தொட்டால் பூ உதிரும்..!






(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
ஆனந்த் தான் சென்னைக்கு வந்த வந்த காரணத்தைப் பொறுமையாய்ச் சொன்னான்.
பாலு மௌனமாக கேட்டான்.

“ஏழு வருசமா எனக்கு அந்த அவமானம் ஊசி முனையாய் உறுத்திக்கிட்டே இருக்கு. சாதி சனம் உறவு முறை மத்தவங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு. போதாததுக்குச் சிறையிலேர்ந்து வெளிவந்த குத்த உணர்வு தலை நிமிர்ந்து நடக்க முடியலை”. ஆனந்த் குரலில் வருத்தமும் வலியும் இழையோடியது.
பாலுவிற்கு அவன் வேதனை கஷ்டம் புரிந்தது.
“நான் என்ன பண்ணனும் சொல்லு?” – கேட்டான்.
“அமுதா இந்த ஊர்ல இருக்கிறதா கேள்வி. அவளைக் கண்டுபிடிக்க உதவி செய்யனும். நான் கண்டுபிடிச்சு காரியம் முடிக்கிறவரை இந்த அறையில இருக்க அனுமதி தரனும்.” என்றான்.
பாலு உடன் பதில் சொல்லவில்லை. ஏதோ சிந்தனையிலிருந்தான்
“என்னடா யோசனை ?” இவன் அவனைக் கேட்டான்.
“ஆனந்த்! நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துக்கக் கூடாது. என் மனசுல பட்டதைச் சொல்றேன். சாத்தான் வேதம் ஓதுதுன்னும் நீ நெனைக்கக்கூடாது. அமுதாவை நீ கொலை செய்யத்தான் வேணுமா?” – கேள்வியைக் கூர்மையாக்கி அவனை உறுத்துப் பார்த்தான்.
பாலுவிடமிருந்து ஆனந்த் இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்வாய் அவனை ஏறிட்டான்.
“ஏன்னா கொலைங்குறது சாதாரண விசயம் கெடையாது. இன்னைக்குத் தப்பிக்கலாம். நாளைக்கு மாட்டிக்கனும்..மறுபடியும் சிறை கலி. என்ன வாழ்க்கை!?” என்றான்.
ஆனந்த் எதுவும் பேசவில்லை. பாலுவின் பதில் இவன்மனசுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது.
“அமுதாவை மன்னிச்சி ஏத்துக்கிட்டீன்னா கொலைக்கு வேலை இல்லே. கொலைக்குப் பின்னால நடக்கிற சிறை இல்லே!”
‘பெண்களை வெறுத்து அவர்களைக் கொலை செய்யத் துடிக்கும் பாலுவா இதைச் சொல்வது?!’ – ஆனந்தால் நம்பவே முடியவில்லை. அதே சமயம் சிறையை நினைத்தாலே அவனுக்கும் குமட்டியது
‘இதுவும் நல்ல யோசனைதான். ஏன் இப்படி செய்யக்கூடாது?’ – நினைத்தான்.
“நான் மன்னிக்க தயாராய் இருந்தாலும் அமுதா ஏத்துப்பாளா?” பாலுவைப் பார்த்தான்.
“வாழ்க்கையில அடிபட்டிருப்பா. மணமேடை வரை வந்தவளை யாரும் திரும்பிப் பார்த்திருக்க மாட்டாங்க. அந்த நிஜமே அவளைச் சுட்டிருக்கும். மேலும்.. அமுதா மாப்பிள்ளையைச் சிறைக்கு அனுப்பினவள். கண்டிப்பா கல்யாண சந்தையில விலை போயிருக்க மாட்டாள். நிஜ வாழ்க்கையில அடிபட்ட வெறுப்பு விரக்தி நீ மன்னிச்சிடுன்னு சொன்னதும் நீ மனசு மாறிட்டேன்னு நினைச்சு கண்டிப்பா ஏத்துப்பாள்.” பாலு நம்பிக்கையாய்ச் சொன்னான்
‘இப்படி நியாயம் சமாதானம் பேசுபவன் எப்படி கெட்டவனாக இருக்க முடியும்?’ ஆனந்திற்குள் சந்தேகம் கிளம்பியது.
“நீ கெட்டவனா நல்லவனா பாலு?”அதையும் கேட்டான்.
“கெட்டவன்!” அவன் அழுத்தம் திருத்தமான சொன்னான்.
“தப்பு. நல்லவன்! நீ உன்னைக் கெட்டவனாய் நினைச்சிக்கிட்டிருக்கே!”
பாலு பதில் சொல்லவில்லை.
‘அமுதாவை மனைவியாக்கி கொலை செய்தாலென்ன?!’ ஆனந்தின் மனதில் திடீர் யோசனை முளைத்தது.
‘பெண் மனைவியான பிறகு அவ நம் கையில் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை. வீட்டிற்குள் இருப்பவளை போலீஸ் சட்டம் கண்ணுல எப்படி மண்ணைத்தூவலாம் என்று சிந்திச்சு பொறுமையாய் நிதானமாய் கொலை செய்யலாம். மனசு திருந்தி கலியாணம் கட்டிவன் கொல்ல வாய்ப்பில்லேன்னு சொல்லி தப்பிக்கவும் வாய்ப்பிருக்கு’ – மனதில் படம் விரிய மலர்ந்தான்.
‘நல்ல திட்டம். அருமையான யோசனை!’ தனக்குத்தானே மெச்சிக்கொண்டு இதற்கு கருவாய் இருந்த நண்பனை நன்றியுடன் பார்த்தான்.
பாலுவிற்கு இவன் மனம் புரியவில்லை. அதே சமயம் ஆனந்திற்கு…அமுதாவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்கிற கவலை வந்தது.
‘நம்ம கையால தான் அவளுக்குச் சாவுன்னா கண்டிப்பா நம்ம கண்ணுல மாட்டுவாள் கையில சிக்குவாள்!’ மனதிற்குள் தெம்பு ஊட்டினான்.
அமுதாவிற்கு இரவு துாக்கம் பிடிக்கவில்லை. பேருந்து நிறுத்தத்தில் பார்த்த முகம் திரும்பத் திரும்ப அவள் கண்ணுக்குள் வந்து திகிலை ஏற்படுத்தியது. ‘பார்த்தது ஆனந்த்தானா?’ புரண்டு புரண்டு படுத்தாள்.
“அமுதா!” அருகில் படுத்து மனைவியின் அவஸ்தையைக் கண்ட சுதாகர் அழைத்தான்.
அவள் பதில் பேசவில்லை. தீவிர சிந்தனையில் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா யோசனை?” இவன் திரும்பிப் படுத்து அவளை அசைத்தான்.
“…”
“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. தீர்த்து வைக்கிறேன்!” அவன் நல்ல கணவன். திறமைசாலி.
“நா… நான் ஆனந்தைப் பார்த்தேங்க…”
“எந்த ஆனந்தை?”
“அதான் நான் வரதட்சணைக் கொடுமையில சிறைக்கு அனுப்பிய ஆனந்த்!”
“எங்கே பார்த்தே?”
“பாண்டி பஜார் பேருந்து நிறுத்தத்துல. நான் அலுவலகம் விட்டு வந்த பேருந்து நின்ன போது அவன் கடைத்தெருவுல நின்னான்.”
“அவன் உன்னைப் பார்த்தானா?”
“பார்க்கலை. நான்தான் அவனைப் பார்த்தேன்.”
“இதுக்கு ஏன் நீ பயப்படனும்?”
“அவன் இங்கே எதுக்கு வந்திருக்கான்னு தெரியலை.”
“எதுக்கு வந்தா உனக்கென்ன?”
“அவன் ஏதோ திட்டம் குறிக்கோளோட வந்திருக்கிறதா என் மனசுல படுது.”
“என்ன குறிக்கோள்?”
“என்ன இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க? போன வாரம்தான் விடுதலைன்னு தினசரிகள்ல படிச்சேன். இப்போ இங்கே வந்து நிக்கிறான்ன…அவன் மனசுக்குள்ளே ஏதோ பெரிசா திட்டம் இருக்கு!”
“என்ன திட்டம்?”
“என்னைத் தேடி கொலை செய்ய வந்திருக்கலாம்!”
“பழி வாங்க வந்திருக்கலாம்ன்னு சந்தேகப்படுறே?”
“ஆமா”
“உன் பயம் அர்த்தமில்லாதது அமுதா. அவன் வேற வேலையாய் வந்திருக்கலாம். உன் கண்ணுல பட்டிருக்கலாம்.”
“இல்லீங்க. அவன் என்னைத் தேடித்தான் வந்திருக்கான்.”
“ஆக…நீ உயிருக்குப் பயப்படுறே?”
“இல்லே. என்னால உங்களுக்கு நம்ம அருண் தருணுக்கு கஷ்டம் வரலாம்.”
“இது கற்பனை!” என்ற சுதாகர் “சரி உன் பயம் நியாயமாவே இருக்கட்டும். இவ்வளவு பெரிய நகரத்துல உன்னை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” – கேட்டான்.
“முடியும்! எப்படியாவது யார் மூலமாவது நம் வீடு நான் வேலை செய்யிற இடம் கண்டு பிடிச்சுட்டான்னா அவன் நினைச்சு வந்தது சுலபம்.” சொல்லும்போதே அவளுக்கு உடல் நடுங்கியது.
”சரி. இவனால உன் உயிருக்கு ஆபத்துன்னு போலீசுக்குத் தகவல் தெரிவிச்சுடலாமா?”
அமுதா மௌனமாக இருந்தாள்.
“ஏன் தயக்கம். நாமே நம்மளைக் காட்டிக் குடுத்துக்கிறது போலன்னு நெனைக்கிறீயா?”
அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மனம் கலவரமாய் இருந்தது.
“நாளைக்கு அலுவலகம் எப்படி போறதுன்னு தெரியலை?!…” முணுமுணுத்தாள்.
“ஏன்….வழியில உனக்காக காத்திருப்பான்னு நெனைக்கிறீயா?”
“காத்திருக்க மாட்டான். அவன் கண்ணுல நான் படமாட்டேன்னும் உத்தரவாதமில்லே.”
”வீண் பயம்… நான் இருக்கேன். நீ மனசைப் போட்டு அலட்டிக்காம துாங்கு” தட்டிக் கொடுத்தான்.
அமுதாவிற்குக் கணவனின் அரவணைப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
கண்களை மூடினாள்.
ஆனந்த் கனவில் கத்தியுடன் வந்து… பயந்து ஓடி ஒளிந்தவளைப் பிடித்து கழுத்தை அறுத்தான் வீலென்று கத்தினாள்.
அத்தியாயம்-5
அடுத்த நாள் அமுதாவிற்கு அலுவலகம் கிளம்பவே மனசில்லை. அந்த கனவும்…ஆனந்த் வழியில் நின்றால் என்ன செய்வது ஏது செய்வது குழப்பமும் மனதைக் கலக்கியது. சுதாகர்தான் அவளுக்கு நிரம்ப தைரியம் சொல்லி கிளப்பினான். அப்படியும் அவளுக்குப் பயம் விடவில்லை. பள்ளிக்கூடம் கிளம்பிச் செல்லும் தன் குழந்தைகள் அருண் தருணுக்கு “பள்ளிக்கூடத்துல முகம் தெரியாத ஆள் யாராவது மிட்டாய்க் குடுத்தா யாரும் வாங்கித் தின்னக்கூடாது.” – புத்தி சொல்லி அனுப்பினாள்.
“நீங்களும் அலுவலத்துக்குப் போனதும் வந்துட்டேன்னு எனக்கு போன் செய்யனும்?” கணவனுக்கும் சேதி சொல்லி பேருந்து ஏறினாள்.
சுதாகருக்குச் சிரிப்பாக இருந்தது.
‘இப்படிபட்ட கோழை எப்படி திருமண மண்டபத்தில் போலீசுக்குப் போன் செய்து வரதட்சணை கொடுமையின் கீழ் ஆனந்தை சிறைக்கு அனுப்பினாள்?!’ நினைத்தான்.
அலுவலகம் சென்றதும் அமுதா அமுதா அலுவலகத்திற்குப் போன் செய்தான்.
“யாருங்க பேசறது?” எதிர் முனையில் காட்டான்தானமாக எவனோ கேட்டான்.
“அமுதா வந்துட்டாங்களா?“
“நான் பியூன் பொன்னுரங்கம் நீங்க யாருங்க?”
“நான் அவுங்களோட கணவர் பேசறேன்!”
அவன் சீட்டைத் திரும்பிப் பார்த்து “அம்மா இன்னும் வரலைங்க.”
கேட்ட சுதாகருக்குச் சொரக்கென்றது. “தினம் எத்தனை மணிக்கு வருவாங்க?”
“எட்டரை மணிக்கெல்லாம் வந்துடுவாங்க. இன்னைக்குத்தான் இன்னும் காணோம்.”
போனை வைத்தான். ‘என்னாச்சு ?’ – உறுத்தலாக இருந்தது. அரைமணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் போன் செய்தான்.
“அமுதா இருக்காங்களா?”
“அமுதாம்மா! உங்களுக்குப் போன்!”
இவனுக்கு உயிர் வந்தது.
ஓடி வந்து எடுத்தாள்.
“யாருங்க பேசுறது?”
“நான்தான்!”
“அப்பா இருக்கீங்க! என்னங்க விசயம்?”
“அலுவலகத்துக்கு ஏன் லேட்டு?”
“வழியில பேருந்து ரிப்பேர்.”
“உன்னைக் காணோம். என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்!” – என்று தான் அரை மணி நேரத்திற்கு முன் போன் செய்த விசயத்தைச் சொன்னான்.
“நீங்க பத்திரமா வாங்க” போனை வைத்தாள்.
நான்கு நாட்கள் எந்தவித பிரச்சனையும் இல்லை. அமுதா நிம்மதி மூச்சு விட்டாள்.
“நான் சொல்லலை உன் பயம் வீண்னு. அவன் எதுக்கோ சென்னை வந்திருக்கான். நீதான் மனசுல பயத்தை ஏற்படுத்திக்கிட்டு உன்னைக் கலக்கினதில்லாம என்னை புள்ளைங்களைக் கலக்கிட்டே!” – சுதாகர் மனைவியைக் கலாய்த்தான்
“எனக்கொன்னும் வீண் பயமில்லே.சிறைக்குப் போய் தண்டனை பெற்று திரும்பி வந்தவன் நல்ல மனசோட திரும்பி வருவான்னு என்ன நிச்சயம்? அதான் பயந்தேன்.” இவளும் சிணுங்கினாள்.
ஐந்தாம் நாள் காலை. அமுதா வழக்கம் போல் அலுவலகம் வந்து தன் வேலையில் கருமமே கண்ணாய் இருந்தாள். பத்து நாட்களுக்குப் பிறகு இன்றைக்குத்தான் அவளுக்கு அலுவலகத்தில் வேலை செய்கிறோமென்கிற சுயபுத்தி திருப்தி இருந்தது.
10.10 மணிக்கு மேலாளர் பண்டரிநாதன் அறையை விட்டு வெளியே வந்தான். சின்ன வயதென்றாலும் ஆள் அங்கபங்கமாக இருந்தான். அவன் மறைப்பில் பின்னால் ஒரு புது ஆளும் வந்தான்.
மேலாளர் முறையில் ஊழியர்கள் எல்லாரும் எழுந்து பண்டரிநாதனுக்கு “வணக்கம்!” சொல்லி அமர்ந்து வேலையைப் பார்த்தார்கள். அமுதா மட்டும். அவர்கள் வருவதைக் கவனிக்கவில்லை. பேனா பிடித்தவள் நிமிரவில்லை.
அவன் அவள் இருக்கைக்கு முன் வந்து நின்று அருகில் வந்து “அமுதா!”அழைத்த பிறகுதான் அவள் துணுக்குற்று நிமிர்ந்தாள் எழுந்தாள் “வணக்கம்.” சொன்னாள்.
பண்டரிநாதனும் பதிலுக்கு “வணக்கம்..” சொல்லி விட்டு “இவர்தான் இன்னைக்கு புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிற ஆள்!” தனக்குப் பின்னால் நின்ற ஆளை அறிமுகப்படுத்தினார். நிமர்ந்து பார்த்த அவளுக்கு அதிர்ச்சியும் மயக்கமும் சேர்ந்து வந்தது.
மறுநாள் அமுதா அலுவலகம் கிளம்பவில்லை. “எனக்கு எமன் எதிர்ல வந்துட்டாங்க..” கணவனிடம் குறைபட்டாள்.
சுதாகர் அவளை புரியாமல் பார்த்தான்.
“அந்த ஆனந்த் என்னை மோப்பம் புடிச்சு எங்க அலுவலகத்துலேயே வேலைக்குச் சேர்ந்துட்டான். அதுமட்டுமில்லாம அவனுக்கு என் எதிர்லதான் சீட்டு.” நடுங்கியபடி சொன்னாள்.
“வீணா பயப்படுறே. உன்கிட்ட நெருங்கி வந்தவன் உன்னைத் தொடமாட்டான். காரணம்… தொட்டா ஆபத்து கண்டிப்பா பிடிபட்டுடுவோம்ன்னு அவனுக்குத் தெரியும்.” சுதாகர் தைரியப்படுத்தினான்.
“இல்லே. அவன் நம்ம குடும்பத்தையே நாசம் பண்ண வந்திருக்கான்!” அமுதாவிற்கு என்னவோ அவன் நினைப்பே குலை நடுக்கமாக இருந்தது.
“மண்டபத்துல துணிச்சலா நடந்துக்கிட்டதுனாலதான் நான் உன்னை விரும்பி கலியாணம் கட்டிக்கிட்டேன். அப்படிப்பட்டவள் இன்னைக்கு நடுங்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு!” என்றான்.
“அந்த தைரியம் வேற. இன்னைக்கு நான் ரெண்டு குழந்தைங்களைப் பத்து மாசம் சுமந்து பெத்த தாய். பெத்த வலி பாசம் நேசம் எல்லாம் என்னைக் கோழையாக்கிடுச்சு. ஆமாம் ஆண் பெண் எல்லாரையும் இந்த பாசம் நேசம்தான் கோழையாக்குது.”
“நீ சொல்றதெல்லாம் சரி. அவனால் உனக்கு தொந்தரவுன்னா வேலைய விட்டுடுடலாம். ஏன்… நாம இந்த ஊரைவிட்டே கண் காணாம போயிடலாம். அங்கேயும் வந்தான்னா நீயா நானான்னு பார்த்துடலாம். அமுதா! ஒருத்தான் ஆரம்பத்துல தப்பு செய்யலாம். கெட்டவனாய் இருக்கலாம். அதனால அவன் எப்பவும் அப்படி இருப்பான்னு சொல்ல முடியாது.”
“இல்லீங்க. இவன் கெட்டவன் நல்லவனாய் இருந்தா நான் இருக்கிற இடம் தேடி வரமாட்டான். அப்படியே வந்தாலும் என் முகத்துல முழிக்க வெட்கப்பட்டு ஓடி மறைஞ்சிருப்பான். தொடர்ந்து வர்றான்னா அவமானப்படுத்தி சிறைக்கு அனுப்பியவளை எப்படியாவது பழி வாங்கனும்ங்குற நோக்கம். வேற காரணம் இல்லே.” அவள் பிடியிலேயே இருந்தாள்.
மறுநாள் இவள் எண்ணத்தை உறுதிப்படுத்துவது போல் ஆனந்த் எதிர் இருக்கையில் அமர்ந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எதிர்பாராதவிதமாக அவனைப் பார்த்த இவளுக்கு அவன் பார்ப்பது தெரிந்ததும் சொரக்கென்றது. தலையைக் குனிந்து கொண்டு வேலை செய்வது போல பாசாங்கு செய்து மறுபடியும் அவனை நோட்டமிட்டாள். அவன் நாற்காலியில் நன்றாக சாய்ந்து இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அமுதாவிற்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. நேற்று வந்தவன் என்ன தைரியத்தில் இப்படி பார்க்கிறான். இவனுக்கு யார் எப்படி வேலை கொடுத்தார்கள். போய் மேலாளரிடம் புகார் செய்யலாமா?…என்று யோசனை வந்தது. அந்த நேரம் பார்த்து பியூன் பொன்னுரங்கம் இவளை நோக்கி வந்தான்.
“மேடம் ! உங்களை மானேஜர் மானேஜர் வரச் சொன்னார்.” சொன்னான்.
‘நாம் நினைத்தது சொல்ல வாய்ப்பு!’ அமுதா உற்சாகமாக எழுந்தாள். மேலாளர் அறையை நோக்கி நடந்தாள்.
உள்ளே மேனேஜருக்கு எதிரில் நளினி இருந்தாள். அவன் சொல்ல சொல்ல நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். இவள் மேசை அருகில் வந்து நின்றதைக் கவனித்த அவன் “உட்கார் அமுதா!“ என்று இடையில் சொல்லி விட்டு நளினிக்கு டிக்டேட் கொடுத்துக் கொடுத்தான்.
அமர்ந்தாள்.
ஐந்து நிமிடம் டிக்டேட் கொடுத்த பண்டரிநாதன் “அமுதா ! நீங்க இப்போ புதுசா வந்திருக்கிற ஆளுக்கு வேலை கத்துக் கொடுங்க. அவர் என்ன சந்தேகம் கேட்டாலும் நிவர்த்தி செய்ங்க. அதைச் சொல்லத்தான் உங்களை அழைச்சேன். நீ போவலாம்!” என்றவன் நளினிக்கு டிக்டேட் கொடுப்பதைத் தொடர்ந்தான்.
அமுதாவிற்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அவன் டிக்டேட் கொடுக்கும் போது இடையில் பேசி வேலையை தடை செய்வது தவறு. நினைத்த அவன் தர்மசங்கடத்துடன் வெளியே வந்தாள்.
சிறிது நேரத்தில் பியூன் ஆனந்திடம் சென்று ஏதோ சொன்னான். அவன் எழுந்து மேலாளர் அறைக்குள் நுழைந்தான். கொஞ்ச நேரம் கழித்து வந்தான். அடுத்து சிறிது நேரத்தில் நளினியும் வந்தாள்.
அருகில் வந்து தன் இருக்கையில் அமர்ந்த அவளிடம் “அவன்கிட்ட சார் என்னடி சொன்னார்…?” எதிரி காதில் விழக்கூடாது என்பதற்காக அமுதா குசுகுசுப்பாய்க் கேட்டாள். பதில் அதிர்ச்சியாய் இருந்தது.
அத்தியாயம்-6
“ஆனந்த்! உன் விருப்பப்படி அமுதாகிட்ட உன்னை விட்டிருக்கேன். இன்னையிலேர்ந்து நீ அவுங்ககிட்ட வேலையைக் கத்துக்க ஆரம்பிக்கலாம். எந்த சந்தேகமாய் இருந்தாலும் நீ அவுங்ககிட்ட கேட்டு தெரிஞ்ச்சுக்கலாம்!” என்று சொன்னால் என்ன அர்த்தம்?
இவன் முதலிலேயே என்னிடம் வேலை கற்றுக்கொள்ள கேட்டிருக்கிறான். வந்த முதல் நாளே ஆனந்த் சொல்வதை மேனேஜர் கேட்கிறாரென்றால்….பெரிய சிபாரிசு. இல்லை இவருக்கும் அவனுக்கும் நல்ல நெருங்கிய பழக்கம் உறவு. ஒத்த வயது. இருவரும் கல்லுாரி நண்பர்களாக கூட இருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும் வேறு வழி? அப்படியென்றால் திருமணத்திற்கு வந்திருப்பான். என்னைத் தெரியுமே!? நினைக்க சொரக்கென்றது.
மேனேஜரைக் கைக்குள் போட்டுக் கொண்டு தன்னை நெருங்குகிறானென்றால் ஏதோ சதித்திட்டம்! இவளுக்கு யோசிக்க யோசிக்க திகிலாய் இருந்தது.
மேலிடத்து உத்தரவை மீற முடியாது. கடன் வாங்கி வீட்டைக் கட்டியதால் வேலை வேண்டாமென்று உதறித் தள்ளவும் முடியாது. வாயைப் பொத்திக் கொண்டு உள் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கொண்டு வேலை கத்துத்தரத்தான் வேண்டுமா?! நினைக்க கசப்பாய் இருந்தது. என்ன செய்யலாம்? எந்த யோசனையும் பிடிபடாமல் வந்தாள். வீட்டிற்கு வந்தும் மனசு சரி இல்லை.
“என்ன ஒரு மாதிரியாய் இருக்கே?” சுதாகர் கேட்டான். அவனுக்கு மனைவியின் முகம் தெரியும்.
அமுதா நடப்பைச் சொன்னாள்.
கேட்ட சதாகருக்கும் என்னவோ போலிருந்தது.
மறுநாள் காலை 10.10. அலுவலகம் மொத்தமும் மும்முர வேலையிலிருந்தது.
“எக்ஸ்கியூ ஸ் மீ!” குரல் கேட்க நிமிர்ந்தாள்.
எதிரில் ஆனந்த்.
தொல்லை ஆரம்பித்து விட்டது! -அமுதாவிற்கு நினைக்கவே கடுப்பாக இருந்தது.
மறைத்துக் கொண்டு “எஸ்!” என்றாள்.
“ஒரு சந்தேகம்!” தன் கையில் வைத்திருந்த பைலை அவள் முன் வைத்தான். “இந்த வேலையை எப்படி செய்யிறதுன்னு தெரியலை.” என்றான்.
அமுதா படித்துப் பார்த்தாள். வேலை கஷ்டமில்லை. இவன் தன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக வலிய வருகிறான். வந்திருக்கிறான் புரிந்தது.
“உட்காருங்க ” சொல்லிக் கொடுத்தாள்.
“நன்றி மேடம்!” பைலை எடுத்து மூடிக்கொண்டவன் “இன்னொரு சந்தேகம்!” பார்த்தான்.
அமுதா அவன் பார்வையைப் பார்க்க விருப்படாமல் குனிந்து கொண்டாள்.
‘என்ன கேட்கப் போகிறான்? வேலையைப் பற்றியா என்னைத் தெரியுதா என்று கேட்கவா?!’ – இவளுக்குள் யோசனை ஓடியது. என்ன சொல்ல எப்படி பேச?
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” ஆனந்த் அவளிடம் மெதுவாக கேட்டான்.
அமுதா இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் எதற்கு? குழந்தைகளைப் பற்றிக் கேட்டதும் நெஞ்சு படபடத்தது.
இன்றைக்கு எத்தனை குழந்தைகள் என்பான், நாளைக்கு அவர்கள் எங்கே படிக்கிறார்கள், உங்க கணவர் எங்கே வேலை பார்க்கிறார் என்று எல்லாவற்றையும் தன் வாயாலேயே தெரிந்து கொண்டு ஒரு நாள்….மொத்தமாக இல்லை.. சில்லறை சில்லறையாக முடிக்கவா?!. இது சரி இல்லை. “சாரி!” தலையைத் துாக்காமல் பதில் சொன்னாள்.
ஆனந்த் அடுத்து பேசவில்லை. வாயை மூடிக் கொண்டு வருத்தமாக எழுந்தான். தன் இருக்கையில் அமர்ந்தான்.
அமுதாவிற்கு அதைப்பற்றி கவலை இல்லை. இந்த மூக்குடைப்பில் தன்னோடு பேசாமல் போய் வேலை கற்றுக் கொள்ள வரவேண்டிய அவசியமும் இல்லை. நினைத்தாள்.
ஆனால் விசயம் இதோடு விடவில்லை.
மாலை அலுவலகம் விட்டு இவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் தன்னந்தனியனாய் நின்றான். அவன் இவளுக்காகவே காத்திருப்பது போலிருந்தது.
அமுதாவிற்கும் அந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது. பயத்துடன் போய் நின்றாள்.
ஆனந்த் சுற்றும் முற்றும் பார்த்து தயங்கித் தயங்கி அவளை நெருங்கினான். “மே…டம்!” தடுமாறினான்.
இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அப்போது வந்த பேருந்தில் ஏறி தொற்றினாள்.
அவன் முகம் தொங்கிப் போனவனாக பேருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றான்.
இரவு ஒன்பது மணிக்கு தேவர் மெஸ்ஸில் சாப்பிட்டு தனியே திரும்பிய ஆனந்தை “என்னப்பா….! என்னை மறந்துட்டியா?” கேட்டு எவரோ தொட்டார்கள்.
பழக்கப்பட்ட குரலாக இருந்தது. இவன் திடுக்கிட்டு திரும்பினான். பாலு!
ஆனந்திற்கு நண்பனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது,
“சென்னைக்கு அனாதையாய் வந்த என்னை அரவணைச்சு அறையில் ஒரு வாரம் தங்க வைச்சி நல்லது கெட்டது போதிச்சு அப்படியே நம்ப பரமசிவத்துக்கிட்ட கூட்டிப்போய் பழைய நட்பைப் புதுப்பிச்சு அவன்கிட்டே என் நிலையைச் சொல்லி வயித்து சோத்துக்கு ஒரு வேலையும் வாங்கி கொடுத்த உன்னை என்னால எப்படி மறக்க முடியும் பாலு? மறக்கலை!” அவனைச் சேர்த்து அணைத்தான்.
பாலுவிற்கும் அவனைப் பார்த்ததில் சந்தோசமாக இருந்தது,
“அமுதாவை நெருங்கிட்டியா?”
“இன்னும் இல்லே!”
“ஏன்?”
“அவள் என்கிட்ட பேசவே பிரியப்படலை.”
இவர்கள் பேசிக்கொண்டே பிரதான சாலைக்கு வந்தார்கள். பத்து மணி ஆகிவிட்டதால் சாலையில் போக்குவரத்து கம்மியாக இருந்தது. இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்த அந்த சாலை குளிர்ச்சியாக இருந்தது. தெரு விளக்கு எரியாத இடங்களில் பௌர்னமி வெளிச்சம் அடித்தது. பிளாட்பாரத்தில் ஏறி மர நிழல்களில் சல்லாத்துணியாக கிடக்கும் அந்த பௌர்னமி வெளிச்சத்தை ரசித்துக் கொண்டு நடந்தார்கள்.
அப்போதுதான் அந்த பிளாட்பாரத்தின் நடுவில் ஏதோ ஒன்று மூட்டையாக கிடந்தது. இவர்கள் அருகில் செல்ல “அம்மா…! அப்பா…!” அது முணகி அசைந்தது.
இருவரும் திடுக்கிட்டு நின்றார்கள்.
பாலு கொஞ்சமும் யோசிக்காமல் அவசர அவசரமாக குனிந்து அதன் மீதிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தான். பதினைந்து வயது பையன். அரும்பு மீசை முளைக்கும் அழகான முகம். தொட்டுப் பார்த்தான் உடல் அனலாக கொதித்தது. பையனுக்கு சிகிச்சை அளிக்க வில்லையென்றால் கதை கந்தல். துள்ளியமாக தெரிந்தது.
“ஆனந்த் ! போய் ஆட்டோ தேடிப்பிடிச்சு வா அவசரம்.” பையனை அணைத்துக் கொண்டு அவசரப்படுத்தினான்.
அவன் ஒரு சாலைக்குள் நுழைந்து ஆட்டோ நிற்குமிடம் பார்த்தான். இல்லை. என்ன செய்யலாம்? என்று கையைப் பிசையும் போதுதான் ஆட்டோ ஒன்று எங்கிருந்தோ வந்தது. கையை மேலும் கீழும் ஆட்டி நிறுத்தினான்.
“சவாரி இருக்கு சார்!” அவன் நிறுத்தாமல் சென்றான்.
அடுத்து பின்னாலேயே வந்த ஆட்டோ நின்றான்.
இருவரும் பையனை வாரிப் போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தார்கள். முதல் உதவி செய்து அவனை மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர் ரத்தினவேல் “பையனை எங்கே இருந்து கொண்டு வர்றீங்க?” கேட்டார்.
“பிளாட்பாரத்துலேர்ந்து. ஏன் டாக்டர்?” பாலு பதற்றமாக கேட்டான்.
“பையன் உங்களுக்கு உறவா?” இருவரையும் பார்த்தார்.
“இல்லே.”
“ஆள் சக்கையாய் பிழியப்பட்டிருக்கான்!”
புரியாமல் பார்த்தார்கள்.
“ஒருத்தியோ ஒரு கோஷ்டியோ இவனை சாறு பிழிஞ்சுட்டாங்க. உடம்புல நாலு ஊசி போட்ட அடையாளம் வேற இருக்கு. ஒருவேளை அதுக்காகத்தான் இருக்கும்.”
இருவரும் அவரை இன்னும் புரியாமல் பார்த்தார்கள்.
“இப்போ பெண்கள் எல்லாம் துணிஞ்சுட்டாங்க தம்பி. ஒரு காலத்துல ஒரு பெண் தனியே போனா ஆணால் ஆபத்து. இன்னைக்கு ஆணுக்கு அந்த நிலை. பெண்ணால ஆபத்து. வயசு வித்தியாசம் இல்லாம பணக்கார பொம்பளைங்க கொழுப்பெடுத்து அலையிறாளுங்க. அதுவும் இந்த மாதிரி பசங்கன்னா அவளுங்களுக்குக் கொண்டாட்டம். ராத்திரி நேரத்துல தனியே காரெடுத்துக்கிட்டு அலைஞ்சி வேட்டை. கர்ப்பத்தடைக்கு நிறைய வழிகள் இருக்கிறதுதான் இந்த துணிச்சலுக்குக் காரணம். பையன் விழிச்சதும் நீங்கன்னா கேட்டுப்பாருங்க. இவன் ஊரை விட்டு ஓடி வந்த அனாதையாய் இருப்பான். வேலை கிடைக்காம பிளாட்பாரத்துல சுருண்டிருப்பான். அவளுங்க இவனைக் கூட்டிப் போய்…!! இன்னும் அஞ்சு நிமிசம் தாமதிச்சிருந்தாலும் பையன் உயிர் பிழைக்கிறது கஷ்டம். இந்த மாசத்துல நான் பார்க்கிற நாலாவது கேஸ் இது!” சிகிச்சையைத் தொடர்ந்தார்.
ஆனந்த் பாலு உறைந்தார்கள்.
– தொடரும்…
– பாக்யா வார இதழில் தொடர் கதையாக வெளி வந்தது.