தொட்டால் தொலைவாய்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 9,693 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13

அத்தியாயம்-7

மறுநாள் காலை அந்த நான்கு வாத்தியார்களும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிரிலுள்ள மரத்தில் சடலமாய்த் தொங்கினார்கள்.

தொட்டால் தொலைவாய் பழி.

மாணவிகளுக்குச் சமர்ப்பணம்!

வாசகம் நான்கு சடலங்களின் கட்டை விரல்களிலும் கட்டி விடப்பட்டிருந்தது.

பிணங்களைக் கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் பரந்தாமன், “அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில என் ஏரியாவுக்கு வந்து என்கிட்ட வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டானுங்கடா. தலைவேதனை!”- நொந்தார்.

கூட்டத்தை விலக்கி, “இந்த பள்ளிக்கூடத்து வாட்ச்மேன் யாருப்பா?” – கேட்டார்.

“நா..நான்தானுங்க….”- ஐம்பது வயது கிழவன் கூட்டத்தைவிட்டு நரியடி புலியடியாக வெளியே வந்தான்.

“ராத்திரி பள்ளிக்கூடத்துல காவல் இருந்தீயா?”

“இருந்தேங்க..”

“இந்த பொணங்களை யார் கட்டிவிட்டாங்க ?“

“தெரியாதுங்க..”

“முழிச்சிக்கிட்டிருந்தியா துாங்கினீயா ?”

“துாங்கினேன்ங்க.”

“காவலாளி துாங்கலாமா ?”

“நான் வாட்ச்மேன்ங்க.”

பரந்தாமன் அவரைப் புரியாமல் பார்த்தார்.

“காவலாளின்னா கையில துப்பாக்கி கத்தி ஆயுதம் குடுத்திருக்கனும்ங்க. என்கிட்ட ஒன்னும் கிடையாது. படுக்கக்கூட இடம் கெடையாது. தரையில துண்டைவிரிச்சுப் போட்டுப்படுப்பேன். ஒரு வசதியுமில்லாம எதுக்கு நான் வீணா இங்கே படுக்கனும்ன்னு அதிகாரிங்களைக் கேட்டேன். ஒரு வசதியுமில்லாம ஒருத்தரையும் நீ எதிர்க்க முடியாது. அரசாங்கம் உனக்கு ஒரு வேலை குடுத்திருக்கு காப்பாத்திக்க. ஏதாவது அசம்பாவிதம் நடந்துதுன்னா முதல்ல உன்னைக் காப்பாத்திக்கிட்டு அப்புறம் எங்களுக்குத் தகவல் குடுன்னு சொன்னாங்க. அன்னையிலேர்ந்து எடுத்துவந்த சாப்பாட்டை எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டுட்டுத் துாங்கிடுவேன்ங்க. இடையில ஏதாவது சத்தம் கேட்டா முழிச்சுப் பார்ப்பேன்.”

‘என்ன ஒரு நியாயம்! அரசாங்கத்தில் எவ்வளவு பெரிய குறை!’ பரந்தாமன் அவரை வியப்பாய்ப் பார்த்தார்.

“நீ ரொம்ப விவரமான ஆளுய்யா!” என்று பாராட்டிவிட்டு “ராத்திரி ஏதாவது சத்தம் கேட்டு முழிச்சிப் பார்த்தியா?” – கேட்டார்.

“இல்லைங்கைய்யா” – அவர் பவ்வியமாக சொன்னார்.

“உண்மையைச் சொல்லு?”

“சத்தியமா இல்லேங்கைய்யா. காலையிலதான் முழிச்சிப்பார்த்து உங்களுக்குத் தகவல் குடுத்தேன்!” என்றார்.

“இந்த சம்பவத்தை யாராவது ராத்திரி கண்ணால பார்த்தீங்களா?”- பரந்தாமன் அவரை விட்டுவிட்டு கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.

எவரும் வாயைத் திறக்கவில்லை.

“இங்கே யாரும் ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போய் இந்த வழியா திரும்பலையா?” – கேட்டார்.

இதற்கும் அவர்கள் வாயைத் திறக்கவில்லை.

இது ஒதுக்குப்புறமான இடம். சாலையில் மரங்கள் அடர்ந்த இருட்டுப் பகுதி. பள்ளிக்கூட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஜனசந்தடி கம்மி. இருட்டிவிட்டால் சுத்தமாக நடமாட்டம் இருக்காது. உணர்ந்த இன்ஸ்பெக்டர் ‘இரவில் வேறு யார் நடமாட்டம் இருக்கும்?’ யோசித்தார்.

பிணங்களை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பிவிட்டு ஜீப்பில் ஏறி ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தினார்.

பத்து ஆட்டோக்கள் வரிசைப் பிடித்து நின்றது.

இவர் மிடுக்காக இறங்கியதைப் பார்த்து அங்குள்ள காக்கிச் சட்டைப் போட்ட தொழிலாளிகள் மிரண்டார்கள். யூனிபார்ம் போடாமல் இருந்தவர்கள் அவசரமாய்ப் போட்டார்கள். இன்ஸ்பெக்டர் வந்து நின்றதும் கலவரமாய்ச் சூழ்ந்தார்கள்.

“ராத்திரி யாருப்பா இங்கே ஆட்டோ ஓட்டினது?”

“யாருமில்லே ச..சார் !”

“ராத்திரியில வண்டியே ஓடாதா?“

“பஸ்-ஸ்டாண்டுல நாலு நிக்கும் சார். மத்த எதுவும் ஓடாது சார்.”

“ஏன்?“

“ஒரு நாளைக்கு நாலு நாலு வண்டியாய் மாறி மாறி நிக்கும் சார். சுழற்சி முறை!”

“யாரைக் கேட்டா வண்டி தெரியும்?”

“சங்கத்தலைவர் சவாரி போயிருக்கார். இப்ப வந்துடுவார். அவரைக் கேட்டாத் தெரியும் சார்.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆட்டோ வந்தது.

பதில் சொன்னவன் “இதோ வந்துட்டார் சார்!” என்றான்.

மாறன் ஆட்டோவை நிறுத்தி இறங்கினான்.

“வணக்கம் சார்!” – அவன் நின்ற சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து சலாம் வைத்தான்.

பரந்தாமன் நேரடியாகவே விசாரணைக்கு வந்தார்.

“நம்ம ஊர் பள்ளிக்கூத்துக்கு எதிர்ல கொலை நடந்திருக்குப்பா. ராத்திரி உங்கள்ல யார் யார் வண்டி ஓட்டினது?”

“ராத்திரி முறையில நானும் ஒருத்தன் சார். ஆனா சவாரியே வரலை. வண்டியில படுத்து நிம்மதியாத் துாங்கினோம்!” சொன்னான்.

“ஆச்சரியமா இருக்கே?!”- பரந்தாமன் கண்களை அகல விரித்தார்.

“இதுல ஆச்சரியம் இல்லே சார். மக்கள் என்னைக்காவது ஒருநாள் இப்படி எங்க பொழைப்புல மண்ணையள்ளிப் போடுவாங்க சார்.” என்றான்.

“வேற இங்கே ராத்திரியில ரிக்ஷா ஓடுமா?” – அக்கம் பக்கம் பார்த்தார்.

“ஓடாது சார்”

“ஏன்?“

“பாதிப்பு சார். ரிக்ஷா ஆள் மிதிச்சு மெதுவா போறதுனால மக்களுக்குத் திருடன்கிட்டேயிருந்து பாதுகாப்பு இல்லேங்குற பயம். அதனால எல்லா ரிக்ஷாக்காரங்களும் ஆறு மணிக்கு மேல வண்டியை ஓரம் கட்டிட்டு நிம்மதியாய் சாராயம் ஏத்திக்கிட்டு வீட்டுக்குப் போயிடுவாங்க சார்.”

பரந்தாமனுக்கு அதற்கு மேல் யாரை விசாரிப்பது என்று தெரியவில்லை. ‘யாரை விசாரிக்கலாம்?! – ஜீப்பில் ஏறினார். ஸ்டேசனுக்கு வந்து இருக்கையில் அமர்ந்ததும் தொலைபேசி அடித்தது.

“ஹலோ!” அலட்சியமாக ஒலி வாங்கியைக் காதில் வைத்தார்.

“நான் ஐ.ஜி பேசறேன்ய்யா!” என்று எதிர் முனையில் குரல் வந்ததும்,

“எஸ் சார்!“ விரைப்பாக எழுந்தார்.

“உன் ஏரியாவுல நாலு வாத்தியார்கள் கொலையா?“

“ஆமாம் சார்!”

“எவன் அது?”

“தெ…தெரியலை சார்!“

“நமக்கு மேலிடத்திலேர்ந்து நெருக்கடி வர்றதுக்குள்ள கண்டுபிடிச்சுடு.”

“விசாரணையை ஆரம்பிச்சுட்டேன் சார்!”

“ரொம்ப சந்தோசம் சுறுசுறுப்பா முடி.” – வைத்தார்.

“ஆரம்பமே தொல்லை!” – பரந்தாமனுக்கு வெறுப்பாக இருந்தது. முணுமுணுத்து ஒலிவாங்கியை வைத்து அமர்ந்தார்.

மூலையில் நான்கு பலான பெண்கள் விழித்துக்கொண்டு நின்றார்கள்.

“ஏன்டி! உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லியா?” – எரிந்து விழுந்தார்.

“இதுதான் சார் வேலை!” ஒருத்திக்குச் சொல்ல ஆசை.

இன்னொருத்திக்கு “ஆமாம்.! விபச்சாரிங்களைத்தான் புடிப்பீங்க. வீரப்பனைக் புடிக்க மாட்டீங்க?” வெடுக்கென்று சொல்ல ஆவல். வாய்வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டார்கள்.

“என்னடி முழிக்கிறீங்க?” அதட்டினார்.

“ஒ..ஒன்னுமில்லே சார்” என்று ஒருத்தி சொல்லும்போதே பரந்தாமன் மேசையருகில் வந்த ஐம்பது வயதுள்ள 321 கான்ஸ்டபுள் “சார்! மாசக் கடைசி கேஸ் இல்லேன்னு புடிச்சி வந்தேன் சார்” – வழிந்தார்.

“போய்யா!“ – பரந்தாமன் அவரைத் துரத்தி நாற்காலியில் சாய்ந்தார்.

சடக்கென்று இன்னொரு யோசனை மூளையில் உதித்தது. “இங்கே வாங்கடி” அழைத்தார்.

அவர்கள் மெல்ல அவர் அருகில் வந்தார்கள்.

“ராத்திரி நம்ம ஊருக்கு அறிமுகம் இல்லாத ஆட்கள் உங்க பக்கம் வந்தான்களா?”

“இல்லே சார்.”

“நல்லா யோசிச்சு சொல்லுங்க. வாடிக்கையாளர்களைத் தவிர வேற யாராவது வந்திருப்பாங்க. உங்க மேல கேஸ் இல்லாம உடனே விட்டுடுறேன்.”

“அப்படி யாரும் வரலை சார்.”

“போய் உட்காருங்க.” தொய்வுடன் சரிந்தார்.

‘இந்த வாத்தியார்கள் தப்பு செய்ஞ்சது தெரிஞ்ச விசயம்.! மக்கள் போராட்டம் அது இதுன்னு போனது நாடறிஞ்ச சேதி. இவ்வளவு துணிச்சலா போலீசுக்கு சவால் விடுறா மாதிரி கொலை பண்ணி தூக்குல தொங்க விட்டிருக்காங்கன்னா தீவிரவாதிங்க வேலையாத்தானிருக்கும்!’ – மனதில் பட்டது.

‘எந்த தீவிரவாதிங்க?’ – யோசனையை ஓட்டினார்.

அதே சமயம் காட்டில்…

“குணா! பரந்தாமன் ஒரு மாதிரியான ஆளு. துடிப்பானவர். உசுப்பி விட்டிருக்கோம் ஜாக்கிரதை! நாம நடமாட்டத்தைக் குறைச்சிக்கிட்டு அவர் ஓய்ஞ்ச பிறகு வேலையை ஆரம்பிப்போம்!” என்றான் சேகர்.

அத்தியாயம்-8

பத்து நாட்கள் இவர்களிடம் எந்த செயல்பாடும் இல்லை. வழக்கம் போல் இடம் மாறி தங்களைத் தேடிக் கொண்டு எவராவது வருகிறார்களா என்று கவனிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

பதினோராம் நாள்.

கீழே சென்று மேலே வந்த சேகர் “இந்த பத்திரிக்கைக்காரங்க நம்மை நிம்மதியா துாங்க விடமாட்டாங்க போலிருக்கு வேலை வைச்சிக்கிட்டே இருக்காங்க” சலிப்புடன் சொல்லி நண்பர்கள் கூட்டத்தில் அமர்ந்தான். கையில் தினசரி சுருட்டி வைத்திருந்தான்.

“என்ன?” – குணா, சிவா, பாலு அவனை வியப்பாய்ப் பார்த்தார்கள்.

“இதைப் படிங்க” – தினசரியை அவர்கள் முன் போட்டான்.

குணா எடுத்து விரித்தான். சிவா, பாலு அவனை ஒட்டினார்கள்.

“அதைப் படிங்க” – சேகர் முதல் பக்கத்திலேயே ஒரு இடத்தைக் கை வைத்துக் காட்டினான்.

மேய்ந்தார்கள்.

பள்ளிக்கு நட்சத்திர அந்தஸ்த்து வாங்க முயற்சி.

சோதனைக்கு வந்த அதிகாரிகளுக்குப் பள்ளி நிர்வாகம் மாணவிகள் சப்ளை!

அரசு சார்பா மூன்று அதிகாரிகள் வீரம்மாள் பள்ளியைச் சோதனையிட வந்தார்கள். அவர்கள் பள்ளி நிர்வாகம், கல்வித்தரம் ஆகியவற்றை ஆராய்ந்து நற்சான்று வழங்கினால் பள்ளிக்கு நற்பெயரும் சிறப்பு அந்தஸ்த்தும் உண்டு. பள்ளி தலைமை ஆசிரியை அங்கம்மாள் அதிகாரிகளை மயக்கி நற்சான்று நற்சான்று பெற விரும்பினார். இதனால் ஐந்து மாணவிகளுக்கு ஆசை வார்த்தைக் கூறியும் மிரட்டியும் அதிகாரிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருக்க ஊட்டிக்கு அனுப்பினார். இதனால் ஒரு மாணவி கர்ப்பமடைந்தாள். விசயம் தெரிந்ததும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்கு வந்த ஜானகிராமன் முன்னாள் கல்வித் துறை ஆய்வாளர், ராஜாராமன் முன்னால் கல்வித்துறை இயக்குநர், சீதாராமன் கல்வி உயர் அதிகாரி மூவரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படித்து முடித்த பாலு “இது ரொம்ப அநியாயம்.!” – கொதித்தான்.

“பள்ளிக்கு நட்சத்திர அந்தஸ்த்து வேணும் அதை வைச்சி நிறைய சம்பாதிக்கனும்ன்னா தலைமை ஆசிரியை தான் போயிருக்கனும் இல்லே தன் ஆசிரியைகளை அனுப்பிச்சிருக்கனும் இல்லே பணத்துக்கு ஆள் பிடிச்சு விட்டிருக்கனும் அதை விட்டுட்டு படிக்கிற மாணவிகளை அனுப்பினது எந்தவிதத்துல நியாயம் ?”-சிவா முகம் இறுகியது.

“இதுக்கெல்லாம் ஒரே காரணம் பள்ளி வியாபாரமா மாறிப்போனதுதான்!”- என்றான் பாலு.

“வந்தவனுங்க சின்ன பொண்ணுங்களுக்கு ஆசைப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”

“அவனுங்க ஆசைப்பட்டானுங்களா இவளா பேரம் பேசினாளா தெரியலை.”

“எப்படியாய் இருந்தாலும் அங்கம்மாள் மேலுேயும் தப்பு இருக்கு. அதிகாரிங்க மேலேயும் தப்பு இருக்கு. ஒன்னு இவ பள்ளி அந்தஸ்த்து பெற மாணவிங்களை அனுப்பியிருக்கக் கூடாது நிர்வாகமே விரும்பினாலும் இப்புடி செய்ஞ்சிருக்கக் கூடாது. யார் சம்பாதிக்க யார் வீட்டுப் பொண்ணைக் கெடுக்கிறது?. அப்படியே அங்கம்மாள் ஆசை வார்த்தைக் கூறி வந்தவர்கள் மடக்கினாலும் எல்லாருக்குமே நல்லா படிச்சவனுங்க உயர் அதிகாரியாய் வேலைப் பார்த்தவனுங்க வேணாம்ன்னு ஒதுக்கி இருக்கனும். அறுபது வயசுக்கு மேலே உள்ளவனுங்க பேத்திங்கன்னு விலக்கி இருக்கும். அதை விட்டுட்டு வந்த வேலையை மறந்து ஜொள்ளு விட்டுப் போனது தப்பு. இவனுங்க ரெண்டு தப்பு செய்ஞ்சிருக்கானுங்க. பொண்ணுங்களைக் கெடுத்ததோட மட்டுமில்லாம கடமையைச் செய்யாம அரசாங்கத்துக்கும் துரோகம் பண்ணியிருக்கானுங்க.” பாலு சொன்னான்.

“இப்போ என்ன செய்யனும்?”- குணா ஆவலாய்க் கேட்டான்.

“மொதல் வேலையாய் எல்லாரையும் இங்கே கொண்டு வந்து கொன்னு நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி இந்த மாதிரி அநியாயம் செய்யிறவங்களைப் பயப்பட வைக்கனும்..”

“அவ்வளவு சுலபமா செய்ய முடியாது.” – சிவா மறுத்தான்.

“ஏன்ன்??“

“அங்கம்மாள் இதோ பக்கத்துல கைக்கு எட்டும் துாரம் இருக்காங்க. அதிகாரிங்க சென்னையில இருக்காங்க. எல்லாரையும் இங்கே கொண்டு வந்து முடிக்கிறங்கிறது சீக்கிரத்துல முடியாத காரியம்.” விளக்கினான்.

“அப்போ வழி ?” குணா அவனைக் கூர்ந்து பார்த்தான்.

“நாம் சென்னைக்குப் போய் தேடி மூணு பேரையும் புடிச்சி வர்றதுங்குறது கஷ்டம். அதனால மொதல்ல அங்கம்மாவைக் கொண்டு வரனும் அதுக்கப்புறம் அவுங்க வழியாய் அதிகாரிங்களைக் கொண்டு வரனும்” என்றான்.

“எப்படி?“ சிவாவிற்கு விளங்கவில்லை.

“விசயம் வெளியே தெரிஞ்சு சிரிச்சுப் போனதுனால அங்கம்மாள் தப்பிக்க ஏதாவது வழியைத் தேடுவாள். நாம இதைப் புடிச்சிக்கிட்டு அவளைக் கொண்டு வந்து அடுத்து அவர்களைக் கொண்டு வரனும்” என்றான்.

எல்லாருக்கும் ஏதோ விசயம் ஓரளவிற்கு விளங்கியது போலிருந்தது. “போவலாம்!” – கிளம்பினார்கள்.

அங்கம்மாவின் நிலை படு மோசமாக இருந்தது, அவளால் நிம்மதியாய் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. பிரச்சனை பூதாகரமாக இருந்தது.

இப்படி ஆகுமென்று இவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. காதும் காதும் வைத்தாற்போல் முடிந்து தனக்கும் தன் மேலிடத்தில் நல்ல பேர், செல்வாக்கு, உயர் பதவி, அதிக சம்பளம் வரும் என்றுதான் எதிர்பார்த்தாள். அது கைக்கு வந்த கண்ணாடி பாத்திரம் நழுவி விழுந்து நொறுங்கி சில்லு சில்லாக ஆனதோடு மட்டுமில்லாமல் தன் கையையும் குத்திக் கிழித்து தலைக்குப் பாக்குப் பிடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது.

மேலிடத்தில் “நாங்க இப்படி செய்யச் சொன்னோமா? இப்படி செய்ஞ்சி பள்ளிக்கூடத்துப் பேரைக் குட்டிச்சுவராக்கியதோட மட்டும் இல்லாமல் அதன் எதிர்காலத்தையே நாசம் ஆக்கிட்டீயே! உனக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?“ கேட்கிறார்கள்.

இதற்காக அவள் பட்டபாடு ?

அதிகாரிகளை மயக்கிய விதம் கொஞ்சமென்றால் மாணவிகளைச் சம்மதிக்க வைத்தது பெரும்பாடு,

பள்ளியில் அழகு அம்சமானவர்களைத் தேடி…

“உங்களைப் பரீட்சை எழுதாமலேயே பாஸ் பண்ண வைக்கிறேன். வர்ற ஆளுங்களெல்லாம் பெரிய அதிகாங்க. அவுங்க சொன்னா எதுவும் நடக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்களைத் தேடி வர்றதா நெனைங்க. மறுத்தா நான் உங்களைச் சும்மா விடமாட்டேன். நீங்க பசங்களோட கொட்டமடிக்கிறதா பெத்தவங்கிட்ட போட்டுக் குடுப்பேன். அடுத்து நீங்க பரீட்சையில காப்பி அடிச்சதா புடிச்சி எதிர்காலத்தை நாசமாக்கிடுவேன்!” என்று அதட்டி உருட்டி பணிய வைத்ததெல்லாம் வீண்.

சாந்தா கர்ப்பமாகி கலைக்க வீட்டிற்குப் போகவில்லையென்றால் விசயம் வெளியே தெரியப் போவதில்லை.

ஏன் போனாள்? எதற்குப் போனாள்? என்று போனவளை மோப்பம் பிடித்து விஜயா வெடிக்க வில்லையென்றால் காரியம் கனகச்சிதம்.

அவளை மடக்க ஒடுக்க “அவள் பைத்தியம். நிர்வாகத்திற்கு எதிரி” என்று கதை கட்டிவிட்டதெல்லாம் விழலுக்கு இரைத்த நீர்.

போன் மணி அடித்தது.

எடுத்தாள்.

“நான் எம்.டி. பேசறேன்!”

“சொல்லுங்க சார்!” – அவளையுமறியாமல் நடுக்கத்துடன் எழுந்தாள்.

“என்ன நடவடிக்கை எடுத்திருக்கே?!”

“….வந்து…..வந்து…”

“நீ போட்ட சிக்கலை நீதான் எடுக்கனும். எனக்கு எம்.பியைத் தெரியும் எம்.எல்.ஏவைத் தெரியும்ன்னு சொன்னதெல்லாம் என்னாச்சு?”

“இ…இன்னும் அவுங்களைப் பார்க்க மு..முடியலை சார்..”

“சீக்கிரம் முடி. இல்லேன்னா நீ காலி!” வைத்தார்.

அங்கம்மாவிற்குத் தொப்பலாக வேர்த்தது. முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

‘எம்.எல்.ஏ ஏகாம்பரம் இருட்டுலதான் பல்லிளிக்கிறான். இப்போ போன்லேயும் புடிக்க முடியலை. நேரடியாவும் பார்க்க முடியலை.’ – நொந்தாள்.

மீண்டும் போன் மணி ஒலித்தது. நடுக்கத்துடன் எடுத்தாள்.

“நான் எம்.எல்.ஏ பி.ஏ பேசறேன் மேடம்!”

“ராமலிங்கமா?”- இவள் முகம் சட்டென்று மலர்ந்தது.

“ஆமாம். மேடம்.”

“எம்.எல்.ஏ ரொம்ப வேலையாய் இருந்ததால உங்க விசயத்தை இப்போதான் கேள்விப்பட்டிருக்காரு. உங்களைப் பார்க்கனும்ன்னு பிரியப்படுறார் மேடம்.”

“எங்கே இருக்கார்?”

உங்களை நேரடியாய் வந்து சந்தித்தால் விசயம் சிக்கலாகும்ன்னு தனியே சந்திக்க விருப்பப்படறார். வழக்கமான இடத்துலேயும் வேணாம்ங்குறார்.”

“எங்கே வந்து சந்திக்கச் சொல்றார்?”

இடத்தைச் சொன்னான்.

அங்கம்மாள் கொஞ்சம் யோசித்தாள்.

“ரொம்ப துாரமாச்சே?” – இழுத்தவள். “சரி. எப்போ வர?” – கேட்டாள்.

“இருட்டினதுக்கப்புறம் புறப்படுங்க மேடம். எம்.எல்.ஏ சம்பந்தப்படுறார்ன்னா கண்டிப்பா அவருக்குக் கெட்டபேர். அதனால யாருக்கும் தெரியாம புறப்படுங்க மேடம்.”

“எப்படி வர?“

“டாக்சி புடிச்சி வந்துடுங்க மேடம் வந்து இறங்கி டாக்சியை அனுப்பிடுங்க. எம்.எல்.ஏ கார்ல வழக்கமா திரும்பிடலாம். சரியா ஒம்பது மணிக்கு வந்திடுங்க. இன்னொரு முக்கியமான விசயம். இடையில போன் வந்தா தொடாதீங்க. யார் கூடயேயும் பேசாதீங்க. சந்திப்பு ரகசியமா இருக்கனும்.” எதிரில் சேகர் திருப்தியாகப் போனை வைத்தான்.

அங்கம்மாவும் வைத்தாள். மனசுக்குள் கொஞ்சம் தெம்பு திடம் வந்தது.

அத்தியாயம்-9

நான்கு பேர்களும் அங்கம்மாவை அப்படியே கோழிக்குஞ்சை அமுக்குவது போல அமுக்கி கொண்டு வந்து கட்டிலில் கிடத்தி இருந்தார்கள்.

அவள் கண்விழிக்கும் போது அறையில் விளக்கு எரிந்தது. கட்டிலைச் சுற்றி சேகர், குணா, பாலு, சிவா அமர்ந்திருந்தார்கள்.

அங்கம்மாள் திடுக்கிட்டு எழுந்து, “நீ…நீங்களெல்லாம் யாரு?” மிரட்சியுடன் கேட்டாள்.

“உண்மையைச் சொல்லனும்ன்னா நாங்க தீவிரவாதிங்க. ஊர் பேர் உனக்குத் தெரியவேணாம் அநாவசியம்!“ என்றான் சேகர்.

“நா….நான் எங்கே இருக்கேன் ?”

“ஏற்காட்டுல ஒரு பங்களாவுல. ஓனர் சென்னையில சொகுசா இருக்கார். உனக்காக நாங்க வாட்ச் மேன்கிட்ட கொஞ்சம் காசைத் தள்ளி வாடகைக்குப் புடிச்சி உன்னைக் கொண்டு வந்திருக்கோம்.”

“எ..என்னை என்ன செய்யப்போறீங்க?”

“இப்போதைக்கு உன்னை எதுவும் செய்யிறதா ஐடியா இல்லே. அந்த அதிகாரிங்க வேணும்!”

“எ…ந்த அதிகாரிங்க?”

“அதான் நீ ஆள் புடிச்சி விட்டியே அவனுங்க.”

“எதுக்கு?”

“விளையாட.”

“எனக்கு அவுங்க விலாசம் போன் நம்பர் தெரியாது.”

“எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் நீ சும்மா டகல் அடிக்க வேணாம். உன்னை நாங்க தொடுறதுக்கு முன்னால நீ யாரு எப்படிப்பட்டவ எம்.எல்.ஏவுக்கும் உனக்கும் என்ன தொடர்பு அந்த அதிகாரிகள்கிட்ட பேரம் பேச எத்தினி தடவை போன் பண்ணி கவுத்தேங்குற எல்லா விபரமும் விசாரிச்சு உன்னை எப்படி கொண்டு வர்றதுன்னு திட்டம் போட்டுத்தான் கொண்டு வந்தோம். உன் கைப்பையில உன் கை போன் இருக்கு புரியலை ? அதான் செல் போன்.! எடுத்து பேசு. ஆபத்து உடனே வாங்கன்னு சொல்லு.” குணா கரகரத்தான்.

“எங்கே வரனும் எப்படி வரனும்ன்னு விளக்கமா சொல்டா….” என்றான் பாலு.

“சொல்றேன். உடனே புறப்பட்டு நாளை மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் அரசு பூ ங்கவுக்கு வந்துட சொல்லு. ஏன் என்னன்னு கேட்டா நம்ப தலைக்கு வந்த ஆபத்தை எம்..எல்.ஏ சரி செய்யுறேன்னு சொல்றார். உங்களைப் பார்க்க விரும்பறார். நேரடியாய் பார்த்துப் பேசனுங்குறார். அலட்சியம் செய்யாம உடனே வந்தாத்தான் தப்பிக்கலாம். மூணு பேரும் சொன்னபடி சரியான மணிக்கு வந்துடுங்க. நான் அங்கே காத்திருந்து அழைச்சுப் போறேன். தவறினா நாம தப்பிக்க முடியாது. கண்டிப்பா ஜெயில் கம்பி எண்ணனும்ன்னு சொல்லு. அலறிஅடிச்சிக்கிட்டு வருவான்ங்க” – என்றான்.

“அங்கம்மாள் வகையாக மாட்டிக்கொண்டோம்!” – புரிந்தாள்.

“என்ன முழிக்கிறே ? நாங்க சொன்னபடி செய்யலைன்னா உன்னைக் கொஞ்சம் கொஞ்சமா சித்ரவரை செய்வோம்.” – சிவா கத்தியை எடுத்தான். அவள் நெஞ்சுக்கு நடுவில் வைத்தான்.

அங்கம்மாவிற்கு நெஞ்ச படபடத்தது அங்கமெல்லாம் ஆடியது. இனி தப்பிக்க முடியாது என்பது அவளுக்குத் தெளிவாக தெரிந்தது. வேர்த்து ஊத்த தன் கைப்பையிலிருந்து கை போனை நடுக்கத்துடன் எடுத்தாள். முதலில் ஜானகிராமன் எண்களை அழுத்தினாள்.

“என்னம்மா?”

“ஆ….ஆபத்து சார்!” கழுத்தில் கத்தி நிரட…. அவரிடம் சேகர் சொன்னதை அப்படியே ஒப்புவித்தாள்.

“மத்தவங்களுக்கும் சேதி சொல்லிடு நாங்க காரை எடுத்துக்கிட்டு நீ சொன்ன நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே வர்றோம்.” சொல்லி போனை வைத்தார். அவருக்கும் உதறியது.

அங்கம்மாள் அடுத்தடுத்து ராஜாராமன் சீதாராமனுக்கும் போன் செய்து ஒப்புவித்தாள். முடித்து கை போனை கீழே வைத்தாள். அடுத்து என்ன என்பதைப் போல் பார்த்தாள்.

“உன் பள்ளிக்கூடத்துல வாட்ச்மேன் இருக்கானா?” – சிவா கேட்டான்.

“இருக்கான்.!”

“போன் போட்டு நாலு நாள் விடுப்பு சொல்லு. அங்கே அநாவசியமாத் தேடி கலவரத்தை உண்டு பண்ணிடப் போறாங்க.” – என்றான்.

“எவ்வளவு முன் யோசனை?!”- பேசினாள்.

“ரொம்ப நன்றி. இப்போதைக்கு நீ நிம்மதியா துாங்கு. இந்தா தூக்க மாத்திரை.”- பாலு இரண்டு மாத்திரைகளை நீட்டினான்.

தயங்கினாள்.

“எதுக்குத் துாக்க மாத்திரைன்னு யோசிக்கிறீயா? நீ நிம்மதியாத் துாங்கினாத்தான் நாங்க கொஞ்சம் இப்படி அப்படி இருக்க முடியும். போட்டுக்கிட்டு துாங்கு. மத்ததை நாளைக்குப் பார்த்துக்கலாம். தப்பிக்க மட்டும் நெனைக்க வேணாம். மாட்டிக்குவே. உசுரு போயிடும்”. – பாலு கைத்துப்பாக்கியைக் காட்டினான். அங்கம்மாள் வாங்கினாள்.

“எங்க எதிர்க்கயே முழுங்கு”. – சிவா அறை மூலையிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து நீட்டினான்.

அவள் மறுப்பில்லாமல் தாளை உரித்து மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தாள்.

நால்வரும் நிம்மதியாய் அறையைவிட்டு வெளியேறி பூட்டினார்கள்.

– தொடரும்…

– பாக்யா வார இதழில் வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *