துப்பறியும் ‘கசேநா’




(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கசேநா குழுவினர்’ வழக்கம் போல் கண்ணன் வீட்டு மாடியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இப்போது விடுமுறை ஏன் வந்தது என்று இருந்தது. போரான போர் அடித்தது.
போன முறையே ஸ்டூடியோ திறந்து பதினைந்து ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதனால் இந்த முறை நஷ்டமில்லாத தொழில் ஒன்றைத் தொடங்க நினைத்தார்கள்.
கண்ணன், “எங்கேயாவது டூர் புறப்படலாமா? நாம்தான் சென்னையைத் தவிர வேறு எங்கும் சுற்றினதில்லையே?” என்றான்.
உடனே நாகராஜன், “டேய்! உன்னைப்போய் எவண்டா யோசனை டேய் சொல்லச் சொன்னான்? கையைக் கடிக்காமல் ஏதவாது சொல்லுவாயோ என்று பார்த்தால் ஒரு வருடம் பட்டினி கிடக்க யோசனை சொல்கிறாயே!” என்று ஆரம்பத்திலேயே ‘அஸ்து’ போட்டான்.
“டேய், ஒன்று செய்தால் என்ன? மூடின ஸ்டுடியோவை மறுபடியும் திறந்துவிடலாமே?” என்றான் சேகர்.
10 பைசா டிக்கெட் வாங்கி 10 ரூபாய் நோட்டை நீட்டுகிற கண்டக்டர் முறைப்பது போல் கண்ணன் சேகரை முறைத்தான்.
“டேய்! ஸ்டூடியோ வைத்து நஷ்டமான பணம் உன்னுடையதா யிருந்தால் நீ இவ்வளவு பேச மாட்டாய்! நஷ்டமானது என் பணம் அல்லவா?” என்று ‘காரசார’மாகக் கேட்டான் கண்ணன்.
“அப்படியானால் துப்பறியலா மாடா? செலவு ஜாஸ்தி ஆகாது!”
உடனே கண்ணன், ”டேய்! உடம்பு உருப்படியாய் இருப்பது பிடிக்கவில்லையா?” என்று சேகரைக் கிண்டல் செய்தான்.
நாகராஜனுக்குத் துப்பறியும் ஆசை பல நாட்களாக உண்டு. இப்போது ஒரு சான்ஸும் கிடைக்கலாம் என்ற குஷி!
திடீரென்று பக்கத்திலிருந்த சேகரின் கழுத்தைப் கொண்டு, பிடித்துக் “டேய்” என்று அடித்தொண்டையில் கத்தினான்.
சேகருக்கு முகமெல்லாம் சிவந்தது. வியர்த்துக் கொட்டியது, கை கால்கள் உதறலெடுத்தன.
நாகராஜனுக்கு ஏதேனும் ‘ஹிஸ்டீரியா’ வந்திருக்குமோ என்று கண்ணன் கூடப் பயந்தான்.
இத்தனை ‘பயங்’களையும் பொருட்படுத்தாமல் சிரி சிரி யென்று சிரித்தான் நாகராஜன்.
“இப்படித்தாண்டா நம் எதிரிகளின் கழுத்தைப் பிடிப்பேன்!” என்று வீரவசனம் பேசினான்.
“நீ எதிரிகள் கழுத்தை வேண்டுமானாலும் பிடி, காலை வேண்டுமானாலும் பிடி. எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. பிரண்ட்ஸ் கழுத்தை மட்டும் பிடிக்காதே” என்று பரிதாபமாகக் கூக்குரலிட்டான் சேகர்.
“ஏண்டா, பயந்தாங்கொள்ளி பகதூர்! இதுக்கே இப்படிப் பயப்படுகிறாயே! துப்பறியப்போனால் ரிவால்வர் அடியெல்லாம் வாங்க வேண்டாம்? துப்பறிய யோசனை சொன்னதே நீதான்! சுத்த உதவாக்கரைடா இவன்!” என்று சீறி விழுந்தான் நாகராஜன்.
”ஏதேது, துப்பறியப் போகிறதுக்கு முந்தியே இப்படி என்னைத் துன்பப்படுத்துகிறாயே? ஆளை விடுடா! துருப்பிடித்த ரம்பம்!” என்று சலிப்புடன் அந்தப் பேச்சைக் கத்தரித்துக் கொண்டான் சேகர்..
காலை வேளையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்டத் துக்குக் கேட்க வேண்டுமா? நண் முண்டியத்துக் கொண்டு பிளாட் பர்கள் அவ்வளவு கூட்டத்திலும் பாரத்தில் அலையத் திடீரென்று விமான நிலையத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. காரணம் விமான கூடத்திலிருந்த ஒலிபெருக்கி அலறியது தான்!
“பம்பாய் நியூயார்க், பெய்ரூட், ஜெனீவா செல்லும் விமானம் புறப்படப் போகிறது” என்ற அறிவிப்புத் தான் அது;
‘கசேநா குழுவினர்’ பம்பாய்க்கு ஒரு முக்கிய காரியமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அறிவிப்பு வந்ததும் பிளேனை நோக்கிப் பிளேன் வேகத்தில் பறந்து சென்றார்கள்.
விமானத்தின் உள்ளே தங்களுக்கான இருக்கைகளில் மூவரும் அமர்ந்து கொண்டார்கள். முன்னால் சேகரும் பின்னால் மற்ற இருவரும் அமர்ந்தார்கள். சேகருக்குப் பக்கத்தில் ஒரு ‘பெரிய’ மனிதர் அமர்த்திருந்தார்; பெரிய உத்தியோகஸ்தரோ என்னவோ?
விமானத்தில் ‘பெல்ட்’டுகை அணிந்து கொள்ளும்படி அறிவிப்பு வந்தது. விமானம் உயரே ஒரு குலுக்கலுடன் கிளம்பியிருக்க வேண்டும். பக்கத்து ஸீட் பெரிய மனிதரின் தோளை விட்டு நகரமாட்டேன் என்பது போல இணைந்திருந்த காமிரா (விலையுயர்ந்தது) சேகரின் மேல் – அந்த மனிதர் சிறிது சாய்ந்த போது இடித்தது.
சேகரின் முகம் அந்தக் காமிரா வைப் பார்த்ததும் பளபள வென்று ஜீப் ஹெட்லைட்போல் ஜொலித்தது; விமானம் செய்த குலுக்கலில் தன் மேல் இடித்த ஃபாரின் காமிராவைச் சேகரும் ஆவலுடன் பார்த்தான். அவன் கைகள் காமிராவைத் தொட்டுக் ‘கிளிக்’ அந்தக் செய்யத் துறுதுறுத்தன.
பக்கத்திலிருந்தவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான் சேகர்.
பக்கத்து ஸீட் மனிதர் பஞ்சாபி என்று தெரிந்தது. அவர் பெயர் மஞ்சூர்சிங். அவருடன் பேசிக்கொண்டிருந்தான் சேகர், ஆங்கிலத்தில் சற்று நேரம் அவருடைய காமிராவையும் சிறிது ஆராயந்தான்.
சாதாரணமாகப் புகைப்படக் கலை தெரிந்த எல்லோரும் முதலில் லென்ஸெல்லாம் பார்த்துவிட்டு ஃபிலிம் சேம்பரைத்தான் திறப்பார்கள். அதிலுள்ள ஸ்கிரினில் ஒரு தேய்ப்புக் கண்ணாடியை வைத்து ஷட்டரை B-இல் வைத்து அழுத்தினால் தேய்ப்புக் கண்ணாடியில் வெளிப் பிம்பம் தெரியும். அதை வைத்துக் கொண்டு காமிரா தரத்தை எடை போடுவார்கள்.
சேகர்தான் ஃபோட்போகிராபியில் ‘புலி’யாயிற்றே! ஃபிலிம்சேம்பரைத் திறக்க முயற்சி செய்தான்.
அந்தச் சர்தார்ஜி அவனிடம் ஃபிலிம் சேம்பரைத் திறக்கக் கூடாதென்று கண்டிப்பான குரலில் கூறினார்.
எதைச் செய்ய வேண்டாம். என்று கூறுகிறோமோ செய்வதுதானே மனித சுபாவம்! அதைச் ஃபிலிம் சேம்பரை நிச்சயமாகத் திறந்து விடுவது என்று தீர்மானித்தான்.
சேகர் காமிரா ஷட்டரைத் திறக்கும் போது அவனை ஒன்றும் சொல்லவில்லை, அந்த மஞ்சூர் சிங். ஆகவே காமிராவில் ஃபிலிம் இருக்க முடியாது என்று எண்ணினான்.
சேகர் அவனுடைய துப்பறியும்’ மூளை வெகு வேகமாக வேலை செய்தது. ஒருவேளை இதில் வேறு ஏதாவது அபாயகரமான அல்லது கடத்தலுக்கான சரக்கு இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. திடீரென்று ஃபிலிம் சேம்பரைத் திறந்துவிட்டான்.
அதில் ஓர் அழகான சிறிய வெடிகுண்டு இருந்தது. சேகருக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவசியமில்லாத நேரத்தில் விரல்கள் ‘டைப்’ அடிக்கத் தொடங்கின. இருந்தாலும் மனோ தைரியத்தை அவன் தளர விடவில்லை. சைகை மூலம் தனக்கு ஆபத்து என்று நண்பர்களுக்குத் தெரிவித்தான்.
இதற்குள் மஞ்சூர் சிங் தம் பாக் கெட்டிலிருந்த துப்பாக்கியை ஒரு கர்ச்சீப்பால் மறைத்து அதைச் சேகர் முதுகில் வைத்து அழுத்தினார்.
சேகர் இடக்கையை மேலே தூக்கிச் சைகை செய்ததைக் கண்ணனும் நாகராஜனும் தற்செயலாகத்தான் கவனித்தார்கள். உடனே
அவர்களும் பரபரப்பு அடைந்தார்கள். நேராக எழுந்து ‘காக்பிட்’டுக்குள் சென்று பைலட்டைக் கேட்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தச் சர்தார்ஜிக்கு இவர்கள் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாதல்லவா! ஆகவே சைகை மூலம் விமானப் பணிப் பெண்ணைக் கூப்பிட்டு அவளிடம் சேகருக்கு நேர்ந்துள்ள ஆபத்தை ரகசியமாக ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார்கள். அவளும் அதைப் புரிந்துகொண்டு காப்டனிடம் சென்று தெரிவித்தாள்.
விமானம் பம்பாயை அடையச் சில விநாடிகளே இருந்தன: அவரவர்கள் தம்தம் பெல்ட்டுகளை மாட்டிக் கொண்டார்கள். விமானம் கீழே இறங்கும்போது ஏற்பட்ட குலுக்கலில் ‘சிங்’கின் துப்பாக்கி அவன் கைப் பிடியிலிருந்து சிறிது நகர்ந்து கீழே விழுந்தது.
சற்றும் தாமதிக்காமல் சேகர் அதை எடுத்து அவன் முதுகிலே வைத்து அழுத்தினான். விமானமும் ‘ரன்வே’யில் சிறிது தூரம் ஓடி நின்றது.
ஏணிகள் பொருத்தப்பட்டன. கண்ணனும் நாகராஜனும் ஆளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். கீழே பைலட்டின் ‘ஓயர்லெஸ்’ செய்தி கிடைத்துக் காத்திருந்த விமான போலீஸ் அந்த மஞ்சூர் சிங்கைப் பிடித்துக்கொண்டது.
அவனுடைய தாடி மீசைகளைப் பிய்த்ததில் அவன் ஒரு பழைய கொள்ளைக்காரன் என்றும் நக்சல் பாரியாக மாறினவன் என்றும் தெரிய வந்தது. அவன் அந்த விமானத்திலேயே பயணம் செய்து அதை வெடி குண்டினால் தகர்த்து விடத் தீர்மானித்திருந்தானாம். அவன் காமிரா சேகரின் வலக்கையில் சிக்கிவிட்டதால் அவன் வெடி குண்டைத் தொடக்கூட முடியாமல் போய்விட்டதாம்!
சேகருக்கு ஒரே சந்தோஷம், தன்னால் ஒரு தேசத் துரோகி பிடிபட்டான் என்று. சேகருக்கும் அவன் நண்பர்களுக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளெல்லாம் கைகுலுக்கி மாலை போட்டார்கள். அவர்களுடைய படங்கள் தினத் தாள்களையெல்லாம் அலங்கரித்தன.
சேகர் பெருமிதத்துடன் நாகராஜனிடம், “டேய், என்னைப் பயந்தாங்கொள்ளி என்றாயே! பறக்கிற பிளேனில் ஒரு தேசத் துரோகியைப் பிடித்திருக்கிறேன் பார்!” என்று வெற்றி முழக்கமிட்டான்.
நண்பர்கள் மூவரும் குஷியாக பம்பாயை வலம் வந்தார்கள். இரவு நேரம், பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் அவர்களை மூன்று உருவங்கள் தலையில் குண்டாந் தடியினால் எதிர்பாராமல் தாக்கின..
“ஆ! அம்மா!” என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான் சேகர்; அவன் கைகால்கள் விண்விண் ணென்று வலித்தன. அவன் கண்களில் பூச்சி பறந்தது. பக்கத்தில் ரேடியோ அலறிக்கொண்டிருந்தது. ஏதோ இந்திப் பாட்டு.
“என்னடா நல்ல தூக்கம் போலிருக்கே?” என்று நமட்டுச் சிரிப்புடன் சேகரைக் கேட்டார்கள் கண்ணனும் நாகராஜனும்.
அப்போதுதான் சேகருக்குத் தெரிந்தது. ”ஆளை விடுடா துருப் பிடித்த ரம்பம்!” என்று நாகராஜனிடம் சலிப்புடன் கூறியபடி சோபாவில் சாய்ந்த அவன் நன்றாகத் தூங்கிவிட்டான் என்பது.
“தூக்கமா? சும்மா கற்பனை செய்துகொண்டிருந்தேன். நாம் துப்பறிந்தால் எப்படியிருக்கும் என்று- அவ்வளவுதான்!” என்று தன் கனவு முழுவதையும் விவரித்தான் சேகர்.
அவர்கள் சொன்னார்கள்! “டேய் மடையா! இந்தக் கற்பனையில் அடிப்படைத் தவறு ஒன்று இருக்கிறதடா! செக்யூரிடி செக்கிங் இல்லாமல் யாரையுமே இப்போது விமானத்தின் பக்கத்தில் கூட விடுவதில்லை. ஃபிலிம் சேம்பரைக்கூடப் ஃபிலிம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திறந்து பார்த்துத்தான் அனுப்புகிறார்கள்!”
தான் கற்பனை என்றதும் அதில்கூட நண்பர்கள் தப்புக் கண்டுபிடிக்கவே சேகர் பயந்து, “டேய்! இது கற்பனை இல்லைடா, கனவுதான். கனவில் யாரும் தப்புக் கண்டு பிடிக்க முடியாது!” என்று பரிதாபமாக வாபஸ் வாங்கினான்.
”அப்படி வாடா வழிக்கு!” என்று நண்பர்கள் அவன் முதுகில் பலமாகத் தட்டிக்கொடுத்தார்கள்!
– 01-07-1971, கண்ணன் இதழில் வெளியான சிறுகதை.
![]() |
சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க... |