நானும் அந்த நொடிகளும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 181 
 
 

எனக்காக காத்திருந்து களைத்து சிதைந்து போன நொடிகளை தேடினேன்.

திடீரென ஞாபகம் வந்தவனாக..

அதுவோ கோபித்து கரைந்து போனது காலத்திற்குள் என்று அந்த வாழ்வின் சாட்சி என்னிடம் கொஞ்சமும் இரக்கமின்றி சொல்லி விட்டு விடுவிடுவென்று பயணிக்கிறான்…

நான் அப்படியே அந்த வாழ்வெனும் சாலையில் உறைந்து நிற்பதை பார்த்து பொறுக்காமல் என் மீது சிறிது அன்பு கொண்ட ஒருவர் சீட்டு கட்டில் ஜோக்கர் இல்லாமல் வெற்றி அடைவதும் சாத்தியமான ஒன்று தானே என்று சமாதானம் செய்து அங்கே இருந்த தேநீர் விடுதியில் ஒரு கோப்பை தேநீர் வாங்கி தருகிறார்…

அந்த தேநீரின் சில நிமிட சுவையில் நான் சகலமும் மறந்து பயணிக்கிறேன்…

இங்கே மரணிக்காத இரவு என்று ஒன்று இருந்தால் சொல்லுங்கள்…

நான் அதில் மறைந்துக் கொள்ள கேட்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள்…

அந்த இரவிடம் எந்தவித இடையூறும் இல்லாமல் இடைவெளி இன்றி நான் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்…

ஏனெனில் என் கையில் காசு எதுவும் இல்லை… இங்கே சில பல நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தால் தான் இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கும் பெரும் கூட்டம் என்னை ஏற்றுக் கொள்ளும்..இல்லை என்றால் நான் இந்த சமூகத்தின் கட்டமைப்பில் மூழ்கி துடிதுடித்து இறப்பதை கொஞ்சமும் வெட்கம் ஏதும் இல்லாமல் வேடிக்கை பார்த்து சிரிக்கும் ஒரு பெரும் கூட்டம்..நான் ஒரு வாழ்வின் தீவிர ரசிக வழிப்போக்கன்… உங்கள் மொழியில் சொன்னால் நான் ஒரு பைத்தியக்காரன்…வழி நெடுகிலும் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சில பல வசைவுகளை வாங்கிக் கொண்டு பயணிக்கும் நான் மிகுந்த களைப்போடு அங்கிருந்த சாலையோர மரநிழலில் அமர்கிறேன்…

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பாக எனதருகே நான் மிகவும் நேசித்த அந்த புதிய நொடிகள் என்ன இவ்வளவு களைப்பாக அமர்ந்து விட்டாய் என்றது… நான் கொஞ்சம் நிமிர்ந்து அதை பார்த்து இங்கே இந்த பரந்து விரிந்த பூமியில் அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்கும் பெரும் திரளான மக்களின் கூட்டத்தில் எனக்கான வழி துணைக்கு ஏதுவாக எவரும் இல்லை… அப்படியே என்னை பார்த்து பரிதாபப்பட்டு வரும் ஓரிருவர் என் குணாதிசயத்தோடு தொடர்ந்து பயணிக்க இயலாமல் ஓடி விடுகிறார்கள் என்றேன்…

நான் சொல்வதை எல்லாம் மிகுந்த கனிவோடு கேட்டு கொண்டிருந்த காலமோ நான் இருக்கிறேன் என்று எனது கைகளை பரிவோடு பற்றிக் கொண்டு எதுவும் பேசாமல் இருந்தாலும் அதன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரின் சூட்டில் நான் அதன் பேரன்பை உணர்ந்துக் கொண்டு அதை நிமிர்ந்து பார்க்கிறேன்…

வா போகலாம்… இங்கே உன்னை போல நானும் உண்மையாக என்னை புரிந்துக் கொள்பவர்களை தான் தேடி அலைந்து திரிந்து கொண்டு இருந்தேன்… உனக்கு ஞாபகம் இருக்கிறதா அன்றொரு நாள் நான் உன்னை எதிர்பார்த்து களைத்து கோபமாக காலத்தின் பெரும் திரளில் மறைந்து கொண்டேனே…

ஆமாம் ஆமாம்… நான் செய்தது தவறு தானே உன்னை வெகு காலமாக காக்க வைத்தது என்றேன்..

அதெல்லாம் ஒன்றும் இல்லை… உன்னை புரிந்துக் கொள்ள எனக்கு தான் இத்தனை காலம் ஆனது… இங்கே யதார்த்தமான நகர்தலுக்கிடையே நாம் ஆழ்ந்த புரிதலோடு பயணிக்கும் நேரம் வந்துவிட்டது…

அங்கே சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையே நாம் இருவரும் ஆழ்ந்த பேரமைதியோடு இந்த வாழ்வெனும் சாலையில் பயணிப்போம்… நம்மை பார்த்து ஆழ்ந்த புரிதலோடு கொண்ட மக்கள் நம்மை தொடரட்டும்… நாம் அவர்களையும் கண்டுக் கொள்ளாமல் பயணிப்போம்… இங்கே வாழ்வின் அமிர்தத்தின் சுவையை எவருக்கும் உணர்த்த வேண்டாம்…அதை உணர்ந்தவர்கள் சுவைக்கட்டும்.. களிப்படைந்து கூத்தாடட்டும்…

அது வரை உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பைத்தியக்காரர்களாகவே தெரிவோம்…என்று என்னை சமாதானம் செய்து கைப்பற்றி இழுத்துக் கொண்டு ஓடியது…

எங்கள் இருவரையும் பார்த்து அந்த சாலையில் பயணிப்பவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பதை நாங்கள் எங்களுக்குள் கேலி செய்து உற்சாகமாக பயணித்து நாங்கள் அன்று இழந்த நொடிகளின் பொழிவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து எமது கைகளில் இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டே பயணிக்கிறோம்…

அதோ வசந்த காலத்தின் நுழைவு வாயில் எங்களை பேரன்போடு வரவேற்று அணைத்துக் கொண்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *