கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: November 9, 2025
பார்வையிட்டோர்: 77 
 
 

(1954ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நப்புன்னைமரத்தின் நிழலில் நப்பின்னை வளர்ந்தோங்கு- கின்றாள். நப்பின்னை இளமங்கையாக அழகு திரண்டு. ஒளிர்கின்றாள். காதல் பூத்தொளிர்கின்றது; இவள் மனத்தினைக் கொள்ளைகொள்ளும் கண்ணன் வருகின்றான்; காண்கின்றான்; காதல் கொள்கின்றான். இருவரும் ஓரு யிரும் ஈருடலுமாகப் பிணைகின்றனர். திருமணம் செய்வ- தற்கு ஏற்பாடு செய்யாமல், கண்ணன் நாடோறும் நப்- பின்னையை வந்து கண்டு போவதிலேயே காலத்தினைக் கழிக்கின்றான். “பிறரறிந்தால் என் செய்வது ?” என்பது நப்பின்னையின் கவலை; அவள் தோழி நக்கண்ணையின் வாட்டம். கவலை ஒருபுறம்! காதல் ஒரு புறம்! 

காலையில் எழுந்ததும் கண்ணன்மேல் காதல் முறுகி. வரும். காணவேண்டும் என்ற எண்ணம் கட்டினை எல்லாம் தாண்டிக் குதிக்கும். கண்ணனுடைய ஊர், அடுத்த ஊர்; நீர் வளம் சிறந்தது. அதனைத் தன் ஏழ்நிலை மாடத்தில் இருந்து பார்க்கின்றாள் நப்பின்னை. தண்ணீர், கதிரவன் ஒளியில் பளபள என மின்னுகிறது. கண்ணன் முகத்தில் கண்கள் மின்னுவதனைக் காண்பதுபோல் இவள் கண்டு மகிழ்கின்றாள். இவளுடைய ஐம்புலனும் ஒருமுகப்பட்டு அவனையே எண்ணுகின்றன. அந்தத் தண்ணீரைச் சுற்றி ஏதோ ஒன்று நகர்கின்றது. வலம்புரிச் சங்குதான் ஊர்- கின்றது என்கிறாள் இவள். அதன் ஒலியும் இவளுக்குக் கேட்பதுபோலத் தோன்றுகின்றது. அவனோடு தொடர்- புபட்டது எல்லாம் இவளுக்கும் இனிக்கும் அன்றோ? இந்தச் சங்கின் ஒலியும் மிகமிக இனிக்கின்றது. புதிய ஒலிதான்! இருந்தால் என்ன? புதிய பாணர்கள் புதிய புதிய பாடல்களைப் பாடவில்லையா? ஆம்! அந்தப் பாடல்கள்- போலவே இந்தச் சங்கோசையும் இவள் உள்ளத்தே பேரிசைப் பாட்டாக வளர்ந்து பேரின்பம் ஊட்டுகிறது. 

கண்ணன் வருகிறான்; ஒருவருக்கும் தெரியாமல் இவர்களது வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைகின்றான். நப்பின்னையும் கீழிறங்கி ஒருவருக்கும் தெரியாமல் எதிர்- கொண்டழைக்கின்றாள். இருவரும் கொடி வீட்டினுள் புகு- கின்றனர். மறைவான இடம் அன்றோ அது! காதலியைக் கண்டதும் காதலன் அணைக்கின்றான்; ” கண்ணே ” என்- கின்றான். நப்பின்னை யாரோ தன்னைப் பார்த்துவிட்டது- போலத் திடுக்கிடுகின்றாள். 

“இதோ எங்கள் அக்காள், அக்காள்!” என்று நடுங்கி நாணிக் கூறிக்கொண்டே தன்னை அவன் கையிலிருந்து விடுவித்துக்கொண்டு வீட்டிற்குள் போய் நப்பின்னை ஒளிந்துகொள்கிறாள். 

கண்ணனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சுற்றுமுற் றிலும் பார்க்கின்றான். ஒருவரையும் காணோம்; சிறிது தாழ்ந்து நப்பின்னையின் உயிர்த்தோழி நக்கண்ணை வரு- கின்றாள் ; நடந்ததனை அறிகின்றாள். “நப்பின்னை தானே வள்ளியம்மையாருக்கு முதற் பெண்! இன்று அக்காள் அக்காள் என்று நப்பின்னை ஓடியது என்ன விளையாட்டு?” என்று கண்ணன் கேட்கின்றான். 

”மணந்துகொண்டு உங்கள் ஊரிலுள்ள மரநிழலிலே நப்பின்னையுடன் விளையாடலாகாதா?” என்கின்றாள் நக்கண்ணை. 

“திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுவது தான்! இன்றே செய்கின்றேன். காதல் வெறியில் இது தெரியா- மற் போய்விட்டது. ஆனால், “அக்காள” என்று நடு. நடுங்கி ஓடினாளே! அந்தப் புதுமை யாது? எனக்கு விளங்கவில்லையே?” 

“நப்புன்னை நப்பின்னையின் அக்காள் தான். வள்ளி யம்மை முதலில் வளர்த்த பிள்ளை அது; தேனும் பாலும் ஊட்டி வளர்த்த பிள்ளை. எங்களைவிட நப்புன்னை அக்காள்- தான் நல்லவள் என்று வள்ளியம்மையார் அடிக்கடி சொல்லுவார்கள். நாங்களும் அக்காளை மறந்த நாளே கிடையாது. அந்த அக்காள் எதிரே உங்களோடு எப்படிக் கூச்சமின்றிப் பேசுவது?” என்கிறாள் நக்கண்ணை. 

“விளங்கவில்லையே!” என்கிறான் கண்ணன். 

“எங்கள் குடியின் கதை அஃது” என்று சொல்லி ஒரு பாட்டியிடம் கொண்டு செல்கிறாள் தோழி. 

பாட்டி கூறுகிறாள்: முருகனார் தெரியுமே, நப்பின்னை- யின் தந்தையார்! வள்ளி அவர் மனைவி-நப்பின்னையின் தாய். ஒரு நாள் நடந்த காட்சி என் கண்முன் இன்று கண்டதுபோல் இதோ தோன்றுகிறது. 

“முருகனும் வள்ளியும் மணந்து பேரின்பப் பெரு. வாழ்வு வாழ்கின்றனர். குழந்தைச் செல்வமும் செழிக்- கின்றது. மக்களைப் பெற்று அவர்கள் மகிழ்கின்றனர். ஓராண் குழந்தை-ஒரு பெண் குழந்தை – இவை செல்வ. மாக வளர்கின்றன: குடிக்கேற்ற குணம் சிறக்கின்றது சுற்றுப்புறத்துக் குழந்தைகள் ஏழை என்றோ செல்வர் என்றோ வேற்றுமை பாராட்டாது இந்தக் குழந்தைக- ளுடன் மனமொத்து விளையாடிவருகின்றன. 

“விருந்தின்றி உண்ணாத மேன்மைக் குடி’ என இவர்- களை எல்லோரும் போற்றுகின்றனர். அடையாத பெருங்- கதவம் அனைவரையும் வரவேற்று, முருகனாரையும் வள்ளி- யம்மையாரையும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக்கி வளர்க்கிறது. ஊரிலே திருவிழா என்றால் இவர்கள் வீட்டில்தான் எல்லோருக்கும் விருந்து. ஒரு நாள் இந்திர விழா: வீட்டின் பின்புறத்து அறையில் பாலும் தயிரும் சால்சாலாக வீற்றிருக்கின்றன. தேனும் நெய்யும் வானத்திலிருந்து இறங்குவதுபோல உறிகளில் தொங்குகின்றன. வாழைப் பழங்கள் தோரண மிட்டது போலக் கயிற்றில் ஏறித் தவம் செய்கின்றன. மாவும் பலாவும் மலைமலையாகக் குவிந்துகிடக்கின்றன. வழக்கமாக அந்த அறையில்தான் குழந்தைகள் விளையாடுவது. அந்த அறை விருந்துக்கு உதவ வேண்டுமாகையால், குழந்தைகளும் அந்த அறைக்குள் செல்லாது உதவவேண்டும் என வள்ளியம்மையார் தம்முடைய குழந்தை- களைக் கேட்டுக்கொள்கின்றனர். அவர்களும் மனமொப்பித் தாய்க்கு உதவி செய்துகொண்டிருக்கின்றனர். 

“வெளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது தெரி- யாது. அன்று பொழுது புலர்ந்ததும் குழந்தைகள் பழமை- போல அந்த அறைக்குள் புகுகின்றன. அவர்கள் வருவ. தனைக் கண்ட வள்ளியம்மையாரின் செல்வப் புதல்வி நப்பின்னையும் வருகின்றாள்; அவளுடைய தம்பி கீரனும் வரு- கின்றான். ‘இந்த அறையை விட்டு வேறு இடத்தில் போய் விளையாடலாம்’ என்று இவர்கள் சொல்வதற்குமுன்- னரே, மற்றைய குழந்தைகள் ஓடோடியும் அறைக்குள் புகுந்து ஆடத்தொடங்குகின்றன. குழந்தைகள் உள்ளத்- தைக் கவரும் பொருள்களே அங்கிருக்கின்றன. தலைகால் தெரியாமல் அவைகள் களிக்கூத்தாடுகின்றன. இரண்டொரு சால்கள் உருளுகின்றன.ஒரு சில பழங்களைக் குழந்தைகள் தம் கையில் எடுத்துக்கொண்டு வெளிவருகின்றன. ஒன்றன் தோள்மேல் ஒன்று ஏறி எட்டாதஉறியையும் எட்டி வெண்ணெயையும் தேனையும் ஒன்றாக்கி உண்கின்றன; மிகுந்ததைச் சுவரின் புறத்தே பதுங்கிக் கிடக்கும் பூனைக்- கும் தருகின்றன. கீரனும் நப்பின்னையும் பேசுவது ஒன்றும் அந்தக் குழந்தைகள் காதில் விழவில்லை. 

”இந்த ஆரவாரத்தைக் கேட்டு வள்ளி அம்மையார் உள்ளிருந்து ஓடிவருகிறார். முருகனாரும் வருகின்றார். வள்ளியாரின் மனம் இந்தச் சீர்கேட்டைக் கண்டு எரிகிறது; முருகனாரோ குழந்தை விளையாட்டினைக் கண்டு சிரிக்கின்றார். 

“இந்தக் குழந்தைகள் தொல்லையே தொல்லை! பேசா- மல் ஓர் இமைப்போதும் இருப்பதில்லை! இதனை உருட்டு- கின்றார்கள்; அதனை உடைக்கின்றார்கள்; ‘ஓ’ என இரைகின்றார்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை!” என இரைகின்றார் வள்ளி அம்மையார். “குழந்தைகள் என்ன கல்லா? காலும் கையும் இருந்தால் ஓடி ஆடத்தானே செய்யும்! குழந்தைகள் விளையாடுகிற இடத்தைப் பிடுங்கிக்கொண்டால் அவர்கள் வேறு எங்கே போவார்கள்? இப்பொழுது ஒன்றும் முழுகிப் போக- வில்லை. இரண்டொரு சால் பாலும் தயிரும் தேனும் நெய்யும் இன்னும் வரும். ஆகையால், வள்ளி! விருந்தாளி- கள் மனம் வருந்துவார்கள் என நீ ஒன்றும் கவலைப்பட வேண்டா” என்கிறார் முருகனார். 

”கவலைப்பட வில்லை. பொருள்கள் பாழாகலாமா? இஃது ஏன் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது போகிறது? நம் நப்புன்னையைப் பாருங்கள்! ஏ தாவது இரை- கின்றாளா? உணவு கொடுக்கக் காலந் தாழ்த்தாலும் முணு- முணுப்பதில்லை; அன்று போட்ட இடத்திலேயே இன்றும் கிடக்கின்றாள்; வருவோருக்கு எல்லாம் நிழல் தருகின்றாள்; பூப்பூத்து உதிர்க்கின்றாள்; புன்னைக் கொட்டையைப் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுக்கின்றாள். நப்பின்னை ! உனக்கு உன் அக்காள்போல ஆகவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே இல்லை’ என்று வள்ளியம்மையார் புன்னையின் சிறப்பினை அவள் மனங்கொள்ளப் பரக்கப் பேசுகின்றார். 

“முருகனார் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்; நப் புன்னைபோல நப்பின்னையும் வேரூன்றி மரமாக வளர- வேண்டும் என்று விரும்புகிறாயா?’ என்று எள்ளி நகையாடுகின்றார். ‘ஆமாம், நீங்களே இந்த மனிதப் பிறப்பைப் பாராட்டவேண்டும்! குரங்குக்குத் தம்பியும் தங்கையும் தாம் இவர்கள். நப்புன்னையின் சிறப்பை இவர்- கள் உணரவேண்டும்,’ என்கின்றார் வள்ளி அம்மையார், ஆம்; அப்படி உணருமாறு இதுவரை நீ ஒன்றும் செய்யவில்லையே! குழந்தைகளே! இனிமேல் நப்புன்னை அக்காளைச் சுற்றித்தான் நீங்கள் விளையாடவேண்டும். நான் அங்கே கொடிகளைப் பரப்பிவிட்டு வீடுபோலச் செய்து- விடுகின்றேன். அந்தக் கொடி வீட்டில் போய் விளையாடுங்- கள் என்று முருகனார் தட்டிக்கொடுக்கின்றார். · 1621- புன்னை எப்படியப்பா அக்காள்?’ என்று அயல் வீட்டுக் கொற்றன் கேட்கிறான். பக்கத்தில் இருந்த சாத்தன் ‘அதுவா? எங்கள் அம்மா சொன்னார்கள். சொல்லட்டுமா? அப்படியே ஒப்புவிக்கும்படி அம்மா சொன்னார்கள். கேள்’ என்று சொல்லத் தொடங்குகின்றான்: 

“பொழுது புலர்கிறது; செவ்வானம் பரவுகிறது. கதிரவனும் காட்சி அளிக்கின்றான். இருளில் மங்கிக்- கிடந்த ஊரும், பல நிறமும் பல வடிவமும் பெற்றுத் தோன்றுகிறது. ஒருபுறம் பச்சைப்பசேர் என்ற வயல்கள்! ஒரு புறம் வானை நோக்கி எழுந்த வீடு. கள் நிறைந்த தோட்டங்கள்! ஒரு வீடு மிக உயர்ந்த எழுநிலை மாடமாகச் செருக்கிக்கிடக்கிறது. அஃது அந்த ஊருக்குத் தலைவர் வீடு என்பது சொல்லாமலே விளங்கு- கிறது. அந்த வீட்டிலிருந்து ஒரு பெண் ஓடோடியும் தோட்டத்திற்குள் வருகிறாள். அவள் தலைவரின் பெண்- தான்; தலை மயிர் கூந்தலாக நீண்டு வளராத சிறுமி; தலை மயிர் அலைய ஓடிவருகிறாள். செல்வப் பொலிவெல்லாம் உடையில் விளங்குகிறது. மனித இயற்கையின் அழகெல்லாம் அவள் நடையில் விளங்குகிறது. 

”’புதிய நாள் விடிகிறது; புத்துணர்ச்சி பிறக்கிறது அவள் பார்வையும் உடல் துடிப்பும் இயற்கையோடு இயற்- கையாக ஈடுபட்டிருப்பதைத் தெரிவிக்கின்றன. உல. குக்கு ஒரு கண்ணே, ஒளிவிளக்கே, ஓடிவா ! செக்கச் சிவந்த பழமென்றே தெரிகிறாய்! கரகர என்றே கடுகவே ஓடிவா!’ என்று பாடிக்கொண்டே கலகல என்று இவள் சிரிக்கின்றாள். பறவைகள் பலவகையான பண் ஒலிகளை எழுப்பிச் சிற்றஞ் சிறுகாலே இசையரங்கம் நடத்துகின்றன. பறவைகளோடு பறவையாய் இவளும் பாடுகின்றாள் ; ஆடுகின்றாள்; 

“தேங்குயிலே நின்பாடல் மாம்பழமோ தீம்பாலோ
பச்சைக் கிளியேநீ கொச்சைமொழி பகர்கின்றாய்
ஆடுவோம் வாமயிலே ஆண்டவனைத் தேடுவோம்” 

என்று தலையை வளைத்தும், இடுப்பினை ஒடித்தும், கையை அபிநயம் பிடித்தும் ஒய்யாரமாக நடக்கின்றாள்: நடக்கிற- பொழுது அந்தத் தோட்டத்துச் செடிகளும் காலிற் சிக்குகின்றன; ‘உன்னோடு விளையாட வேண்டும் என்று என்னைப் பிடித்து இழுக்கிறாயா? இரு, இரு! இதோ வருகிறேன்’ என்று பழைய கூட்டாளியிடம் பேசுவது போலப் பேசுகிறாள். மரங்களின் தளிர்கள்- தாழ இருப்- பன் -இவள் உடலைத் தடவிக்கொடுக்கின்றன. மலர்கள் இவள் தலைக்குள் பட்டு விழுகின்றன. ‘தடவிக் கொடுக் கும் தாயே! பூமுடிக்கும் செவிலியே!’ என்று இவள் கூறிக் கள்ளமில்லாத சிரிப்பு முகமெல்லாம் மலரச் சிரித் துப் போகின்றாள். 

”காலைக் காற்றில் தூய சிறுஅலைபோல இவளுடைய பாட்டு மெல்லப் பரவுகிறது; தொலைவில் உள்ள வானகத்துப் பாட்டுப்போலக் கேட்கிறது. அண்டை அயல் வீட்டில் உள்ள சிறுமிகள் இவளை நோக்கி ஓடி வருகின்றார்கள்: 

“ ‘வள்ளி! வள்ளி!’ என்று அழைத்துக்கொண்டே வந்து இவளைச் சூழ்ந்து மொய்த்துக்கொள்கிறார்கள். இவள்தான் உடம்பு. அவர்கள் தாம் உறுப்புக்கள். இப்- படி இயற்கையாக அமைந்ததுபோல இவளோடு ஒன்- றாய்ப் பாடுகிறார்கள்; ஆடுகிறார்கள். செவ்வானம்- செவ் வானத்தில் செங்கதிரோன்-செங்கதிரோனில் சிவந்து மின்னும் மேகங்கள் – இவற்றினைக் கண்டு களித்துப் பேசிச்- சிவந்த மூக்கிற் பழுத்த கிளிகள்-கிளிகள் கொத்தித் தின்னும் செக்கச் சிவந்த ஆலம் பழங்கள்- ஆலமரத்தின் அடியில் சிவந்து பட்டாடை உடுத்தி ஆடும் சிறுமிகள் – அவர்கள் பாடும் செந்தமிழ்ப்பாடல்கள் – அனைத்தும் ஒன்- றாய் இயைந்து அவர்கள் பாடும் பாடல்-‘செக்கச் சிவந்த செல்வா! செந்தில்வரும் முருகோனே! என்பதில் முடிகிறது. 

“முருகன் என்பது இந்த வள்ளியின் அத்தை மகன். இதோ அவன் வருகின்றான் : அதனால்தான் சிறுமியர் அப்படிப் பாடுகின்றனர். 

“வள்ளி ! இன்றைக்கு ஒரு புதிய விளையாட்டு ஆட்- வேண்டும்’ என்கின்றனர் சிறுமியர். வானத்தில் சிறிய கருமேகங்கள் பரவுகின்றன; கதிரவன் அவற்றில் மறைந்து மறைந்து வருவதுபோலத் தோன்றுகின்றான். ‘கதிரவன் கண்ணாமூச்சி விளையாடுகிறான்: நாமும் விளையாடலாம். ஆளுக்கு ஒரு கொட்டை பொறுக்கி [வாருங்கள்’ என்று வள்ளி சொன்னதும் சொல்லாததும் சிறுமியர்கள் தோட்டம் முழுதும் பரவுகின்றனர்; பாக்கு, புன்னைக் கொட்டை, புன்கம்கொட்டை, நெல்லிக்கொட்டை என்று எத்தனையோ வகையான கொட்டைகளைப் பொறுக்கு- கின்றனர்; ஆளுக்கு ஒன்றாகக்கொண்டு ஓடிவருகின்றனர். அவர்களுள் ஒரு பெண், ‘என்னவள்ளி! நேற்றுப் பாப்பா விளையாட்டு என்றாய் ; இன்று மறந்துவிட்டாயா? கொட்டை பொறுக்கச் சொன்னாயே!’ என்று கேட்கிறாள். மற்றொரு பெண், ‘வள்ளியா மறப்பாள்? புறா முட்டையை நீ தள்ளி உடைத்தாயே! அப்போது அத்தான் என்ன சொன்னார்? புறாப் பாப்பாத்தான புறா முட்டை என்று சொல்ல- வில்லையா? இந்தக் கொட்டை எல்லாம் பழத்துக்குள் இருக்கிற மரங்களின் முட்டை என்று வள்ளி சிரிக்க வில்லையா? கொட்டைகள் தாம் மரப் பாப்பாக்கள்’ என்கிறாள். 

‘மரப் பாப்பா, மரப் பாப்பா!’ என்று எல்லாச் சிறுமி- களும் கொட்டைகளை அணைத்துக்கொண்டு பாடி ஆடு- கிறார்கள். 

”சில நாட்களுக்கு முன்னர்ப் பரப்பிய மணல், தோட்- டத்திற்குப் புது மெருகிட்டாற்போல இருக்கிறது. நிறையப் பூக்கள் பூத்து உதிர்வதால் மண லும் மகரந்தமும் மட்கிக் கலந்து மணப் பொடி பரப்பியதுபோலக் கிடக்கின் றன. சிறுமியர் இந்தப் பரப்பில் விளையாட வருகின்றனர்.ஒவ்- வொருவரும் தத்தம் மரப் பாப்பாவுக்கு ‘நெல்லி அப்- யன்,’ பூவரசன்,’ ‘மாம்பழ நங்கை, ‘கமுகம்மை ‘ என்று கொஞ்சிக் கூவிப் பெயரிடுகின்றனர். வள்ளி கொண்டுவருகிறது புன்னைக் கொட்டை. இதுதான் அவள்மகள். வள்ளியின் மகளை, வந்திருந்த முருக அத்தான், நப்புன்னை என்று செல்வப் பெயரிட்டு அழைக்கின்- றான். எல்லாரும் கைகொட்டி ஆரவாரம் செய்கின்றனர். 

“வள்ளி! விளையாடுவது எப்படி?’ என்று விளையா. டத் துடிதுடிக்கும் சிறுமியர் கேட்கின்றனர். ‘வள்ளி நான் சொல்லலாமா?’ என்கிறான் முருகன். ‘சொன்னால் என்ன?’ என்கிறாள் வள்ளி. ‘சிவப்புப் பெண்கள் எல்- லாம் ஒரு கூட்டம்; கறுப்புப் பெண்கள் எல்லாம் ஒரு கூட். டம்’ என்று சொல்லத் தொடங்கியதும், ‘அத்தானுக்கு எப்பொழுதும் விளையாட்டுத்தான்’ என்று பெண்கள் கூப்பாடு போடுகின்றார்கள். இப்படி இரைந்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது’ என்று திரும்பிப் போகப்- பார்க்கின்றான் முருகன். ‘இல்லை! இல்லை! அத்தான், சொல்லுங்கள்’ என்று சிறுமியர் பேசாமல் இருக்கின் – றனர். “கறுப்புக் கூட்டமே தோழிமார் கூட்டம்; சிவப்- புக் கூட்டமே தாய்மார் கூட்டம். தத்தம் குழந்தையைத் தத்தம் தோழிகளிடத்துக் கொடுத்துவிட்டு ஒளிந்து- கொள்ளவேண்டும். தோழிமார் ஒவ்வொரு கொட்டையை- யும் தனித்தனியே மணலுக்குள் மூடி மறைக்கவேண்டும். ‘குவால் குவால்’ எனக் குழந்தை கத்துவதுபோல் தோழிக் கூட்டம் கத்தவேண்டும். கத்தியதும் தாய்க் கூட்டம் வெளிவந்து தேடவேண்டும். யார் முதலில் தன்- னுடைய குழவியை எடுக்கிறாளோ அவளுக்குத் ‘திருத்- தாய்’ என்ற பட்டம் சூட்டவேண்டும். பூவை மாலையாகக் கட்டி மாலையிடவேண்டும்: இதுதான் விளையாட்டு’ என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு பெண், ‘யார் மாலை இடு வது? அத்தானா ?’ என்று சிரிக்கிறாள். 

“‘சிறுமியர் இரண்டு கூட்டமாகப் பிரிகின்றனர். வள்ளி மாஞ்சிவப்பு நிறம் ஆதலின், தரயார் கூட்டத்தைச் சேருகின்றாள்; தன்னுடைய நப்புன்னையைத் தோழியிடம் கொடுத்துவிட்டுக் கண்ணை மூடிக்கொள்கிறாள். இப்படியே மற்றவர்களும் செய்கின்றார்கள். தோழியர் கொட்டை- களைத் தனித்தனியே புதைத்து மணலைக் குவித்துவைக்கின்றனர். 

”வானத்திலே பரவிய கரியமேகம் இருட்டைத் திணித்- தாற்போல ஆகிவிடுகிறது. தோழிக் கூட்டம் ‘குவால், குவால்’ என்று கூவத் தொடங்கும்போது, திடீர் எனப் பெருமழை கறக்கிறது. வீட்டிலிருந்து தாய்மார், ‘ வள்ளி! நக்கண்ணை ! நச்செள்ளை !… ஓடிவாருங்கள்; வீட்டிற்குள் வந்துவிடுங்கள்; மழையில் நனையவேண்டாம்: வாருங்கள்; வாருங்கள்’ என்று கதறுகின்றனர். சிறுமியர் தத்தம் வீட்டிற்கு ஓடிவிடுகின்றனர். வள்ளியும் முருகனோடு வீட்டிற்குள் புகுகின்றாள். ஆனால், இவள் மனம் தோட்டத்திலே நப்புன்னையின்மேல்தான் ஓடுகின்றது. ‘ஐயோ என்னுடைய நப்புன்னை எப்படி ஆகுமோ? அத்தான், நீங்கள் தேடிக் கொண்டுவந்த தாயிற்றே! நன்றாய் உருண்டையாய் இருந்ததே! பாவம்! பாப்பா என்ன ஆகுமோ? பாழும் மழை தலைகாட்ட முடியாதபடி பெய்கிறதே!’ என்று இவள் கண் கலங்கிநிற்கிறாள்!. 

”கோடைமழை விடாமல் பெய்கிறது. இரண்டு நாட்கள் இப்படிக் கழிகின்றன. மூன்றாம் நாள் பெருமழை இல்லை. இருந்தாலும் வெளியே வந்துவிடுவதற்கு இல்லை. இப்படி மேலும் இரண்டுநாட்கள் செல்லுகின்றன. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. மறுநாள் வானம் வெளுக்கின்றது. கதிரவன், காட்சி அளிக்கின்றான். காலம் கண்ட பாட்டனார் என்று கதிரவனை இந்தச் சிறுமியர் அழைப்பர். திங்களில் இருக்கிற ஆலமரத்துக் கிழவிதான் பாட்டி: வான்மீன்கள் எல்லாம் வானப் பாப்பாக்கள் – சிறுமியர் உறவின்முறை அப்படி இருக்கிறது. 

“ஆதலின், கதிரவனைக் கண்டதும் ஓடோடியும் சிறுமியர் வருகின்றனர். வள்ளியோ, நாள்தோறும், ‘நப்புன்னை, நப்புன்னை!’ என்றே புலம்பிக்கிடக்கின்றனள்; இன்று பொழுது விடிந்ததும் ‘நப்புன்னை’ என்றே கண்ணைக் கசக்கி அழுதுகொண்டு வருகின்றாள். முருகன் மனம் உருகுகிறது. கள்ள ளமற்ற உள்ளமல்லவா பிள்ளை உள்ளம் ! முன் விளையாடிய இடத்தை அவன் போய்ப் பார்க்கின்றான். இரண்டொரு சிறிய இலைகள் மேலே தெரிகின்றன.புன்னைக்கொட்டை மரமாக வாழத்தொடங்கி, இலைவிட்டுச் சின்னஞ்சிறு செடியாக இருக்கிறது. ‘வள்ளி! வள்ளி! நப்புன்னைப் பாப்பா உன்னைப்போல் இத்தனை நாளாக அழுது புலம்பியது; அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று வருந்தியது; மணலையும் கீறிக்- கொண்டு இதோ வந்து தலையை அசைத்துக் கொஞ்சு- கிறது பார். வாவா!’ என்று களிக்கூத்து ஆடுகிறான் முரு- கன். வள்ளி ஓடோடியும் வருக்கின்றாள்.மற்றைய சிறுமியர்- தம் கொட்டைப் பாப்பாக்களை, மழை, தன் ஊருக்கு அடித்துக்கொண்டு  போய்விட்டது. அவர்களும் புன்னை செடியைப் புதுமையோடு பார்க்கின்றனர். வள்ளி, தன் நெற்றியை நெறித்து நிற்கின்றாள். ‘என்ன, நான் சொல்- வதில் நம்பிக்கை இல்லையா?’ என்று சொல்லிக்கொண்டே மணலைக் கீறிக் கீழே புன்னைக்கொட்டையை முருகன்  காட்டுகிறான்; உடனே மணலைத் தள்ளி மூடிவிடுகிறான்- 4 வள்ளி! உனக்குத்தான் திருத் தாய்ப்பட்டம் சூட்ட வேண்டும்! உன் பாப்பாத்தான் கல்வி யம்மா ! என்ன அறிவு! அம்மாவைத் தேடிக்கொண்டு மணலுக்கு உள்ளிருந்து மேலே வந்துவிட்டது. அதன் அறிவே அறிவு!’ என்று சிறுமியர் புகழ்கின்றனர். 

”திருத் தாயாருக்கு மாலை சூட்ட மாலை இல்லையே!’ என்கின்றாள் ஒரு சிறுமி. முருகன், தான் மூடிவைத்- திருந்த முல்லை மாலையைத் திறந்துகாட்டுகிறான். * கொட்டைப் பாப்பாவைக் கொண்டு வந்தவரும் அத்தான்; விளையாடக் கற்பித்தவரும் அத்தான்; பாப்பா வளர்ந்திருப்ப தனைக் காட்டிக்கொடுத்தவரும் அத்தான்; ஆகையால், அவரே மாலை இடவேண்டும்’ என்று எல்லாச் சிறுமியரும் ஒருவர்முன் ஒருவர் பேச முந்தி இரைகின்றனர். இந்தப் பேரிரைச்சலைக் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் ஓடிவருகின்றனர். என்ன காண். கின்றனர்? முருகன் வள்ளிக்கு மாலை சூட்டுகின்றான். திருத்தாய் வாழ்க! என்று சிறுமியர் வானத்திலும் கேட்க வாழ்த்துகின்றனர். “பெற்றோர் திருமணம் செய்வதற்கு முன்னரே இவர்கள் மணந்துகொண்டனரா?’ என்கின்றாள் அண்டை வீட்டுப் பாட்டி. அந்த வீட்டுச் சிறுமி நடந்த- தனை விளக்கிவைக்கின்றாள். எல்லோரும் பிள்ளைமை விளையாட்டில் இன்புறுகின்றனர். வள்ளி, தன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறாள். முருகனும் தன தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். ‘அம்மா! வள்ளிப் பாப்பாவைப் பார்க்கும்- போதெல்லாம் உங்கள்மேல் அன்பு பொங்குகிறது’ என்று அப்பாவிடம் சொன்னீர்களே! நினைவு இருக்ககிறதா? அதேபோல இந்த நப்புன்னையைப் பார்க்கும் போதெல்லாம் அத்தான்மேலே எனக்கு அன்பு பொங்கு- கிறது’ என்று தன் தாயை நோக்கி வள்ளி கூறுகிறாள். எல்லோரும் கலகல என நகைக்கின்றார்கள். 

“நப்புன்னையை வள்ளி மறப்பதில்லை. நாள்தோறும் தண்ணீர் ஊற்றுவது யாரும் செய்வதே! தனக்குத் தாயார் தரும் பாலையும் தேனையும் ஊற்றி வள்ளி வளர்க்கின்றாள்; உணவுப் பொருள்களை யாருக்கும் தெரியாமல் அதன் வேரில் புதைத்துவைத்துக்கொண்டே இருக்கின்றாள். பின்னர்த் தோண்டிப் பார்க்கும்போது அவை மண்ணோடு மண்ணாய் மட்கி மறையும் அல்லவோ? ‘நப்புன்னை இவற்றை உண்டுவிடுகின்றாள்’ என்றே நம்புகின்றாள் வள்ளி. புன்னை- மரம் பூக்கும்போதெல்லாம் ஒரு பெரிய திருவிழா ! ஒரு பெரிய விருந்து! 

“ஆண்டுகள் பறக்கின்றன. வள்ளியும் முருகனும் பெரியவர்கள் ஆகின்றனர். இருவருக்கும் திருமணம் நடந்தேறுகிறது. வள்ளியும் தன் குடிக்கு ஒரே குழவி; முருகனும் தன் குடிக்கு ஒரே குழவி. இருவர் செல்வ- மும் ஒன்றாவதும் உண்மையே ! வள்ளி, முருகன் வீட்டுக்குப் போவதே மரபு. ஆனால், நப்புன்னையைவிட்டு. எப்படிப் போவாள் வள்ளி? அனைவரும் இதனை உணர்- கின்றனர். முருகனை விட இந்த உண்மையை உணர்வார் யார்? ஆதலின், முருகனே வள்ளியின் வீட்டில் வாழ வருகின்றான். 

“சகுந்தலை நீர் ஊற்றிச் செடிகளை வளர்த்ததனை அறிவோம். வள்ளிபோலப் பால் ஊற்றி தான் வளர்த்ததனை எங்கும் கேட்டதில்லை. குழந்தைகள்போலத் வளர்த்தவற்றை வருத்தத்தோடும் பிரிந்து தன் னில்லம் சென்றாள் சகுந்தலை. பிரியவே முடியாது எனக் கணவனையே தன் இல்லத்திற்கு முழுமனத்தோடும் வரச் செய்த கதையினை, உலகில், நம் தமிழ் நாட்டில் அன்றிக் கேட்டவர் யார்? ஆனால், தமிழ் மங்கையின் அன்பு இதனோடு முடியவில்லை’ என்று முடிக்கிறான் சாத்தன். 

“நப்புன்னையின் சிறப்பினை வள்ளியம்மையார் கூறக் கேட்டதிலிருந்து குழந்தைகளுக்கு அந்த மரத்தின் மேல் பேரன்பு – பேருருக்கம்; பெரிய மதிப்பு! அங்குத்தான் அவர்கள் சென்று விளையாடுகின்றார்கள். எல்லோருக்கும், புன்னை, நிழல் கொடுப்பதுபோல, எல்லோருக்கும் உதவ- வேண்டும் என்பது அவர்கள் மனத்தில் படிகிறது. பூவினை – யும் கொம்பினையும் பறித்தாலும் புன்னை பொறுத்திருப்பது- போலத் தாங்களும் பொறுமை பாராட்டவேண்டும் என்ப- தனையும் அவர்கள் உணர்கிறார்கள். அவர்களும் நப்-புன்னை அக்காளின் புகழைப் பாராட்டாத நாளே கிடையாது ” என்று முடிக்கிறாள் பாட்டி. 

கேட்டதும் தன்னை மறக்கிறான் கண்ணன்; விழித்துப் பார்க்கிறான். 

“மரத்திற்கும் உயிர் இருக்கிறது என்பார்கள்; ஆனால், மரங்களையும் உடன் பிறந்தாராக, ‘வாயில் மட்டுமன்றி வாழ்க்கையிலும்’ கொண்டு பாராட்டும் இந்தத் தமிழ்ப்- புதுமை – தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வளர்ந்து- வருகிற நுட்பம் – இன்று தான் விளங்குகிறது. உலகம் முழுதினையும் – மரங்கொடியுட்பட -உடன் பிறந்ததாகக் கொள்ளும் அன்புள்ளம் படைத்த நப்பின்னையைக் காதலி- யாகப் பெற்ற நானே தவமுடையேன். வாழி நப்பின்னை! வாழி நப்புன்னை!நாளையே மணக்கின்றேன்” என்கின்றான் கண்ணன். 

”விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி 
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே!
அம்ம! நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க ! நீ நல்கின் 
நிறைபடு நீழல் பிறவும்ஆர் உளவே !” 
-நற்றிணை 172. 

(ஆயம் – தோழிக் கூட்டம்; காழ் – கொட்டை; அகைய- கப்புவிட்டுவளர; நுவ்வை-உங்கள் அக்காள்; கடுப்ப-போல: வான் கோடு – வெள்ளையான சங்கு; இலங்கு – விளங்குகிற; கொண்க – தலைவனே; நல்கின் – அருள் செய்தால்; ஆர்-அசை.) 

– நற்றிணை நாடகங்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 1954, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *