நம்பிக்கை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 2,397
(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இளைஞன் வீரமுத்து உடைந்து போனான். வேலையில்லாத்திண்டாட்டம் அவனை விரக்திக்கு உள்ளாக்கியது.
திருடுவது என முடிவெடுத்தான். அனைவரும் அலுவலகம் சென்றவுடன் வீடு புகுந்து பகல் கொள்ளை அடிப்பதே சிறந்தது என்று நினைத்தான்.
ஒரு வீட்டை நோட்டம் விட்டான். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே மகனை வெளியூர் அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்று தகவல் அறிந்தான்.
கார் கிளம்பும் வரை மறைந்துகொண்டு காத்திருந்தான். குடும்பத்தோடு அவர்கள் கிளம்பியதும் மாற்றுச் சாவி போட்டு வீட்டைத் திறந்தான்.
ஹாலில் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தான். அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த வெற்றிக் கோப்பைகளையும் பார்த்தான்.
ஒற்றைக் காலுடன் கைத்தாங்கியைப் பற்றிக் கொண்டு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் வெற்றிக் கோப்பையைப் பெறும் அந்த மாற்றுத்திறனாளியின் கண்களில் தெரியும் தன்னம்பிக்கை வீரமுத்துவை ஈர்த்தது.
ஒற்றைக் காலை இழந்தவனுக்கே இவ்வளவு தன்னம்பிக்கை இருக்கும் போது, இரண்டு கைகளும் கால்களும் ஆரோக்கியமாக இருக்கும் நான் உழைத்து வாழாமல் திருட நினைக்கிறேனே… என்ற குற்ற உணர்வு வீரமுத்துவை தலைகுனிய வைத்தது.
வாசற்கதவை பூட்டி, மாற்றுச் சாவியைத் தூக்கி சாக்கடையில் எறிந்து விட்டு, ஏதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலை நிமிர்ந்து நடந்தான் வீரமுத்து.
– கதிர்’ஸ், ஏப்ரல், 2024