நடக்கும் விதங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 2,735 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

நள்ளிரவு கடந்துவிட்ட அந்த வேளையிலும் முனீர் எங்களுக்காகக் காத்திருந்தான். நாங்கள் பயணம் செய்து வந்த பஸ்களுக்குக் கேற்றைத் திறந்து வழி விட்டான். முனீர் அந்த இடத்தின் இரவுக் காவலாளியாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். அவனது பெயர் முனீர் என்பதும், அவன் சிரியா நாட்டைச் சேர்ந்தவன் என்பதும் அடுத்த நாட் காலை அவனோடு விபரமாகப் பேசிய போதுதான் தெரியவந்தது. (குவைத் போடரில் பாஸ்போர்ட் கிளியரன்ஸ் அலுவல்களை முடித்துக்கொண்டு நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, இலங்கை வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானம் புறப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்த இடத்திலிருந்துதான் இது தொடருகிறது.) 

“ஈராக்கிலிருந்து மற்றவர்களையும் நாளைக்கு இங்கு கூட்டி வர ஒழுங்கு செய்கிறேன். பின்னர் பிரத்தியேகமாக ஒரு விமானத்தை ஏற்பாடு செய்து, எல்லோரையும் கூடிய சீக்கிரம் உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பேன். இன்றைக்கு இரவு தங்குவதற்கு ஓரிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது… ட்றைவர் கூட்டிப் போவார்” எனக் கூறிவிட்டுப் போய்விட்டார் பூரி. அப்படி வந்து சேர்ந்த இடம்தான் இது. 

பஸ்களிலிருந்து ஆட்கள் இறங்கி பயணப் பொதிகளை இறக்கிய போது, முனீர் எல்லோருக்கும் உதவி புரிந்தான். குனிந்து பொதிகளைத் தூக்கும்போது முன்விழுகிற தலைமுடியை அலட்சியமாக ஒதுக்கிவிட்டான். பாகவதர் முடி. கழுத்துவரை செழித்து வளர்ந்திருந்தது. முனீர் யாருடனும் பேசவில்லை. ஒரு புன்முறுவல்கூட அவனது வதனத்திற் தென்படவில்லை. அவன் இன்னார், எப்படியானவன் என்பது புரியாதபடியால் நாங்களும் எதுவும் பேசவில்லை. (அவனது இறுக்கமான முகத்தோற்றம் சற்று பயத்தைக்கூட ஏற்படுத்தியது.) 

பொதிகளை இறக்கியபின் ஒரு பெரிய ஸ்டோரின் கதவுகளைத் திறந்துவிட்டான். உள்ளே காட்டி “ஸிலீப்…!” எனக் கூறி, உறங்குவதுபோல தலையிற் கை வைத்து சைகையும் செய்தான். (அவனுக்கு ஆங்கில அறிவு குறைவாயிருக்கலாம் என நினைத்தேன். அல்லது எங்களுக்கு ஆங்கிலத்திற் புரியாது என அவன், கைப்பாஷையைப் பயன்படுத்தியிருக்கலாம்.) அவன் கூறிய விதம் கட்டளையிடுவதுபோலிருந்தது. யாரும் உள் நுளையாமல் நின்றோம். 

அன்று முழுதும் பயண அலைச்சல்களில் எல்லோருமே களைப்படைந்திருந்தனர். சாக்குகள் போன்ற பொருட்கள் போடப்பட்டிருந்த அறைக்குள் படுக்கச் சொன்னது எரிச்சலையூட்டியது. 

“எங்களை என்ன ஆடுமாடுகள் என்று நினைச்சாங்களோ?” எனச் சிலர் சத்தம் போட்டார்கள. அவர்களைக் கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு கேட்டேன். அந்த ஸ்டோருக்குள் படுப்பதற்கு எனக்கும் சம்மதமில்லைதான். 

முனீர் இறுக்கமான முகத்துடன் எங்களை மாறி மாறிப் பார்த்தான். 

“அவனுக்குச் சொல்லுங்க, இது சரிப்படாது… எங்களுக்கு ஹோட்டல் அரேஞ் பண்ணித்தரச் சொல்லுங்க…!” என்னுடன் வந்திருந்தவர்களின் கோரிக்கை இது. நான் தயங்கினேன். முனீரின் முகத் தோற்றம் எச்சரிக்கை செய்வது போலிருந்தது. ஏதாவது பேசினால் கழுத்தைப் பிடித்து (ஸ்டோருக்கு) உள்ளே தள்ளுவான் போன்ற பார்வை. 

இதுபற்றிப் பூரியுடன்தான் பேசவேண்டும். ஆனால் அவர் எங்களோடு சேர்ந்து வந்திருக்கவில்லை. “எக்ஸ்கியூஸ் மீ..!” என ஆரம்பித்து முனீருடன் பவ்யமாகப் பேசத் தொடங்கினேன். “உங்களுக்கு மிஸ்டர் பூரியின் ரெலிபோன் நம்பர் தெரியுமா…? அவரோடு பேசவேண்டும்…” 

“எதற்கு…?” 

“இந்த இடம் ஆட்கள் படுக்கக்கூடிய இடமாக இல்லை…” 

முனீர் சற்று நேரம் யோசித்தான்…. “அவரோடு பேச முடியாது. அவர் உறங்கிக் கொண்டிருப்பார்…. குழப்புவது சரியில்லை.. இப்போது வேறு இடம் பார்க்கவும் முடியாது… நீங்கள் இங்கேதான் படுக்க வேண்டும்…” 

எனக்கு ஏறிவிட்டது… “முடியாது… இங்கு படுக்க முடியாது..! நான் இப்போது பூரியுடன் பேசவேண்டும்” என உரத்துச் சத்தம் போட்டேன். 

முனீர் என்னை அழைத்துக்கொண்டு சென்று அங்கிருந்த அலுவலக அறையைத் திறந்தான். தொலைபேசியை எடுத்து மிஸ்டர் பூரியுடன் சற்று நேரம் அரபு பாஷையில் கதைத்துவிட்டு என்னிடம் தந்தான். மறுமுனையில் மிக மென்மையாக பூரி பேசுவது கேட்டது. 

“எனக்குத் தெரியும்… என்னைப் போல் நீங்களும் களைத்துப் போயிருக்கிறீர்கள். உறங்குவதற்கு நல்ல படுக்கை தேவை. ஆனால் இப்பொழுது நூற்று இருபத்தைந்து பேருக்கு ஹோட்டலில் இடம் கிடைக்காது. ஒரு நாள்தானே? தயவு செய்து சமாளித்துக் கொள்ளுங்கள். நாளைக்கு ஈராக்கிலிருந்து மற்றவர்கள் வந்ததும் உங்கள் நாட்டுக்குப் பயணமாகலாம். நீங்கள் தங்கியிருக்கும் இடம் எங்கள் கம்பனியின் ஸ்டோர்தான். அங்குள்ள மிஸ்டர் முனீர் மிகவும் பொறுப்பான மனிதர். தயவுசெய்து ஒத்துழையுங்கள்.” 

அந்த விளக்கம் எனக்குச் சரியாகவே பட்டது. அதை மற்றவர்களிடம் சென்று கூறினேன். ஆனால் அதற்குப் பலர் சம்மதிக்க மறுத்தனர். இலங்கையிலிருந்து இங்கு வேலைக்காக வந்தபோது இடைத்தங்கல் நாடுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்ததை சிலர் சுட்டிக் காட்டினார்கள். 

“தங்களுக்குத் தேவையானபோது மட்டும் உபசாரம் செய்வார்கள். திரும்ப அனுப்பும்போது மந்தைகளைப் போல கணிக்கிறார்கள்.” இந்த மாதிரியான குரல் குறிப்பாக ஒருசிலரிடமிருந்துதான் வந்து கொண்டிருந்தது. இலங்கைத் துறைமுகத்தில் ஏற்கனவே கிறேன் ஓப்பரேட்டர்களாகப் பணிபுரிந்து விட்டு வந்தவர்கள். குழப்பக்காரர்கள் போல எந்த நேரமும் சண்டைக் குணமும் சத்தமுமாக இருந்தார்கள். பலமுறை அதைக் கவனித்திருந்தாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இப்போது கோபம் தலைகேறியது. 

“நிலமைக்குத் தகுந்த மாதிரி நடக்கத் தெரிய வேண்டும். இப்பொழுதே இரண்டு மணியாகி விட்டது. இன்னும் நான்கு மணித்தியாலங்கள் படுப்பதற்கு உங்களுக்குச் சொகுசு தேவையா? விருப்பமில்லாதவர்கள் அங்கே வீதியோரத்தில் போய்ப் படுக்கலாம்…” எனச் சத்தம் போட்டவாறு வெளியே கையைக் காட்டினேன். அது வேலை செய்தது. அவர்கள் ஒவ்வொருவராக உள்ளே போகத் தொடங்கினார்கள். 

சற்று நேரத்தில் அவர்களில் இருவர் எனக்கு அண்மையாக வந்தார்கள். நல்ல பிள்ளைகளைப் போல குரலைத் தணித்துப் பேசினார்கள். “மஹத்தயா… எங்களுக்குப் பசிக்கிறது. இப்போது சாப்பிட வேண்டும்.” 

தங்கள் எதிர்ப்புணர்வைக் காட்டுவதற்காகத்தான் இந்தக் கோரிக்கையுடன் வந்து நிற்கிறார்கள் என்பது புரிந்தது. உண்மையில் எனக்கும் பசி இருந்தது. அந்த நேரத்தில் எங்கே போய் சாப்பாடு எடுப்பது? அதை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். ஆனால் அதைக் கேட்க அவர்கள் தயாராயில்லை. முனீரைத் தேடிப் போனேன். என்னைக் கண்டதும் அண்மையில் வந்தான். 

“இன்னொரு பிரச்சினை முனீர். அவர்களுக்குப் பசிக்கிறதாம். (எனக்கும்தான்) ஏதாவது சாப்பாடு எடுக்க முடியுமா?” முனீர் யோசித்தான். 

“கொஞ்சம் பொறுத்திருங்கள். பார்த்து வருகிறேன்…” என அங்கிருந்த பிக்அப் வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே சீறிப் போனான். வாகனம் நிறைய அப்பிள்கள், பிஸ்கட், மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகளுடன் திரும்ப வந்தான் முனீர். 

“இந்த நேரத்தில் இவற்றைத்தான் எடுக்கக் கூடியதாயிருந்தது. ஒருவாறு சமாளிக்கலாமா?” 

“இல்லை… இதுவே போதும்… நன்றி!”

ஆனால் அது அவர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. 

“இது என்ன பசிக்குச் சாப்பிடும் சாப்பாடா… ருசிக்குச் சாப்பிடும் சாப்பாடா?” என ஏளனம் செய்வது போலக் கேட்டார்கள். நான் வெகு நிதானமாகச் சொன்னேன். 

“நிலமைக்குத் தகுந்த மாதிரி அஜஸ்ட் பண்ணத் தெரியவேண்டும். அது தெரியாவிட்டால் பட்டினி கிடக்கலாம்….” பின்னர் வெளியேறி நடந்தேன். முனீர் ஸ்டோருக்கு வெளியே உலாவிக்கொண்டு நின்றான். அவனது டெனிம் ரௌசரும் கைநீளச் சேர்ட்டுடனுமான தோற்றம் மேலைநாட்டுச் சினிமா நாயகரை நினைவூட்டியது. 

“அவர்கள் யுத்த சூழ்நிலையிலிருந்து கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள்மேல் கோபப்பட வேண்டாம்…” முனீர் எனக்கு அண்மையாக வந்து இவ்வாறு கூறினான். 

“நீங்கள் எனது அறையிற் படுத்துக் கொள்ளுங்கள்” எனத் தனது அறையைத் திறந்து விட்டு இரவுக்காவலுக்காக வெளியே போய்விட்டான். 

ஆனால் அவனே அந்த ஸ்டோரின் பொறுப்பாளன் என்பது அடுத்த நாட் காலையில் பேசியபோது தெரியவந்தது. காலையில் இன்னும் பல வேலையாட்கள் வந்தார்கள். அவர்களை எல்லாம் வந்திருக்கும் எங்களுக்கு உதவும்படி பணித்தான். எல்லோரும் குளிப்பதற்கும் ரொய்லெட் வசதிகளுக்கும் உரிய ஒழுங்குகளைச் சுறுசுறுப்பாகச் செய்தான் முனீர். 

காலைச் சாப்பாடு சுடச்சுட வந்தது. தனது எலக்ரிக் கேத்தலை தேநீர் தயாரிப்பதற்காகக் கொடுத்தான். எல்லோருக்கும் அது போதாது என்பதால் இன்னும் இரண்டு கேத்தல்களைப் புதிதாக வேண்டி வந்து கொடுத்தான். ஓடி ஓடித் தேவையான சேவைகளைச் செய்தான். 

இரண்டு நாட்கள் அங்கு தங்க நேர்ந்துவிட்டது. ஈராக்கிலிருந்து மற்றவர்கள் வரத் தாமதமானதால் அந்தச் சுணக்கம். பூரி வந்து அனைவருடனும் கலந்து பேசினார். பெட்சீட், தலையணை போன்றவற்றை வழங்கி மேலும் சில வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். இன்னும் ஒரு நாளில் போய்விடலாம் என்பதால் ஹோட்டல் வசதி தேவையில்லை, சமாளித்துக்கொள்ளலாம் என ஒத்துக் கொண்டோம். இரண்டு நாட்களும் முனீரைக் கவனித்ததில், சுறுசுறுப்பாக அலுவல்களைச் செய்வான். மற்ற நேரங்களில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டிருப்பான். புத்தகத்துள் மிக ஆழ்ந்து மனக் கண்ணால் வாசிப்பதைக் காணக் கூடியதாயிருக்கும். 

பிரத்தியேக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, எல்லோரும் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானபோது எங்கள் தொழிலாளர்களில் ஒருவன் வந்து சொன்னான், “சேர்… அவரது எலக்ரிக் கேத்தல்களைத் திரும்பக் கொடுக்கவுமில்லை… அவற்றைக் காணவுமில்லை.” 

“எங்கே போனது?” 

“யாரோ சுருட்டியிட்டாங்கள்… பாய்க்குகளைத்தான் சோதிச்சுப் பார்க்க வேணும்”. 

முனீருக்குத் தெரியுமா?” 

“கேட்டார்… அப்பதான் நாங்கள் தேடினோம்… காணவில்லை.” 

என்ன செய்வதென்று கவலையாயிருந்தது. முனீர் என்னிடம் இதுபற்றித் தெரிவிக்கவில்லை. எனினும் வெட்கமாயிருந்தது. அனைவரையும் கூட்டி மெல்லக் கேட்டேன். “தயவு செய்து… யாராவது எடுத்திருந்தால் திரும்பக் கொடுத்துவிடுவது நல்லது. அது யாரென்று எனக்குத் தெரியவும் வேண்டாம். இப்படிக் களவாகக் கொண்டு போவது எங்கள் எல்லாருக்கும் கீழ்த்தரமான செயலாயிருக்கும். 

அதற்குப் பலன் கிட்டவில்லை. யார் எடுத்திருக்கக்கூடும் என ஊகிக்க முடியாமலுமிருந்தது. இது பற்றி எந்த முகத்தை வைத்துக்கொண்டு முனீருடன் பேசுவது எனக் கூச்சமாயிருந்தது. எனினும் பேசியே ஆக வேண்டும். முனீரை அணுகி முகத்தை மனத்தால் மூடிக் கொண்டு பேசினேன். 

“பரவாயில்லை… அதை மறந்து விடுங்கள். அது பிரச்சினையே இல்லை” என முனீர் என்னை ஆறுதற்படுத்த முயற்சித்தான். அதை அப்படியே விட்டுவிட எனக்கு விருப்பமில்லை. 

“ஒரு வேலை செய்யலாம்.. எல்லாருடைய ‘பாய்க்’குகளையும் திறந்து செக் பண்ணுவோம்.” 

அதைக் கேட்டு முனீர் பதறிப் போனான். “என்ன இது?…. அப்படிச் செய்வது கீழ்த்தரமான செயல். தயவு செய்து கவலைப்படாமல் போங்கள்.” 

பஸ்களில் பொதிகளை ஏற்றுவதற்கு உதவி செய்து, அனைவரும் ஏறும்வரை பார்த்து நின்றான் முனீர். 

பஸ்கள் நகரத் தொடங்கியதும் கையசைத்து விடை தந்துகொண்டிருந்தான். நான்கு பஸ்களிலும், கடைசியாக நான் ஏறியிருந்த பஸ் போனது. சற்றுத் தூரம் போனதும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். முனீர் ஓடி வருவது தெரிந்தது. 

சினிமாப் படங்களிற் பார்த்திருக்கிறேன் – கடத்திக் கொண்டு ஓடப்படும் கதாநாயகியைக் காப்பாற்றுவதற்காக அல்லது வாகனத்தில் வீச்சாக ஓடும் தனது எதிரியையோ வில்லனையோ பிடிப்பதற்காக கதாநாயகன் காலோட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடுவான். ‘இது சாத்தியமா, சும்மா புலுடா விடுகிறார்கள்” என்றுதான் தோன்றும். ஆனால் முனீர் நிஜமாகவே ஓடிவந்து கொண்டிருந்தான். கட்டுமஸ்தான தேகத்தைக் கொண்ட முனீர் ஓடிவரும் வீச்சைப் பார்த்தால் பஸ்சைப் பிடித்து விடுவது சாத்தியம் என்றே பட்டது. 

ஆனால் முனீர் எதற்காக ஓடி வருகிறான்? இன்னும் ஏதாவது பெறுமதியான பொருட்களை இவ்வாறு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டார்களோ? அப்படியானால் எவ்வளவு வெட்கக் கேடு? அந்தத் தலைகுனிவை எப்படித் தாங்கிக் கொள்வது? பேசாமல், தெரியாதது போலப் போய்விடுவோமா என்று கூட யோசித்தேன். எனினும் என் கை உயர்ந்து பட்டனை அழுத்தி பஸ்சை நிறுத்தச் செய்தது. 

முனீர் பஸ்சிற்கு அண்மையாக ஒரு பிறேக் அடித்து நின்று மூச்சு வாங்கினான். கதவைத் திறந்து கேட்டேன். “என்ன முனீர்…?” எனக்குள்ளே தயக்கமும் தடுமாற்றமும். 

கையிலிருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினான். 

“இதைத் தவறவிட்டு வந்துவிட்டீர்கள். திரும்ப அறைக்குப் போனபோது கண்டேன்..” 

“இதுக்காக இப்படி ஓடி வர வேண்டுமா?” 

“இந்தப் புத்தகத்தை நீங்கள் எந்த நேரமும் வாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். இதிலுள்ள பாஷையும் எனக்குத் தெரியாது. ஏதாவது நல்ல புத்தகமாயிருக்கலாம். புத்தகங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது எனக்குத் தெரியும். அதனாற் தான் எப்படியாவது கொடுத்துவிட வேண்டுமென்று ஓடி வந்தேன்.” 

“தாங்ஸ்…!” கை கொடுத்துக் கையசைத்து விடை பெற்றேன். கையசைத்துக் கண் மலர்த்திப் பார்த்து நின்றான். புத்தகத்தை ஒப்படைத்துவிட்ட திருப்தி முனீரின் முகத்தில் மலர்ந்திருந்த காட்சி இன்னும் என் மனதில் பதிந்திருக்கிறது. 

– மல்லிகை, 2002.

– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *