நாநா என்கிற நாராயணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 402 
 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னுரையாக ஒரு குறிப்புரை

முதுபெரும் எழுத்தாளர்/இதழாசிரியர் சாவி அவர்கள், காரக்ட்டர் என்ற தலைப்பில் கற்பனைப் பாத்திரங்களைப் பற்றிய சொற்சித்திரங்களைக் கொண்ட தொடர் எழுதினார். அந்த தொடர் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இன்றும் அந்த தொடர், நூலாக வாசிக்க கிடைக்கிறது.

அவருக்கு முன்பாகவே, முதுபெரும் எழுத்தாளர் வ.ரா என்கிற வ. ராமஸ்வாமி அவர்கள், நடை சித்திரம் என்ற பெயரில் கற்பனை மாந்தரை வர்ணிக்கும் நூலினை எழுதினார்.

அப்படிப்பட்ட முன்னோர்களின் அடிச்சுவட்டில் அடியேன் “இவர்களைச் சந்தியுங்கள்” என்ற புனைகதை தொகுப்பைப் படைத்துள்ளேன்.

வாசகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்றேன். நன்றி அன்பன்.

எஸ்.மதுரகவி

குறிப்பு : இந்தப் புனைகதைகளில் விவரிக்கப்படும் சூழல், உலா வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

வசந்தா நிலையம்

முகப்பில் 1984 ஆண்டு குறிப்பிடப்பட்ட இந்த வசந்தா இல்லத்தில் நாம் காண உள்ள பாத்திரங்களைச் சந்திக்கப் போகிறோம். இந்திரா நகரில் வ. உ.சி. தெருவில் உள்ள இந்த வசந்தா நிலையத்தை காலஞ்சென்ற செல்வந்தர் சபாபதி அவர்கள், தமது மனைவியின் பெயரில், பதினைந்து பெரியதும் சிறியதுமான வீடுகளைக் கொண்டதாக கட்டி ஜனங்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தார். பொருளாதார கஷ்ட நிலையில் இந்த காம்பவுண்டுக்கு குடி வந்தவர்கள், வாழ்வில் முன்னேறி சொந்த வீடு கட்டி வாழச் சென்றுள்ளார்கள். மையத்தில் இருக்கும் இந்த வீடு உள்ள பகுதியை புரோமோட்டரிடம் கொடுத்து விடலாம் என்று சபாபதி அவர்களின் பேரன் கௌஷிக்கிடம் பலரும் அவன் யோசனை கேட்காத நிலையில், தாங்களாக முன் வந்து ஆலோசனை சொன்னார்கள். எந்த நிலையிலும் இந்த காம்பவுண்டை மாற்றியமைக்க கூடாது என்று தாத்தா கேட்டுக் கொண்டுள்ளார் என்று யோசனை கூறியவர்களிடம் பொறுமையாகச் சொல்லி அவன் நகர்ந்து விடுவான். கௌஷிக், வெளிநாட்டு வேலைக்குப் போவதற்கு முன்பாக, இந்த காம்பவுண்டுக்கு அவனுடைய அப்பா ராஜேந்திரனின் நண்பர் நாராயணனை கேர் டேக்கர் ஆக அமர்த்தி விட்டுச் சென்றான். அவர் காம்பவுண்டை பார்த்துக் கொள்வதோடு வாடகை பணத்தை வசூலித்து கௌஷிக்கின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். மாதம் ஒரு முறை கௌஷிக் இவரிடம் பேசி விடுவான்.

இனி… நாம் வசந்தா நிலையத்தின் மாந்தரை காண்போம்.

நாநா என்கிற நாராயணன்

வசந்தா நிலையத்தை பார்த்துக் கொள்ளும் கேர் டேக்கர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு உள்ள அறுபது முடித்த சீனியர் சிட்டிசன் தான் இந்த நாராயணன். கனத்த சரீரம், மழித்த முகம், கருப்பான தலைமுடி கொண்ட இவர் முதல் போர்ஷனில் ஒண்டியாக தங்கி இருக்கிறார். காம்பவுண்டில் இருப்பவர்கள், நாநா சார் என்று அழைப்பார்கள். இவருடைய முன்கதைச் சுருக்கத்தை யாரும் கேட்டதில்லை. இவரும் யாரிடமும் அவர்களுடைய சொந்த கதையை தேவைக்கு மேல் கேட்க மாட்டார். அவர்கள் உதவி என்று கேட்டால் அவரால் முடிந்த உதவியை செய்வார்.

வீட்டிலேயே அடைந்து கிடக்க மாட்டார். தொண்டு நிறுவனங்களில் தன்னார்வ வேலை, கோயில் பராமரிப்பு பணிகள் என்று ஏதாவது வேலையில் அன்றாடம் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பார். இந்த காம்பவுண்டில், சபேசன் என்பவருக்கு மட்டும் மெஸ் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும், ஒற்றை ஆளாக வசிக்கும் குடித்தனக் காரர்களுக்கு அந்த மெஸ் வரப்பிரசாதமாக இருக்கும். கௌஷிக் கொடுக்கும் கௌரவ ஊதியம், தன்னார்வ அமைப்புகள் மூலம் கிடைக்கும் சிறிய தொகை இவற்றைக் கொண்டு மெஸ்ஸில் சாப்பிடாமல் நாநா தானே சமைத்து சாப்பிட்டு சிக்கனமாக, ஆக்கப்பூர்வமான வாழ்க்கை நடத்தி வந்தார்.

நாள் முழுவதும் எங்கெங்கோ சுற்றி வந்தாலும் இரவில் கூட்டை அடைந்ததும் அலுப்பு இல்லாமல் உணவு சமைத்து சாப்பிடுவார். காம்பவுண்டில் இருப்பவர்களிடம் வாடகை வசூலிப்பதில் கறார் காட்ட மாட்டார். அதே நேரத்தில் பராமரிப்புக்காக போட்ட தமது கைக்காசை வாங்காமல் விட மாட்டார். டிவி ஒலி கேட்காத வீடு, அவருடைய வீடு மட்டும் தான். ஏனென்றால் சின்னத்திரையில் நேரம் செலவழிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலும் அதிலேயே மூழ்கி கிடக்க மாட்டார்.

காம்பவுண்டில் உள்ள குடித்தன வீடுகளில் விசேஷம் நடந்தால் அழைத்தால் தலையைக் காட்டி விட்டு அவருடைய அன்றாட பணிகளுக்குத் திரும்பி விடுவார். துக்க நிகழ்ச்சிகளுக்கு அவராகவே சென்று இறுதிச் சடங்கில் கடைசி வரை ஒத்துழைப்பு கொடுப்பார். எரிச்சல் காட்டாதவராக இருப்பதால், புதியவர்களும் பழைய குடித்தனக் காரர்களும் இவர் மீது மரியாதை வைத்திருந்தனர். வம்பு பேசும் மிக சிலரும் இவரைப் பற்றி தவறாக பேசுவதில்லை.

அன்றொரு நாள். இரவு எட்டு மணி. மழை, பெரு மழையாகப் பொழிந்து கொண்டிருந்த தருணம். அன்று அவர் இரவு உணவு சமைக்கவில்லை. பாலும் பழமும் சாப்பிட்டார். மழைச்சாரல் உள்ளே வந்ததால் வாசற் கதவை சாத்தச் சென்றார். அங்கு, நீலச் சேலை அணிந்த, பருமானான உடல்வாகு கொண்ட வயதான மாநிற பெண்மணி நின்று கொண்டிருந்தார். ‘ இது பத்து வருஷம் முன்பு பிரிந்து சென்ற என் மனைவி கமலாவா? இல்லை அவளுடைய தங்கை ராதா தான் விருந்தாளியாக வந்திருக்கிறாளா?’ யோசித்தார். கண்ணாடியை அணிந்து கொண்டார். மனைவி தான். அவர் தழுதழுத்த குரலில் ‘வா வா’ என்றார். அந்தப் பெண்மணி உள்ளே வந்தார்.

– இவர்களைச் சந்தியுங்கள் (சிறுகதைகள்), எஸ்.மதுரகவி வெளியீடு, விழுப்புரம்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *