நிஜத்தின் நிறம்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 128

வெள்ளிக்கிழமை இரவு மணி ஒன்பது. ஜன்னலுக்கு வெளியே தேர்தல் பிரச்சார வாகனத்தின் சத்தம் .”வாக்களிப்பீர்… வாக்களிப்பீர்…” என்ற சத்தம் தேய்ந்து மறைந்து கொண்டிருந்தது.
சாப்பாட்டு மேசையில் சுடச்சுட இட்லியும், காரச்சட்னியும் காத்துக்கொண்டிருந்தன. தந்தை ராகவன் செய்தித்தாளிலிருந்து தலையை உயர்த்தாமலேயே சொன்னார், “என்னவோ போம்மா, யாருக்கு ஓட்டுப் போடுறதுன்னே தெரியல. எல்லாரும் ஆளுக்கொரு இலவசத்தை அள்ளி விடுறாங்க. ஒருத்தன் டிவி தர்றேன் என்கிறான், இன்னொருத்தன் மாதாமாதம் ஐயாயிரம் கொடுக்கிறேன் என்கிறான், இலவசம் இலவசம் என்று அள்ளி விடுறாங்களே. தேர்தல் முடிந்த பிறகு எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள்”
பத்தாம் வகுப்பு படிக்கும் கவின் குறுக்கிட்டான், “ஏன்ப்பா, எது அதிகமோ அவங்களுக்குப் போட வேண்டியதுதானே? நமக்கும் லாபம் தானே!”
அவன் அம்மா சுமதி, சட்னியைப் பரிமாறிக்கொண்டே சிரித்தாள். “கவின், இன்னைக்கு நம்ம தெரு முனையில் என்ன நடந்தது தெரியுமா..?” என்றாள்.
ராகவனும், கவினும் சுமதியை பார்த்தனர்.
“இன்னைக்கு சாயங்காலம் நம்ம தெரு முனையில ஒரு சம்பவம் நடந்துச்சு . நம்ம வார்டுல நிக்கிற மூணு வேட்பாளர்களும் வந்திருந்தாங்க. அங்க இருந்த ஒரு பாட்டி, ‘ஏம்பா, எங்க வீட்டுப் பின்னாடி இருக்கிற வாய்க்கால் பல வருஷமா தூர்வாராம கிடக்கு, அதைச் செய்வீங்களா?’ன்னு கேட்டாங்க.”
ராகவன் ஆர்வமானார். “அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”
“முதல் ஆள் சொன்னாரு, ‘பாட்டி, நான் ஜெயிச்ச அடுத்த வாரமே அந்த வாய்க்காலுக்கு மேல காங்கிரீட் போட்டு ரோடாவே மாத்திக் குடுத்துடுறேன்’னாரு.
ரெண்டாவது ஆள் சொன்னாரு, ‘ரோடு என்ன பாட்டி, அங்க ஒரு பூங்காவே கட்டிடுறேன்’னாரு.”
“மூணாவது ஆள்?” என்று கேட்டான் கவின்.
சுமதி நிதானமாகச் சொன்னாள், “மூணாவது ஆள் மட்டும் தயங்கிட்டே சொன்னாரு, ‘பாட்டி, அந்த வாய்க்கால் போற இடம் தனியார் நிலத்துக்குப் பக்கத்துல இருக்கு. அதை உடனே ரோடு போட முடியாது. ஆனா, நான் ஜெயிச்சதும் முதல்ல அந்த நிலப் பிரச்சனையைச் சரி பண்ணி, தூர்வாரி தண்ணி தேங்காம செய்யுறதுக்குச் சட்டப்படி முயற்சி பண்ணுவேன். இதுக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும்’னு சொன்னாரு.”
ராகவன் சிரித்தார். “அப்போ அந்தப் பாட்டி மத்த ரெண்டு பேரில் ஒருவருக்கு தான் ஓட்டு போடுவார்கள் இல்லையா?”
“அங்கதான் விஷயமே இருக்கு,” என்றாள் சுமதி. “அந்தப் பாட்டி சொன்னாங்க… ‘மத்த ரெண்டு பேரும் முளைக்காத வேகவைத்த விதையை நட்டுட்டு, அது பூ பூக்கும்னு பொய் சொல்றாங்க. ஆனா இவன் மட்டும்தான் என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கிறான். தூர்வாரச் சொன்னால், ரோடு போடுவானாம். பூங்கா கட்டுவானாம். அரசு நிலம் பக்கத்தில் இருந்தால் செய்யலாம். பக்கத்தில் இருப்பது தனியார் நிலமாயிற்றே. ரெண்டு பேரும் வெத்து வேட்டுன்னு அந்தப் பாட்டி சொன்னாங்க.”
சாப்பாட்டு அறையில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது.
கவின் மெதுவாகச் சொன்னான், “புரியுதுமா… சாத்தியமில்லாததைச் சொல்றவங்களை விட, எதைச் செய்ய முடியும்னு நேர்மையா ஒத்துக்கிறவங்க தான் நிஜமான தலைவர்கள். அதுதானே அம்மா உண்மை.”
ராகவன் தன் மகனின் தலையைக் கோதிவிட்டுச் சொன்னார், “சரியாச் சொன்னடா கவின். நடக்காததை நடக்கும் என சொல்வதை விட நேர்மையாக, இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி பேசுபவனே சிறந்தவன். நேர்மையானவனை தேர்ந்தெடுப்பது தான் நமது கடமை. இந்தத் தடவை நம் அனைவரின் ஓட்டு ‘நிஜத்தின் நிறத்தை எடுத்துச் சொன்ன அந்த நேர்மையான மனிதருக்கு’த்தான்!”
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அங்கும் இங்கும்
முத்தமிழ்ப்பித்தன்
April 21, 2026
மாசில்லா வாழ்க்கை
அல்போன்ஸ் மோசஸ்
April 21, 2026
ஸதாநந்த போதக சாமியார்
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்
April 21, 2026
