நிழலின் அருமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 865 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அக்கா!’’

“என்னடா, முத்து?”

பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டது. நான் போகட்டுமா?”

“இன்றைக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாகப் போகிறாய்?”

“எங்கள் பள்ளியைப் பார்வையிட அடுத்த ஊரிலிருக்கும் பெரிய மனிதர் மணிவாசகர் இன்று வருகிறார். அதனால் சீக்கிரமாக வரச் சொன்னார்கள். அவர் எங்களை ஏதாவது கேள்விகள் கேட்டாலும் கேட்பாராம். நன்றாகப் படித்துக்கொண்டு வேறு வரச் சொன்னார்கள்.”

“நீதான் சமர்த்தனாயிற்றே! உள்ளே சாப்பாடு கட்டி வைத்திருக்கிறேன். எடுத்துக்கொண்டு சாலை ஓரமாகப் போ!”

முத்து சாப்பாட்டு மூட்டையைக் கையில் எடுத் துக்கொண்டு, புத்தகப் பையைத் தோளில் தொங்க விட்டுக்கொண்டு நடந்தான். அக்காள் செந்தாமரை குடிசைக்கு வெளியே நின்றவாறு, தம்பி பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முத்து தந்தை தாயற்றவன்; பன்னிரண்டு வயதுப் பையன்; பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான்.

செந்தாமரை தன் தாயின் வார்த்தையை மறக் காமல், முத்துவை அன்போடு, கண்ணிலும் மேலாகக் கருதி வளர்த்து வந்தாள். செந்தாமரையின் தாய் இறக்கும்போது, ஒரு சிறு குடிசையையும், அதற்கு எதிரேயிருக்கும் ஒரு புளியமரத்தையும் சொத்தாக வைத்துவிட்டுச் சென்றாள். புளிய மரத்தில் வருடத் திற்கு ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு காலம் தள்ள முடியுமா? அதனால், செந்தாமரை அக்கம் பக்கத்தில் வேலை செய்து, சிறிது பணம் சம்பாதித்தாள். தன் தம்பி சந்தோஷமாக, திருப்தியாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஆசை தான். செந்தாமரைக்கு!

முத்து நல்லவன் தான். ஆனால், பணக்கார மாண வர்களைப் பார்த்துப் பார்த்து அவன் ஏங்குவான். அவர்கள் விலையுயர்ந்த உடைகளை அணிந்து கொண்டு மோட்டாரில் வந்து இறங்குவார்கள். முத்துவும் அவர்களைப் போல இருக்க ஆசைப்பட்டான். அதனால் அக்காள் படும் கஷ்டங்களை அறிந்தும், ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று தொந்தரவு செய்து வந்தான். அக்காளுக்குத் தம்பி கேட்பதையெல்லாம் வாங்கித் தர ஆசைதான். ஆனால், அவள் நிலைமை அதற்கு இடங் கொடுக்க வில்லையே!

மணிவாசகர் பாடசாலையின் எல்லா வகுப்புக் களையும் பார்த்துவிட்டுத் தலைமையாசிரியரின் அறையில் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

“ஏன் ஸார், அந்தப் பையன் பெயர் என்ன வென்று சொன்னீர்கள்?”

“முத்து, அவன்தான் அந்த வகுப்பிலே முதல் மார்க் வாங்குபவன். வகுப்பில் மட்டுமல்ல; இந்தப் பள்ளிக்கூடத்திலேயே அவன்தான் அதிக மார்க் வாங்கும் பையன். ஆனால் பாவம், ஏழை!” என்றார் தலைமையாசிரியர்.

“அப்படியா! பையன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறான். அந்தப் பையனைக் கொஞ்சம் என்னுடன் அனுப்புங்களேன். மாலை காரிலேயே அனுப்பிவிடுகிறேன்.” என்றார் மணிவாசகர்.

காரிலே போக சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே! முத்து விடுவானா? “ஓ! வருகிறேன்” என்று கூறி, காரில் ஏறினான். கார் மணிவாசகரின் வீட்டை நோக்கிச் சென்றது.

***

மணிவாசகர் ஒரு பெரிய பணக்காரர். ஆனால், எவ்வளவு பணமிருந்தும் என்ன பயன்? அவருக்குப் பிள்ளையே கிடையாது! அதற்காக எத்தனையோ கோவில் குளங்களுக்குப் போய் வந்தார்கள், அவரும் அவர் மனைவியும். பாவம்! பலன் ஒன்றுமில்லை. கடைசி யாக, ஒரு நல்ல பையனை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள்.

கார் மாளிகையுள் நுழைந்தது. மணிவாசகர், முத்துவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். முத்து மாளிகையின் அழகை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே சென்றான். ‘அடடா! இந்தப் பணக்காரரின் வயிற்றில் நாம் பிறந்திருக்கக் கூடாதா!’ என்று எண்ணி ஏங்கியது, அவனது இளம் உள்ளம்.

மணிவாசகரின் மனைவி மரகதம் முத்துவைப் பார்த்தாள். அவளுக்கு அவனைப் பிடித்துவிட்டது.

மணிவாசகர், “தம்பி, நான் உன்னை ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ளப் போகிறேன்” என்று முத்துவிடம் கூறினார். முத்துவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கனவா, நினைவா என்பதே புரியாமல் திகைத்தான்.

“முத்து! உனக்கு ஓர் அக்காள் இருப்பதாகச் சொன்னாயே, அவள் உன்னை அனுப்புவாளா? அவள் தட்டிப் பேச மாட்டாளே!” என்று கேட்டார் மணிவாசகர்.

அக்காவின் அன்பு அவள் அவனிடம் காட்டும் அக்கறை, அவனுக்காகப் படும்பாடு-இவ்வளவையும் நன்கு அறிந்திருந்தான் முத்து. ஆனால், அவன் ஆசைக்கு அடிமையானவன்; படாடோப வாழ்வில் பாசத்தைப் பறக்க விட்டவன். எனவே கொஞ்சம்கூட யோசிக்காமல், அவள் அவனுக்காகவே வாழ்வதை மறந்து, “அக்காள் எதுவும் சொல்ல மாட்டாள்” என்று கூறிவிட்டான்.

மணிவாசகர், “சரி, அப்படியென்றால் நீ வீட்டுக் குப்போய் உன் அக்காளிடம் விஷயத்தைச் சொல்லு, நான் நாளைக் காலையில் வந்து அழைத்துக் கொள்கிறேன்” என்றார்.

***

சூரியன் மறைந்து விட்டான். மெல்ல இருள் வர ஆரம்பித்தது. செந்தாமரை குடிசையின் வெளியே கால்வலிக்க நின்றுகொண்டிருந்தாள். ‘வழக்கமாகச் சூரியன் மறையும் முன்பே வந்து விடுவானே, முத்து! இன்று இன்னும் வரவில்லையே!’ என்று அக்காள். கவலையோடு காத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

செந்தாமரைக்கு நின்று நின்று கால்கள் மரத்துப் போய்விட்டன. அவள் மனம் ஒரு நிலையில் இல்லை. தம்பியைத் தேடிக்கொண்டு பள்ளிக்கே போய் விடலாமா என்று நினைத்தாள். அதே சமயம், அவள் வீட்டின் முன் பளபளக்கும் ‘பாண்டியாக்’ கார் ஒன்று வந்து நின்றது.

முத்து அதிலிருந்து பெரிய பணக்காரப் பையனைப் போல் இறங்கினான். டிரைவரிடம், “நாளைக் காலையில் வரச்சொல். நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினான்.

கார் திரும்பிப் போயிற்று.

“அக்கா! எனக்கு அதிர்ஷ்டம் பிறந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; உனக்கும் கூடத்தான். வா உள்ளே! செய்தியை விவரமாகக் கூறுகிறேன்’ என்றபடி குடிசைக்குள் நுழைந்தான் முத்து. செந்தாமரை அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.

முத்து செந்தாமரையிடம் மணிவாசகர் கூறியவற்றைக் கூறினான். “என்னால் உனக்கும் தொல்லை தானே! நான் பணக்காரர் வீட்டில், மகிழ்ச்சியோ டிருப்பேன். உனக்குச் சம்மதம்தானே?” என்றும் கேட்டான்.

“முத்து, உன்னை நான் ஒரு தொல்லையாகவா நினைத்தேன்? நீ என் கூடப்பிறந்த தம்பி. உன்னைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையல்லவா? என்னைவிட்டு விட்டு நீ சீமான் வீட்டுக்குப் போகிறேன் என்கிறாயே. தம்பி! நன்றாக யோசித்துப் பார். கூழானாலும், கஞ்சியானாலும் அன்போடு உன் அக்காள் தருகிறாள். இந்த அன்பையும் பாசத்தையும் நீ அந்நியரிடம் எதிர்பார்க்க முடியுமா?” செந்தாமரை இப்படிப் பேசவில்லை; அவள் மனம் பேசியது.

செந்தாமரையின் பாசத்தைவிட, செல்வந்தர் வீட்டு வாழ்க்கையே மேலானது என்று நினைத்தான் முத்து. மணிவாசகரைப் பற்றிப்பேசினான்; அவரது மாளிகையைப் பற்றிப் பேசினான்; அங்குள்ள மதிப்புள்ள பண்டங்களைப் பற்றியும் பேசினான்; ஆனால் அக்காளின் அன்பைப்பற்றி ஒரு வார்த்தை-அவளைப் பிரிவதற்காக வருந்துவதாக ஒரு சொல்-சொல்லவே யில்லை.

செந்தாமரையின் உள்ளம் வேதனைப்பட்டது. அவள் கண்களை மூடிக்கொண்டாள். காதைப் பொத்திக் கொண்டாள்.

முத்து முடிவிலே, “அக்கா! நாளை மணிவாசகர் வருவார். என்னை அனுப்ப உனக்குச் சம்மதம் என்று கூறு. கூறுவாயா அக்கா?” என்று கேட்டான். செந்தாமரைக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யோசித்தாள். கடைசியில், “சரி, தம்பி இஷ்டம் போலவே போகட்டும்” என்று முடிவு செய்தாள். உடனே, “ஆகட்டுமடா! தம்பி. அப்படியே செய்கிறேன்” என்று அன்போடு கூறினாள். அவள் குரலில் வருத்தமும் கலந்திருந்தது!

***

மறு நாள் மணிவாசகருடன் காரில் ஏறிக் கொண்ட முத்து, “போய் வருகிறேன், அக்கா” என்று கூறினான். செந்தாமரை கலங்கிய கண்களுடன் விடை கொடுத்தாள்.

முத்து உல்லாசமாக நாட்களைக கழித்தான். முப்பது நாட்கள் சென்றன. ஒருநாள்கூட அருமை அக்காளைப் போய்ப்பார்க்கவில்லை. அவளிருக்கிறாளா, இறந்து விட்டாளா என்பதைப் பற்றிக்கூட அவன் கவலைப்படவில்லை.

முத்துவை மணிவாசகர் சட்டப்படி இன்னும் ஸ்வீகாரம் செய்து கொள்ளவில்லை. ஒரு மாதத்தில் முத்துவின் நடத்தை திருப்தி அளித்தது. அடுத்த வாரத்தில் சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்ள எண்ணினார். அதற்குள் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

ஒரு நாள் மாடிப்படிகளில் குதித்துக் குதித்து ஏறிக்கொண்டிருந்தான் முத்து. அப்போது அவனுடைய கால் இடறிவிட்டது. தடுமாறிக் கீழே ‘மடார்’ என்று விழுந்தான். உடனே மணிவாசகரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர். நடந்ததை அறிந்தனர். உடனே, முத்துவைத் தூக்கினர். அவன் வலது காலிலே நல்ல அடிபட்டிருந்தது. வைத்தியர் வந்தார்; சிகிச்சை செய்தார். இரண்டு வாரத்திற்குப் பிறகு குணமானது. ஆனால், முத்து பழைய முத்துவாக இல்லை. அவனது வலது கால் ஊனமாகி விட்டது! இனி நொண்டி நொண்டித்தான் நடக்க முடியும்! வேகமாக நடக்க முடியாது!

நொண்டியாகிவிட்ட அவனை ஸ்வீகாரமெடுத்துக் கொள்ள மணிவாசகரின் மனைவி விரும்பவில்லை. மணிவாசகருக்கும் ஒரு நொண்டியைப் பிள்ளையாக வைத்துக் கொள்ள மனமில்லை.

நொண்டியானபின், அந்த வீட்டில் எல்லோரும் அவனை அலட்சியம் செய்தனர். ஒரு நாள் மணிவாசகரின் தம்பியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இவ்வளவு நாளும் சம்மதிக்காமலிருந்த அவர், இப்போது தம்முடைய புதல்வர்களில் ஒருவனை ஸ்வீகாரம் செய்து தருவதாக எழுதியிருந்தார். அதைப் படித்ததும் மணிவாசகர் முத்துவை அழைத்து அவனிடம் நூறு ரூபாய் கொடுத்தார்.

“முத்து, நீ உன் அக்காளிடமே போய்விடு. அவள்தான் உன்னை நன்கு பாதுகாப்பாள்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, டிரைவரிடம், “டிரைவர், முத்துவை அழைத்துக்கொண்டு போய் அவன் வீட்டில் சேர்த்துவிடு” என்று உத்தரவு போட்டார். முத்துவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனே அவன் தலை சுற்றியது. ஆயினும், என்ன செய்வது? பேசாமல் காரிலே ஏறிக் கொண்டான். கார் கிளம் பியது. வீட்டிற்குச் சிறிது தூரத்திலேயே முத்து காரை நிறுத்தச் சொன்னான். கார் நின்றது. முத்து அங்கேயே இறங்கிக் கொண்டு காரை அனுப்பி விட்டான்.

காரிலிருந்து இறங்கிய முத்து நொண்டி, நொண்டித் தன் வீட்டை நோக்கி நடந்தான். மணி வாசகரின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்ததிலிருந்து அன்றுவரை நடந்த சம்பவங்களை அவன் நினைத்துப் பார்த்தான். “கால் ஊனமானதும் என்னை விரட்டி விட்டார் மணிவாசகர். அக்காள் . முகத்தில் நான் எப்படி விழிப்பேன்! அன்பை அலட்சியப்படுத்தி விட்டு ஆடம்பரத்தில் பிரியப்பட்டுச் சென்றேன் நான். எனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்” என்று கூறிக்கொண்டான் முத்து.

அப்போது நல்ல வெய்யில்! அவனால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. என்றாலும் தத்தித் தத்தி வீட் டிற்கு வந்தான்.

தூங்கிக்கொண்டிருந்த செந்தாமரை வேலைக்குச் செல்வதற்காக எழுந்து அப்போதுதான் வெளியே வந்தாள். ‘அக்கா!’ என்ற தழுதழுத்த குரலைக் கேட்டுத் திகைத்தாள்; திரும்பிப் பார்த்தாள்.

அவள் கண்ணை யே நம்ப முடியவில்லை! கண்ணீர் வடிய நின்ற முத்துவைக் கண்டதும், அவள் அவனருகே ஓடினாள். அன்போடு கட்டி அணைத்துக் கொண்டாள் அவள். கால் நொண்டியாய் இருப்பதைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். “தம்பி, உன் கால் எப்படியடா நொண்டியானது?” என்று கேட்டாள். முத்து அழுதுகொண்டே நடந்ததைச் சொன்னான்.

பிறகு, “அக்கா, இதோ அவர் தந்த நூறு ரூபாய்! நான் இப்போது நொண்டி! என்னை ஏற்று ஆதரிப்பாயா?” என்று கேட்டான்.

செந்தாமரை, “முத்து, நொண்டியானாலும் குருடானாலும், நீ என் தம்பி. தங்கத் தம்பி! என் உயிர் த் தம்பி! உன்னை நான் கைவிடுவேனா? அந்த நூறு ரூபாய் யாருக்கு வேண்டும்? நாளை அதை மணி வாசகர் முகத்தில் வீசி எறிந்து விட்டு வருகிறேன்” என்றாள்.

அக்காவின் அன்பு மொழிகள் வெய்யிலில் வந்த அவனது  மனக் கவலையையும் களைப்பையும் போக்கின. அன்பாகிற நிழலின் அருமையை அப் போதுதான் முத்துவால் உணர முடிந்தது?.

– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.

முனைவர் பூவண்ணன் பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *