தூளி




சவமாய்க் கிடந்த பவானியைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் உறவுப் பெண்கள். சற்றுத் தள்ளி நின்று வாயில் துண்டைத் திணித்துக் கொண்டு சன்னமாய் அழுது கொண்டிருந்த அவள் கணவன் குமாரசாமியிடம் ஊர்ப் பெரியவர் கிசுகிசுப்பாய்க் கேட்டார்.
‘ஏண்டா…ரெண்டு பேருக்குள்ளார ஏதாச்சும் சண்டையா,..நீ எதையாச்சும் எக்குத் தப்பாய்த் திட்டப் போய்…அது காரணமாத்தான் தூக்கு மாட்டிட்டாளோ?’
ஓங்கியழுது இடவலமாய்த் தலையாட்டி ‘கண்ணாலம்…..ஆன நாளிலிருந்து ஒரு தடவ கூட அவளும்…..நானும் சண்டை போட்டது கிடையாதே…என்ன காரணமோ தெரியலையே…யாரு கண் பட்டதோ தெரியலையே…’ என்று சொன்ன குமாரசாமியின் பின்புறம் வந்து நின்று அவன் காலைச் சுரண்டிய அவன் மகன் சின்னராசு மழலைக் குரலில் ஏதோ சொல்ல,
‘கொளந்த என்னமோ சொல்லுது…என்னன்னு கேளு குமாரசாமி…’ ஊர்ப் பெரியவர் சொல்ல மகன் பக்கம் திரும்பிய குமாரசாமி கணணீரோடு கேட்டான்.
‘என்னடா ராசா…என்ன வேணும்,’
‘அப்பா .ராத்திரி அம்மாவை மட்டும் தூளி கட்டித் தொங்க விட்டியல்ல…நானும் இப்ப அது மாதிரி விளையாடனும்…எனக்கும் அதே மாதிரி கழுத்துல தூளி கட்டித் தொங்க விடுப்பா…’
அவன் கையில் அவன் தாய் தொங்கிய அதே கயிறு.
சட்டென்று யூகித்து விட்ட மொத்தக் கூட்டமும் குமாரசாமியைப் புரட்டியெடுக்க அதையும் ஒரு விளையாட்டு என்று எண்ணி ‘கல…கல…’வென்று சிரித்து மகிழ்ந்தது மழலை.