நயாகராவில் துடுப்பிழந்த படகு ஒன்று!





அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3
இன்னும் சில விநாடிகளில் நடக்கப் போவதை நினைத்துத் தங்களைப் பாதுகாப்பதற்காக ஏதாவது ஆயத்தங்களை அவசரமாகச் செய்யலாமோ என யோசித்தார்கள்.

விரைவில் இருட்டி விடும் என்பதால் என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. லொவ்பேர்க் நீர்வீழ்ச்சியில் விழப்போகும் படகோடு அதில் உள்ள ஒரு கம்பத்தில் தன்னைக் கயிற்றால் கட்டிக் கொண்டார். படகோடு நீர்வீழ்ச்சியில் விழுந்தால் தற்செயலாகப் படகு மூழ்கிப் போகாமல் கீழே வேகமாக ஓடும் ஆற்றில் மிதந்தால், நீர்வீழ்ச்சிக்குள் தான் விழாமல் தப்பிக் கொள்ளலாம் என நினைத்தார்.
ஹரிஸின் சிந்தனையோ வேறுவிதமாக மாறுபட்டிருந்தது. அதனாலே ஹரிஸ் அங்கிருந்த பீப்பா ஒன்றுடன் தன்னைக் கட்டிக் கொண்டார். படகு சரிந்து நீர்வீழ்ச்சியில் விழும்போது பீப்பாவோடு வெளியே குதிப்பதுதான் அவரது திட்டமாக இருந்தது. அப்படி விழும்போது, மிதக்கக் கூடிய பீப்பாவோடு தான் கரை ஒதுங்கலாம் என்ற கணிப்பு இருந்தது. அல்லது யாராவது தன்னைக் கவனித்தால் காப்பாற்ற முன்வரலாம் என்று நம்பினார்.
ஆனால் அவர்கள் நினைத்தது போல அந்த நீர்வீழ்ச்சி ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல என்பதைக் கடந்தகால மரணங்கள்
நிரூபிக்கத் தயங்கவில்லை. அழகான அந்த நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்தவர்களுக்குத்தான் புரியும், அந்த அழகுக்குப் பின்னால் பெரியதொரு ஆபத்தும் இருக்கிறது என்பது!
இழுவைப் படகில் இருந்து கட்டவிழ்த்த படகொன்று தனியாக ஆற்றில் தத்தளிப்பதைத் சுற்றுலாப் பயணிகளும், உள்ளுர் மக்களும் கண்டனர். இதுவரை எந்தவொரு படகையும் அந்த இடத்தில் யாரும் பார்த்ததில்லை என்பதால், அவர்களுக்கு இந்தக் காட்சி நம்பமுடியாமல் இருந்தது. ஏதோ விபரீதம் நடந்திருப்பது சட்டென்று புரிந்தது.
நயாகரா மேலாற்றில் படகொன்று அகப்பட்டு நீர்வீழ்ச்சிக்கு அருகே ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெகு விரைவாகப் பரவத் தொடங்கின. செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் உடனடியாகவே நயாகரா ஆற்றின் இருகரையிலும் கூடத்தெடங்கினர். என்றும் இல்லாதவாறு அமெரிக்கக் கரையிலும், கனடியக் கரையிலும் உள்ளுர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வேகமாகக் கூடத் தொடங்கிவிட்டனர். எத்தனை பேர் படகில் அகப்பட்டிருக்கிறார்கள் என்பது அங்கு வந்து கூடியவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
1918 – 08 – 06
செவ்வாய்க்கிழமை – மாலை நேரம் 3:55 மணி
நடந்த பயங்கர சம்பவத்தைக் கேள்விப்பட்டு நயாகரா பார்க் குழுவைச் சேர்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டனர். சுமார் 4:05 மணியளவில், அவசர உதவி அழைப்பு விடவே நியூயோர்க் தீயணைப்பு படையினரும், ஒன்ராறியோ தீயணைப்புப் படையினரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் படையினரும் செய்தி கிடைத்த சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
அருகே இருந்த நயாகரா மின்சார நிலையக் கட்டிடம் தான் கரையோரத்தில் உயரமான கட்டிடமாக இருந்தது. அதுமட்டுமல்ல, ஆற்றில் தத்தளிக்கும் படகுக்கு அருகாமையிலும் அந்தக் கட்டிடம் இருந்தது. எனவே அவசர உதவி செய்வதற்காக வந்தவர்கள் அந்தக் கட்டிடத்தில் ஒன்றுகூடி இருந்து என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தினர்.
தொடர்பு சாதன வசதிகளோ, அவசரகால ஹொலிக்கொப்டர் வசதிகளோ இல்லாத காலமாகையால் எப்படி அவர்களை உடனடியாகக் காப்பாற்றலாம் எனச் சிலர் தங்கள் கருத்துக்களையும், சில திட்டங்களை முன் வைத்தனர்.
ஆற்றின் வேகத்தைக் கணக்கில் கொண்டு, வேறு படகுகள் அந்த இடத்திற்கு அருகாமையில் போவது ஆபத்தானது என்பதால், வேறு வழி எதுவும் இல்லாததால், அப்போது அவர்களிடம் இருந்த மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு, படகில் அகப்பட்டு இருப்பவர்களைக் காப்பாற்ற முன்வந்தனர்.
நேரத்தை வீணடிக்காது அவசரமாகச் செயற்படத் தொடங்கினர் கரையோரப் பாதுகாப்புப் படையினர்.
கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் இருந்த உயிர் பாதுகாப்பு கயிற்றை இங்கிருந்தே துப்பாக்கி மூலம் படகை நோக்கிச் செலுத்தினார்கள். ஆனால் அது குறித்த இலக்கை அடையவில்லை. நேரமோ ஓடிக்கொண்டிருந்ததால், இருட்டுமுன் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றே எல்லோரும் பாடுபட்டார்கள். இரண்டாவது தடவையாக முயற்சி செய்து பார்த்தார்கள். இந்தத் தடவை புதிதாக அனுப்பிய கயிறு வெற்றிகரமாக இலக்கை நோக்கிச் சென்றாலும், பாதிவழியில் மற்றக்கயிறுடன் இந்தக் கயிறு சிக்கிக் கொண்டது.
இருட்டி விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்த போதுதான், அப்பகுதியில் வசித்த ‘ரெட்ஹில்’ என்பவர் அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்.
முதலாம் உலகப் போரில் பங்குபற்றிக் காயம் ஏற்பட்டதால், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்த கனடியரான வில்லியம் ரெட் ஹில் (Veteran, William “Red” Hill Sr) என்பவர் தன்னார்வத் தொண்டராக மனிதாபிமான முறையில் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
இவரது குடும்பங்கள் எல்லாம் நயாகரா ஆற்றங்கரையில் நீண்ட காலம் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள். நன்றாக நீந்தத் தெரிந்த அவர், அந்த ஆற்றின் நீரோட்டத்தை மட்டுமல்ல, அதன் வரலாற்றையே அறிந்து வைத்திருந்தார். தனக்குச் சந்தர்ப்பம் தந்தால், தானே நீந்திப் போய் சிக்கியிருந்த கயிற்றின் சிக்கலை எடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டார்.
‘இந்த இருட்டுக்குள் வேகமாக இரைச்சலோடு அடித்துச் செல்லும் தண்ணீரில் இறங்க உங்களுக்குப் பயமில்லையா?’ அவருடைய பாதுகாப்புக் கருதி அவரைத் தடுத்து நிறுத்தச் சிலர் முற்பட்டனர்.
‘பயப்பட்டால் முடியுமா? இருவருடைய உயிர் தண்ணீரில் தத்தளிக்கிறது, அதைச் சும்மா பார்த்துக் கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா?’ என்றார் ரெட்ஹில்.
‘அதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்களா?’
அவர் தன்னைத் தடுத்தவர்களை ஒரு கணம் மேலும் கீழும் பார்த்தார்.
‘பயப்படாதீங்க, நயாகராவின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டுதான் நான் இங்கே பிறந்தேன் இறக்கும் போதும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இறப்பேன்’ என்று அவர்களுக்கு அவர் பதில் சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே தண்ணீரில் குதித்தார்.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? ’ அங்கு நின்ற ஆபத்திற்கு உதவும் குழுவினர் சிறிது நேரம் அதிர்ந்து போய் நின்றனர். இதற்காகவே அவர்கள் பயிற்றப்பட்டாலும், தங்கள் உயிரைப் பணயம் வைக்க யாரும் முட்டாள் தனமாக முன்வரவில்லை.
சிலர் நம்பிக்கையே இல்லாமல், ‘வேகமாக அடித்துச் செல்லும் இந்த ஆற்றில் இவரால் நீந்த முடியுமா?’ என்று நினைத்து பிரியா விடை கொடுப்பது போல, ‘போய்வா மகனே’ என்பது போல அவரைப் பார்த்துக் கைகளை அசைத்தனர்.
1918 – 08 – 06
செவ்வாய்க்கிழமை – மாலை நேரம் 7:10 மணி
வேகமாக இழுத்துச் செல்லும் தண்ணீரில் கயிற்றைச் சிக்கல் எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
ரெட்ஹில் ஏதோ அசட்டுத் தனத்தில் அந்தப் பொறுப்பை எடுத்தாலும், அதை நடைமுறைப் படுத்துவது என்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது. குளிர் காற்றில் தண்ணீர் சில்லென்று இருந்தது மட்டுமல்ல,
நுரை கக்கிக் கொண்டு கீழே குதிப்பதற்குத் தயாராக நீர்வீழ்ச்சியை நோக்கி வேகமாக ஓடியது. ரெட்ஹில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாலும், கும்மிருட்டுக்குள் அவரால் சிக்கல் எடுக்க முடியாமற் போனதால், தனது பாதுகாப்புக் கருதித் திரும்பிக் கரைக்கு வரவேண்டி வந்தது.
முதல் முயற்சி தோல்வியடைந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்று எல்லோரும் கூடி யோசித்தார்கள்.
ரெட்ஹில்லின் ஆலோசனைப்படி, படகை நோக்கி உடனடியாக பெரிய மின் விளக்குகளைக் கொண்டு கரையில் இருந்து வெளிச்சம் பாய்ச்சலாம் என்று முடிவெடுத்தார்கள். உடனடியாகவே பெரிய தேடுதல் விளக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு விளக்குகளைக் கொண்டு வந்தனர். கொண்டு வந்த விளக்குகளின் உதவியுடன் படகு இருந்த பக்கம் நோக்கி ஆற்றில் வெளிச்சம் பாய்ச்சினர். பிரகாசமான வெளிச்சத்தில் ஓரளவு தண்ணீருக்குள் பார்ப்பதற்கு வசதியாக இருந்ததால், சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ரெட்ஹில் அந்த இடம் நோக்கி நீந்திச் சென்றார்.
நயாகரா ஆறு அவருக்குப் பழகிப்போன இடமென்பதால், கயிற்றைச் சிக்கெடுத்து எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்தார். செய்தது மட்டுமல்ல, அங்கிருந்தே படகில் இருந்தவர்களுக்குக் குரல் கொடுத்து, அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார். இந்த இரண்டு காரியத்தையும் நேர்த்தியாக முடித்து விட்டு வெற்றிகரமாக மீண்டும் கரைசேர்ந்தார். ரெட்ஹில் மட்டும் அன்று தனது உயிரைப் பணயம் வைத்து துணிந்து சீறிப்பாயும் ஆற்றுத்தண்ணீரில் இறங்கி இருக்காவிட்டால், இவர்களால் திட்டமிட்டபடி மீட்பு நடவடிக்கையைத் தொடர முடியாமல் போயிருக்கும்.
முதலில் துப்பாக்கி மூலம் மெல்லிய பாரம் குறைந்த கயிற்றை அனுப்பினார்கள். அதைத் தொடர்ந்து மொத்தமான, நின்று பிடிக்கக்கூடிய கயிறும் படகுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கயிற்றில்தான் அவர்களின் உயிர் தங்கியிருந்ததால், படகில் இருந்த இருவரும் கயிற்றைப் படகில் இறுக்கமாகக் கட்டிவிட்டனர்.
காற்சட்டை வடிவில் ஏணை போன்ற கயிற்றில் செல்லக்கூடிய மிதவையை முதலில் உயரே தொங்கிய கயிற்றில் கப்பியின் உதவியோடு அனுப்பினார்கள். ஏணை வடிவான பாதுகாப்பான அணிக்குள் கால்களைச் செலுத்திக் கொண்டு அதற்குள் இருக்க, கரையில் இருப்பவர்கள் கயிற்றில் தொங்குபவரை கப்பியில் இழுத்துக் கரைசேர்ப்பது தான் அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
அந்திவானத்தில் மின்னலும், இடியும் மழை வருமோ என்று பயம் காட்டின. ஆனால் அவர்களது நல்ல காலம், மழை பெரிதாகப் பெய்யவில்லை. மழை பெய்திருந்தால் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும். நீர்மட்டம் ஏரியில் உயர்ந்தால், ஆற்றுநீர் பெருக்கெடுத்து இரவோடு இரவாகப் படகை அடித்துச் சென்று நீர்வீழ்ச்சியில் தள்ளியிருக்கும். இருட்டுக்குள் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால், உதவி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
உயிரைக் கையில் பிடித்தபடி இரவு முழுவதும் மரணத்தின் விளிம்பில் துடித்துப் போயிருந்த அவர்களுக்கு உதயசூரியன் விடியலை நோக்கி நம்பிக்கை தந்தது. அதிகாலையில் மீண்டும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். செய்தி கேட்டு, ஆற்றங்கரையோரம் நெடுக சுற்றுலாப் பயணிகளும் ஊர்மக்களும் அதிகாலையிலேயே அங்கு கூடத் தொடங்கியிருந்தனர்.
1918 – 08 – 07
புதன்கிழமை – காலை நேரம் 6:15 மணி
படகில் இருவர் அகப்பட்டிருப்பதையும், உயிருக்குப் போராடுவதையும் நினைத்துச் சிலர் பதட்டப்பட்டாலும், அனேகமானவர்கள் வேடிக்கை பார்க்கவே அங்கு வந்திருந்தனர். பல்லின மக்களும் அங்கே கூடியிருந்ததால் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றது போல அந்தச் சம்பவத்தை விபரித்தனர். கேபிள் கயிற்றை சரியாகக் கட்டாததால் தான் இது நடந்தது என்றும், இயற்கை சேகரித்து வைத்த வண்டல்
மண்ணைத் திருடப்போனால், நயாகரா அன்னை மன்னிக்க மாட்டாள் என்றும் பல கதைகள் அந்த நேரத்தில் அங்கு உருவாக்கப்பட்டன. சிலர் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், சிலர் கடினமான காரியம் என்றும், முடியவே முடியாது என்றும் பொழுது போக்குவதற்காகத் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
இரவு முழுவதும் மனம் உடைந்து பயந்த நிலையில் இருந்தது மட்டுமல்ல, பசிக்களையும் ஏற்பட்டதால் ஹரிஸ் மயங்கி விழுந்து விடும் நிலையில் இருந்ததான். அவனைத் தாங்கித் தன்னால் முடிந்த மட்டும் சமாதானப் படுத்தினான் லொவ்பேர்க்.
– தொடரும்…