நிலாவில் பதிந்த பாதங்கள்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 4,774
ஃபுட் கோர்ட்டில் இருந்த கடிகாரம் இரவு 7:14 என்று காட்டியது.
“ரொம்ப களைப்பா இருக்காடா, செல்லம்?”
நான் என் மகன் அர்ஜுனிடம் கேட்டேன்.
“ஆமா, அப்பா ”
“இன்னும் ஒரே ஒரு கண்காட்சி. அத மட்டும் பார்த்திட்டு வீட்டுக்கு போயிடலாம்.”
நான் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விண்வெளி அருங்காட்சியகத்தின் மையத்தை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த சந்திர மண்டலத்து தூசியால் சூழப்பட்ட ஒரு ஜோடி அசல் கால்தடங்களைப் பார்ப்பதற்க்கு கூட்டம் அலை மோதியது.
அருகில் செல்வதற்கு பத்து நிமிடங்கள் ஆனது.
“இது யாருடைய கால்தடங்கள்?”
அர்ஜுன் ஆர்வத்துடன் கேட்டான்.
“நீல் ஆம்ஸ்ட்ராங்.” என்றேன்.
“அவர் கால் பதிந்தது ரொம்ப வருஷத்துக்கு முன்பா?”
“ஆமாம், நானூறு ஆண்டுகளுக்கு முன்பு.”
“அவர் எங்கிருந்து வந்தார்?”
நான் அவனை அருகில் இருந்த ஜன்னலுக்கு அழைத்துச் சென்று வானத்தில் உள்ள அழகான, நீல நிற, பளிங்கு பூமியைக் காட்டினேன்.