கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 179 
 
 

(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம் – 22

ராமாயினுடைய சகோதரன் இவர்கள் போவதற்கு முன்பே உயிர் விட்டுவிட்டான். ராமாயி விம்மினாள், விக்கினாள், முடித்தாள். ஆனால் அவன் எழுந்து வரவா போகிறான். 

‘”கண்ணான என் பிறப்பைக் 
காணுவது எக்காலம்?
பொன்னான என் பிறப்பைப் 
போய்ப் பார்ப்ப தெக்காலம்?” 

என்று பிலாக்கணம் சொல்லி அழுதாள். பயன் தான் ஒன்றும் இல்லை. அவன் நாலு பேருக்கு மேலாகத் தன் கடைசிப் பிரயாணத்தையும் முடித்து விட்டான். 

கூட வந்திருந்த ஊர்க்காரர்கள் திரும்பலானார்கள். இரண்டொருவர் சின்னப்பனிடம், “நீ வருவதற்கு இன்னும் இரண்டொரு நாள் ஆகும் பாவம்; எங்கள மாதிரி உடனேயே வந்துவிட முடியுமா? என்னமோ சும்மா உங்க மாமியார் அழுது அரைச்சீவனாய் போறாள்” என்று கூறிச் சென்றனர். 

தடியால் அடிபட்ட மாடு போல் சின்னப்பன் மௌனமாகவே இருந்தான். என்ன செய்வதென்று அவனுக்கு விளங்கவில்லை. 

“அதிர்ச்சியிலிருந்து இடி இடிக்கத் தலைப்படுகிறதே. குடித்தனம் ஸ்திரமாக நிற்குமா?” என்று எண்ணிக் கலங்கினான். 

தன்னுடைய கனவுகள் இராத் தூக்கத்திலேயே மறைந்து மாயமாய் போனதால் காளியம்மாள் கலங்கினாள். என்னென்ன எண்ணியிருந்தாள். மகனுக்கு ஒத்தாசையாக மருமகனையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம். அதோடு மருமகனது நிலபுலன்களை விற்ற ஆஸ்தி வேறு தன்னிடமே இருக்கும்! பார்க்கிறவர்கள் எல்லோரும் வியந்து, ஆ, காளியம்மாளின் அதிர்ஷ்டத்தைப் பார்!” என்றல்லவா பேசிக் கொள்வார்கள். இப்படியெல்லாம் பின்னிப் பின்னித் திரித்து வைத்திருந்த அவளது சிந்தனைக் கயிறுகளில் சிக்கு விழுந்து விட்டது. இனி பிரிக்கவே முடியாதோ என்னவோ? உபயோகமற்ற ஓட்டை உடைசல் சாமான் போல், அப்பெரிய வீட்டின் ஓர் மூலையில் காளியம்மாள் விழுந்து கிடந்தாள். ‘அந்தோ’ அம்மணி உன்னுடைய துடிதுடிப்பான நடையும், பேச்சும் எங்கே? அற்புதமான கற்பனைக் கனவுகள் எங்கே? அவையெல்லாம் காளான் போல் மறைந்து விட்டனவா?” என்று கேட்கக் கூட யாருமில்லை. 

இடையிடையே ‘அப்போது’ வராதவர்கள், துக்கம் விசாரிக்க வந்து போவார்கள். கொஞ்ச நஞ்சம் பூத்துப் போயிருக்கும் கனலை விசிறி விடுவார்கள். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் ஸ்வரம் குறையாது அழுவது. அழுது அழுதுதான் அரை சீவனாய் விட்டாளே! 

ஆச்சு, ஒரு வாரமாயிற்று. காளியம்மாளின் இதய வேதனையும் சற்று மட்டுப்பட்டது. புத்திர வாஞ்சையில் விழுந்து கிடந்த உள்ளம், மகள், மருமகன், பாசத்தால் தலையெடுத்தது. 

சின்னப்பனுக்கு சீக்கிரமாக ஊர் போக வேண்டுமென்று. ஆனால் எப்படிச் சொல்வது? அங்கே கணக்கற்ற வேலைகளைப் போட்டுவிட்டு இங்கேயே இப்படிச் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதா? என்று சிந்தித்தான். 

ஆளுக்கொரு மூலையில் சோர்ந்து கிடக்கும் பெண்களைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாயிருந்தது. கடைசியாக இப்படியிருந்தும் தான் என்ன என யோசித்துத் தன் மனைவியிடம், “நாம் போகாது போனால் அங்கே என்ன நடக்கப் போகிறது. நாகம்மாள் சங்கதி உனக்குத் தெரியாதா? உன் அம்மாவிடம் சொல்வதுதானே?” என்றான். 

ராமாயி, “நான் அம்மாவிடம் சொல்வதென்ன? நீங்களே சொல்லுங்களேன்” என்றாள். 

சின்னப்பனும் அரை மனதாகக் காளியம்மாளிடம் தெரிவித்தான். அவளிடமிருந்து மங்கலான கம்மிய குரலில், “இன்னும் இரண்டொரு நாள் பொறுத்துப் போகப்படாதா” என்று பதில் வருமென எண்ணியிருந்த சின்னப்பன் ஏமாந்து போனான். ஏன்? காளியம்மாள் ‘கல கல’வென பேசலானாள். 

“சாமி, இனி நீதான் எனக்கு மவனுக்குப் பதில் மவன். எப்போதும் என் மவன் தானப்பா நீ. என்னவோ கடவுள் செயல். இனி அரைக்கணம் உங்களிருவரையும் விட்டு இருக்க மாட்டேன். எனக்கு இனி உயிரோடு இருக்கலாமென ஆசையில்லை. என்னவோ உங்களிருவருக்காகத்தான் நான் இருக்கிறேன் – இனி யோசித்துப் பிரயோசனமில்லை. அவளை என்ன செய்கிறதென்பதுதான் பேச்சு. உன் மனதுக்குப் பிரியமானதைச் சொல்லுப்பா. அப்படியே செய்யலாம்.” 

சின்னப்பன் மெதுவாகத் தலையைச் சொரிந்து கொண்டே “என்ன?” என்றான். 

காளியம்மாள் அதே குரலில், “நீயே சொல்லுப்பா?” என்றாள். கேள்வி அர்த்தமானால் தானே பதில் சொல்லலாம். நோயைத் தெரிந்து கொள்ளாமலேயே மருந்து கொடுப்பார்களா என்ன? 

“நீங்க சொன்னா, சரி. நான் அப்படியில்லெ என்று தாட்டியா விடுவேன்” என்று ரொம்பத் தெரிந்த பாவனையில் கூறினான். 

காளியம்மாளுக்கு பாலாபிஷேகம் செய்த மாதிரி ஆனந்தம் பொங்கியது. “நான், இந்த உறுதியில் தானே மவன் போனதையும் மறந்திருந்தேன். என் அப்பன் பேச்சுக்கு அட்டி சொல்லவா போறான்; சரி, நாகம்மா விசயம் பைசல் ஆச்சா” என்றாள். அப்போது தான் சின்னப்பனுக்கு எந்த விஷயத்தைக் குறித்து காளியம்மாள் பேசுகிறாள் என்பது தெரிந்தது. 

“உங்களுக்கு அவள் கேட்டது ஒன்றும் தெரியாதே! பங்கு வேண்டுமென்று ரகளை எழுப்பி விட்டாளே!” என்றான் சற்று எரிச்சலாக. 

“ஓகோ, அவளே தொடங்கிவிட்டாளா? எனக்குத் தெரியாதே. இருக்கட்டும், நாச்சியப்பன் அண்ணன் இங்கு வந்திருக்கிறான். அவனைக் கண்டு பேசினாலே தம்பியிடம் பேசினது போலத்தான். செரி அடுத்த வாரமே கிரயத்தை முடித்துக் கொள்ளலாம். பணம் எட்டு நாளைக்கு முன் இப்போதே வேண்டுமென்றாலும் நோட்டு, நோட்டா எண்ணி வைக்கத் தயங்க மாட்டான்” என்று காளியம்மாள் சரமாரியாக அடுக்கினாள். 

“அப்படியே முடித்து விடுவோம்” என்று சின்னப்பனும் உறுதி தந்தான். அடுத்த கணமே அவன் மனதில் ஓர் நினைவு பிறந்தது. சொந்த ஊர்ப் பாசம் குப்பென்று அவன் உள்ளத்தைக் கவ்வியது. ‘பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டு வருவதா? அதுவும் அடியோடு சொத்து முழுவதும் விற்றுவிட்டா? பிறர் பார்த்து என்ன கேலி பேசுவார்கள்? ஆனால், அவர்களுக்காக என் சௌக்கியத்தைக் குறைத்துக் கொள்வதா? யார், என்ன பேசினால் எனக்கென்ன? வம்பர்கள் வீண் கதை கதைக்கத்தான் செய்வார்கள். நான் என் இஷ்டப்படியே நடப்பேன். ஆனால் நாகம்மாள்? அவளை எங்கே விடுவது. விடுவதென்ன? ஊரிலே வீட்டைக் காத்துக் கொண்டு கிடக்கிறாள். அவளுக்கு அநேகம் நேசர்கள் இருக்கிறார்கள். அவள் பக்கம் தானே மணியக்காரர் முதற்கொண்டு. எனக்குத்தான் அவர்கள் விரோதிகள். நான் தான் பயந்து கொண்டு ஓடி வருகிறேன். ச்சை, பயமா? இல்லை, நியாயமாக விலகிக் கொள்கிறேன். அந்த முட்டாள்களிடமிருந்து. ஆனால் உலகம்? உம், தலை கால் தெரியாத உலகம் – என்ன பிதற்றினால் எனக்கென்ன?’ 

“யோசனை என்னப்பா? அடுத்த வாரமே நானும் வாரேன். போவோமே” என்றாள். சின்னப்பனும் வேறு ஒன்றும் கேட்காது, “உம்” என்றான். 

இங்கே இப்படித் திட்டம் உருவாகிக் கொண்டிருக்கையில், அங்கே தனித்திருக்கும் நாகம்மாள் என்ன செய்கிறாள் என்பதைக் கவனிப்போம். 

அத்தியாயம் – 23

கட்டறுத்துக் கொண்ட காளை போலவும், சுயேச்சையாகச் சிறகடித்துப் பறந்து செல்லும் பட்சி போலவும் நாகம்மாள் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருந்தாள். அவ்வீட்டுக்கு அவளே ராணி, அவள் வைத்ததே சட்டம். வாசல் குப்பையை பெருக்கித் தள்ளுவாள். தள்ளாதும் விடுவாள். கன்றை இடம் மாற்றிக் கட்டுவாள். கட்டாதும் விடுவாள். பாலைச் சும்மா காய்ச்சிக் குடிப்பாள். குடிக்காமலும் இருப்பாள். இஷ்டம் போல் சமைப்பாள். சும்மாயிருப்பாள். எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் செல்லுவாள். அவளை ‘ஏனென்று’ கேட்பார் யாருமில்லை. சுதாவாகப் பாய்ந்தோடும் காட்டாறு போல் தன் போக்கில் தலைகால் தெரியாது ஏக அமர்க்களமாயிருந்தாள். வீடு எந்நேரமும் கலகலப்பாகவே இருந்தது. சதா பேச்சுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கொண்டே இருப்பார்கள். இரவு பகல் வித்தியாசமின்றி நினைத்த சமயத்தில் அடுப்பு மூட்டுவாள். சாதமா, குழம்பா எதுவும் செய்வாள். தாராளமாக வந்தவர்களுக்குப் பரிமாறுவாள். திருப்தியாகச் சாப்பிட்ட பின் வம்புப் பேச்சுக்குக் கேட்கவேணுமா? ஓயாத ஒரே கொண்டாட்ட மயம் தான்! 

கெட்டியப்பன் இங்கேயே ‘முகாம்’ போட்டு விட்டான். அடடா, அவன் தடபுடல்களைப் பார்த்தால் “ஏதேது இந்த ஆசாமி தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் போலிருக்கிறதே!” என்று எண்ணத் தோன்றும். 

“என்ன கோழி போடலாமா?” என்பான் முறட்டுத் தொனியில். 

“ஆஹா அதற்கென்ன?” என்பாள். 

உடனே மிளகு அரைத்தாகி விடும். கண்மூடி விழிப்பதற்குள் கோழி பக்குவமாகி விடும். அப்புறம் கேட்க வேண்டுமா? ‘குளு, குளு’ வென்ற தென்னங்கள்ளுடன் ஆனந்தமாக உணவை உள்ளே தள்ள வேண்டியதுதான். இடையில் சில தமாஷ்களும் நடக்கும். முதலியார் நடுவில் சில பேச்சுக்களைப் போட்டு மடக்குவார். 

“ஆமாங்க ஐயா நீங்களெல்லாம் குடித்து விட்டு போகிறவர்கள் தான். உங்களால் தான் என்னத்தை சாதிக்க முடியும்?” என்பார். 

“பாக்கலாமே” என்பான் கெட்டியப்பன். “என்னத்தைப் பிடித்துப் பார்க்கிறது? ‘அவன்களெல்லாமே வந்து வாங்கிக் கொள்ளட்டும்’ என்று சின்னப்பன் பேசியது தெரியாதா? கேட்டுப் பாருங்களே நாகம்மாளே சொல்லும். என்னவோ பாக்கிறீர்களாம்” என்று ஏளனமாக நாராயணசாமி ஆரம்பிப்பான். கெட்டியப்பன் தைரியமாக, “அட கடைசிக்கு இருந்தே இருக்குது” என்பான் தீர்மானமாக. 

இதைக் கேட்டு இருவரும் சிரிப்பார்கள். 

முதலியார் சட்டென, “அப்படியெல்லாம் திடுபுடென கை வைப்பது கூடாது. அது என்ன ஒரு நிமிஷத்திய காரியம். நாமும் பொறுத்துப் பார்ப்போம். அக்கிரமத்திற்கு நாம் போக வேண்டாம். ஆனா வந்தாலும் விட வேண்டாம்” என்பார். வழியில் போகிறவன் கூப்பிட்டுச் செருப்பால் அடித்தாலும் முதலியார் மேலும், கீழும் பார்த்துக் கொண்டு முறுக்காது போகிற ஆசாமி, இவ்வளவு தூரம் பேசுகிறார்! அதையும் கேட்க இருக்கிறார்கள் மஹாஜனங்கள்! 

“ஆமாமப்பா அது நிஜம்தான்” என்று கெட்டியப்பன் ஆமோதிப்பான். 

நாகம்மாள் “மணியக்கார அண்ணனும் இதுக்கு ஒத்துக்குவாங்களா?” என்பாள். 

முதலியார் தாழ்ந்த குரலில், “கண்ணைத் தின்ற குருடனும் நாயத்தை ஒத்துக் கொண்டு தானே ஆகணும்? அண்ணனை அப்ப ஒத்துக் கொள்ள சொல்கிறவன் நானல்லவா? அதைப் பற்றி நீங்க துளி கூடக் கவலைப்பட வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு இரண்டு மூன்று செலவுக்கு வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்வான். 

தனக்காக இவ்வளவு பேசுகிற மனிதனுக்கு நாகம்மாள் ‘இல்லை’யென்றா சொல்லிவிடுவாள்? தாலி தண்டையாவது விற்றுக் கொடுப்பாளல்லவா? ஆமாம் இப்படிக் கொடுத்துத்தான் அடியோடு நாசமடைய வேண்டாம். ஒரே நாளில் ‘கெட்டுப் போ என்றால்’ கெட்டா போவர்கள். 

தனித்திருக்கையில் நாகம்மாளுக்கு சில சமயங்களில் இவை எல்லாம் தோன்றும். தன்னைத்தானே வெறுத்துக் கொள்வாள். நொந்து துக்கிப்பாள். 

‘நான் ஏன் இங்கு வந்து சேர்ந்தேனோ? நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி. பெரிய குடும்பத்துக்கு அவக்கேடாக வந்து சேர்ந்தேனே! தலைமுறை தலைமுறையாக ஐக்கியமாக வாழ்ந்திருந்தவர் களுக்குக் கெட்ட பேர் உண்டு பண்ணப் பார்க்கிறேன். பங்குபிரிக்க வேணுமென்று பாழ்படுத்த ஆரம்பிக்கிறேன். ஐயோ சின்னப்பன் எவ்வளவு அன்பாக வைத்திருக்கிறான். ஒரு வார்த்தை காரமாகச் சொல்வானா. நல்ல மனதை அன்று புண்படுத்தி விட்டேனே! இனியாவது நல்லதனமாக நடந்து கொள்ள வேண்டும். சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் அல்லவா?” 

இவ்வித நினைவுகள், ஒரு வினாடிக்கப்புறம் பாதரஸம் போல் நிலைகொள்ளாது. ‘அப்படி எதற்கு இருப்பது’ கட்டறுத்துக் கொண்டு பத்து நாள் இருந்தாலும் அதுவே அடிமையாகப் பத்தாயிரம் வருஷம் இருப்பதை விட மேலல்லவா? எனக்கென்று தனியாக எல்லாம் இருக்க வேண்டும். நான் நினைத்தால் எதையும் செய்ய வேண்டும். என் மகளுக்கு நகை நகையாகப் பூட்டிப் பார்க்கவேண்டும். இந்த பிசினாரிகள் அதற்குச் சம்மதிப்பார்களா? அடேயப்பா, அன்றைக்கு கேட்டதும் கேட்காததுமாய் சீத்துப் பூத்தெனச் சீறுகிறானே! யார் சம்பாதித்த சொத்து? என் புருஷன் சொத்து எனக்குச் சேராதா? இத்தனை கோபம் எவ்வளவு நாளைக்கு வருகிறதெனப் பார்க்கிறேன்.’ நாகம்மாள் இப்படி உக்கிரமாக இருக்கும் வேளையில் கெட்டியப்பனும் இரண்டொரு வார்த்தை சொல்லி வைப்பான். எரிகிற நெருப்பிற்கு எண்ணெய் விட்ட மாதிரி, அவள் உள்ள ஜ்வாலை கொழுந்து விட்டு எரியும். யாராயிருந்தால் தான் என்ன? சதா ஒருவருடைய துர்போதனைக்கு ஆளாகிவிட்டால் அப்புறம் அவர்கள் இதயம் மாறுவதில் ஆச்சரியமில்லை அல்லவா? 

அத்தியாயம் – 24

அன்று புதன்கிழமை. நாகம்மாள் ரொம்ப முகமலர்ச்சியுடன் இருந்தாள். கண்ணாடியைச் சீந்தாதவள் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறாள். தும்பைப் பூப்போன்ற வெள்ளைப் புடவையை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி சீராகச் சொருகிக் கொள்கிறாள். இன்று ஏது இவ்வளவு குதூகலம். இன்று சந்தை நாளென்றா, இல்லை, வாரந் தவறாது தான் சந்தை வருகிறது. அப்போதெல்லாம் இவ்வளவு ஆனந்தப் பெருக்கு ஏற்பட்டதில்லையே? பின்பு பூரிப்புக்குக் காரணமென்ன, மணியக்காரர் வருகிறார்! இத்தனை நாளாக அங்குமிங்கும் பார்த்து யோசனை சொல்லி வந்தவர் இன்று நேரிலேயே வருகிறார். அவராக வீடு தேடி வருகிறதென்றால் நாகம்மாளுக்கு அதைவிட சந்தோஷச் செய்தி வேறு இருக்கமுடியுமா? வாசல் பக்கம் போவதும், உள்ளே வருவதும், பொழுதைப் பார்ப்பதும், யோசிப்பதுமாய் இருந்தாள். அவளிடம் மட்டும் அமானுஷயமான சக்தி ஏதாவது இருந்தால், அப்போது அடிக்கும் மாலை வெயிலை மாற்றி காரிருள் மயமாகச் செய்திருப்பாள். ஏனென்றால் இருட்டினவுடன் வருவதாக மணியக்காரர் தெரிவித்திருந்தார். 

முலாம் பூசிக் கொந்திருந்த இயற்கை தன் சௌந்தர்யக் கதிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கிற்று. மரங்களின் உச்சியிலும் வீட்டுக் கூரையிலும் படிந்திருந்த தங்கச்சிவப்பு மெதுவாக மறைந்தது. இரவு தன் நீண்ட கரும்போர்வையை வாரி விரித்தது. இரவின் சாந்த மடியிலே பக்ஷ ஜாதிகள் தலைசாய்த்தன. அந்த அமைதியான வேளையில் சித்திரப்பாவை போன்று நாகம்மாள் அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு சருகின் அழைப்புக்கும் சட்டெனத் திரும்புவாள். சிறு காற்றில் ஓலைகள் படபடக்கும் போது செருப்புச் சத்தம் என்று எண்ணி ஏமாறுவாள். அர்த்தமற்ற சத்தம் ‘ஹோ’ என எழும். திடுக்கிட்டு தலை நிமிருவாள். ‘கெட்டியப்பன் முன்னால் வந்திருக்கப்படாதா?’ என்று அவன் மேல் சலித்துக் கொள்வாள். இவ்வித விவரிக்க முடியாத ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். 

“என்னைத்தான் திட்டப் போகிறாள்” என்று அவள் மனதைத் தெரிந்தவன் போலக் கெட்டியப்பன் குரல் கேட்டது. “எங்கள் முகத்திற்காக உங்களை இன்று ஒன்றும் செய்யமாட்டாள்” என்று முதலியார் தமாஷ் பண்ணினார். 

நாகம்மாள் விளக்கை உயர்த்தி கதவை நன்றாகத் திறந்து, “வாங்க, வாங்க” என உபசரித்தாள். பாயை எடுத்து அவள் விரிக்கும் முன்பே, “இல்லெ, இல்லெ, வேண்டாம்” என்று முதலியார் தடுத்தார். 

“உங்களுக்கு இல்லை -ஆனால்…” என்று மணியக்காரர் முகத்தைப் பார்த்து விட்டு நாகம்மாள் மறுபடியும் பாயை எடுக்கப் போனாள். 

“எனக்குத் தெரியும். இதோ பாருங்க கட்டில் இருக்கிறது. அவர் உட்கார்ந்து கொள்ளட்டுமே” என்றார் முதலியார். “எங்குதான் உக்காந்தா என்னப்பா?” என்று பெரும் போக்காகக் கூறி மணியக்காரரும் கீழேயே உட்கார்ந்தார். மணியக்காரர் அவ்வறையின் ஒவ்வொரு மூலையையும் மேலும் கீழும் நோக்கியவாறு, “வெகுநாளைக்கு முன் வந்தது. பத்துப் பனிரண்டு வருஷமிருக்கும் இங்கு அடியெடுத்து வைத்து. அதற்கப்புறம் யார் வந்தார்கள், போனார்கள்? என்ன நாகம்மா, அந்த ஓரத்திலே சின்ன மாடக்குழி ஒன்று இருந்ததே, இப்போது மூடிவிட்டீர்களா?” என்று கேட்டார். 

நாகம்மாள் என்னவோ யோசித்துக் கொண்டு நின்றாள். 

கெட்டியப்பன் ஆச்சரியத்துடன், “உங்களுக்கு அதெல்லாம் எப்படி ஞாபகத்திலிருக்கிறது?” என்றான். 

“இந்த ஆச்சரியத்தில் தான் பேசக்கூடத் தோன்றாது நிற்கிறதைப் பாருங்களேன்” என்று நாகம்மாளைச் சுட்டிக் காட்டினார் முதலியார். 

“என்னது, என்ன?” என்று நாகம்மாள் இரண்டு மூன்று தரம் கேட்டாள். 

மணியக்காரர் சிரித்து விட்டு, “அது என்னவோ சின்ன சங்கதி. என்ன நாகம்மா, நான் சீக்கிரமா இப்போது போயாக வேண்டும். யாராவது பார்த்தால் நாளைக்குச் சின்னப்பன் வந்ததும் என்னவாவது சொல்லி வைப்பார்கள். எனக்கெல்லாம் இங்கு என்ன வேலை என்று அவன் அப்படியும் இப்படியும் பேசுவான். நானும் சும்மா இருக்க மாட்டேன். கோபத்தில் கண்டபடி பேசி விட்டால் இன்னும் சங்கடம் நடந்து கொள்வது நல்லதல்லவா? என்ன நான் சொல்வது சரிதானே” என்றார் அவளைப் பார்த்துக் கொண்டே. 

தானே? இத்தனை தொல்லையில்லாமல் 

நாகம்மாள் தலையைக் குனிந்தபடி, “உங்களுக்குத் தெரியாததை, நான் என்ன அதிகம் சொல்லப் போகிறேன். எல்லாம் நீங்க சொன்னா செரி” என்றாள். 

“காலையில் சின்னப்பன் வரப்போறானம். எனக்குத் தகவல் கிடைத்தது. அவசியம் நாளைக்கு வந்து விடுவான் என்று தான் நானும் நினைக்கிறேன். போய் பதினைந்து நாளைக்கு மேல் ஆகிறதல்லவா? தோட்டங்காடுகளை விற்க ஏற்பாடு பண்ண இவ்வளவு நாட்கள் போதாதா?” என்றார். 

“என்ன ஏற்பாடு ஆகிவிட்டதா?” என்று திகைப்புடன் நாகம்மாள் கேட்டாள். 

“ஆனமாதிரிதான். கையெழுத்து ஒன்றுதான் பாக்கி!” 

“அப்புறம்?” 

“நீ ஏன் கலங்க வேண்டும். எதுக்கும் அஞ்சாதே. எனக்கு சரி பாதியைப் பிரித்து விடு” என்று தாராளமாகக் கேளு. சும்மா மிரட்டினா ‘இதெல்லாம் தெரியுமப்பா’ என்று சொல்லிவிடு. ‘அப்படியாச்சா? லொட, புட, அது செய்திடுவேன், இது செய்திடுவேன்’ என்றால், எனக்குக் கொடுத்தபின் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று தைரியமாகச் சொல்லு. நீயேன் தயங்கோணும்; தாமதம் செய்யோணும்! இனித் தாமதித்தால் வெள்ளம் தலைக்கு மேல் போவது நிச்சயம்.” 

“வாஸ்தவம் தான்” என்று முதலியார் பேச்சை ஆமோதித்தார். 

நாகம்மாள் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்துவிட்டு,  “நான் என்னென்ன செய்யோணும், என்ன செய்யச் சொல்றீங்க?” என்று கேட்டாள். 

“அன்றைக்கு மாதிரி அரண்டு போய் பதில் பேசாது விட்டுடாதே. எனக்கு உண்டானதைப் பிரித்து விடு என்று கண்டிப்பாகக் கேள். பின்னால் வருவதற்கு நாங்கள் இருக்கிறோம். அவன் என்ன ஆகாசத்திலா பறந்து விடுவான். நீ மட்டும் உறைத்து நின்றால் விலைக்கு வாங்க ஒருவன் கிட்ட வந்துவிடுவானா?” என்றார் மணியக்காரர். 

நாகம்மாள், “ஆகட்டும் நீங்கள் சொன்னபடிக் கேக்கிறேன்” என்றாள். 

பின்பு மணியக்காரர் கெட்டியப்பனிடம் “அவன் வந்த பிறகு இந்தப் பக்கம் அடிக்கடி தலைகாட்டாதே. தப்பாக நினைக்க இடம் உண்டாகும்” என்றார். 

“அண்ணா, இப்போதே நான் சாளைக்குப் போய்விடுகிறேன். நீங்கள் கூப்பிடுகிற சமயம் வருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 

“நாங்களும் அவனோடு போகிறோம்” என்று முதலியார் சொல்லவும் மணியக்காரர் சிரித்துக் கொண்டு எழுந்தார். 

அவர்கள் போனபின் கொஞ்ச நேரம் வரை நாகம்மாள் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தாள். கதவைத் தாளிட்டுப் படுக்கவும் இஷ்டமில்லை. உட்கார்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. கலவர மனதுடன் யோசனையில் மூழ்கினாள். அப்போது ‘சொத்தெ’ன்று ஒரு பூச்சி முகட்டிலிருந்து கீழே விழுந்தது. பல்லியால் கவ்வப்பட்ட பாதி பாகம் போக மீதி பாதி பாகமே தரையில் துடித்துக் கொண்டிருந்தது. அந்த மரித்துப் போகும் பூச்சியைக் கண்கொட்டாது பார்த்துவிட்டு மேலே கூரையைப் பார்த்தாள். உயர எங்கும் பூச்சிக்கூடு. ஒட்டடை அடித்து வருஷக் கணக்காகிறது. இதில் புகைக் கலப்பு வேறு கன்னங்கரேலெனக் கப்பியிருந்தது. மேலும் கீழும் பார்க்கப் பார்க்க நாகம்மாளுக்குக் கசப்பாக இருந்தது. 

‘என்ன இது ஒரே குப்பை மயம். வந்தால் என்ன சொல்வார்கள்? சொல்லுவதென்ன, எனக்கே அசிங்கமாக இருக்கிறதே.’ காலடி ஓசை கேட்டது. திடுக்கிட்டு நோக்கினாள். யாரென்று தெரியவில்லை. ஒரு வேளை கெட்டியப்பனாக இருக்குமோ, அல்லது முதலியாரோ, யாரென்று அவளால் நிச்சயம் செய்ய முடியவில்லை. “என்ன கோயில் பாளத்தாளா!” என்று கேட்டுக் கொண்டு பெரியண்ண கவுண்டர் வந்தார். அயலூரிலிருந்து கலியாணமாகி வரும் பெண்களை அந்த ஊர்ப்பெயரைச் சொல்லியே தான் அநேகமாகக் கூப்பிடுவார்கள். 

தன்னை அவ்விதம் பெயரிட்டு அழைப்பவர் யாரென்று நாகம்மாள் நோக்கினாள். 

“நீங்க தான் என்னைப் பயப்படுத்தினது?” 

“நான் அல்ல, எங்க தாத்தா வந்தாலும் உன்னைப் பயப்படுத்த முடியுமா? இந்த அர்த்த ராத்திரியில் நீதான் யாரையோ பயப்படுத்த உக்காந்து கொண்டிருக்கிறாய். நான் அகஸ்மாத்தாக வந்து சேர்ந்தேன்” என்று சொல்லிவிட்டுப் பெரியண்ணன் சிரித்தார். 

நாகம்மாளும் கூடச் சிரித்து விட்டுப் பின்பு ரொம்ப அனுசரணையாக, “இன்னேரத்தில் எங்கிருந்து வாரீங்கள்?” என்றாள். பெரியண்ணன், “பேச நேரமில்லை” என்று சொல்லிச் சுருக்கமாக, “கருப்பட்டி வண்டி பின்னால் வந்தேன். நொடித்தடம், வண்டி இடறி அகாலத்தில் ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது? சின்னப்பன் இருந்தாலும் சந்தைக்குப் போயிருப்பான். என்ன பண்ணுவது? இருக்கிற வரையிலும் செய்துதானே தீரோணும்? கஷ்டம் என்று பார்த்து முடிகிறதா? நான் வருகிறேன் ஆயா? நேரமாச்சு, வண்டி வெகுதூரம் போயிட்டது” என்று அடியெடுத்து வைத்தார். 

“வாசலில் முளை அடிச்சிருக்குது. பாத்துப் போங்கள்” என்று நாகம்மாள் சொல்லச் சொல்ல அவர் முளையில் மோதி காலை நொண்டிக் கொண்டே போனார்.

– தொடரும்…

– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *