தொட்டுப்பேசு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 1,831 
 
 

திருமணமாகி ஆறு மாதங்களாகியும் ஓர் அறையில் தன்னுடன் சேர்ந்து படுத்து உறங்கும் விருப்பமின்றி கணவன் நேசன் இருப்பதைக்கண்டு மனதாலும், உடலாலும் உடைந்து போயிருந்தாள் நேகா.

ஜாதகப்பொருத்தம் நன்றாக இருப்பதாகவும், தங்கள் மகன் நன்றாக சம்பாதிப்பதாகவும் வரனின் பெற்றோர் சொன்னபோது உடனே விசாரிக்காமல் தனது பெற்றோர் தலையாட்டி, தன்னையும் ஒரே முறை அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே கோவிலில் நேசனுடன் பேச வைத்து திருமணத்தேதியை சொன்னதும் கனவில் நடப்பது போல் இருப்பதாக நினைத்து அதிர்ந்தாள் நேகா.

“இதபாரு நேகா… நாங்களும் நாலு வருசமா வரன் பார்க்கிறோம். இது வரைக்கும் மேட்ரிமோனிக்காரங்களுக்கும், மாப்பிள்ளை புரோக்கர்களுக்கும் ரெண்டு லட்சம் கரைஞ்சிருக்கு‌. ஒரு வரனக்கூட நேர்ல காட்டல. இவங்க ஒரு வகைல நமக்கு சுத்திவளைச்சு சொந்தக்காரங்க. நம்ம சொந்தக்காரங்க ஒருத்தங்க ஸ்ட்ராங்கா ரெகமண்ட் பண்ணறாங்க. நான் கேரண்டீன்னு சொல்லறாங்க. பையனும் நீ கேட்டமாதிரியே அழகா வேற இருக்கான். ரொம்ப யோசிச்சா கல்யாணமே நடக்காமப்போயிடும். தயவு செஞ்சு சரின்னு சொல்லு.‌..” என பேசிய தாயின் பேச்சைத்தட்ட இயலாமல் “சரி” என்றாள்.

“நீ அப்பவே முடியாதுன்னு சொல்லியிருக்கலாமில்ல. இப்ப போயி லட்சக்கணக்குல செலவு பண்ணி கல்யாணம் பண்ணின பின்னாடி முடியாதுன்னா இன்னொரு தடவை எங்களால பண்ணி வைக்க முடியாது. அனுசரிச்சு போ. போகப்போக புத்தி மாறி சரியாயிடும். மந்திரி கூட உன்ற கல்யாணத்துக்கு வந்திருக்காருடி. அவரு இதக்கேட்டா என்ன நினைப்பாரு? எல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்” என பேசிய தாய் சுந்தரியை கோபமாக ஏறிட்டாள்.

“குழந்தை எப்படிம்மா பொறக்கும்…? தன்னப்போல பொறந்திடுமா? அப்படின்னா மகாபாரத குந்தி மாதிரி பெத்துட்டு கல்யாணம் பண்ணாமையே இருந்திருக்கலாமே. சொத்து, பணம் தவிர அவனோட குணம் என்னன்னு தெரிய ஒரு மாசமாவது என்னை அவனோட பழக விட்டீங்களா? அட்லீஸ்ட் என்னை அவனோட போன்லயாவது பேச விட்டீங்களா? பேசுனா தப்பா பேசிடுவே. அதனால கல்யாணம் நின்னு போகும்னு சொன்னே. அப்படி நின்னு போயிருந்தா கூட பரவாயில்லையே… இப்ப தொட்டு தாலி கட்டிப்போட்டு என் கூட தொட்டுப்பேசவே மாட்டேங்கிறானே…. தொட்டு பேசுவான்னு ஒவ்வொரு நாளும் நானும் ஏங்கறேன்… அவன் நிம்மதியா தினமும் ஆபீஸ்ல இருந்து வந்ததும் தூங்கறான். அம்மா பையனாவே இருக்கான். என்னால முடியல. எனக்கு அவன்கிட்டிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுத்திடுங்க” என மகள் நேகா சொன்னதைக்கேட்டு தாய் சுந்தரிக்கு மயக்கமாக வந்தது.

மகளின் பேச்சைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவாறு கண்ணீர் விட்டபடி “என்னமோ மளிகைக்கடைல இருந்து வாங்கிக்கொடுன்னு சொல்லற மாதர  அத வாங்கி கொடுன்னு கேக்கறே? தப்புத்தப்புன்னு சொல்லு. ஒன்னொரு தடவ அந்த வார்த்தைய நீ என்ற கிட்ட சொன்னீன்னு வெச்சுக்கோ, நான் உசுரோட இருக்கமாட்டம்பாத்துக்க…” சொல்லி தேம்பித்தேம்பி அழுதாள்.

“அப்ப நாம்போயிடட்டுமா…?”

“எங்கே…?”

“நீ எங்கே போகனம்னு நினைக்கிறியோ அங்கே…”

“நேகா……” பதறினாள். உன்னை அதுக்கா பத்துமாசம் சுமந்து பெத்தேன்? எனக்கு நீதான் வேணும். மத்ததெல்லாம் அப்பறம். இந்தளவுக்கு போன பின்னாடி எது போனா என்ன? மானம் என்ன மானம் வெங்காய மானம். நாமென்ன அடுத்தவங்க குடும்பத்த கெடுத்தா போட்டோம்? நம்மப்புடிக்காதவங்கள விட்டுப்போட்டு வரப்போறோம். நீ கவலைப்படாத…. எது வந்தாலும் வந்துட்டு போகட்டும். உசுருதான் முக்கியம்….” என பதறியபடி நேகாவை‌மடியில் தலை வைத்து படுக்க வைத்து சாந்தமானாள் தாய் சுந்தரி.

“ஏனுங்க நாந்தான் சம்மந்தி பேசறேன். உடனே எங்க வீட்டுக்கு புறப்பட்டு வாங்க. இப்படியே என்ற பொண்ணு என்ற வீட்லயும், உங்க பையன் உங்க வீட்லயும் இருந்தா என்ன அர்த்தம்? உங்க பையனுக்கு ஆண்மை இருக்குதா? இல்லையா? ன்னு டாக்டர்கிட்டப்போய் செக்பண்ணி சொல்லுங்க. அப்பறம் வாழ முடியுமா? முடியாதா? ன்னு ரெண்டுல ஒன்னு நாஞ்சொல்லறேன்” என சுந்தரி நேகாவின் மாமியார் வசந்தியிடம் பேச, கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்பதை அறிந்து மனமுடைந்தாள்.

ஒரு வாரத்துக்கு பின் நேகாவுக்கு மனநல மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அங்கே சென்று பார்த்த போது நேசன் மருத்துவரைப்பார்க்க காத்திருந்தான். தம்பதியாக கவுன்சிலிங் வர வேண்டும் என மருத்துவர் கூறியதால் நேகாவை அழைத்திருந்தனர்.

உள்ளே சென்றதும் நேசனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த மருத்துவரைப்பார்க்க அப்பாயிண்மெண்ட் வாங்கி வந்தானோ அவருக்கு பதிலாக தன்னுடன் கல்லூரியில் படித்த மேகா மருத்துவர் இருக்கையில் இருந்தாள்.

“என்ன அப்படிப்பார்க்கிறே….? நான் ஃபாரின் போய் சைக்காலஜி படிச்சு சர்ட்டிபிகேட் வாங்கிட்டுத்தான் வந்திருக்கேன். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. குழந்தை கூட இருக்கு. நான் என்னோட ஹஸ்பெண்ட் கூட ரொம்ப சந்தோசமா இருக்கறேன். பழச மறக்க கத்துட்டேன். அவ்வளவு தான். நானும் நீயும் காதலிச்சது உண்மைதான். அப்புறம் நமக்கு செட்டாகல. பிரேக்கப் ஆயிடுச்சு. அதுக்காக உயிரே நீதான்னு அம்பிகாபதி அமராவதி மாதிரி சூசைடு எல்லாம் பண்ணிக்க முடியாது. இன்னைக்கெல்லாம் சர்வசாதாரணமா அஞ்சு பத்துன்னு பிரேக்கப் ஆகுது. பழச மறந்துட்டு கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணோட சந்தோசமா நீயும் வாழப்பாரு…..” என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி வேதனையுடன்.

“முடிச்சிட்டியா.‌..? வந்ததுல இருந்து பார்க்கறேன் நீ பாட்டுக்கு பேசீட்டே இருக்கே…? என்னை பேச விட்டியா? என்னோட மனசுல என்ன இருக்குன்னு கேட்டியா…? நான் எப்படியெல்லாம் உன்னை… வேண்டாம் விடு. என்ன சுத்தமா மறந்துட்டு கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துட்டே…. உனக்காக இந்த அப்பாவிப்பொண்ணு  வாழ்க்கைய வீணடிக்க நினைச்சேன் பாரு… இனிமேல் உன்னோட முகத்துலயே நான் முழிக்க மாட்டேன்….” சொன்னவன் பக்கத்து இருக்கையில் இருந்த மனைவி நேகாவை இழுத்து அவளது கன்னத்தில் அன்பாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு, அவளது கரம்பற்றி வெளியே அழைத்துச்சென்றவன் காரில் தனக்குப்பக்கத்து சீட்டில் அமரச்சொல்லி தனது வீட்டிற்கு புறப்பட்டான். 

இன்னும் திருமணமாகாத மேகாவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. தனது வாழ்வு பாதிக்கப்பட்டாலும், தான் உயிருக்குயிராக நேசித்த நேசன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனதைக்கல்லாக்கிக்கொண்டு திருமணமாகி குழந்தை இருப்பதாகப்பொய்சொல்லி அவனுக்கு தன் மீது வெறுப்பை ஏற்படுத்தினாள். 

தனக்கு சரி செய்ய முடியாத நோய் வந்திருப்பதால், இன்னும் சில வருடங்களே உயிர் வாழப்போகும் தன்னால் நேசித்த நேசனின் வாழ்வு வீணாகக்கூடாது என்பதற்க்காகவே பிரேக்கப் சொன்னாள். ஒரு வேலை தனக்கு வந்திருக்கும் நோயைப்பற்றி அவனிடம் சொல்லியிருந்தால் தான் இறந்த பின்னும் தன்னையே நினைத்து திருமணம் செய்யாமல் வாழ்வை வீணடித்திருப்பான் என்பதையும் அறிந்தவளாகவே பிரேக்கப் சொன்னாள் மேகா.

பிரேக்கப் சொல்லியும் ஏற்காமல் தாடி விட்டுக்கொண்டு தன்னைத்தேடி வந்தவன் கண்களுக்குத்தெரியாத தூரத்துக்கு போக வேண்டும் என்பதற்காக தனது சகோதரி வேலை பார்க்கும் லண்டனில் இரண்டு வருடங்கள் சென்று தங்கி இருந்த போது சைக்காலஜி கற்றுக்கொண்டாள். இந்த நிலையில் மேகா தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டதை உறுதி செய்தவன், வேறு வழியின்றி தனது பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி நேகாவை மணம் முடிக்க ஒப்புக்கொண்டான்.

நேகாவை மணம் முடித்தாலும் மனம் மேகாவையே நினைத்திருந்ததால் நேகாவுடன் ஒரு கணவனாக நடந்து கொள்ள முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தவனுக்கு மனநல மருத்துவரைச் சந்திக்க தாயின் பிடிவாதத்தில் சென்ற போது மேகாவே மருத்துவராக வருவாள் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத சந்திப்பு எதிர்ப்பில் முடிந்ததால் மனம் மாறியவன் மணம் முடித்த நேகாவை மனதாரவும் ஏற்றான்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *