தெய்வ நம்பிக்கை
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு வெறகு வெட்டி இருந்தர். தெனந்தோறும் வெறகு வெட்டி, பக்கத்து ஊர்ல போயி வித்திட்டு வந்து பொழச்சுக்கிட்டிருந்தா.
ஒரு நா, காட்ல போயி, முனி மரத்ல ஒக்காந்து அடிமரத்த வெட்டிக்கிட்டிருந்தா. அப்ப, அந்த வழியா, பார்வதியும் பரமசிவனும் வானவழியா வந்துகிட்டிருந்தாங்க. பார்வதி, மொதல்ல இதப் பாத்து, அங்க பாருங்க நாதாண்டு பரமசிவங்கிட்டச் சொன்னா. பரமசிவன் பாத்தாரு. பாத்திட்டு அவனுக்கு விதி முடிஞ்சிருச்சு. அதர் அப்டி வெட்டிக் கிட்டிருக்காண்டு சொன்னாரு.
அவனக் காப்பாத்த வழி இல்லயாண்டு பார்வதி கேட்டா. பொண்ணில்லையா? மனசு எளகிப் போச்சு. அதனால காப்பாத்தணும்ண்டு நாதங்கிட்டச் சொன்னா. சொல்லவும், பரமசிவனும்- சரி பெண்ணே! மரம் ஒடிஞ்சு விழும்போது, ஐயோ! அப்பாண்டு விழுந்தா, நாந் தாங்கிக்கிறே. ஐயோ! அம்மாண்டு விழுந்தா.நீ தாங்கிக்கண்டு பரமசிவன் சொன்னாரு.
மரம் ஒடிஞ்சு விழுந்திச்சு. விழுகும் போது, “ஐயோ! நாஞ்செத்தேண்டு விழுந்தா.
பாத்தயா பெண்ணே! ஒன்னயயுங் கூப்டல, என்னயயுங் கூப்டல, செத்தேண்டுதான விழுந்தா. அவ சாகட்டும். வா! போவோம்ண்டு சொல்லிட்டுப் போயிட்டாங்களாம். தெய்வத்து மேல, எப்பயும் நம்மளுக்கு நம்பிக்க இருக்கணும். அவங்கதா நம்மளக் காப்பாத்துவாங்க.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.