தெய்வத்தின் தீர்ப்பு

அம்மன் கோவிலின் வாசலில் பரந்திருந்த வேப்பமரக் கிளைகள், காற்றின் சிறு அசைவுகளுக்கு நிசப்தமாக அசைந்தன. அவற்றின் அசைவுகளை கண்கள் கண்டன; ஆனால் அவற்றின் நிழலில் கூடியிருந்த மக்கள்—அவர்கள் மனங்கள் மட்டும் பாறையைப் போல உறைந்திருந்தன.
அந்த நாள்… ஒரு சாதாரண நாள் அல்ல. ஊரின் பெரும்பாலானவர்கள் கோவிலின் மண்டபத்தில் ஒன்றுகூடியிருந்தனர். காரணம்: ஒரு பெண், வேலம்மாள்.
ஏழ்மை… தனிமை… மனநிலை பாதிக்கப்பட்ட மகளுடன் வாழும் ஒரு எளிய தாயின் மீது இந்த உலகம் சுமத்தும் பாரங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்தவள். ஆனால், அந்த நாள் – அவளின் மௌனம் உருக்கொண்டு குரலாகி, கோவிலின் மண்டபத்தை ஊடுருவியது. மாரியம்மன் கோவில் மண்டபத்தில் கூடியிருந்த ஊர் பஞ்சாயத்திற்கு ஒரு புகார் அளித்திருந்தாள்:
“பக்கத்து வீட்டு துரை… என் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றான்!” என்றாள்.
ஊர்க் குழுவினர் பஞ்சாயத்தை நடத்த கூடியிருந்தனர். முகங்களில் பதட்டம் இல்லை; பதறிய கண்களும் இல்லை. பாறைபோல் இருந்தனர்.
வேலம்மா உன் மேல் சொல்லும் புகாருக்கு என்னப்பா சொல்ற …… பஞ்சாயத்து தலைவர் துரையை விசாரித்தார்
துரையின் முகம் மட்டும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தது. துரை – ஊரின் செல்வமிக்க குடும்பத்தை சேர்ந்தவன். ஆடம்பரமான உடை. சிரிப்போ, கலக்கமோ எதுவும் இல்லாத முகம். திமிரான உடல் மொழி
” எங்க பக்கத்து தோட்டத்துல இருந்து தேங்காய் பறிச்சப்போ அது இவங்க வீட்டில விழுந்தது. அதை எடுக்கத்தான்.நாங்க வீட்டு சுவர் ஏறி குதிச்சது” அவன் பேச்சு சட்டமாய் ஒலித்தது. உங்களால் என்ன செய்ய முடியும் ? என்ற அலட்சிய ம் அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் வேலம்மாள். கொந்தளித்தாள். அமைதியான அவளின் குரல், கோபத்தால் அதிர்ந்தது. “அய்யா, தெரு முனை குழாய்க்கு தண்ணீர் பிடிக்க போனேன். வீட்டு வாசல் திறந்த நேரம்தான். என் புள்ள கத்தி, கதறி ஓடி வந்தாள். அவனை தள்ளி வெளியே ஓடினாள். நான் வரும்போது இவன் சுவரேறி குதிக்குறது தெரிந்தது. தேங்காய் எடுக்க வந்தவன் வாசல் பக்கமாக வந்து, வெளியில் சென்ற நான் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதானே? இவன் சொல்றமாதிரி எங்க வீட்டு முற்றத்தில் தேங்காய்கள் விழுந்து கிடக்கவே இல்லையே!”
“எனக்கு நீதி வேண்டும்; இந்த ஊரில் இத்தனை வருடமாக வாழ்ந்து வரும் எனக்கு பாதுகாப்பு இல்லையே ? அவனை தீர விசாரித்து தீர்ப்பு கொடுங்க “ஆக்ரோஷமாக பெருங்குரலெடுத்து கத்தி, கதறினாள் ரெங்கம்மா.
இரும்மா. நாங்க கூடி இருப்பதே நீ புகார் கொடுத்தவனை பற்றி விசாரிக்கத்தானே. கொஞ்சம் பொறுமையா இரு. அவளை அதட்டினார் பஞ்சாயத்து தலைவர்.
நீ அவன் மீது சுமத்தும் குற்றத்திற்கு சாட்சி இருக்கா ?
சாட்சிகள் இருக்கு அய்யா. பாதிக்கப்பட்ட என் பெண்ணின் வார்த்தைகளை நீங்க பொருட்படுத்த மாட்டீங்க. நான் ஏழை; ஏழைச் சொல் அம்பலம் ஏறாது.குற்றம் செய்தவனுக்கும் மனசாட்சி கிடையாது. எல்லாத்துக்கும் மேல அந்த அம்மன்தான் சாட்சி. அவ வந்து சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில தானே நீங்க எல்லோரும் இப்படி பேசுறீங்க. அவ இப்போ சாட்சி சொல்ல வராமல் இருக்கலாம். ஆனால் தப்பு செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை தருவாள்.
நீதி மன்றத்திலே கூட பாரபட்சம் பார்க்க கூடாது என்று நீதி தேவதையின் கண்களை கருப்பு துணியால கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் இங்க உங்க கண்களையும், கைகளையும் இவன் பணத்தால் கட்டி வைத்து விட்டான். அவனை தண்டிக்கவோ இல்லை கண்டிக்கவோ உங்களுக்கு எண்ணம் வரவில்லை. என்னைத்தான் மிரட்டுவீங்க . அவள் குரல் கடுமையுடன் பலமாகியது. ஒரே நேரத்தில் வேதனையும் கோபமும் கலந்து வழிந்தது:.
என்னம்மா; என்ன நினைச்சுட்டு இருக்க? பேச விட்டால் ஒரேயடியாக எங்க எல்லோரையும் அவமானப்படுத்தற; இப்படி எல்லாம் பேசினா நீ இனிமேல் இந்த ஊரிலேயே இருக்க முடியாது. புரிந்து கொள் அதட்டியது ஒரு குரல்.
“அட…. யாருய்யா இனிமேல் இந்த ஊரிலே இருக்கப்போறா; நாளைக்கு இன்னும் என்னென்ன நடக்குமோ; எங்க மானத்துக்கும் உசிருக்கும் பாதுகாப்பு இல்லாத இடத்தில நான் இனிமேல் இருக்க போவது இல்லை. ஆனால் ஒன்று உங்க எல்லார் குடும்பத்திலயும் பெண்கள், பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஏன். அவன் வீட்டிலேயும் பொம்பள புள்ளைங்க இருக்கு. இன்னிக்கு என் வீட்டு பெண்ணுக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கு?அதையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்”.
மாரியம்மன் கோவிலின் மண்டபம் அதிர்ந்தது மூத்தோர், பஞ்சாயத்து தலைவர், பொதுமக்கள்— எல்லோரும் அவளது ஆக்ரோஷத்தைக்கண்டு திகைத்தனர.
புலம்பியபடியே அம்மனுக்கு முன் சென்று நின்றவள் “ஆத்தா ….. உன் சன்னதியில் இவங்க நியாயம் சொல்லுவாங்க என்று எதிர்பார்த்தேன். நடக்கல. இப்போ உன்கிட்ட ஒப்படைத்து விட்டேன். நீ பார்த்துக்கோ” என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தவள் வேகமாக வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரே வாரத்தில் பெண்ணையும் அழைத்துக்கொண்டு ஊரை விட்டு கிளம்பி விட்டாள்
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பின்,
ஊரிலே ஒரே பரபரப்பாக இருந்தது. இரண்டு வாரங்களாக கிராமமே கலகலப்பாக, உற்சாகத்தில் திளைத்து வந்தது. காரணம் — மாரியம்மன் கோவிலின் வருடாந்திர “தீமிதித் திருவிழா”. கோவிலில் கொடியேற்றியதுமே, தீமிதிக்க விரதம் ஏற்க வேண்டியவர்கள் ஜபம், தவம், சுத்தம், சைவ உணவு, பூஜைகள் என முற்றிலும் பக்தியுடன் தீவிரமான ஆன்மிக எண்ணங்களுடன் செயல்பட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் கூட்டம்.
திருவிழாவிற்கு முன்பு கோவில் அருகில் மேடை அமைக்கப்பட்டு தெருக்கூத்து நாடகம், மெல்லிசைக்கச்சேரி, வில்லுப்பாட்டு, திரைப்படங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒன்று அரங்கேற்றப்பட்டு மக்களின் உள்ளங்களை மகிழ்வித்தன.
இதோ ….. முக்கிய நாளான “தீமிதி “ நாள் வந்துவிட்டது. காலையிலிருந்து கோவிலுக்குள்ளும் வெளியும் மக்கள் கூட்டம். . கோவிலை சுற்றி வந்த குழந்தைகள் பஞ்சுமிட்டாய், பலூன், ரங்கராட்டினம் என மகிழ்ந்தனர். இளம் பெண்கள் பூமாலை, வளையல், அழகு சாதனங்கள் என்று தேடி வாங்கினர். டவுன் கடைகளைவிட இங்கே வாங்குவதில் ஒரு தனி சுவை இருந்தது.
அம்மன் கோவிலுக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருந்த ஏழடிநீள இரண்டடிஅகல தீமிதிப்பாதை, விறகுகள் போடப்பட்டு நெருப்புக்கு தயார் செய்யப்பட்டது. முற்பகல் பன்னிரண்டு மணிக்கு பூசாரி அம்மனுக்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்ற… வேட்டுக்கள் முழங்க தீ மிதிப்பாதையில் நெருப்பு போடப்பட்டது. கொஞ்ச நேரத்தில் விறகுகள் பற்றிக்கொண்டு “கண, கணவென்று” எரியத் துவங்கின. தீ-மிதிப்பாதையின் இருபுறமும் பாதுகாப்பிற்காக நபர்கள் நின்று கொண்டு கண்காணித்தனர்.
மாலை ஐந்து மணி. கோவில் பூசாரி முதலில் நெருப்பில் இறங்கி நடக்க, “ஓம் சக்தி!” என முழக்கம். பக்தர்கள் ஒருவரையொருவர் பின் தொடர்ந்து தீமிதித்தனர். செந்தீயில் நடந்து, பால் நிரப்பிய குழியிலும் நடந்து, அம்மனின் முன் கரம் கூப்பி, அருள் வேண்டி நிற்க, கூட்டம் முழுவதும் பரவிய அந்த ஆன்மிக உணர்வு சொல்லி முடிக்க முடியாதது.
வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் அனைவரும் தீ மிதித்து முடிந்தவுடன் கோவிலை சுற்றி வந்து ஆசுவாசம் கொண்டனர். சர்வ அலங்காரங்களுடன் பல்லக்கில் வைக்கப்பட்டிருந்த அம்மன் விக்கிரஹத்திற்கு முன்பு, கோவில் பூசாரி தலையில் கரகம் சுமந்து ஆட ஆரம்பித்தார்.
“ஆடி வரும் கரகம் ; அம்மன் வரும் கரகம் ” …..
மைக் செட்டின் வழியாக ஒலிக்கும் பாடல் சத்தம், மக்களின் ஆரவாரம், என்று இரைச்சல் அதிகமாக இருந்தது . வேடிக்கை பார்க்க வசதியாக மக்கள் ஆங்காங்கே உயரமான மரங்களில் ஏறி இருந்தனர். …
கோவில் மைதானத்தின் ஓரத்தில், ஒரு மரத்தின் கிளையில் ஏறியிருந்தான் துரை.
“மரம் சாய்ற மாதிரி இருக்கு டா… ஜாக்கிரதை…” என ஒருவன் கூவ, “மரம் ஏற தெரியாம இருக்கேனு நினைச்சுடாத. நான் ஒரு மரத்தில இருந்து இன்னொரு மரத்துக்கே தாவுவேன்டா!” விழாக்காரர்களை மேலிருந்து பார்த்தவண்ணம், சிரித்தபடியே துரை நக்கலாக, இறுமாப்புடன் பதிலளித்தான்
அடுத்த நொடியில்…
வளைந்து ஆடிக்கொண்டிருந்த மரம் சாய்ந்தது. துரை தவறி விழுந்தான். அதுவும் நேராக… தீமிதிப்பாதையிலே! …
உடல் முழுக்க தீக்காயங்களுடன் உருண்டு புரண்டான். அலறும் அவனைக் கண்டு சிலர் ஓடி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால்… எந்த மருந்தும் பலிக்கவில்லை. அவனது தோற்றம் மாறியது. கால்கள் செயலிழந்து முடமாகிப் போனான்.
ஊரிலோ, சிலர் மெதுவாக பேசிக்கொண்டனர் வேலம்மா அன்னிக்கு சொன்னதெல்லாம் உண்மைதான் போல. “தேங்காய் பறிக்கும்போது வீட்டுக்குள்ள விழுந்த தேங்காய்களை எடுக்கத்தான் வந்தேன்“என்று பொய் கூறியவனுக்கு இன்று அதே தென்னை மரத்திலிருந்து விழ வைத்து அம்மன் தண்டனை கொடுத்துவிட்டாள்.
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” என்ற பழமொழிக்கேற்ப, மனிதர்கள் மரமாய் நின்றபோதும் அம்மன் தீர்ப்பு வழங்கி விட்டாள். அந்த தீமிதி விழா, வெறும் பக்திப் பூர்வ நிகழ்வாக அல்ல; அது தீமையைத் தண்டித்த தினமாக உருமாறியது. மரமும் மௌன சாட்சியாக நின்றது. அம்மன்… நீதிமன்றத்தில் நீதிபதியாக!
வேலம்மாவின் வேதனைக்கு இன்று அம்மனின் நீதி கிடைத்தது.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 3,451