நகரம்யா!





ராசு மாமாவுக்கு 98 வயது. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை விட்டு வெகு தொலைவு விலகியிருந்தது. நவீன கால நாகரிக வாடை அந்தக் கிராமத்துக்கு இன்னும் எட்டவில்லை. ரயில் – பஸ் போன்றவற்றை இந்தக் கிராம மக்களில் பெரும்பான்மையினர் பார்த்ததே இல்லை.
ராசு மாமாவின் பேரப் பிள்ளைகள் பெரிய உத்தியோகம் பார்த்துக் கொண்டு பட்டணத்தில் இருந்தனர். அவர்களுடைய அழைப்பின் பேரில் நகரத்துக்கு வந்திருந்தார்.
ஒரு மனிதனால் 98 வயது வரை வாழ முடியும் என்ற விஷயமே நகர்ப்புற மக்களுக்கு ஒரு அதிசயம். நவீன நகரங்களில் 60 வயதுக்கு மேல் வாழ்வோர் அரிது. அனேகமாக 50 வயது நடப்பதற்குள்ளே மக்கள் மரணமடைந்து விடுவது வழக்கம்.
நகரத்துக்கு 98 வயது மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை ஏதோ ஒரு அற்புதம் போலக் கருதிய நகர மக்கள் மாமாவை வேடிக்கை பார்க்கவும், அவருடன் உரையாடவும் அடிக்கடி வரத் தொடங்கினர். பத்திரிகை நிருபர் ஒருவர் ராசு மாமாவைப் பேட்டி காண வந்தார். நிருபர் தாம் வந்ததன் நோக்கத்தை விவரிக்கக் கேட்டதும், மாமா ஆச்சர்யம் அடைந்தார்.
“”என்னைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதனால் உங்கள் வாசகர்களுக்கு என்ன லாபம்?” என்று கேட்டார் மாமா.
“”எங்கள் நகரப் பகுதியில் ஒரு மனிதர் 98 வயது வரை வாழ்வது என்பது பெரிய அதிசயம்!” என்றார் நிருபர்.
மாமா கலகலவென்று நகைத்தார்.
“”ஒரு மனிதன் அதிக நாள் வாழ்வது அவ்வளவு அதிசயமா? எங்கள் கிராமத்தில் நூறு வயதுக்கு மேல் வாழும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனரே!” என்றார்.
“”அது எங்களுக்கெல்லாம் அதிசயத்திலும் அதிசயமாகும். எங்கள் நகர் புறங்களில் 50 வயது வரையில் வாழ்வதே பெரிய விஷயம்!” என்று கூறினார் நிருபர்.
பிறகு பேட்டியைத் தொடங்கினார்.
“”மாமா அவர்களே! எங்கள் நகர்ப்புற வாழ்க்கையை எந்த அளவுக்கு ரசிக்கிறீர்கள்? இங்கே உங்கள் மனம் கவர்ந்த அம்சம் என்னென்ன?”
“”ஐயா இதுபோன்ற தூசியும், தும்பும் நிறைந்த ஒரு நகரத்தில், ஒரு மனிதனால் எப்படித்தான் வாழ முடியுமோ தெரியவில்லை. எனக்கு என்னவோ மூச்சுவிடவே கஷ்டமாக இருப்பது மாதிரி இருக்கிறது. நான் 120 வயது வரையிலாவது உயிர் வாழ முடியும் என்று கிராமத்திலிருக்கும் போது நம்பிக்கை இருந்தது.
“”இங்கே வந்த பிறகு ஓர் ஆறு மாதம் உயிரோடு இருக்க முடியுமா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மக்களுடைய நடைஉடை பாவனை போன்ற எல்லாவற்றிலும் முட்டாள்தனத்தைத் தான் காண முடிகிறது.
“”பத்து வயது சிறுவனிலிருந்து 50 வயது மனிதர் வரை எவ்வளவு இறுக்கமான லினன் உள்ளாடை அணிகின்றனர். காற்றோட்டமாகவும், ஆரோக்கியமாகவும் தளதளவென முழுஆடை அணிந்தவர் ஒருவர் கூடக் காண முடியவில்லையே… வெட்கக்கேடு!” என்றார் மாமா.
“”உங்கள் கிராமத்தில் காண முடியாத ரயில் – பஸ்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இவை மிகவும் வசதிகரமான, சுகமான போக்குவரத்து சாதனங்கள் அல்லவா?” என்று நிருபர் கேட்டார்.
“”அவையென்ன போக்குவரத்துச் சாதனங்களா? ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையா? கொஞ்சமாவது அமைதியாக, நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறதா? ஆயிரந்தான் சொல்லுங்கள்… கிராமத்தில் கழுதையின் மீது பயணம் செய்யும் சுகம் வருமா?” என்றார் மாமா.
“”அது கிடக்கட்டும். எங்கள் நகரத்து சினிமா, நாடகம் போன்ற பொழுதுபோக்கு நிலையங்கள் கூட உங்கள் மனத்தைக் கவரவில்லையா?” என்று கேட்டார் நிருபர்.
“”அவையெல்லாம் மனிதர்களைப் பைத்தியக்காரர்களாக்கிவிடும்!” என்றார் மாமா.
“”எங்கள் நகரத்து உணவு வகைகள் கூட உங்களுக்கு ருசிக்கவில்லையா?” என நிருபர் வினவினார்.
“”சாக்கடை நாற்றமெடுக்கும் சூழ்நிலையில் ஊசிப்போன, தீய்ந்துபோன பதார்த்தங்களை முள்கரண்டிகளால் அள்ளிச் சாப்பிட்டுவிட்டால் போதுமா? எங்கள் கிராமத்தின் ஆரோக்கியமான பழைய அமுதுக்கு இது ஈடாகுமா?” என்று கேட்டார் மாமா.
“”எங்கள் நகர நவீன சாதனமான எரிவாயு, மின்சாரம் இவையெல்லாம் கூட எங்கள் மனத்தைக் கவரவில்லையா?” என்று நிருபர் கேள்வி எழுப்பினார்.
“”தம்பி…” என்று நிருபரை உரிமையோடு விளித்தார் மாமா.
“”வாழ்க்கையின் சிறப்புக்களைப் பற்றி உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? எங்கள் கிராமத்தில் நான் சொக்கப்பானை கொளுத்தினால் எவ்வளவு குஷியாக இருக்கும் தெரியுமா? நாங்கள் வெறும் கணப்புக்கு என்று மட்டும் தயார் செய்வதில்லை. ஏதாவது காரணத்துக்குத் தீமூட்டினால் அது எல்லாவித வேலைகளுக்கும் பயன்படுவதாக இருக்கும். வெளிச்சத்துக்கு வெளிச்சம்; கதகதப்புக்கு கதகதப்பு; சமையலுக்கு நெருப்பு. இப்படிப் பலவிதமான பயன்கள்.
“”இங்கே எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் சிறு அடுப்பு மூட்டினால் போதும். பேரன் அனுமதி கொடுத்தால் இப்போதே அடுப்பை மூட்டி விடுவேன். அந்த அடுப்பு ஒன்றே வீட்டுக்கு வெளிச்சமாகவும், குழம்பு, கறி வைப்பதற்கான தீயாகவும், கணப்பாகவும் பயன்பட்டுவிடும். தனித்தனியாக எரிவாயு, கணப்பு, அடுப்பு, விளக்கு என்று வீணாக ஏன் செலவு செய்ய வேண்டும்? அந்த அடுப்பிலே வைக்கும் கறி குழம்புக்கு உங்கள் சிற்றுண்டிக்கான குழம்பு ஈடாகுமா?”
நிருபர் அதற்குப் பிறகு எத்தனையோ வினாக்களை எழுப்பிவிட்டார்.
என்ன வினா எழுப்பினாலும் நகர்ப்புறங்களைப் பற்றி மாமாவுக்கு நல்ல அபிப்பிராயமே ஏற்படவில்லை. கிராமப்புறங்கள்தான் சொர்க்கம், நகர்ப்புறங்கள் அனைத்தும் நரகம் என்று அவர் வர்ணிக்கத் தொடங்கிவிட்டார்.
நிருபர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது, “”மாமா! இந்த நரகமாகிய நகரத்தில் இருக்கவே மனம் ஒப்பாதே. எப்பொழுது சொர்க்கமாகிய உங்கள் கிராமத்துக்குப் புறப்படப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
“”கிராமத்துக்கா? இனிமேல் கிராமத்தைப் பற்றி எங்கே சிந்திப்பது? மிச்ச காலத்தை நகரத்திலேயே கழித்துவிடப் போகிறேன்!” என்றார் மாமா.
“”இங்குதான் உங்களுக்கு மிகவும் அசவுகரியமாகவும், தொல்லை தருவதாகவும், ஆரோக்கியக் குறைவானதாகவும் சூழ்நிலை அமைந்திருக்கிறதே. தொல்லை, அசவுகரியத்துக்கு நடுவே எதற்காக வாழவேண்டும்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் நிருபர்.
மாமா சிரித்துக் கொண்டே சொன்னார்… “”தம்பி! மனிதன் பழக்கத்துக்கு அடிமை என்ற விஷயம் உனக்குத் தெரியாதா? கொஞ்சநாள் நகரத்தில் வந்து தங்கிப் பழகியதும் இங்கிருக்கும் தொல்லைகளும் வசதிக் குறைவும் மிகவும் பழகிப் போய்விட்டன. இனிமேல் இந்த மாதிரி வசதிகள் இல்லாத கிராமத்தில் பொழுது போக்க முடியாதுபோல் தோன்றுகிறது. அதனால் கிராமத்துக்குத் திரும்பிப் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்!” என்றாரே பார்க்கலாம்!
நிருபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
– மே 28,2010