கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 1,179 
 
 

தண்ணீரின் மேல்பரப்பு சலசலத்தது. ஏதோ ஓர் உயிர் ஆபத்தில் சிக்கித் தவிக்கிறது என்பதை குளக்கரையில் இருந்த தவளை உணர்ந்தது.

‘சொயிங்…சொர்க்’- பின்னங்கால்களை நீட்டி எழுந்து ஒரே தாவு தாவித் தண்ணீரில் குதித்தது தவளை.

செம்மண் நிறத்தில் இருந்த தண்ணீருக்குள் எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. ஆனாலும், தவளையின் காதுகளில் அழுகைச் சத்தம், துல்லியமாக கேட்டது.

“ஹ்ஹூம்… ஹ்ஹூம். என் அம்மா எங்கே? அவங்க எப்படி இருப்பாங்க?’’

ஒரு கானாங்கெளுத்தி மீன் குஞ்சு தண்ணீருக்குள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தது. பாவம்! அம்மாவை இழந்த வருத்தம்.

அந்த நகரில் நான்கு நாட்களாக அடைமழை பெய்து நின்றுபோனது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்து, ஊர்க் குளங்கள் நிரம்பிப் போயின. நகராட்சி ஊழியர்கள் மதகைத் திறந்துவிட்டார்கள். அதில், வேறு பல மீன்களுடன் அம்மா மீனும் தண்ணீரில் அடித்துச் சென்றிருக்க வேண்டும்.

குடும்பத்தினரைப் பறிகொடுத்த குஞ்சுமீன், பசி தாங்கமுடியாமல் அழுதது. செம்மண் கலந்த தண்ணீரில் ஒரு புழு, பூச்சியைக்கூட காணமுடியவில்லை.

“ஐயோ! வயிறு குடுகுடுங்குது. பசி தாங்கமுடியலையே” – குஞ்சுமீன் அழுகையை நிறுத்தியபாடில்லை.

தவளை உதவிக்கரம் நீட்டியது. “அழாதே சின்ன மீனே, என்னோடு வா. எதிர்பக்கக் கரைக்குப் போகலாம். அங்கே ஒரு வாத்து இருக்குது. குளக்கரைக்குப் பக்கத்தில் கிடைக்கும் விதைகளையும் தானியங்களையும் சேகரிச்சு, உன்னைப் போன்ற சின்னச் சின்ன குளத்து உயிர்களுக்கு கொடுத்து உதவும்” என்றது.

ஆச்்சர்யத்துடன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே குஞ்சுமீன் தண்ணீரில் மூழ்கியது. “என்… னைய…குளத்துக்குள்ளே யாரோ இழுக்குறாங்க’’ என வாயை மூடித் திறந்து மூச்சு வாங்க முயற்சித்தது.

“யாருமில்லை. புதுசா தண்ணீர் நிரம்பிய குளத்தில் நீரோட்டம் அதிகமா இருக்கும். நீ பயப்படாதே. இருக்கும் இடத்திலேயே உன்னோட வாலை அசைச்சுக் கொடு. தண்ணீரின் ஓட்டத்துக்கு எதிராக நீந்திப் பழகிடலாம்” என்றது தவளை.

குஞ்சுமீன் முயற்சி செய்து தோற்றுப்போனது. திடீரென்று தவளைக்கு ஒரு யோசனை.

“சின்ன மீனே! வாலை அசைக்கிறதோடு முதுகுக்கு மேல இருக்கும் துடுப்பையும் ஆட்டணும். புரிஞ்சதா? இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். அப்போ, ஒரு படகு குளத்துத் தண்ணியில் வரும். நாம ரெண்டு பேரும் அந்தப் படகில ஏறி, எதிர்க் கரைக்குப் போயிடுவோம். சரிதானே!” என்றது தவளை.

மாலை நேரம். குளத்துப் பகுதியை கறுத்த இருள் சூழ்ந்தது. வானத்தில் உலாவந்த பிறை நிலாவின் பிம்பம், குளத்தில் தெரிந்தது. குஞ்சுமீனுக்கு ஒரே ஆச்சர்யம். படகு வந்துவிட்டதே என சந்தோஷம் அடைந்தது.

“சின்ன மீனே, வா… வா… இந்தப் படகில் ஏறிக்கோ” என்று தவளை சொன்ன மறுநொடியே, நிலாப் படகில் தாவிக் குதித்தது.

நீரின் மேற்பரப்பில் உருவான அலைகள், நிலாப் படகை மேலும் கீழும் ஏற்றி இறக்கியதைப் பார்த்த குஞ்சுமீன் பயந்துபோனது.

“சின்ன மீனே, படகு கவிழாது. ஆனால், படகில் ஏறிட்டோமேனு வாலை அசைக்கிறதை நிறுத்திறாதே’’ என்றது தவளை.

பிறகு, தவளை தனது நீளமான கால்களை நீட்டி மடக்கி நிலாப் படகைத் தள்ளிவிட்டது. பால் நிறப் படகு குளத்துத் தண்ணீரில் மெள்ள மெள்ள நகர்ந்து சென்றது. அதிகக் களைப்புடன் இருந்த குஞ்சுமீனுக்கு உறக்கம் வந்தது.

“தூங்கிடாதே சின்ன மீனே, நமக்காக இந்தப் படகு காத்திருக்காது. இதைத் தவறவிட்டால் வேறு படகு வராது.’’

குஞ்சுமீனைக் காப்பாற்றுவதை கடமையாக எண்ணிய தவளை, யோசித்தது. பாட்டுப் பாடியபடி நீந்தினால், களைப்பை மறந்து நீந்த முடியும். குஞ்சுமீனை உறங்கவிடாமல் கவனித்துக்கொள்ளலாம் என நினைத்தது.

“சின்ன மீனே, நான் இப்போ குளத்து உயிர்களோட தேசியகீதத்தை கத்துத் தருவேன். இந்தப் பாட்டை கரைபோய் சேருகிற வரைக்கும் திரும்பத் திரும்ப பாடிப் பழகணும். சரியா?’’ என்ற தவளை கரகரத்த குரலில் பாடியது.

“குளம் எங்கள் நாடு
குளம் என்றொரு கோயில்
குளம் தங்கும் வீடு
குளமேதான் கொண்டாட்டம்!”

மெல்லிய குரலில் குளத்தின் தேசியகீதத்தைப் பாடிக்கொண்டே நிலாப் படகில் பயணம் செய்த குஞ்சுமீனின் களைப்பு நீங்கியது.

நிலாப் படகு, பொழுது விடிவதற்குள் எதிர்க் கரையைச் சென்று அடைந்தது. முறையாக நீந்தக் கற்றுக்கொண்ட குஞ்சுமீன், தேசியகீதத்தையும் மனனம் செய்திருந்தது.

நிலாப் படகு மறைந்துபோனது. படகு என்ன ஆனது என்ற கேள்விக்கு, “பொறுத்திரு சின்ன மீனே, சீக்கிரம் புரிந்துகொள்வாய்” என்றது தவளை.

தவளை சொன்ன வாத்து கரைக்கு வந்தது. விஷயத்தை காதுகொடுத்துக் கேட்டது. தனது சேமிப்புக் குவியலில் இருந்து சில தானிய மணிகளைக் கொத்திக்கொண்டு வந்தது.

தண்ணீரில் குதித்து, குஞ்சுமீனிடம் சென்ற வாத்து, கழுத்தை வளைத்து குஞ்சுமீனுக்கு தன் அலகால் உணவு ஊட்டியது. ஆசை ஆசையாக அதைச் சாப்பிட்ட குஞ்சுமீன் பசி ஆறியது.

சற்று நேரம் இளைப்பாறிய குஞ்சுமீனுக்கு படகில் சவாரி செய்கிற ஆசை தீரவில்லை. அது, வாத்திடம் கேள்வி கேட்டது:

“வாத்து அண்ணா! நான் ஏறி வந்த படகு எங்கே மாயமாகிப்போச்சு?”

பிறை நிலாவின் பிம்பத்தைப் பற்றித் தெரிந்திருந்த வாத்து, “சின்ன மீனே, நீ படகில் ஏறி பயணம் செய்யலை. உன்னோட சுய முயற்சியில்தான் நீச்சலடிச்சு வந்து சேர்ந்தே.”

வாத்தின் பதிலைக் கேட்டு புரியாமல் பார்த்தது குஞ்சுமீன்.

“அது உண்மையில் படகு இல்லை. பிறை நிலாவோட பிம்பம். படகுன்னு சொல்லி, உனக்குள் மனதைரியத்தை வரவைத்தேன். உன்னோட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே நீ இவ்வளவு தூரம் நீச்சலடிச்சு வரக் காரணமாக அமைஞ்சது’’ என்றது தவளை.

தவளையின் கழுத்தில் முத்தம் தந்து நன்றி சொன்னது குஞ்சுமீன்.

பிறகு, மூன்றும் சேர்ந்து குளத்து உயிர்களின் தேசியகீதத்தைப் உற்சாகமாகப் பாடின.

– டிசம்பர் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *