நான் நல்லவன் இல்லை!





என்னுடைய குடும்பம் நான் சிறுவனாக இருக்கும்போது உணவுக்கே வழியின்றி மிகவும் வறுமையில் வாடியது. ஓலைக்குடிசை வீடுதான். தினமும் மண் தரைக்கு அம்மா மாட்டுச்சாணம் போட்டு பூசி விடுவாள் அல்லது மொழுகி விடுவாள். அந்த நாற்றம் அனைவருக்கும் பழகிப்போனது. ஐந்து அக்காக்கள், நான்கு தம்பிகள். என்னுடன் சேர்த்து பத்து குழந்தைகள்.
அப்பா ஒரு நாடோடி. எப்போதாவது ஒரு நாள் வீட்டில் தங்குவார். அதுவும் நாங்கள் தூங்கிய பின் வருவதும், நாங்கள் எழுவதற்குள் சென்று விடுவதுமான அவரது செயல் எனக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. ஒரு நாள் நடு இரவில் சிறுநீர் கழிக்க நான் எழுந்த போது அம்மா உணவு தயாரித்துக்கொண்டிருந்தாள். வெளியிலிருந்த சுற்றிலும் ஓலைகளால் கட்டப்பட்டிருந்த குளியறையில்…. இல்லை, இல்லை குளிக்கும் பகுதியில் குளித்து விட்டு ஒரு பெரிய மீசையுடன் ஆண் உருவம் தலை துவட்டி குனிந்தபடி வீட்டிற்குள் வந்ததைப்பார்த்து பயந்து போன நான் ஓடிச்சென்று அம்மாவைக்கட்டிப்பிடித்துக்கொண்டேன்.
அம்மா முதலாக அப்பாவை எனது பத்தாவது வயதில் அன்று தான் எனக்கு அறிமுகப்படுத்தினாள். அப்பா என புரிந்தாலும், அவரிடம் நெருக்கம் காட்ட எனக்குள் சிறு மன பயம் தயக்கத்தைக்கொடுத்தது.
“நீங்க இத்தன நாளா எங்கள தனியா விட்டிட்டு எங்க போனீங்க?” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.
“உங்களுக்கு சோத்துக்கு சம்பாதிக்கத்தான். இங்க மழையில்லை. அதனால பூமில விளைச்சலில்லை. மழை பெய்யற பூமில போய் விவசாயம் பண்ணறேன்” என்றார்.
“எங்களையும் அங்கேயே கூட்டிட்டு போக வேண்டியது தானே….?” என்றேன்.
“அங்க மிருகங்கள் அதிகமா வாழற இடம். நானே ஒரு மரத்து மேல பரண் போட்டு அங்க தான் படுத்துக்குவேன். குடும்பத்தோட வாழறது ரொம்ப கஷ்டம்” என்றவர், அம்மா கொடுத்த உணவை எடுத்து எனக்கு ஊட்டி விட்ட போது உண்மையாகச்சொல்லுகிறேன் சந்தோசம் என்றால் இது தான் என நினைத்துக்கொண்டேன். ‘என்னைப்போலத்தானே அவரது மற்ற குழந்தைகளும் அப்பாவின் பாசத்துக்கு ஏங்குவார்கள்?’ என நினைத்து சந்தோசத்திலும் கண்ணீர் விட்டேன்.
பெரியவனாகி நிறைய சம்பாதித்து அப்பாவை குடும்பத்துடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதியாக நினைத்துக்கொண்டேன்.
எங்கள் வீட்டிலிருந்த நாய் இடைவிடாமல் குரைத்தவுடன் வெளியே சென்று பார்த்த எனது அப்பா ரஞ்சன், தட்டிலிருந்த உணவை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டு மேலாடையை எடுத்து போட்டபடி வீட்டை விட்டு நாய் பார்த்து குரைத்ததற்கு எதிர் திசை பக்கமாக அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்து வெளியேறி விட்டார்.
எனக்கு முதலாக மனதை பயம் கவ்வியது. ‘நாய் குரைச்சா திருடங்க வருவாங்க. வீட்டை சாத்தி தாழ் போட்டுட்டு வா’ என அம்மா அடிக்கடி கூறுவாள். அப்படியென்றால் இந்த சமயம் திருடர்களிடமிருந்து குடும்பத்தினரைக்காக்க அப்பா வீட்டில் இருப்பது தானே சரி. பின் ஏன் வீட்டை விட்டு போகிறார்? என நான் நினைப்பதற்குள் அடுப்பிலிருந்த நெருப்புத்தணலை தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டு, சாம்பலை எடுத்து அருகிலிருந்த குப்பை மேட்டில் போட்டு விட்டு, அப்பா வைத்த மீத சாப்பாட்டை நாய் தட்டில் போட்டு விட்டு டக்கென வீட்டைச்சாத்தி தாழ் போட்டவள், என்னை அழைத்துக்கொண்டு போய் பாயில் படுத்து என்னோடு சேர்த்து கம்பளிப் போர்வையை போர்த்திக்கொண்டாள்.
எப்போதும் போலில்லாமல் அம்மாவின் உடல் குளிர் காலத்திலும் வேர்த்திருந்தது. உடல் லேசாக நடுங்கியது. திடீரென குதிரைகளின் காலடிச்சத்தம் வீட்டைச்சுற்றிக்கேட்டது. நாய் மீண்டும் குரைத்தது. வெகு தூரம் குரைத்துக்கொண்டே மேற்குபக்கம் நோக்கி ஓடியது எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது.
சற்று நேரத்தில் சில மனிதர்களின் அலறல் சத்தம் ஒரு சேரக்கேட்டது. ஆந்தைகளின் அலறல் சத்தமும் கேட்டது. நரி ஊளையிட்டது. மீண்டும் குதிரைகள் வரும் சத்தம் கேட்டாலும் முன்பு போல் இல்லை. கதவு தட்டப்பட்டது. அம்மா எழுந்து போய் பயமில்லாமல் கதவைத்திறந்தாள். விளக்கின் திரியை தீண்டி விட்டாள். மேலாடை முழுவதும் ரத்தக்கறையுடன் அப்பா மீண்டும் வந்திருந்தார் என்பதை விட ஆபத்திலிருந்து மீண்டு வந்திருந்தார் அல்லது பிறருக்கு ஆபத்தைக்கொடுத்து வந்திருந்தார் என்பது புரிந்ததோடு ஏதோ வித்தியாசமான தொழிலை அப்பா செய்கிறார். விவசாயம் செய்வதாகச்சொன்னது பொய் என்பதும், அம்மாவுக்கும் அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாகத்தெரிந்திருக்கிறது என்பதும் எனக்கு புரிந்தது.
மேலாடையைக்கழட்டியவர் மீண்டும் ஒரு குளியல் போட்டார். அன்று எனக்கு சிவராத்திரியாக இருந்தது. நிலா வெளிச்சம் பூமியில் சற்று எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்த நேரம் பௌர்ணமியாக இருந்திருக்க வேண்டும். இன்று எழுபது வயதில் பௌர்ணமி என்பதை அறிந்திருந்த எனக்கு அந்த பத்து வயதில் தெரிந்திருக்கவில்லை. நிலா வந்து விட்டது என்பது மட்டுமே புரிந்திருந்தது.
பட்டப்பகல் போல் இருந்ததால் தைரியமாக வெளியில் சென்று பார்த்தேன். எங்களது குடிசை வீட்டிற்கு அருகில் நான்கு குதிரைகள் நின்று கொண்டிருந்தன. குதிரையில் வந்தவர்கள் யாரையும் காணவில்லை.
அப்போது நிலா வெளிச்சத்தில் கிழக்கு நோக்கிப்பார்த்த போது நான்கு உருவங்கள் ஏதோ தோளில் மூட்டைகளைத்தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களை பழக்கப்பட்டவர்களாக நினைத்து நாய் வாலாட்டியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்பாவுடன் இரவில் துணைக்கு வந்து போகிறவர்களாக அல்லது கூட்டாளிகளாக இருக்க வேண்டும். அப்படியென்றால் குதிரைகளில் வந்தவர்கள் யார்? எனக்கு குழப்பம் அதிகரித்தது.
“நீங்க கொண்டு வந்த மூட்டைகளை இங்கேயே வெச்சுட்டு அதோ அங்கே கிடக்கிற மூட்டைகளை எடுத்துட்டு குதிரைல ஏறி போயி இருட்டுப்பள்ளத்துல போட்டிட்டு பரணுக்கு போயிடுங்க. உடனே கெளம்புங்க” என வந்தவர்களுக்கு அப்பா கட்டளையிட்டார்.
“அந்த மூட்டைல என்ன இருக்குது? இந்த மூட்டைல என்ன இருக்குது?”என்று கேட்டேன்.
“இதுல பணம், அதுல பொணம்” என்றவர் அதிர்ச்சியடைந்து “இல்ல, இல்ல எல்லாமே பணம் தான்” என்றார் என்னைப் பார்த்து முறைத்தபடி. ஏதோ ரகசியத்தை மறந்த படி திறந்து விட்டதாக நினைத்துப் பதறினார். இதற்கு மேல் அவரிடம் நான் எதுவும் கேட்கக்கூடாது என்பது போல் கோபப்பார்வை பார்த்தார். அப்போது மிருகமாக எனது கண்களுக்குத்தெரிந்தார்.
அம்மா ஓடி வந்தவள் “ராபின் இங்க வா. போயி பாயில படுத்து தூங்கு” என மிரட்டுவது போல் முதலாவதாகப் பேசியது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஓடிச்சென்று படுத்துக்கொண்டேன்.
காலையில் எழுந்த போது அப்பாவைக்காணவில்லை. அம்மா எப்போதும் போல் சகஜமாக சமைப்பது, ஆடுகளை பட்டியிலிருந்து காட்டிற்குள் ஓட்டி விடுவது என இருந்தாள்.
முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லாமல் போனால் வைத்தியர் வீட்டிற்கு எங்களை அழைத்துச்செல்லும் அம்மா, இப்போதெல்லாம் வைத்தியரையே ஆடு மேய்க்கும் மாறனிடம் சொல்லி விட்டு வீட்டிற்கே வரவழைத்தாள்.
அம்மாவை பலரும் இப்போதெல்லாம் மதிக்க ஆரம்பித்தார்கள். பக்கத்து குடிசைகளில் வசிப்பவர்கள் என்னை அடிப்பது, மிரட்டுவது என இருந்தவர்கள் அன்று இரவு அப்பா வந்து போன பின் பயந்து ஒதுங்கினார்கள். எங்கள் வீட்டில் மட்டுமில்லாமல் ஊரிலிருந்த மற்ற குடிசை வீட்டில் வசிப்பவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
ஒரு நாள் நான் எதிர்பார்த்தது நடந்தது. அன்று அப்பா பகலில் வந்திருந்தார். பத்துக்குழந்தைகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டார். ஊரையே அழைத்து கறி விருந்து கொடுத்தார். சாப்பிட வந்தவர்களுக்கு அன்று இரவு மூட்டையில் நான்கு பேர் கொண்டு வந்திருந்த பணத்தை எண்ணிப்பார்க்காமல் கையில் அள்ளிக்கொடுத்தார். எங்களுக்கென்று மிச்சம் ஏதும் வைக்கவில்லை.
“பழ மரம் பழம் பழுத்ததும் கீழே உதிர்த்தி விட்டுறும். தனக்குன்னு எதுவும் வெச்சுக்கிறதில்லை. ஏன்னா மறுபடியும் பழுக்கும்ங்கிற நம்பிக்கை தான். எனக்கும் நாலு பேருக்காவது கொடுத்தாத்தான் திரும்பவும் பொருள் கிடைக்கும்” என அம்மாவை சாந்தப்படுத்தினார். அதன் பின் அம்மாவும் மற்றவர்களுக்கு அப்பா கொடுப்பதைத்தடுக்கவில்லை.
நாம் மட்டும் சந்தோசமாக இல்லாமல் அனைவரையும் சந்தோசமா இருக்க வைக்கிறது பெரிய கலைதான். ‘அம்மா ஆட்டை வியாபாரிக்கு விற்கும் போது அஞ்சு ரூபா அல்லது பத்து ரூபா, கிடைக்கும். அதை வைத்து சந்தையில் சாப்பாடு செய்ய நெல்லு, கொள்ளு வாங்குவாள். அப்பாவுக்கு மட்டும் எப்படி மூட்டையில் நகையும், பணமும் கிடைக்குது?’ கேட்கத்தோன்றியது. அன்று மிரட்டலாகப்பேசிய பின் கேட்க பயமாக இருந்தது.
விருந்து நடந்த நாளுக்கு பின் சில வருடங்களாக அப்பா வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. அம்மாவிடம் தயங்கியபடி கேட்டேன்.”அப்பா ஏம்மா இப்பெல்லாம் வாரதே இல்ல?” கேட்ட எனது கண்கள் குளமாயின.
‘ஒரு விசயம் சொல்லுவேன். அத நீ ஆருகிட்டயும் சொல்லக்கூடாது’ என அம்மா சொன்ன போது தலையாட்டினேன். அந்தப்பழக்கம் கொஞ்சம் கடினம் என்பது எனக்குத்தெரியும். எந்த விசயத்தையும் மறைக்காமல் அம்மாவிடமும், என்னுடன் விளையாட வருபவர்களிடமும் சொல்லி விடுவேன். அதனால் தான் இப்பவும் நடந்ததை மறைக்காமல் சொல்லுகிறேன்.
“உன்ற அப்பா ஒரு கொள்ளைக்காரன்….” எனக்கூறி விட்டு என்னுடைய முகத்தையே உற்றுப்பார்த்தாள் அம்மா பூஞ்சோலை.
‘திருடறது, கொள்ளையடிக்கிறது, கொலை செய்யறது தப்பு’ எனவும், அதனால் பெரிய தண்டனை கிடைக்கும், தூக்கு தண்டனை கூட கிடைக்கும் எனவும் ஆலமரத்தடியில் இலவசமாக பள்ளிக்கூடம் நடத்திய தமிழ் வாத்தியார் முருகையா சொன்னது ஞாபகம் வந்தது.
‘அப்பா கொள்ளைக்காரர்னா வெள்ளைக்காரங்க கவர்மெண்ட்ல இருக்கிற போலீஸ் வந்து புடிச்சிட்டு போயிரும்’ னு எனக்கு கவலை வந்துச்சு. ‘தூக்குல போட்டு கொன்னு போடுவாங்களோ….?’ என்று நினைத்து பயந்தேன்.
“விவசாயத்துல வருமானமே இல்லை. வேற வழியில்லாம திருட ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் நம்ம ஊட்ல சாப்பாட்டுக்கே பஞ்சமில்லை. ஆரும் தப்பா நெனைச்சுக்கப்படாதுன்னு நானும் ஆடு மேய்ச்சுப்பொழைக்கிறதா ஊருக்கு காட்டிட்டேன். ஜமீன்தாருக ஊட்டுலயும், வெள்ளைக்காரங்க நம்ம நாட்ல வசூலிச்சு அவங்க நாட்டுக்கு கடத்தற வரிப்பணத்தையும் தான் திருடுவாரு. அன்னைக்கு ராத்திரி கூட ஜமீன்ல காவல் காக்கிறவங்கதான் அப்பாவைப்பிடிக்க நாலு குதிரைகள்ல வந்தாங்க. அவங்களை கொன்னுட்டு குதிரைகளை வேற நாட்டுக்காரங்களுக்கு வித்துப்போட்டு தப்பிச்சுட்டாரு. அதிகமா திருட்டு கெடைச்சா பொதைச்சு வெக்க மாட்டாரு. ஊருக்கே கொடுத்துடுவாரு. அதனால அப்பாவ ஊரே கடவுளா நினைச்சுக்கும்பிடறாங்க” என்று அம்மா சொன்னதைக்கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தாலும் திருடுவது குற்றம், கொலை செய்வது குற்றம் என்பது வாத்தியார் சொல்லிக்கொடுத்திருந்தது பதிந்திருந்ததால் இரவு முழுவதும் நானே குற்றம் செய்தது போல் தூக்கம் தொலைத்தேன்.
நாங்க வாழ்ந்த ஊரானது மாநிலத்திலேயே ஒதுக்குப்புறமான மலையடிவாரத்தில் காட்டுப்பகுதியில் வனப்பகுதி ஒட்டிய கிராமம். யானைகள் சகஜமாக வந்து போகும். ஒரு முறை சிறுத்தையை நேரில் பார்த்துள்ளேன். அப்போது மான் அதன் கண்ணில் பட்டதால் என்னைக்கொல்லாமல் விட்டிருந்தது.
மிருகங்களுக்கு உடல் பசி மட்டும் தான். பசி தீர்ந்தால் அமைதியாகி விடும். ஆனால் மனிதர்களுக்கு இருக்கும் பேராசைப்பசி இடைவிடாமல் ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். முதல் திருட்டிலேயே பெரிய அளவு பணம் கிடைத்ததை வைத்து குடும்பத்துடன் என்னுடைய அப்பா நல்லபடியாக வாழ்ந்திருக்கலாம். அவரது ஆசை பேராசையானது. திருடராக இருந்தவர் கொள்ளைக்காரராக மாறி, கொள்ளையடிப்பதைத்தடுப்பவர்களைக்கொல்வதால் கொலைகாரராகவும் மாறிவிட்டார். மனிதராக இருந்தவர் மிருகமாக மாறி விட்டார் என்று சொல்வதுதான் சரி.
முற்காலத்தில் மன்னர்களே பெரிய கொள்ளைக்காரர்களாகத்தானே இருந்துள்ளார்கள். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச்சென்று, எதிர்க்கும் பல வீரர்களைக்கொன்று குவித்து, நாட்டையே பிடித்து, கொள்ளையடித்து அங்குள்ள அரண்மனையில் இருக்கும் பொக்கிஷங்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு போனார்கள்.
தவறு செய்கிறவர்கள் மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளைச்சொல்லி தங்களது சிறிய தவறுகளை நியாயப்படுத்தத்தான் செய்வார்கள். என்னுடைய அப்பா செய்த தவறுகளை நியாயப்படுத்த நான் முயலவில்லை. உலகம் இப்படித்தான் போகின்றது என்பதை ஒன்றோடு மற்றொன்றை சேர்த்துப்பார்க்க, அவற்றின் ஒற்றுமையை புரிய வைக்க கூறுகின்றேன்.
காட்டு மிருகங்களில் இவை கொடிய மிருகங்கள், கடித்துக்கொன்று விடும். இவை புற்களை, இலை தளைகளைத்தின்பவை. பிற உயிர்களைக்கொல்லாது என பிரித்தறிந்து அவற்றிடமிருந்து தப்பிக்கலாம். ஆனால் எந்த மனிதன் எந்த விலங்கு போன்றவன்? என்பதை பிரித்தறிய முடியாததால் ஏமாந்து பலியாகி விடுகிறோம். ஆக மனிதர்களை விட மிருகங்கள் மேலானவை என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. நல்லவனாக இருக்கும் நானும் எப்போது கெட்டவனாக மாறுவேன்….? அல்லது நல்லவனாகவே வாழ்ந்து மடிவேனா….? என்பதை புரியாதவனாகவே அப்போது இருந்தேன்.
மிருகங்கள் பிறப்பினால் கொடிய குணம் கொண்டிருப்பவை. மனிதர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் மிருக குணத்துக்கு மாறி விடுகின்றனர். சாதாரண மனிதர்களை விட செல்வந்தர்களின் பின்னணி மிகவும் அபாயகரமானதாகவே இருப்பதைக்கண்டுள்ளேன். சாதாரணமானவர்கள் அவர்களே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சில சமயம் மாட்டிக்கொண்டு தண்டனை பெறுகிறார்கள். செல்வந்தர்கள் மற்றவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட வைத்து தங்களை உத்தமர்களாகக்காட்டிக்கொண்டு தப்பித்து விடுகின்றனர்.
அரசர்கள் மக்களின் வரிப்பணத்தைக்கொள்ளையடிக்கிறார்கள். வியாபாரத்திலும் சிலர் கலப்படம் செய்து ஏமாற்றுகிறார்கள். சிலபேர் யாருக்கும் தெரியாமல் திருடுகிறார்கள். சிலர் நம்பிக்கையாகப்பழகி பணம், பொருளை வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றுகிறார்கள். அதுதான் திருட்டிலேயே பெரிய திருட்டு. மொத்தத்தில் ஏமாற்று உலகமாகவே மாறி விட்டது.
வயது மட்டும் ஏறிக்கொண்டிருந்தது. அப்பா திருட்டு வேலைதான் பார்க்கிறார் என்பது ஊருக்கே தெரிந்திருந்தது. அவர் திருடுவதை ஊருக்கே கொடுப்பதால் யாரும் காட்டிக்கொடுப்பதில்லை. அதே சமயம் எங்கள் குடும்பத்தினருடன் யாரும் நெருக்கமும் காட்டுவதில்லை. திருட்டுப்பணத்தை சந்தோசமாக வாங்கிக்கொண்டு, திருட்டுக்குடும்பத்துடன் சந்தோசமாகப்பழக வருவதில்லை.
என்னுடைய முதல் அக்காவுக்கு ஊரில் ஒரு மாப்பிள்ளையைப்பிடித்திருந்தது. ‘திருடன் குடும்பத்து சம்மந்தம் வேண்டாம்’ என அந்த மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணம் செய்ய மறுத்து விட்டனர். இதனால் மனம் உடைந்து அக்கா தூங்காமல் அழுது கொண்டே இருந்தாள். பார்க்கவே பாவமாக இருந்தது. அப்பாவுக்குத்தெரிந்தால் கொன்று விடுவார் என பயந்து அந்தக்குடும்பமே ஊரைக்காலி செய்திருந்தது.
எங்கள் வீட்டிலேயே நான்தான் அறிவாளி. குடும்பத்தலைவனைப்போல் அனைவரையும் பொறுப்பாகப்பார்த்துக்கொண்டேன். முதல் அக்காவுக்கு முறையாகப்பார்த்து திருமணம் நடக்காததால் மற்ற நான்கு அக்காக்களும் அடுத்த ஊரிலிருந்த சகோதரர்கள் நான்கு பேரை விரும்பி திருமணம் செய்து கொண்டனர். அம்மா எதிர்க்கவில்லை.
ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்த அப்பாவிடம் சொல்ல திருமணம் நடந்ததற்க்காக மகிழ்ச்சியடைந்தார். முதல் அக்காவின் நிலையைக்கேட்ட போது கோபம் கண்களில் சிவப்புத்தன்மையை அதிகரித்தது. ஊரில் விசாரித்து, அக்கா விரும்பிய மாப்பிள்ளைப்பையன் இருக்குமிடத்தைக்கண்டு பிடித்து தான் கொண்டு வந்திருந்த ஒரு மூட்டை பணத்தையும் அக்காவிற்கே கொடுத்து, அந்த மாப்பிள்ளைக்கு காட்டுக்கருப்பராயன் கோவிலில் திருமணத்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
எனக்கும் மாமன் பொண்ணு மாயா மீதுதான் உயிரே இருந்தது. எதிர்ப்பு சொல்ல யாருமில்லை. அவளுடைய பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து போயிருந்தனர். அவளுக்கு ஒரு அண்ணன். பெயர் மாயன். அவன் எனக்காக உயிரையே கொடுப்பதாகக்கூறுவான். தங்கச்சியை கொடுக்க மாட்டானா? கொடுத்தான். திருமணம் செய்து கொண்டேன். பனைமர ஓலையில் கருப்பராயன் கோவில் பூசாரி எதையோ ஆனியில் எழுதி நூலில் முடிந்து மஞ்சக்கொம்போடு கொடுத்தார். மாயாவின் கழுத்தில் கட்டினேன்.
திருமணத்துக்குப்பின் தனியாக ஊரில் காலியாக இருந்த அக்கா வீட்டில் மாயாவுடன் தங்கினேன். மாயா தங்கச்சிலை போல இருந்தாள். அவள் மீது பல வாலிபர்களுக்கு கண் இருந்தது. வயதான ஜமீன்தார் காட்டிற்கு வேட்டைக்கு வந்த போது மாயாவைப்பார்த்து விட்டார். மாயாவை திருமணம் செய்து கொள்வதாகவும், நூறு ஏக்கர் நஞ்சை நிலத்தை அவளுடைய அண்ணன் மாயனுக்கு எழுதிக்கொடுப்பதாகவும் சொன்னார். மாயா என்னை விரும்புவதையும், நான் ரஞ்சனுடைய மகன் என்பதையும் தெரிந்ததும் ஊர் பக்கமே தலைகாட்டுவதை விட்டு விட்டார்.
எனது அம்மாவின் குடும்பம் மன்னர் வாரிசு என்பதை மாயாதான் சொன்னாள். பக்கத்து நாட்டு மன்னனிடம் போரில் தோற்றுப்போனதால் உயிருக்குப்பயந்து வனப்பகுதிக்குள் வந்து காட்டு வாசிகளைப்போல் குடிசையில் வாழ்ந்ததாகக்கூறினாள். பல தலைமுறைகளுக்கு முன் வந்தவர்கள் காட்டுப்பகுதி பிடித்துப்போனதால் அங்கேயே தங்கி விட்டார்களாம். அதனால் தான் என்னுடைய அம்மாவும் குடிசையில் வாழ்ந்தாலும் பார்க்க மகாராணி போல் இருப்பாள். என்னுடைய அப்பாவும் மகாராஜாவைப்போல் மீசையும், நீண்ட முடியும் வைத்திருப்பார். குதிரையில் தான் எங்கும் போவார். அதனால் தானோ என்னவோ நானும் இளவரசனைப்போல இருந்தேன்.
எனக்கு குதிரை மேல் அலாதி பிரியம். மாயாவை திருமணம் செய்த நேரமோ, என்னமோ எனக்கு ஒரு நண்பர் மூலம் நல்ல சுளியுள்ள வெள்ளைநிறக்குதிரை கிடைத்தது. அதில் வெகு தூரம் பயணம் செய்தேன். குதிரை மீது என்னுடன் சவாரி செய்ய மாயாவுக்கும் பிடித்திருந்தது.
அந்தப்பகுதியில் ஓடும் மாயாற்றில் குளித்து விட்டு மீன் பிடித்து நெருப்பில் சுட்டுத்தின்போம்.
எங்களுடைய களியாட்டங்களைக்கண்டு குதிரை கூட வெட்கப்பட்டு திரும்பி நின்று கொள்ளும். என் மீது எக்கச்சக்கமாக காதலோடு இருந்தாள் மாயா.
மாயாவின் வயிற்றில் கரு வளர ஆரம்பித்ததும் குதிரை பயணம் கூடாது என்று உள்ளூர் வைத்தியர் கூறி விட்டார். அதன் பின் நான் மட்டும் தனியாக குதிரை சவாரி செய்தேன். ஒரு நாள் நான் வனப்பகுதியில் குதிரையில் சென்று கொண்டிருந்த போது ஓர் இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பக்கம் துணிச்சலுடன் சென்று பார்த்தேன். அங்கே கண்ட காட்சி என்னையும் பதறச்செய்தது.
ஓர் அழகான இளம்பெண்ணை இரண்டு முரட்டு ஆசாமிகள் கெடுக்கும் முயற்சியில் இருந்தனர். அருகிலேயே அவளது பெற்றோரை மரத்தில் ஊனாங்கொடிகளால் கட்டி வைத்திருந்தனர். நான் ‘அவளை விட்டு விடுங்கள்’ என கத்தினேன். அந்தக்காமுகர்களுக்கு நான் சொல்வது சிறிதும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் முதலாக அவர்கள் இருண்டு பேருடைய தலைகளையும் எனது இடுப்பில் தற்காப்புக்காக வைத்திருந்த வாளை எடுத்து கொய்து விட்டேன். கண்களை மூடி முழிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
அவர்கள் என் தந்தையைப்போன்ற கொள்ளைக்காரர்கள் என்பதை அவர்கள் சாக்குப்பையில் வைத்திருந்த பணம், நகைகளை வைத்துத்தெரிந்து கொண்டதும் அந்த சாக்குப்பையை எடுத்துக்கொண்டேன்.
ஆளரவமற்ற காடு என்பதால் அந்த பாதிக்கப்பட்ட மூன்று பேரைத்தவிர நான் அவர்களைக்கொன்றதை யாரும் பார்க்கவில்லை. அந்தப்பெண்ணும் அவளது பெற்றோரும் எனது காலில் விழுந்து நன்றி சொன்னதோடு, அவர்களது ஊர் வரைக்கும் துணைக்கு வர வேண்டும் என கேட்டதால் நானும் மனமிறங்கி கூடவே நடந்து சென்றதைக்கண்ட அப்பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணையும், என்னையும் குதிரையில் செல்லும் படி சொல்ல, அவளும் இசைவு தெரிவிக்க, எனக்கு பின் அமர வைத்து குதிரையை ஓட்டினேன்.
அவள் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவளது ஸ்பரிசம் என் மீது பட்டதால் எனது மனம் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தது. இப்படியே வெகுதூரம் பயணம் செய்தால் என்ன? என மனம் மயக்கத்தில் பிதற்றியது. ஆனால் அறிவு விழிப்புடன் இருந்ததால் மனதுடன் போராடி, விளைவுகளைச்சிந்தித்து வென்றது.
ஊர் வந்ததும் குதிரையிலிருந்து கீழே இறங்கச்சொன்ன பின்னும் எனது முதுகில் தலை சாய்த்தவாறு இறங்கவே தயங்கியவளை கட்டாயப்படுத்தி இறக்கி விட்டேன். அவளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், எப்பொழுதும் அவளுடனேயே இருக்க வேண்டும் என்றும் சொன்னாள். எனக்கும் அவளை விட்டுப்பிரிய மனமில்லை. மாயாவை நினைக்க பாவமாக இருந்தது. பெற்றோரை இழந்த பெண்ணை ஏமாற்றுவது பெரும் பாவம் என நினைத்து புறப்பட தயாரானேன். அவள் என் மீது உயிரையே வைத்து விட்டதாகக்கூறினாள். இன்னொரு நாள் வரும்போது திருமணம் செய்து கொள்கிறேன் என பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.
அன்று இரவு தூக்கமே வரவில்லை. நடந்த சம்பவத்தை புள்ளைத்தாய்ச்சியான மாயாவிடம் சொல்ல விரும்பவில்லை. இரத்தக்கறை படிந்த நான் அணிந்திருந்த ஆடைகளை மண்ணில் புதைத்து விட்டேன். மாயாவை விட அந்தப்பெண் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாள்.
ஒருத்தியைக்காக்க இரண்டு பேரைக்கொன்று விட்டோமே… அவர்கள் செய்தது மிகவும் தவறு. நான் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் அந்தப்பெண்ணைக்கெடுப்பதோடு கொன்றும் இருப்பார்கள். அதோடு அவளது பெற்றோரையும் கொன்றிருப்பார்கள். நம்மைத்தாக்க வரும் மிருகத்தை தற்காப்புக்காக கொல்வது தவறில்லை என்று வாத்தியார் சொன்னது ஞாபகம் வர மனம் சாந்தமானதில் உறக்கம் கிடைத்தது.
‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்று அடிக்கடி என்னுடைய அம்மா கூறுவாள். தன்னுடைய கற்பைக்காக்க கொலை கூட செய்யலாம் என சாஸ்திரமே கூறுகிறதாம். அந்தப்பெண்ணின் கற்பைக்காக்க கொலைகளை நான் செய்து விட்டேன். திட்டமிட்ட கொலைகளை விட சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன. இதுவும் அப்படித்தான் நடந்து விட்டது.
அங்கே சாக்குப்பையில் கிடைத்த பணத்தை நான் மட்டுமே வைத்துக்கொள்ள மனமில்லாமல் என்னுடைய அப்பாவைப்போலவே ஊரில் உள்ளவர்களுக்கு பிரித்துக்கொடுத்து விட்டேன். என்னுடைய அப்பாவின் நிலையே எனக்கும் வந்து விட்டது பாருங்கள். கொலை செய்திருக்கிறேன். திருட்டுப்பணமாக இருந்தாலும் பிறரது பணத்தை கொள்ளையடித்து வந்திருக்கிறேன். இப்போது நானும் நல்லவன் இல்லை.
கடந்த ஐம்பது வருடங்களாக என்னுடைய அப்பா எங்கள் வீட்டுப்பக்கமே வரவில்லை. எங்காவது எதிரிகளால் கொலை செய்யப்பட்டு இறந்து போயிருப்பார் என்று நினைத்து தினமும் அழுத அம்மா போன வருடம் தான் நூறாவது வயதில் பாம்பு கடித்ததால் இறந்து விட்டாள். என்னுடைய மகனுக்கு என்னுடைய அப்பாவின் பெயரையே வைக்க வேண்டும் என்று அம்மா பிடிவாதமாகக்கூறியதால் அவனுக்கு ரஞ்சன் என்றே பெயரை வைத்தேன். அவன் வெளியூரில் படித்து அங்கேயே செட்டிலாகி விட்டான். மாயாவும் என்னை விட்டுப்போய் சேர்ந்து விட்டாள். எனக்கு பிறந்த ஊரை விட்டுப்போக விருப்பமில்லை. என்னுடைய உயிர் எங்கே போக வேண்டும் என தலையில் எழுதியிருக்கிறதோ… ?
பல குற்றங்கள் யாருக்கும் தெரியாததாலோ, தெரிந்தும் வெளியில் சொல்லாததாலோ மறைந்து போகின்றன. கண்டிப்பாக குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என்னுடைய அப்பாவின் குற்றங்களும், என்னுடைய குற்றங்களும் தண்டனைக்கு உரியவைதான்.
எங்களுடைய ஊரில் குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றித்தரும்படி முதலமைச்சர் காமராஜரை சந்தித்து மூன்று வருடங்களுக்கு முன் மனு கொடுத்தேன். அது நிறைவேறியுள்ளது. முதல்வருக்கு நன்றி. அதற்காக இவ்வளவு பெரிய கூட்டத்தைக்கூட்டி எனக்கு ‘நல்ல மனிதன்’ விருதைக்கொடுக்கப்போவதாகக்கூறி பலரும் வந்துள்ளீர்கள். நான் நீங்கள் நினைப்பது போல் நல்லவன் இல்லை என்பதை எனது கதையைக்கேட்டே தெரிந்திருப்பீர்கள். எனக்கு இந்த விருது பொருத்தமானதில்லை. இதை நான் வாங்கப்போவதில்லை.
நான் நல்லவனாக இருக்க விரும்பியும், நல்லவனில்லாமல் போகவைத்து விட்டது இந்த சமுதாயத்தின் அமைப்பு நிலை. நாம் பிரச்சினைகளைத்தேடிப்போகாவிட்டாலும் பிரச்சினைகள் நம்மைத்தேடி வருகின்றன. நாம் நல்லவனாக இருப்பதையும், இல்லாமல் போவதையும் இந்த சமுதாயத்தில் நம்முடன் வாழ்பவர்களே தீர்மானிக்கின்றனர் என்பது மட்டும் நன்றாகப்புரிந்தது. எனக்கு விருது கொடுப்பதை விட நல்லவர்களைக்குற்றவாளிகளாக்கும் சமுதாய சீர்கேடுகளை முதலில் சரி செய்யுங்கள். குற்றவாளிகளை உருவாக்குபவர்களைக்கண்டு பிடித்து சிறையில் போடுங்கள். இதற்கு மேல் பேசுவதற்கு என்னிடம் விசியமில்லை.
கடந்த ஒரு மணி நேரமாக தனது வாழ்க்கையில் நடந்த முழு உண்மைகளையும் சொல்லி முடித்து விழா மேடையிலிருந்து கீழே இறங்கிய முதியவரான ராபினை காவலர்கள் கைது செய்து சிறையிலடைக்க அழைத்துச்சென்றனர்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |