நம்பினார் கெடுவதில்லை..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 122
(கதைப்பாடல்)

ஊரின் ஓரக் குளக்கரையில்
ஓங்கி வளர்ந்த மரத்தடியில்
உட்கார்ந்திருந்த கணபதிக்கு
ஒருவர் பூஜை செய்துவந்தார்!.
அவரும் பாவம் மிகஏழை.,
அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.
சிறுவன் ஊரின் பள்ளியிலே
சேர்ந்து படிக்கிற சிறுவயதான்!
பூஜை செய்யும் பூசாரி
வீட்டில் பொங்கும் அன்னத்தை
பானை வயிற்றுக் கணபதியின்
பாதம் வைத்து வணங்கிடுவார்!
அப்பா எதற்கு சாமிக்கு
அன்னம் நாமும் வைக்கின்றோம்?
சாமி தானே சகலருக்கும்
சர்வமும் கொடுக்கும் சமர்த்தரென்றான்?!
நமக்கு யாவும் கொடுக்கின்ற
நல்ல சாமி தனகன்பு
நாமும் காட்ட வேண்டுமன்றோ?
அதற்கே யிந்த அன்னமென்றார்!
ஒருநாள் நோயால் அவர்வாட
மகனாம் சிறுவனை அருகழைத்து
‘நேரில் நீபோய் சாமிக்கு,
நிவேதனம் வைத்து வா!’வென்றார்.
அப்பா சொற்படி அவன்சென்றான்!
ஆனை முகத்தான் முன்நின்றான்!
‘எப்பா எங்கள் நாயகனே!
அன்னம் உண்நீ!’ என்றானாம்!.
கணபதி கையை நீட்டவில்லை!
கையால் எடுத்து உண்ணவில்லை!
மனது நொந்த அச்சிறுவன்
‘மடிவேன்! மோதி!’ எனஅழுதான்!
ஆனை முகத்தான் அவனன்பை
அனைவர்க்கு முணர்த்தத் தான்விரும்பி,
பானை உணவை உண்டாராம்!
பார்த்த சிறுவன் மகிழ்ந்தானாம்!
வீடு திரும்பி அவன்சொல்ல…
வீட்டிலுள்ளோர் வியந்தார்கள்!
நாடும் பக்தர் என்றைக்கும்
நம்பிக் கெட்டது இல்லையென்போம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
