தொடுதல்
எனக்கு வயது இருபத்தியேழு.
தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது.
பதின்மூன்று வயதினிலேயே இந்த எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பமானது. பின்பு அதுவே ஏக்கமானது. இன்னமும் குறைந்த பட்சம், பன்னிரண்டு வருடங்கள் – ஒரு மாமாங்கம் – இந்த அனுபவத்திற்காக காத்திருப்பது அநியாயம் என அப்போது பட்டது. இப்போதும் படுகிறது.
புதிய அனுபவத் தேடலுக்காக மனசும் உடம்பும் பதைக்கிறது.
திருமணம் என்கிற பந்தத்தின் மூலம் மட்டுமே தேகசுகம் ஒருவனுக்கு கிடைக்க வேண்டும் என்பது உலக நியதி. தவறு, இந்திய நியதி. இந்த நியதியை மீறுகிறவர்கள் தவறு செய்தவர்களாவார்கள். உடம்பு மிகத் தயாராக இருந்தும் திருமணம் என்கிற சமூக அங்கீகரிப்பிற்காக நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இந்தக் காத்திருத்தல் மிகவும் ஏக்கமானது, கஷ்டமானது, கொடுமையானது. பசிக்கிறது சாப்பிடுகிறோம், தாகிக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம்…இயல்பான பூர்த்திகள். ஆனால் உடம்பு தகித்து கலவிக்காக ஏங்கும்போது மட்டும் சமுதாய அங்கீகரிப்பு இல்லாததினால், உடம்பை இயற்கைக்கு எதிராக நான் கட்டாயமாக அடக்கியாள வேண்டியிருக்கிறது.
இந்த லட்சணத்தில் கல்லூரியில், அலுவலகங்களில் புற்றீசல்களாக பெண்கள். சிரித்தபடி அழகாக வளைய வரும் உற்சாகமான பெண்கள். எங்கும் பெண்கள், எதிலும் பெண்கள். அவர்களின் அருகாமை என்னை மிகவும் அலைக்கழிக்கிறது. தொடுதலுக்காக ஏங்குகிறது.
தொடுதலில்தான் அன்பின் ஏக்கம் பூர்த்தியாகிறது. குழந்தைகளைக்கூட வாரியணைத்து உச்சி முகரும்போதுதான் அது கொஞ்சல் என அழைக்கப் படுகிறது. முதுகில் ஷொட்டும், கை குலுக்குதலும் நண்பர்களின் தொடுதல். தொடாது காட்டப்படும் அன்பு பூர்த்தியாவதில்லை.
துக்கத்தைகூட அதை வெளிப்படுத்தும் விதமாக ஒருவரின் தோளைத்தொட்டு அமுக்கினால போதுமானது.
என் பெற்றோர்களை நினைக்கும்போது எரிச்சல்தான் ஏற்படுகிறது. எனது தகிப்பு அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடம் வெளிப்படுத்தக் கூடிய தகிப்பல்லவே இது.
எனது இந்த ஏங்குதலுக்கு மருந்து பொறுமையும், காத்திருத்தலும் அல்ல. அனுபவம்தான் சிறந்த மருந்து.
ஆனால் பரத்தையர்கள் உதவாது. அதில் வியாபாரம்தான் மேலோங்கியிருக்குமேயல்லாது முழு ஈடுபாடும், ஆர்வமும் இருக்காது. ஆரோக்கியக் குறைவு. இணக்கமான புரிதலும் அதைத் தொடர்ந்த தொடுதலும், தழுவுதலும், முயங்குதலும் மிகவும் ஆரோக்கியமானது.
என்னுடைய ஏக்கம் தீர இப்போதைக்கு ஒரே வழி என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் திவ்யாதான். எவரையும் சொக்க வைக்கும் அழகுக் குவியல் அவள். அவளைத் தொட திட்டமிடல் வேண்டும். அழகாக, பதவிசாக அவளை அணுக வேண்டும். சற்று முயற்சித்தால் சாத்தியம்தான்.
ஆனால், நான் திட்டமிடுவதற்கு முன்பே எதிர்பாராமல் ஓரு சந்தர்ப்பம் இன்றே எனக்கு கிடைத்தது. திவ்யாவுக்கு ரெக்கார்ட் ரூமில் 2000ம் வருடத்திய பைல் ஒன்றத் தேட வேண்டியிருந்தது. அதற்கு என் உதவி அவளுக்குத் தேவைப்பட்டது.
மதிய உணவு இடைவேளையில், ரெக்கார்ட் ரூமின் பழைய கோப்புகளின் மத்தியில் திவ்யாவின் அருகாமை பைல் தேடும் பாவனையில் எனக்கு கிடைத்தது. அவளின் மெல்லிய வாசனை என்னைக் கிறங்கடித்தது.
அருகாமையும், தனிமையும் கிடைத்த கிளுகிளுப்பில், என் உடம்பின் ஒவ்வொரு செல்லும் அவளைத் தொடு, தொடு என உத்தரவிட்டது. எனக்கே நான் அன்னியனாகிப்போய் என் சுய கட்டுப்பாட்டை இழந்தேன்.
சட்டென்று திவ்யாவை இறுக்கமாக இழுத்து அணைத்து முத்தமிட்டேன்.
தன் முழு பலத்தையும் பிரயோகித்து, திவ்யா என்னை உதறித் தள்ளினாள். ஓங்கி என் கன்னத்தில் அறைந்தாள். விருட்டென்று வெளியேறினாள்.
கன்னத்தில் அறை வாங்கியதுகூட ஒரு விதமான தொடுதல்தான். கோபமான தொடுதல். வெறுப்பின் வெளிப்பாடு.
குறைந்த பட்சம் என் திருமணம் வரையில் திவ்யாவின் இந்தத் தொடுதல் என்னை எச்சரிக்கை செய்தபடி இருக்கும். அதுவரை நான் என் வாலைச் சுருட்டிக் கொண்டிருக்க உதவும்.
இன்றல்ல என்றாவது என் பெற்றோர்கள் என் திருமணப் பேச்சை எடுக்க மாட்டார்களா என்ன?
எனக்கு மருந்து இனி பொறுமையும் காத்திருத்தலும்தான்.
அனுமதியுடன் கூடிய தொடுதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
என்னவள் இப்போது எங்கிருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருப்பாள்? எப்போது என்னிடம் வருவாள்?
சொல்லுங்களேன்.
மிக்க நன்றி திரு சுரேஷ். நான் மிகவும் ரசித்து எழுதிய கதை இது. எஸ்.கண்ணன்
மிக நன்று சார்.. ஒவ்வொரு சராசரி இளைனர்களின் ஏக்கமும் அந்த வயதில் இதுதான்