தொலைக்காட்சி பெட்டிகளின் மரணம்





பிலோ பார்ன்ஸ்வொர்த் கோபத்துடன் தன் கையிலிருந்த மல்ட்டிமீட்டரை மேஜையில் வீசி எறிந்தார். மேஜையிலிருந்த காகிதங்களும் மின்னணு பாகங்களும் சிதறின. “மற்றொரு முட்டுக்கட்டை,” என்றார் உரக்க.
மூலையில் ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்த ஆல்பர்ட் தலை நிமிர்ந்தார். “இன்னமும் தொலைக்காட்சி பெட்டியைக் கண்டுபிடிப்பதில் வெற்றி கிடைக்கவில்லையா?”
பிலோ சோர்வுடன் நாற்காலியில் சரிந்தார். “இல்லை. 1919ம் ஆண்டிலிருந்து இந்த ப்ரொஜெக்ட்டில் வேலை செய்கிறேன்… ஆறு ஆண்டுகள் இரவு பகலாக உழைத்திருக்கிறேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. பிம்பங்களையும் ஒலியையும் தொலை தூரம் கடத்தும் கான்செப்டே சாத்தியமா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஒரு வேளை இந்த யோசனையே அடிப்படையில் தவறாக இருக்கலாம்.”

“அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மனம் தளர்ந்து விடக் கூடாது, பிலோ. தொலைக்காட்சி பெட்டி என்பது எப்பேர்ப்பட்ட ஒருசாதனம்! அதை உருவாக்கும் ஒரு அற்புதமான சாதனையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறீர்கள்.”
“அப்படியா?” பிலோ சோகமாக சிரித்தார். “அல்லது ஒரு முட்டாள்தனமான கனவை துரத்திக்கொண்டிருக்கிறேனா?”
ஆல்பர்ட் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்னர் மெதுவாக, “தொலைக்காட்சி பெட்டி சாத்தியம் தானா என்பதை உறுதி செய்ய ஒரு வழி இருக்கிறது,” என்றார்.
பிலோ புருவத்தை உயர்த்தினார். “என்ன சொல்கிறீர்கள்?”
“நான் கால இயந்திரத்திற்கான காப்புரிமை பெற்றது நினைவிருக்கிறதா?”
பிலோ நிமிர்ந்து உட்கார்ந்தார். “அது வேலை செய்கிறதா என்ன? ஒரு ப்ரோட்டோடைப் சாதனத்தை உருவாக்கி விட்டீர்களா?”
“ஆம்,” ஆல்பர்ட் அடுத்த அறையை சுட்டிக்காட்டினார். “அங்கே ஒரு வேலை செய்யும் கால இயந்திரம் இருக்கிறது. நீங்கள் ஏன் அதைப் பயன்படுத்தக்கூடாது? எதிர்காலத்திற்குச் சென்று, தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்களா என்பது தெரிந்து விடும்.”
பிலோவின் கண்கள் பிரகாசமடைந்தன. “அட! அது கூட நல்ல ஐடியா தான்.”
ஆல்பர்ட் அடுத்த பதினைந்து நிமிடங்கள் தனது கால இயந்திரத்தின் கட்டுப்பாடுகளை விளக்கினார். ஒரு விரைவான செயல் விளக்கத்திற்குப் பிறகு, பிலோ கால இயந்திரத்திற்குள் நுழைந்து அதை இயக்கினார்.
எதிர்காலத்திற்கு வந்து சேர்ந்த போது, தான் அடையாளம் காண முடியாத ஒரு உலகில் இருப்பதை உணர்ந்தார் பிலோ. விநோதமான குதிரையில்லா வண்டிகள் தார் சாலைகளில் வேகமாகச் சென்றன. மக்கள் சிறிய செவ்வக வடிவப் பொருட்களை காதுகளில் வைத்துக் கொண்டு நடந்தனர்.
அருகிலிருந்த ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பிலோ உறைந்து போனார். உள்ளே ஒரு குடும்பம் அசையாமல் அமர்ந்திருந்தது. அவர்களின் கண்கள் நகரும் காட்சிகளைக் காட்டும் தொலைக்காட்சி பெட்டியின் திரையில் பதிந்திருந்தன.
பிலோ மற்றொரு வீட்டிற்கும், பின் இன்னொரு வீட்டிற்கும் சென்றார். எங்கும் மக்கள் திரைகளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவருடன் ஒருவர் உரையாடவே இல்லை.
எதிர்காலத்தில் மேலும் ஒரு மணி நேரம் சுற்றிய பிறகு, பிலோ நிகழ்காலத்திற்குத் திரும்பினார்.
ஆல்பர்ட் ஆர்வத்துடன் பிலோவை வரவேற்றார். “எதிர்காலம் எப்படி இருந்தது? அங்கு தொலைக்காட்சி பெட்டிகளைப் பார்த்தீர்களா?”
ஆம் என்பது போல் மெதுவாக தலையசைத்தார், பிலோ. அவரது முகத்தில் எந்த உற்சாகமும் இல்லை.
“வெரி குட்!” என்றார் ஆல்பர்ட் உரக்க. “அப்படியானால் நீங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறீர்கள்!”
பிலோ தலையைக் குனிந்து கொண்டார். “இல்லை, ஆல்பர்ட். நான் தவறான பாதையில் இருக்கிறேன்.”
“நீங்கள் சொல்வது புரியவில்லை… எதிர்காலத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்தன, இல்லையா?”
“ஆம், இருந்தன,” பிலோ மெதுவாக தலையை நிமிர்த்தினார். “ஆனால் அதற்கு கொடுக்கும் விலை… எதிர்காலத்து மக்கள்… அவர்கள் பிணங்களைப் போல இருந்தார்கள், ஆல்பர்ட்! வெறுமனே தொலைக்காட்சி பெட்டியின் திரைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டு.”
“ஆனால் நிச்சயமாக அதன் நன்மைகள்–”
“இல்லை,” பிலோ இடைமறித்தார். “அதன் எந்த நன்மையும் நான் பார்த்த கொடுமையை சரிக்கட்ட முடியாது. அந்த எதிர்காலத்திற்கு நான் பொறுப்பாக இருக்க மாட்டேன்.”
“அப்படியானால் என்ன செய்யப் போகிறீர்கள்?”
பிலோவின் முகத்தில் ஒரு உறுதி தெரிந்தது . “நான் என் தொலைக்காட்சி ஆராய்ச்சியை எரிக்கப் போகிறேன். அனைத்தையும்.”