தொட்டால் தொலைவாய்!






(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13
அத்தியாயம்-10
ஏற்காடு மலையடிவாரத்தில் தொட்டால் தொலைவாய் பயங்கரம்.

மாணவிகள் கற்பழிப்பு விசயத்தில் சம்பத்தப்பட்ட தலைமை ஆசிரியை மற்றும் அதிகாரிகள் மூவர் கொலை.! ஆசிரியர்கள் ஓய்வறையில் அமர்ந்து முழு செய்தியையும் படித்த பச்சையப்பனுக்கு குலை நடுக்கமாக இருந்தது.
“போறப் போக்கப் பார்த்தா பள்ளிக்கூடங்கள் பேரே நாறிடும் போலிருக்கே ?!”- வாய்விட்டுச் சொன்னான்.
“நானும் படிச்சேன். அநியாயம் பண்ற எவரா இருந்தாலும் இப்புடித்தான் போட்டுத்தள்ளனும்.” – பக்கத்தில் அமர்ந்திருந்த சோம சுந்தரம் வாத்தியாருக்கு வெறுப்பு.
“இருக்கிற தொழில்லேயே வாத்தியார் தொழில்தான் ரொம்ப உசத்தி. புள்ளைங்களுக்கு நல்ல பழக்க வழக்கம் கத்துக் கொடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்குற தொழில். அதுல போய் அநியாயம் அட்டூழியம்ன்னா நமக்கே பொறுக்க முடியலைன்னா புள்ளைங்களை அனுப்புற மக்களுக்கு எப்படி பொறுக்கும்?” – அடுத்து உட்கார்ந்திருந்த அழகேசன் ஆதங்கப்பட்டார்.
“தொழில்ல நேர்மை நியாயம் இருக்கனும். டியூசன்ங்குற பேர்ல பள்ளிக்கூடம் இல்லாத காலை மாலை நேரங்கள்ல வீட்டுல அம்பது அறுபது பசங்களுக்குப் பாடம் நடத்தி டாக்டருங்க போல கிளினிக் நடத்தி பொழைப்பு நடத்துற காசு வெறி ஒழியனும். இப்படி வீட்டுல உழைச்சவன் பள்ளிக்கூடத்துல வந்து. ஓய்வெடுப்பான். நீக்கனும். அந்த உழைப்பை பள்ளிக்குச் செலவிடனும். வாத்தியார் நடத்துற பாடத்துல பள்ளியில நாலு பேருக்கு மேலே பெயிலானான்னா அவரை வேலையை விட்டுத் தூக்கனும். இல்லேன்னா கடுமையாத் தண்டிக்கனும்..”
“அப்புறம் ஆண்டுவிழாக்கள்ல சினிமாப் பாட்டுக்கு நடனம் ஆடி வேடிக்கைக் காட்டுற கொடுமையை ஒழிக்கனும்.”
“கல்லுாரிங்கள்ல இன்னும் சீனியர் ஜூனியர் கொடுமை ஈவ் டீசிங் எல்லாம் இருக்கு. ஒவ்வொரு பள்ளி கல்லுாரிகள்லேயும் ஆசிரியர் மாணவர்கள் கூட்டமைப்பு வைச்சி தடுக்கனும்.!” – ஆளாளுக்குப் பேசிக்கொண்டே போனார்கள்.
காட்டில்….
“விபச்சாரத்துல குழந்தைங்களை ஈடுபடுத்தற கொடுமையை மறந்துட்டோம்!” – சிவா தன் சகாக்களிடம் சொன்னான்.
“அதுக்கும் ஒரு ஆப்பு வைச்சா தேவலை!” – சேகர் தன் கருத்தைச் சொன்னான்.
“கண்ணுல பட்டா முடிக்கலாம்!” – குணா சம்மதித்தான்.
“நம்மை பொறுத்தவரை குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கூடாது!“ – பாலு இறுக்கமாக சொன்னான்.
கோயம்பத்துாரில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதி. எல்லாம் குடிசை குப்பம்.
பூ வாயியைத் தேடிக்கொண்டு புருசோத்தமன் வந்தான். அவள் தன் குடிசைக்கு எதிரே இட்லி சுட்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் தளவட சாமான்கள் எல்லாம் பரப்பி இருந்தாள். கூட்டம் இல்லை.
“என்ன ஆயா! கொஞ்ச நாளா சரக்கு கொடுக்கலை” – என்றபடி அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
ஆயா இட்லி பானை மூடியைத் திறந்து கொண்டே, “கொட்டிக் கெடக்குது. நீ வரலை. இல்லே!” மூடியை தரையில் வைத்தாள். பானையில் ஆவி அடித்தது. இட்லிகள் முத்து முத்தாக இருந்தது.
“கைவசம் கிராக்கி இருக்கு. நல்ல சரக்கா இருந்தா பார்ட்டி பத்தாயிரத்துக்கு மேலே தர்றேங்குறான்” என்றவன் குரலைத் தாழ்த்தி அவளை நெருங்கி அக்கம் பக்கம் பார்த்து, “பொண்ணு வயசுக்கு வர்ற பக்குவத்துல 12, 13 வயசுல வேணுமாம். ரேட்டு அதிகம் இருவது குடுன்னு பேசிட்டு வந்திருக்கேன். மனசுக்குப் புடிச்சிருந்துதுன்னா இன்னும் அஞ்சுதர்றேன்னு பார்ட்டி சொல்றான். வழக்கம் போல நீ காட்டிவிட்டா சொளையா ரெண்டாயிரம்!” என்றான்.
இதுவரை ஐநுறுக்கு மேல் பார்க்காத பாட்டிக்கு இரண்டாயிரம் நாக்கில் நீர் ஊறியது.
“இன்னும் ரெண்டுநாள் பொறுத்து பள்ளிக்கூடத்துக்கு வா தேடி வைக்கிறேன்!” – என்றாள்.
அவன் நகர்ந்தான்.
பூ வாயிக்கு வயது அறுபது. அவளுக்கு முழு நேர வேலை ஔவையார் பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து வியாபாரம் செய்வது. பள்ளி இல்லாத சனி, ஞாயிறு நாட்களில் குப்பத்தில் இட்லி வியாபாரம் உபரி. இது இல்லாமல் குழந்தைகளைக் கை காட்டி விடுவது வேறு.
கிழவிக்குக் காலை நேரத்தில் அப்படியொன்றும் வியாபாரம் நடக்காது. விளையாட்டு மணி, மதியம் சாயந்தரம் வீட்டு மணி நேரங்களில்தான் அவளுக்கு வியாபாரம். வியாபாரப் பொருட்கள் அப்படியொன்றும் விலை உயர்ந்தது கிடையாது. மாம்பிஞ்சுகள், மாவடு, இலந்தை, இலந்தை வத்தல் என்று படு சீப்பானது. சீசனுக்கு ஏற்ப வெள்ளரிக்காய், வெள்ளரிபிஞ்சு, ஈச்சம் பழங்கள் என்று மாறும்.
பைவ் ஸ்டார், மஞ்ச், காட்பரீஸ்… என்று விதவிதமான உயர்தர சாக்லேட், பிஸ்கெட்கள் தின்று அலுத்த பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு இந்த இயற்கை பொருட்கள் காணக் கிடைக்காத தேனாமிர்தம். குவிவார்கள்.
பூ வாயியும் வியாபாரத்தில் கடிசல் கிடையாது. குறைந்த லாபம் வந்தால் போதுமென்று அள்ளி அள்ளி கொடுப்பாள்.
கையில் காசிருந்தால் குழந்தைகளுக்குத் தின்ன தின்ன நேரம் காலம் கிடையாது. மதியம் சாப்பிட்டுவிட்டு மேய்வார்கள். மாலை வீட்டு மணியில் கொண்டு வந்த காசையெல்லாம் கொடுத்துவிட்டுப் போவது என்ற முனைப்பில் செலவழிப்பார்கள்.
பூ வாயி இன்றைக்கும் காலையில் வந்து மரத்தடியில் கடை பரப்பினாள்.
வியாபாரம் செய்து கொண்டே காரியத்தில் கண்ணாய் இருந்தாள். மூக்கும் முழியுமான பெண்ணைத் தேடினாள்.
மதியம் 1.30 மணிக்கு அவள் தன் தோழி தேன்மொழியுடன் வந்தாள். கையில் ஆறாம் வகுப்பு புத்தகம் வைத்திருந்தாள். வயசுக்கு மீறிய வளர்ச்சி. முகம் ரொம்ப களை. தொட்டால் சிவந்து விடுகிற தோல். பூ வாயிக்குத் தன் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. மனதில் குறித்துக் கொண்டாள். அவர்களுக்கு வியாபாரம் முடித்து அனுப்பினாள்.
புருசோத்தமனுக்கு எப்படியாவது ஆளை ஒப்படைத்து சீக்கிரம் பெரிய தொகை அடித்துவிட வேண்டுமென்கிற ஆசை. அன்று இரவே பூவாயி குடிசைக்கு வந்தான்.
“என்ன பழம் பழுத்துதா?” கேட்டான்.
“ம்ம்….” – தலையாட்டினாள்.
“எப்போ பறிக்கலாம்?” – இவன் இவள் தொழிலுக்குத் தகுந்தாற்போல் பிறருக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் இப்படித்தான் பேசுவான். அவளும் பதில் சொல்வாள்.
“சாயந்தரம். நாலு மணிக்கு தோட்டத்துக்கு வா. காட்டி விடுறேன். பறிச்சுக்கோ” – என்றாள்.
புருசோத்தமன் எப்போதும் இப்படித்தான். அவள் காட்டிவிட பறித்துக் கொள்வான். அவனுக்குத் தொழில் ஆட்டோ ஓட்டுவது.
“பாப்பா! ஒரு சேதி!” என்று தனியே அழைத்து சடக்கென்று முகத்தில் மயக்க மருந்து கர்ச்சீப் வைத்து அழுத்தி ஆட்டோவில் திணித்து ஆள் பேசிய இடத்தில் கொண்டு விடுவான். அடுத்த காலை அந்த பெண் கசங்கி மயங்கி கிடக்கும். இல்லை அழுதுகொண்டிருக்கும். ஆளைத் தயாராகக் கொண்டு வந்து காட்டி செகண்ட் சேல்ஸ் செய்வான். உடனே அது மும்பை கல்கத்தா என்று வடநாட்டிற்குப் பார்சல்.
“சூப்பர் ஐட்டமா ஆத்தா?” – என்றான்.
“நான் காட்டிவிட்டதுல இதுவரைக்கும் எது பழுது? பார்த்தா நீயே ஆசைப்படுவே. இதுக்கு நீ பேசின காசைவிட அதிகமாத்தான் கெடைக்கும்…” என்றாள்.
“சரி. நாளைக்குப் பணத்தோட வர்றேன்!” – அவன் கிளம்பினான்.
அடுத்த நாள் ஒரு மணிக்கெல்லாம் மரத்தடியில் இருக்கும் பூவாயிடம் வந்தான்.
“அயிட்டம் வந்துட்டா?” – விசாரித்தான்.
“வந்துருக்கு. பேரு ஐஸ்வரியா. இப்போ வரும் பார்த்துட்டுப் போ. திருப்தியாய் இருந்தா சாயந்தரம் வா” – என்றாள்.
புருசோத்தமன் இருந்தான்.
நேற்று போல் ஒன்றரை மணி சுமாருக்கு ஐஸ்வரியா ஜோடியாக அதே தோழியுடன் வந்தாள்.
“பாட்டி! மாம்பிஞ்சு!” – இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்டினாள். பூவாயி மாம்பிஞ்சுகளை அவள் கையில் கொடுத்துக் கொண்டே துாரத்தில் நிற்கும் புருசோத்தமனைக் கடைக்கண்ணால் கவனித்தாள். அந்த கவனிப்பில் இதுதான் அயிட்டம் என்பது பொருள்.
பார்த்த அவனுக்கு முகம் மலர்ந்தது. அடுத்த நிமிடம் மறைந்தான். மாலை. பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் முக்கால்வாசிப் பேர் போய் விட்டார்கள். மீதமுள்ளவர்களும் வாசலில் வந்து அம்மா அப்பா கொண்டு வந்த ஸ்கூட்டர், ஹீரோ ஹோண்டா….டூவீலர்களில் சென்று கொண்டிருந்தார்கள். ரிக்ஷா, ஆட்டோக்களும் பறந்தது.
ஐஸ்வரியா வாசலில் விழித்துக் கொண்டு நின்றாள். ஆட்டோ ஏன் இன்னும் காணோம் என்கிற பதட்டம் வழிமேல் விழி வைத்து விரல் நகத்தை வாயில் கடித்தபடி சாலையையே பார்த்துக் கொண்டு நின்றாள். சவாரிப் போன இவள் ஆட்டோ எங்கோ ஒரு இடத்தில் ஆணி அடித்து பஞ்சர் என்பது இவள் தெரியாத விசயம்.
சுற்றி இருந்த மாணவிகள் குறைய குறைய இவளுக்குள் பதட்டம் அதிகரித்தது.
புருசோத்தமனுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம். அவன் தொட்ட வேலை தங்கு தடங்கலின்றி முடியும்.
‘ஐஸ்வரியா எதற்காக நிற்கிறாள்!‘ – புரிந்தான். ஆட்டோவை அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.
“என்ன பாப்பா பார்க்கிறே?” – கேட்டான்.
“ஆ…ஆட்டோ.”
“அது வராது.! நீ உட்காரு நான் கொண்டு விடுறேன்” – என்றான்.
தயங்கினாள்.
“அட! வராதும்மா. உன் பேர்தானே ஐஸ்வரியா. நான் சவாரி விட்டு வரும்போது செல்வராசு வழியில நின்னான். வண்டி பஞ்சர் ஆயிட்டு பள்ளிக்கூடத்துல என் சவாரி நிக்கும். வீட்டுல கொண்டு விடுன்னு உன் பேர் சொன்னான்” – அவள் நம்பும்படி பக்குவமாக பொய் சொன்னான்.
அவள் ஏறி அமர்ந்தாள்.
“வழியில ஒரு சின்ன வேலை. முடிச்சிட்டு உன்னைப் பத்திரமா கொண்டு விடுறேன்..!” – கெஞ்சலாக சொல்லி அமர்ந்து வண்டியைக் கிளப்பினான்.
நேரம் ஆக ஆக ஐ.ஜி மனைவி மகளைக் காணாமல் தவித்தாள்.
அத்தியாயம்-11
“இது அநியாயம். ஐ.ஜி மகளைக் கடத்தினவனை நாம கொன்னே ஆகனும்..!” – சிவா வேகப்பட்டான்.
சேகர் குணா பாலுவிற்கு முன் அன்றைய பிரபல தினசரி கிடந்தது.
“ஆவேசப் படாத சிவா. கடத்தப்பட்டது ஐ.ஜி மகள். மொத்த போலீசும் சுறுசுறுப்பா வேலை செய்யும். தமிழ் நாட்டோட மூலை முடுக்கு சந்து பொந்தெல்லாம் தேடும். ஏன் பக்கத்து மாநிலமான ஆந்திரா கர்நாடகாவுக்கும் சேதி போய் ஆள் தேடும். நாம இந்த இப்போ நகர்ந்தோம்ன்னா ஆபத்து..!” – சேகர் எச்சரித்தான்.
“அதுக்குள்ள அந்த சின்ன பெண் சின்னாபின்னமாகிடும்..” – பாலு கவலைப்பட்டான்.
“இப்போ மட்டும் அவள் ஒழுங்கா இருப்பான்னு நெனைக்கிறீயா? கசங்கி இருப்பாள். வெறி நாய் குதறி இருக்கும். நம்மால அந்த பொண்ணைக் காப்பாத்த முடியாது. சம்பந்தப்பட்டவர்களைத்தான் செய்ய வேண்டியது செய்ய முடியும்” – அவன் ஆவேசத்தை அடக்குகிறாற் போல பொறுமையாக சொன்னான் குணா.
அவன் அடங்கினான். “மாறு வேடத்துல போய் முயற்சி எடுக்கலாமா?” – தன் கருத்தைத் தெரிவித்தான்.
“நாம என்னைக்கும் சுதந்திரமா இல்லே. இருட்டுல பிரியா இருந்தாலும் பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பயந்து பதுங்கி நம்ம காரியத்தைச் சாதிக்கிறோம். போலீஸ் நம்மை பின்னாலேயே துரத்தி வருது. என்னைக்கும் பிடிபடலாம்” – பாலு பயமுறுத்தினான்.
“போலீஸ் அங்கே இங்கே விசாரிச்சு வர்றாங்களேத் தவிர நம்மை இன்னும் நெருங்கலை. நெருங்க நாளாகும். விசயத்துக்கு வாங்க. இந்த ஐஸ்வரியா கடத்தல் விவகாரம்”. – சிவா நினைவூ ட்டினான்.
“பள்ளிக்கூடத்திலேர்ந்து கடத்தல்ன்னு பத்திரிக்கை சொல்லுது, இறங்கி நாம விசாரிச்சோம்ன்னா விசயம் புரியும்.” – சேகர்.
“போலீஸ் நடவடிக்கை எவ்வளவு துாரத்துல இருக்குன்னு முதல்ல தெரிஞ்சாகனும்.” என்றான் குணா.
“போலீசே அவங்களைப் படிச்சி தண்டிச்சிடும். நாம் தலையிட வேணாம்ன்னு படுது.”
“கூடாது. போலீஸ் புடிக்கிறதுக்குள்ள நாம அவுங்களைப் புடிக்கனும்.”
“ஏன்?“ – எல்லாரும் சொன்னவனைப் பார்த்தார்கள்.
“போலீஸ் புடிச்சா ரெண்டு தட்டுத் தட்டி உள்ளாற போடும். கோர்ட் வழக்குன்னு விசாரணைத் தள்ளிக்கிட்டே போகும். முடிவில் குற்றவாளி தப்பிக்கவும் வாய்ப்பு உண்டு. நம்மகிட்ட அந்த கதை நடக்காது. அதனாலதான் அவுங்க புடிக்கிறதுக்கு முன்னால நாம புடிக்கனும். செய்ய வேண்டியதைச் செய்யனும்!“ – உறுதியாக சொன்னான் சேகர்.
“அப்புடின்னா சீக்கிரம் நாம் உடனே கிளம்பனும்.” – பாலு அவசரப்படுத்தினான்.
“நான் கிளம்பறேன். போய் எல்லா விசயத்தையும் விசாரிச்சு வர்றேன். யாரும் இந்த இடத்தைவிட்ட நகர வேணாம்.” – எழுந்தான் சிவா. அவனுக்கு எடுத்ததை உடனே முடிக்க வேண்டும் என்கிற மனநிலை. இறங்கினான்.
திரும்ப அவன் இவர்கள் இருப்பிடத்திற்கு வரும்போது இருட்டி இருந்தது.
“பள்ளிக்கூடம் டவுன்ல ஒதுக்குப்புறமா இருக்கு. வாசல்ல ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் வரிசையா மரங்கள். அந்த நிழலை நம்பி ஒருத்தர் பொட்டிக்கடை வைச்சிருக்கார். பேர் சுப்ரமணியன். அடுத்து ஒரு ஆத்தா தரையில உட்கார்ந்து மிட்டாய் விக்கிது” – நோட்டமிட்டு வந்ததைச் சொல்லி நிறுத்தினான்.
மற்றவர்கள் அவன் சொல்வதைக் காது கொடுத்து கவனமாய்க் கேட்டார்கள்.
“போலீஸ் ரொம்ப சுறுசுறுப்பா விசாரணை செய்யுது. ஒவ்வொரு இடமா புகுந்து புகுந்து புறப்படுது. முதல்ல பெட்டிக்கடைக்காரனைப் புடிச்சி நீதான் பொழுதுக்கும் கடை வைச்சிருக்கே. உனக்குத் தெரியாம யாரும் கடத்தியிருக்க முடியாது. யார் என்னன்னு பின்னியிருக்கு. அவன் ஐயோ சாமி எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் அன்னைக்கு கடையேத் திறக்கலைன்னு கதறியிருக்கான். நீ இதுல சம்பந்தப்பட்டிருக்கே, அதனாலதான் கடையே திறக்கலை. எங்கே அந்த பொண்ணுன்னு கேட்டு விலாசி சிறையில் அடைச்சிருக்கு.”
“கிழவியை விசாரிக்கலையா?”
“அவளையும் விடலை. உனக்குத் தெரியுமான்னு பிரம்பால முதுகுல ஒன்னு போட்டு விசாரிச்சிருக்கு. அவள் எனக்கு கண்ணு மண்ணு தெரியாது சாமின்னு கையெடுத்துக் கும்பிட்டு சமாளிச்சிருக்காள். பாவம்ன்னு விட்டுப் போயிருக்கு.”
“தினம் பெண்ணை ஏத்திப் போற ஆட்டோக்காரனை விசாரிச்சாங்களா?”
“நீயும் உடந்தை. திட்டம் போட்டு கொண்டு போயிருக்கீங்கன்னு அவனையும் கொண்டு போயிருக்காங்க”.
“பள்ளிக்கூடம் பக்கம் அங்கே போலீஸ் கண்காணிப்பு எப்படி?”
“இங்கே கண்ணை வைச்சிக்கிட்டு வேற இடங்கள்ல விசாரிக்கிறாங்க.”
மொத்தத்தையும் பொறுமையாய்க் கேட்ட சேகர் இப்படியும் அப்படியும் அலைந்து யோசித்தான்.
“நம்ம கைக்கு கிழவி வரனும்” – உறுதியாக சொன்னான்.
“ஏன்??”
“அவள்கிட்ட விசயம் இருக்கு இருக்கனும்.” – வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தான்.
“உன் சந்தேகம் எனக்கும் உண்டு சேகர். போலீசுக்கும் உண்டு. அதனாலதான் அவள் மேலேயும் அவவீட்டு மேலேயும் ஒரு கண் வைச்சிருக்கு” என்றான் சிவா.
“போலீஸ் கவனத்தைச் சிதற அடிக்கனும்!”
“ஏன்?“
“அப்போதான் பாட்டி மேல உள்ள கவனம் கொண்டு வரலாம்!”
“போலீசை எப்படி திசை திருப்ப?”
“சொல்றேன்!” சொன்ன சேகர் சிந்தித்தவனாக இப்படியும் அப்படியும் நடந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் செய்ய வேண்டியதைச் சொன்னான்.
மறு நாள் இரவு ஒன்பது மணி அளவிற்கு நகரத்தின் மையத்தில் உள்ள வ.உசி. விளையாட்டுத் திடலில் பாலு வைத்து விட்டு வந்த டைம் பாம் வெடித்தது. உயிர்ச் சேதமில்லை. சுற்றுச் சுவரில் கொஞ்சம்தான் சிதறியது. வீண் உயிர்ச் சேதம் கூடாது என்று அவனும் அப்படித்தான் வைத்திருந்தான்.
இவர்கள் கணிப்பு பொய்யாக வில்லை. “அல் கெய்தா தீவிரவாதிகளா?” என்று மொத்த போலீசார்களும் அங்கு விரைந்தார்கள்.
குணா சிவா அந்த பொன்னான நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இரண்டு மணி நேரத்தில் அவள் காட்டுக்குள் இருந்தாள். வாய் கை கால்களைக் கட்டி துாக்கி வந்து விட்டார்கள். மயக்கத்தில் கண் மூடி இருந்தாள். சேகர் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். கிழவி முகத்தைச் சுளித்தாளேத் தவிர கண் திறக்கவில்லை.
காத்திருந்தார்கள். அரை மணி நேரம் கழித்து மெல்ல விழித்தாள். காட்டையும் சுற்றி இருப்பவர்களைப் பார்த்தும் மிரண்டாள்.
குணா அவள் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.
“எங்ககிட்ட நீ உதைபடாம இருக்கனும்ன்னா ஒழுங்கு மரியாதையாய் பொண்ணு எங்கே சொல்லு?” – சேகர் மிரட்டலாய்க் கேட்டான்.
பூவாயிக்கு அடிவயிறு கலக்கியது.
“மிதிச்சா செத்திடுவே.” என்று வலக் காலை தூக்கிய சிவா பின் இறக்கி “பள்ளிக்கூடம் விட்டு எல்லா பிள்ளைகளும் போனபிறகுதான் வியாபாரத்தை முடிச்சி வீட்டுக்குப் போவே. ஆட்டோ வராம தவிச்சிக்கிட்டு நின்ன பொண்ணு உனக்குத் தெரியாம எங்கேயும் போயிருக்க முடியாது. மறைச்சே மவளே நசுக்கிடுவேன்.” – பக்கத்திலிருந்த பாறாங்கல்லை துாக்கினான்.
“சொல்றேன் ! சொல்றேன்!” – அலறிய பூ வாயி எல்லாவற்றையும் கொட்டினாள்.
“புருசோத்தமன் வீடு எங்கே இருக்கு சொல்லு?”
சொன்னாள்.
“இதுவரைக்கும் எத்தினி பொண்ணுங்களைக் கடத்தி இருக்கீங்க?”
“அஞ்சு!“
“எல்லாரும் எங்கே?”
“தெ….தெரியாது.”
பாலு பளீரென்று அறைவிட்டான்.
அவளுக்குத் தலை கிறுகிறுத்தது.
“மும்பை கல்கத்தாவுக்குப் போயிருப்பாங்க.”
“அங்கே எங்கே?”
“சத்தியமா தெரியாது.”
“யார் கொண்டு போவாங்க?”
“நான் காட்டிவிடுறதோட சரி. மத்த விசயமெல்லாம் புருசோத்தமனுக்குத்தான் தெரியும்..!”
“சின்ன பொண்ணைச் சிதைக்கிறோமேன்னு அறிவில்லே?” – சிவா எட்டி உதைத்தான்.
அவள் “ஐயோ….ஓ!” – அலறி சுருண்டாள்.
“நாங்க அவனைப் புடிச்சிக்கிட்டு வந்து உன்னை வைச்சிக்கிறோம்!” – கறுவி பாலு ஒரு உதை விட்டான். அது கிழவி உதட்டில் பட்டு உதடு கிழிந்து இரத்தம் ஒழுகியது.
எல்லா பெண்களையும் சுலபமாக முடித்த புருசோத்தமன் ஐஸ்வரியாவை மறைக்கத்தான் படாதபாடு பட்டான்.
அவளை பார்ட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வந்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் ‘ஐ.ஜி பொண்ணை காணோம்!’ என்று போலீஸ் சுறுசுறுப்பாக நகரை அலசியதைப் பார்த்து அரண்டான்.
‘ஆகா..!ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டோம்!’ – திகைத்தான்.
அவசரஅவசரமாக மும்பைக்குக் கொண்டு செல்லும் ஆளைத் தேடி ஓடினான்.
‘ஐ.ஜி பொண்ணா?!’ – அவன் அலற..அடுத்து கொல்கத்தா ஆளைத் தேடினான். அவன் லேசில் கிடைக்கவில்லை. அவன் கிராமத்திலிருந்து வழி தப்பி வந்த பெண்ணைப் பிடித்துக் கொண்டு கொல்கத்தா சென்றிருக்கிறான் என்கிற விசயம் தெரிய தவித்தான். அவளை அறையிலேயே பூட்டி வைத்தான்.
உடனே வந்த கொல்கத்தா ஆளையும் மும்பை, ஆளையும் கரை கரை என்று கரைத்தான். அவர்கள் சம்மதிக்க கடைசியாக மூன்றாம் நாள் இரவு பார்ட்டிகளுடன் துணிந்து கடத்தும் போதுதான்..சேகர், குணா, பாலு, சிவா இவர்களை மோப்பம் பிடித்து வந்து விட்டார்கள்.
இருட்டில் சுற்றி வளைத்து துப்பாக்கிக் காட்டி பிடித்தார்கள்.
முதல் வேலையாக இருட்டோடு இருட்டாய் ஐஸ்வரியாவைக் கொண்டு அவள் வீட்டு வாசலில் சேகர் குணா விட்டு வந்தார்கள்.
காட்டிற்குக் கொண்டு வந்து புருசோத்தமன் பூவாயி மற்ற இருவர் மொத்தம் நால்வரையும் மரத்தில் கட்டிவைத்தார்கள். ஆளுக்கு ஒருவராகப் பிடித்துக் கொண்டார்கள்.
“அந்த பொண்ணுங்க என்ன கதற கதறி இருக்கும்? அதுக்குப் பரிசு இது.” என்று சொல்லி சொல்லி பிளேடால் அவர்கள் உடலில் கோடுகள் போட்டார்கள். ரத்தம் வடிய வடிய அவர்கள் அலறி துடிப்தைப் பார்த்து பொறுக்காமல், கடைசியில்… பொதுமக்கள் பார்வைக்காக அவர்களை….
அத்தியாயம்-12
இவர்கள் குற்றவாளிகள். பெண்களைக் கடத்தியவர்கள்.
இப்படிக்கு…தொட்டால் தொலைவாய் என்று எழுதி நான்கு பிணங்களும் பள்ளிக்கூடத்திற்கெதிரில் வரிசையாக கிடத்தி வைத்திருப்பதைப் பார்த்து மக்கள் அரண்டார்கள்.
“அடப்பாவிங்களா!” – சிலர் மூக்கில் விரல் வைத்தார்கள்.
“இவனுங்களுக்குச் சாவு இப்படித்தான் வரனும்“ – என்றும் சொன்னார்கள்.
“ஆனாலும் இது அநியாயம்!” – என்று வாய்க்குள் முணகியவர்களும் இருந்தார்கள்.
செய்தி தெரிவிக்கப்பட்டு படைகளுடன் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராசகோபால் பிணங்களைப் பார்த்து உறைந்தார்கள். விசாரணை ஆராய்ச்சி இத்யாதிகள்…நடைபெற்றன.
அதேசமயம்…
“எப்படிம்மா வந்தே? என்னாச்சு?” என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் அரைப்பிணமாக இருக்கும் மகளைப் பார்க்க பெற்றவர்களுக்கு வேதனையாக இருந்தது.
“நாம என்னங்க பாவம் செய்ஞ்சோம் நமக்கு இப்படி ஒரு தலைவிதி!“ – விசாலம் கணவனைப் பார்த்துக் கண்ணீர் மல்க கேட்டாள்.
“எனக்குத் தெரிஞ்சு நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலை.” ஐ.ஜி ஆறுமுகமும் கலங்கினார்.
“இந்த செத்துப் போனவங்கள்ல யாராவது உங்களுக்கு எதிரியா?“
“போலீஸ் துறையில எதிரிங்க சகஜம் விசாலம்.”
“ஏங்க! யாரோ புடிச்சி இவனுங்களை அழிச்சிருக்காங்க. நீங்க புடிக்க முடியாதா?”
“அவுங்களெல்லாம் பொண்டாட்டி புள்ளைங்க இல்லாம எதுக்கும் துணிஞ்சவங்கம்மா.”
“அப்புடின்னா நீங்க புடிக்க மாட்டீங்களா? போலீஸ் துறை தேவையே இல்லியே !?”
“….”
“உங்க துறை யூனிபார்ம் போட்டு சம்பளம் வாங்குறதுக்கும், அதிகாரிகளைக் கூழைக்கும்பிடு போட்டு பதவியைக் காப்பாத்திக்கிறதுக்கும், லஞ்சம் வாங்கவும், அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும் இருந்தா நாடு எப்படிங்க உருப்படும்?“
ஆறுமுகத்திற்குப் பேச வார்த்தை வரவில்லை. மக்களும் இந்த கேள்விகளைத்தான் கேட்கிறார்கள் என்ன பதில் சொல்ல? – அமைதியாய் இருந்தார்.
“நம்ம பொண்ணுக்கு வழி?“
“அவ மனசாலேயும் உடலாலேயும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா. நல்ல டாக்டரைக் காட்டி குணப்படுத்துவோம்!”
“இவளைக் கெடுத்தவனைக் கண்டு பிடிப்பீங்களா?”
“முயற்சி செய்யுறோம்!” – நகர்ந்தார்.
“போராடுவோம் ! போராடுவோம்!”
“நியாயம் வேண்டும்! நியாயம் வேண்டும்!”
“காவல் துறையே!”
“மாணவிகளை மனைவியாக்கிய அயோக்கியர்களைக் கண்டு பிடி.”
கோஷங்கள் வானைப் பிளந்தது.
ஆளும் கட்சியைத் தவிர்த்து சர்வ கட்சிகள் போராட்டம் என்பதால் அரைக் கிலோ மீட்டரையுயம் தாண்டி மக்கள் வெள்ளம். இடையில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமலிருக்க…முன்னாலும் பின்னாலும் போலீஸ் வேன்கள்.
தீச்சட்டி பத்திரிக்கை நிருபரான சுதாகரன் ரொம்ப சுறுசுறுப்பு.
“விசயம் என்ன சார்?” – கூட்டத்தில் முக்கியமான ஆளைப்பிடித்து மைக்கைப் பிடித்தான்.
“பத்திரிக்கை நிருபரா சொல்றேன். எங்க ஊர் மாதவி மாணவிகள் தங்கும் விடுதியில பாதிப் பேர்களுக்கு மேல் கர்ப்பம்!” – இடியை இறக்கினார்.
“எப்படி சார்?“
“எல்லாம் அதிகாரிங்க வேலை.” – புரியாமல் பார்த்தான்.
“இங்கே எந்த முக்கியஸ்தர்கள் வந்தாலும் பக்கத்துல இருக்கிற பயணியர்கள் விடுதியிலதான் தங்குவார். அவர் உல்லாசமா இருக்க இங்கே இருந்துதான் பெண்களை அனுப்பியிருக்காங்க. நாங்க விசாரிச்ச வகையில அப்பட்டமான உண்மை. இதுக்குப் புள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் ஒருத்தர் சார்.”
திடுக்கிட்டான்.
“நிசம் சார். அவர் பெண்கள் விசயத்துல வீக். போனவருசம் ஒரு பள்ளிக்கூடத்து விழா போது இங்கே வந்து தங்கினார். அதிகாரிங்க அவரை குளிர்விக்க உதவிக்கு இரண்டு மாணவிகளை அறைக்கு அனுப்பி இருக்காங்க. அவருக்கு அதுங்களைப் பார்த்ததும் ஆசை. தன் விருப்பத்தை அதிகாரிகிட்ட வெளியிட்டிருக்கார். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாய் அவர் விழிச்சி வார்டன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சி எப்படியாவது அமைச்சர் திருப்தியாய்ப் போகனும்ன்னு அவளுக்கு உத்தரவிட்டுட்டுப் போயிருக்கார். பெண் என்ன செய்வாள் பாவம். மாணவிகளை அழைச்சி மிரட்டி பணியவைச்சிருக்கா. அன்னையிலேர்ந்து எந்த முக்கியஸ்தர்கள் வந்தாலும் இப்படின்னு பழக்கப்படுத்திக்கிட்டாங்க.” சேதியைச் சொல்லி முடித்தார்.
“எந்த அமைச்சர் ?“
“கல்வி அமைச்சர் கனகராசன்!”
“விசயம் எப்படித் தெரிஞ்:சுது ?”
“வார்டன் பெண்ணையேக் கேட்டிருக்காங்க. பாதிப் பெண்கள் கர்ப்பம் வேற. தவிச்சுப் போன வார்டன் தானா வந்து விசயத்தை உடைச்சிட்டா.”
சுதாகரன் மைக்கை அணைத்துச் சுருட்டினான்.
பத்திரிக்கையைப் படித்த முதலமைச்சருக்குக் கடுப்பாய் இருந்தது. நம் அமைச்சரைவையில் இப்படி ஒரு சனியன் அவமானம். குமைந்தார். ‘மொதல்ல இவனைக் கட்சியைவிட்டே தூக்கனும்‘ – நினைத்தார்.
கனகராசன் பணபலமும் எம்.எல்.ஏ கையிருப்பும் அவரை மிரட்டியது. என்ன செய்யலாம் ? என்று யோசிக்கும் போதுதான் அவருக்கு மேசையின் மேலிருந்த அழைப்பிதழ் கண்ணில் பட்டது.
உடனே மணி அழுத்தி தன் அந்தரங்க ஆலோசகரை அழைத்தார். வினாடியில் வந்தவரை உட்காரச் சொன்னார்.
“ஒரு முக்கியமான விசயம்”
“என்ன சார்?”
“ரொம்ப ரகசியம்! காதும் காதும் வைச்சாப் போல முடிக்கனும்.”
“சொல்லுங்க சார்.”
“நாளைன்னைக்கு கல்வி அமைச்சர் ஒக்கேனக்கலுக்கு ஒரு திறப்பு விழாவுக்குப் போறார்”
“ஆமாம் சார்.”
“அங்கே அவருக்குச் சரியான பாதுகாப்பு குடுக்க வேணாம்.!”
“சா…சார்ர்ர்…!” மெல்லிசாக இழுத்தார்.
“வீரப்பன் கொண்டு போகட்டும்”
காரணம் புரியாமல் விழித்தார்.
“சென்ற முறை அவர் காவல் துறை அமைச்சராய் இருந்த போது அதிரடிப்படையை வைச்சி அவனை ரொம்ப அலைக்கழிச்சார். அதனால இவர் எப்போ மாட்டுவார்ன்னு அவன் சமயம் பார்த்துக்கிட்டு இருப்பான். அவரால நமக்கு ரொம்ப அவமானம் கொண்டு போகட்டும். நாம பாதுகாப்பை தளர்த்தினா போதும் அவன் சந்துல சிந்து பாடிடுவான். ரொம்ப ரகசியமாய் போலீஸ் காதுல போட்டு விடுங்க. இந்த மாதிரி ஆளுங்க இருக்கிறதைவிட இல்லாம இருக்கிறது நல்லது.” – வெறுப்பைக் கொட்டினார்.
அவர் எழுந்தார்.
கட்சி கொடி தோரணம் கட்டி ஒக்கனேக்கலே விழாக் கோலம் பூண்டு இருந்தது.
கல்வி அமைச்சர் கனகராசனே வருக.! வருக ! என்று எங்கும் பேனர்.
டர்வான புதர் பாறை இடுக்கில் மறைந்து தயாராய் ஏ.கே.47 பிடித்தப்படி சேகர் குணா மறைந்திருந்தார்கள்.
மூன்று மணிக்கெல்லாம் வந்து திறப்பு விழா முடித்து செல்ல வேண்டிய அமைச்சர் நான்கு மணியாகியும் வரவில்லை.
ஐந்து மணிக்கெல்லாம் அவர் வராமலேயே கூட்டம் ஆரம்பித்தது. மாண்புமிக அமைச்சர் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் விழாவிற்கு வர முடியவில்லை மைக்கில் சொல்லப்பட்டது.
“ச்சே ! தப்பிச்சுட்டான்!” – சேகர் சலித்தான்.
ஒரு வாரம் கழித்து பாலு உற்சாகமாய் இருப்பிடத்திற்கு வந்தான்.
“உங்களுக்கெல்லாம் நல்ல சேதி!” என்று சொல்லி நண்பர்கள் மத்தியில் அமர்ந்தான்.
மூவரும் அவனை ஏறிட்டார்கள்.
“பழம் நழுவி பால்ல விழுந்தாச்சு!”
“…..”
“கனகராசன் அவர் பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க வர்றார்.”
“எப்போ?“
“நாளன்னைக்கு. அது ஊரை விட்டு ஒதுங்கி இருக்கிற பெரிய வீடு. சுத்தி முந்திரிக் காடு. அதை அடுத்து காடு மலை நம்ம இடம். கொண்டு வர வசதி.”
“பாதுகாப்பு ஏற்பாடு?”
“அவ்வளவா இல்லே.”
“ஏன்?“
“முதலமைச்சருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு.”
“வேற விசேசம்?”
“அமைச்சர் பண்ணை வீட்டுக்குப் போறன்னைக்கு அந்த ஊர் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர் கட்சிகள் போராட்டம்.”
“ஏன்?”
“வறட்சி! விவசாயிகள் போராட்டம். கருத்து வேறு காரணமா முதலமைச்சரை மிரட்ட இது கனகராசனே துாண்டிவிட்டிருக்கார்”.
“நமக்கு லாபம்?”
“இவர் சூழ்ச்சி புத்தி தெரிஞ்ச முதலமைச்சரும் பேரணிக்குப் பாதுகாப்புங்குற பேர்ல அவர் ஆதரவாளர்களையெல்லாம் அடிச்சு நொறுக்க போலீசாரைக் குவிச்சிருக்கார். அதனால போலிசாரெல்லாம் போராட்டத்துலதான் தன் கவனத்தைச் செலுத்துவாங்க. அதனால ….அமைச்சர் பண்ணை வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லே. நாம கடத்துறது சுலபம். ஆனாலும் நாம ஜாக்கிரதையாய் நடக்கனும்”. – முடித்தான்.
மற்ற மூவரும் கவனமாய்க் காதில் வாங்கி மனதில் இருத்தினார்கள்.
“அரசே ! நிவாரணம் கொடு!”
“விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!”
“இலவச மின்சாரத்தை நிறுத்தாதே!“
“பட்னிச் சாவை மறுக்காதே!!”
நிறைய கோஷங்கள் வானைப் பிளந்தது. பேரணி ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு அம்மாள்புரம் கிராமத்திருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தது.
போராட்டக்காரர்களை எப்போது நசுக்கலாம் என்ற கண்காணிப்பில் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரர்கள் பேரணியை ஒட்டி நடந்தார்கள். முன்னும் பின்னும் இரும்பு தொப்பிகள் அடைத்த போலீஸ் வான்கள்.வழக்கமான பிரம்பைத் தவிர்த்து துப்பாக்கி சூடு நடத்தவும் தயாராய் அவர்கள் கைகளில் துப்பாக்கிகள்.
பேரணி பாதி தூரம் வந்த போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.
மகளிர் அணிக்குப் பக்கத்தில் வந்த ஒரு போலீஸ் வயசு கோளாறு சும்மா வராமல் ஒருத்தியைப் பார்த்து வழிந்து கொண்டே வந்தான். அவளுக்கு அவனைப் பார்க்கவே வெறுப்பு. கூட்டத்தில் கலவரம் வேண்டாமென்று பொறுமையைக் கடை பிடித்து வந்தாள். இதை அவள் பக்கத்தில் வந்த பெண்களில் சிலரும் கவனித்துக் கொண்டு வந்தார்கள். பாதி துாரம் வந்ததும் அவனுக்குத் துணிச்சல் வந்தது. அவன் யாருக்கும் தெரியாமல் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க…
“அடேய்…! எங்கப் பொண்ணைப் பார்த்துக் கண்ணா அடிக்கிறே ?”- ஒருத்தி அவன் மேல் வெகுண்டு பாய… கொஞ்ச நேரத்தில் அமளி துமளி. கல்வீச்சு. துப்பாக்கிச் சூடு கண்ணீர் புகைக் குண்டு வீச்சு.
சேகர் குணா பாலு சிவா நால்வரும் எந்தவித அலட்டலுமில்லாமல் அமைச்சரை அல்வா மாதிரி கடத்தினார்கள்.
காட்டுக்கள் வந்ததும் கண் கட்டை அவிழ்த்து நடத்தினார்கள்.
“யாருப்பா நீங்க?”
“ம்ம்…. மனுசன்ங்க.”
“எங்கே கொண்டு போறீங்க?”
“நீ போக வேண்டிய இடத்துக்கு.”
“நான் எங்கே போகனும்?”
“வாயை மூடிக்கிட்டு வந்தா சொர்க்கத்துக்கு போவே. திறந்தா நரகத்துக்குப் போவே.”
கனகராசன் கொஞ்ச நேரத்திற்கு வாயைத் திறக்க வில்லை.
“மாதவி மாணவி விடுதி மாணவிகளுக்கு நீதானே புள்ளையார் சுழி போட்டே?” குணா ஆரம்பித்தான்
“இ…..இல்லே.”
“உன் உயிர் போறதுக்கு முன்னாடி உன் உறுப்பு பிஞ்சிடும்.”
அமைச்சர் தலையைக் கவிழ்த்துக் கொண்டு நடந்தார்.
“மச்சான் உனக்கு ராத்திரி முழுக்க ஊஞ்சல்தான்!” – சிவா சொன்னான்.
மிரண்டு பார்த்தார்.
“என்ன பார்க்கிறே? ஒரு பெரிய மரத்துக் கிளையில உன்னைத் தலைகீழாய்க் கட்டித் தொங்க விடுவோம். கையில ஒரு கட்டையை வைச்சிக்கிட்டு நாலு பேரும் நாலு மூலையில நின்னு ஆட்டி ஆளாளுக்கு அடி குடுப்போம். சாவுற வரை இந்த ஆட்டல் அடி. ஏன் இப்படின்னு நினைக்கிறீயா? நீ உன் பொண்ணு வயசுல உள்ள பொண்ணுங்ககூடயெல்லாம் அவுங்க கஷ்ட நஷ்டத்தைப் பார்க்காம சொகுசாய் உல்லாசமாய் இருந்தேல்லே அதுக்குச் சித்ரவதை.” – முடித்தான்.
அமைச்சர் கனகராசன் கண்களுக்குள் அந்த காட்சி விரிய…அப்போதே பாதி உயிர் போனது.
அத்தியாயம்-13
“ஒரு அமைச்சரையே கடத்தி அடி அடின்னு அடிச்சு சாவடிச்சு கொண்டு வந்து மலையடிவாரத்துல போட்டு பார்த்துட்டுப் போங்கடான்னு சொல்றாப் போல போயிருக்காங்கன்னா நீங்களெல்லாம் என்ன புடுங்கிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியலை. மொதல்ல ஒரு வாத்தியார் காலை வெட்டி அனுப்பிச்சிருங்காங்க. அடுத்து ஒரு கெழவன் கை ரெண்டும் துண்டாகி பொணமாக் கிடந்திருக்கான். அப்பறம் அடுத்தடுத்து கொலைகள். மக்கள் ஆயிரம் தப்பு செய்யட்டும். தண்டிக்க இவனுங்க யாரு? நம்மால முடியலை. நீங்களாவது புடிச்சி தண்டிச்சிட்டுப் போங்கடான்னு சும்மா இருக்கீங்களா?” – போலீஸ் முக்கிய அதிகாரிகளையெல்லாம் திரட்டி மற்றவர்களிடமும் மக்களிடமும் நல்ல பெயர் வாங்க முதலமைச்சர் கண் ஜாடையில் உள் துறை அமைச்சர் போலியாக எல்லாருக்கும் டோஸ் விட்டார்.
அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.
“இன்னும் அஞ்சே நாள்ல அவுனுங்க அத்தனைப் பேரையும் புடிக்கனும். இல்லேன்னா எல்லார் மேலேயும் நான் நடவடிக்கை எடுப்பேன்..!” காய்ந்தார். சரியா ? என்பதைப் போல் பக்கத்திலுள்ள பத்திரிக்கையாளர்களைப் பார்த்தார்.
ஒரு வாரத்தில் பரந்தாமன் ஐ.ஜி அறைக்குள் பவ்வியமாக நுழைந்து விறைப்பாக சல்யூ ட் அடித்தார்.
“எஸ்! என்ன விசயம்?” – அவர் இருக்கையில் அமர்ந்தபடியே ஏறிட்டார்.
“நான் அந்த நாலு பேரையும் கண்டு பிடிச்சுட்டேன் சார். விபரம் இதோ இருக்கு.” அவர் முன் பைலை பவ்வியமாக வைத்தார்.
ஆறுமுகம் பிரித்தார்.
- குணா என்கிற குணசேகரன் வயது 35 சொந்த ஊர் ஆவணக்குறிச்சி. படிப்பு பி.ஏ. பட்டம். வேலைக்கு லஞ்சம் கேட்ட சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம், அவர் காரிதரிசி சாம்பசிவம் இருவரையும் கொன்று தலைமறைவு ஆகியவன்.
- சேகர். வயது 30. சொந்த ஊர். ஆரல்வாய்க் குப்பம். கம்ப்யூ ட்டர் எஞ்ஜினியர் படிப்பு. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி மோசடி செய்த ஏஜெண்டை கொலை செய்துவிட்டு தலைமறைவு.
- சிவா வயது 28. பத்தாம் வகுப்ப படிப்பு. ராணுவத்தில் வேலை. தனக்குப் பெண் கொடுக்க மறுத்த தாய், மாமன், மாமி, மகள் ஆகியோரைக் கொன்று தலைமறைவாகியவன்.
- பாலு என்கிற பாலகிருஷ்ணன். வயது 26. டாக்டருக்குப் படிப்பு. இன்ஸ்பெக்டர் பெண்ணைக் காதலித்த குற்றத்திற்காக இவனை அவர் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ள…வெளியில் வந்து அவரைக் கொலை செய்து தலைமறைவானவன். – கவனமாகப் படித்து புகைப்படங்களை உற்றுப் பார்த்து மூடினார்.
பரந்தாமன் தொடர்ந்தார் :
“இவுங்க நாலு பேரும் சேர்ந்து பல கொலை கொள்ளைகள் செய்ஞ்சிருக்காங்க சார். சமீப காலமாய்த்தான் குழந்தை பாலியல் கொடுமை சேதிகளினால் தாக்கப்பட்டு அவுங்களைத் தேடி கண்டுபிடிச்சி கொன்னிருக்காங்க சார்.
“இவுங்க நாலு பேரையும் ஒன்னா பார்த்த ஒரே சாட்சி ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சுந்தரம் சார். இவர் தன்கிட்ட படிக்கிற சின்ன பெண் குழந்தைங்க கிட்ட தவறாய் நடந்ததினால கொண்டு போய் கால் கட்டை விரல்களை வெட்டி அனுப்பிச்சிருக்காங்க. அவர் தப்பி வந்து மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று குணமடைஞ்சு இப்போ வேலையில் இருக்கார் சார். அவர் செய்த குற்றத்துக்காக அரசாங்கம் குடுத்த தண்டனை ஆறு மாசம் வேலை நீக்கம்., பதவி உயர்வு நீக்கம், அடுத்து மாற்றல் சார். தன் பாதிப்பு… இவர் தானா என்னைத் தேடி வந்து அவுங்களைப் பத்தின முழு விபரங்கள் கொடுத்தார் சார்.”
“அடுத்து ஒரு ஆளைப் பார்த்த சாட்சி ஜானகிராமன் டிரைவர் சார். இவரை நான் தேடி கண்டு பிடிச்சு விபரங்கள் சேகரிச்சேன் சார்.”
“அப்புறம் இவுங்களைச் சரியாய்ப் பார்த்தும் சொல்ல முடியாத மனநிலையில இருக்கிறது உங்க மகள் ஐஸ்வரியா சார்.” – இதைச் சொன்ன போது பரந்தாமன் கிட்டத்தட்ட கண் கலங்கினார்.
ஐ.ஜி ஆறுமுகத்திற்கும் முகம் விழுந்து பம்மியது.
“சாரி சார்!” என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர் “இப்போ இவுங்களைப் பிடிக்க எனக்கு அதிரடிப்படை உதவி வேணும் சார்.” கடைசியாக தன் கோரிக்கையை வைத்தார்.
‘இவர்களைப் பிடிக்க வேண்டுமா?!’ – ஆறுமுகத்திற்குள் கேள்வி பிறந்தது. தடுமாற்றம் ஏற்பட்டது. வெகு நேரம் தன் மேசை மீதிருந்து கண்ணாடி பேப்பர் வெயிட்டை உருட்டி யோசித்தார்.
‘நல்லது செய்தாலும் சட்டத்தை மீறுபவர்கள் எவராய் இருந்தாலும் குற்றவாளிகள்தான்!’ முடிவிற்கு வந்து, “உங்க விருப்பப்படி வேண்டிய உதவிகள் செய்றேன்! இன்னும் ஒரு வாரத்துல கிடைக்கும்” – விறைப்பாய்ச் சொன்னார்.
பத்து நாட்களில் அதிரடிப்படைகளுடன் காட்டுக்குள் நுழைந்த பரந்தாமன், ‘அப்பாடா! இனி போலீஸ் வேலைக்கான தொந்தரவு இல்லை. பேருக்குத் தேடிவிட்டு நான்கு நாட்களுக்கு ஒரு முறை குற்றவாளிகளை நெருங்கி விட்டோம், சுற்றி வலைத்துவிட்டோம் என்று அறிக்கை விட்டபடி பொழுதைக் கழிக்கலாம்!‘ என்று நிம்மதி மூச்சு விட்டார்!
முற்றும்
– பாக்யா வார இதழில் வெளிவந்தது.