”

“கரடி ராஜனே! நான் ஆபத்தின் பயத்தினால் உன்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளேன். கெஞ்சிக் கதறும் என்னைப் புலியிடமிருந்து காப்பாற்று. உனக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் பயத்தால் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காப்பாற்றுவதானது. தக்ஷிணைகளை வழங்கிச் செய்யப்பெறும் தர்மங்களனைத்தையும் விட மேலானது என்று சொல்லப்படுகிறதே!” என்றான் ராஜகுமாரன்.

“அரசகுமாரா, உனக்கு அபயம் அளித்தேன், பயத்தை விட்டுத் தைரியமாக இரு” என்றது கரடி.

புலி மரத்தடியை விட்டுப் போகவில்லை. அங்கேயே அது ராஜகுமாரனுக்காக காத்துக் கொண்டிருந்தது. சூரியன் மறைந்து இரவும் வந்தது. பசியாலும் தளர்ச்சியாலும் ஜெயபாலன் தூங்கி வழியத் தொடங்கினான், அதைப் பார்த்த கரடி, “அரசகுமாரா! தூக்கம் உன் கண்களைச் சுற்றுகிறது. பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கும் நீ தூக்கத்தில் தவறி விழுந்து புலிக்கு இரையாக நேரிடும். பயத்தை விட்டு என்னிடம் மேலே ஏறி வா. என் மடியில் படுத்துத் தூங்கலாம்!” என்று அழைத்தது.

ஜெயபாலனும் கரடி சொன்னபடியே மரத்தின் மேலே ஏறி அதன் மடியிலே தலையை வைத்துத் தூங்கத் தொடங்கினான். அப்போது புலியானது கரடியைப் பார்த்துக் கூறலாயிற்று: “நண்பா, நகரில் வசிக்கும் இவன் மீண்டும் நம்மை வேட்டையாடிக் கொன்றுவிட வந்து விடுவான். இவன் நம் எதிரி என்று தெரிந்தும் உன் மடியில் ஏன் படுக்க வைத்து அபயமளிக்கிறாய்? இவனோ நம் இனத்தைச் சேர்ந்தவனல்ல! மனிதன்! நான், புலி, குரங்கு, பாம்பு ஆகியவைகளுக்காக மட்டும் பேசவில்லை. மிருகங்களுடைய நன்மைக்காக ஏற்பட்டது மனிதர்களுடைய நன்மைக்கு உகந்தது ஆகாது” என்றது.

மேலும், “ஓ கரடியே! உன்னால் அந்த ராஜகுமாரன் காப்பாற்றப்பட்டாலும், அவன் உனக்கு கெடுதலைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டான். ஆகவே, அவனைக் கீழே தள்ளி விடு அவனை சாப்பிட்டு விட்டுத் திருப்தியுடன் போகிறேன், நீயும் உன் இருப்பிடத்திற்குப் போகலாம்!” என்று கூறியது.

“அவன் எப்பேர்பட்டவனாக இருந்தாலும் என்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறான். அவனைக் கீழே தள்ளமாட்டேன். அடைக்கலம் புகுந்தோரைக் கொல்வது பெரும் பாபம். எவனொருவன் நம்பிக்கைத் துரோகம் செய்கிறானோ அடைக்கலம் புகுந்தோரை அழிக்கிறானோ. அவன் உலகம் அழியும் வரை நரகத்தில் கிடந்து உழல வேண்டும் என்பார்கள். இந்த பாதகத்தை நான் செய்யமாட்டேன்! என்று சொல்லியது கரடி.

சிறிது நேரத்திற்கெல்லாம் அரசகுமாரன் விழித்து கொண்டான். கரடி அவனை நோக்கி, “அரசகுமாரா, நான் சிறிது நேரம் தூங்குகிறேன்” ஜாக்கிரதையாக கவனிக்கிறாயா?” என்று கேட்டது.

“அப்படியே பார்த்துக் கொள்கிறேன்” என்று அவன் சொல்லவே கரடியும் அவன் பக்கத்தில் படுத்துத் தூங்கியது. இந்தச் சமயத்தில் புலி அவனைக் கூப்பிட்டு, “ஓ ராஜகுமாரா, இந்தக் கரடியை நம்பாதே, இதன் கைகால்களில் கூரிய நகங்கள் இருக்கின்றன!” என்று சொல்ல ஆரம்பித்தது.

“ஆறுகள், நகங்கள், கொம்புகள் உடைய மிருகங்கள், ஆயுதங்களுடன் கூடிய மனிதர்கள், பெண்கள், அரசர்கள் ஆகியோர்களிடம் நம்பிக்கை வைக்கக் கூடாது!” என்பார்கள் பெரியோர்கள்.

“மேலும் கரடியோ, நிலையான புத்தி உடையது அல்ல. ஆகவே இதன் அன்பைக் கண்டும் பயப்பட வேண்டியதே!

”ஒரு கணம் மகிழ்ச்சி; அடுத்த கணம் கோபம்; வினாடிக்கு வினாடி வெறுப்பு; அடிக்கொருதரம் மறைக்கக் கூடிய புத்தியுள்ளவர்களின் அன்பு; இவை அபாயகரமானவை!

“இந்தக் கரடி உன்னை ஏன் காப்பாற்றியதென்றால் நான் போனதும் உன்னைச் சாப்பிட விரும்புகிறது. இதை உணராமல் இதன் பசப்பு வார்த்தைகளில் மயங்கி விட்டாய். கரடியைக் கீழே தள்ளிவிடு. அதைச் சாப்பிட்டு என் பசியை போக்கிக் கொள்கிறேன். நீயும் நிம்மதியாக நகரத்திற்குத் திரும்பலாம்!” என்று புலி சொல்லிற்று.

அந்தப் புலியின் வார்த்தைகள் ஜெயபாலனுக்கு உண்மையாகவே பட்டன. கரடியைக் கீழே தள்ளிவிட்டான் ராஜகுமாரன். ஆனால் கரடி கீழே விழவில்லை. நடு வழியிலே குறுக்கிட்ட கிளை ஒன்றைப் பிடித்து மேலே ஏறிவிட்டது. அதைக் கண்ட ராஜகுமாரன் நடுங்கிப் போய்விட்டான்.

“ஏ நன்றி கெட்ட கீழ்மகனே! ஏன் பயப்படுகிறாய்? உன் உயிருக்கு ஆபத்து வராது. நீ செய்த காரியத்தின் பலனை நன்றாக அறியவேண்டும். ஆகவே உன் புத்தி சுவாதீனத்தை இழந்து பைத்தியம் பிடித்தவனாய் திரும்பத் திரும்ப “ஸஸேமிரா” என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இந்தக் காட்டிலே அலைந்து கொண்டிருக்கப் போகிறாய்! என்று அவனைப் பார்த்துச் சொல்லி யது கரடி.

மெல்லப் பொழுது விடிந்தது. யாராவது வந்துவிடப் போகிறார்களே என்ற எண்ணத்தில் புலி ஓடிப் போய்விட்டது. கரடியும் அரசகுமாரனைச் சபித்துவிட்டுத் தன் இருப்பிடத்திற்குப் போய்விட்டது. அரசகுமாரனும் புத்தி தடுமாறியவனாக “ஸஸேமிரா” என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே காட்டில் திரியத் தொடங்கினான்.

அரசகுமாரனுடைய குதிரை மட்டும் தனியாக நகரத்திற்கு வந்து சேர்ந்தது. ராஜகுமாரனைச் சுமந்து வராமல் அது தனியே வருவதைக் கண்டு குடிஜனங்கள் ராஜாதி ராஜனிடம் ஓடிச்சென்று முறையிட்டார்கள். நந்தமன்னன் உடனே மந்திரி பஹுசுருதனை வரவழைத்து “மந்திரி, என் குமாரன் வேட்டைக்குக் கிளம்பும்போது கெட்ட சகுனங்கள் தோன்றின. இருந்தும் அவைகளை லட்சியம் செய்யாமல் அவன் புறப்பட்டுப் போனான். இப்போது அவன் ஏறிச் சென்ற குதிரை மட்டும் தனியாக வந்திருக்கிறது. அவனைக் காணவில்லை. அவனுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் நாம் உடனே காட்டிற்குச் சென்று அவனைத் தேட வேண்டும்” என்றான்.

அவ்விதமே மன்னனும் மந்திரியும் காட்டிற்குச் சென்று தேடினார்கள். அங்கு புத்தி மாறியவனாய் ஜெயபாலன் “ஸஸேமிரா” என்ற வார்த்தைகளைக் கூறிக்கொண்டு திரிவதைக் கண்டு அவனை அழைத்து வந்தனர். மைந்தனின் நிலையைக் கண்ட நந்தமன்னன் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கினான். மணிமந்திர ஔஷதங்களில் வல்லவர்கள் வரவழைக்கப்பட்டனர். எவ்வளவுதான் முயன்றும் அவர்களுக்கு அரசகுமாரனின் நோய் மூலத்தைக் கூட கண்டு பிடிக்கவே முடியவில்லை.

இந்தச் சமயம், தன் மந்திரியை நோக்கிச் சொல்லலானான்.

“ராஜகுரு சாரதாநந்தனர் இங்கிருந்தாரானால் என் மைந்தனை ஒரு நொடிப் பொழுதில் அவர் தெளிய வைப்பாரே. ஆனால் அவரைத்தான் நான் சரியாக விசாரியாமல் ஒரு காரணமும் இல்லாமல் மரண தண்டனைக்கு ஆளாக்கி விட்டேனே; ஒருவன் எந்தக் காரியத்தையும் செய்யும் முன்பாகத் தீர ஆலோசிக்க வேண்டும். அவ்விதம் செய்யவில்லையென்றால் அதுவே கெட்ட காலத்திற்கு ஒரு காரணம்.

அவசரப்பட்டு எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது; கெடுதலை உடையதாயிருக்கும் தீர்ப்புகளே கெட்ட காலத்துக்கு முக்கிய காரணம். நல்ல குணங்களை விரும்பும் அதிர்ஷ்டதேவதை (திரு அல்லது லக்ஷ்மி) தீர ஆலோசிப்பவனையே தேர்ந்தெடுக் கிறாள். ஒருவன் தீர ஆலோசிக்காமல் எதையும் செய்யக்கூடாது நன்றாக ஆலோசித்து முடிவு செய்யப்பட்டவைகளையே செய்யவேண்டும். இல்லையேல் வியாகூலம் ஏற்படும். பிராமணப் பெண்ணும் கீரிப்பிள்ளையும் கதை எல்லோரும் அறிந்ததே!

இருந்தாலும் என்னைத் தடுக்கக்கூடியவன் எவனும் அப்போது இல்லை என்று வருத்தத்தோடு சொன்னான் நந்தமன்னன். அவனை மைந்தனின் நிலை பெரிதும் வாட்டியது.

இதற்கு மந்திரி பஹுசுருதன் பின்வருமாறு பதில் சொன்னார். “அப்போது நடக்க வேண்டியதே நடந்திருக்கிறது. அவரவர் விதிப்படியே அவரவர் புத்தியும் மாறுகிறது. ஒருவனுடைய புத்தி, காரியம், எண்ணம், நண்பர்கள் ஆகிய இந்நான்கும் விதிப்படியே மாறுகிறது. எது நடக்கக் கூடாததோ அது நடக்காது. எது நடக்க வேண்டுமென்றிருக்கிறதோ அது நடந்தே தீரும். எவ்வித முயற்சியும் செய்யாவிட்டாலும்கூட, அவை நடந்துவிடும். அவனுக்கு இல்லை என்று விதிக்கப் பட்டிருக்கும்போது, அவனுடைய உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டிருக்கும் போது கூட அவனுக்குக் கிடைக்காமல் போய்விடும்!”

இதைக் கேட்ட அரசன், “இது முன் வினைகளின் பலனே! எனினும், இப்போது என் குமாரனின் பைத்தியம் தீர்க்க நான் பெரும்முயற்சி எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்!” என்றான்.

“எவ்விதத்தில்?” என்று கேட்டான் மந்திரி பஹுசுருதன்.

“என் மைந்தனைச் சொஸ்தப்படுத்துபவர்களுக்கு என் ராஜ்ஜியத்தில் பாதி கொடுப்பதாக அறிவிக்கப் போகிறேன்!” என்றான் மகாராஜன்.

மந்திரி வீடு திரும்பியதும் குரு சாரதாநந்தனிடம் சென்று நடந்ததை தெரிவித்தார். அதைக் கேட்ட ராஜகுரு, “மந்திரி! தாங்கள் அரசரிடம் சென்று, “என் வீட்டில் யௌவனத்தோடு கூடிய இளம்பெண் ஒருத்தி இருக்கிறாள். அரசகுமாரனை அவள் நேரில் பார்க்க ஏற்பாடு செய்தால் அவள் ஏதாவது ஒரு வழி சொல்லக்கூடும்” என்று தெரிவியுங்கள்!” என்றார்.

மந்திரியும் அதே போல நந்த மன்னனிடம் சென்று சொன்னார். அரசனும் தன் குமாரனை அழைத்துக் கொண்டு பிரதானிகளுடன் மந்திரியின் வீட்டுக்கு வந்தான். அரசகுமாரன் ”ஸஸேமிரா!” என்று சொல்லிக் கொண்டே உட்கார்ந்திருந்தான். திரை ஒன்றன் பின்னால் மறைந்திருந்த சாரதாநந்தனர், ”ஸ, ஸே, மி, ரா” என்று ஒவ்வொரு எழுத்தும் தொடங்கும் நான்கு சுலோகங்களைச் சொன்னார். “ஸ” என்று ஆரம்பிக்கும் முதல் சுலோகம் பின் வருமாறு பொருளைக் கொண்டது.

“ஸத் குணங்களை நம்பிக் கொண்டிருக்கும் மனிதனை ஏமாற்றுவதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது? மார்பில் படுத்துத் தூங்கும் ஒருவனைக் குத்திக் கொல்வதில் என்ன வீரம் இருக்கிறது?

இந்த முதல் சுலோகத்தைக் கேட்ட அரசகுமாரன் ”ஸு” என்று சொல்லுவதை விட்டுவிட்டான்.

அடுத்தபடியாக சாரதாநந்தனர் ”ஸே” என்ற எழுத்துடன் தொடங்கும் சுலோகத்தைச் சொன்னார். அதன் உட்பொருள் பின் வருமாறு உள்ளதாகும்:

“கங்கை சமுத்திரத்தில் கலக்குமிடத்தில் சங்கமத்தை அடைந்தால் பிரம்மஹத்தி தோஷம் போய்விடுகிறது. ஆனால் நண்பனுக்குத் துரோகம் செய்பவனுடைய பாவம் ஒரு போதும் விலகுவதில்லை.

“எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு”

இரண்டாவது சுலோகத்தைக் கேட்ட அரசகுமாரன் “ஸே என்ற வார்த்தையை விட்டுவிட்டான்.

மூன்றாவதான “மி” என்ற எழுத்துடன் தொடங்கும் ஒரு சுலோகத்தைக் குரு சொன்னார்:

“மித்திரத் துரோகி, நன்றியில்லாத மனிதன் நம்பிக்கைத் துரோகம் செய்பவன் இந்த மூவரும் சூரிய சந்திரர் உள்ளவரைக்கும் நரகத்திலே கிடந்து உழலுவார்கள்.

இதைக் கேட்ட பிறகு அரசகுமாரன் மூன்றாம் எழுத்தான ‘மி என்பதையும் விட்டு, ‘ரா’ என்ற எழுத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியாக, “ரா” என்ற எழுத்துடன் தொடங்கும் சுலோகத்தை ஆரம்பித்தார் குரு சாரதாநந்தனர்.

“ராஜனே! உன் மகன் க்ஷேமத்தை நீ விரும்புகிறாயானால் அறிஞர்களுக்கு நிறையப் பரிசைக் கொடு. அவர்களே உயர்ந்தவர்கள்!”

இதைச் சொல்லி முடித்ததும் அரசகுமாரன் தன் பழைய நிலையை அடைந்து விட்டான். தந்தையிடம் காட்டில் நடந்தவற்றை விவரமாகத் தெரிவித்தான். அதைக் கேட்ட நந்தமன்னன் நன்றியுணர்வுடன் திரையை நோக்கி அதன் மறைவிலிருந்த சாரதாநந்தனரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினான். அப்போதும் திரைக்குப் பின்னாலிருப்பது ஒரு பெண் என்றுதான் மன்னவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

“ஏ, அழகிய பெண்ணே! நீயோ நகரத்தில் வசிப்பவள். காட்டிற்குப் போனதில்லை. காட்டிலே கரடி, புலி, மனிதன் இம்மூவருக்குமிடையே நிகழ்ந்த சம்பவத்தை எவ்விதம் உன்னால் அறிய முடிந்தது?” என்று நந்த மன்னன் கேட்டான்.

திரைக்குப் பின்னாலிருந்த சாரதாநந்தனர் சிரித்துக் கொண்டே ”தேவர்களின் ஆசிரியர் பிரகஸ்பதியின் அருளால் சாரதா தேவி என் நாவில் தங்கியிருக்கிறாள். அவள் அருளினால் பானுமதியின் மச்சத்தை நான் ஞான திருஷ்டியின் மூலம் அறிந்தது போலவே இதையும் நான் அறிந்தேன்!” என்று சொன்னார்.

அவர் வார்த்தைகளைக் கேட்ட நந்த மன்னன், திகைத்துப் போய்விட்டான்; சட்டென்று திரைச் சீலையைப் பிடித்து இழுத்தான். அங்கு உட்கார்ந்திருந்த சாரதாநந்தனரை நேருக்கு நேர் அவன் கண்டான். உடனே மன்னவனும் மற்றவர்களும் குருவின் காலில் விழுந்து வணங்கினார்கள். மந்திரி பஹுசுருதன் அவர்களுக்கு முன்பு நடந்த கதையைத் தெரிவித்தார். நந்த மன்னன் அவரைப் பார்த்து பின்வருமாறு சொன்னான்:

மந்திரி உன்னுடைய தொடர்பினால் நான் பெருங் கேட்டிலி ருந்து தப்பினேன். இதனால் ஒருவர் நல்லவர்களிடமே நட்புக் கொள்ள வேண்டும் என்று தெரிகிறது. அதன் மூலம் அவன் நல்ல பலன்களை அடைவான்.

கங்கை ஜலத்தை அருந்துவதன் மூலம் ஒருவன் தாகத்தையும், தான் செய்த பாவங்களையும் அவற்றின் மூலம் நேரக்கூடிய கேடுகளையும் தீர்த்துக் கொள்ளுகிறான். அதுபோல நல்லவர்களுடன் நட்புக் கொண்டுள்ளவன் தன்னுடைய கஷ்டங்களையும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் நிவர்த்தித்துக் கொள்ளுகிறான்.

“மேலும் உன் மூலமே என்னுடைய குமாரனும் பெரும் ஆபத்திலிருந்து மீள முடிந்தது. உன்னைப் போன்ற உயர் குடும்பத்தில் பிறந்தவனாகவும் புத்திசாலியாகவுமுள்ளவனையே அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.

ஓர் அரசன் கீழத்தரமான குடும்பத்தில் பிறந்தவனை அடையாதிருந்தால் அவன் எறும்புப் புற்றிலிருக்கும் பாம்பைப் பிடிக்கும் சாமர்த்தியமான பாம்பாட்டிக்குச் சமானமானவனே என்று சொல்லப்படுவதுண்டு” இவ்விதம் நந்த மன்னன் தன் மந்திரி பஹுசுருதனைப் பலவாறு புகழ்ந்து அநேக பரிசுகளைக் கொடுத்து கௌரவித்தான்.

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *