நிறம்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஈசனின் விசித்திர நினைவுகள். குறும்புங் கலவிய திருவிளையாடல்கள். தலையை அரியமாகக் கற்பித்தார். தினகரனின் வெள்ளை ஒளியை அதனூடாகப் பாய்ச்சினார்.
ஒளியின் நிறப் பிரிகை. ஏழு நிறங்கள். நிறமாலை!
ஊதா.
கருநீலம்.
நீலம்.
பச்சை.
மஞ்சள்.
இளஞ்சிவப்பு.
சிவப்பு.
ஒவ்வொன்றுந் தனித்துவப் பெருமை பாராட்டிக் குதிக்கின்றன.
ஊதா தமிழ்ப் பிராட்டி ஒளவையை முருகன் ஏமாற்றினான். சுட்ட பழமும், சுடாத பழமும். அந்த நாவற் பழ நிறத்தின் பெருமை எதற்கு உண்டு?
கருநீலம்: ஊதாவுக்கும் நீலத் திற்குமிடையில் ஒளிந்து விளையாடு வேன். என்னைக் காண்பதும் கடினம். கத்தரிப் பூவிலே நான் சயனிப்பேன்.
நீலம்: நிறமும் அதன் பெருமை யும். காத்தற் கடவுளாம் திருமால் எனது நிறத்தைத்தான் விரும்பி ஏற் றுள்ளான்.
பச்சை: நான் வளத்தின் நிறம். பூமித்தாயின் வளத்தினைப் பறைசாற்றி நிற்கின்றேன்.
மஞ்சள்: மங்களமே இன்பம்; இன்பம் மங்களமானது. நான் மங் களத்தில் ஒன்றியுள்ளேன்.
இளஞ்சிவப்பு: மலர்களிலே மலர் அழகு ரோஜா. அதன் மிருது இதழ் களிலே கொலுவீற்றிருக்கும் என்னை ரோஜா நிறமென்றுஞ் சொல்வார்கள்.
சிவப்பு: மனிதனின் உதிரமுஞ் சிவப்பு; தியாக சிந்தையும் சிவப்பு; வாலைக் குமரியின் வனப்பு இதழ் களுஞ் சிவப்பு…
நினைவுகள் வௌவாலாக, அரியம் தலைகீழாக… நிறமாலை அதனுட் புகுந்து வெளியே வருவது வெள்ளை ஒளியே…
‘வெள்ளையின் பிரிகையே நிறங்கள்; நிறங்களின் கலவையே வெள்ளை. அதற்குள் நிற பேதங்களும், அவற்றின் பெருமைகளும்..’
ஈசன் சிரிக்கின்றான்.
நிறங்கள் சிரிக்கின்றன.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.