நம்ப முடியாத ஒரு மாலை நேரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 2,227 
 
 

“மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல. எடது கண்ணு நெம்ப மங்கலாயிட்டே வருது. மெடிக்கல் கேம்ப்பு கீது நடத்துனாப் போயி செக்கப் பண்ணிப் பாக்கோணும். ஆப்பரேசன் பண்ணோணும்னா பணத்துக்கு எங்க போறது? கெவுருமென்டு ஆஸ்பத்திரிக்கோ, சேவை மையங்களுக்கோதான் போகோணும்…” கடவுள் அலுப்போடு சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது என் அம்மா அங்கு வந்தாள். “உனக்கு இப்ப மூட்டு வலி தேவுலியா, அம்முணி? கோலார்பட்டி ஆஸ்பத்திரிக்கா போற?” அவளிடம் குசலம் விசாரித்தார்.

அம்மாவுக்கு அவரை இன்னார் என்று தெரியாது. என்னைச் சந்திக்க வந்த இலக்கிய நண்பர், அல்லது சக ஓவியர் என்றுதான் கருதியிருப்பாள். அவளுக்கும் மூட்டு வலி இருப்பது நான் சொல்லித்தான் அவருக்குத் தெரிந்திருக்கும் என்றும் நினைத்திருப்பாள்.

முதியோர்களுக்கு சுப காரியம் என்றால் அது நீரிழிவு, ப்ரஷர், மூட்டுவலி, மருமகள் பிரச்சனை – இப்படித்தானே இருக்கும்! இதில் எதெல்லாம் தங்களுக்கு உள்ளதோ அவைகளைப் பற்றி இருவரும் உற்சாகமாகப் பேசிக்கொண்டனர்.

அவர்தான் கடவுள், என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொன்னால் அம்மா என்ன, யாருமே நம்ப மாட்டார்கள். நான் ஒரு நாத்திகன், என்னைப் பார்க்க கடவுள் எப்படி வருவார் என்றுதான் எல்லோரும் கேட்பார்கள். நான் ஆன்மீகவாதியும் கூட என்று சிலருக்குத் தெரிந்தாலும், பக்தியற்ற ஒருவனுக்கு கடவுள் எப்படி தரிசனம் தருவார் என்று வாதிடுவார்கள். அது கூட பரவாயில்லை. மூட்டு வலி, பணமில்லை, இலவச கண் அறுவை சிகிச்சை தேவை என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிற ஒரு வயோதிக மனிதரை கடவுள் என்று பக்தர் உலகம் எப்படி ஒத்துக்கொள்ளும்?

அதனால் நான் அவரை யாரென்று அறிமுகப்படுத்தவில்லை. அம்மா கேட்கவுமில்லை.

அம்மாவுக்கு காதும் மந்தம். அவளிடம் தம்ஸ் அப் முத்திரை காட்டி, தேநீர் போட்டுவரச் சொன்னேன்.

அவள் கடவுளிடம், “உங்குளுக்கு சக்கரை வேண்டாம்,…. இல்லீங்ளா?” என்று கேட்டாள். சற்று முன்புதான் அவர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை சொல்லியிருந்தார்.

“எங்கூட்டுல எனக்கு சக்கரை போட மாட்டாங்கம்முணி! வெளிய போகீல ஆசைக்கு சக்கரை போட்டுக் குடிச்சாத்தான் உண்டு. எதுக்கும் நீ ரெண்டு ஸ்பூன் போடேன்!” ஆவலோடு கேட்டுக்கொண்டார் கடவுள்.

– வாசகசாலை இணைய இதழ், 18-02-2025

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *