தொட்டால் தொலைவாய்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 9,586 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

குணா, பாலு, சேகர், சிவா கண்விழிக்கும்போது சூரியன் ஏழு மணிக்கு வந்திருந்தான். ஆளாளுக்கு எழுந்து பல் விளக்கி, முகம் கழுவி தங்கள் காலைக் கடன்களை முடித்தார்கள்.

“ராத்திரி தப்பு செய்ஞ்ச கால் கட்டைவிரல்கள் ரெண்டையும் வெட்டிப்போட்டு வந்தோமே. அந்த வாத்தி ரத்தப் போக்கு அதிகமாப் போய் அங்கேயே மயங்கி விழுந்து செத்திருப்பானா இல்லே உசுரைக் கையில புடிச்சிக்கிட்டு தப்பிச்சுப் போயிருப்பானா?” சேகர் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“ரெண்டும் நடந்திருக்கலாம்!” – பாலு பதில் சொன்னான்.

“தப்பிச்சுப் போனா நம்மை காட்டிக்குடுப்பானா?“

“குடுக்கலாம்.”

“போலீஸ் நம்மை துரத்தும்.”

“நம்ம செய்ஞ்ச கொலை கொள்ளைக்குத் தினம்தான் தேடுறாங்க. தேடிக்கிட்டே இருக்காங்க. தேடட்டும்!” என்ற சிவா, நாம அடுத்த வேளையைப் பார்ப்போம் சொல்லி டென்ட்டைப் பிரிக்க ஆரம்பித்தான்.


அம்மணப் பேட்டை கிராமத்தில் கோதண்டம் நல்ல மிராசு. வயசு எழுபது. அவருக்கு மனைவி இல்லை. அவள் இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆள்… மகன், மருமகளுடன் வாழ்கிறார். அவருக்குப் பெண் பிள்ளைகளென்றால் கொள்ளை ஆசை. ரெண்டு வயசுக்கு மேல் என்றால் ரொம்ப பிரியம்.

“வாடி என் பேத்தி!” மடியில் துாக்கி வைத்து கொஞ்சுவார்.

“தாத்தாவுக்கு முத்தம் குடு!” – கன்னத்தைக் காண்பிப்பார். குழந்தை உதடு குவித்து முத்தம் கொடுத்தால் இவரும் அதற்குத் திருப்பிக் கொடுப்பார்.

பேச ஆரம்பிக்கும் பிள்ளைகளிடம். அதன் காதைப் பிடித்து, “இது காது. இது கன்னம். இது உதடு” ஒவ்வொன்றாக தொட்டுக் காட்டி சொல்லிக் கொடுப்பார்.

பேசும் பிள்ளைகளென்றால், “இது என்னடி?” என்று கூச்சப்படாமல் அந்த இடத்தை தொட்டுக் கேட்டு மிரளவைப்பார். வெட்கப்படவைப்பார். ஐந்து வயது பிள்ளைகளென்றால், “வா என் மடியில உட்காரு” அமர்த்திக் கொள்வார்.

எட்டு வயசுக்கு மேல், “என்னைக் கட்டிக்கிறீயா?” கிண்டலடிப்பார். வாய்ப்புக் கிடைத்தால் அன்பாய் ஆசையாய் அணைப்பார் முதுகைத் தடவுவார் தலையை வருடுவார் முன் பக்கமும் கை செல்லும். அசந்தால் பாவாடை மேலும் கை செல்லும்.

இவரிடம் மாட்டி அல்லல் பட்ட குழந்தைகள், வாடி என் பேத்தி! என்று அவர் அழைத்தாலே ஓடுவார்கள். இவரின் வக்கிரம் தெரியாத பெற்றவர்கள் மற்றவர்கள், “கிழவருக்குப் பேத்தி இல்லாத குறை ஆசையாய்க் கூப்பிட்டால் இப்புடி தலைதெரிக்க ஓடுதுங்களே…கூறுகெட்டதுகள்!” திட்டுவார்கள்.

குழந்தைகளுக்கு அவர் செய்கையைச் சொல்ல முடியாது. சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

இதனால் இவருக்குப் பாதிப்பு ஏற்படாமலுமில்லை. ஒரு நாள் ஏற்பட்டது.

வயல்வெளியில் வரும்போது, “என்னடி இது?” என்று இவர் எதிரே வந்த பத்துவயசு பெண்ணின் முன் பக்கம் கை வைக்க அவள் போய் தன் அப்பாவிடம் சொல்ல….அவர் உடனே வந்து தோப்பில் இவரைப் போட்டு பின்னியது ஊருக்குத் தெரியாத ரகசியம்.

ஆள் அந்த சவுட்டலுக்குப் பிறகும் அடங்கவில்லை.

மனைவி போன ஏக்கம். வயது ஏறிப் போக மனம் மட்டும் இளமையாய் இருக்கும் தாக்கம். வயது ஒரு போர்வை மேலும் எந்த குழந்தையும் இவர் செய்கையை வெளியில் சொல்லாது என்கின்ற நினைவு, துணிவு.

இவரால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தாத்தா தன்னை ஏன் இப்படி செய்தார் என்று தெரியாமலேயே போயிருக்கிறார்கள். குமுதினி இன்று வாழாவெட்டியாய் இருக்கிறாளென்றால் அவளையறியாமலேயே இவர் அதற்கு காரணம்.

பத்து வருடங்களுக்கு முன் அவளுக்குப் பன்னிரண்டு வயது. யாருமில்லாத சமயத்தில் இவர் வீட்டுக்கு வந்த அவளிடம் அன்பு ஆசையாய்ப் பேசி முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முயற்சிக்க… அவள் அன்று மிரண்டவள்தான் ஆணென்றாலே அச்சம் பயம் அளவுக்குப் போய்… திருமணம் முடித்ததும் முதலிரவில் கணவனை உதறித் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டாள். என்ன சமாதானம் சொல்லியும் கேட்காமல் தாலியே வேண்டாமென்று கழற்றி விட்டெறிந்து விட்டாள்.

நான்கு குழந்தை பெற்று நளாயினி இன்று நன்றாக இருந்தாலும் அவள் ஊருக்கு வரும்போது இவரைக் கண்டால் எரிச்சல் வரும். சின்ன வயசில் அவளிடமும் இவர் முறை தவறி நடக்க முற்பட்ட விளைவு.

கிழவருக்கு இன்று பொல்லாத நேரம் போல.

கிராமத்திற்கு ஒதுக்குப் புறமான மலையடிவார மரமொன்றில் சிறு வயது பொண்ணொருத்தி தொங்கினாள். வயசு 11. பாவாடை சட்டையில இருந்தாள். அவள் அம்மா கட்டிய புடவை அவள் கழுத்தில் துாக்குக் கயிறாக இறுக்கி இருந்தது.

மாடு மேய்க்கும் சிறுவன்தான் முதலில் கவனித்தான்.

“ஐயோ ! யாரோ துாக்குப் போட்டுத் தொங்கறாங்க” – ஊருக்குள் ஓடி வந்து பயமும் பதற்றமுமாகக் கொட்டினான். வயல்காடு மற்ற இடங்கள் என்று வேலைக்குப் போனவர்களைத் தவிர வீட்டுக்குள் இருந்த மற்ற ஆண் பெண் குழந்தை குட்டிகள் உட்பட அனைவரும் சிறுவனைத் தொடர்ந்து ஓடினார்கள்.

“ஐயோ! என் பொண்ணு போய்ட்டாளே!” – பிணத்தைப் பார்த்த மாரியாயி கதறி தரையில் உருண்டு புரண்டாள்.

“பெரியய்யா இம்சை தாங்க முடியலைன்னு தினம் சொல்லி அழுவா. நான்தான் வறுமை, வயித்துக் கொடுமை அய்யா அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாரு. நீ தப்பா எடுத்துக்கிறேன்னு சொல்லி அனுப்புவேன். இன்னைக்கு ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்துட்டா. நான் என்ன பண்ணுவேன். பெத்த ஒன்னே ஒன்னை இப்படி பறி குடுத்துட்டு நிக்கிறேனே என் தலையில இடி விழாதா?..” என்று தலையில் மடேர் மடேர் என்று அடித்துக் கொண்டு சாய்ந்தாள்.

கோதண்டத்தைப் பற்றி தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் உறைந்தார்கள்.

“சரி சரி கூவாத. அறுத்துப் போட்டு கமுக்கமா அடக்கம் செய்வோம். போலீஸ் காதுல விழுந்தா பொணத்தை எடுத்துப் போய் கூறு போட்டு குடுப்பான். உன் ஒரே பொண் கந்தலாப் போக வேணாம். ஊருக்குப் போயிருக்கும் அவர் மகன், மருமகள் வரட்டும் இதுக்கு ஒரு நியாயம் கேட்போம்!” – மாரியாயியைச் சமாதானம் செய்தார் ஒருவர்.

அவளுக்கும் மகளை அறுத்துப் பார்க்க மனமில்லை. கத்தல் கதறல்களை அடக்கினாள்.


கோதண்டத்தைக் கடத்தி வருவது அப்படியொன்றும் பெரிய காரியமாகப் படவில்லை பாலுவிற்கு. ஊரெல்லாம் அடங்கி பத்து மணிக்கு மேல் யாருக்கும் தெரியாமல் போய் அவர் வீட்டுக் கதவைத் தட்டினான். பொழுதுக்கும் எங்கோ போய் பதுங்கி இருந்துவிட்டு இருட்டியதும் வீட்டிற்குள் வந்து அடைந்து கிடந்த அவர் மகன் மருமகள் வந்துவிட்டார்கள் என்கிற நினைப்பில் கதவை மெல்ல திறந்தார். பாலு திறந்த கதவிடுக்கில் தன் கைத்துப்பாக்கியை நீட்டினான். அவர் உறைய….. உள்ளே நுழைந்தான்.

“சத்தம் போடாம என் பின்னால வரனும். மீறி நடந்தா உன் உடல்ல உயிர் இருக்காது!” – எச்சரித்தான்.

கிழவருக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. ‘வீட்டைப் பூட்டு சாவியை நிலை மேல வை. என் பின்னால நாய் போல வரனும்.” – உத்தவிட்டான்.

வாயைத்திறக்காமல் அவன் சொன்னபடியே செய்தார். பாலு அரைமணி நேரத்தில் அவரைத் தங்கள் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்துவிட்டான். காட்டிற்குள் புகுந்து மலையேறியதிலேயே பாதி உயிர் போய்விட்டது அவருக்கு.

குணா சிவா சேகர் இவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இவர்கள் தலை தெரிந்ததும் சின்ன டார்ச் வெளிச்சம் அடித்து “வாங்க மிராசு!”- சிவா எகத்தாளமாக வரவேற்றான்.

“நீ…நீங்கள்லாம் யா…ரு?”

“அது உங்களுக்கு தேவையில்லாத விசயம். மகனும் மருமகளும் ஊருக்குப் போயிருக்கிற தைரியம் வீட்டுக்கு வந்த வேலைக்காரக் குட்டியை என்ன செய்ஞ்சே?“ சேகர் விரைப்பாக கேட்டான்.

“நா…நான்..ஒன்னும் செய்யலை.”

“ஒரு அறைவிட்டா பல்லு பேர்ந்துடும். ஒழுங்கு முறையா உண்மையைச் சொன்னா உன் உடம்புல சேதமில்லாம உயிர் போகும்!”

“வந்து.. வந்து…”

“தடுமாறாத. வழக்கமா தடவுனீயா வேற ஏதாவது செய்தியா?”

வேர்த்தார்.

“பாவாடையெல்லாம் ரத்தக் கறையா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க”.

நடுங்கினார்.

“உனக்கு ரொம்ப லொல்லு ஜொள்ளு ஜாஸ்தி. என் விருப்பம் என்னன்னா உன் உயிரை எடுக்கனும்ங்குறது. ஆனா என் நண்பர்கள் விருப்பம் பாவம் வயசானவர் கைதான் அதிகமா விளையாடியிருக்கு அதை எடுத்து விட்டா போதும்ன்னு பரிதாபப் படுறாங்க. எனக்கும் நீ பொழைச்சுப் போவட்டுமன்னு அனுதாபம் வந்துடுச்சி. சிவா! உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா” சொல்லி ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.

அவன் பாறை இடுக்கிலிருந்த திருப்பாச்சி வீச்சரிவாளை எடுத்தான். மற்றவர்கள் கோதண்டத்தைச் சுழ்ந்து இறுக்கிப் பிடித்தார்கள். அவர் கைகளைச் சேர்த்து பாறைமீது வைக்கப்பட்டிருந்த ஒரு மரக் கட்டை மீது வைத்தார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள் இறங்கி மணிக்கட்டுகளில் இறங்கி கை மொக்கையானது. கோதண்டம் கத்தக்கூட திராணியின்றி மயங்கி சாய்ந்தார்.


அதிக ரத்தப் போக்கு. மறுநாள் காலை அவர் உடல் மலையடிவாரத்தில் பிணமாக கிடந்தது.

‘சிறு பெண்ணைத் தொட்டதற்குக் கூலி!‘ எழுதி அவர் நெற்றியில் ஒட்டியிருந்தது.

ஊரே கூடி உறைந்தது.

‘போலீஸ் கண்ணுல பட்டா தோண்டித் துருவுமே! தற்கொலை மறைப்பு சட்டப்படி குத்தமாச்சே!’ கலங்கினார்கள்.

‘இதையும் யாருக்கும் தெரிவிக்காம புதைச்சுடலாம்!‘ – கூடிக் கூடி பேசி முடிவெடுத்தார்கள். ஆனால் இவர்கள் எதிர்பாராத விதமாக போலீஸ் ஜீப் வந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் மிடுக்காக இறங்கினார். பிணத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்.

5

“சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் எப்படி பாலு?”- சேகர் ரொம்ப யோசனையுடன் கேட்டான்.

“ஏன் கேட்குறே?”

“ஆள் துடிப்பா இருக்கிறாப் போல தோணுது. நம்மைத் தொட்டுடுவாரா?”

“நாலு வருசமா எத்தினியோ போலீஸ்காரங்களைப் பார்த்தாச்சு. இவர் தூசு.”

“கிட்டத்தட்ட அரசாங்கம் நம்மை மறந்துடுச்சு” – சிவா இடையில் வந்தான்.

“அப்படி அலட்சியமா நெனைக்கக்கூடாது. போலீஸ் கண் எப்போதும் நம்ம மேல இருக்கும் வசமா மாட்டும்போதுதான் பாய்ஞ்சி பிடிக்கும்.. அதனால நமக்கு அலட்சியம் கூடாது. எப்பவும் நாம எச்சரிக்கையாய் இருக்கனும்.” குணா சொன்னான்.

“நாம என்னைக்கும் எச்சரிக்கைதான்!” என்று சொன்ன சிவா “ஒரு சின்ன விசயம்……” இழுத்தான்.

“சொல்லு?” சேகர் பார்த்தான்

“அக்காவைக் கட்டினவனெல்லாம் தங்கச்சியை இலவசமா நெனைக்கிறாங்கன்னு நாம ஆரம்பத்திலேயே பேசினோம்.”

“ஆமாம்”.

“எப்படியும் கவுத்துடலாம்ன்னு கங்கனம் கட்டிக்கிட்டு அலையுறானுங்க”.

மற்றவர்கள் உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தார்கள்.

“எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆள். பேர் ராகவன். வயசு 28. கலியாணமாகி மனைவி பொறந்த வீட்டுக்குத் தலை பிரவசத்துக்கு வந்திருக்கா. இவன் மாமியார் வீட்டுக்கு வந்தா மட்டம். பத்து வயசு கொழுந்தியா மேலேயேக் கண்ணா இருக்கான். என்னடி ! ஆள் வந்தா கவனிக்க மாட்டேங்குறே ?ன்னு மனைவி மாமியார் எவர் இருந்தாலும் விளையாட்டாய்ப் பேசி வலிய வம்புக்குப் போறான். வீட்டுல யாருமில்லா சமயத்துல அவகிட்ட கெட்ட கெட்டப் பேச்சு பேசறான். அவள் விலகி விலகிப் போனாலும் இழுத்து அணைக்கிறான். அவளுக்கு அக்கா மேல பாசம். இதைச் சாக்காய் வைச்சு நான் உன்கிட்ட நடந்துக்கிறதைப் பத்தி வெளியில சொன்னே…உன் அக்காவை அடிச்ச வீட்டைவிட்டுத் துரத்தி என்கூட வாழ விடாம செய்வேன்னு மிரட்டி ரொம்ப சில்மிசம் பண்றான். வயசுக்கு வந்தா நீ என்னைத்தான்டி கலியாணம் பண்ணிக்கனும்ன்னு மிரட்டுறான். இவனால அந்தப் பொண்ணுக்குத் தினம் சித்ரவதை. பாவம் கசங்கி நொந்து நுாலாகிப் போறா.” – முடித்தான். “ஆள் பக்கத்துல இருந்தா போட்டுடுவோம்!” பாலு ரொம்ப சுலபமாய்ச் சொன்னான். அவன் எப்போதுமே காரியத்தைக் கச்சிதமாய் முடிக்கும் திறமைசாலி.

சிவா தொடர்ந்தான். “இந்த அநியாயம் இந்த ஒரு இடத்துல மட்டும் நடக்கலை. நாட்டுல பரவலா எல்லா இடத்திலேயும் நடக்குது. அக்கா புள்ளைப்பேருக்குன்னு உதவிக்கு அழைச்சி மச்சினிச்சி மேல கை வைக்கிறவன் நிறைய பேர். இருக்கான். இவுங்க ஒட்டுமொத்தப் பேருக்கும் பயம் வர்றாப் போல நாம ஏதாவது செய்யனும்..”

“ஆளைச் சாகடிச்சு. இதுக்காகத்தான் இவன் செத்தான்னு அடையாளம் வைக்கனும்.”

“கேட்க நல்லா இருக்கு. ஆனா செய்கையில முடியுமா?”

“ஏன் முடியாது ? கோதண்டம் ? கோதண்டம் நெத்தியில எழுதி ஒட்டியிருக்கோம். கொலைக்காரர்கள் கோரத்தாண்டவம்ன்னு அது அடுத்த நாள் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாய் வெளியாகி இருக்கு. விளம்பரங்களிலும் வெளியாகி இருக்கு.” ‘ஆக நமக்கு சுந்தரம் சேதி வெளியாகலை. அவன் இருக்கானா இல்லையான்னு தெரியலை. கோதண்டம் சேதி வெளியாகி இருக்கு. இப்படி ஒரு காரியம் நடத்துறோம்ன்னு கசியுது.”

“ஆமாம். அப்புடியே போலீசும் துப்பு துலங்குது” என்றான் பாலு.

“துப்பு துலங்கட்டும். நமக்குக் காடு வீடாய் இருக்கிறவரை யாரும் புடிக்க முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்த சிவா, செத்தவன் நெத்தியில என்ன எழுதி ஒட்ட நமக்கு நிரந்தரமா ஒரு வாசகம் வேணும்?”- விசயத்திற்கு வந்தான்.

கொஞ்ச நேரம் யோசித்த குணா, “தொட்டால் தொலைவாய்! எழுதலாம்?” என்றான்.

‘வைக்கலாம்!‘ எல்லாரும் வாயால் சொல்லி ஏக மனதாக ஒப்புதல் அளித்தார்கள்.


அந்த வீடு பெரிய தோட்டத்தின் நடுவில் இருந்தது. வந்தவர்கள் மறைந்து கொள்ள வசதியாய் இருந்தது.

ராகவனும் மனைவியும் வெளி வராந்தாவில் அமர்ந்திருந்தார்கள். உள்ளே மாமியார் வேளையாய் இருந்தாள்.

“சிவகாமி ! சிவகாமி !”

அவன் குரல் கொடுத்தான்.

அறைக்குள் படித்துக் கொண்டிருந்த அவளுக்குக் கேட்கவில்லை. அவன் அநாவசியமாக அழைத்து தொல்லை கொடுப்பான் என்று கேட்டும் கேளாது போல இருந்தாள்.

மறுபடியும், “சிவகாமி ! சிவகாமி!..” அழைத்தான்.

தாய்க்காரிக்கு இந்த அலட்சியம் பொறுக்கவில்லை. வேலையை விட்டுவிட்டு அறை வாசலுக்கு வந்தாள்.

“ஏன்டி மாமா கூப்பிடுறது காதுல விழலை?” – காய்ந்தாள்.

“விழலைம்மா.”

“பொய்! போய் என்னன்னு கேளு”

“படிக்கிறேன்ம்மா.”

“பொல்லாத படிப்பு. என்னன்னு கேட்டுட்டு வந்து படி.”

தாய்க் கட்டளைக்குப் பெண் அடங்க வேண்டும். அடங்கினாள். புத்தகத்தைப் பொத்தென்று வைத்துவிட்டு வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றாள்.

அக்காள் மனோகரி வயிறு இன்றோ நாளையோ என்றிருக்க கணவனை ஒட்டி அமர்ந்திருந்தாள்.

மச்சினிச்சி உம்மென்று வந்தது ராகவனுக்குப் பிடிக்கவில்லை.

“எப்புடி முகத்தை வைச்சிக்கிட்டு வர்றா பார்!” மனைவியிடம் போட்டுக் கொடுத்தான்.

“ஏன்டி இப்படி வர்றே?”- அவள் தங்கையை முறைத்தாள்.

“அக்கா இவன் பொறுக்கி,.பொல்லாதவன். நீ இல்லாத சமயத்துல என்னடி இதுன்னு என் நெஞ்சைத் தொடுவான்” – சிவகாமியால் சொல்ல முடியவில்லை. அவளுக்குக் கணவன் கண் கண்ட தெய்வம்.

“ஒன்னுமில்லே. என்ன மாமா?”

“ஒரு டம்ளர் தண்ணி வேணும்!”

உப்பு பொறாத காரியம். ஆண் அதிலும் வீட்டிற்கு மாப்பிள்ளை என்றால் பெரிய கொம்பு நினைப்பு. மனைவியை உடன் வைத்துக் கொண்டு வெட்டி அதிகாரமெல்லாம் செய்வார்கள். அவளும் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கும் கணவன் கட்டளைக்குத் தான் மட்டும் அடிமையாய் இருப்பது போதாது வீடும் அடிமைப்பட்டு நடக்க வேண்டும் என்கிற எண்ணம். கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொண்டால் என் புருசனை மதிக்கலை. எனக்கும் இந்த வீட்டுல வேலை இல்லே!- கிளம்பி விடுவார்கள்.

தான்தான் கட்டிய கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும். வீடும் ஏன் கட்டுப்பட வேண்டும். வரதட்சணை சீர்வரிசையெல்லாம் கொடுத்து வாழ வழி செய்து கொடுத்த தன் வீடு பெரிது என்று அவர்கள் மாமா மாமி வீடு வந்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி நடக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. ஏன் யோசித்தது கூட இல்லை. மாமியார் வீடு தான் அடக்க ஒடுக்கமாக நடக்க வேண்டுமென்று இவர்களும் நினைத்தது கிடையாது. நினைத்த சிவகாமி மனதில் வெறுப்பு வைத்து திரும்பினாள்.

“எப்படி தளதளன்னு இருக்கா பாரு!” – ராகவன் சிவகாமியின் பின் பக்கத்தைப் பார்த்து மனைவியைச் சீண்டினான்.

“சும்மா இருங்க அவள் காதுல விழுந்துதுன்னா கோபப்படுவா” – அவளுக்குக் கணவன் வக்கிரம் தெரியவில்லை.

சிவகாமி டம்ளர் தண்ணீருடன் திரும்பினாள்.

ராகவன் கை தொட்டு வாங்கினான்.

அவள் அறையில் வந்து மீண்டும் படித்தாள். ‘இவனை என்ன செய்தால் தகும்?’ என்று மனம் எரிந்ததே தவிர படிப்பு ஏறவில்லை.

தாயிடமும் தமக்கையிடமும் சொல்ல முடியாததை தனியிடம் பார்த்துதான் அழவேண்டும்! – நினைப்பில் எழுந்து கொல்லைக்குச் சென்றாள்.

இருட்டுக்குள் நுழைந்து மரத்தடியில் அமர்ந்ததும் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குத்த வைத்த கால்களுக்கிடையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அழுதாள். எவ்வளவு நேரம் அப்படி அழுதாளோ…. திருட்டுப் பூனையாய் ராகவன் வந்தான்.

நிமிர்ந்தவள் ஆளைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். ‘என்ன செய்யப் போகிறானோ?!’ – கலவரமானாள்.

இவன் திட்டமிட்டுத்தான் வந்திருந்தான். சடக்கென்று அவள் அருகில் அமர்ந்து அணைத்தான்.

‘ஐயோ!” – அலறினாள்.

“உஸ்ஸ்… சத்தம் போட்டே கொன்னுடுவேன்!” – கிசுகிசுத்து இறுக்கினான். கைகளைக் கன்னா பின்னாவென்று கொண்டு சென்றான். உணர்ச்சி வேகத்தில் அழுத்திப் பிடித்தான்.

“ஆ! வலிக்குது!” -முணகியவள் வாயைப் பொத்தினான்.

சடக்கென்று கொல்லை விளக்கு எரிந்தது.

வெளியே சென்ற பெண்ணை இன்னும் காணோமே! என்கிற நினைப்பில் “சிவகாமி ! சிவகாமி!“ – தாய் குரல் கொடுத்தாள்.

ராகவன் இதை எதிர்பார்க்கவில்லை. சிவகாமி சடக்கென்று உதறி எழுந்தாள்.

“இதோ வர்றேன்ம்மா!” -கலைந்த பாவாடை சட்டையை சரி செய்து நடந்தாள்.

“இருட்டுல என்ன செய்ஞ்சே?!“

“உள்ளே இறுக்கமா இருந்துது. காத்து வாங்கலாம்ன்னு வந்தேன்!”

“வயசுக்கு வர்ற பொண்ணு இருட்டுல அப்படியெல்லாம் கன்னாபின்னான்னு நிக்கக்கூடாது. காத்து கறுப்பு அடிக்கும். உள்ளே போ.” – அவள் எந்த பேய் அடிக்கிறது என்று தெரியாமல் விரட்டினாள்.

சிவகாமி உள்ளுக்குள் நடந்தாள். தாயும் கதவைச் சாத்தி தாழ் போட்டு கொல்லை விளக்கை அணைத்தாள்.

சிறிது நேரத்தில் மனோகரிக்குக் கணவனைக் காணாதது கவலையைத் தந்தது.

“மாமா எங்கேடி?” அறைக்கு வந்து தங்கையைக் கேட்டாள்.

“தெரியலை!“

“என்னை வாசல்ல இருக்க விட்டுட்டு கொல்லைப் பக்கம்தானே வந்தார்!”

“எனக்குத் தெரியாது!”

“ஏம்மா! மாப்பிள்ளை கொல்லைக்காப் போனார் ?! நான் தெரியாம கதவை அடைச்சுட்டேனே!” தாய் திடுக்கிட்டு வந்து விளக்கைப் போட்டு கொல்லைக் கதவைத் திறந்தாள்.

விளக்கு வெளிச்சத்தைத் தாண்டி கண்ணுக்குத் தெரிகிறவரை இருட்டு “மாப்ளே! மாப்ளே!” குரல் கொடுத்தாள். பதிலில்லை.

அதற்குள் மனோகரி டார்ச் எடுத்துக் கொண்டு பின்னால் வந்தாள்.

தாயும் மகளும் கொல்லையில் இறங்கி டார்ச் அடித்து நடந்தார்கள்.

மரத்தடியில் ராகவன் வயிற்றில் இரத்தம் வடிய பிணமாக சாய்ந்திருந்தான். ‘தொட்டால் தொலைவாய்!‘ தாளில் போனாவால் எழுதி அவன் நெற்றியில் ஒட்டியிருந்தது

அத்தியாயம்-6

மறுநாளுக்கு மறுநாள்.

தொட்டால் தொலைவாய் – பயங்கரம்!

விழுப்புரத்தை அடுத்த விசாலகுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன். வயது 28. இவர் சேலத்தை அடுத்து சின்னமனுார் கிராமத்தில் தலை பிரசவத்திற்கு வந்திருக்கும் தன் மனைவியைப் பார்க்கச் சென்றிருந்தார். நேற்று இரவு ஒன்பது மணியளவில் அவர் மாமியார் வீட்டுத் தோட்டத்தில் பிணமாக கிடந்தார். பிணத்தைச் சுற்றியுள்ள காலடித் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது நான்கு பேர் கொண்ட கொலைக் கும்பல் ஒன்று இவரைக் கத்தியால் குத்திக் கொன்றிருக்கலாமென்று போலீஸ் – சந்தேகிக்கின்றது. கொலையாளிகள் பிணத்தின் நெற்றியில் தொட்டால் தொலைவாய் ! என்று எழுதி ஒட்டி இருக்கிறார்கள். மச்சினியாய் இருந்தாலும் மற்றவளை மனதாலும் நினையாதே ! என்றும் தரையில் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் 12 வயது மச்சினி மீது மையல் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கொலையாளிகள் குழந்தைகள் மீது அக்கரை, அனுதாபம் கொண்டவர்களாக தெரிகிறது. போலீசார் பிணத்தைக் கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

காலை ஏழு மணி சுமாருக்கு பத்துப் பதினைந்து பேர்களுக்கு மேல் கூடி டீ குடித்துக் கொண்டிருக்கும் டீக்கடையில்…தினத்தந்தியில் வந்த செய்தியை முழுதும் படித்த கங்காதரனுக்கு மூச்சு முட்டியது.

“வேணும் பயலுக்கு!” – முணகினார்.

“என்னண்ணே?” – அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த பாலசுப்ரமணியன் அவரைக் கேட்டான்.

“எல்லாம் உன் சமாச்சாரம்தான். கொழுந்தியாள்கிட்ட ரொம்ப விளையாடாதீங்க. வெட்டிப்புடுவாங்க. படி.!” தினசரியை அவனிடம் கொடுத்தார்.

படித்த அவனுக்கு முகம் வெளிறியது.

“என்ன! பசங்கிட்ட உன்னைப்பத்தி போட்டுக் குடுத்துடட்டுமா?” கண்ணடித்து எகத்தாளமாகக் கேட்டார்.

அவன் பதறி சடக்கென்று அவர் கையைப் பிடித்து, “வேணாம்ண்ணே!“ கெஞ்சினான்.

“இந்த பயம்தான் வேணும். ஒரு சேலை எடுத்தா இன்னொரு சேலை இலவசம் கதையாய் அக்காளைக் கட்டிக்கிட்டா தங்கச்சி மேலேயும் கண் வைக்கிறீங்க. இந்த மாதிரி பசங்க இருந்தாத்தான் நீங்களெல்லாம் அடங்குவீங்க. போட்டுத் தள்ளட்டும்!”- எழுந்து நடையைக் கட்டினார்.

பாலசுப்ரமணியன் அப்படியே விதிர்விதிர்த்துப் போனான்.

“அண்ணே என்ன அப்படி சொல்லிட்டுப் போறாரு?” என்றவாறு அவன் மடியில் கிடந்த தினசரியை அடுத்தவர் எடுத்தார்.


தங்களது இருப்பிடத்தில்….

“பாவம். அந்த சின்ன பொண்ணுக்கு நாம் கொஞ்சம் கஷ்டம் குடுத்துட்டோம் !“ சேகர் வருத்தப் பட்டான்.

எதிரில் அமர்ந்திருந்த குணாவிற்கும் சங்டமாகத்தானிருந்தது.

“ஆமாம். அவளுக்கும் கொலையாளிக்கும் தொடர்புன்னு போலீஸ் சிவகாமியைப் புடிச்சிப் போய் ரெண்டு அறைவிட்டு கஷ்டம் குடுத்தது எனக்கும் கஷ்டமாய்ப் போச்சு” – வருத்தப்பட்டான்.

“ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் விசயாளி. நமக்கும் சிவகாமிக்கும் தொடர்பில்லைன்னு புரிஞ்சு அவளை விட்டுட்டார்.” – என்றான் பாலு. “ரொம்ப கஷ்டம் குடுத்திருந்தார்ன்னா நான்கூட போலீஸ் ஸ்டேசனைக் குண்டு வைச்சு தகர்த்துடலாம்ன்னு நெனைச்சேன்!” சிவா தன் மனதில் உள்ளதைச் சொன்னான்.

“யாருக்கும் எந்த பாதிப்பும் வராம நாம எல்லாத்தையும் யோசிச்சு செய்ய முடியாது. மொதல்ல நாம மாட்டிக்காம இருக்கிறதுக்கு வழி. அப்புறம் நம்ப குறி. இதுல எதிர்பாராத விதமா சிலருக்குக் கஷ்டம் ஏற்படலாம். தவிர்க்க முடியாது” என்ற சேகர் “இப்போ தினசரிகள்ல சேதி விலாவாரியா வெளி வந்ததுனால சின்ன பெண் குழந்தைங்க கிட்ட விஷமம் செய்தால் கொலைங்குற பயம் மக்கள் மனசுல லேசா பதிஞ்சிருக்கு, பதிய ஆரம்பிச்சிருக்கு.” – என்றான்.

“நாம இன்னும் நாலைஞ்சு பேரை போட்டுத் தள்ளினா மக்கள் மனசுல இன்னும் அதிக பயம் வரும். குழந்தைங்களை தொட நினைச்சாலே நடுங்குவாங்க “ என்றான் சிவா.

“அடுத்த அயிட்டம் கை வசம் தயாராய் இருக்கு” என்றான் பாலு. ‘என்னப்பா சொல்றே ?!” குணா கேட்க எல்லோரும் துணுக்குற்றுப்பார்த்தார்கள்.

“ஆமாம். பந்தியூ ர் பள்ளிக்கூடத்துல அநியாயம் நடந்திருக்கு!”

“பள்ளிக்கூடத்திலேயா?” சிவா அதிர்ச்சியடைந்தான்.

“நேத்திக்கு நான் கீழே போய் ஊருக்குள்ள நோட்டம் விட்டு வரும்போது ஒரு வாரப் பத்திரிக்கையில படிச்சேன்.”

“என்ன படிச்சே ?”

“நாலு வாத்தியாருங்க. பத்துப் பதினைஞ்சு பொண்ணுங்களைக் கெடுத்திருக்காங்க.”

“விபரம் சொல்?”

“பிளஸ் -1 பிளஸ்-2 படிக்கிற பொண்ணுங்க. நாங்க உங்களைப் பாஸ் பண்ண வைச்சிடுறோம். வெளியில சொல்லக் கூடாதுன்னு மிரட்டி பள்ளிக்கூடம் விட்டதும் ஸ்பெஷல் கிளாஸ் அது இதுன்னு இறுத்தி சோதனைக்கூடத்துல உல்லாசமா இருந்திருக்கானுங்க. அதுல ரெண்டு பொண்ணுங்க கர்ப்பம் ஆகிடுச்சு. விபரம் தெரியாத அதுங்க பயந்து போய் அரசாங்க பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய் ஓ.பி.டில எங்களுக்கு வயித்து வலின்னு சொல்லி மாத்திரைக் கேட்டிருக்குங்க. சோதனை செய்ஞ்சு பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி. அதுங்க கிட்ட விபரம் சொல்லாம நீங்க எந்த ஊர் எந்த பள்ளிக்கூடம்ன்னு விசாரிச்சிருக்கார். ஏதோ வில்லங்கம்ன்னு பொண்ணுங்க மிரண்டு போய் பதில் சொல்லலை.”

“அதுங்க போட்டு வந்த யூனிபார்ம்மை வைச்சி டாக்டர் அந்த பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியருக்குப் போன் பண்ணி விசயத்தைச் சொல்லி உடனே வாங்கன்னு சொல்லி இருக்கார். அவர் வர்றதுக்குள்ள விசயம் மெல்ல கசிஞ்சி ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிற ஊர் மக்களுக்குத் தெரிஞ்சு கூடிட்டாங்க. உள்ளூர் பசங்கதான் தப்புப் பண்ணிட்டானுங்களோன்னு பயந்து அதுங்களை அவுங்க ஊருக்குக் கொண்டு போய் பஞ்சாயத்துக் கூட்டி விசாரிச்சிருக்காங்க. எந்த பொண்ணும் வாயைத் தொறக்கலை. ஆளுக்கு நாலு அறைவிட்டு வெயில்ல முட்டிப் போட வைச்சிருக்காங்க. கொஞ்ச நேரத்துல கஷ்டம் தாங்காத பொண்ணுங்க உண்மையைக் கொட்டிடுச்சிங்க. சயின்ஸ் வாத்தியார்,கணக்கு வாத்தியார், உடற்பயிற்சி ஆசிரியர், நுாலகர்ன்னு… பேரையும் சொல்லிடுச்சுங்க. உடற்பயிற்சி நேரத்துல விளையாடிட்டிருக்கிற ஏதாவது ஒரு பொண்ணுக்கு மயக்கமோ தலைவலியோ வந்தா போதுமாம் இந்த நாலு ஆசிரியர்களும் வகுப்புக்குக் கொண்டு போய் நெஞ்சு மார்பு நெத்தின்னு தடவோ தடவுன்னு தடவுவாங்களாம். இதுல போட்டி பொறாமைகூட உண்டாம். விலாவாரியாய் போட்டிருக்கான்.”

“ஊர் மக்கள் கொதிச்சுப் போய் திரண்டு பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்காங்க. வழக்கம் போல் தப்பு செய்ஞ்சவங்க பறந்துட்டாங்க. தலைமை ஆசிரியர் முதன்மைக் கல்வி அதிகாரிகிட்ட முறையிட்டிருக்காங்க அவர் உடனே அவுங்களைப் பக்கத்துப் பக்கத்து ஊர்களுக்கு மாற்றம் பண்ணி இருக்கார். இது போதாது. அவுங்களை வேலை நீக்கம் செய்யனும்ன்னு மக்கள் போராடுறதா பத்திரிக்கையில போட்டிருக்கான். இத்தனைக்கும் வாத்தியார் ரெண்டு பேர் பேரன் பேத்தி எடுத்தவங்க. எந்த வாத்தியாரையும் மனைவி மக்கள் வீட்டுக்குள்ளே நுழைய விடலையாம். வயசுக்கு வந்த பையன் ஒருத்தன் ஒருத்தரை வீட்டுக்கு வராதேன்னு செருப்பை எடுத்து அடிச்சி விரட்டி இருக்கான்னு கேள்வி. ஊர்ல சொன்னாங்க.” முடித்தான்.

“என்ன அநியாயம்!” – கேட்ட அத்தனைப் பேருக்கும் ரத்தம் கொதித்தது. “இப்போ அவனுங்க எங்கே இருக்கானுங்க?” சேகர் ஆத்திரப் பட்டு கேட்டான்.

“வெளியே தலை காட்டாம பக்கத்து ஊர் லாட்ஜ் ஒன்னுல அறை எடுத்து தங்கி இருக்காங்க.” என்றான்.

“கல்வி வியாபாரமாய்ப் போனதால அநியாயம் தாங்க முடியலை!” – குணா தலையைப் பிடித்துக் கொண்டான்.

“அரசாங்கத்துல எந்த வாத்தியாரும் தன் தொழில் மேல அக்கறை வைக்கிறதில்லே. அளவுக்கு மீறிய சம்பளம். ஒப்புக்கு ஏதோ புத்தகத்தைப் பார்த்துப் பாடம் நடத்திட்டு மீதி நேரம் விவசாயம் வட்டிக்கு விடுறதுன்னு வேற தொழிலுக்குக் கிளம்பிடுறாங்க. கொஞ்ச நேரம் ஓய்வாய் இருந்தாலும் தன் உபதொழிலை எப்படி எப்படியெல்லாம் விருத்தி செய்யிறதுன்னு யோசிச்சி பேசிக்கிறாங்களேத் தவிர புள்ளைங்களுக்குப் பாடம் எப்படி நல்லா சொல்லி குடுக்கிறது அவுங்க அறிவு ஒழுக்கத்தை எப்படி மேம்படுத்துறதுன்னு நினைக்கிறதே இல்லே.”

“டாக்டருங்க கிளினிக் போல காலை மாலை டியூ சன் கொள்ளை வேற. தனி மனித ஒழுக்கமும் சரி இல்லே. பசங்களைப்பாடம் படிக்கச் சொல்லிட்டு ஆசிரியரும் ஆசிரியையும் பசங்களுக்கு எதர்க்கவே ரொமான்ஸ் பண்றாங்க. பள்ளிக்கூடம் எப்படி உருப்படும்?” – முடித்தான் சிவா.

“படிக்கிற பொண்ணுங்களை மத்தவங்க தொட்டிருந்தா கூட மன்னிக்கலாம். குரு இடத்துல இருக்கிற வாத்தியார் செய்ததை மன்னிக்கவே கூடாது. இவுங்களை உடனடியாக் கொண்டு வந்து நாம செய்ய வேண்டியதைச் செய்யனும்!” – குணாவிற்கு ஆத்திரம் குறையவில்லை.

“ஓ.கே. மங்களம் பாடிடுவோம்!” – சேகர் எழுந்தான்.

மற்றவர்களும் எழுந்தார்கள். அவர்கள் காட்டைவிட்டு வெளியே வரும்போது பொழுது சாய்ந்திருந்தது. கொஞ்ச நேரம் காத்திருந்து இருட்டிய பிறகு புறப்பட்டார்கள். சந்தடி குறையட்டுமென்று பாரதி பூ ங்காவில் ஒதுங்கினார்கள். மற்றவர்களுக்கு முகம் தெரியமலிருக்க இருட்டாய் உள்ள இடம் பார்த்து அமர்ந்தார்கள்.

பின்னால் பேச்சுக்குரல்.

“மொதல்ல நாம அமைச்சரைப் பார்த்து நம்ம வேலை நீக்கம் வாபஸ் வாங்க வழி செய்யனும்.” என்றான் ஒருவன்.

“எந்த முகத்தோட முழிக்கிறது?”

“முழிச்சித்தானாகனும்!”

“….”

“இது வேண்டாதவங்க கட்டிவிட்ட கதைன்னு சொல்லி சமாளிக்கனும்”

“அமைச்சர் நம்புவாரா?”

“நம்புறா போல சொல்லனும். நாங்க உங்க கட்சி. தீவிரமா இருக்கிறதுனால எங்களை அடக்க உள்ளூர் எதிர்கட்சிக்காரங்க வெளியில கெட்ட பொண்ணுங்களை எங்க மேல பழியைப் போட்டுத் திசை திருப்பிட்டாங்க. நாங்க தப்பு செய்யலை. தப்பு செய்ஞ்சாலும் மன்னிச்சு எங்களுக்கு வாழ்வு கொடுங்கன்னு கேட்கனும்.”

“அமைச்சர் சம்மதிப்பாரா?”

“நாங்க சம்மதிக்க வைக்கிறோம்!” – சிவா குரல் கொடுத்தான்.

அவர்கள் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

– தொடரும்…

– பாக்யா வார இதழில் வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *