நல்ல மனம்! – ஒரு பக்கக் கதை





ஆரிதாவுக்கு ஆனந்தம் பெருக்கெடுத்தது. கடவுள் இருக்கார். நல்ல மனிதர்களும் இருக்கின்றனர் என்பதை இன்றைய நிகழ்வு உணர வைத்தது.

அப்பா ரொம்ப நல்லவர். அதேசமயம் நண்பர்களை மிகவும் நம்புபவர். சொத்துக்கள் வாங்கினால் கூட வீட்டில் சொல்ல மாட்டார்! பத்திரம் கூட ஏதாவது ஒரு நண்பர் வீட்டில் கிடக்கும். அப்பா நோய்வாய்பட்டு காலமானதிலிருந்து அவரது நண்பர்கள் ஏதாவது நல்லது, கெட்டதுக்கு மட்டும் வந்து போவதுண்டு. மற்றபடி உதவிகள் எதுவும் செய்ய வருவதில்லை.
பென்சன் பணம் அம்மாவின் அன்றாட தேவைகளுக்கே சரியாய் போனது. ஆரிதாவும் பெரிதாக படிக்கவில்லை. மூத்த சகோதரிகள் இருவர் திருமண செலவுக்கு வாங்கிய கடன் அடைக்க இருந்த ஒரு வீட்டையும் விற்க வேண்டிய நிலை. தற்போது வாடகை வீடு. வறுமையால் பொறுமையிழந்தாள்.
இந்த நிலையில் தந்தையின் நண்பரின் மகன் சுந்தரன் வீடு தேடி வந்தான். கையில் ஒரு பத்திரம் இருந்தது.
“ஆரிதா இந்தா, இந்த பத்திரம் உங்க அப்பா வாங்கிய சொத்துக்குடையது. இன்றையமதிப்பு ரெண்டு கோடி! கடனுக்காக எங்களோட வீடு ஏலம் போயிடுச்சு. அந்த வீட்டைக்காலி பண்ணும் போது இந்தப்பத்திரம் கிடைச்சது…” சொன்னவனின் கண்களில் கண்ணீர் தழும்பியது.
ஆரிதா சுந்தரன் கொண்டு வந்து கொடுத்த பத்திரத்தின் இடத்தை விற்று அந்த பணத்தில் ஒரே மாதிரி இரண்டு வீடு வாங்கினாள். அதில் ஒன்று தன் அம்மா பெயரிலும், மற்றொன்று சுந்தரன் பெயரிலும் கிரையம் செய்தாள்!
சுந்தரனுக்கு ஆரிதா தெய்வ வடிவிலும், ஆரிதாவுக்கு சுந்தரன் தெய்வடிவிலும் தெரிந்தனர். ஒத்த கருத்துடைய சுந்தரனை மணமுடித்ததால் ஆனந்தமடைந்தாள் ஆரிதா. அவர்களை தேவாதி தேவர்களும் வாழ்த்தினர்.