நயாகராவில் துடுப்பிழந்த படகு ஒன்று!






அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

முதலாம் உலக யுத்தம், 1918 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஜேர்மனி நாடு சரணடைந்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதே வருடம் மூன்று மாதங்களுக்கு முன்பாக, 1918 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வடஅமெரிக்காவில் உள்ள கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியில் வந்து விழும் நயாகராமேலாற்றில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. நூறு வருடங்களின் பின் அந்தச் சம்பவம் பற்றிச் சென்ற மாதம், நயாகரா பார்க் குழுவினரால் நினைவு கூரப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்டு 6, 2018 அன்று, ‘நயாகரா பார்க்ஸ்’ இரும்பு ஸ்காவின் ஆண்டு விழாவைக் கொண்டாடியது
அத்தியாயம் – 1
1918 – 08 – 0
செவ்வாய்க்கிழமை – மாலை நேரம் 3:15 மணி
இழுவைப்படகோட்டி திரும்பிப் பார்த்தான். நயாகரா ஆற்றின் பனி மூட்டத்திற்குள் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. சீரான வேகத்தில் சென்ற இழுவையந்திரப் படகின் (Tug boat) வழமைக்கு மாறான விரைவைப் பார்த்ததும் ஏதோ தவறு நடந்து விட்டதை உணரமுடிந்தது. இழுவைப்படகின் வேகத்தைக் குறைத்து விட்டுப் பின்பக்கத்தில் சென்று எட்டிப் பார்த்தான், வண்டல் மண் ஏற்றியபடி பின்னால் கட்டி இழுத்து வந்த படகைக் காணமுடியவில்லை. என்ன நடந்திருக்கும்? சுமார் 80 அடி நீளமும் 30 அடி அகலமுமான, பின்னால் கட்டி இழுத்துவந்த அந்தப் படகைப் (iron scow) பனிப் புகாருக்குள் அவனால் பார்க்க முடியவில்லை. கட்டியிருந்த கேபிள் வடக்கயிற்றை இழுத்துப் பார்த்தான், கேபிள் கயிறு இலகுவாக இழுபட்டு கையோடு வந்தது. நெஞ்சு திக்கென்று அடித்துக் கொண்டது. வேகமாக அடித்துச் செல்லும் ஆற்றில் இழுத்து வந்த பாரப்படகு (A barge-like vessel) கட்டவிழ்த்துக் கொண்டு விட்டதை உணரமுடிந்தது. அப்படியானால், அதில் இருந்த அவனுடன் வேலை செய்த இருவருக்கும் என்ன நடந்திருக்கும்?
நயாகரா மேல்நதியில் இழுவைப் படகால் இழுத்து வந்த அந்தப் படகில் இருவர் இருந்தார்கள். பனிப்புகாரில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. குரல் கொடுத்துப் பார்த்தான், எந்தப் பதிலும் அங்கிருந்து வரவில்லை. நினைக்கவே பயம் பிடித்துக் கொண்டது. ‘நயாகரா அப்பறிவர்’ என்று சொல்லப்படுகின்ற இந்த ஆறு தெற்கே உள்ள அமெரிக்காவின் நிலப்பகுதியில் உள்ள சுப்பீரியர் ஏரியில் தொடங்கி ‘ஏரி’ என்ற ஏரிவழியாக கனடாவின் தெற்கு எல்லை நோக்கி ஓடிவருகின்றது. இதே ஆறுதான் பின் நயாகரா நீர்வீழ்ச்சியாக மாறுகின்றது. நயாகரா நீர்வீழ்ச்சியாக மாறும் இந்த ஆற்றில்தான், நீர்வீழ்ச்சிக்கு மிகஅருகே, மேற்பகுதியில் இந்தப் படகு விபத்து நடந்தது.
இந்த ஆறுதான் சற்றுத் தூரம் சென்றதும், மிகப்பெரிய ஓசையோடு நயாகரா நீர்வீழ்ச்சியாக மாறிச் சுமார் 200 அடிவரை கீழ் நோக்கித் தண்ணீரைக் கொட்டுகின்றது. ஒருவேளை படகில் இருந்த இருவரும், நீரோட்டத்தோடு இழுபட்டு நீர்வீழ்ச்சிக்குள் அகப்பட்டிருப்பார்களோ? இதற்குள் விழுந்த யாரும் இதுவரை உயிர் தப்பியதில்லை என்பதால், அவனது உடம்பு அவனை அறியாமலே நடுங்கத் தொடங்கியது.
நயாகரா மின் நிலையத்திற்கான வேலைக்காக கப்டன் ஜோன் வலஸ், ஹஸஜம்பா என்ற படகின் படகோட்டியாக (‘Hassayampa’ being operated by Captain John Wallace) இந்த ஆற்றில் வேலை செய்து கொண்டிருந்தான். தினமும் வண்டல் மணலை ஆற்றில் இருந்து அள்ளிச்
செல்வதற்காகத்தான் இந்தப் படகு பாவிக்கப்பட்டது. எனவே இந்த சுற்றாடல் அவனுக்குப் பழக்கமானதாக இருந்தது.
சுமார் 200 அடி உயரமானதும், 2,200 அடி அகலமானதுமான நயாகரா நீர்வீழ்ச்சி ஒரு நிமிடத்திற்கு ஆறு மில்லியன் கியுபிக் அடி தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருப்பது அவனது நினைவுக்கு வந்தது. சுமார் 30 மைல் வேகத்தில் கீழ் நோக்கி விழும் தண்ணீர் மட்டும் 100 அடி ஆழத்திற்கு கீழே செல்கின்றது. முதற்குடி மக்களின் மொழியில் நயாகரா என்றால் கழுத்து என்று பொருள் படும், இதற்குள் விழுந்த யாரும் இதுவரை உயிர் தப்பியதில்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான்.
வேகமாக அடித்துச் செல்லும் ஆற்றில், மேற்கொண்டு நீர்வீழ்ச்சிப் பக்கம் செல்வது ஆபத்தானது என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசித்துப் பார்த்தான். இச்சம்பவம் நடந்த அக்காலத்தில் உடனடியாகத் தொடர்பு கொள்ள செல்போன் வசதிகள் எதுவும் இல்லை என்பதால், உடனடியாகவே கரைக்கு வந்து நடந்த விடயத்தை அதிகாரிகளுக்குத் தெரிவித்தான்.
கட்டவிழ்த்துக் கொண்டு நீர்வீழ்ச்சியை நோக்கி வேகமாக நகர்ந்த படகில், அமெரிக்காவின் ‘பபலோ’ நகரைச் சேர்ந்த இருவர் வேலை செய்தார்கள். சுவீடனில் இருந்து வந்து குடியேறிய கஸ்ராவ் லொவ்பேர்க் (Gustav Lofberg) என்பவரும் ஜேம்ஸ் ஹரிஸ் (James Harris) என்பவரும்தான் அந்தப் படகில் வேலை காரணமாகத் தனித்து இருந்தார்கள். கடல் அனுபவம் மிக்க லொவ்பேர்க்கைவிட, ஹரிஸ் வயதில் குறைந்தவராகவும், கடல் அனுபவம் அற்றவராகவும் இருந்தார். தங்கள் படகு கட்டவிழ்த்து விட்டதை விரைவாகவே அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
‘எங்களுடைய படகு நீர்வீச்சியை நோக்கி வேகமாக நகர்கிறது, என்ன செய்யலாம்’ என்றான் அருகே ஓடி வந்த ஹரிஸ் பதட்டமாக.
‘தெரியும், கொஞ்சம் பொறுமையாக இரு’ என்று லொவ்பேர்க் அவனைச் சமாதானப்படுத்தினான்.
‘தெரியுமா, தெரிந்துமா இப்படி மௌனமாக இருக்கிறாய்?’
‘ஒரு முறைதான் நாங்கள் இறக்கப் போகிறோம், அது எப்போ என்பதை நாங்களே தீர்மானிப்போம்’ என்றான் லொவ்பேர்க்.
‘என்ன சொல்கிறாய் லொவ்பேர்க், என்ன நடக்கப் போகிறது என்று உனக்குத் தெரியலையா, படகு நீர்வீழ்ச்சிக்குள் விழப்போகிறது?’
நீர்வீழ்ச்சியின் இரைச்சல் அதிகரித்துக் கொண்டிருப்பது இவர்களின் காதில் காலன் கூவி அழைப்பது போல விழுந்தது.
‘தெரியும் பதட்டப் படுவதாலே ஒன்று நடக்காது, படகை நிறுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்றுதான் யோசிக்கிறேன், இருந்தால் அதை முயற்சிப்போம்’ என்றான் லொவ்பேர்க்.
‘எப்படி?’ நம்பிக்கை இல்லாமல் கேட்டான் ஹரிஸ். இன்னும் சில நிமிடங்களில் நீர்வீச்சியோடு சமாதியாகப் போகிறோமே என்ற நினைப்பில் அவனது குரலில் நடுக்கம் தெரிந்தது.
‘இப்போ இதனுடைய வேகத்தைக் குறைக்க வேண்டுமானால், கீழே உள்ள கதவைத் திறந்து விடுவோம்.’
‘கதவைத் திறந்தால் தண்ணீர் உள்ளே வந்து படகு மூழ்கிவிடுமே?’
‘இல்லை, படகின் பாரத்தைக் கூட்டினால் தண்ணீரில் அடித்துச் செல்லும் வேகத்தைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றேன்.’ என்றான் லொவ்பேர்க்.
மிக அருகே இருந்த நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ‘வா வா’ என்று அவர்களின் காதுக்குள் இன்னும் பெரிதாக ரீங்காரமிட்டது.
1918 – 08 – 06
செவ்வாய்க்கிழமை – மாலை நேரம் 3:25 மணி
பதினாறு வயதில் இருந்தே கடலில் படகோட்டிய அனுபவம் லொவ்பேர்க் என்பவருக்கு இருந்தது. ஆனால் வேகமான ஆற்றிலே படகோட்டுவது என்பது வித்தியாசமானது. நீர்வீழ்ச்சிப் பக்கம் வேகமாகச் செல்லும் படகை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று திண்டாடியபோது, உடனடியாக அவர்களுக்கு அந்த யோசனைதான் தோன்றியது,
அதாவது வண்டல் மண்ணை வெளியே கொட்டும் கதவை திறந்து விட்டால் தண்ணீர் உள்ளே புகுந்ததும் படகில் தண்ணீர்ப் பாரமேறிப் படகின் வேகம் குறையும் என்று லொவ்பேர்க் நம்பினான். காரணம்
சுமார் 2000 தொன் நிறையுள்ள வண்டல் மணலும், கல்லும் அந்தப் படகில் ஏற்றப்பட்டிருந்தது.
வேறு வழி ஒன்று தெரியாததால், விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதால், அப்படியே இருவரும் சேர்ந்து கதவைத் திறந்து விட்டார்கள். கதவைத் திறப்பதற்கு உதவும் போதும் ஹரிஸின் கைகள் நடுங்குவதை அவதானித்தான் லொவ்பேர்க்.
அவசரப்பட்டுத் தாங்கள் எடுத்த முடிவு சரியானதா என்று தெரியாமல் இருவரும் தவித்தார்கள்.
ஒவ்வொரு விநாடியும் கடக்க உயிர் வேகமாகத் துடித்தது. படகு அப்படியே தண்ணீரில் மூழ்கிவிடுமா அல்லது ஆண்டவன் அவர்களது பிரார்த்தனைக்கு ஏதாவது வழிகாட்டுவாரா?
அவர்களின் அதிஸ்டம் படகின் வேகம் சட்டென்று குறைந்தது மட்டுமல்ல, படகு சிறிது நேரம் தண்ணீரில் ஆடி அசைந்து, அங்குமிங்கும் தள்ளப்பட்டு அடியில் இருந்த ஒரு பாறையில் முட்டித் தரை தட்டிக் கொண்டது.
பிரார்த்தனை பலித்ததா, இல்லையா அவர்களுக்கே நம்பமுடியாமல் இருந்தது. திடீரெனப் படகு நின்றதும், லொவ்பேர்க் ஆலோசனை பலனளித்ததில் ஹரிசுக்கு அவன் மீது மதிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டது.
நல்ல காலமாக நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து சுமார் 650 யார் தூரத்திற்கு அப்பால் படகு தரைதட்டியதால், அடித்துச் செல்லப்பட்ட படகு தற்காலிகமாக நீர்வீழ்ச்சிக்குள் தலைகுப்புற விழாமல் தப்பிக் கொண்டது.
ஆனால் எவ்வளவு நேரத்திற்கு மரணத்தின் விளிம்பில் நின்று இப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
வேகமாகக் காற்றடித்தாலோ அல்லது தண்ணீரின் வேகம் அதிகரித்தாலோ மீண்டும் படகு தள்ளப்படுவதற்குச் சாத்தியங்கள் இருந்தன. இவர்களது கெட்டகாலமோ என்னவோ, வானம் கறுத்திருந்ததனால், விரைவாகவே இருட்டத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. நீரின் வேகத்தில் படகு மீண்டும் ஒரு துள்ளுத் துள்ளி நீரோட்டப் பக்கமாகத் திரும்பியது.
சட்டென்று படகு நீரோட்டப் பக்கம் திரும்பவே அவர்கள் பரிதவித்துப் போனார்கள்.
ஓ.. என்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சல் அருகே காதைக் குடைந்து கொண்டிருந்ததால், என்னாகுமோ, ஏதாகுமோ என்று அவர்களின் மரணபயம் இன்னும் அதிகரித்தது.
‘ஹரிஸ் பதட்டப்படாதே, நாங்கள் ஒன்று செய்யலாம்’ என்றான் லொவ்பேர்க்.
இப்படியான சந்தர்ப்பங்களில் நம்பிக்கையை இழந்து விடாது, கடைசிவரை முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கடலில் படகோட்டிய அனுபவத்திலிருந்து லொவ்பேர்க் அறிந்திருந்தான்.
‘எனக்குக் கையும் ஓடவில்லை. காலுமோடவில்லை, நீ என்ன செய்யச் சொன்னாலும் செய்கின்றேன்’ என்றான் உறைந்து போய் மரணப்பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்த ஹரிஸ்.
‘முதலில் படகை அங்குமிங்கும் அசையாது நிறுத்த வேண்டும், அதற்கு முயற்சி செய்வோம்.’
‘இப்படி வேகமாக அடித்துச் செல்லும் தண்ணீரில் எப்படி…?’ கேள்விக் குறியோடு வார்த்தைகள் தடுமாறி நின்றன.
‘நங்கூரத்தை இறக்கிவிடுவோம், தற்செயலாக வேகமாக தண்ணீர் வந்தாலும் நங்கூரம் படகை அசையாமல் ஓரளவு காப்பாற்றும்’ என்றான் லொவ்பேர்க்.
இருட்டி விட்டால், உதவிக்கு யாரும் வரப்போவதில்லை, சொற்ப நேரத்தில் மரணிக்கப் போகிறோமே என்ற அதிர்ச்சியில் ஹரிஸின் மூளை இயங்க மறுத்தது. உயிர் தப்புவதற்காக லொவ்பேர்க் என்ன சொன்னாலும் தலையாட்டி யந்திரம்போல அதை ஏற்கத் தயாராக இருந்தான் ஹரிஸ்.
இருவரும் சேர்ந்து அவசரமாக நங்கூரத்தை இறக்கி விட்டார்கள். நங்கூரம் போட்டதில் படகின் ஆட்டம் மெல்லக் குறைந்ததில், ஓரளவு மனதுக்குத் திருப்தியாக இருந்தது.
ஆ+னால் எவ்வளவு நேரம் மரணத்தின் பிடியில் இருந்து இப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
அவர்களுக்கான மரணக் குகை அருகேதான் இருக்கிறது என்பதை நீர்வீழ்ச்சியின் இரைச்சல் அவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தது. மரணதண்டனைக் கைதிகள் போல, மனசு முற்றாக இயங்க மறுதத்தது.
இன்றுபோல, தொடர்பு சாதனங்கள் அக்காலத்தில் இல்லாததால், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இருவரும் மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
இழுவைப் படகுக்கு என்ன நடந்தது. காப்டன் ஜோன் வலஸ் ஏன் இதைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் இந்த நீரோட்டத்தில் அவனால் என்ன செய்திருக்க முடியும்? மேலிடத்திற்கு அறிவித்திருப்பானா?
ஆனால் வெளியே துணிவோடு இருப்பது போல, அவர்கள் காட்டிக் கொண்டாலும், படகு தண்ணீரில் இழுபட்டு நீர்வீழு;ச்சியில் விழலாம் என்ற பயம் மட்டும் இருவரையும் வாட்டிக் கொண்டே இருந்தது.
எந்த நேரமும் தங்கள் படகிற்கு அப்படி ஒரு நிலை ஏற்படலாம் என்பதால், நெஞ்சு வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. இதுவரை காலமும் மகிழ்ச்சியோடு ரசித்த நயாகரா நீர்வீழ்ச்சியின் இரைச்சல், இன்று மட்டும் யமனின் அகங்காரச் சிரிப்பொலி போல அவர்களுக்குக் கேட்டது.
– தொடரும்…