தேரையின் தோட்டம்!
ஊருக்கு வெளியே அழகான தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு எல்லா வகையான மரங்களும் எல்லாவிதமான பயிர் வகைகளும் இருந்தன.
தோட்டத்தை ஒட்டியிருந்த சாலை வழியே தேரை ஒன்று சென்று கொண்டிருந்தது. தோட்டத்தைப் பார்த்தவுடன் அசந்துபோய் நின்றது.
சிறிது நேர யோசனைக்குப் பின்பு மெதுவாக தோட்டத்திற்குள் நுழைந்தது. அங்கு தவளை ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது.
தவளையைப் பார்த்த தேரை,’இந்த அழகான தோட்டம் உங்களுடையதா?’ என்று கேட்டது.
‘ஆமாம். என்னுடையதுதான். இந்தத் தோட்டம் இவ்வளவு அழகாக இருப்பதற்கு என்னுடைய கடின உழைப்பும் முக்கிய காரணம்’ என்றது.
‘எனக்கும் இப்படி ஒரு தோட்டம் வேண்டும்’ என்றது தேரை.
இதைக் கேட்ட தவளை, உடனே சில விதைகளை கொடுத்தது. ‘நீ இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று மண்ணில் புதைத்து வை! உனக்கும் சீக்கிரத்தில் ஒரு தோட்டம் உருவாகி விடும்’ என்றது.
‘எவ்வளவு சீக்கிரம் தோட்டம் உருவாகும்?’ என்றுகேட்டது தேரை.
‘வெகு விரைவில்’ என்றது தவளை.
தேரை ஓட்டமும் நடையுமாகத் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றது. பிறகு அங்கு விதைகளைப் புதைத்துவிட்டு, ‘விதைகளே இப்போதே வளருங்கள்’ என்றது.
சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு வந்த தேரை, விதைகள் புதைத்த இடத்தைச் சென்று பார்த்தது. ஆனால் விதைகள் வளரவில்லை.
தேரை உடனே விதைகளுக்கு பக்கத்தில் சென்றது. விதைகள் புதைத்த இடத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே, ‘விதைகளே சீக்கிரம் வளருங்கள்’ என்றது.
ஆனால் விதைகள் வளரவில்லை.
ஆத்திரம் அடைந்த தேரை கோபமாக ‘விதைகளே வளருங்கள்’ என்று கத்தியது. ஆனால் அப்போதும் விதைகள் வளரவில்லை.
அப்போது அந்தப் பக்கமாக வந்த தவளைக்கு அந்தச் சத்தம் கேட்டது! அது தேரையை நோக்கி வேகமாக ஓடி வந்தது…
‘இங்கு என்ன நடக்கிறது? ஏன் இப்படிச் சத்தம் போடுகிறாய்?’ என்றது தவளை.
‘என்னுடைய விதைகள் வளரவில்லை’ என்று பதில் சொன்னது தேரை.
‘நீ சத்தம் போடுகிறாய். அதனால்தான் உன் விதைகள் பயந்து கொண்டு வெளியே வரவில்லை’ என்றது தவளை.
‘என்னது?, என்னுடைய விதைகள் பயத்தால் வளரவில்லையா?’ என்றது தேரை.
‘ஆமாம். அந்த விதைகளை அதன் போக்கில் விட வேண்டும். சூரிய ஒளி அந்த விதைகள் மேல் பட வேண்டும். மழைநீரும் அந்த விதைகள் மேல் பட வேண்டும். அப்போதுதான் விதைகள் வளரும்’ என்றது தவளை.
÷
அன்று இரவு முழுவதும் தேரை விதைகளையே பார்த்துக் கொண்டிருந்தது. இருட்டைக் கண்டு பயத்தால் விதைகள் வளரவில்லையோ என்று நினைத்தது தேரை.
சிறிது நேரம் கழித்து ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துக்கொண்டு விதைகளுக்கு அருகில் சென்றது. பிறகு ஒரு கதையைப் படித்துக் காட்டியது. விதைகள் இருட்டைக் கண்டு பயப்படாமல் இருப்பதற்காக இரவு முழுவதும் கதை படித்தது தேரை.
பொழுது விடிந்தது. சிறிது தூரம் சென்று இரை தேடிவிட்டு மீண்டும் வந்தது.
விதைகளுக்கு அருகில் சென்று சற்று நேரம் நின்றது. சிறிது யோசனைக்குப் பிறகு விதைகளுக்குப் பாட்டு பாடிக் காட்டியது.
இதற்கு அடுத்த நாள் சில கவிதைகளை படித்துக் காட்டியது.
மற்றொரு நாள் வயலினை இசைத்துக் காட்டியது.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால் விதைகள் வளரவே இல்லை. ‘இதற்கு மேல் என்ன செய்வது?’ என்று அழுதபடியே தூங்கிவிட்டது தேரை.
ஒருநாள் அதிகாலையில் தேரை வீட்டு வழியே வந்த தவளை, தேரையின் தோட்டத்தைக் கடந்து தேரையின் வீட்டிற்குள் நுழைந்தது…
‘தேரையே, தேரையே… எழுந்திரு’ என்று எழுப்பிக் கொண்டே, ‘உன் தோட்டத்தைப் பார்… விதைகள் சிறிதாக அரும்பியிருக்கின்றன’ என்றது தவளை.
ஆச்சரியமடைந்த தேரை, எழுந்து, விதைகள் இருந்த இடத்திற்குச் சென்றது. அங்கு அழகாக சின்னச் சின்னதாக இளம் பச்சை நிறத்தில் துளிர்கள் அரும்பியிருந்தன.
‘என்னுடைய விதைகள் இப்பொழுது பயப்படாமல் வளர்கின்றன’ என்று சந்தோஷத்தில் கத்தியது தேரை.
‘இப்போது உனக்கு சந்தோஷம்தானே. நல்ல தோட்டம் கிடைத்ததா?’ என்றது தவளை.
‘ஆமாம். நீங்கள் கூறியது மிகவும் சரி. இந்தத் தோட்டம் கடின உழைப்பால் கிடைத்தது! என்றது தேரை.
கதையும் படமும் – ஆர்னால்டு லோபல்
தமிழில் – முத்தையா வெள்ளையன் (அக்டோபர் 2011)