தேவனின் காலடி பட்டால்…
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 1,423
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(ஈஸ்டர் சிறுகதை)
பெரிய வியாழன் திருப்பலி முடிந்து ஆலயத்திலி ருந்து எல்லோரும் வெளிப்பட்ட போது விக்டர் மலர்ந்த முகத்துடன் கைகுலுக்கியபோது அந்தோணி சாமிக்கு குப்பென்று வியர்த்தது.
“இவன் எப்படி என்னிடம் வந்து கைகுலுக்கி நாளை சிலுவைப்பாதையில் சந்திக்கலாம். உங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகிறான்” என்று அந்தோணி சாமி குழம்பினான்.
இரண்டு தலைமுறை களாக ஜென்ம விரோதிகளாக குடும்பத்தில் யாரும் பேசாத போது, இத்தனை வருடங்கள் ஆலயத்திலோ, தெருவிலோ என்னைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுவென்று வேகமாகப் போய்விடுகின்ற விக்டருக்குத் திடீரென்று என்னாயிற்று?
சிந்தனையோடு உள்ளே வந்த அந்தோணிசாமி, தந்தையிடம் விவரத்தைச் சொன்னான்.
“அந்தோணி எத்தனையோ வருடங்களுக்கு முன் என் அப்பாவையும் தம்பியை யும், ஈஸ்டர் திருப்பலி முடிந்த பிறகு நடந்த வான வேடிக்கையில் வந்த பிரச்சினையில், விக்டரின் தாத்தாக் குடும்பம் கொன்று போட்டு தீ வைத்து விட்டு போனது. அவர்களை சும்மா விடக்கூடாது. நீ பெரியவனாக வேண்டும் என்றுதான். இவ்வளவு நாள் காத்திருந்தேன். நாம் இந்த வருட ஈஸ்டர் திருப்பலி முடிந்ததும், நடக்கும் வாண வேடிக்கையில் எப்படியாவது இவன்களை வம்புக்கிழுத்து ஒவ்வொருவனாக வெட்டிச் சாய்க்க வேண்டும்.
பழிக்குப் பழி. இவன்கள் அத்தனை பேரையும் பலியிட்டால்தான் என் அப்பாவின் ஆன்மா சாந்தியாகும். மாமா பையன் பெர்க்மான்ஸையும் கூப்பிட்டுக் கொள். இவன் களை சும்மா விடக் கூடாது” உறுமினார் அந்தோணி சாமியின் தந்தை ஜோசப்.
“நீங்கள் சொல்வது சரிதான் அப்பா.. யார் வெட்டினார்கள் என்று தெரியாமலே, கூட்டத்திலே இவர்களை யெல்லாம் வெட்டிச் சாய்த்து விட லாம். நான் பெர்க்மான்ஸிடம் சொல்லி அரிவாளோடு ஈஸ்டர் திருப்பலிக்கு வருவேன். நீங்களும் மாமா கிறிஸ்டின், சித்தப்பா பிலிப் ஆகியோரிடம் சொல்லி வையுங்கள். உயிர்ப்புத் திருப்பலி முடிந்ததும் இவர்களை வம்புக்கிழுத்து தீர்த்துக் கட்டிவிடலாம்..”
“சரியாக திட்டம் போடு. இந்தக் குடும்பமே இனி இருக்கக்கூடாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்” என்றார் ஜோசப்.
மறுநாள் பெரிய வெள்ளி யன்று நடந்த – சிலுவைப்பாதை முடிந்ததும் விக்டர் வலிய வந்து பலமுறை அந்தோணி சாமியிடம் பேச முயற்சிக்க, “டேய்… நீ என்னோடு பேச வேண்டாம்” ன்றான் கோபத்தோடு அந்தோணிசாமி.
“அந்தோணி, நான் சொல்வதைக் கேள். நீ எங்களைக் கொல்லப்போவதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. அதே சமயத்தில் நீ எத்தனை வருடம் ஜெயிலில் களி சாப்பிடப் போகிறாய்? உன் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்று யோசித்துப் பார்.” என்றான்.
“போடா – போ… சாவதற்கு பயந்து கொண்டு இப்படி என்னிடம் வந்து கெஞ்சாதே. போய் வேலையைப் பார். நாளை நடக்க வேண்டியது நடக்கும்” என்று கோபத்தில் கத்தினான்.
தேவாலயத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க, தலை குனிந்தவாறு விக்டர் வீட்டிற்கு கிளம்பினான்.
இரவு நடு நிசி திருப்பலிக்காக அந்தோணி சாமியின் குடும்பத்தினர் கிளம்பிக் கொண்டிருக்க, உள்ளே வந்த பெர்க்மான்ஸ் “மச்சான், பசங்க எல்லோரும் ரொம்ப பயந்து போய் கெடக்கானுவ. எல்லாத்தையும் இன்னைக்குப் போட் டுத் தள்ளிவிட வேண்டியதுதான்” என்றான் சாராய வாடையோடு.
“கவலையே படாதே. என் தாத்தாவையும, பாட்டனையும் கொன்னவனைச் சும்மா விடலாமா? ஒரு கை பார்த்து விடலாம்” என்று கூறிய அந்தோணிசாமி தான் உடுத்திய புதிய வேட்டியினுள் அரிவாளை எடுத்துச் சொருகிக் கொண்டான்.
வெளியே சலசலப்பு சப் தம் கேட்க, ஜோசப் வெளியே எட்டிப் பார்த்தவாறு, “ஏலேய் அந்தோணி சாமி. விக்டர் குடும்பம் இங்கேயே வருது இங்கேயே அவனுக அத்தனை பேரையும். ‘பொதி’ போட்டு விடலாம்” என்று கத்தினார்.
விக்டரின் குடும்பத்தினரோடு வந்த பங்குத் தந்தை டேவிட், ஜோசப்பை அழைத்து “ஜோசப் கொஞ்சம் போசித்து பாருங்கள், யாரோ செய்த தவறுக்காக யாரையோ கொலை செய்வது என்ன நியாயம்? எப் போதோ நடந்த தவறுக்காக இப்போது பழி வாங்குவது நல்லதல்ல. விக்டர் குடும்பதினர் உங்களிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ விரும்புகின்றனர்.
கிறிஸ்து உயிர்த்த நன்னாளில் பிரிந்து பிளவுப்பட்டு கிடந்த குடும்பம் ஒன்றாக கூடினால் எவ்வளவு பெரிய சந்தோஷம்” என்றார்.
“இல்லை பாதர் உங்களுக்கு ஒன்றும் தெரியாது, இவர்களை ஒரு வழி பண்ணாதான் இவர்களுக்கு புத்தி வரும்” சாராய வாடையோடு கத்தினான் பெர்க்மான்ஸ்.
“அந்தோணி சாமி. உன் மச்சானிடம் சொல்லி வை. விக்டர் குடும்பத்தை வெட்டி வீழ்த்தி விட்டு நீ சிறைக்கு போயி டுவே. உன் குடும்பம் தெருவில் நிற்கும். அடுத்த தலைமுறையில் அவர்கள் வீட்டில் யாராவது தலையெடுத்து உன் குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவெடுப்பார்கள்.
பார்! யோசித்துப் பார்! பாவிகளை இரட்சிக்க வந்த தேவன் மற்றவர்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் உயிர் நீத்து உயிர்த்தெழுந்த விழாவை இன்று கொண்டாடப் போகிற இந்த இரவில் இவர்களை மன்னித்து அன்போடு பழகினால் பரலோக ராஜ்ஜியத்தில் எத்தனை சந்தோஷங்கள் உண்டாகும்.
வா… அந்தோணி… உன் மனைவி மக்களோடு ஏன்… இங்கே குடித்து வந்து நிற்கின்ற உன் மைத்துனன் பெர்க்மான்சோடு சேர்ந்து இவர்களை மன்னித்து நட்போடு பழக முயற்சி செய். வா விக்டர். அந்தோணிசாமியின் கையைப் பிடித்து நட்பைத் தெருவி” என்று சந்தோஷமாக சொல்ல அந்த வீட்டிலேயே எங்கும் மகிழ்ச்சி எதிரொலித்தது.
எல்லோரும் சேர்ந்து இறைவனின் உயிர்ப்புத் திருநாளைக் கொண்டாட நடுநிசித் திருப்பலிக்கு மகிழ்ச்சி யோடும் சந்தோஷத்தோடும் கிளம்பினர்.
– மராத்திய முரசு, 2004
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
