நினைவில் நிற்கும் காதலர் தினம்
1997 திருச்சி பிஷப் ஹீபரில் இளங்கலை கணிப்பொறியியல் படித்து முடித்த நான், மேற்கொண்டு படிக்க போதிய பண வசதி இல்லாததால் என் அப்பா நடத்திக் கொண்டிருந்த ஒரு சிறு கடையை கவனிக்கும் பொறுப்பை என் அப்பா எனக்கு கொடுத்தார். இந்த கடை திருச்சி பெரிய கடை வீதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த எழுது பொருள்கள் மட்டும் விற்பனை செய்யும் ஒரு சிறிய கடை. கடையை கவனிக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்த மகிழ்ச்சியில் சில மாதங்களில் கணிப்பொறியை முழுதுமாக மறந்து என்னை ஒரு பெரு வணிகனாக எண்ணிக் கொண்டிருந்த சமயம். சதாகாலமும் அந்த வியாபாரத்தை எப்படி பெருக்குவது? எப்படி பொருளீட்டுவது என்ற சிந்தனையில் ஆழ்ந்து கிடப்பேன்.
அப்படி போய்க் கொண்டிருக்கையில் ஒரு நாள், என் அப்பா என்னிடம் ஏம்பா! இந்த கடையில உட்கார்ந்து பேனாவோட மை துடைப்பதற்கு தான் நீ கணிப்பொறி படித்தியா என்று கேட்டார். அது என் கன்னத்தில் பளார் என்று அறைந்தது போல் இருந்தது. அதைத்தொடர்ந்து அறிவுரை கூறியவர் நீ ஏதாவது கணிப்பொறி மையத்துக்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கு கொடுக்க என்னிடம் பணம் உள்ளது என்று கூறினார். எப்படியாவது உருப்படற வழியை பாருப்பா என்றார்.
இதைத்தொடர்ந்து திருச்சி நால் ரோட்டில் இருந்த சிஎம்சி என்ற கணிப்பொறி மையத்துக்கு நான் சென்றேன். அதில் இருந்ததிலேயே மிகக் குறைந்த விலையில் இருந்த கோர்ஸில் நான் சேர்ந்தேன். சில மாதங்கள் கழிந்தது ஒரு நாள் பக்கத்து வகுப்பிற்கு ஆசிரியர் வராததால் அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் எங்கள் வகுப்புடன் இணைக்கப்பட்டார்கள். அந்த நாள் நான் அவளை கண்டேன். முதல் நாளிலேயே ஏதோ ஒரு காரணத்தால் நான் வசீகரிக்கப்பட்டேன். முதல் சில வாரங்கள் ஏதோ காரணத்தால் எனக்கு அவளை அவ்வளவாக பிடிக்கவில்லை. அவள் மேல் தட்டு வர்க்கமோ என்று நினைத்தேன். ஆனால் ஒரே மாதத்தில் என்னையே அறியாமல் அவளை விரும்ப தொடங்கி இருந்தேன்.
நெற்றியில் ஒரு சிறிய கீற்று சந்தனமும், ஒரு சிறிய கீற்று விபூதியும், ஒற்றைச் சடையும், அதில் சிறிது மல்லிகையும், நல்ல ஒரு சுடிதாரும் அவளுடைய அடையாளங்கள். நீல வர்ண பி எஸ் ஏ லேடி பேர்ட் சைக்கிளில் அவள் வருவாள். ஒரே மாதத்தில் அவள் எப்பொழுது வருவாள் என்று காத்திருக்க தொடங்கினேன். அவள் இல்லாத வகுப்பு வகுப்பாகவே தெரியவில்லை. அவள் யாரிடமும் அதிகமாக பேசவில்லை, அவளுக்காக ஓரிரு பெண் நண்பர்கள் இருந்தார்கள் அவர்களுடன் சிறிது நேரம் பேசுவாள், பின் கிளம்பி விடுவாள். இப்படி நாட்கள் போய்க் கொண்டிருக்கையில் ஒவ்வொரு நாளும் அவளுடன் எப்படியாவது பேச வேண்டும் என்று நினைத்த எனக்கு அச்சம் அதிகமாகி கொண்டே இருந்தது.
அது பிப்ரவரி மாதம் என் மன வலிமையை எல்லாம் ஒருங்கிணைத்து சகல தெய்வங்களையும் வேண்டி, பிப்ரவரி 14 அவளுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். கல்லூரி நாட்களில் தான் பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதை பற்றி கேள்விப்பட்டிருந்தேன் அதைப் பற்றி நிறைய கதைகள் என் நண்பர்கள் பகிர கேட்டிருக்கிறேன் அதில் ஒன்று சிகப்பு வர்ண சட்டை அணிவது. பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு சிகப்பு நிற சட்டை வாங்கினேன்.
பிப்ரவரி 14 வகுப்பு ஆரம்பித்து சில நிமிடங்கள் கூட என்னால் அங்கு அமர முடியவில்லை. என்னுடைய இதயம் படபடத்துக் கொண்டிருந்தது, உடல் வியர்த்தது. அவளுடன் எப்படி பேசத் தொடங்குவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், வகுப்பை முழுவதுமாக கவனிக்கவில்லை. வகுப்பு முடிந்து எல்லா மாணவர்களும் வெளியில் சென்றார்கள் நான் கடைசியாக புறப்பட்டேன் அவள் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் நான் அவள் அருகில் வேகமாக சென்று நின்று சற்று தயங்கி விஷ் யு எ ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று மட்டும் சொல்லியதுதான் தாமதம் அவள் என்னிடம் அதை என்னிடம் எதற்காக கூறுகிறீர்கள் என்று கேட்டாள் அதற்கு நான் உங்களிடம் மட்டும் தான் கூற வேண்டும் என்று தோன்றியது அதனால் தான் என்று கூறி மறுகணம் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கீழே வந்து மறைந்தே விட்டேன்.
அடுத்த இரு வாரங்கள் அவள் கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டே இருந்தேன். மூன்றாவது வாரம் ஒரு வகுப்பில் அவளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்தது வகுப்பு முடிந்து வெளியே வந்த நான் நீர் அருந்தி கொண்டிருந்த பொழுது அருகே வந்த அவள் என்னை பார்த்து சிரித்தாள் அன்று என்னிடம் பேசிய பின் ஆளையே காணோமே என்றாள் அன்றிலிருந்து நாங்கள் பேசத் தொடங்கினோம் நண்பர்கள் ஆனோம். அவளே எனக்கு மனைவியாகி என் இரு குழந்தைகளுக்கு தாயாகி
என்னுடன் இருபது ஆண்டுகள் பயணிப்பாள் என்று எனக்கு அன்று தெரியாது. எங்கள் காதல் வளர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2005 இல் நாங்கள் திருமணம் செய்து கொண்டு எங்கள் வாழ்க்கையை தொடங்கினோம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 நாங்கள் எங்கள் முதல் சந்திப்பை நினைவு கூறுவோம். இந்த ஆண்டு அவள் என்னுடன் இல்லை. காதல் வாழ்க காதலர்கள் வாழ்க காதலர் தினம் வாழ்க. என் நினைவுகளை எல்லா காதலர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 5,240