கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2025
பார்வையிட்டோர்: 11,152 
 
 

(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

‘ஹோத்தா! டெல்லியில அவ செய்ஞ்சா சென்னையில இவ செய்ஞ்சாங்குற துணிச்சல்ல என்னை வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே அனுப்பினேல்லே. இன்னையிலேர்ந்து உனக்குக் கஷ்டக்காலம் ஆரம்பம்டி!’ என்று கறுவிக் கொண்டே சிறையை விட்டு வெளியே வந்தான் ஆனந்த்.

இது அவன் செய்த குற்றமில்லை. இவன் அம்மா அப்பா செய்த குற்றம். என்ஜினியர் மாப்பிள்ளைக்கு அது செய்கிறார்கள் இது செய்கிறார்கள், இன்னும் கேட்டதெல்லாம் கொடுப்பார்கள் என்ற நப்பாசையில் மண்டபத்தில் உடனே என் பையனுக்கு ஒரு மாருதி கார் வேண்டுமென்று அடம்பிடித்தது அவர்கள் தப்பு. அவர்கள்தான் புரியாமல் தெரியாமல் பேராசையில் கேட்கிறாரென்றால் இவனும்அதே பேராசையில் பெற்றவர்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் அவர்களைச் சபையில் அவமானப்படுத்தக் கூடாது என்கிற நினைப்பில் ஆமாம் எனக்குக் கார் வேண்டுமென்று அடம்பிடித்தது தப்பு.

கையில் காசிருந்தாலும் பணத்தை நீட்டியவுடன் கார் வர என்ன மாய மந்திரமா செய்ய முடியும் ? பெண்ணின் தந்தை தவித்தார். கையில் காசில்லை அடுத்து செய்கிறேன் என்று சம்பந்திகள் காலில் விழ…இவர்கள் அவர் கஷ்டம் தெரியாமல் கார் வந்தால்தான் பையன் தாலி கட்டுவானென்று கிடுக்கிப்பிடி போட…வந்தது வினை.

அதிகாலை முகூர்த்தத்தில் தாலி கட்டிக்கொள்ள மணமகள் அறையில் உட்கார்ந்த மணப்பெண்ணுக்கு இந்த சேதி காதில் விழுந்தது. விரைந்து வந்து பார்த்தவளுக்கு அப்பாவின் கஷ்டம் பொறுக்க முடியவில்லை. அருகிலிருந்த தோழியின் கை போனைப் பிடுங்கி ‘இங்கே வரதட்சணை அதிகம் கேட்டு தாலி கட்டுறதைத் தடுக்கிறாங்க. உடனே நடவடிக்கை எடுக்கனும்..!’ என்று அருகிலுள்ள காவல் நிலையத்திற்குப் போன் செய்தாள்.

காவலர்கள் வந்தார்கள் கார் கேட்ட அப்பா அம்மா பிள்ளை அத்தனை பேர்களையும் துாக்கி ஜீப்பில் போட்டார்கள். வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஆனந்த்திற்கு ஏழு வருடம். குற்றம் செய்ய துாண்டியதற்காக பெற்றவர்களுக்குத் தலைக்கு ஓராண்டு கடுங்காவல். தேவையா இது…?

நாட்டில் வரதட்சணை எழுதப்படாத சட்டம். அதற்காக அதிகம் கேட்டது தப்புதான். இதற்காக ஒரு பெண் காவல் நிலையத்திற்குத் தொலைபேசி செய்து மொத்த குடும்பத்தையும் சிறையிலடைத்தது மன்னிக்க முடியாத குற்றம். ஆனந்திற்கு அப்போதே நெஞ்சு கொதித்தது. அப்போதே அவளுக்குக் குறி வைத்தான். அதை சிறையில் நினைத்து நினைத்து வளர்த்தான்.

விடுதலை…! இதோ புறப்பட்டு விட்டான். ஆனந்த் நடையை எட்டிப் போட்டான்.

‘மணமேடை வரை வந்து மாப்பிள்ளையைச் சிறைக்கு அனுப்பிய உன்னை எவன் கட்டிப்பான் ? இன்னும் உனக்கு கலியாணம் ஆகாம கன்னிக்கழியாம வெறுமனேதான் இருப்பே உன் அம்மா அப்பா இருந்தாலும் சரி, புட்டுக்கிட்டாலும் சரி. வந்துட்டேன்டி எமன் !’ – விரைவாக நடந்தான்.

பேருந்து ஏறி வீட்டை அடைந்தான். மந்தாரகுப்பத்தில் அவ்வளவு பெரிய வீடு கவனிப்பாரற்று சோபை இழந்து கிடந்தது. தன்னிடம் உள்ள சாவியை எடுத்து திறந்து நுழைந்தான். ஹாலில் அவன் அப்பா அம்மா புகைப்படத்தில் தொங்கினார்கள்.

ஆத்திரம், அவமானம் சிறையிலிருந்த போதே அவர்கள் நொங்கி, நொருங்கி, உடைந்து, உருக்குலைந்து போனார்கள். விடுதலையாகி வந்த ஒரே மாதத்தில் அவர்கள் வெளியுலகம் பார்க்க விருப்பப்படாமல் வீடே சிறையாய் இருந்து ஒவ்வொருவராய்த் செத்தார்கள்.

ஓரே பிள்ளையான இவன்தான் காவல் கைதியாக வெளிவந்து அவர்களுக்கு ஈமச் சடங்குகளெல்லாம் செய்து கொள்ளி போட்டு சென்றான். வீட்டுக்கு மட்டும் ஒரு காவல்காரனை வைத்துச் சென்றான்.

‘இதுக்கெல்லாம் காரணமான உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்டி!’ ஒவ்வொருவர் இறுதிச் சடங்கிற்கும் இறுகிய மனதை இன்னும் இறுக்கினான்.

இப்போது அவர்கள் புகைப்படத்தைப் பார்த்த ஆனந்திற்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அப்பா எப்படியெல்லாம் வளர்த்தார்! நினைக்க நெஞ்சு நெகிழ்ந்தது.

ஒரே பிள்ளையான இவன்..அப்பா செல்லம். எந்த வயதிலும் அவர் இவனுக்குக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். ‘உன்னால என்ன எவ்வளவு படிக்க முடியுமோ படிடா’ என்று என்ஜினியர் அளவிற்குப் படிக்க வைத்தார்.

‘ஊர் மெச்ச, உலகம் மெச்ச உன் கலியாணத்தை நடத்திக் காட்டுறேன்டா’ என்று சவால் விட்டு தனக்குத் தகுதியான இடத்தில் பெண் தேடி, ஆடம்பரமான திருமண மண்டபத்தைப் பிடித்து எல்லாம் செய்து ஒரு சின்ன வழுக்கலில் சிறைக்குப் போய் அல்லல் பட்டு, அவமானப்பட்டு….உயிரையும் விட்டு….

‘உன்னை விடமாட்டேன்டி!’ ஆனந்த் மனதிற்குள் மறுபடியும் சவால் விட்டான். கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து துாசு தட்டி சோபாவில் அமர்ந்தான். அவ்வளவு பெரிய வீடு அவனுக்கு அன்னியமாகத் தெரிந்தது.

இப்போது அவனுக்கு எதிர்காலம் இருட்டாய் இருந்தது. சிறை சென்றதால் கம்பெனி வேலை காலி. உற்றார் உற்றார் ஊரார் முகத்திலும் விழிக்க முடியாது. வெகு நேரம் விட்டத்தைப் பார்த்துச் சிந்தித்தான். ரொம்ப நேரம் அப்படியே அசையாமல் இருந்தவன் ஒரு முடிவிற்கு வந்தவனாய் மாடி ஏறி அப்பா அறைக்குச் சென்றான். மேசை நாற்காலிகள் என்று அவர் விட்டுப் போன சாமான்கள் அப்படியே இருந்தது. அவர் அலமாரியைத் திறந்து வங்கிப் புத்தகத்தை எடுத்தான். அவர் செத்த பிறகு சிறையிலிருந்து கொண்டே செய்ய வேண்டியதையெல்லாம் செய்து வைத்திருந்ததால் எல்லாமே முறையாக மாற்றப்பட்டு வேண்டிய பணம் அப்படியே இருந்தது.

என்னதான் காவலுக்கு ஆள் வைத்தாலும் வருடக்கணக்கில் பூட்டிய வீட்டில் பொருட்கள் கொள்ளை போகாமல் அப்படியே இருந்தது அவனுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. தேவையானதை எடுத்தான்.

அடுத்து தன் அறைக்குச் சென்றான். அறைக்குச் சென்றான். அமுதாவின் விலாசத்தை தேடி எடுத்தான். அவன் பழைய டைரியை எடுத்து அவளுடைய தொலை பேசி எண்ணையும் எடுத்தான். கீழே வந்தான்.

‘ஐயா!’ வாசலில் குரல் வந்தது.

திரும்பினான். விசுவாசமான வேலைக்காரன் விஸ்வநாதன். ஐம்பது வயதைக் கடந்தவன். இவன் சொன்னதையெல்லாம் செய்து நாயாய் இருந்து இந்த வீட்டைக் காவல் காத்தவன்.

“வா விசு!” அழைத்தான்.

உள்ளே வந்த அவன்… “இந்தாங்கைய்யா என் கை சாவி!” அவனிடமிருந்த வீட்டின் இன்னொரு சாவியை உரியவனிடம் நீட்டினான்.

ஆனந்த் வாங்கவில்லை.

“உன் கிட்டேயே இருக்கட்டும் கடைசி வரைக்கும் நீதான் இந்த வீட்டு காவல்காரன் உட்கார்!”

“இருக்கட்டும்ய்யா!” என்று நாசூக்காக மறுத்து சாவியை இடுப்பில் சொருகி கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு மரியாதையாக நின்றான். அவனுக்குச் சின்ன வயதில் சிறைக்குச் சென்று வந்த எசமானைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“அடுத்து என்னய்யா செய்யப் போறீங்க ?” அக்கரையாய்க் கேட்டான்.

“அதான் தெரியலை?!”

“எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவாய் மறந்து ஒதுக்கிட்டு அடுத்து ஒரு நல்ல இடத்துல கலியாணம் செய்து நீங்க சந்தோசமா இருக்கனும்ய்யா” தன் மனமாறச் சொன்னான்.

“உன் வாய் முகூர்த்தம் பார்க்கலாம் விசு!” என்று தன் மனதில் உள்ளதை மறைத்து விட்டேத்தியாக சொன்ன ஆனந்திற்கு திடீர் சந்தேகம் எழுந்து போய் தொலை பேசியை எடுத்து காதில் வைத்தான். உயிரிருந்தது.

“தொலைபேசி மின்சார பில்லெல்லாம் நான் சரியா கட்டி வைச்சிருக்கேன்ய்யா”. காரணத்தைச் சொன்னான்.

“ரொம்ப மகிழ்ச்சி!” என்று சொன்ன ஆனந்த் மறுபடியும் வந்து சோபாவில் அமர்ந்தான்.

“ஐயாவுக்குச் சாப்பாடு….?” விசுவிற்கு எசமான விசுசாவசம் அக்கறையாய் கேட்டான்.

“அதை பத்தியெல்லாம் கவலைப்படாதே விசு. நான் வீட்டுல இருந்தாலும் இல்லேன்னாலும் நீதான் இந்த வீட்டுக்குக் கடைசிவரை காவல்.!” ஆனந்த் உத்திரவாதம் அளித்தான்.

“அப்படின்னா ஐயா….?” விசு இழுத்து பாதியில் நிறுத்தினான்.

“எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை விசு. கொஞ்ச நாள் வெளியில போறேன்!”

“ஐயா.. எங்கே….தன்னந்தனியாய்…?”

“கேள்வியெல்லாம் வேணாம் விசு. வழக்கம் போல வந்து உன் வேலையைப் பார். நான் இருந்து கூப்பிட்டா மட்டும் வந்து உதவி செய்.” ஆணைப் பிறப்பித்தான்.

“சரிய்யா”. விசுவநாதன் எசமானின் உத்தரவுக்குக் கட்டுப் பட்டவனாய்த் தலையாட்டினான்.

“அவ்வளவுதான். நீ போகலாம்.!” என்று அவனை அனுப்பிய ஆனந்த் அவன் தலை மறைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையாய் அமுதாவின் இருப்பிடம் தெரிய தொலைபேசியைத் தொட்டு எண்களை நசுக்கினான்

“நீங்கள் டயல் செய்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை!” கணணியில் பதிவு செய்திருந்த பெண்ணின் குரல் ஒலித்தது.

உபயோகத்தில் இல்லை என்றால் அமுதா வீட்டில் இப்போது தொலை பேசி இல்லையா? இல்லை… வேறு தொலைபேசி எண் வாங்கி உபயோகப்படுத்துகிறார்களா. இல்லை ஆள் சிறையை விட்டு வெளி வந்ததும் ஆத்திரத்தில் ஏதாவது செய்யலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாய் ஊரை விட்டு வெளியேறி விட்டார்களா ?…நினைவுகள் ஓடியது.

‘நீ எங்கே போனாலும் விடமாட்டேன்டி!’ மனசுக்குள் சொல்லி அவள் விலாசத்தைத் தேடி பிடித்தான்.

அத்தியாயம்-2

ஆனந்த் கோவையிலிருந்து மதுரையை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த போது மணி மூன்று.

ஆளைப் பார்த்ததும் கொல்லலாமா கூடாதா என்ற யோசனை வந்தாலும் முதலில் ஆள் இருக்கிறாளா இல்லையா இருப்பிடம் பார்த்துதான் செய்ய வேண்டும்! முடிவிற்கு வந்தான்.

அவசரப்பட்டு காரியத்தைச் செய்து மீண்டும் சிறைக்குப் போகக் கூடாது. முடிந்த அளவு போலீஸ் சட்டத்தின் கண்களில் மண்ணைத் துாவும்படி செய்ய வேண்டும். முடியாத கட்டத்தில்தான் சாண் போனாலென்ன முழம் போனாலென்ன என்று காரியத்தில் இறங்க வேண்டும்! – நினைத்தான்.

பேருந்து மெல்ல நகர்ந்து மதுரையை நோக்கி விரைந்தது. டிக்கெட் எடுத்து முடித்து ‘அப்பா! ஒருத்தியால் எவ்வளவு கஷ்டம்! குடியே நாசம்!’ நினைக்க நெஞ்சு கனத்தது. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.

வெளியில்தான் அவமானம் என்றால் சிறைக்குள்ளேயும் தலைக்குனிவு. எல்லாரும் குற்றவாளிகள் கைதிகள் என்றுதான் பேர். புத்திசாலிகள்! தவறுகளைக் குத்திக் காட்டுவதிலும் திறமைசாலிகள். இவன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஏழு வருடம் தண்டனைக் கைதியாய் அடைக்கப் பட்ட முதல் நாளே ஒருத்தன் வந்து “வாத்தியாரே! என்ன படிச்சிருக்கீங்க?” கேட்டான். இவன் படிப்பைச் சொன்னான்.

“வேலையில இருக்கீங்களா?” அடுத்து நின்றவன் கேட்டான்.

“ம்ம்”

“என்ன சம்பளம்?”

“மாசம் எழுபத்தஞ்சாயிரம்.”

“பணக்காரப் புள்ளையா?”

“ஆமா.”

“ஏம்பா! பணக்காரப் புள்ளே. படிச்சிருக்கே. பத்துப் பேருக்கு சோறு போடுற அளவுக்குக் கை நிறைய சம்பளம் வேற. நீ எதுக்கு வரதட்சணைக் கேட்டே?” வேறொருத்தன் கேள்வியால் சொடுக்கினான்.

இவன் விழித்தான்.

“தம்பி ! நம்ம காசுலதான் பொண்டாட்டிக்குப் பூ வாங்கிக் கொடுக்கனும். நம்ம சம்பாத்தியத்துலதான் மனைவி, மக்கள் நல்லா இருக்கனும். நம்ம உழைப்புலதான் நாம சொகுசா வாழனும். அதை விட்டுட்டு வர்றவள் கிட்டேயிருந்து வாங்கி குடும்பம் நடத்துறது பேடித்தனம்…!”

“பொண்டாட்டி வாழ்க்கைத் துணை. அவ இல்லாம ஆணால புள்ளைப் பெத்துக்க முடியாது அவன் வாரிசைப் பார்க்க முடியாது. ஆணை ஆம்பளைன்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கிறவளே பொம்பளைதான். அப்படிப் பட்டவள்கிட்ட போய் சேர்ந்து வாழ்றதுக்கு நீ வரதட்சணைக் கொண்டு வான்னு கேட்குறீங்களே எந்த விதத்துல நியாயம்?”

“இங்க பாருங்க. நாங்களெல்லாம் பொண்டாட்டி புள்ள வாழனும்ன்னு கொலை செய்ஞ்சோம் கொள்ளையடிச்சோம். கள்ள நோட்டு அடிச்சோம் சாராயம் காய்ச்சினோம். தண்டனை அனுபவிக்கிறோம். நீ என்னடான்னா வரதட்சணைக் கேட்டு சிறைக்கு வந்திருக்கே. வெட்கமா இல்லே?!”

ஆனந்தால் பதில் சொல்ல முடியவில்லை. அவமானம் தலையைக் குனிந்து கொண்டான். எல்லாரும் இவன் முகத்தில் காறித் துப்புவது போலிருந்தது.

இப்போதும் அதே நினைப்பில் முகத்தைத் துடைத்து கண் விழித்தான். அந்த நினைவுகள் வராத அளவிற்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான்.

மதுரையில் இவனைக் கண்டுகொள்ளக் கூடியவர்கள் எவருமே இல்லை. இரவு சீதா விடுதியில் அறை எடுத்தான் காலையில் அமுதா இருந்த ஆஞ்சநேயர் தெருப் பக்கம் சென்றான் வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுத் திண்ணையில் ஒரு பாட்டி சுவாதீனமாக கால் நீட்டி அமர்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.

‘பெண்களால் மட்டுமே இப்படி இரண்டு கால்களை நீட்டி அமர முடியும்!’ எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது.

“பாட்டி!” அவள் வீட்டு வாசல் முன் நின்று அழைத்தான்.

“என்ன தம்பி?”

“நா…நான் பக்கத்து வீட்டு விருந்தாளி…” பொய் சொன்னான்.

“பாக்கியத்துக்கு வேண்டியப்பட்டவனா?”

“பா…பாக்கியம் ?” ஆனந்துக்குள் தடுமாற்றம் வந்தது.

“ஆமாம்ப்பா அந்த வீட்டுப் பொண்ணு!”

“இல்லே பாட்டி அவ பேர் அமுதா!”

“அப்படி யாரும் அந்த வீட்டுல இல்லியே?!”

‘இடம் மாறி வந்து விட்டோமா?’ என்கிற சந்தேகத்தில் சுற்றும் முற்றும் பார்த்து “இது ஆஞ்சநேயர் இல்லம் தானே?” கேட்டான்.

“இல்லே! நாங்க இந்த ஊருக்குப் புதுசு. வந்து ரெண்டு வருசம்தான் ஆகுது. எதுக்கும் அதோ வர்ற அந்த ஆளைக் கேளு. அவர் இங்கே பூர்வீகம். மூணாவது வீடு!” சொன்னாள்.

ஆனந்திற்கு அந்த ஆளைப் பார்த்ததாய் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவர் அருகில் சென்று

“சார் ! இந்த வீடு…?” இழுத்தான்.

“அவுங்க வெளியூ ர் போயிருக்காங்க.”

“இல்ல சார். அமுதா இல்லம்தானே?”

“ஓ….. நீ அவுங்களைக் கேட்குறீயா ? அவுங்க இந்த வீட்டை வித்துட்டு வெளியூர் போயிட்டாங்க.” சொன்னார்.
“எ..எங்கே?”

“அது தெரியாது. அவர் பொண்ணோட திருமணம் அடாவடியாய் நின்னுபோனதால மனசொடிஞ்சு போயிட்டார். அவமானம் இங்கே உள்ள சனங்க முகத்துல முழிக்க வெட்கப்பட்டுகிட்டு ஊரைவிட்டு போயிட்டாங்க. இந்த வீட்டை வாங்கினவரும் இங்கே இல்லே. வாடகைக்கு விட்டுட்டு வெளிநாடு போயிட்டார்.” நடந்தார்.

ஆனந்த் துவண்டு போனான்.

எங்கே எப்படி தேடுவது? – குழம்பினான்.

“நீ அந்த வீட்டு மனுசாளுக்குச் சொந்தமா?” பாட்டி கேட்க “ஆமாம்…” சொல்லிவிட்டு நடந்தான்.

‘ஏழாண்டு காலமாக அடியுரம் போட்டு வளர்த்த நினைத்தது நடக்க வில்லை. ஆள் தப்பிவிட்டாள்!’ – நினைக்க… உள்ளுக்குள் ஆத்திரம் வந்தது. பேருந்து ஏறி திரும்ப வீட்டிற்கு வந்தான்.

இரண்டு நாளாக வீட்டில் ஆளைக் காணாமல் தவித்த விசுநாதனுக்கு ஆனந்தைக் கண்டதும் மலர்ந்தார். அதேசமயம் அவன் முகம் வாட்டமாக இருப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது.

“எங்கே தம்பி போய் வர்றீங்க ?” பவ்வியமாக கேட்டார். ஆனந்த் மௌனமாக இருந்தான்.

‘ஒருவேளை அந்த பொண்ணைப் பார்க்கப் போயிருப்பானோ! அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை விசாரித்து தவறுக்கு மன்னிப்பு கேட்டு திருமணம் ஆகவில்லையென்றால் முடிக்கலாமென்கிற எண்ணத்தில் அவள் ஊருக்குச் சென்றிருக்கலாம்!’ என்ற சந்தேகம் வர..

“மதுரைக்குப் போனீங்களா?” கேட்டார்.

“எப்படித் தெரியும்?” அவர் வார்த்தையைக் கேட்ட ஆனந்த் கொஞ்சம் திகைப்பாய் அவரைப் பார்த்தான்.

அவன் பார்வையைப் பார்த்து தன் சந்தேகத்தை உறுதி செய்து கொண்ட அவர் “அங்கதான் போயிருக்கிங்க.. அந்த குடும்பம் அங்கே இல்லே தம்பி. சென்னைக்குப் போயிடுச்சு” தகவல் சொன்னார்.

“உங்களுக்கு எப்படி தெரியும் ?!” மலர்ச்சியாய்ப் பார்த்தான்.

“நம்ம பேட்டை முனுசாமி பையன் பி.ஏ படிச்சவன். ஏதோ இன்டர்வியூக்கு சென்னைக்குப் போனானாம். அங்கே பார்த்ததாய் சொன்னான்”.

“எங்கே பார்த்தான்?” பரபரத்தான்.

“எங்கேயோ பார்த்ததாய்ச் சொன்னான். பேர் மறந்து போயிடுச்சசு தம்பி!” தலையைச் சொறிந்தார்.

“அவன் எங்கே?”

“அவன் இந்த ஊர்ல இல்லே. ஹைதராபாத்துல வேலை கெடைச்சு ஒரு வருசத்துல அம்மா அப்பா எல்லாரையும் அழைச்சிக்கிட்டு குடும்பத்தோட அங்கே போயிட்டான்”.

“அவன் விலாசம் தெரியுமா?”

“தெரியாது.”

ஆனந்தின் உற்சாக மனம் சடக்கென்று ஊசி குத்திய பலுான் போலானது.

“அந்த பொண்ணுக்கு உங்களோட வாழ குடுத்து வைக்கலை விடுங்க.” விசுவநாதன் அவன் மனமறியாமல் அவனைத் தேற்றினான்.

ஆனந்திற்கு கைக்கு எட்டியது வாய்க்கு வராத தவிப்பு. அவ்வளவு பெரிய நகரத்தில் எப்படி தேடுவது? யோசனை வந்த அதே சமயம் தேடினால் என்ன? என்கிற எண்ணமும் தோன்றியது.

அப்பா அம்மா புகைப்படத்தைப் பார்த்தான். அவர்கள் அவமானம் சாவு கண்முன் விரிய… ‘எப்படியும் முடிச்சுடனும்!’ என்கிற வெறி விஸ்வரூபம் எடுத்தது. எழுந்தான்.

அத்தியாயம்-3

பேருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

என்ன யோசித்தும் சென்னையில் அமுதாவைக் கண்டுபிடிக்கும் வழி தெரியவில்லை ஆனந்திற்கு. எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம்? நினைக்க நினைக்க மலைப்பாக இருந்தது.

அசோக் நகர் இறங்கி வேறொரு பேருந்து ஏறி தியாகராய நகர் வந்து இறங்கினான். பொறியியல் படிப்பு படிக்கும் காலத்தில் தியாகராய நகர் இவனுக்குச் சொர்க்கப்புரி. மாணிக்கம் மேன்சனில்தான் தங்கல். ஏழுமணி ஏழுமணி ஆகிவிட்டால் ரங்கநாதன் தெருவில் போய் உடலை கடலை போட்டு திரும்பினால்தான் துாக்கம் பிடிக்கும். படிப்பிற்குப் பிறகு ஊர் அடுத்து வேலை என்று போய் விட்டதால் சென்னைக்கும் அவனுக்கும் தொடர்பு விட்டுப் போய்விட்டது. அதனால் இப்போது எங்கே தங்க ? என்று யோசித்தான். அமுதாவைக் கண்டுபிடித்து காரியம் முடிக்கும்வரை ஒரு நாளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாடகை அறையில் தங்குவது கஷ்டம். அப்படி தங்குவதை விட அந்த செலவிற்கு ஒரு வீடே எடுத்து தங்கலாம். இதெல்லாம் சரி வராது மாதம் ஐநூறு அறுநூறு ரூபாய்க்கு அறை எங்கே கிடைக்கும் என்று அலசினான். அவன் நினைப்பிற்கு மாறாய் அதைத் தாண்டி இருந்தது. சரி வராது..! விட்டகுறை தொட்டக்குறை மேன்சனில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தங்கலாம் நினைப்பில் படியேறினான். நாற்பது அறைகளிலும் புதுமுகங்கள் இருந்தார்கள். திரும்பி வந்து சங்கர் லாட்ஜில் அறை எடுத்தான். பயணக்களைப்பில் ஒரு துாக்கம் போட்டு விட்டு ஐந்து மணிக்கு எழுந்து பாண்டி பஜார் வந்தான். கூட்டம் கசகசவென்றிருந்தது. பூ க்கடைகள் இருக்கும் பக்கம் வந்தபோது யாரோ இவன் தோளைத் தொட்டார்கள். திடுக்கிட்டுத் திரும்பினான்.

பாலு ! இவன் ஆத்மார்த்த நண்பன். உள்ளுார்க்காரன். கோவை இந்திராணி பஞ்சாலையில் பெரிய வேலையில் இருந்தவன்.

“ஏய்ய்…!” ஆனந்திற்கு அவனைப் பார்த்ததும் உற்சாகம் வந்தது. கட்டிப்பிடித்தான்.

“எப்போ விடுதலை ஆனே?”

“நாலு நாளைக்கு முன்னாடி.” என்ற ஆனந்த் “ஆமா நீ எங்கே இப்படி?” கேட்டான்.

“நாலு வருசமா நான் இங்கேதான் இருக்கேன்.”

“ஏன் உள்ளூர் வேலை என்னாச்சு?”

“அதை விட்டாச்சு”

“ஏன்?”

பாலுவிற்கு அங்கு நின்று பேச பிடிக்கவில்லை.

“அறைக்குப் போய் பேசலாம் வா.” ஆனந்தை அழைத்துக் கொண்டு தணிகாசலம் சாலையில் நுழைந்தான்.

“நீ எங்கே இப்படி?”

“நான் ஒரு வேலை விசயமா வந்தேன்.”

“ஒரு வேலை விசயம்ன்னா?”

“அதையும் அறைக்குப் போய் பேசிக்கலாம்” என்றவன் “அறையில எத்தினி பேர் இருக்கீங்க?” கேட்டான்.

“ஏன் கேட்கிறே?”

“நானும் இங்கே கொஞ்ச நாள் தங்குறதுக்கு இடம் வேணும்”.

“தாராளமா என் அறையிலேயே தங்கலாம். நான் மட்டும்தான் இருக்கேன்.”

“வேலை ?”

“வயித்து சோத்துக்கு அம்பத்துார் கம்பெனி ஒன்னுல வேலை.”

“நான் தங்குறதால உனக்குச் சிரமம் ஒன்னும் இல்லியே?”

“இல்லே.”

பாலுவின் அறை ஒரு வீட்டின் மூன்றாவது தளத்தில் தனித்திருந்தது. 10 x 12 அறையில் ஒரு கட்டில் மெத்தை மேசை நாற்காலி கச்சிதமாக இருந்தது. சுவர்தான் வித்தியாசமாக இருந்தது. எந்த பெண்ணின் புகைப்படமும் தலையுடன் இல்லை. வெட்டி பக்கத்தில் ஒட்டியிருந்தான்.

‘சைக்கோவா?! என்ன இப்படி?’ நண்பனைப் பார்த்தான்.

அவன் பார்வையைப் புரிந்து கொண்ட பாலு “பொண்ணுன்னா வெறுப்பு!” முகத்தைச் சுளித்தான்

“ஏன்?”

“சொல்றேன். நீ சிறைக்குப் போன அடுத்த மாசம் என் அம்மா ஹார்ட் அட்டாக்குல செத்துப் போனாங்க. அப்பா சும்மா இருந்திருக்கலாம். சும்மாதான் இருந்தார். சுத்தி இருந்த கிழம் கட்டை உறவு சனமெல்லாம் உன் தகுதிக்கு வேறொரு கலியாணம் பண்ணலாம் அம்பது வயசாய் இருந்தாலும் ஆள் ஜம்முன்னு இருக்கேன்னு உசுப்பேத்தி விட்டிருக்காங்க. என் அப்பா அதுக்குச் சம்மதிக்கலை. கலியாண வயசுல பையன் இருக்கான் அவனுக்கு முடிச்சுட்டு நிம்மதியாய் இருப்பேன்னு சொல்லி மறுத்திருக்கார்.”

“பெத்தப் புள்ளையாய் இருந்தாலும் அடுத்தவனை நம்பி வாழுறது தப்பு. மருமகள் உன்னை ஒழுங்கு முறையாய் கவனிச்சுப்பாள்ன்னு நினைக்கிறதெல்லாம் மடத்தனம். நாளைக்கு அவுங்க தனிக்குடித்தனம் போய்ட்டாங்கன்னா நீயும் அவுங்க பின்னால நாயாய் சுத்தனும். அவுங்க போடுறதை தின்னனும். தின்னாலும் பரவாயில்லே…நொடி நொட்டாம் சொல்லெல்லாம் உண்டு. அது மட்டுமில்லாம உனக்கு உடம்புக்கு முடியாம போனா பொண்டாட்டி கவனிக்கிறாப் போல மகன் மருமகளெல்லாம் கவனிக்க மாட்டாங்க. அப்படியே கவனிக்கிறதாய் இருந்தாலும் அதை ஒரு கடமையாய் நினைச்சு பணத்துக்கு ஒரு ஆளைப் புடிச்சி கவனிக்க கவனிக்க வைப்பாங்க. கூலிக்கு வர்றதுகிட்ட அன்பு பாசமெல்லாம் எதிர்பார்க்க முடியாது.”

“வடிவேலு ! இருக்க இருக்க வயசு கூடும். தள்ளாமையிலதான் பொண்டாட்டி அன்பு அரவணைப்பு அவசியம். புள்ளைங்களுக்கு பாரம் சுமையாய் இருக்கக்கூடாதுன்னு மனசுல படுறாப்போல நல்லா ஏத்தி விட்டிருக்காங்க.”

“ரொம்ப குழம்பிப் போன அவர் ஒருநாள் ராத்திரி வந்து நான் கலியாணம் கட்டிக்கலாமாப்பான்னு தயக்கத்தோடு வந்து என்னைக் கேட்டார். எனக்கும் அவர் கட்டிக்கிட்டா தப்பில்லேன்னு தோணிச்சு. தாராளமாய் உங்க வயசுக்குத் தகுந்தாப்போல ஒரு ஏழை விதவைப் பொண்ணா கட்டிக்கோங்கன்னு சொன்னேன். நான் சரி சொன்னதும் சுத்தி உள்ள நண்பர்களெல்லாம் பொண்ணு பார்த்தாங்க. இருபத்தஞ்சு வயசுல ஒரு ஏழைப் பொண்ணாய்ப் பார்த்து அவர் தலையில கட்டினாங்க. பொண்ணு ஏழை சுமாராய் இருந்தாலும் நாகரீகம் நடை உடை பாவனையெல்லாம் கொஞ்சம் அதீதம்.”

“நாலு நாள் தொந்தரவில்லே. அஞ்சாம் நாள் ராத்திரி பன்னிரண்டு மணி. கண்ணசர்ற நேரம் திடீர்ன்னு என் பக்கத்துல மல்லிகைப்பூ வோட மஞ்சள் மணம்.. திடுக்கிட்டு முழிச்சேன் ரொம்ப அருகாமையில அப்பா கலியாணம் பண்ணின பெண்!”

“அவள் உஷ்ண காத்து பட்டு ‘சித்தி!’ ன்னு அலறி எழுந்தேன். ஆனந்தன்னு இறுக்கிப் பிடிச்சா. விடுங்கன்னு உதறினேன். விட்டவள்.. ‘நான் சொல்றதைக் கம்முன்னு கேளு.. நீ இருக்கீயேன்னுதான் நான் உன் அப்பாவுக்குச் சம்மதிச்சேன்!’ னு என் தலையில கல்லைத்துாக்கிப் போட்டாள். அதிர்ச்சியாய்ப் பார்த்தேன்.”

“என் வயசுக்கு உன் அப்பா சுருண்டுடுவார்ன்னு எனக்குத் தெரியும். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லே. உன்னை வைச்சு சமாளிக்கலாம்ன்னு யோசனை. நான் நெனைச்சப்போல முதல் ராத்திரி அன்னைக்கே சுருண்டுட்டார். அடுத்தடுத்தும் அப்படியே. ரெண்டு நாள் பொறுமையாய் இருந்தேன். மூணாம்நாள் நான் நெனைச்சு வந்ததைச் சொன்னேன் அவர் ஆன்னு அலறினார். இதுக்குச் சம்மதிக்கலைன்னா இந்த வீட்டுல யாரும் என்னைக் கண்டுக்கக்கூடாது. நான் விருப்பப்பட்ட ஆளோட இருப்பேன்னு சொன்னேன். உன் அப்பாவுக்குச் சம்மதிக்கிறதைத் தவிற வேற வழி இல்லே. சம்மதிச்சார். இருந்தாலும் எனக்கு மனசு பொறுக்காது. எனக்குத் தினம் ரெண்டு துாக்க மாத்திரையைப் போட்டுட்டுப் போன்னார். வந்திருக்கேன்னு இறுக்கிப்பிடிச்சா. என் மனசு ஏத்துக்கலை. பெத்த அப்பனுக்கு எப்படி துரோகம் செய்ய முடியும்? முரண்டு பிடிச்சேன். முடியாதுன்னா அடுத்த வழி இருக்கு. நீ என்னைக் கற்பழிக்க வந்ததாய்க் கதைக் கட்டிவிட்டு நாரடிச்சுடுவேன்னாள். அதிர்ச்சியில எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இதுதான் சமயம்ன்னு அவள் என்னைக் கட்டிப்பிடிச்சு வலுக்கட்டாயமாய்…..” குரல் அடைக்கச் சொன்னவன் கொஞ்சம் நிறுத்தி “மூணு நாளைக்கு மேல் என்னால பொறுக்க முடியலை. பெண்ணின்னாலே வெறுப்பு வீட்டைவிட்டு ஓடிவந்துட்டேன்!” தொண்டை கரகரக்க சொல்லி நிறுத்தினான்.

‘நாட்டில் இப்படியொரு பொம்பளையா ?!’ ஆனந்த் உறைந்தான்.

“அன்னையிலேர்ந்து எந்த பொம்பளையும் எனக்கு யோக்கியமாய்த் தெரியலை. எல்லாரும் எங்கோ ஒரு இடத்துல தப்பு பண்றாப் போல மனசுல படுது. அதே சமயம் என் கண்ணுக்குத் தெரிஞ்சு எவள் தப்பு செய்ஞ்சாளும் கொலை செய்யனும்ங்குற வெறி வருது. அதை ஒரு வகையில இப்படி தணிச்சிக்கிறேன்.” முடித்தான்.

ஆனந்திற்கு அவனைப் பார்க்கப் பாவமாகவும் பயமாகவும் இருந்தது.

‘கொலை செய்தும்… தணிப்பானோ!?’ என்கிற எண்ணம் நெஞ்சில் நிழலாட “இந்த வெறியை வேறொரு முறையிலும் தணிச்சிக்குறீயா?!” கேட்டான்.

“ம்ம்..”

“எப்படி?”

“அது ரகசியம்!” பாலு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

‘அமுதாவைக் கொல்ல இவன் சரியான ஆள். கூட்டு சேர்ந்து கொல்லாம்!’ – நினைத்த ஆனந்திற்கு இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது என்று நினைக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

– தொடரும்…

– பாக்யா வார இதழில் தொடர் கதையாக வெளி வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *