தேன் நிலவு





“என்ன சார்…ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களாமே..?”
“ஹி….! ஆமாம் சார்….!”

“ஒருவனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்ம நாகரிகம்…. பண்பாடு..!
“உண்மைதாங்க…. இருந்தாலும் சந்தர்ப்பம்….சூழ்நிலை…. இப்படி ஆயிட்டுது..!”
“சரி…. தேன்நிலவு எங்கே?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்….தேனாவது….நிலவாவது….!”
“அது சரி…. ஹனிமூன்ங்கர்ற பெரு எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?”
“தெரியலையே…!
“கல்யாணத்துக்குப் பிறகு மணமக்கள் முப்பது நாளைக்கு தினமும் தேன் சாப்பிடறது ஒரு பழக்கமாம்! அதை ஹனிமன்த் (Honeymonth)ன்னு சொல்லுவாங்களாம்….இதுதான் பின்னாடி Honey Moonன்னு ஆயிட்டுது!”
“அப்படிங்களா?”
“புது மணமக்கள் ஒரெ கிண்ணத்துலே தேன்பருகும் வழக்கம் எல்லா ஜரோப்பிய நாடுகள்லேயும் இருந்துதாம்…! மணமகள் வீட்டுக் கதவுலே தேனைத் தெளிக்கறது கிரெக்க விவசாயிகள் வழக்கமாம்.
ருமேனிய மக்கள் பெண்ணின் முகத்தில் தேனை தடவுவாங்களாம்….! போலந்து மக்கள் மணப்பெண்ணின் உதட்டுலே தேன் தடவுவாங்களாம். சில நாடுகள்லே மணமக்கள் பலகாரங்களைத் தேன்லே தொட்டுச் சாப்பிடறது ஒரு மரபு. ஒரு கோப்பையிலே தேனை வச்சிக்கிட்டு பெண்ணும் மாப்பிள்ளையும் மாறி மாறிச் சாப்பிடறதும் ஒரு வழக்கமாம்!”
“இப்ப ஏன் சார் அதையெல்லாம் ஞாபகப் படுத்தறிங்க?”
“புதுசாக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க… அதனாலேதான்!”
“ரெண்டாம் கல்யாணம் தானே……!”
“உங்களைப் பொறுத்தவரைக்கும் அதுவும் ஒரு சந்தோஷமான சமாசாரம்தானே….!”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க…. என்னோட முதல் மனைவி ரொம்ப நல்லவ சார்…!”
“அப்புறம் எதுக்கு ரெண்டாவது மனைவி…..?”
“இவ வந்த பிறகுதானே அவ எவ்வளவு நல்லவங்கறது எனக்குப் புரிஞ்சிது!”