நிசங்களை விழுங்கிய நிழல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2025
பார்வையிட்டோர்: 223 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராக்கம்மா, வயிறு முதல் வாய் வரை மூச்சிழுக்க நின்றாள். 

கட்டிட வேலைக்குப் போக வேண்டிய கட்டாய நேரத்தை கணக்கில் கொண்டு, காலங்காத்தாலேயேதான் அந்தக் கடையை பார்த்து நடந்தாள். ஆனால், அதற்குள் அந்த கடைக்கே வால் முளைத்தது போல மருண்டும், சுருண்டும் நின்ற மனித வரிசையைப் பார்த்து “அடியம்மா… இம்மாங்காட்டியா…”என்று தன்னை யறியாமலேயே சத்தம் போட்டு சொன்னபடியே ஓடிப்போய் நின்றாள். எதிர் திசையில்பைகளும், கைகளுமாக வந்து கொண்டிருந்த நான்கைந்து பெண்களுக்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற வேகம் அவளை விரைவு படுத்தியது. 

ராக்கம்மா, கம்பளி பூச்சி போல் பல்வேறு ஆடைகளோடு நின்ற பெண்கள் கூட்டத்திற்கு பின்னால் நின்றபடியே அந்த நியாயவிலைக்கடையை, வலது கையிலிருந்த பிளாஸ்டிக் கேனை குழந்தையைப் போல் இடுப்பில் வைத்துக் கொண்டு பார்த்தாள். இன்னொரு கையில் பிடித்த துணிப்பையால் வேர்த்த தன் முகத்தை வீசியபடியே அவள் உள்ளே பார்த்த போது:- 

அவள் நின்ற குண்டும் குழியுமான சாலை கட்டிட வடிவம் பெற்றால் எப்படியோ, அப்படிப்பட்ட பாடாதி கட்டிடம். காவல் நிலைய லாக்கப் கம்பிகள் மாதிரி போடப்பட்ட அறைக்குள்ளே ஒருகிடா மீசைக்காரன் கவுண்டருக்குள் நுழைந்த கைகளில் உள்ள குடும்ப கார்டுகளில் எதையோ ஒன்றைப் பறித்துக் கொண்டிருந்தான். அந்தக் கைகளின் தொடர்ச்சிகளான முகங்களை உற்றுப்பார்த்து, அந்த முகங்களுக்கு ஏற்றாற்போலவே முன்னுரிமை கொடுத்தான். ஆசாமியைப் பார்த்தால் அசல் லாக்கப்பில் இருக்க முழுத்தகுதிப் பெற்றவன் போல் தோன்றினான். 

ராக்கம்மா, சற்று திருப்தியோடு மூச்சு விட்டாள். 

அவளுக்கு முன்னால் சுமார் 30 பேர்தான் ஒற்றை ஒற்றையாகவும், இரட்டை இரட்டையாகவும் நின்றார்கள். வரிசையில் முகப்புப் பகுதியில்தான் கரடித்தலை மாதிரி பல்வேறு மனிதத் தலைகள்.மனிதக்கால்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. சிலர் கிருஷ்ணாயிலை வாங்கிக் கொண்டுதான் போனார்கள். ராக்கம்மா பக்கத்தில் நின்ற சுமதியிடம் கடைக்காரனுக்கு கேட்கட்டும் என்பது மாதிரி பேசினாள். 

“கிருஷ்ணாயில் இருக்கத்தான் கீது….பாரும்மே… ஆப்பக்கடை ஆயாவோட பையில அவன் எப்படி திட்டினபடியே அரிசிப் போடறான்பாரு… அவனுக்கு சர்க்கார் அரிசி பூட்ரோம்கிற நினைப்புல்ல நமக்கெல்லாம் வாக்கரிசி போடறதா நினைப்பு. ஒழிஞ்சுபோறான். கிருஷ்ணாயில் கிடைச்சா சரிதான். எம்மாடி… எம்மாடி… இந்த கிருஷ்ணாயிலுக்காக எத்தனவாட்டிதான அலை யறது.நேத்து காத்துநின்னா கடைசில சொல்றான் கஸ்மாலப்பய..இல்லன்னு நல்லாத்தான் கேட்டேன். முதல்லயே சொன்னா இன்னன்னு…அதுக்கு அவன் எப்படி முறைச்சான் தெரியுமா..? பாருடி..அங்கே..அந்த குப்புப்பய என்ன செய்யறான்னு. 

ராக்கம்மாவுடன் சேர்ந்து கமலாவும் குப்புவைப் பார்த்தாள். ஒல்லி அதோடு குள்ளம். இப்போதுதான் அங்கே வந்த நகை நட்டுப்போட்ட பெண்களிடமிருந்து கார்டுகளை வாங்கி கவுண்டரில் கொடுக்கிறான். உள்ளே இருக்கின்ற கிடா மீசைக்காரனும் வரிசைபற்றி கவலைப்படாமல் அந்த பெண்களுக்கே பில் போட்டுக் கொடுத்தான். 

ராக்கம்மாவால் தாளமுடியவில்லை. சத்தம்போட்டே கேட்டாள்…”யோவ்..குப்பு! இன்னாய்யா..கூத்து…இவங்க இப்போதான் வந்தாங்க. சட்டப்படி க்யூவில நிக்கணும். நீ என்னடான்னா..எங்க கஷ்டத்த கவலப்படாம அப்படி வாங்கிக்குடுத்தா என்னய்யா அர்த்தம்.” 

குப்பு அர்த்தம் சொன்னான். 

‘கடைல ஆம்பள க்யூ, பொம்மனாட்டி க்யூன்னு இரண்டு க்யூ உண்டு. நான் … ஆம்பள… வாங்கிக் குடுக்கத்தான் செய்வேன்”. 

”உன்னால நீ ஆம்பளங்கறதை இப்படித்தான் காட்ட முடியும்.” 

“ஏய்…ராக்கு…” 

“பின்ன இன்னய்யா… கிருஷ்ணாயில் வாங்கி வீட்ல கஞ்சிகாய்ச்சி குடிச்சிட்டு வேலைக்கி போவணும். இந்த பாயாபோற கிருஷ்ணாயிலுக்கா மூனு நாளா லேட்டா போறேன். நேத்தே அந்த மேஸ்திரி – ராக்கு….உன் கணக்க பார்ப்போமானு சிரிச்ச படியே சொல்லி என்ன அய வெச்சான்..இன்னிக்கும் லேட்டுன்னா அவ்வளதான். நீ என்னடான்னா இரட்டவட சங்கிலி போட்டவங்களா பாத்து ஒத்தாச பண்ணுற. இத நாயமான்னு நீயே பாரு..” 

தலைகாய்ந்த பெண்கள் மத்தியிலே லேசான முணுமுணுப்பு… ஆனாலும் அந்தப் பெண்கள் இந்த இரட்டை சங்கிலிக்காரிகளிடம் வேலைப்பார்ப்பவர்கள். ஆகையால் அவர்கள் முனங்கல் குறைப்பிரசவமாகியது. ராக்கம்மா விடவில்லை. 

“யோவ்…குப்புண்ணா. நாங்கல்லாம் பொம்மனாட்டியா உனக்கி தெரியலையா..? பாமாயில் இல்லாட்டியும் சாப்டல்லாம்.ஆனா கிருஷ்ணாயில் இல்லாட்டி எப்படி சமைக்கிறதாம். மரியாதையா பூடு.. இல்லாட்டி நான் மனுஷியா இருக்க மாட்டேன். ஏமே.. சுமதி நீயும் கேளேம்மே…” 

சுமதி கேட்கலாமா… வேண்டாமா.. என்று யோசித்த போது.. எந்த பெண்களிடமும் வேலைப் பார்க்காமல் சுயேட்சையாக மீன் விற்கும் சோதி தனது கடல் வரிசையைக் காட்டினாள். 

“யோவ்…அடுத்துக் கெடுக்கிற பையா.. சோமாரி கஸ்மாலம்… அந்தண்ட போறியா இல்லாட்டி இந்தண்ட இருந்து நாங்க வாரனுமா…? நீல்லாம் வேற பொழப்பு பொழக்கலாம்.” 

குப்புப்பயல் பயந்து விட்டான்…. சோதி.. தீப்பிடித்துக் கொள்வது மாதிரி பிடித்துக்கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும். அதே சமயம் தான் வீரமாகத் தான் இருப்பதுபோல, அவளுக்குப் பதிலாக ராக்கம்மாவை முறைத்தபடி சில கார்டுகளை சில பெண்களிடம் பெயரை மாற்றிக் கொடுத்துவிட்டு, நிதானமாக நடப்பதுபோல் பாவலா செய்தபடியே நடந்தான். கவுண்டருக்குள் இருந்த கிடா மீசை, சோதியையும், ராக்கம்மாவையும் ஒருச்சாய்த்துப் பார்த்தான். 

ராக்கம்மா வரிசையோடு வரிசையாக நகர்ந்தாள். திடுக்கிட்டு புடவையைப் பிடித்தாள். 

“ஐயோ… நின்னு நின்னு கால் வலிச்ச கண்றாவியில ‘இடுப்புச் சேல தொப்புளுக்குக் கீழப் போனத கூடப் பார்க்கலப்பாரு நானு…படிச்சப் பொம்மனாட்டிங்க கட்டிக்கறது மாதிரி புடவ கீழப் போகப்போச்சுது பாரு… பாவிப்பய இன்னாம்மா… பாக்கான் பாரு..”யோவ்… தாத்தா… கிருஷ்ணாயில் கிடைக்கட்டும். உன் வாயில அரை லிட்டரை ஊத்தரன் பாரு… ஐய்யயோ… என்கி பின்னால எம்மாம் க்யூ..! ‘அது…’ எய்ந்து இன்னேரம் டீக்கி அலமோதுமே. நா இல்லாத சாக்குல சல்பேட்டா பூட்டாலும் பூடுமே…” 

ராக்கம்மா, எப்படியோ கவுண்டருக்கு அருகே வந்துவிட்டாள் வானத்திலிருந்த நிலாவைப் பறித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. ஒரு நாள் வேலைக்கி போகாமல், வீட்டிலேயே இருந்தது போன்ற ஆனந்தம். “அது, ” சாராயம் குடிக்காமல் வீட்டிற்குத் திரும்பியது போன்ற திருப்தி; பிளாஸ்டிக் கேனை எடுத்து கவுண்டரில் வைத்தாள். மூன்று 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்து கவுண்டருக்குள் கைவிட்டாள். கிடா மீசைக்காரன் கைகளை உதறியபடியே எழுந்தான். ஒருவேளை கால்வலிக்காக அங்கும் இங்குமாக உலாத்திவிட்டு அவன் வரலாமென்று ராக்கம்மா… சிறிது பேசாமல் நின்றாள்.ஆனால்,அவனோ அவளுக்கு முதுகை காட்டியபடி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். 

ராக்கம்மா…. அவன் முதுகில் குத்துவது மாதிரியான குரலோடு கேட்டாள். 

“ஜல்தியா தா சாரே…”

கிடா மீசை அலட்சியமாக திரும்பியது. அவளை நேருக்கு நேராக பார்த்துப் பேசுவது, தமது அந்தஸ்துக்கு கீழாவது என்று அனுமானித்தபடியே ஜன்னல் கம்பிகளைப் பார்த்தபடி பதிலளித்தது. 

“ஸ்டாக்…தீர்ந்து போச்சு…’ 

‘இன்னா சாரே இப்படி பன்னுறே.மூணு நாளா நாயா அலயறேன் சாரே” 

“நீ எப்படி அலஞ்சா எனக்கென்ன… ஸ்டாக் இல்லன்னா இல்ல…” 

“எப்படியாவது பாரு சாரே…”

“உன்னப் பார்க்க எனக்கு நேரமில்ல…” 

“யோவ் செருப்பு பிஞ்சிடும்…” 

கிடா மீசை ராக்கம்மாவையே முறைத்தபடி நின்றான். உடனே ஒரு எடுபிடியாள் அவனுக்கு பதிலாக அவளிடம் பேசினான். 

“இந்தா பாரும்மா… உனக்குத்தான் பேசத் தெரியும்னு பேசாதே… ஸ்டாக் இல்லன்னா இல்ல…1200 கார்டுல 500 கிருஷ்ணாயில் கார்டு. 300 கார்டுக்குத்தான் கிருஷ்ணாயில் அனுப்பினான். 200 கார்டுக்கு வந்த பிறகுதான் உனக்கு தரமுடியும். சும்மா பினாத்திகிட்டு நிக்காத… இடத்த காலிபண்ணு, ” 

“நாளக்கியாவது…” 

“எனக்கென்ன ஜோசியமா தெரியும்” 

ராக்கம்மா, பதில் பேசுவதற்கு முன்பு சோதி மோதினாள். 

“நீங்க செய்யற அக்கரமத்துக்கு கட்சில மரத்தடில் கிளி ஜோசியத்துக்குத்தான் வரப்போறீங்க… இன்னாய்யா பேச்சு பேசறே கொயுப்பு பேச்சு…” 

கிடா மீசை, இரங்குவதுபோல், இறங்கிப் பேசியது.. 

“இந்தா பாரும்மா… உன்கிட்ட வாயாட எனக்கு நேரமில்ல..நான் வேணுமின்னா..எங்க பெரிய ஆபீசரோட அட்ரஸ் குடுக்கறேன்.. டெலிபோன் நம்பர தாரேன். நானே உன் பேர்ல கம்பளைண்ட் எழுதி கொடுக்கறேன். நீ கையெழுத்துப் போட்டு அனுப்பினா போதும். சரிதானா…?” 

“பெரிய ஆபீசர்களுக்கும் இங்க இருந்து கமிஷன் போற தைரியத்திலயா பேசற? அந்த பசங்க ஒய்ங்கா இருந்தா நீ ஏன் இப்படி பேசற.. இன்னாய்யா நாடு இது.. ஓட்டுப் பொறிக்கி பசங்க ஒர்த்தன் கூட இத கேக்கறதில்ல..சீ… பேஜாறான பொழப்பு.. ஏழைங்க வயித்து நெருப்பு உங்கள சும்மா விடாது. வேணுமின்னா பாரு..’ 

எடுபிடியாள் எகிறினாள் 

“இதுக்கு மேல பேசினே.. அப்புறம் உங்கள போலீசுல ஒப்படைக்க வேண்டியதிருக்கும் ஜாக்கிரத… யாருகிட்ட பேசறோம்கறது ஞாபகம் இருக்கட்டும். ” 

ஏணிப்படி மாதிரி சிறிது சாய்ந்து தட்டையாக இருந்த அந்த எடுபிடியாள் பேசப்பேச ‘கிடா மீசைக்காரன், ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி, ஊதிப்பிடு வேனாக் கும் என்பது மாதிரி ஊதித் தள்ளினான். ஏற்கனவே போலீஸ் என்றதும் பயந்து போன ராக்கம்மாவுக்கும், சோதிக்கும் அந்த புகைந்த சிகரெட் காவல்துறையின் கண்ணீர்ப்புகை போல் தோன்றியது. இருவரும் வெளியேறினார்கள். 

சோதி, கையிலிருந்த காசில் ஒரு மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணெயை ஒட்டிக்கி இரட்டியாய் வாங்கப் போய்விட்டாள். ஆனால் ராக்கம் மாவால் அப்படி முடியாது. காரணம், இவளுக்கும் இவள் பங்களா அம்மாவிற்கும் ஒரு ஒப்பந்தம். கேஸ் சிலிண்டர் காரியான பங்களாக்காரியின் கார்டில், மண்ணெண்ணெய்க்கு ஒதுக்கீடு இல்லை. ராக்கம்மாவின் கார்டில் மண்ணெண் ணெய்யே பிரதானம். இந்தப் பின்னணியில் பங்களா அம்மா மண்ணெண்ணெய் கிடைக்கும் சமயத்தில் ராக்கம்மாவிடம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருபது பைசா வீதம் பத்து லிட்டர் வாங்க இருபத்திரெண்டு ரூபாய் கொடுத்து விடுவாள். முதல் தேதி சம்பளத்திலும் பிடித்துவிடுவாள். இந்தக் கடனுக்கு வட்டியா அந்தம்மாவுக்கு ரெண்டு லிட்டர் கொடுக்கவேண்டும். ஆனானப்பட்ட இந்த நியாய விலைக்கடையில் மண்ணெண்ணெய் இல்லை என்றால், வாங்கிய பணத்தை இந்த ராக்கம்மா பங்களா அம்மாவிடம் உடனடியாக கொடுத்துவிட்டு, எண்ணெய் எப்போது கடைக்கு வருகிறதோ அப்போதுதான் வாங்க வேண்டும். 

ராக்கம்மா யோசித்தாள். மளிகைக்கடையில், கையி லிருக்கிற பணத்துக்கு, ஐந்து லிட்டர்தான் வாங்க முடியும். இதில் இரண்டு வீட்டுக்காரிக்கு -அதுவும் இவள் கணக்கில். அப்போ மூன்று லிட்டர் இருபத்திரெண்டு ரூபாய். எப்பாடி…கட்டுபடியாகாது… 

ராக்கம்மாவின் மனம் போர்க்களமானது. இந்த மழையில் விறகுவைத்து அடுப்பு மூட்ட முடியாது. எல்லா விறகு களுமே வாழைத்தண்டுகளாகிவிட்டன. பேசாமல், கடையில் போய் நாலார்ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாங்கிக் கலாமா… அதெப்படி.. பங்களா அம்மா தப்பா நினைப் பாங்களே.. நாக்க புடுங்கற மாதிரி கேட்டா என்னா… பண்ணறது. அப்பால எப்பவுமே துட்டுத் தரமாட்டாங்க.. இந்த பாழாப்போற கிருஷ்ணாயில் எப்ப வரும்… எப்ப வராதுன்னு சொல்லிக்க முடியாது.. இதுக்காக காசுசேர்த்து வைச்சாலும். அந்த கஸ்மாலம் அத கள்ளச்சாராயமா மாத்திடும். எப்படியோ பேச்சுன்னா பேச்சுத்தான். ஓரே பேச்சுலதான் நிக்கணும். பங்களா அம்மாக்கிட்டே குனிஞ்ச தலையோட போக்கூடாது. சர்த்தான்மே சொல்லிட்டே.. இப்போ..வீட்ல போய் கஞ்சிக்காச்சாத் தானே வேல பார்க்க முடியும். அதுவும் இன்னா மாதிரி வேல.. சல்லிக்கல்ல கூடைல சுமக்கணும், ஏணியில் ஏறனும், பசி மயக்கத்துல எடறி விழுந்துட்டா.. இன்னாமே செய்யறது.ஆ.. அதுக்காக வார்த்த மாற்தா..! மனுஷிக்கி மானம்தானேமே முக்கியம்.” 

ராக்கம்மா, உருவமற்று நடப்பதுபோல் நடந்தாள். உறைந்துப் போனவள்போல் சிறிது நேரம் நின்றாள். சூரியன் வேறு நேர் பார்வைக்கு வந்துவிட்டது. இன்றைக்கு மேஸ்திரி கணக்குப் பார்க்கலாமா என்று கேட்கமாட்டான். அவளை நம்பி வேறு சித்தாளை வேலைக்கு வைக்கவில்லை என்றும், இதனால் கட்டிட வேலையே நின்று விட்டதாகவும், அவள் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றும் பேசுவான். 

ராக்கம்மா, வழி தெரியாமலேயே நடந்தாள். பக்கத்தில் ஒரு நர்ஸரி ; பல்வேறு வண்ணச் செடிகளும் மரக்கன்றுகளும் வியாபித்த தோற்றம். வேலி ஓரமாக சாலையை நோக்கி வளைந்தபடி நீண்ட தென்னை மரத்தில் ஒருபழுப்பு ஓலை வெளியே தலைக்காட்டியது. கைக்கெட்டும் தூரம்; இழுத்துப்போட்டால், விறகாகும். கஞ்சிக்காய்ச்சலாம். கட்டிட வேலைக்கும் போகலாம். ராக்கம்மா குதிகாலில் நின்று கைகளை தூக்கிவிட்டாள்; அப்போது அவள் கண்கள் தற்செயலாக உள்ளே இருந்த குப்புவை பார்த்து விட்டன. அந்தத் தோட்டத்தில் அவன் வேலைக்காரனாய் பரிபாலனம் செய்கிறான். ஓலையை இழுத்தால், சேலையை இழுப்பான். இன்னாய்யா பேஜாரு.. தட்டிக்கேட்க நாதியில்லாத நாடுய்யா. “அது சொல்றது மாதிரி எல்லாரையும் நிக்கவைச் சுடணும். முதல்ல குப்புவ..அப்புறம் கிடா மீசையை. இல்லல்ல… இந்த குப்பு வவுத்துக்காக வாய விக்கிற பய. சுடனும்னா கிடாமீசையைத்தான் முதல்ல சுடனும். சோமாரி…இன்னாக் கேள்வியா கேட்டான்.., இருடா இரு. அதுக்கிட்ட சொல்றேன் பார்… அதப்பத்தி உன்கி தெரியாது. அது கையில ஒரு அரிவாளக் கொடுத்து ஒன்னண்ட அனுப்பிவைக்கறேன் பார்… என் மூஞ்சியப்பாக்க நேரம் இல்லன்னு தெனாவட்டாயா பேசற.. பெரிய மன்மதரு.. உன்னப் பார்க்காட்டி தூக்கம் வராது பாரு… தூ… தூ… 

ராக்கம்மா..”அதை” ரேக்கி விடவேண்டுமென்ற ஆவேசத்தோடு இப்போது வேகமாக நடந்தாள். எதிரே நான்கைந்துப் பெண்கள் வந்துக்கொண்டிருந்தார்கள். அவள் ஏரியாப் பெண்கள். ஒருத்தி சுமதி, தனி ரகம்.ஒன்பதில் பாசாகி, பத்தாவதில் பெயிலானவள். ஆகையால் மற்றப் பெண்களைவிட சற்று வித்தியாசமாக தூக்கலாக ஜாக்கெட் போட்டிருந்தாள். இன்னொருத்தி, கருப்பாக இந்தாலும் லட்சணமாக இருந்தாள். மற்றொருத்தி சிவப்பாக இருந்தாலும் அவலட்சணம்.. இன்னொன்னு சின்னப் பொண்ணு, பன்னிரெண்டு வயதிருக்கும். காக்காவின் அலகை வெட்டினால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட முகம். பெயர்லட்சுமி; அவளோடு அவள் ஆயாவும் வந்தாள். 

எதிரே வந்த பெண் பட்டாளத்தை பார்த்துவிட்டு, ராக் கம்மா நின்றாள். அவர்களிடம் ஆறுதல் தேடி கிருஷ்ணாயில் சமாச்சாரத்தை சொல்வது போல், கையிலிருந்த கேனை தலைகீழாகப் பிடித்தபடி தூக்கிப்போட்டுப் பிடித்தாள். ஆயா கேட்டாள்… 

“இன்னிக்கும் கிருஷ்ணாயில் இல்லனுட்டானா..?” 

“இன்னிக்கி மட்டுமல்ல என்னிக்கு வரும்னும் சொல்லமாட்டேங்கறான் கஸ்மாலம்…! நாளிக்கும் சேர்த்து இன்னிக்கே கைவிரிச்சுட்டான். இந்தப்பசங்க, பேசாம நமக்கெல்லாம் எதுவும் கிடையாதுன்னு பப்ளிக்கா சொன்னா தேவலை. இப்படி நாயா அலையாம நாம நம் வேலைய கவனிக்கலாம்.” 

இந்த சமயத்தில், சுமதி கண்களை சிமிட்டியபடியே ராக்கம்மாவிடம் கேட்டாள். ‘ஏய்.. ராக்கு.. அந்த கடையோட சைடுல சைக்கிளுங்க நிக்குதா.. அதுல பெரிய பெரிய கேரியருங்ககீதா.. பராக்குப் பார்க்கிறது மாதிரி நாலஞ்சு கம்மாண்ணாட்டிங்க நிக்கறானுவளா… அதுல ஒருத்தன் வழுக்கத்தலையா..? இன்னொருத்தன் அம்மதளும்பனா’ 

ராக்கம்மா யோசித்துப் பார்த்தாள். நிசம்தான்.. நாலைந்து பேர் நின்றார்கள். கடைக்கு வெளியே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் நிற்பதும், அவர்களின் ஒருத்தன் அவ்வப்போது கடைக்கு முன்னால வந்து நோட்டம் பார்த்ததும் அப்போது அவளுக்கு புரியவில்லை. இப்போது தெரிந்தது. அவர்கள் நிற்பதற்குரிய அர்த்ததை அறியும் வகையில், அவள் சுமதியை அர்த்தத்தோடு பார்த்தாள். சுமதி விளக்கினாள். 

“இந்தப் பசங்களுக்கும், கடைக்கார கம்மானாட்டிங்களுக்கும் ஒரு இது இருக்கு. கரெட்டா..பகல் பதினோரு மணிக்கு அவங்க சைக்கிள்ள மூட்டை மூட்டையா போகும் பாரு…!இப்போ… எவ்வளவு சரக்கு தேறும்னு வேவு பார்கக வந்திருக்கானுக… எனக்கு தெரிஞ்சு ஒரு கடைக்காரன் இந்த கடையிலேயே கள்ளச்சரக்கு வாங்கி 2 லட்சத்துல வீடு கட்டியிருக்கான். இன்னொரு வீடு கட்டப்போறான்.” 

‘இன்னாமே… இது அநியாயமா கீது. யாருமே கேள்வி கேட்பாரில்லையா..? முன்னால கடைய நடத்தினவங்க இந்தப் பசங்கள விட எவ்வளவோ தேவலை.10 லிட்டர் கிருஷ் ணாயிலுக்கு ஒன்பது லிட்டர்தான் தருவான். பன்னிரெண்டு கிலோ அரிசில பதினொன்னுதான் அளந்துப் போடுவான். ஆனா இந்தப் பசங்க கால்வாசியை அமுக்கிடுறாங்க.” 

இந்த சமயத்தில் சோதி மண்ணென்ணை டின்னோடு அங்கு வந்தாள். மோவாயில் கைவைத்து அவள் பேசவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அறுபது வயது ஆயா, இருபது வயது பெண்மாதிரி ஆடி..ஆடி.. ஒரு பாட்டைப் பாடினாள். 

கூட்டுறவு வாரம் கொண்டாட வாங்க.. சீ… இவனுக கெட்ட கேட்டுக்கு ரேடியோவில் வேற விளம்பரம்.” 

“ஆயா.. பாட்டுக்கு இதுவா நேரம்?”

“இது பாடடுல்லமே ஒப்பாரி…” 

ராக்கம்மா அக்னி மூச்சு விட்டபடியே பொதுப் படையாகக் கேட்டாள். 

நாமோ..சும்மா.. எத்தனை வாட்டிதான் பொறுத்துகறது.. இதுக்கு ஏதாவது பண்ணணும். என்ன சொல்றே..சுமதி.?” 

“சொல்றேன்..எங்க ஐயா. இவங்க ஆபீசுலதான் பெரிய ஆபீசரா வேலை பார்க்கறார். அவருக்கிட்ட இவனுக போடற ஆட்டத்த விலா வாரியா சொல்னேன். பதினோருமணி சமாச்சாரத்த பட்டுட்ன்னு புட்டு வைச்சேன். அதுக்கு எங்க அய்யா என்ன சொன்னாரு தெரியுமா..? நாம எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து சைக்கிள் பசங்களை மடக்கிப் பிடிச்சுகணுமாம். யராவது ஒருத்தர் எங்க ஐயாவுக்கு டெலிபோன் செய்யணுமாம். என்ன சொல்றே.. செய்வோமா..?” 

“உங்க ஐயாவ நம்பி இறங்கலாமா..? யார நம்பினாலும், ஆபீசர நம்பக்கூடாதுன்னு “அது” சொல்லும்.” 

“அது சொல்லுது இது சொல்லுதுனு கேட்காதடி… எங்க அய்யா நெருப்பு. ஆபீசருங்கள்லையும் அத்தி பூத்தாப் போல சிலர் இருக்கத்தான் செய்யறாங்க ஆனா, இருந்த இடத்திலேயே இருப்பாங்க… மேல போகவே மாட்டாங். எங்க அய்யாவும் அப்படித்தான்..அவர்க்கு கீழ இருந்தவனெல் லாம் மேலே போய்டானுங்களாம்” 

“நானு மீனு வாங்க போகணும்மே என்ன செய்யணுமோ அதச் சீக்கிரமாச் சொல்லு” 

“சரி.. இன்னிக்கே இந்த சோமாரிங்கள மடக்கிடலாம்.. கரெக்டா பத்தரை மணிக்கி நம்ம ராக்குவோட வீட்டுக்கு அல்லாரும் வந்திடுங்க.. இந்த லட்சுமிய பத்தரைமணி வாக்குல கடையில நீக்கச் சொல்லுவோம். சரக்கு ஏத்தும்போது லட்சுமி நம்பளண்ட வந்து சொல்லிடணும். நம்ம ஓடிப்போய் வளைச்சுகுவோம். ஆயா…நீ…ஏன் மூஞ்சிய திருப்பற. உன் பேத்திய அனுப்பற மேன்னா..? நல்லக் காரியததுக்குதானே அனுப்புறோம். எத்தனை பொம்மனாட்டிங்க.. இவள காதலுக்குத் தூது அனுப்புறாங்க. ஆனாலும் கெட்டிக்காரி.. ரொம்ப பேர சேர்த்து வைச்சுட்டாள்.” 

“ஏய் விஷயத்துக்கு வா சுமதி…. இந்தப் பசங்கள மடக்குற வேலய பொம்மனாட்டிங்க மட்டும் செய்ய முடியுமா..?” 

“நாம போடுற சத்தத்துல ஆம்பளைங்களும் வந்திடமாட்டாங்ளா…?” 

“நீ ஒருத்தி இந்தக் காலத்துல லேசா அடிதடிசத்தம்னா ஆம்பளைங்க தான் மொதல்ல வீட்டுக்குள்ள ஓடி கதவ சாத்துறானுவ.. பொட்டப் பசங்க…’ 

“இப்படியே பேகினு நின்னா..அந்த பசங்கள் பிடிச்சமாதிரிதான்” 

எல்லாப் பெண்களும், பத்தரை மணிக்கு ராக்கம்மா வீட்டில் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள். ராக்கம்மாவும் மிகப்பெரிய காரியத்தைச் செய்யப்போகிற திருப்தியுடன் வீட்டை நோக்கி நடந்தாள். அக்கம்பக்கத்துப் பெண்களிடம் அடக்க முடியாதபடி சொல்லப்போனாள். பிறகு, எந்த முண்டை யாவது.. அந்த பசங்ககிட்ட சொல்லிடப்படாதேன்னு நினைத்தபடியே வீட்டிற்குள் போனாள். வீட்டில் ‘அது’ சாராய மூச்சோடு தூங்கிக்கொண்டிருந்தது. அதனையும், கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நினைத்த ராக்கம் மாவுக்கு ஏமாற்றம். ‘யோவ்..உன்ன மாதிரி ஏழை எளிய வங்க சாராயம் குடிச்சு தன்பாடு சாராயம் பாடுன்னு இருக்க றாதாலத்தான் ஆபீசர் கம்மனாட்டிங்க அட்டூழியம் பண்ணுறாங்கோ. முதல்ல ஒன்ன நிக்க வைச்சு சுட ணும்யா..,” என்று சொன்னபடியே மூலையில் சாய்ந்தாள். 

ராக்கம்மா குடிசையில், எல்லாப் பெண்களும் பத்தேகால் மணிக்கெல்லாம் வந்துவிட்டார்கள்; சோதி மீன் வாங்காமலே வந்து விட்டாள். இதரப் பெண்களும் அப்படியே.. ராக்கம்மா அங்கலாய்ப்போடு சொன்னாள்… 

“ஒங்களுக்கு டீ கொடுக்க தேயிலைக்கீது..அஸ்காகீது… ஆனா கிருஷ்ணாயில்தான் இல்ல.. மனசுக்கு கஷ்டமாகீது.. தோ…சுமதி வந்துட்டாளே..” 

சுமதி, இரண்டு கைகளை நீட்டியபடி வந்தாள். அந்தக் கைகளில் அடுக்கடுக்காக பழைய பத்திரிகைகளும், வாரப்பத்திரிகைகளும் இருந்தன. “எங்க அய்யா வீட்டு பழைய பேப்பருங்க.. கடைல போட்டுட்டு வரும் படியா எங்கம்மா சொன்னாங்க; அப்புறமா போட்டுக்கலாம். நம்ம லட்சுமி, சும்மா சொல்லக்கூடாது… அந்தப் பசங் களமாதிரி பராக்குப் பார்த்தபடியே கட முன்னாடி நிக்கறா” என்று சொன்னபடியே, 

அவள் கரங்களிலிருந்த பழைய பத்திரிகைகளை ராக்கம்மா வீட்டு தரையில் போட்டபோது- ஒவ்வொருத்தியும், ஒவ்வொரு பத்திரிகையை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். ஒருத்திகையில் ரஜினிகாந்த் இரண்டு பக்க முனைகளில் கால் வைத்தபடி துப்பாக்கியோடு நிற்கும் டபுள்பேஜ் அட்வர்டைஸ் மென்ட். இன்னொரு பத்திரிகை யில் விஜயகாந்த் கம்பைப்பிடித்துக் கொண்டு நிற்கும் கம்பீரமான விளம்பரம். போதாக்குறைக்கு டி.ராஜேந்தர் அநியாங்களை தொலைக்கப் புறப்பட்டது போன்ற தோர ணயான படம். இந்தப் படங்களில் தமிழகத்தின் தலை விதியை தீர்மானிப்பது போன்ற சிங்கார வரிகள். இவர்கள் நடித்தபடங்களை, இப்போது பார்த்தால் தான் நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது போன்ற முடிவான வாசகங்கள். 

இதற்குள் ஒருத்தி, ஒரு வாரப் பத்திரிகைக்குள் முகம் புதைத்தாள். சிறிது நேரத்தில் அவள் முகம் ஆடியது. பிறகு கையிலிருந்த பத்திரிகை ஆடியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த பத்திரிகையை மல்லாக்க வைத்தபடியே ஆவேசமாகக் கேட்டாள். 

“இதோ பாரடி சுமதி.. இந்த கார்த்தி, ஸ்ரீபிரியாவ அம்போன்னு விட்டுட்டான் பாரு… பெருசா நடிக்கமட்டும் தெரியுது.. நம்புனவள நட்டாத்துல விட்டுட்டான் பாரு… பாவம் ஸ்ரீபிரியா..” 

”பாவம் என்னடி பாவம்.. ஒரு தலப்பட்சகாதலுக்கு, நான் பொறுப்பில்லேன்னு கார்த்திதான் சொல்லீட்டானே… இதோ இந்த பேப்பரைப் பாரு…” 

‘இந்தப் பேப்பரைப் பாருடி.. ஸ்ரீபிரியா எப்படி குமுறிச் சொல்லியிருக்கா பாரு..இந்த கார்த்தில்லாம் ஒரு மனுசனா’ 

“அட.. அவனையும் அவளையும் விடுங்கடி. சந்திரசேகருக்கு இரட்டைப்பிள்ளை பிறந்திருக்காம். ஆளப்பாத்தா எவ்வளவு அப்பாவியா இருக்கான் பாரு…” 

“இங்க பாரடி…ராதிகாவுக்கும், விஜயகாந்துக்கும் இஸ்க்கு தொஸ்க்காம்… நான் படத்தப் பாக்கும் போதே நினச்சேன்.. புருசன் பொண்டாட்டி கூட அப்படிக் கிடையாது….” 

இந்தச் சமயத்தில், சிறுமி லட்சுமி, வேர்க்க விருக்க ஓடி வந்தாள்.. தலையிலிருந்தும், நெற்றியிலிருந்தும் பெருக் கெடுத்த வேர்வைத் துளிகள் கழுத்தில் அருவியாகி, தொண்டைக் குழியில் கடலானது.. பேசப் போனாள்… மூச்சு முட்டியது..மூச்சை அடக்கி பேசப் போனால், வார்த்தைகள் முட்டின.. மூச்சிழுக்க அவகாசம் கொடுத்து பேச வேண்டி யதை தள்ளி வைக்க, அவளால் இயலவில்லை. கூப்பாடு போடுவது மாதிரியே அலறினாள். 

“எக்கோ…எக்கோ அந்த அநியாயவிலைக்கடையில்..அஸ்க்கா மூட்ட. அரிசி மூட்ட.. கிருஷ்ணாயில் டின்னு ன்னு…அல்லாத்தையும் ஒரு கட்டை வண்டிலே ஏத்திக்கினுயிருக்காங்க….கட்டையில போறவங்க… புறப்படுங்க… கஸ்மாலங்கள் உண்டு இல்லன்னு பண்ணிடலாம். சுமதிக்கா எயிந்திரி … ராக்கத்தே புறப்படு….” 

“இவா ஒருத்தி..பேசாம குந்துடி.. ஒரு தலக் காதலுக்கு, தான் பொறுப்பில்லேன்னு எப்படி இந்த கார்த்தி சொல்லலாம்.?” 

”எக்கோ, நான் புறப்படும் போதே பாதிய ஏத்தீட் டாங்க.. இன்னேரம் கிளம்பிருப்பாங்க… ரோட்டைத் தாண்டிட்டா, சட்டம் பேசுவானுங்கோ…ஜல்தி..ஜல்தியாப் போயி மடக்குவோம்.. எயிந்திரிங்க…” 

சுமதியும், மற்ற தோழிகளும் காரசாரமான விவாதத்தில் இறங்கியதால், அந்தச் சிறுமியின் சத்தம், அந்த விவாதத்திற்கு ஒரு பின்னணி இசை போலவே அமைந்தது…ஆனாலும் லட்சுமி வயிறு முதல் வாய் வரை விம்மிப் புடைக்க கத்திய போது, ஒரு பளபளப்பான வாரப்பத்திரிகையை வைத்துக் கொண்டு, அதையே ஆதாரமாக, காட்டுவதுபோல் முக் காலியின் மேல் அடித்தடித்து பேசினாள் சுமதி.. 

“ஏன் சொல்லப்படாது. கார்த்தி சொன்னதுல தப்பே இல்ல….” 

”எக்கோ….” 

“சொம்மா கிடடி.. ஆருதான் யோக்கியம்..ஏய் இங்க பாருங்கம்மே…அநியாயத்த தட்டிக் கேட்கிறதுதான் என் வேலைன்னு நம்ம சூப்பர் ஸ்டார் எப்படி சொல்லியிருக்கான் பாரு…” 

தொட்டால் கை வழுக்கும் அத்தனை பத்திரிகைகளும், நல்ல பாம்பு படமெடுத்ததுபோல் பக்கங்களை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் உட்பக்கங்களோ புதை மணலாய் தோற்றங்காட்டின.

– ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும், முதற் பதிப்பு: மே 1996, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

சு.சமுத்திரம் சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *