நான் சாகமாட்டேன்!





பண்டைக் காலத்தில் சீன நாட்டில் ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐவரும் ஒரே மாதிரியாக இருப்பர். உடல் தோற்றத்தை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொள்வது கடினமே. ஆனால், அவர்களின் ஆற்றலில் வேறுபாடு இருந்தது. முதல் மகன் கடலையே குடித்து விடுவான். இரண்டாம் மகனுடைய கழுத்து இரும்பைப் போல் வலுவானது.
அடுத்தவனின் ஆற்றல் என்ன தெரியுமா? அவசியம் ஏற்பட்டால் அவன் தன் கால்களின் நீளத்தை அதிகப்படுத்தி கொள்வான். அந்த நீளத்திற்கு வரம்பே கிடையாது. அதற்கும் அடுத்தவனைத் தீ நெருங்கவே நெருங்காது. ஐந்தாமவனால் மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இப்படிப்பட்ட அபூர்வ ஆற்றல் பெற்றிருந்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
மூத்த மகன் மீன் பிடிப்பதில் வல்லவன். நாள்தோறும் கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களைப் பிடித்து வருவான். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தார், “நீ காலையில் மீன் பிடிக்கப் போகும் போது எங்கள் வீட்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போ… தயவு செய்து அவர்களுக்கு மீன் பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடு” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர்.
ஒரு நாள் அவன் கடற்கரைக்குச் சென்ற போது பையன்கள் பலரும் கூடப் போயினர். எல்லாரும் கரை மீது நின்றனர். மூத்த மகன் வாயை வைத்து கடல் நீரை குடித்தான். குடித்துக் கொண்டே இருந்தான். கடல் நீர் வற்றிக் கொண்டே போனது. கடைசியில் கட்டாந்தரைபோல் ஆகிவிட்டது. மீன்கள் எல்லாம் துடித்துக் கொண்டு தரையில் கிடந்து தவித்தன. கூட வந்த பையன்கள் உள்ளே இறங்கி அங்கிருந்த மீன்களையும், நண்டு முதலியவற்றையும் பார்த்து ரசித்த வண்ணமாய் இருந்தனர்.
“உங்களுக்கு வேண்டிய மீன்களை அள்ளிக் கொண்டு வாருங்கள். நேரமாயிற்று. வீட்டுக்கு திரும்ப வேண்டுமல்லவா?” என்று கத்தினான் மூத்த மகன். அவன் கூறியதை அந்த சிறுவர்கள் காதில் போட்டுக் கொண்டால்தானே? அவர்கள் வரவில்லை. எவ்வளவு நேரத்திற்குத் தான் அந்த மூத்தமகன் தன் குடலுக்குள் கடல் நீர் முழுவதையும் வைத்திருக்க முடியும்? கடைசியாய் ஓர் எச்சரிக்கை விடுத்தான்.
“வந்து விடுங்கள்! விரைவில் கரைக்கு வந்து விடுங்கள். இனியும் என்னால் கடல் நீரை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருக்க முடியாது” என்றான்.
சிறுவர்கள் அவன் சொற்களைக் கொஞ்சம் கூட செவி மடுத்ததாகத் தெரியவில்லை. அவனாலோ அதற்கு மேலும் தண்ணீரை வயிற்றுக்குள் நிறுத்தி வைத்திருக்க முடியவில்லை. வேறு வழியின்றி தண்ணீர் முழுவதையும் உமிழ்ந்து விட்டான். அத்தனை பேரும் நீரில் மூழ்கி இறந்து போயினர்.
மிகுந்த வருத்தத்துடன் வீடு திரும்பினான். அந்த சிறுவர்களுடைய பெற்றோர் அவனிடம் வந்து, “எங்கள் பிள்ளைகளுக்கு மீன் பிடிக்கும் வித்தையைக் கற்று கொடுத்தாயா? அவர்கள் எவ்வளவு மீன் பிடித்தனர்…” என்றெல்லாம் ஆசை மிகுந்த ஆர்வத் துடிப்புடன் கேள்விகளை அடுக்கி கொண்டே போயினர். மூத்த மகனின் நெஞ்சு சஞ்சலப்பட்டது. உண்மையில் நடந்ததை எடுத்து சொன்னான்.
“அவர்களுக்கு நான் எத்தனையோ முறை எச்சரிக்கை செய்தேன், அவர்கள் கேட்கவில்லை. என்னால் கடல் நீரை வயிற்றுக்குள் அடக்கிக் கொள்ள முடியாத நிலை வந்தது,” என்றான்.
பிள்ளைகளை இழந்த பெற்றோர் நிம்மதி அடையவில்லை. வழக்கு தொடுத்தனர். விசாரணை நடந்தது. நீதிபதி அவன் கழுத்தை வெட்டிக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கினர்.
தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு குற்றவாளி நீதிபதியைப் பார்த்து “”மாட்சிமை தங்கிய கருணை உள்ளம் வாய்ந்த நீதிபதி அவர்களே! நான் சாகும் முன் என் அருமைத் தாயைப் பார்த்து வர எனக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான். நீதிபதியும் அனுமதி கொடுத்தார்.
அந்த மூத்தவன் தன் வீட்டை அடைந்தான். தாயிடமும், சகோதரர்களிடமும் தனக்கு நேர்ந்த கதியை எடுத்துக் கூறினான். அப்பொழுது இரண்டாம் மகன், “”உனக்குப் பதிலாக நான் போகிறேன். சகோதரர்களாகிய நாம் எல்லாரும் ஒருவரைபோல் ஒருவர் இருப்பதால் யாராலும் ஆள் மாறாட்டத்தைக் கண்டு கொள்ள முடியாது,” என்றான்.
ஆகவே, மூத்த மகனுக்குப் பதிலாக இரண்டாம் மகன் நீதிமன்றத்தை அடைந்தான். தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம் செய்யப்பட்டது. அவன் கழுத்து ஒரு கட்டையின் மீது இருக்குமாறு வைக்கப்பட்டது. வாள் ஓங்கி அவன் கழுத்தில் வீசப்பட்டது. அந்த வாள் இரும்புக் கழுத்துக்குள் பாய முடியுமா? முனை மழுங்கிப் போயிற்று. அவ்வாளைத் தீட்டினர். மீண்டும் வாள் வீசப்பட்டது. வாள் தெறித்துஓடியது. எனவே, அதிகாரி நீதிபதியிடம் முறையிட்டார்.
“இவன் கழுத்து இரும்புக் கழுத்து என்று நினைக்கிறேன். யாராலும் இவனை வாள் கொண்டு கொல்லவே முடியாது” என்றான்.
நீதிபதி தம் தீர்ப்பை சற்றே மாற்ற வேண்டியதாயிற்று.
“நீரில் மூழ்க வைத்து இவனை சாகடியுங்கள்” என்றார். தீர்ப்பு நிறைவேற்றப்படும் முன் குற்றவாளி அவரைப் பார்த்து தன் வீட்டுக்குப் போய் தன் தாயைப் பார்த்து வர அனுமதி கேட்டான். இம்முறையும் அவனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
வீட்டிற்கு போய் நடந்ததை சொன்னான் அந்த இரண்டாம் மகன். அப்போது மூன்றாம் மகன், “உனக்காக நான் போகிறேன்” என்றான்.
அதிகாரிகள் அவனைப் படகில் ஏற்றிச் சென்று கடலில் தள்ளினர். அவன் தண்ணீருக்குள் விழுந்தான். அவன் கால்கள் விடுவிடு என்று வளர்ந்தன. அவன் தலை தண்ணீருக்கு மேலேயே இருந்தது. அவன் மூழ்கிப் போய் விடவில்லை. அதிகாரிகள் ஆச்சர்யப்பட்டனர். அவனை இன்னும் ஆழமான இடத்திற்கு கொண்டு சென்று தள்ளினர். அந்த இடத்திலும் அவன் தலையும், கழுத்தும் தண்ணீருக்கு மேலேயே இருந்தன. அந்த அளவுக்கு அவன் கால்கள் நீண்டன.
இதைக் கேள்விப்பட்ட நீதிபதி தம் தீர்ப்பில் மீண்டும் ஒரு மாற்றம் செய்தார். கொதிக்கும் எண்ணெயில் இவனை தள்ளி விடுங்கள் என்றார். முன்போலவே குற்றவாளி தன் தாயாரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டான்.
வீடு சென்றவன், குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவனுக்கு நேர் இளையவன் போய் தண்டனையை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சென்றான்.
அதிகாரிகள் ஒரு கொப்பறையில் எண்ணையைக் கொதிக்க வைத்து அதனுள் அவனை இறக்கினர். ஆனால், அவனோ அதனுள் நீச்சலடிக்கத் தொடங்கி விட்டான். தீயை மேலும் அதிகப் படுத்தினர். என்ன தான் செய்தாலும் அவனை நெருப்பில் வேக வைக்க முடியவில்லை. அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது ஊரார் அங்கு வந்தனர். “‘இவனைக் கொல்வது எப்படி?’ என்று எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் செய்திட கட்டளை இடுங்கள்!” என்று வேண்டினர். நீதிபதியும் இசைவு தந்தார்.
ஆழக்குழி நோண்டி அதற்குள் அவனை நிக்க வைத்து மண்ணைப் போட்டு மூடினர்.
ஆனால் நடந்தது என்ன? அவனுக்குத் தான் நாட்கணக்கில் மூச்சை அடக்கி உயிருடன் இருக்கத் தெரியுமே! ஓரிரு நாட்கள் சென்றதும் யாரும் அங்கு இல்லாத பொழுது, மண்ணை தோண்டி தள்ளிக் கொண்டு வெளியே வந்தான். வீடு திரும்பிய அவன் தாயிடமும் சகோதரர்களிடமும் தன் அனுபவத்தைச் சொன்னான். அதன் பிறகு வெகுகாலம் அச்சகோதரர்கள் தங்கள் தாயுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.
– நவம்பர் 26,2010