தீயின் சிறு திவலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 2,249 
 
 

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள் 

காளிதேவி – ஓர் தேவதை 

ஜஸ்வன்த் சிங் – சூரியபுரி அரசன் 

விஜெய சிங் – அவனது குமாரன்

சுரேஷ் சிங் – ஜெயபுரியில் ஓர் ஐமீன்தார்

ராம் சிங், சோடா சிங் அல்லது சின்னப்பன் – சுரேஷ் சிங் குமாரர்கள் 

கோபால் சிங் – ஜெயபுரியில் ஓர் தனவந்தன். 

ஜெயா – சுரேஷ்சிங் குமாரத்தி 

சாந்தி, கமலா – அவளது தோழிகள்

மந்திரிகள், ஜனங்கள், பூசாரிகள், கிழவர்கள், தள கர்த்தர்கள், ஸ்திரீகள், சேவகர்கள், தாதிகள், சம்பிரதி, ஏலம்போடுகிறவன், அடிமைகள், சிறைக்காவற்காரர்கள், மாலுமிகள், தாய்க் கிழவிகள், சிறுவர்கள் முதலியோர். 

முதல் அங்கம்

முதற் காட்சி

இடம்– காளி கோயிலின் வெளிப் பிராகாரம். 

காலம் — பகல். 

இங்கிருக்கும் பாதி இடிக்கப்பட்ட மண்டலத்தின்மீது நின்றுகொண்டு சின்னப்பன் பேசுகிறான். கிழே ஜனங்கள் நின்று கொண்டு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். 

சி: பெரியோர்களே! அண்ணன்மார்களே! தம்பிமார் களே! நான் சிறியவனாயினும், நான் சொல்வதை சற்று தயைசெய்து கேட்கும்படி வேண்டிக்கொள்ளு கிறேன். உலகனைத்தையும் ஈன்ற நமது அன்னை யாகிய காளிதேவி, நம்மையெல்லாம் படைத்த பொழுது, சிலரை அரசர்களாகவும், சிலரை அடிமைகளாகவும், சிலரை பணக்காரர்களாகவும், சிலரை ஏழைகளாக வும், சிலரை எஜமானர்களாகவும், சிலரை வேலைக் காரர்களாகவும், சுருக்கிக் கூறுமிடத்து சிலரை உயர்ந்தவர்களாகவும், சிலரை தாழ்ந்தவர்களாகவும் சிருஷ்டித்ததற்குக் காரணம், இவ்லக வாழ்க்கை யானது சரிவர நடக்கும் பொருட்டே! காலசக்கர மானது சரியாகச் சுழலும் பொருட்டே! உலகமானது அபிவிர்த்தி யடைந்து உய்யும் பொருட்டே! அதற்கு நாம் ஒவ்வொருவரும் எந்த ஸ்திதியிலிருந்தபோதிலும், அவரவர் கடமையைச் செய்தல் வேண்டும். பகவத் கீதையில் கூறியிருக்கிறபடி அவனவன் தன் சொந்த தர்மத்தின்படி நடப்பானாயின் உலகம் க்ஷேமமடையும் – இதுதான் சனாதன தர்மம், அதைவிட்டு, நமது கடமையை மறந்து அதர்ம வழியில் புகுவோமாயின், தாம் எல்லாம் நாச மடைய வேண்டியதே! இந்த உத்தம நீதியைக் கொண்டு, நமது தற்காலக் கடமை யென்ன வென்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த நாட்டையாளும் நமது அரசர், பல வருஷங்களாகக் கொடுங்கோல் மன்னனாகி, ராஜ தர்மத்தை மறந்து, நமது நாட்டை எல்லாவிதத்திலும், பாழாக்கிவருகிறார். நம்மைப் படைத்த தெய்வத்தையே மதிக்கிறார் இல்லை! மதப்பிரஷ்டனாகி விட்டார்! இம் மண்டபத்தையே இடித்து இதன் கற்களையெல்லாம், தனக்கு அரண் மனை கட்ட எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்! இதை யெல்லாம் நாம் சும்மாகப் பொறுத்துக்கொண் டிருந்தோம் இப்பொழு தென்னவென்றால்–இக் கோயிலில் காளிதேவியின் விக்ரஹத்தை எடுத்துவிட்டு, தனது படத்தை இங்கு வைத்து எல்லோரும் பூஜிக்க வேண்டுமென்று கட்டளை யிட்டிருக்கிறார்! எதற்கும் ஒரு அளவில்லையா?. நான் உங்களைக் கேட்டுக் காள்ளுகிறேன் இப்பழி பாவங்களை யெல்லாம் பார்த்துக்கொண்டு எத்தனை காலம் சும்மா இருக்கப் போகிறீர்கள்? 

(ஒருவ்ன்) பொறு அப்பா! நீ என்ன பேசுகிறாயென்று உனக்குத் தெரியாது! 

சி: ஆமாம்! நான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது! தெரியாதெனக்கு! நான் நிஜத்தைச் சொல்லுகிறபடியால் நான் பயித்தியக்காரன்! பித்தம் பிடித்தவன்! ஏன் அப்படி விழித்துப் பார்க்கிறீர்கள் என்னை?- என்னைத் திட்டுகிறது தானே? என்னைப் பார்த்து சிரிக்கிறது தானே? சொல்லுங்கள் ஏதாவது! செய்யுங்கள் ஏதாவது! சும்மா மாத்திரம் சிலைகள்போல் இராதீர்கள்! 

(மற்றொருவன்) ராஜா உத்தரவப்பா! நாம் என்ன செய்யலாம்? 

சி: ராஜா ஆக்கிணை! இந்த ராஜ்யத்தில் நமது தகப்பன் மார்களும், பாட்டன்மார்களும் எப்பொழுதும் அவருக்குக் கீழ்ப்படிந்த பிரஜைகளாய் இருந்தனர் வாஸ்தவம். ஆயினும் அவர்கள் காலத்தில் அரசர்க ளெல்லாம் சன்மார்க்கத்தில் நடந்து நம்மையெல்லாம் காத்து வந்தனர். இந்த அரசர் ஆளத் தொடகியது முதல் – இப்பாதகன்! இந்த நாஸ்தீகன்! — மதத் ரோகி!- கொடுங்கோல் மன்னன்! — இவன் பட்டத் துக்கு வந்த பிறகு நமது அறுவடைகளெல்லாம் அக்கினிக்கு இறையாக்கப்பட்டன! நமது வீடுகள் எல்லாம் பாழாக்கப்பட்டன! நமது சகோதரிகளும் பெண்களும் கற்பழிக்கப்பட்டு, கடைத் தெருவில் விற்கப்படுகின்றனர். – இவற்றை யெல்லாம் சகித்துக் கொண்டு நாம் சும்மா இருக்கிறோம்! 

(ஜனங்கள்) (மெல்ல) வெட்கக் கேடு ! வெட்கக் கேடு!

சி: பிறகு என்னவென்றால் அவரது காதுகளுக்கு வெறுப்பா யிருக்கிறதென்று – அவரது நித்திரைக்கு பங்கம் வருகிறதென்று, இக்கோயிலின் மணிகளை அடிக்கக் கூடாதென்று கட்டளையிட்டார்! நாம் முறையிட்டோம். நமது முறைகளைக் கேட்டபாடில்லை. இப்பொழு தென்னவென்றால் – நம்முடைய தேவிக்கு நம்முடைய அன்னைக்கு – எல்லாம் வல்ல தெய்வத் திற்கு – காளிகாதேவிக்கு! நாம் பிரார்த்தனை செய்ய லாகாதென்று கட்டளை யிட்டிருக்கிறார்! இவருக்கு பூஜை செய்ய வேண்டுமாம்!- நீங்கள் எவ்லாம் இந்த மடத்தனமான உத்திரவுக்கிணங்கி, சும்மா நின்று கேட்டுக்கொண்டிருக்கப் போகிறீர்களா? உங்களில் ஒருவனாவது இல்லையா? உங்கள் மதத்திற்காக உங்கள் கடமையைச் செய்யத் தக்க ஆண்பிள்ளை? இல்லையா?- ஒருவன்கூட இல்லையா !- ஆனால் நான் என் கடமையை நிறைவேற்றுகிறேன்! இதோ இக் கொடுங்கோல் அரசன் படத்தை கிழித்தெறிகிறேன்! இவனது முகத்தைப் பாருங்கள்! பாருங்கள் இம் முகத்தை! நமது காளிகாதேவியைப் பூசிப்பதை விட்டு இவனைப் பூஜிக்க வேண்டுமென்று இம்முகம் கேட்கிறது! இந்த முகத்தில் காரித்துப்புகிறேன்! 

(ஜனங்கள்) ஆஹா! ஹா! ஹா! 

சி: இதோ இதைக் கிழித்தெறிகிறேன் பல துண்டுகளாக! (அப்படியே செய்கிறான்) 

திடீரென்று சேவகர்கள் புடைசூழ அரசன் வருகிறான். 

அ: ஹும்! நீ தானா என் கடமையைமீறி நடக்கப்போகிற வன்! என் படத்தைக் கிழித்தெறிந்தவன் நீ தானா? நீ தானா காளிதேவிக்கு மறுபடியும் பூஜை ஆரம் பித்து, இக்கபட வேஷதாரிகளாகிய பூஜாரிகள் எல்லாம் உங்களை அடக்கி ஆளச் செய்யப் போகிறவன்? 

சி: நான் உங்களுக்குப் பயப்படவில்லை! உங்களுக்குப் பயப்படவில்லை நான்!- நான் சொல்லுகிறது கேட் றதா? – நான் உங்களுக்கு பயப்படவில்லை!- ஆம்! நான்தான் உங்கள் கட்டளையை மீறி நடக்கப்போ வன்! நான்தான் உங்கள் படத்தைக் கிழித்தெறிந் தவன்! நான்தான் மறுபடியும் பூஜை ஆரம்பிக்கப் போகிறவன் எங்கள் தேவிக்கு ! – காளிகா தேவிக்கு! எல்லாம் வல்ல எங்கள் தெய்வத்திற்கு! (அரசன் ஒரு சைகை செய்ய ஒரு சேவகன் சின்னப் பனை குத்திக் கொல்கிறான்). 

சி: காளி- தேவிக்கு ! – ஜேய்! (மரிக்கிறான்). 

(கும்பலிலிருந்து ஓடிவந்து சின்னப்பன் தகப்பன்) 

ஹா! ஹா! (பிள்ளையைக் கரத்தில் ஏந்திக்கொள்ளுகிறான்.) 

அ: காளிதேவிக்கு – தெய்வத்திற்கு – எல்லாம் வல்ல கட வுளுக்கு – ஜேய்!-ஹும் ! உங்கள் கண்ணால் நீங்கள் பார்த்து மிராத தெய்வம் உங்களுக்கு என்ன பலன் கொடுக்கும்? இதோ பார்த்தீர்களா அதை வணங்கு வதின் பலனை!- இதோ நான் இருக்கிறேன் ! எல்லாம் வல்லவன்! எல்லா சக்தியும் வாய்ந்தவன்! எல்லா ஐஸ்வர்யமும் படைத்தவன்! எதை வேண்டினும் கொடுக்கும் திறமுடையவன் ! என்னைத் தொழுங்கள்! என்னைப் பணியுங்கள்! என்னிடமிருந்து எல்லா நலனும் அடையலாம்! நீங்கள் வேண்டுவதையெல்லாம் பெற்று வாழலாம்! 

சு: நீங்கள்-அரசர் – எங்களுக்குமேல் சக்தி வாய்ந்தவரே! அந்த சக்தியினால், என் அருமை மைந்தனைக் கொன் றீர் ! கொலைக்கஞ்சா உமது படைவீரர்களால் புகழ் நீர் தக்கவரே! ஆயினும் நீங்கள் தெய்வமாகமாட்டீர் ! நாங்கள் எல்லாம் உமது பிரஜைகள், உங்களுடைய அநியாயத்தையெல்லாம்பொறுத்துக்கொண்டு உமக்கு அடங்கி நடந்துவருகிறோம்!- உம்மைப் பூசிக்கும்படி எங்களையேன் வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் பூசைக்கு அருகரல்ல- 

அ: நான் பூசைக்கு அருகனல்ல! அந்த மட விக்ரஹம் உங்கள் பூசைக்கு யோக்கியதை யுடையது !- நான் யோக்கியனல்ல! சொல் மறுபடியும், சொல் அதை சொல் அதை! (ஒரு சைகை செய்ய சேவகர்கள் சவுக் கினால் அவனை அடிக்கிறார்கள்). 

சு: ஆம்! சொல்லுகிறேன் – அப்பா! – அடித்துக் கொள் லுங்கள் வேண்டுமென்றால் என்னை ! – நீங்கள் பூஜைக்கு அருகரல்ல! எங்கள் காளிகா தேவியே!- அப்பா !- பூஜைக்கு — அருகராவார்கள்!- அப்பா!

அ: பார்ப்போம் அதை !-சேவகா! முடி உன்வேலையை ! (சேவகன் மறுபடியும் அடிக்கிறான்). 

திடீரென்று ஜெயா ஓடிவருகிறாள். 

ஜெ: நிறுத்து! நிறுத்து! – ஐயோ! இவர் என் தகப்பனார்! வயோதிகர்!- மகாராஜா! உமக்கு ஈவு இரக்க மில்லையா? கருணையில்லையா? பச்சாத்தாபமில்லையா? 

அ: உன் தந்தையா? இருந்தால் எனக்கென்ன? ஆயினும் நீயார்? – என்ன அழகி!- ன்ன் யெளவனம்!- என்ன ரூபவதி! இவளை ஏன் எனது ஆட்கள் இதுவரையில் என் அரண்மனைக்கு அழைத்துவர வில்லை? யார் அங்கே? இவளை அழைத்து வாருங்கள் என் அருகே! 

(ஓர் சேவகன்) வாடியம்மா! நீ அதிர்ஷ்டசாலிதான்! (அவளருகில் போகிறான்). 

ஜெ: (அவன் கரத்தினின்றும் திமிறிக்கொண்டு) தீண்டாதே என்னை! 

அ: ஹா! ஹா! கோபக்காரியா யிருக்கிறாள்! இவளை சீக் கிரம் இழுத்து வாருங்கள் அரண்மனைக்கு! அப் பொழுது பார்ப்போம் இவள் கோபத்தை !- இவ்வளவு போதும் இன்றைக்கு – இதுவே இவர்களுக்குப் போது மான பாடமாகும்- வாருங்கள் போவோம். (சேவகர்களுடன் போகிறார்). 

ஜெ: அந்தோ ! – மடிந்தாரே என் தந்தையும்! (அவர் உடல்மீது விழுகிறாள்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி

இடம் – கோயில் கர்ப்பக்கிரஹம் கோயில் மணியானது துணியினால் சுற்றப்பட்டிருக்கிறது. சில பூஜாரிகள் சும்மா உட்கார்ந்திருக்கின்றனர். ஒருபுறமாக கோபாலன், சாந்தி, கமலா, உட்கார்ந்திருக்கின்றனர். 

க: ஒரு நாள் கழிந்தது! அதனுடன் மாண்டவர்களின் துன்பங்களும் துயரங்களும் — அவர்களுடைய ஞாபகமும் (பெருமூச்செறிகிறாள்). 

சா: மாண்டவர்களின் துன்பங்களும் துயரங்களும் ஒழிந் தன!- ஆனால் அவர்கள் ஞாபகம் மாத்திரம் மாற வில்லை !- காளிகாதேவி – மாறவில்லையே! – தாயே காளிதேவி! எங்களைக் கடைக்கண்ணாலாவது பார்த்து அருளலாகாதா? ஏன் பராமுகம் செய்கிறீர்கள்? உங்களுக்கு ஏன் எங்கள்மீது பச்சாத்தாப மில்லாமற் போயிற்று? எங்கள்மீது ஏன் கோபங்கொண்டிருக்கிறீர்கள்? எங்களை முற்றிலும் இவ்வாறு நீங்கள் மறந்து போகும்படி நாங்கள் உங்களுக்கு என்ன அபராதம் இழைத்தோம்? எங்களையெல்லாம் அழிந்து மண்ணாய்ப்போகச் சொல்கிறீர்களே! இது உமக்கு தர்மமா? – தாயே! லோகமாதா? இந்தக் கொடுங்கோல் அரசனது ஆட்கள் எங்கள் வீடுகளையெல்லாம் கொள்ளையடித்து, எங்கள் சொத்துக்களையெல் லாம் வாரிக்கொண்டு போகின்றனர்! – பெண்டிரை யெல்லாம் மானபங்கம் செய்கின்றனர்! இதையெல்லாம் நீர் பொறுத்துக்கொண்டிருக்கிறீரே! இவை யெல்லாம் போனாற்போகிறது, இப்பாதக மன்னன், உங்களுக்குப் பூஜைசெய்ய லாகாதென்றும், உங்கள் கோயிலின் மணியை அடிக்கக் கூடாதென்றும் கட்டளையிட்டிருக்கிறாரே! அதை வஸ்திரத்தால் சுற்றிக் கட்டியிருக்கிறாரே! இதையாவது தாங்கள் கவனிக்க லாகாதா? அரசனுக்குப் பயந்து ஜனங்களெல்லாம் உங்களுக்கு பூஜை செய்யாம லிருக்கின்றனர். கோயில் பூஜாரிகளும் உங்களுக்குப்பயப்படாது அரசருக்கு பயப்படுகிறார்களே!- தாயே! காளிகாதேவி! எங்களுக்கெல்லாம், கொலைக்கஞ்சா அப்பாதகனுக்கு பயப்படாதபடியும், உங்களுக்கு பயந்து நடக்கும்படி யாகவும் போதியுங்கள்! தேவி! தேவி! என் பிரார்த்தனையைக் கேளுங்கள்! எங்கள் எல்லோருடைய பிரார்த்தனையையும் கேளுங்கள்!- என்ன அது ! – மணி சப்தம் கேட்கிறதே! எந்தமணி சப்தம் அது?

(ஒரு பூஜாரி) ஆம்! மணிசப்தம் கேட்கிறது! இந்த மதப் பிரஷ்ட மன்னனுடைய கொடுமைக்கு இணங்க வேண்டாமென்று அம்மணி, நமக்குச் சொல்கிறது! காளிதேவியின் மகிமையே மகிமை! நம்மையெல்லாம் கஷ்டங்களினின்றும் விடுவிக்க காளிதேவி கருணை கூர்ந்துவிட்டார்கள்! 

சா: ஆம்! எனக்கும் நன்றாய்க் கேட்கிறது! நம்முடைய காளிகாதேவி நமது பிரார்த்தனைக்கு இணங்கியிருக்கிறார்கள்! காளிதேவி நமது குறைகளையெல்லாம் தீர்க் கப் போகிறார்கள்! என் வார்த்தையை நம்பமாட் டீர்களா? உங்களுக்கு அர்த்தமாகவில்லையா? அதோ! அவர்கள் தான் காளிகாதேவி!- காளிதேவியின் அவதாரம்!- உங்களுக்குக் கண் இல்லையா?- பணியுங்கள் ! பணியுங்கள்! பாதத்தில் வீழ்ந்து பணியுங்கள்! 

ஜெயா மணியை அடித்துக்கொண்டு பாடிக் கொண்டு வருகிறாள். 

(மு.பூஜாரி) யார் அது? 

(இ.பூஜாரி) அவர்கள்தான் ஜெயா, நேற்றைத்தினம் மஹாராஜவைப் பூஜிக்க மறுத்ததற்காக கொல்லப் பட்ட பெரிய ஜமீன்தார் சுரேசருடைய குமாரத்தி (மு.பூஜாரி) அப்பெண் ஜெயாதான் – சந்தேகமில்லை! ஆயினும் குரல் அப்பெண்மணியின் குரலல்ல! பழிவாங்க வேண்டுமென்று நம்மையெல்லாம் உந்தும்படியான ஒரு தெய்வத்தின் குரல்போலிருக்கிறது! 

ஜெ: உம்! (கோயில் மணியருகிற்போய் அதைச் சுற்றி யிருக்கும் வஸ்திரத்தை அவிழ்த்துவிட்டு அதை அடிக்கப்போகிறாள்). 

சா: ஜெயா! – ஜெயா !- ஜெயா ! அரசருடைய ஆக்கினை யைமீறி உன்கையிலிருக்கும் மணியை வெளியில் அடித்தால் நீ மாத்திரம் உத்திரவாதமாவாய்! ஆயி னும் கோயிலுள்ளே இருக்கும் இந்தமணியை அடிப் பாயாயின் இதற்கு நாங்கள் எல்லோரும் உத்தரவா தம் சொல்லவேண்டி வருமே! இதனால் எங்கள் எல்லோ ருக்கும் என்னகதி வாய்க்கும் என்று நீயே அறி வாய்!- நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் போதும் இனிமேல் எங்களால் ஒன்றும் பொறுக்கமுடியாது!- அதோ, அக்குழந்தைகளைப்பார்! அவர்களுடைய தாய் தந்தையர்கள் நேற்று கொல்லப்பட்டனர்! அவர்கள் அனாதைகளாயினர்! திக்கற்ற பிராணிகளாயினர்! அவர்களுக்காக அழுவாரும் இல்லை! அவர்களைக் காப் பாற்றுவாருமில்லை! இக்கொடுங்கோன் மன்னனுக்கு பயந்து! இதையெல்லாம் யோசித்துப்பார்! இந்த மணியை அடிக்காதே! அடிக்காதே! 

ஜெ: மற்றவர்களுடைய நன்மைக்காகக் கஷ்டம் அனுபவிப் பவர்களே. தெய்வத்தின் அருளைப் பெறுவார்கள்! நேற்றுடன் நாம் எல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டிய காலம் முடிந்தது! இனி நாம் இக்கஷ்டங் களினின்றும் விடுதலையடைந்து  சுகமனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது! 

சா: ஜெயா! இதனால் கமக்கெல்லாம் என்ன கொடிய கஷ்டங்கள் நேரிடும் என்பதை யோசித்துப்பார்! 

ஜெ: அக்கஷ்டங்களை யெல்லாம் நான் என் தலையில் தாங் கிக்கொள்ளுகிறேன் — என் தந்தை தன்மதத்திற்காக உயிரைக் கொடுத்தார்! என்தம்பி காளிகாதேவிக் காக தன் உயிர்நிலையாகிய இரத்தத்தைச் சொரிந் தார்! இன்னும் நேற்று நமது பந்துக்களும் நண்பர்களும் எத்தனைபெயர் மாண்டனர் ! இந்த வேதனையையும் அவமானத்தையும் அனுபவிப்பதைவிட, நான் மடியச் சித்தமாயிருக்கிறேன்! – நான் இந்த மணியை அடிக்கப்போகிறேன்! அப்படிச்செய்வது, நம்மையாவது அழிக்கட்டும், இக்கொடுங்கோல் அரசனையாவது அழிக்கட்டும்! – சகோதர சகோதரிகளே! காளிகா தேவிக்கு ஜெய்! (மணியை அடிக்கிறாள்). 

(நா.பூஜாரி) அடே! வாங்கடாப்பா! நம்பல்லாம் ஓடிப் பூடலாம்! 

(ஓடிப்போகப் பார்க்கின்றனர்)

ஜெ: நில்லுங்கள்! போகாதீர்கள்! எங்கள் பிரார்த்தனையை தெய்வத்திற்குத் தெரிவிக்கவேண்டிய பிரதிநிதிகள் நீங்கள்! எங்களை எந்தவழியில் விடுகிறீர்களோ அதற்கு நீங்கள் உத்தரவாதம்! எங்களையெல்லாம் பரிசுத்தமாக்க வேண்டியவர்கள் நீங்கள்! கோரபாபத்திற்கு ஆளாக்காதீர்கள்! – உங்களுக்கு வெட்கமில்லையா? இந்த மணியானது உங்கள் ஹிருத யத்தையெல்லாம் கலக்கி உங்கள் கடமையைச் செய்யும்படி உந்தவில்லையா? அரசனால் நம்மை என்ன செய்யக்கூடும்? – கொல்லக்கூடும்! அவ்வளவுதானே! கொடுப்போம் நமது உயிர்களை காளிகாதேவியின் பூஜையை நிறைவேற்றுவதற்காக! இதனிலும் நமக்கு கேடானகதி என்ன வாய்க்கப்போகிறது? என்றைக் கிருந்தாலும் ஒருநாள் இறக்கவேண்டியவர்கள் தானே நாம் எல்லோரும்? நாம் எல்லோரும் சாஸ்வதமாய் இருக்கப்போகிறோம்,எமன் நமது அருகில் ஒருநாளும் வரமாட்டான் என்று, க்ஷணமும் நம்புகிறீர்களா? – உட்காருங்கள் அங்கேயே! பூஜையை ஆரம்பியுங்கள்! – ஆகட்டும்! ஆகட்டும்! வருவது வரட்டும்! நாம் சீக்கிரம் இறப்பதானால், அது இன்றைக்கே ஆகட்டும்! காளிகா தேவியின் சந்நிதியிலேயே! ஒரு புண்யகர்மத்திற்காக! நமது மதத்திகாக! நமது தெய் வத்திற்காக! – காளி மாதாவுக்காக! 

(மணியை அடிக்கிறாள், பூஜாரிகள் மெல்ல பூஜையை ஆரம்பிக்கிறார்கள், எல்லோரும் பூஜையை ஆரம்பிக்கிறார்கள்). 

(ஒரு கிழவன்) பார்த்தீர்களா? மறுபடியும் என்ன ஆர்வத்துடன் எல்லோரும் பூஜையை ஆரம்பித்திருக்கிறார்கள்! மேய்க்கும் இடையனில்லாத ஆட்டுமந்தையைப் போல் இருந்தார்கள் இதுவரையில்! 

(இ.கிழவன்) ஆம்! அந்த இடையன் கேவலம் ஒரு பெண் பிள்ளை! அவள் பேசிய மாதிரியைக் கேட்டீர்களா? அவளது குரல் – 

(மூ.கிழவன்) அவள் வாயினின்றும் வந்தது- பேசுவதற்காக- வார்த்தைகளா யிருந்தன! ஆயினும், அது தான் அக்னி! ஜ்வாலாக்னி! இந்த அக்னி ஜ்வாலை யானது நமது கொலைக்கஞ்சா கொடுங்கோல் மன்னனது நாடெல்லாம் பரவி, அவனது கொடிய செய்கைகளை யெல்லாம் பஸ்மீகரப்படுத்தும்! 

(இ.கிழவன்) அடே! மூடு வாயை! – இளவரசர்! – இதற்கெல்லாம் காரணபூதமாயிருக்கும் அரசனது குமாரர்! யாருக்கு விரோதமாக இந்த அக்னி கொளுத்தப் பட்டதோ அவருடைய மகன்! நாம் யாருக்கு விரோதமாகப் பேசிக்கொண்டிருந்தோமோ, அவரது மைந்தன்! அதோ வருகிறார்! 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி

இடம் – கோயிலின் பூந்தோட்டம்

காலம் – பகல்.

ஜெயா நடந்துவருகிறாள். 

ஜெ: அக்குயிலின்குரல் காதுக்கு என்ன இனிமையாயிருக்கிறது ! – யாரோ என்னைப் பின்தொடர்ந்து வருகிறாற் போலிருக்கிறதே யார் அது? (திரும்பிப் பார்க்கிறாள்). 

விஜயன் வருகிறான். 

ஜெ: (ஒருபுரமாக) அந்த தகப்பனாருடைய பிள்ளை – இளவரசருக்கு நமஸ்காரம் – கொடுங்கோன் மன்னனுக்குப் பிற்காலம் இந்நாட்டை யாளப்போகிற குமார அரசருக்கு நமஸ்காரம்! 

வி: ஹும்! (பெருமூச்செறிகிறான்). 

ஜெ: என் நமஸ்காரத்தை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா? நான் உங்களுடைய அந்தஸ்திற்கு மிகவும் கீழ்ப்பட்டவள்! நீங்கள் பார்க்கவும் தகாதவள்! – உங்களை நான் நமஸ்கரித்தது என்தவறு! 

வி: நான் அக்கோயிலில் உன்னைக் கண்டேன் – உன் பாட்டினால் எங்களையெல்லாம் துவேஷிக்கும்படி உந்தியதைக் கேட்டேன். 

ஜெ: சந்தோஷம்! என் பாட்டானது உமது உள்ளத்தைக் கரைத்ததா? கலக்கச்செய்ததா? நான் மறுபடியும் அதைப்பாடலாமா? ஆனால் ஒரு வித்யாசமிருக்கும் – அப்பொழுது பழிக்கஞ்சியவர்களுக்காகப் பாடினேன்! இப்பொழுது பழிக்கஞ்சா ஒருவருக்காகப் பாடுகிறேன்! கேளுங்கள் மறுபடியும் அப்பாட்டை (பாடுகிறாள்). 

வி: நிறுத்து அதை ! கேளேன் அதை இன்னும்! இப்படிப் பாடுவதற்காக என் கடமைப்படி உன்னை சிறையிலிட்டு சித்திரவதைச் செய்து செப்பொணாத் துன்பத்திற்கு ஆளாக்கக்கூடும்! தூக்குமரத்தில் உன்னை நிறுத்தி உன் கழுத்தில் என் கையால் தூக்குக் கயிற்றைப் போடக்கூடும் – அல்லது என் கட்டாரியால் – இட்சணம் உன்னைக் குத்திக்கொல்லக்கூடும்!

ஜெ: செய்யுங்கள்! – கொல்லுங்கள் என்னை! – ஏன் சும்மா இருக்கிறீர்கள்? 

வி: அதற்குக் காரணம் — நான் உன்மீது கொண்ட – காதல்! 

ஜெ: நீர் என்மீது கொண்ட — காதல்! – காதல்! காதல் என்றால் அர்த்தம் என்ன!- ஆம் – இந்த வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன – இதே வார்த்தைகள்தான் – முன்பு ஒருதரம் கேட்டிருக்கிறேன் – அப்பொழுது எனக்கு ஓர்வித ஆச்சர்யத்தைத் தந்தன – ஆயினும் அவைகளை என்முன்பு கூறிய மனிதன் இறந்துபோனான் – உமது ஆட்கள் அவனைக்கொன்றனர்! — அதே வார்த்தைகளைத்தான் இப்பொழுது கேட்கிறேன் – ஒரு அரசகுமாரன் வாயினின்றும் – கொடுங்கோன் மன்னன் குமாரன் வாயினின்றும்!

வி: தந்தையின் குற்றத்திற்காக தனையனை தண்டிக்கலாமா? 

ஜெ: நான் உம்மை தண்டிக்கவில்லை – நீர் என்மீது காதல் கொண்டாயிருக்கிறீர்? ஏன்? – நான் அழகாயிருக்கிறேனா? – சாந்தாவும் அப்படித்தான் கூறினாள் — ஆயினும் எதற்காக நீர் என்மீது – காதல் கொண்டிருக்கிறீர்? 

வி: என்மனதென்னும் கோயிலில் – உன்னை நடுவிக்ரஹமாக வைத்து-பூசைசெய்ய! 

ஜெ: என்னைப் பூசைசெய்ய! நான் காளிகாதேவியைப் பூசைசெய்வதுபோலா! – நான் காளிகா தேவியைப் பூசை செய்தால் – அவர்கள் நான் வேண்டிய வரங்களைக் கொடுக்கிறார்கள் – நீங்கள் என்னைப் பூசித்தால் உங்களுக்கு – நான் என்ன கொடுக்கக்கூடும்? 

வி: என்றும் – மாறாத – அழியாத குறைபடாத, உன் உள்ளன்பைக் கொடுப்பாய்! 

ஜெ: உமக்கு என் அன்பையா? – நீரோ அரச குமாரன் – நீர் என் அன்பைப்பெற விரும்புகிறீரா? – ஏன்? நானோ ஒரு பேதை! – அனாதை! திக்கற்றவள்! நான் மேற்கொண்ட ஒரு காரியத்தைப் பூர்த்திசெய்ய சக்தி யற்றவள்! 

வி: என்ன நீ மேற்கொண்ட காரியம்? நீ என்ன செய்ய விரும்புகிறாய்? அதை நான் பூர்த்திசெய்கிறேன்!

ஜெ: நான் அதைச்சொன்னால் பூர்த்திசெய்கிறீரா?

வி: செய்கிறேன். 

ஜெ: ஹும் 

வி: சத்தியமாய் பூர்த்திசெய்கிறேன். 

ஜெ: உம்மால் செய்வது கஷ்டம். 

வி: அரச குமாரனான என்னால் பூர்த்திசெய்யத் தகாகது ஒன்றுமில்லை. 

ஜெ: உம்மால் முடியாது. 

வி: என் தகப்பன்மீது ஆணைப்படி அதைச் செய்கிறேன்.

ஜெ: ஆனால் கேளும் – என் தகப்பனாரை ஒரு பாதகன் கொன்றான் – என் தம்பியையும் கூட – இன்னும் எனது பல பந்துக்களையும் – இக்கொலைக்கெல்லாம் பழிவாங்க வேண்டும். 

வி: அப்படியா? அப்பாதகன் பெயரைமாத்திரம் சொல், சத்தியமாக இதுவரையிலும் எவரும் செய்திராத சித்திரவதை செய்து – அப்பாதகனைக் கொல்கிறேன் உடனே! (கத்தியை உருவுகிறான்) 

ஜெ: அப்பாதகன் – உமது தந்தை! 

வி: என் தந்தை! 

ஜெ: ஆம் – உமது தந்தை. ஏன்!- என் தகப்பனாரையும் என் தம்பியையும் – எங்களில் அநேகரையும் கொன்ற பழியைத் தீர்ப்பீரா – அவரைக் கொன்று? – உமது தகப்பனாரைக் கொள்வீரா? – ஏன் தாமதிக்கிறீர்? – பதில் சொல்லும் – ஏன் தயங்குகிறீர்? 

வி: ஆயினும் – 

ஜெ: ஆயினும் என்ன? காளிகா தேவியை நான் பூஜிக்கும் போது ஏதாவது தயங்குகிறேனா? என் முழுமனதுடன் அத்தேவியைப் பூசிக்கிறேன். என்னிடமுள்ளது எல்லாம் அவர்கள் பாதத்தில் அர்ப்பணம் செய்கிறேன். அவர்கள் கட்டளையை நிறைவேற்ற என் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன் – கொஞ்சம் முன்பாக நீர் உள்ளத்தில் ஒன்றும் ஒளியாது பேசினீர் என்று உம்மை சற்றேறக்குறைய நம்பினேன் – நீர் ஒரு அரசகுமாரனா? – உங்கள் பொய்வார்த்தைகளால் என்னை மயக்கப்பார்த்தீரா? – உம்மையும் – ஒரு அரச குமாரனாக ஆண்பிள்ளையாக – பிறப்பித்தார்களே காளிகாதேவி ! 

வி: உம்! (கண்ணீர் விடுகிறான்) 

ஜெ:. என்ன? – கண்ணீர் விடுகிறீரா? என் வார்த்தைகள் உமக்கு மனவருத்தத்தை உண்டுபண்ணினவா? ஆயினும் நாங்கள்தான் பேதைகள் – நீங்கள் எங்களுக்கெல்லாம் மேலான ஸ்திதியிலிருப்பவர்! எங்களைப் போல் சக்தியற்றவரல்ல – நீர் ராஜகுமாரன்!- 

வி: நான் – ராஜாவின் — குமாரன் – அதனால்தான், என் வாக்கை – காப்பாற்றுவது – கஷ்டமாயிருக்கிறது. 

ஜெ: சத்தியம் செய்தபோதிலும்! அதன்படி செய்வதற்கு! – என் தகப்பனார் முதலியோரைக் கொன்றவர் மீது பழிவாங்குவதாக சத்தியம் செய்யவில்லையா,சற்று முன்பாக? அவர் மீதே ஆணையிட்டுக் கூறினீரே, இப்பொழுது உமது சத்தியத்தைக் காப்பாற்றமாட்டீரா? உமது ஆணையைக் காக்கமாட்டீரா? இப்பொழுது உமக்கு – என்மீது காதல் – இல்லையா? மாறிவிட்டதா இதற்குள்ளாக? குறைந்துவிட்டதா இதற்குள்? 

வி: அப்படி யொன்றுமில்லை — அது முன்பைவிட பதின் மடங்கு அதிகரித்திருக்கிறது! – ஹும்! அவரை – கொல்கிறேன்! 

ஜெ: என்ன? – உமது – தந்தையையா – கொல்லப்போகிறீரா?

வி: ஆம் – கொல்லப்போகிறேன்! அவரது ஆன்மாவை யல்ல – அவரது கெட்ட குணத்தை! 

கோபாலனும் சாந்தியும் வருகிறார்கள் – பாடிக்கொண்டு. (கோ-சா) ஜெய்! காளிகாதேவிக்கு ஜெய்! 

வி: என்ன ஆச்சரியம்? ஜனங்களெல்லாம் உனது பாட்டை எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொண்டார்கள்?

(கோ) அரசே! நாங்கள் கற்றுக்கொள்ளவில்லை! – அக்னியின் ஜ்வாலையைப்போல் அது தானாகப் பரவுகிறது. 

வி: உம்! – தெரிகிறது. 

(கோ.) இன்னும் அதிகமாய்த் தெரியுமுமக்கு. சீக்கிரத்தில் – இளவரசே! 

காட்சி முடிகிறது 

இரண்டாம் அங்கம்

முதற் காட்சி

இடம் – நதியோரம். படகிறங்கும் துறை. 

படகிலிருந்து ஜெயா, சாந்தா, கோபால் இறங்குகிறார்கள். எதிர்க்கரையில் ராமு சில சேவகர்களுடன் நின்றுகொண்டிருக் கிறான். 

ஜெ: அண்ணா! ராமு!

ரா: தங்காய்! ஜெயா! 

ஜெ: அண்ணா எங்கே போயிருந்தாய் இத்தனை நாட்கள்? நேற்று நாம் சந்தித்திருந்தால்!- நேற்று நீ வந்திருக்கக் கூடுமாயின் – நீ அறிந்திருந்தால் -ந ம்முடைய தம்பி சின்னப்பனையும் – தகப்பனாரையும் – கொடுங் கொலையிலிருந்து காப்பாற்றியிருப்பாயே! – அண்ணா! சின்னப்பனைக் குத்திக் கொன்றான்! வயோதிகரான நமது தகப்பனாரை சவுக்கினாலடித்துக் கொன்றான்! நம்முடைய தேசத்திற்கு அரசன் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் அப்பாதகன்! 

ரா: ஜெயா! அதை உரக்கச் சொல்லாதே! அரசருக்கு விரோதமாகப் பேசுவது ராஜத்துரோகமாம்! 

ஜெ: வாஸ்தவத்தைப் பேசினால் அது ராஜத்துரோகம்! உன் தகப்பனாரும் தம்பியும் கொல்லப்பட்டபொழுது நீ வாய்கூசாது இப்படி பேசுகிறாயே! நீ இம்மாதிரி பேசமாட்டாய் – நீ மாத்திரம் இக்கொலைகளையெலலாம் நேற்று கண்ணாரப் பார்த்திருப்பாயின்! 

ரா: கொலை நடந்தபோது – நான் – அங்கிருந்தேன் – நேற்று –

ஜெ: ஹா! -அப்படியிருந்தும் – நீ ஒருவரையும் காப்பாற்ற வில்லையா? நம்முடைய வயோதிகரான தந்தையையாவது – (அழுகிறாள்). 

ரா: இந்தக் கையானது அரசர் யாரைத்தன் விரோதி என்று குறிப்பிடுகின்றாரோ, அவரைக் கொல்லக் கடமைப்பட்டுள்ளது – அவரைக் காக்கமுடியாது! – நீ அறியாயா? நான் அரசரது ராணுவத்தைக் சார்ந்தவன் என்பதை? 

ஜெ: ஆனால்- நான் ஜனங்களுடைய ராணுவத்தைச் சேர்ந்தவள் என்பதை நீ அறியாய்! – நீ ஆண்பிள்ளை! பலசாலி! பிரஜைகளை அடித்துக்கொன்று அவர்கள் பொருள்களைப் பறிக்கும் பட்சம் சேர்ந்தவன்! நானே பெண்பால் அபலை! தங்களைப் பாதுகாக்க சத்தியற்றவர்கள் – அனாதைகள் – திக்கற்றவர்கள் – பட்சம் சேரும் படி நேர்ந்திருக்கிறது. உங்கள் ஆட்கள் நம்முடைய தேசத்தவர்களைக் கொல்வதை நான் பார்த்தேன் நேற்று! நம்முடைய நாட்டில் மிகுந்திருப்பதையெல்லாம் தீக்கு இறையாக்கப்படுவதை நீ இன்று பார்ப்பாய்! 

ரா: ஜெயா! ஜனங்களால் அக்னிஜ்வாலையென்று அழைக்கப்படுபவள் நீதானா? அவளைக் கைதியாக்கவே நான் இங்கு காத்துக்கொண்டிருக்கிறேன்! 

ஜெ: ஆம்! நான்தான் அவள்! நான்தான் அக்னிஜ்வாலை! 

ரா: ஸ்! பொறு, நீ என்ன பேசுகிறாயென்பது உனக்குத் தெரியாதிருக்கிறதா?-அப்பெயரை நீ ஒப்புக்கொண்டால், உனக்கு என்ன சம்பவிக்குமென்று நீ அறியாயா? – அந்தோ! உன் கதி சிறைச்சாலையில் அடைக் கப்படுவது மாத்திரமன்று! – உன் மானம்போய் கற்பழியும்! உன்னை! – உன்னை! – ஈசனே! என் சொந்த தங்கைக்கு அக்கதிவாய்க்க, நான் எப்படி சகிப்பேன்! ஜெயா! ஜெயா! போய்விடு! ஓடிப்போய்விடு! இவ்விடமிருந்து பறந்து போய்விடு எங்கேயாவது! – என் கையால் உன்னை நான் கொல்லுமுன்! – அக்கொலைக் கஞ்சாப் பாபி உன்னை -(மற்றொரு தளகர்த்தன் பாணமானது இவன் மாற்பிற் பாய்கிறது). 

(ம.த.) தளகர்த்தன் ராம்சிங்! நீ அரசருக்கு துரோகியான படியால் கொல்லப்பட்டாய்! – சேவகர்களே ! இந்தப் பெண்ணைக் கைதியாக்குங்கள்! 

(சே.) வா, அம்மா. 

ஜெ: ஐயா! தளகர்த்தரே! அரசருக்காகத்தன் சகோதரனையும், தகப்பனாரையும் பறிகொடுத்த, ஒரு தளகர்த்தனை அரசத்துரோகி என்று அழைத்து நீர் கொன்றீர்! இவருக்குச் செய்யவேண்டிய தகனக்கிரியையை நான் செய்து முடிக்கிறேன். – பிறகு உங்கள் கைதியாக நானாக வந்து சேர்கிறேன் – எந்த சமயத்தில் எங்கு வந்து சேரும்படி சொல்கிறீரோ அங்கு. 

(ம.த.) ஜெயா! உன் தமையன் கூறியதைக் கேட்டாயல்லவா? கொல்லக்கடமைப்பட்டகையானது காத்திடாது உனக்குப்பட்சம் பாராட்ட என்னால் முடியாது. கைதியே எழுந்திரு! சேவகர்களின் பின்னால் வருவாய்! 

ஜெ: கோபால், சாந்தா, என் தமயனுக்குச் செய்யவேண்டிய தகனக்கிரியைகளை நீங்கள் செய்து முடியுங்கள்! – பிறகு ஜனங்களெல்லாம் ஐக்கியமாகி க்ஷேமத்தையும் அமைதியையும் அடையும்படியான மார்க்கத்தை அவர்களுக்குப் போதியுங்கள்! -நான் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன். காளிகாதேவி உங்களையெல்லாம் காப்பாற்றுவார்களாக! 

(ஜெயா சேவகர்கள் பின்னால் போகிறாள்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி

இடம் – இடுகாடு. ராமுவின் உடல் சிதையில் எரிகிறது. பூஜாரிகள், கோபால், சாந்தி, கமலா, முதலியோர் நின்றுகொண்டிருக்கின்றனர்.

(ஒ.பூ) நமக்கெல்லாம், நாம் செய்யவேண்டிய கடமையை யும், சன்மார்க்கத்தையும் போதித்ததற்காக ஜெயா அம்மாளைக் கைதியாக்கினார்களா? – உம் – அவர்களைச் சிறைச்சாலைக்குக் கொண்டுபோகவில்லை – அரசரது அரண்மனைக்கு – அந்தப்புரத்திற்குக் கொண்டுபோயிருக்கிறார்கள்! அவரது மனதிற்கு இசைய! – போ! போ! தங்கையே! ஒன்றும் பயப்படாதே! காளி தேவி உன்னை ரட்சிப்பார்கள்! நீ ஆரம்பித்த வேலையை நாங்கள் முடிக்கிறோம். 

(கோ) ஆம்! ஜெயா ஆரம்பித்த வேலையை நாம் எல்லோரும் சேர்ந்து பூர்த்தி செய்வோம். 

(ம.பூ.) ஐயா, இதில் பிரயோஜனமில்லை – நம்மால் இனி ஒரு கஷ்டமும் பொறுக்கமுடியாது. 

(கமலா) எல்லாம்தான் பொறுத்தாயிற்றே! புதிதாய் இன்னும் பொறுப்பதற்கென்ன இருக்கிறது? நமது பிள்ளைகளைக் கொடுத்தோம் – பெண்களையுங்கூட பந்துக்களையிழந்தோம் – பொருள்களையெல்லாம் பறி கொடுத்தோம் – இதைவிட மேலான துக்கம் என்ன இருக்கப்போகிறது? – நாசம்! மானம்? இவைகளை விரும்புவோம் இனி! சந்தோஷமாய்! – இப்படி அவமானத்துடன் வாழ்வதைவிட! 

(ஒரு ஸ்திரி) மடிந்த என் மகனை மறுபடியும் காண எவ்வளவு சந்தோஷம் அடைவேனோ, அவ்வளவு சந்தோஷத்துடன், யமனுக்கு நான் நல்வரவு கூறுவேன்.- சகோதர சகோதரிகளே! இத்தொழிலில் என்னுடன் ஐக்கியப்படுங்கள்! நாம் யுத்தம் புரிவோம்! நமது தலைவியை விடுவிப்பதற்கு மாத்திரமன்று ! நம்முடைய நாட்டையும் விடுவிப்பதற்கு! காலம் கைகூடியது, அதைக் கைவிடாது கடைப்பிடிப்போமாக! 

(மஸ்திரி) ஆம்! நமது நாட்டை அழிக்கும் இப்பாதக அரசனுக்கு இந்நாடு நம்மைச்சார்ந்தது என்று ரூபிப்போம். இப்பரதகண்டமானது, ஸ்ரீராமரும் லட்சுமணரும் சீதாதேவியும், வாழ்ந்த இத்தேசமானது – பாலையும் தேனையும் பரவச்செய்யும் பரமபாவனையான கங்கை – கோதாவரி காவேரி முதலிய நதிகள் பாயும் – நமது ஜன்ம பூமியானது – நமக்கு சகல பாக்கியத்தை யும் கொடுத்து ரட்சிக்கும் நமது தாய்நாடானது தற்காலத்தில் அனுபவிக்கும். கஷ்டங்களினின்றும் விடுதலையடையுமாக! காளிகாதேவியின் கருணை யினால்! காளிமாதாவுக்கு ஜெய்! 

(மற்றெல்லோரும்) காளிமாதாவுக்கு ஜெய்! நமது தாய் நாட்டிற்கு ஜெய் ! 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி

இடம் – அரண்மனையின் வெளிவாயில் 

சேவகர்கள் காத்து நிற்கின்றனர். ஒரு ஸ்திரீ பன்னிரண்டு பெண்களை அழைத் துக்கொண்டு உள்ளிருந்து வருகிறாள். 

(ஸ்திரீ) ஐயா, இதோ உத்தரவு. 

(மு.சே.) (அதை வாங்கிப் படிக்கிறான்) “பதினெட்டாம் கூட்டம் போக உத்தரவு” – உம் – அவர்கள் எண்ணிக்கை சரியாயிருக்கிறதா? 

(இ.சே.) கணக்கு சரியாகத்தான் இருக்கிறது! என்ன கோரமான காட்சி! மஹாராஜா இது ஒரு புதிய வழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்போலும் கடைசி கூட்டத்தைப்போல் இவர்களுடைய கூந்தலும் குறைக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் பாருங்கள்! 

(மூ.சே.) ஆம் பார்த்தேன். அவர்கள் கற்பை இழந்ததற்கு, இது மற்றவர்களுக்கு ஒரு அறிகுறியாயிருக்கவேண்டு மென்று தீர்மானித்திருக்கிறார் போலும்! (ஸ்திரீ, பெண்களை வெளியே அழைத்துக்கொண்டு போகிறாள்).

(மு.சே.) இவர்களைத்தான் நமது சகோதரிகளென்றும் பெண்களென்றும் அழைக்கின்றோம்! இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அரசரது மக்கள் என்று அழைக்கப்பட்டு, உலகில் தலைநிமிர்ந்து நடப்பார்கள்! – நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, தலைகுனிந்து நடக்க வேண்டும்! 

காட்சி முடிகிறது 

நான்காம் காட்சி

இடம் – அரண்மனையில் ஓர் அறை. 

ஜெயா நின்றுகொண்டிருக்கிறாள். 

ஜெ: (பல கணியின் வழியாக வெளியில் பார்த்து) ஐயோ! எத்தனை பெண்கள்! கூந்தல் குறைக்கப்பட்டிருக்கின்றனர்! – என்கதியும் இவர்கள் கதிதானோ! ஆயா! – ஆயா! – சீக்கிரம் வருவதாகச் சொல்லிவிட்டுப்போன ஆயா ஏன் இன்னும் வரவில்லை! (அறையின் பின் கதவைத்திறந்து பார்க்கிறாள்) – ஓ! – இப்பொழுது தெரிகிறது! – ஆயா! ஆயா! 

ஆயா மெல்ல வருகிறாள். 

ஆ: ஏண்டியம்மா? என்ன சமாச்சாரம்? 

ஜெ: சீக்கிரம் வருவதாகச் சொல்லிப்போனாயே! ஏன் இவ்வளவு நேரம்? 

ஆ: நான் உன்னைப்போன்ற இன்னொரு பெண்ணுடன் பேசவேண்டியிருந்தது கொஞ்சம். 

ஜெ: என்னைப்போன்ற இன்னொரு பெண்ணுடனா? எனக்கு அர்த்தம் ஆகவில்லை. 

ஆ: எல்லாம் சீக்கிரம் அர்த்தமாகும் பயப்படாதே. 

ஜெ: நான் பயப்படவில்லை – அதோ அரண்மனைக்கு வெளியே போகிறார்களே – யார் அப்பெண்கள்? 

ஆ: உன்னைப்போல் அவர்களும் ஏதோ குற்றம் செய்தவர்கள் – மத விஷயத்திலோ மற்றெந்த விஷயத்திலோ – அரசரது ஆக்கினைக்கு விரோதமாக நடந்தவர்கள். இந்த ராஜ்யத்தில் குற்றவாளிகளாகிய பெண்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதில்லை; முதலில் அரண்மனை அந்தப்புரத்திற்கு அனுப்பப்படுகிறார்கள் – பாடுவதற்கும் – ஆடுவதற்கும் – பிறகு – 

ஜெ: மிகுதியை நீ எனக்குக் கூறவேண்டாம் – அவர்களின் தலைமயிரை ஏன் குறைத்திருக்கிறார்கள்? – ஏன் அவர்கள் அரண்மனைக்கு வெளியே அனுப்பப்படுகிறார்கள்?

ஆ: தலைமயிர் அவ்வாறு குறைக்கப்பட்டால் – அரண்மனையில் வாழ்ந்தவர்கள் – என்று அர்த்தம் ஆகும் பொருட்டு. 

ஜெ: ஓ வெளியில், ஏன் கொண்டுபோகப்படுகிறார்கள்?

ஆ: கடை வீதியில் – பிறகு, அதிகவிலை கூறுபவர்களுக்கு – விற்கப்படும்பொருட்டு. 

ஜெ: அவர்களை – கடை வீதியில் – ஏலமா போடுகிறார்கள்? 

ஆ: ஆமாம். 

காட்சி முடிகிறது. 

ஐந்தாம் காட்சி. 

இடம் – ஓர் வீதி. 

ஒருவன் வேகமாய் ஓடிவருகிறான். எதிர் புறம் அவனை மற்றொருவன் சந்திக்கிறான். 

(இ.ம.) எங்கேயப்பா அவ்வளவு வேகமாகப் போகிறாய்?

(மு.ம.) இன்றைக்கு பதினெட்டாம் கூட்டம் ஏலம்!

(இ.ம.) அப்படியா? நானும் கூட வருகிறேன். (இருவரும் போகிறார்கள்). 

சில சிறுவர்கள் ஓடிவருகிறார்கள். 

(சி.சி.) ஏலம் ! ஏலம்! இண்ணைக்கி இன்னொரு கூட்டம் ஏலம்! (ஓடுகிறார்கள்) 

ஒரு வயோதிகனை ஒரு சிறுவன் அழைத்துவருகிறான். 

(சி.) தாதா! நீங்கள் என்னாத்துக்கு தாதா இந்த ஏலத்துக்கு போறைங்க? 

(வ.) இல்லையப்பா ! – எனக்கு ஒரு வேலைக்காரி – வேண்டும். 

(சி.) ஹும்! ஹும்! எனக்குத் தெரியும். – என்னா, தாத்தா? இன்னம் உங்களுக்கு இந்த ஆசே விடலையே? (போகிறார்கள்) 

இருவர் எதிர்புறமாகச் சந்திக்கிறார்கள். 

(ஒ.) சித்தப்பா! உன்னிடம் ஏதாவது கொஞ்சம் ரூபாயிருக்கிறதா? 

(மற்) ஏன்? 

(ஒ.) ஓரு ஐம்பது ரூபாய் அவசரமாக வேண்டும்.

(மற்) என்ன அவ்வளவு அவசரம்? 

(ஒ.) நீ கேட்கவில்லையா? தண்டோரா போட்டார்களே, இன்றைக்கு ஒரு கூட்டம் ஏலம்.- கடைத்தெருவில். 

(மற்.) அப்படியா? ஆனால் நானும் வருகிறேன். 

(ஒ) ஐம்பது ரூபாய் கொடுக்கிறாயா ? நாளைக்கு கொடுத்து விடுகிறேன். 

(மற்.) சரி சரி! நான் என்ன செய்கிறது? உன்னிடம் கொடுத்துவிட்டு? எனக்கு வேண்டியிருந்தால் – வாவா பார்க்கலாம் (போகிறார்கள் விரைந்து). 

காட்சி முடிகிறது. 

ஆறாம் காட்சி 

இடம் – கடைத்தெரு. 

ஏல உத்யோகஸ்தன், தன் சம்பிரதியுடன் நிற்கிறான். ஒரு மேடைமேல் பன்னிரண்டு பெண்கள் நிற்கின்றனர். 

(ஏ.உ.) (வாசித்துக்கொண்டு) “பதினெட்டாம் கூட்டத்தை பயிரங்க ஏலமாக விற்பாயாக” — அவர்கள் எல்லாம் வரிசையாக நிற்கிறார்களா? – உம்- சரி – சம்பிரதி, ஏலத்தை ஆரம்பி. 

(ச.) இன்னும் கொஞ்சம் ஜனங்கள் வந்து சேரட்டும், இல்லாவிட்டால் சரியானவிலை வராது, பிறகு மஹாராஜா நம்மீது கோபம் கொள்வார், நமதுவேலை போய்விடும். ஹும்!- இவர்களைத்தான் நமது சோதரிகளென்றும் பெண்களென்றும் அழைக்கிறோம்! இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள், ஏழைத் தொழிலாளிகளாகிய நமது நடுவில் தலை நிமிர்ந்து நடப்பார்கள்! அவர்களை நாம் அரசரது பிள்ளைகளென்று அழைக்கவேண்டும்! என்ன உலகம்! — என்ன உலகம்! 

(ஏ.உ.) இந்த உலகம் எக்கேடாவது கெட்டுப் பாழாய்ப் போகட்டும் ! நீ உன் வேலையைப்பார்! — கனவான்களே! இது பதினெட்டாவது கூட்டம்; அரசரது ஆக்கினையினால், இன்று ஏலம் போடப்போகிறோம்.முன்பு ஏலம் போடப்பட்ட கூட்டத்தைப்போல இவர்களெல்லாம் இவ்விராஜ்ஜியத்திலுள்ள அழகிகளுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்- கனவான்களே! இவர்களைப் பாருங்கள்! – என்ன அழகிகள் – என்ன அழகிய அவயவங்கள்! – என்ன கண்கள்! – என்ன முகங்கள்! – என்ன கன்னங்கள் – என்ன உடல் அழகு! என்ன கையழகு! கால் அழகு! பாருங்கள்! பாருங்கள் நன்றாய்! ஒவ்வொருத்தியும் கட்டழகி! முதலிலிருக்கும் – சா-சாரளா! (வாய்குளறி) – கனவான்களே! என்னை மன்னியுங்கள்! – இவள் – என் சொந்த தங்கை – சாரளா – அரசரது கட்டளைப்படி இவளை – நானே ஏலம்போடவேண்டியது என் கடமையாயிற்று! – நான் மற்றவர்களுக்கு உண்டாக்கின வருத்தத்தை, – நானே இன்று அனுப் விக்கிறேன்! – ஆம் – என் கடமை! – என் பாழுங்கடமை நான் தாமதிக்கக்கூடாது – கனவான்களே! நீங்கள் என்ன தொகை கேட்கிறீர்கள்? இவள் அழகாயில்லையா? நல்ல கண்களையுடைய முகம் – அழகிய உடல் – கதலியைப்போன்ற துடைகள் – மான் விழிகள்!- கோவையைக் கரித்த அதரம்! – கேளுங்கள்! கேளுங்கள்! – நீங்கள் என்ன கூறினீர்கள்? – நீங்கள்? – நீங்கள்! ஒரு விலையும் கூறமாட்டீர்களா? என் சொந்த தங்கைக்கு (கண்ணீர் விடுகிறான்). 

(ஒ.சி.) பாவம்!- அழுகிறான்!- 

(எ.உ.) நான் அழவில்லை! – அழக்கூடாது – அரசரது ஆக்கினையை நிறைவேற்றவேண்டும் – நான் – இவர்களுள் வேறு யாருக்காவது- ஏதாவது – விலை கேளுங்கள் – என்ன சும்மா இருக்கிறீர்கள்? ஒருத்திக்கும் ஒரு விலையும் கேட்கமாட்டீர்களா? – ஆனால் அரசரது ஆக்கினைப்படி இவர்களையெல்லாம் சிறைச்சாலைக்குக் கொண்டுபோங்கள். சேவகர்களே — அங்கே போய் வேலை செய்து — இவர்களெல்லாம் மடியட்டும்- 

(சிலர்) என்ன கோரம்! – என்ன கோரம்!- என்ன அரசாட்சி! இதையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டு நாம் எல்லாம் சும்மாயிருக்கிறோமே! 

(ம.சி.) நம்முடைய தங்கைகளுக்கும், பெண்களுக்கும், நாளை இக்கதி வாய்க்கலாம்! (பெருமூச்செறிந்து) கள் போவோம்! (போகிறார்கள்) 

(ஒ.சி.) நம்முடைய துர் அதிர்ஷ்டம் – இன்றைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.(போகிறார்) 

சேவகர்கள் பெண்களை அழைத்துச் செல்கின்றனர். 

காட்சி முடிகிறது. 

ஏழாம் காட்சி

இடம் — சிறைச்சாலையின் பின் பக்கம், கிராதிக்கு வெளியில் வீதி தெரிகிறது. சிறைச்சாலையுள் சில பெண்கள், மா – அறைத்துக்கொண்டிருக்கின்றனர், சிலர் அரிசி குத்திக்கொண்டிருக்கின்றனர், சிலர் யந்திரங்களில் பொடி செய்து கொண்டிருக்கின்றனர், சில அடிமைகள் ஒருபுறம் நிற்கின்றனர். 

காவற்காரன் ஒரு கடிதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். 

(கா.) உம்! – இதுதான் பதினெட்டாவது கூட்டம் – மானம் அழிந்த மற்றொரு கூட்டம் வந்து சேர்ந்தது, இன்னும் எத்தனை ஸ்திரீகள் வரப்போகிறார்களோ? – இவர்கள் பாழாய்ப்போக! இவர்களையெல்லாம் என்ன செய்வது? 

(மு.அ.) அவர்கள் என்ன தொழிலுக்கு இழிந்தார்களோ அதற்காக அவர்கள் உபயோகிக்கப்படட்டும் – கற்பை இழந்தபின் அவர்களுக்கு வேறுகதி என்ன? – அடிமைகளே! உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் வாத்தியக் கருவிகளைக் கொண்டுவாருங்கள் – வாசியுங்கள் அவைகளை, சிலர்கள் பாடட்டும் – சிலர்கள் ஆடட்டும் நமக்காக. இதுவரையில் அரசனைச் சந்தோஷப்படுத்தினார்கள் – இனி நம்மையெல்லாம் சந்தோஷிக்கச் செய்யட்டும் – சங்கீதம் – சங்கீதம்! 

(இ.அ.) நீங்கள் எல்லாம் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? – பாடுங்கள்! உங்கள் வேலையைச் செய்துகொண்டே பாடுங்கள்! (அடிக்கிறான் பெண்களை) (சிலர் பாடுகின்றனர்) நீங்கள் ஆடுங்கள்! (சிலர் ஆடுகின்றனர்). 

(மு.அ.) இந்த இழிவான ஸ்திதிக்கு இழிந்தும், இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ராஜவம்சத்தினர் ஆவார்கள்! நம்மையெல்லாம் அடிமைகள் என்று அழைப்பார்கள்! 

(ஒ.பெண்) ஐயா! எங்களைக் கொன்றுவிடுங்கள்! சித்திரவதை செய்யாதீர்கள் இப்படி! 

(மு.அ.) இப்பொழுதா சொல்வது? – சாவதைப்பற்றி இப்பொழுது நினைக்கிறீர்களா? – முன்பே இதைப்பற்றி ஏன் நினைத்திருக்கலாகாது? உங்கள் கைகளுக்கு ஒரு கயிறாவது அகப்படவில்லையா? தூக்குப் போட்டுக் கொண்டு சாக! உங்கள் மானம் போவதற்கு முன் ஒருவர் கழுத்தை ஒருவர் பிடித்து முறித்துக்கொண்டு மாண்டிருக்கலாகாதா? – யமன் உங்கள் உயிர்களைக் கொண்டுபோக அவ்வளவு பயந்தானா? பெண்கள் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் பதர்களே! இன்னும் எங்களிடம் வந்து, எங்களையும் பாபத்திற்கு ஆளாக்குகிறீர்களே! 

(வெளியில் சப்தம்) என்ன மானக்கேடு! என்ன அவமானம்! என்ன அதிசயம்! கல்லை விட்டெரிவோம் இவர்கள் பேரிலெல்லாம் ! (சிறைச்சாலைக்குள் கற்கள் வீசப்படுகின்றன) 

வீதியில் கோபால், சாந்தி முதலியோர் மணியடித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் வருகின்றனர். 

(சி.கா.) (பாட்டைக்கேட்டு, மனங்குழைந்து) தாயே! தாயே! எங்கள் சகோதரிகளும், பெண்களும், இவ்வாறு பாபத்திற்காளாகிப் பாழாய்ப்போவதைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி, எங்களுக்கு கதிவாய்க்கச் செய்தீரே! – தாயே! எத்தனை நாள் நாங்கள் இவ்வாறு வாய்திறந்து பேசவும் சக்தியில்லாது சங்கடப் படுவது? இன்னும் எத்தனை காலம் நீங்கள் மௌனம் சாதிக்கப்போகிறீர்கள்? எங்களுக்கு இக்கோர பாபத்தினின்றும் விடுதலை இல்லையா? – அந் நாள் எந்நாள் வருமோ? 

(கோ) (வெளியிலிருந்து) நண்பனே ! தைரியமாயிரு, பயப்படாதே! நம்முடைய தாய் மௌனமாயில்லை! இன்னும் கொஞ்சகாலம்தான் பொறுக்கவேண்டும் துயர்களையெல்லாம் போக்க! – நாம் எழுவதற்கு! 

(சி.கா.) நாம் எழுவதானால் இன்றைக்கே எழுவோம்! இந்நிமிஷமே! இந்த உத்தியோகம் எனக்கு வேண்டாம்! வருவது வரட்டும்! இக்கொடுங்கோலரசனை காளிதேவி அழிக்காவிட்டால், நான் என்னையே அழித்துக்கொள்கிறேன்! காளிதேவி இந்த பலியை ஏற்றுக்கொள்ளட்டும்! – எங்கள் குழந்தைகளை இக்கதியினின்றும் மீட்பதற்காக! 

(கோ.) இத்தினத்தை காண்பதற்கே நாங்கள் பிறந்தோம்! இத்தினத்திற்காகவே நாங்கள் இதுவரையில் காத்திருந்தோம்! சகோதரர்களே! சகோதரிகளே: உங்களையெல்லாம் அமைதியா யிருக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன், இன்னும் கொஞ்சகாலம். இனி இவர்களையெல்லாம் துன்புறுத்தாதீர்கள்! காயம் பட்டவர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்யுங்கள்! – நாம் விடுதலை அடையும் காலம் நெருங்கிவிட்டது! (போகிறான், மற்றவர்கள் பாட்டில் சேர்கிறார்கள். சிறையிலிருப்பவர்களும் பாட்டில் சேர்ந்து பாடுகிறார்கள்). 

காட்சி முடிகிறது. 

மூன்றாவது அங்கம்

முதல் காட்சி

இடம் – அரண்மனையில் அரசரது அந்தப்புரம். 

அரசர் மதுபானம் செய்துக்கொண்டும் பெண்களுடன் சரசமாடிக்கொண்டும் இருக்கிறார். சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கின்றனர்; சிலர் ஆடிக்கொண்டிருக்கின்றனர்; சிலர் வாத்யம் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்; சிலர் அரசர் எறியும் புஷ்பங்களை, நடுவிலிருக்கும் சிறு குளத்தில் குதித்து பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மந்திரி ஒருபுறமாக வருகிறார். 

அ: யார் அங்கே? 

ம: மஹாராஜாவுக்கு நமஸ்காரம். 

அ: வாரும் இங்கே! வாரும் இங்கே! – போய் அழைத்து வாருங்கள் மந்திரியை என் அருகில் – இங்குவர அவர் பயப்படுகிறார்.(பெண்கள் அவ்வாறே செய்கின்றனர்.) ஆ! வந்தீரா ! நீர் வருவதற்கென்ன தடை? – நமது ராஜ்யத்தைப்பற்றி ஏதாவது முக்கிய சமாச்சாரம் கொண்டுவந்தீரா? – முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் சொல்லும் – பழைய கதையெல்லாம் வேண்டாம். பிரஜைகளெல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அழுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள்! இதெல்லாம் எனக்குத் தெரியும்! – நான் சந்தோஷமாயிருக்கிறேன், அது போதாதா உமக்கு? அதோ பாரும்! அந்த அழகிய பெண்ணைப் பாரும். (குளத்தில் ஒரு புஷ்பத்தை எறிய, அதை ஒரு பெண் வாயால் கவ்விக் கொள்கிறாள்). பலே! கண்மணி! – என் ஆக்கினைக்கு இவர்களெல்லாம் எவ்வளவு உட்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? விஷமூட்டிய ஒரு புஷ்பத்தை எறிந்த போதிலும் அப்பெண் அதையும் தன்வாயால் பற்றிக் கொள்வாள்! – என்ன? உமக்கு சந்தேகமாயிருக்கிறதா என்ன? இதோ காட்டுகிறேன். யார் அங்கே? கொஞ்சம் விஷம் கொண்டுவருவாய் சீக்கிரம்- 

(ஒரு பெண் விஷக்குவளையைக் கொணர்கிறாள்).

அ: கொண்டுவா இப்படி விரைவில்! -மந்திரி, கவனமாய்ப் பாரும் அப்பெண்ணை! (குவளையில் ஒரு புஷ்பத்தைத் தோய்த்து குளத்தில் எறிய, அதையும் அதிலிருக்கும் ஒரு பெண் வாயினால் பற்றி விழுங்கி, அப்படியே மடிகிறாள்). (சில பெண்கள் அதைக்கண்டு கூக்குரலிடுகின்றனர்). சீச்சீ! மூடுங்கள் வாய்களை! மதியற்ற பேதைகளே – போங்கள் நீங்கள் எல்லோரும்! – யார் அங்கே? – வேறு புத்திசாலிகளான பெண்களை அழைத்து வாருங்கள் – அவர்களாவது எனக்கு அடங்கி நடப்பார்களாக. 

(அங்கிருந்த பெண்கள் போக, மற்றொரு பெண் கூட்டம் ஜெயாவுடன் வருகிறது). 

அ: ஆ! இவர்கள் நல்ல அழகிகள்! -ஆடுங்கள் பார்ப்போம்! உங்கள் உடலின் அழகை! – பாடி ஆடுங்கள்! (ஜெயா தவிர மற்றவர்கள் பாடி ஆடுகின்றனர்) – ஆ ! நீ ஏன் ஆடவில்லை? உனக்கென்ன வந்தது? உனக்கு நா இல்லையா? நீ என்ன ஊமையா? – ஏன் பதில் சொல்லாதிருக்கிறாய்? உன்னை முன்பே நான் எங்கோ பார்த்தாற்போல் இருக்கிறதே? — உன்னை இதற்குமுன் எங்கு கண்டேன் நான்? – எங்கே? – உம் – எனக்கு மறதியாயிருக்கிறது – நீ மிகவும் அழகாயிருக்கிறாய் – என்ன அழகிய கண்கள்! – என்ன சிவந்த அதரம்! – என்ன உருவம்! வா வா, என் பக்கத்தில் வந்து உட்கார்! 

ஜெ: தீண்டாதீர் என்னை! 

அ: (நகைத்து) உனக்கு அவ்வளவு தைரியமிருக்கிறதா? பெண்ணே, ஒரு அரசனுக்கு ஆக்கினையிட இந்த தைரியம் உனக்கு எதனால் உண்டாகிறது? 

ஜெ: நான் கற்புடைய மங்கையாயிருப்பதால். 

அ: அந்த – கற்பு – உன்னிடம் – என்னைக் காணாமுன் இருந்திருக்கலாம்.- இனிமேல் அந்த கற்பு உன்னிடம் இராது.- ஆயினும், உன் வார்த்தைகள் மிகவும் பதட்டமானவை. சாதாரண வேலைக்காரனுடன் பேசுவதற்குக்கூட – நான் இந்நாட்டையாளும் மஹாராஜா! நீ எனக்கு சொந்தமானவள் என் பிரஜைகளில் ஒருத்தி-

ஜெ: ஆகவே நீர் எனக்குத் தந்தை போன்றவர்! – என் மானத்தினையும் கற்பினையும் உயிரையும் காக்க வேண்டியவர்! 

அ: நீ, இந்த அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்தவுடன், அவைகளெல்லாம் எனக்கு சொந்தமாய்விட்டன.- அவைகளெல்லாம் இனி உன்னுடையவைகள் அல்ல — என்னுடையவை! என்னுடைய சக்தியினால் மட்டுமன்று, இந்நாட்டு அரசன் எனும் அதிகாரத்தினாலும் கூட! அறிவாயா? 

ஜெ: எப்படி சக்தி என்பதை நீர் சரியாக அறியவில்லையோ, அப்படியே, உமது அதிகாரத்தையும் நீர் சரியாக அறியவில்லை! உம்முடைய அதிகாரமும் சக்தியும் உமது பிரஜைகள், உமக்குக் கொடுத்த தாம் – உமது பிரஜைகளின் அனுமதியினால், அவர்களுக்கு நீங்கள் அரசனானீர்! இந்த அதிகாரமும் சக்தியும் கிடைத்தது அவர்கள் சம்மதத்தினால் உம்மை நீக்கி, மற்றொரு அரசரை அவர்கள் அரசனாகக்கோரினால் – உம்மை விட்டு இந்த அதிகாரமும் சக்தியும் அகலுமன்றோ? 

அ: மூடு வாயை! – மூடமே! உன் வயதுக்குத் தக்கபடி யல்லாது, அதிகமாய்ப் பேசுகிறாய்! உன்னுடன் பேசி இத்தனைகாலத்தை வீணாகக் கழித்தேன்! – பேசாது வருகிறாயா? அல்லது – பலாத்காரமாக –

ஜெ: நில்லும் அங்கேயே! இன்னும் ஒரு அடி (நெருங்குகிறாள்) எடுத்துவைத்தால், அரசன் என்றும் பாராமல் உம்மைக் குத்திக்கொல்வேன் (மார்பினின்றும் ஓர் கட்டாரியை எடுக்கிறாள்). 

(அரசன் கையை மெல்லத் தட்டுகிறார் – உடனே இரண்டு பெண்கள் அறைக்குள் வேகமாய் வந்து, ஜெயாவின் கையைப் பற்றிக்கொள்கின்றனர்). 

அ: உம்! – இன்னும் உன்னிடம் ஏதாவது ஆயுதம் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறாயா பார்ப்போம்! (அவளது கரத்தைப் பற்றுகிறார்). 

ஜெ: காளிதேவி! காளிதேவி! 

திடீரென்று ஒரு ஆயாள் பின்தொடர, விஜயன் வருகிறான். 

(உடனே அரசன் ஜெயாவின் கரத்தை விட்டுவிடுகிறான்; விஜயன் ஆயாளுக்கு ஜெயாவை அறையை விட்டு அழைத்துக்கொண்டு போகக் கண்ணால் ஜாடை செய்கிறான்; ஆயாள் அப்படியே செய்கிறாள்). 

அ: ஓ! – வாடா அப்பா – எப்பொழுது வந்தாய்? – நெடு நாளாச்சுது உன்னைப் பார்த்து – எப்படியிருக்கிறாய்?

வி: சவுக்கியமாகத்தானிருக்கிறேன் — நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். 

அ: என்னுடைய ஒரே மைந்தன் என்னுடன் பேசுவதை விட வேறு எனக்கு என்ன சந்தோஷம்? –வா-என் பக்கத்தில் உட்கார். 

வி: நான் நின்றுகொண்டே பேச விரும்புகிறேன் – நான் பேச விரும்புவது உமக்கு அதிர்ப்திகரமாயிருக்கலாம். எல்லோரும் போங்கள் வெளியே! நாங்கள் தனியாயிருக்க விரும்புகிறோம். 

அ: போங்கள் எல்லோரும் வெளியே (மற்றவர்களெல்லாம் போகின்றனர்). 

வி: (அருகில் வந்து) அப்பா! – இது எனக்கு திருப்திகரமாயில்லை – 

அ: பொறு! என்ன உனக்குத் திர்ப்திகரமாயில்லை? திர்ப்திகரமா யிருப்பதும் அதிர்ப்திகரமா யிருப்பதும், உனக்கு என்ன தெரியும்? – குழந்தாய்! உன் தகப்பனாருடன், நீ இவ்வாறு பேசுவது உனக்கு உசிதமல்ல. நீ வேண்டுமென்று விரும்பும் எல்லாவற்றையும் உனக்குக் கொடுத்திருக்கிறேன் – 

வி: வாஸ்தவந்தான் – அதெல்லா மிருக்கட்டும் – நான் இப்பொழுது பேசவந்தது அவைகளைப்பற்றியல்ல — என்னைப்பற்றியல்ல – உம்மைப்பற்றி. 

அ: என்னைப்பற்றி? 

வி: ஆம் – உம்மைப்பற்றிதான். அப்பா, இதை நான் நேராகக் கூறுவதற்காக மன்னிக்கவேண்டும்! அப்பா நமது நாட்டு ஸ்திரீகளையெல்லாம் இவ்வாறு நீங்கள் – அலங்கோலப் படுத்துவது – எனக்கு திர்ப்திகரமா யில்லை. இது நியாயமல்ல! – பாபமாகும்! இந்த அற்பசுகத்திற் காலங்கழிப்பது, அரசராகிய உமக்கு அடுத்ததன்று! தெய்வகதியால் உமக்கு கிடைத்திருக்கும் இவ்விராஜ்யத்தைக் காப்பதைவிட்டு- 

அ: பொறு! – நான் கேட்பது — என் மகனுடைய குரலா?

வி: ஆம் – உமது மகனுடைய குரல் – உமது பிரஜைகளின் குரல்! நல்ல பிரஜையானவன் நல்லறிவுள்ள தாயைப் போல் – என்றும் நன்றி பாராட்டுவான் பொறுக்க முடியாதபடி கோபம் மூட்டப்படும்வரையில்- 

அ: இந்தக் கவலையெல்லாம் உனக்கு வேண்டாம் – அப்பா, நீ என்மகன் என்பது ஞாபகமிருக்கட்டும் – உன்னை நான் பெற்றுவளர்த்து இளவரசனாக்கியது – நீ எனக்கு கீழ்ப்படிந்து நடக்க, நீ எனக்கு புத்திமதி கூறுவதற்கல்ல! – உன்னால் ஆளப்படுவதற்கல்ல! நான் வளர்க்கும் நாய்க்கு என்னிடம் சவுக்கிருக்கிறது – தடியிருக்கிறது. கட்டாரியிருக்கிறது – விஷமிருக்கிறது – அதற்கு நான் எவ்வளவு கோபம் மூட்டியபோதிலும், அது என்னைக் கடிக்காதபடி செய்ய எனக்கு சக்தியுண்டு – அவைகளைக்கொண்டு – 

வி: இருந்தும் – என்றைக்காவது ஒரு நாள், அதைப் பொறுக்க முடியாதபடி இம்சித்தால் – உம்மைக் கடித்துத்தான் தீரும்! – அதன் சுபாவத்தை உம்மால் மாற்ற முடியாது! – அப்பா, என் கடமைப்படி நான் சொல்ல வேண்டியதை நான் சொல்கிறேன். – நீர் அரசனாக வாழ்வது உம்முடை முக்கியமான கடமையொன்றை நிறைவேற்றும் பொருட்டு என்பதை மறவாதீர்! அதாவது, உமது பிரஜைகளின் சுகத்தை விர்த்தி செய்து அவர்களைக் காப்பதற்காம்! – அவர்களை அழிப்பதற்கன்று! அன்றியும், உமக்கும், எனக்கும், எல்லோருக்கும், தாய்மார்களாயிருந்த தையலர்களின் கற்பைக் காப்பதற்காம்! – அதை அழிப்பதற்கன்று! 

அ: போதும் நிறுத்து! நீ அத்துமீறிப் பேசிவிட்டாய். என் பிரஜைகளை நான் பாதுகாக்கிறேனோ – அவர்களின் ஸ்திரீகளின் மானத்தை அழிக்கிறேனோ என்பதைப் பற்றி – உன்னுடன் வாதாடேன்! – ஒன்று மாத்திரம் நிச்சயம். சற்று முன்பாக உன் அறைக்கு அனுப்பினாயே – அந்த அழகியை – அது அவளுடைய கற்பைக் காப்பதற்கல்ல – அழிப்பதற்கே என்று எனக்கு நன்றாய்த்தெரியும்! நீயும் என்னைப்போல் துர்நடக்கையை உடையவனா யிருக்கும்பொழுது – ஏதோ மிகுந்த யோக்கியனைப்போல் – பாசாங்கு செய்வானேன்? 

வி: நான் – யோக்கியனைப்போல் – பாசாங்கு செய்யவில்லை நான் யோக்கியனாகத்தானிருக்கப்போகிறேன். 

அ: உன் புத்தியின் கூர்மையை நான் மெச்சவேண்டும்! அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்! – அந்த அழகியை, நீ தேர்ந்தெடுத்தது உனது வைப்பாட்டி யாக்கவல்ல – வேறு எதற்கு? சொல் பார்ப்போம்? 

வி: அவள் தந்தை தாயாரிடம் அவள் போய்ச்சேர – விடுதலை செய்வதற்கு. 

அ: ஆ! – அப்பெண்ணைப்பற்றி இப்பொழுது – ஞாபகம் வருகிறது. அவள் தந்தை, பந்துக்கள் எல்லாம் மடிந்தனர் – கொல்லப்பட்டனர் கடைசி சச்சரவில் – 

வி: ஆனால், – இவ்வுலகில் அவள் விரும்பிய இடத்தில் வாழும்படி அவளை அனுப்பப்போகிறேன்.- அதற்குத் தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன் – அவள் எங்கு வாழ் விரும்புகிறாளோ அங்கு வாழ்வதற்காக. 

அ: ஹா! ஹா! (ஒருவாறு நகைத்து ) நீ – என் மகனா? மகளா? என்று யோசிக்கிறேன் 

வி: என்ன சொன்னீர்! (கையை ஓங்குகிறான்) 

அ: உம்! – போதும்! உன் அறைக்குப்போய் – நடந்ததை யெல்லாம் – மறந்துவிடு.- நீ என் மகன் என்பதை நான் மறக்க முடியவில்லை. 

(விஜயன் மெல்ல போகிறான்) 

அவன் கூறியது – ஒரு விதத்தில் – (எழுந்து உலாவுகிறான்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி

இடம் – அரச குமாரனின் படுக்கையறை. 

ஜெயாவை ஆயா சிரிங்காரிக்கிறாள். விஜயன் கதவை மெல்ல திறந்துகொண்டு வருகிறான். ஆயா போய்விடுகிறாள். 

ஜெ: ஏன், அங்கேயே நிற்கிறீர்? – உங்கள் குல தர்மத்தின் படி நடக்கிறதுதானே? – உங்களைப் பார்த்ததும் நான் புன்சிரிப்பு கொள்ளவேண்டுமோ? அதைச் செய்ய வில்லை யென்றுதான் அங்கேயே நிற்கிறீர்களோ? – அப்படிச்செய்ய எனக்குத் தெரியாது –

வி: ஜெயா! ஜெயா! ஜெயா! – என்ன நீ இப்படி பேசுகிறாய்? 

ஜெ: இதையெல்லாம் பற்றி உமக்கு ஒன்றும் தெரியா தென்று பாசாங்கு செய்யும்! – நான் இங்கு எப்படி வந்தேன் என்பதைப்பற்றி ஒன்றும் அறியாதவர் போல் நடவும்! – ஏதாவது பாசாங்கு செய்யும் – என் மீது காதல் கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்ததுபோல்! 

வி: நான் அப்பொழுது பாசாங்கு செய்யவில்லை. – நான் உண்மையைக் கூறினேன். – நான் உன்மீது காதல் கொண்டிருப்பது சத்தியம்.- இது உனக்கு இன்னும் தெரியவில்லையா? 

ஜெ: நன்றாய்த் தெரிகிறது! – என்ன மூடபுத்தியுடையவள் நான்! உங்களுடைய தாய்க்கிழவி கூறினாள், நீர் என்ன செய்வீர் என்று! – நான் உங்களைப்பார்த்து புன்சிரிப்பு கொள்ளவேண்டுமென்றும், நீங்கள் அதன்பேரில் என்மீது மிகுந்த ஆசைகொள்வீர் என்றும் –

வி: ஜெயா! – ஜெயா! 

ஜெ: என்னவேண்டும் உங்களுக்கு என்னிடமிருந்து? உங்கள் பிரஜையாக கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமா? அப்படியே கீழ்ப்படிந்து நடக்கிறேன். ஆயினும், உம்முடைய கடமையென்ன? அரசர்களுடைய கடமை அவர்களது பிரஜைகளின் பொருளைப் பாதுகாப்பதல்லவா? அபலையும் அனாதையுமான என்னிடம் – என் கற்பென்னும் ஒரு பொருள்தானிருக்கிறது! -அதைப் பாதுகாப்பதைவிட்டு – அதையழிக்க – (கண்ணீர் சொரிகிறாள்). 

வி: ஜெயா! (தானும் கண்ணீர்விடுகிறான்). 

ஜெ. (அவனை ஏறெடுத்துப் பார்த்து) நீர், ஏன் கண்ணீர் விடுகிறீர்? 

வி: நீ இப்படி பேசுகிறாயேயென்று! (கண்ணீரை துடைத்துக்கொண்டு) ஜெயா! நீ கூறியபடி என் கடமையை நான் நிறைவேற்றுகிறேன். நீ காத்து வரும் பொருளை, நீ உன்னுடன் எடுத்துக்கொண்டு, இந்தவிடத்தை விட்டு நீ எங்குபோக விரும்புகிறாயோ அங்கு போவாய்! (கையைத் தட்டுகிறான்). 

ஆயா வருகிறாள். 

வி: இந்த அம்மாளுக்கு – அரண்மனையை விட்டு – உடனே வெளியே போக – ஒரு உத்திரவு கொடுத்து அனுப்பு.
ஜெ: அரசே! – உமது மனதில் இருப்பதை – நான் – அறிய முடியவில்லை. 

வி: இதோ, அறியச்சொல்கிறேன்! நான் உன் மீது உண்மையில் காதல் கொண்டிருக்கிறேன் உன்னை ஒரு பிரஜையாகக் கருதியல்ல – கேவலம் ஒரு ஸ்திரீயாகவும் கருதியல்ல! என் மெய்க்காதலுக்குப் பாத்திரமாக அவதரித்த – உத்தம பத்தினியாக! – நான் வேண்டுவதை அளிக்க எப்பொழுது மனம் வருகிறதோ – அப்பொழுது என்னிடம் வருவாய்! – அது வரையில் – உனக்காக நான் – தனியாகக் காத்திருப்பேன்! – ஆயா! அழைத்துக்கொண்டு போ! (ஆயா ஜெயாவுடன் புறப்படுகிறாள்) பொறு – நானே அழைத்துக்கொண்டு போகிறேன் வெளியில்! அரண்மனையை விட்டு ஒருவரையும் வெளியே போக விடக்கூடாதென்று சேவகர்களுக்கு – ஆக்கினையாயிருக்கிரதின்று! – நீ போகலாம்! – (ஆயா போகிறாள்) – நீவா – என்னுடைய படகு வெளியே காத்திருக்கிறது – நானே உன்னை அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் – படகு மார்க்கமாய். 

(ஜெயா பின்தொடரப் புறப்படுகிறான்) 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி

இடம் -அரசன் படுக்கையறையின் பக்கத்து அறை. அரசன் தனியாகப் படுத்திருக்கிறான். அவன் எதிராக காளிதேவியின் உருவம் தோன்றுகிறது. 

(கா.உ.) அரசனே! இனியயாவது திருந்திவாழ்! – ஜெயாவை சாமான்ய ஸ்திரீ என்று எண்ணாதே! உனது பிரஜைகளுக்குள் அவள் வேறொரு உணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறாள், எளிதில் அடக்கக்கூடாத ஆக்ரஷத்தை யுண்டுபண்ணியிருக்கிறாள், இந்த அக்னி ஜ்வாலையை உன்னால் எளிதில் அடக்கமுடியாது ஜனங்களெல்லாம் ஒரு சைகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உன் மகன், தன் வார்த்தை படி நீ நடவாவிட்டால் அந்த சைகையைச் செய்யப்போகிறான் – உன் மகன் அவள் மீது காதல் கொண்டிருக்கிறான். அவன், தனது அன்பையும் ஆர்வத்தையும் அடங்காக் காதலையும் அவள் பாதத்தில் சமர்ப்பித்திருக்கிறான் — அவன் உன்னைக் கொல்வதாக அவளுக்கு வாக்களித்திருக்கிறான்! – உன்னை அடிப்பதற்காக அவன் கரத்தையோங்கியதை நீ கவனிக்க வில்லையா? – நான் சொன்னேன்! – ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! (மறைகிறது). 

அ: என்ன! நான் உறங்கினேனா? கனவு கண்டேனா? (கையைத்தட்ட சில சேவகர்கள், ஒரு ஸ்திரீ, தாய்க் கிழவி வருகின்றனர்).கொஞ்சம் முன்பாக, நீ எனக்கு என்ன தெரிவித்தாய்? – கோயில் மணியை அடிக்கக் கூடாதென்று நான் கட்டளையிட்டிருந்தும் அவள் அப்படிச் செய்தனளா? – எனது ஆக்கினையை அவள் மீறி நடந்தனளா? அதைத் திரஸ்கரித்தனளா? அப்படிச் செய்தும் நீ அவளை, ஏன் கைதியாக்கவில்லை? 

(மு.சே.) மகாராஜா! அவள் கோயிலுக்குள் புகுந்துவிட்டாள்; ஆகவே அவளைக் கைதியாக்க முடியவில்லை, அவள் காளிகா தேவியின் காவலுக்குள் புகுந்தபின்! 

அ: காளிதேவியின் காவல்! (அவன் கன்னத்தில் அறைகிறான்) (மற்றொருவனைப் பார்த்து) நீ – என்ன சொன்னாய்? கோயிலுக்குள் புகுந்து அவள் அங்கு பாடினாளா? மடிந்தவர்களுக்காகப் பழிவாங்கவேண்டு மென்று அவள் காளி தேவியைப் பிரார்த்தித்து ஜனங்களையெல்லாம் தூண்டிவிட்டனளா? இதை யெல்லாம் பார்த்தும் கேட்டும் நீ அவளைக் கைப்பிடியாய் பிடிக்கவில்லை? 

(இ.சே.) மஹாராஜா! அவள் பட்சத்தில் எங்களைவிட அதிக ஜனங்கள் இருந்தார்கள். 

அ: அதிக ஜனங்கள் இருந்தார்கள்! பொட்டையே! (காதைப்பிடித்து இழுத்துத் தள்ளுகிறான்) – உன் சமாச்சாரம் என்ன? அவள் வந்தபடியே வெளியேறிப்போனாள்! – அதுவும் மணியடித்துக்கொண்டு! ஜனங்களையெல்லாம் கிளறிவிட்டு! – நீ இந்த வேடிக்கையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாயோ? 

(மூ.சே.) இல்லை மகாராஜா! நான் அவளைப் பின் தொடர்ந்தேன்; ஆனால் எனக்கு முன்பாக – இளவரசர் சென்றார்! – அவர் அவள் அருகிலிருக்கும்போது அவளைக் கைதியாக்க பயந்தேன். 

அ: இளவரசருக்கு – பயந்தாய்! (அவன் கழுத்தைப் பிடித் துத் தள்ளுகிறான்) – உன் கதையென்ன? இளவரசன் அவளை வேண்டும்படியான ஸ்திதிக்கு இழிந்தான்! அவள் அவனது தகப்பனுயிரை வேண்டினாள்! அப்படியே அதைக் கொடுப்பதாக அவன் சத்தியம் செய்து கொடுத்தான்! இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீ சும்மா இருந்தாய்! உங்களைப்போன்ற நாய்களுக்கெல்லாம், உணவளித்துப் போஷித்துவரும் அரசனுக்கு விரோதமாகச் சபதம் செய்ததை தடுக்க வேண்டியது உன் கடமையென்று உனக்குத்தோன்ற வில்லை! 

(நா.சே.) மகாராஜா! நான் ஒரு அற்ப சேவகன்! உங்களுக்குப் பிறந்து உங்களுக்குப்பின் இந்நாட்டை ஆளப்போகிறவரை நான் எப்படி எதிர்ப்பது? 

அ: இந்நாட்டை ஆளப்போகிறவன்! (அவனைக் கழுத்தைப்பிடித்துத் தள்ளிவிட்டு) (பதினெட்டாம் கூட்டத்தை அழைத்துக்கொண்டு போன ஸ்திரீயிடம்) நீ அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போனபோது ஜனங்களெல்லாம் கலகஞ் செய்யத் தீர்மானித்ததாகவும் அவர்களுள் ஒருத்தி பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் பிள்ளைகளை அடக்கியதுபோல் அடக்கியதாகவும் தெரிவித்தவள் நீ அல்லவா? 

(அந்த ஸ்திரீ) ஆம்! மகாராஜா! தாங்கள் இதை தயவு செய்து கவனிக்கவேண்டும் – 

அ: மூடு வாயை! – நீ என்னசொல்ல இங்கு நின்றுகொண்டிருக்கிறாய்? 

(தாய்க்கிழவி) அவளை ஜாக்கிரதையாக வெளியே அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்று இளவரசரே. அப்பெண்ணை அரண்மனையிலிருந்து அழைத்துக் கொண்டு போனார்- 

அ: அவ்வளவு போதும்! எல்லோரும் போங்கள் வெளியே! நான் தனியா யிருக்கவேண்டும் (சேவகர்கள் முதலியோர் போகின்றனர்). 

(உட்கார்ந்து) அவர்கள் ஒருவர்மீதொருவர் காதல் கொண்டிருக்கின்றனர் – என்ன ஸ்திதிக்கு இழிந்தோம்! மாட்சிமை தங்கிய இவ்வரச வம்சம், மங்கிப் போகக் காலம் வாய்த்ததே! 

காட்சி முடிகிறது. 

நான்காம் காட்சி

இடம் – நதி. அதில் ஒரு படகு போகிறது; அதில் மாலுமிகள் மத்தியில் விஜயனும், ஜெயாவும் இரண்டு பக்கங்களில் உட்கார்ந்திருக்கின்றனர். 

(ஒ. மா. சிறுவன்) அதோபாரு!நம்பொ ராஜா புள்ளெயும், அந்த பொண்ணும் ஒருத்தர் மேலே ஒருத்தர் எவ்வளவு கோவமா யிருக்கராங்க! அப்படியிருந்தும் நம்ப ராஜா புள்ளே அவளெ அழைச்சிகினு போவராரே! – என்னா வுலகண்டாப்பா இது? 

(இ.மா.) நீ ஒரு மடையன்! நீ சின்னவன்! ஒனக்கு இந்த ஒலகம் சமாச்சாரம் இன்னும் ஒண்ணும் தெரியாது! – அவங்க ரெண்டு பேரும், ஒருத்தர் மேலே ஒருத்தர் ரொம்ப ஆசையா யிருக்குராங்கடாப்பா! 

(மு.மா.) அப்படியானா – அவுங்க ஒருத்தரோடே ஒருத்தர் ஏம் பேசலெ? 

(இ.மா.) ஒருவேளே, ஏதானாலும் புருஷம் பெண்சாதி சண்டையா யிருக்கும்! அதுக்காவ இப்பொ ரெண்டு பேரும் மூஞ்செ தூக்கிகினு வைச்சிகினு இருக்கராங்க. – சமாதானமாவ அவுங்களுக்கு சரியான வழி தெரியலையொ என்னமோ? 

(மு.மா.) ரெண்டுபோரும் புத்தியில்லாதவங்க! ஒருத்தரெ ஒருத்தர் திரும்பிப் பார்த்து – சிரிச்சிகிட்டு போனதே மறந்து பூடரதுதானே? 

(ஜெயாவும், விஜயனும் அப்படியே செய்கின்றனர்) 

வி: (படகு நிற்பதைக் கண்டு) என்ன இது? படகை ஏன் நிறுத்துகிறீர்கள்? 

(இ.மா.) எளவரசே! – எதிர் கரைக்கு வந்துவிட்டோம். 

வி: கரையைக் கவனியாதீர்கள்! மறுபடியும் ஆற்றின் பிரவாகத்தில் படகைப் போகவிடுங்கள்! போக விட்டு படகை வேகமாய் ஓட்டுங்கள்! ஓட்டிக் கொண்டு போங்கள்! இக்காட்சியும் – இச்சந்திரனும் இந்நட்சத்திரங்களும் – தென்றலும் — அன்றிலும்- எங்களுக்கு இன்ப மூட்டட்டும்! (மாலுமிகள் அப்படியே செய்கின்றனர்) ஜெயா, இந்த சுதந்தரத்தை எடுத்துக்கொண்டதற்காக என்மீது உனக்கு – கோபமில்லையே? 

ஜெ: இல்லை! – நானும் உம்மைப்போல் மானிட சுபாவமுடையவளே! இந்த ஜன்மத்தில் நான் முடிக்கக் கோரும் கர்மம் ஒன்றிருக்கிறது – இருந்தும் நான் ஒரு பெண் ஜென்மமே! – இக்காட்சியும் – பூர்ண சந்திரனும்! – நட்சத்திரங்களும் பட்சிகளின் குரலும் – தென்றலில் அசைந்தாடும் கரையிலுள்ள மரங்களின் மெல்லிய ஒலியும், சங்கீதக் கருவிகளைப்போல – நமக்கு சந்தோஷத்தை யுண்டுபண்ணுகின்றன! – பேசும்! பேசும்! ஏதாவது பேசும் – உம்முடைய கடமையை மறந்து விடும்! – என் கடமையை நான் மறந்துவிடுகிறேன் சிறிது நேரம்! வேறு ஏதாவது சந்தோஷமாய்ப் பேசுவோம்! 

வி: நான் வாய்திறந்து பேசவேண்டியதில்லை! ஜகத்ரட்சகனுடைய சிருஷ்டியெல்லாம் – நான் சொல்லவேண்டியதைச் சொல்லுகின்றன! – அதைக்கேள் காதார! அனுபவி மனமாற! – அந்த ஆனந்தத்தில் நாமிருவரும் அமிழ்வோமாக! 

ஜெ: ஆம்!- ஆம்!-ஆம்! 

காட்சி முடிகிறது. 

நான்கவது அங்கம்

முதல் காட்சி

இடம் – அரசன் சயனக்கிரஹத்துப் பக்கத்து அறை; ஒரு புறமாக அரசன் படுத்துறங்குகிறார்; மற்றொரு புறமாக மந்திரிகள் நின்றுகொண்டிருக்கின்றனர். 

(மு.ம.) இளவரசர் – திரும்பி வந்தாரா? நான் தூங்கிக் கொண்டிருந்தபொழுது? 

(இ.ம.) இல்லை-இரவெல்லாம் நாங்கள் விழித்துக்கொண்டிருந்தோம் – இக்காலத்துச் சிறுவர்களும் சிறுமிகளும் மிகவும் கட்டுக்கடங்காதவர்கள் -அவர் திரும்பி வரட்டும்! – என் மனதிலிருப்பதை – அவருக்கெதிரில் தெரிவிக்கிறேன் கொஞ்சம்.- 

(மஹாராஜா கண்விழிக்கிறார்) 

(மு.ம.) மஹாராஜா அவர்களுக்கு நமஸ்காரம். 

அ: அவன் திரும்பி வந்துவிட்டானா ? 

(ஓர் வயோதிக ம.) இல்லை அரசே! – மஹாராஜா என்னை மன்னிக்கவேண்டும். – இரவெல்லாம் மஹாராஜா அவர்கள் சரியாகத் தூங்கவில்லைபோலிருக்கிறது – இதைக் கூறுவதற்காக என் மீது கோபங்கொள்ளலாகாது தாங்கள் சயனக்கிரஹம் சென்று சிரமபரிஹாரம் செய்துகொள்வது நலம். இளவரசர் திரும்பிவந்தவுடன் உங்களிடம் அவரை அனுப்புகிறோம். 

அ: நேற்றெல்லாம் இதைப்பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன் – இரவுங்கூட – என் மகன் புத்திசாலி நல்லறிவுடையவன் – நல்ல கோட்பாடுகளையுடையவன். நீங்கள் எல்லோரும் அப்படி எண்ணவில்லையா? 

(வ.ம.) ஆம் அரசே! மாட்சிமை பொருந்திய உமக்கு மகனாகப்பிறந்த அவர் எங்களெல்லோரையும்விட, ராஜ்ய பாரத்தின் கஷ்ட நிஷ்டூரங்களை நன்றாய் கவனிக்கும் சக்தி யுள்ளவரென்று நாங்களெல்லோரும் நம்புகிறோம். 

அ: என்னைவிட பதின்மடங்கு அதிகமாய்! நான் ஒப்புக் கொள்ளவேண்டியவனே! நான் துர்க்குணமுடையவன் – எல்லாப் பாபங்களையு மிழைத்திருக்கிறேன். பிரஜைகளின் நன்மையைப் பாராது அவர்களைப் பல விதங்களிலும் வாட்டியிருக்கிறேன். இந்நாட்டிலுள்ள ஸ்திரீகளுக்கு பெரும் பழி இழைத்திருக்கிறேன்.- எப்பொழுதும் புகழப்படுவதை விட்டு எல்லோராலும் இகழும்படியாக இந்நாட்டை இதுவரையில் அரசாண்டு வந்தேன் அவனே நல்ல சுபாவமுடையவன் – பெரும் தன்மை வாய்ந்தவன் – பிரஜைகள்மீது மிகவும் பட்சமுடையவன் – அனுதாபமுடையவன் – அவர்கள் நன்மையையே என்றும் நாடுபவன் – அவன் ஆண்டால்- 

(வ.ம.) மகாராஜா அவர்கள் – அரசை –  

அ: ஆம், என் அபிப்பிராயத்தை சரியாக அரிந்தீர் – அவன் அப்பெண்ணுடன் கூடக் காலம் கழிப்பதெல்லாம் அவனுக்கு வேறுவேலை இல்லாதபடியாலேயாம். நான் இந்த ராஜ்யத்தை அவன்மீது சுமத்துகின்றேன் இனி. அப்பொழுது அவன் அரசனாகச் செய்ய வேண்டிய கடமைகளுக்கன்றி வேறொன்றிற்கும் காலம் கொடாது- 

(வ.ம.) ஆயினும் – மகாராஜா அவர்கள்- இன்னும் கொஞ்ச காலம் – 

அ: என்னைத் தடுக்காதீர்கள்! என்றைக்காவது ஒரு நாள் அவன் சிம்மாசனம் ஏறவேண்டியவன் தானே! அதை நானிருக்கும்பொழுதே செய்து முடிக்கிறேன் – வேண்டு மென்றால் – சிலகாலம் – அவனுடனிருந்து அவன் செய்ய வேண்டியவைகளைக் கற்பிக்கிறேன் — ஏன் உங்கள் முகங்களையெல்லாம் இப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? இது உங்களுக்கெல்லாம் சந்தோஷத்தைத் தரவில்லையா? – என்ன மூடத்தனம்! கண்ணீர் விடாதீர்கள். உங்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் இவ்வாறு செய்தால் அது எனக்கு வருத்தத்தை உண்டு பண்ணுமென்று? நான் அநேகப் பாபங்களை இழைத்தபோதிலும், உங்களுக்கு எப்பொழுதும் துணை செய்திருக்கிறேன் என்பதை மறவாதீர்கள். இப்பொழுது நீங்கள் எனக்கு துணை செய்யவேண்டும், எனது கடைசிகாலத்தில்! – நீங்கள் துக்கப்பட்டு என்னைத் துக்கப்படச் செய்யாதீர்கள். நான் இதுவரையில் அனுபவித்ததை விட அதிக துன்பம் அனுபவிக்கச் செய்யாதீர்கள்! – நாம் சந்தோஷமாயிருப்போம் இனி! எனது குமாரன் அரசனாகி, நான் அவனது பிரஜையாகுமுன் எல்லாம் அனுபலித்துவிடுவோம். வாருங்கள்! சிறந்த மது தினுசுகளைக் கொண்டுவாருங்கள் – அழகிய பெண்களை யெல்லாம் வரவழையுங்கள்! வாத்தியக்காரர்கள் வரட்டும்! – (அனைவரும் வருகின்றனர்) யாராவது என் முன் நடனமாடட்டும்! -யாராவது என் இருபக்கமும் பாடட்டும்! வாத்தியக்காரர்களே! வாசியுங்கள்! – ஆட்டக் காரிகளே ஆடுங்கள்! – பாடகர்களே! பாடுங்கள்! 

(அப்படியே செய்கின்றனர்.) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி

இடம் – ஜெயாவின் விடுதி. 

ஜெயாவை அவள் தோழிகள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றனர். 

ஜெ: இதுவரையில், என் வாழ்க்கையானது, எல்லாத்துன்பங்களுக்கும் பாத்திரமாயிருந்தது! இப்பொழுது இப்பொழுதுதான் – சுகமடைவதற்கு காளிகாதேவி வழிகாட்டியிருக்கிறாள். தோழிகளே! – காதல் என்பது மஹத்தானது. அதற்கு ஆளாவது மிகுந்த இன்பமாம்! நான் காதல் கொண்டிருக்கிறேன் – இளவரசர் மீது ! அவரும் என் மீது காதல்கொண்டிருக்கிறார்! இதை விட பேரின்பம் வேறு எனக்கு என்ன வேண்டியிருக்கிறது? இக்காதலைக் கொண்டே இந்நாட்டை பாதிக்கும் துன்பங்களை யெல்லாம் – சச்சரவுகளையெல்லாம் ஒழிக்கிறேன்! நம்மவர் மாண்டதற்கெல்லாம் பரிகாரம் தேடுகிறேன்! ஒரு காலம் நாமெல்லாம் அரசருக்கு அடிமைகளாயிருந்தோம். – இனி நாம் இந்நாட்டின் தலைகளாயிருப்போம்! – தோழிகளே! சிரியுங்கள்! பாடுங்கள்! ஆடுங்கள்! பாடியாடுங்கள்! ஆடிப்பாடுங்கள்! 

(தோழிகள் அவ்வாறே செய்கின்றனர்). 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி

இடம் – அரண்மனையில் முடிசூட்டு மண்டபம். 

அரசர் சிம்மாசனத்தின்மீது உட்கார்ந்திருக்கிறார். இளவரசர், மந்திரிப் பிரதானிகளெல்லாம் எதிரில் வரிசையாக நிற்கின்றனர். பூஜாரிகள் மணிகளை அடித்துக்கொண்டு ஆரத்தி கொண்டுவருகின்றனர். 

அ: நிறுத்துங்கள் அதை! – நிற்கட்டும் இந்தத் தொல்லை! என் ராஜ்யத்திலேயே கூடாதென்று நான் கட்டளை யிட்டது, என் அரண்மனையிலேயே என் முகத்தெதிரிலேயே நடக்கிறதா? யார் இதைச் செய்யத் துணிந்தது? 

(மு.பூ.) மகாராஜா! இன்று இளவரசருக்குப் பட்டாபி ஷேகம் ஆச்சுதே! இந்த ராஜ்யத்தில், காளிகா தேவிக்கு பூஜை நிறைவேற்றிப் பிரசாதம் பெற்ற பிறகே, பட்டாபிஷேகம் ஆவது வழக்கம் – அதற்காகக் காளிகா தேவியின் பிரசாதம் கொண்டுவந்தோம். 

அ: மூடு வாயை! மடையனைப்போல் பேசாதே! — உங்கள் காளிகா தேவியும் வேண்டாம்! — பிரசாதமும் வேண்டாம்! — போங்கள் எல்லோரும் வெளியே! 

(மு.பூ.) மஹாராஜா! இது பெருங் குற்றமாம். நீங்கள் கோயில் மணிகளை அடிக்கக் கூடாதென்று கட்டளை யிட்டீர்கள் நமது மதாச்சாரப்படி பூஜை செய்ய லாகாதென்று தடுத்தீர்கள்! காளிகாதேவிக்கு கொஞ்சமும் உற்சவ முதலிய மரியாதைகள் செய்யலாகா தென்று ஆக்ஞாபித்தீர்கள் – இப்பொழுதோ, அவர்களின் பிரசாதத்தை மறுக்கிறீர்கள்! வேண்டாம்! காளிதேவிக்கு அஞ்சுங்கள்! இதுவரையில் நீங்கள் இழைத்த பாபங்களையெல்லாம் பராமுகம் செய்திருக்கிறார்கள் காளிகாதேவி! – இந்நாட்டையாளும் அரசராயிற்றே என்று! இதுவரையில் பொறுத்திருந்தார்கள் போலும் – ஆயினும் இனிமேல்- 

அ: என்ன உளறுகிறாய்! – சேவகர்களே! பிடித்துத் தள்ளுங்கள் இவர்களையெல்லாம்! அரண்மனைக்கு வெளியே! (சேவகர்கள் அப்படியே செய்கிறார்கள்) மந்திரிகளே! பிரதானி முதலியோர்களே! சேவகர்களே! அழகிய மாதர்களை அழைத்து வாருங்கள். நமது நாடெங்கும் பொறுக்கி சுந்தரிகளைக் கொண்டு வாருங்கள்.– நமது மகனுடைய பட்டாபிஷேகதினம் அவர்களெல்லாம் பாடியாடட்டும்! நமது சபையில் ஆடிப் பாடட்டும் – நமது ராஜ்யம் செழித்தோங்கும்படி! 

காட்சி முடிகிறது. 

நான்காம் காட்சி 

இடம் – ஜெயாவின் அறைக்கு வெளிப்புறம். 

ஜெயா நின்றுகொண்டிருக்கிறாள், பூஜாரிகள், ஜனங்கள் சூழ நிற்கின்றனர். 

(மு.பூ.) அம்மா, நாங்கள் கூறியதவ்வளவும் வாஸ்தவம் எங்களை மணியடிக்கக் கூடாதென்று கோபித்தார்! காளிகாதேவியின் பிரசாதத்தையும் வாங்கமாட்டே னென்று மறுத்தார்! எங்களையெல்லாம் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்படி கட்டளையிட்டார், அவரது சேவ கர்களுக்கு. 

ஜெ: ஆஹா! அப்படியா சமாசாரம்! இளவரசர் அங்கிருந்தாரா? 

(இ.பூ) ஆம் இருந்தார். 

ஜெ: அவர் ஏதாவது சொன்னாரா? செய்தாரா? 

(இ.பூ) அவர் சும்மா உட்கார்ந்துகொண்டு இதையெல் லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்தார். 

ஜெ: ஆஹா! அப்படியா சமாசாரம்! இதுவரையில் இந்த ராஜ்ய வம்சத்தார் நமக்கிழைத்த தீமைகளையெல்லாம் பொறுத்திருந்தேன்! இனி பொறுக்கமாட்டேன்! என் தம்பி, தகப்பன், அண்ணன், பந்துக்கள் எல்லாம் இறந்ததற்காக, இதுவரையில் நான் பழிவாங்கா திருந்ததே தவறாகும்! – இளவரசருக்காகப் பொறுத் திருந்தேன்! இனி நான் பொறுக்கமாட்டேன்! வாருங்கள்! நாம் எல்லோரும் அரசரது தர்பாருக்குப் போவோம்! – அவரது எதிரில், நானே இந்த மணியை அடிக்கிறேன்! – இந்த அரசரது ராஜ்யம் பாழாய்ப் போக! 

(ஜனங்கள்) அரசரது ராஜ்யம் பாழாய்ப்போக! 

ஜெ: இந்த மதப்பிரஷ்டனுக்கு மரணதண்டனை நாம் விதிப்போமாக! 

(ஜனங்கள்) மரண தண்டனை நாம் விதிப்போமாக! 

ஜெ: சகோதர, சகோதரிகளே! காளிகா தேவிக்கு ஜெய்!

(ஜனங்கள்) காளிகா தேவிக்கு ஜெய்! 

(ஜெயா அந்தமணியைத் தான் வாங்கிக்கொண்டு, அடித்துக்கொண்டு புறப்பட, ஜனங்களெல்லாம் ஆரவாரம் செய்துகொண்டு அவளைப் பின்தொடர்கின்றனர்.) 

காட்சி முடிகிறது. 

ஐந்தாம் காட்சி

இடம் – அரண்மனைக் கொலுமண்டபம். 

அரசன் சிம்மாசனத்தின்மீது வீற்றிருக்க நடன மாதர்கள் பாடி ஆடிக்கொண்டிருக்கின்றனர். மந்திரிப் பிரதானிகள் புடைசூழ்ந்திருக்கின்றனர். இளவரசர் ஒருபுறமாக உட்கார்ந்திருக்கிறார். வெளியில் மணி ஓசை கேட்கிறது திடீரென்று! 

அ: என்ன அது ? அந்த மணியானது மறுபடியும் எனது அரண்மனையில் அடிக்கப்படுகிறது! — இப்படிச்செய்ய யாருக்கு தைரியமிருக்கிறது? – சேவகர்களே! போங்கள்! தேடிப்பாருங்கள்! தேடிப்பார்த்து இப்படிச் செய்யத் துணிந்தவர்களைக் கைப்பிடியாகக் கொண்டு வாருங்கள் என் எதிராக! — அந்தத் தூணின் பின்புற மிருந்து சப்தம் வருகிறது! – ஒருவேளை அத்தூணின் பின்னால் இப்பாதகன் மறைந்திருக்கலாம்-

ஜெயா வெளியே வருகிறாள். 

ஜெ: இந்த அரசரது ஆக்கினையை மீறி மணியடிக்கத் துணிந்த பிராணி, தூணின் பின்னால் மறைந்துகொள்ளாது! இதோ! இதோபாரும் நானிருக்கிறேன்! அரண்மனைக்கு வெளியே சற்றுமுன்பாக மணியடித்தவள் நான்தான்! இதோ இப்பொழுது உள்ளேயும் அடிக்கிறேன்! உமக்கு எதிராகவே அடிக்கிறேன்! கேளும்! கேளும்! கேளும்! (மணியை அடித்துக் கொண்டே அரசனை அணுகுகிறாள்). மறுபடியும் நான், அரசே! உம்மை சந்திக்கிறேன்! – நீர் சிறைப் படுத்திய ஜெயா என்னும் பெயரையுடைய பெண்ணாகவல்ல! என் நண்பர்களும், என் தேசமும், என்னைக் கூப்பிடும் பெயர்- 

அ: அக்னி ஜ்வாலை! 

ஜெ: ஆம் அக்னி ஜ்வாலைதான்! 

அ: அழகானது மனித ஸ்வபாவத்திற்கே பெரும்வைரி! அதைப்பெற்ற பிராணிக்கு கர்வத்தையும் பிடிவாதத்தையும், உண்டுபண்ணுகிறது! – உனக்கோ அவைகளுடன் இறுமாப்பையும் அடங்காத் தன்மையையும் உண்டு பண்ணியிருக்கிறது! என்ன கர்வம்! நான்  உன் மீது பரிதாபப்படுகிறேன்! 

ஜெ: நீர் என்மீது பரிதாபப்படவேண்டாம்! – நான் உம் மீது பரிதாபப்படுகிறேன்! – யமனானவன் காத்துக்கொண்டிருக்கிறான் உம்முடைய உயிரைக் கொண்டுபோக! – அதைத் தடுக்கவேண்டுமென்று விருப்பமிருந்தால் — காலம் இருக்கும்பொழுதே — காத்துக்கொள்ளும்! 

அ: இதுவரையில் உன்னை கர்வம் பிடித்த இறுமாப்புடைய பெண் என்று எண்ணியிருந்தேன்! இப்பொழுது நீ மந்தபுத்தியுடையவள் என்று தெரிகிறது! என் ராஜ்யத்தில் கலகத்தை விளைவிக்க விரும்புவோர்கள், உன் அழகையே ஒரு கருவியாக்கி, சிங்கம் வாழும் குகைக்குள் அனுப்பியிருக்கிறார்கள்! அதன் மீசையை முறுக்கப்பார்க்க! 

ஜெ: நான் அவர்கள் கைகருவியல்ல! அவர்களுடைய பிரதிநிதி நான்! சிங்கம் வாழும் குகையைப்பற்றிக் கூறி என்னை பயமுறுத்தப் பார்க்கின்றீர் நீர்! இதற்குள் நான் முன்பே ஒருமுறை தைரியமாக நுழைந்திருக்கிறேன். இப்பொழுது நான் நுழைந்தது, சிங்கத்தின் மீசையை முறுக்கவல்ல! வீண் டம்பம் பேசும் ஓர் பூனையின் வாலைப் பிடித்திழுக்க! 

அ: பேசாதே! வாயை மூடு! உன் நாக்கு அதிகமாய் ஆடுகிறது! எனது படைவீரர்கள், – நான் ஒரு சைகை செய்வேனாயின் – உன்னைக் கட்டிப்பிடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், என்பதை நீ அறியாய்! 

ஜெ: உம்முடைய படைவீரர்களுக்கு நான் பயப்படுபவளல்ல! என்னைப் பிடித்து அவர்கள் என்ன செய்யக் கூடும்? – என்னைக் கொல்லக்கூடும்! அவ்வளவுதானே இந்த ஜ்வாலையையழிக்க அவர்களால் ஆகாது! அவர்களால் ஆகாது இந்த அக்னி ஜ்வாலையையடக்க! – இது முன்பே தேசமெங்கும் பரவிவிட்டது! – நான் போனால், என் ஸ்தானத்திற்கு வர ஆயிரக்கணக்கான பேர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்! அவர்களெல்லாம் வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர்! – உங்கள் படைவீரர்களுக்கு நீர் செய்வதுபோல் – நான் அவர்களுக்கு ஒரு சிறுசைகை செய்யவேண்டியதுதான் பாக்கி- 

அ: அந்த சைகை செய்யாதபடி தடுக்கிறேன்! அதைக் கொடுக்கும் கரத்தைத் துண்டிக்கிறேன்! அதைக் கொடுக்க விரும்பும் உன் கண்களைக் குருடாக்குகிறேன்! கொண்டுவாருங்கள் பழுக்கக்காய்ச்சிய இரும்புச் சலாகைகளை! இவளது கைகளை பின்கட் டாய்க் கட்டுங்கள்! (சேவகர்கள் அப்படியே செய்ய நெருங்குகின்றனர்.) 

வி: தொடாதீர்கள் அவளை! நான் பரிசுத்தமாகப் போற்றும் அவளது உடலைத் தீண்டாதீர்கள்! – ஒதுங்குங்கள் ஒரு புறம்! (சேவகர்களைப் பிடித்துத் தள்ளுகிறான்.) 

அ: ஆஹா! அப்படியா சமாசாரம்! – கைதியாக்குங்கள் இளவரசனையும்! இந்த ராஜ்யத்திற்கு இவன் துரோகியானான்! – பெருமை வாய்ந்த என் குலத்திற்கே துரோகியானான்! (சேவகர்கள் இளவரசனைக் கைதியாக்குகிறார்கள்.) 

நான் இதுவரையில் உன் அருமைத் தந்தையாயிருந்தேன்? ஆயினும் முதலில் நான் அரசன், பிறகு தான் உன் தந்தை என்பதை நீ அறியவேண்டும்! அந்தப் பெண் மீது நீ கொண்ட ஆசையானது உனது தகப்பனுக்குத் துரோகியாகும்படி உன்னைச் செய்கிறது! என் ராஜ்யத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமையானது, என் சொந்த மகனுக்கே விரோதியாகும்படிச் செய்கிறதென்னை! நான் இன்னும் அரசனாயிருக்கும்போதே என் கடமையை நிறைவேற்றுகிறேன்! நீ ராஜ்ய துரோகி ஆகிவிட்டாய்! ஆகையால் இந்தக்ஷணமே, உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். (சபையில் ஆரவாரம்) 

சந்தடி செய்யாதீர்கள் மடையர்களே! – நிஸ்சப்தம்! அரசனது வார்த்தை ஆக்கினையாகும்! 

வி: நாம் இதுவரையில் நடந்துவந்த மார்க்கங்கள் வேரா யிருந்தபோதிலும் நாம் இனிப்போகவேண்டிய முடிவு ஒன்றாயிருக்கிறது! (ஜெயாவின் அருகிற் போகப் பார்க்கிறான்.) 

அ: பிரியுங்கள் அவர்களிருவரையும்! (சேவகர்கள் அவர்களைப் பிரிக்கின்றனர்) அதுதான் சரி! உம்! என் பிரியமான அக்னி ஜ்வாலையே! – இப்பொழுது –

ஒரு சேவகன் ஓடிவருகிறான். 

(ஒ.சே.) மஹாராஜா! அரண்மனை தீப்பற்றி எரிகிறது! உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்! காலதாமதம் செய்யாதீர்கள்! 

அ: மூடு வாயை மடையா! 

இரண்டாம் சேவகன் ஓடிவருகிறான். 

(இ.சே.) மஹாராஜா! ஜனங்கள் அத்துமீறிவிட்டார்கள்! அரண்மனையைச் சூழ்ந்துவிட்டனர்! பறந்துபோம் இதை விட்டு! 

அ: பேசாதே இப்பொழுது பாதகா! – என்னைத் தடுக்காதே இப்பொழுது – 

மூன்றாம் சேவகன் ஓடிவருகிறான். 

(மு.சே.) மஹாராஜா! ஜனங்கள் எல்லாம் உள்ளே நுழைந்துவிட்டார்கள்! எதிர்க்கும் போர்வீரர்களை யெல்லாம் கொன்றுகொண்டு வருகின்றனர்! 

அ: பேயே! இதை என்னிடம் ஏன் கூறுகிறாய்? ரண பேரிகைக்காரர்களிடம் சென்று யுத்த பேரிகையை அடித்து சைனியத்தையெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களை எதிர்க்கிறதுதானே! அவர்களுடைய சொத்தையெல்லாம் கொள்ளையடிக்கச்சொல் -அவர்களையெல்லாம் கொல்லச்சொல்! இந்த ராஜ்யத்தை நான் இன்னும் ஆள்கிறேன் என்பதை அவர்களெல்லாம் அறியச்சொல்! 

(வெளியில் கோஷம்) இல்லை! இந்த ராஜ்யத்தில் இப்பொழுது காளிகாதேவி ஆள்கிறார்கள்! – வாருங்கள் நகரவாசிகளே! தோழர்களே! நண்பர்களே! 

அ: உங்கள் தோழர்களுடன் நண்பர்களுடனு நரகம்போய்ச் சேருங்கள்! வீரர்களே! அவர்கள் வரும் வழியை சற்றே தடுங்கள்! உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள்! இதோ இந்த வேலையை முடித்துக்கொண்டு, நானும் உங்களுக்கு உதவியாக வருகிறேன்! பெண்ணே! இந்தப் பேதைகளால் என்னைத் தடைசெய்ய முடியும் என்று எண்ணாதே! எனது போர் வீரர்கள் அவர்களுக்குத் தக்கபடி புத்திமதி கற்பிப்பார்கள் – ஹா! ஹா! (ஜெயாவை நெருங்குகிறார்; இளவரசர் சேவகர்களைத் திமிறிக் கொண்டு, அரசன் கையிலிருக்கும் காய்ச்சிய இரும்புச் சலாகையை தட்டிவிடுகிறான்; அது கீழேவிழுந்து அங்கிருக்கும் கம்பளியைக்கொளுத்த ஆரம்பிக்கிறது; அதை அவிக்க அரசர் போகும்போது, ஜனங்கள் போர் வீரர்களுடன் சண்டைசெய்துகொண்டு உள்ளே விரைகின்றனர். அரசகுமாரன் ஜெயாவை விடுவிக்கிறான்; அரண்மனை தீபற்றி எரிகிறது. அரசன் மீது எரியும் தூலமொன்று விழுகிறது; அரசர் அதன்கீழ் அகப்பட்டுக்கொள்ளுகிறார்.) 

அ: ஐயோ! ஐயோ! யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! தயவுசெய்யுங்கள்! தயவு செய்யுங்கள்! – ஜெயா! ஜெயா! என்னைக் காப்பாற்று! காளிகாதேவியின் பொருட்டாவது காப்பாற்று! 

ஜெ: ஆம்! காளிதேவியின் பொருட்டு உம்மைக் காப்பாற்றுகிறேன்! 

(அரசனை, ஜெயாவும் விஜயனும் விடுவிக்கின்றனர்.) 

ஆயினும் அரசே! இந்த ஜனங்கள் உம்மை எளிதில் விடமாட்டார்கள் அவர்களெல்லாம் அடங்காக் கோபங் கொண்டிருக்கின்றனர் – ஆகவே உம்மைக் காண்பார்களாயின் அவர்களால் உமது உயிருக்கே ஹானி வரும்!- 

ஒரு மனிதன் வேகமாய் நுழைந்து அரசனை வெட்டக் கோடாலியை ஓங்குகிறான். 

ஜெ: (பொறு!,அதனைப் பிடுங்கிக்கொண்டு) போவெளியே! (அம்மனிதன் பயந்து போகிறான்.) 

அ: அம்மா! நான் உனக்கு ஜன்மத்துவேஷி யென்பதை யறிந்தும் நீ என்னைக் காப்பாற்றினாய் இரண்டுமுறை! உனது நிகரற்ற நற்குணமானது, என் தீய குணத்தைச் சுட்டெரித்துவிட்டது! நீ எனக்குக் காட்டிய பச்சாத்தாபமே, என் பாழும் கல்மனத்தைக் கரைத்து விட்டது! – நான் உனக்கு என்ன கைம்மாறு செய் யப்போகிறேன்? என் முழுமனதுடன் உனக்கு நன்றி யறிதலுடையவனா யிருக்கிறேன்! உனக்கு எல்லாத் தீமையும் இழைக்க முயன்ற எனக்கு, நீ நன்மையைச் செய்ததை என்றும் மறவேன்!

ஜெ: மகாராஜா! இப்பொழுது இவைகளையெல்லாம் பற்றிப்பேசக் காலமில்லை! இதுதான் நமக்கெல்லாம் விடுதலை! – நமது தேசத்திற்கும்! உமக்குங்கூட! — ஜனங்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள்! உம்மைப் பார்த்தால் கொன்றுவிடுவார்கள்! – ஓடுங்கள்! காளிதேவியின் கோயிலுக்கு! அங்குதான் உங்களுக்கு அபயம் கிடைக்கும்! மோட்சம் கிடைக்கும்!

அ: ஐயோ! அங்குபோக எனக்கு தைரியமில்லையே! – பயமாயிருக்கிறதே! நான் பாபி! கொடும்பாபி! பஞ்சமா பாதகன்! காளிகாதேவியைக் கண் எடுத்து பார்க்கவும் சக்தியற்ற பாவியானேனே! 

ஜெ: ஒன்றும் பயப்படாதீர்கள்! காளிகாதேவி இவ்வுலகனத்தையும் பெற்ற தாய்! அவர்களுக்கு நல்ல பிள்ளையென்றும் கெட்ட பிள்ளையென்றும் வித்யாசம் கிடையாது! அவர்கள் தன்னைத் தஞ்சம் என்று அடைந்தவர்களை யெல்லாம் காக்கும் தயாபரி! ஓடிப் போய் அவர்கள் பாதத்தில் பணிந்து காக்கும்படி வேண்டுங்கள்! – ஓடுங்கள்! ஓடுங்கள்! 

வி: (வாயினிற்படியருகில் தடுத்து நின்று) ஜனங்களே! அரண்மனை தீப்பற்றி எரிகிறது! ஓடிப்போய்விடுங்கள்! இங்கு நில்லாதீர்கள்! க்ஷணத்தில் இது அப்படியே இடிந்து விழுந்தாலும் விழும்! தப்பி ஓடுங்கள்! உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்! 

ஜெ: நண்பர்களே! சண்டையை நிறுத்துங்கள்! ஓடுங்கள் இவ்விடம் விட்டு! 

(வெளியில் ஜனங்கள் ஓடுகிற சப்தம்) அரசர் பின் புறமாகத் தப்பி ஓடுகிறார்! 

காட்சி முடிகிறது 

ஆறாம் காட்சி

இடம் – காளிகோயில். 

அரசர் ஓடிவருகிறார். 

அ: தாயே! தாயே! தாயே! என்மீது கருணைகூரும்! இப் பரம பாதகன் மீது பட்சம் வைத்துப் பாதுகாரும்! – அபயம்! அபயம்! 

(வெளியில் ஜனங்களுடைய ஆரவாரம், எங்கே அரசன்! எங்கே அரசன்!) 

அ: (கர்ப்பக் கிரஹத்துட் பிரவேசித்து) தாயே! நீரோ கருணா சமுத்திரம் கடையேனைக் கடைக்கண் பார்த்தருளும்! நான் அநத்தம் கோடி பாபங்களை இழைத்துள்ளேன்! அவைகள் அனைத்தையும் மன்னித்தருளும்! உமது கண்களைத் திருப்பிக்கொள்ளாதீர்! கடைக்கண்ணாலாவது பார்த்தருளும்,மன்னியும் இப்பாதகனை? உமது சந்நிதானத்தை யடைந்தேன்! எனக்கு அபயம் அளித்து ரட்சியும்! 

ஜனங்கள் கோயிலுக்குள் வேகமாய் நுழைகின்றனர். 

(ஜனங்கள்) இதோ அரசன்! இதோ பாதகன்! கொல்வோம் உடனே! 

ஜெயா திடீரென்று வந்து கர்ப்பக்கிரஹ வாயிலில் நிற்கிறாள். 

ஜெ: பொறுங்கள்! நில்லுங்கள்! நமது காளிகாதேவியின் அபயத்தை பெற்றிருக்கிறார்! இனி இவருக்கு நீங்கள் ஒரு தீங்கும் செய்வது தர்மமல்ல! அவர் செய்த தப்பிதங்களுக்குத் தண்டிக்க காளிகாதேவிக்குத் தெரியும்! – நீங்கள் போங்கள்! 

(ஜனங்கள்) ஆம்! ஆம் காளிகாதேவிக்கு ஜெய்! காளிகா தேவிக்கு ஜெய்! 

(கலைகின்றனர்.) 

காட்சி முடிகிறது. 

ஐந்தாம் அங்கம்

முதல் காட்சி

இடம் – அரண்மனையில் கல்யாண மண்டபம். 

விஜயனுக்கும், ஜெயாவுக்கும் விவாஹம் ஆகிறது. 

பிறகு விஜயனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கிறது. 

(மௌனக்காட்சி.) 

காட்சி முடிகிறது 

இரண்டாம் காட்சி

இடம் – காளிகோயிலின் அர்த்த மண்டபம். 

அரசர் காவியுடையணிந்து நிற்கிறார்.எதிரில் விஜயனும், ஜெயாவும் நிற்கின்றனர். அவர்களுக்கு பின்னால் மந்திரிப் பிரதானிகள், சேவகர்கள் நிற்கின்றனர். 

அ: சகோதரர்களே! சகோதரிகளே! நான் பாரினில் இழைத்த பல பாபங்களையும் பரிஹரித்து, பரம பாவனையான காளிதேவி, என்னைத் தன் பாத சேவைக்கு ஆளாக்கிக்கொண்டார்கள்! – ஆகவே நான் உங்களுடன் வாழவேண்டிய காலம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் வாழவேண்டியது, உங்களுடைய அரசனாகிய, என் மகனுடனும், அவனது தர்ம பத்தினியாகிய ஜெயாவுடனும். பாபத்தில் எனக்குக் கீழ்ப் படிந்து நடந்ததுபோல் புண்ணியத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடவுங்கள்! நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன், எல்லோரும் நீடூழிகாலம் காளி தேவியின் கருணையினால் சுகமாய் வாழ்வீர்களாக நான் காளிதேவியின் கர்ப்பக்கிரஹத்திற்குள் போகிறேன் – அவர்களுக்குத் தொண்டுசெய்ய – என் வாழ்வு நாள் முழுவதும்! அவர்கள் வரப்பிரசாதத்தினால் என் பரபமெல்லாம் போக்க! – அவர்கள் பாதசேவையின் பரமானந்தத்தில் ஆழ்வதற்கு! 

(விஜயனும் ஜெயாவும் பணிகிறார்கள்) 

அ: குழந்தாய்! விஜயனே! எழுந்திரு! உனது முகத்தை கடைசிமுறை என் கண்களால் நான் பார்க்கட்டும்! நீ இந்நாட்டுக்கு அரசன். அப்பா, இவ்விராஜ்யம் உனது முதல் மனைவி! நான் இந்த ராஜ்ய லட்சுமியிடம் பாராட்டாத அன்பை, நீ அவர்களிடம் பாராட்டுவாய்! உன் சொந்த மனைவி ஜெயாவிடம் பாராட்டுவதை விட பதின்மடங்கு அதிகமாக! – அம்மா! குழந்தாய்! ஐயா! தீர்க்க சுமங்கலீ பவ! சுபுத்ரா வாப்திரஸ்து! நீ எனக்குப் பேரனைப் பெற்றுக் கொடுக்கும்போது அக்குழந்தை என்னைப்போலல்லாதபடி, அவனது தகப்பனைப்போல் பெருமை வாய்ந்தவனாயும், சத்யவானாயும், அரசர்களெல்லாம் மெச்சும்படியான நற்குண வானாயும் இருக்கட்டும்! – இதென்ன! கண்ணீர் விடுகிறீர்கள்! வேண்டாம்! வேண்டாம்! – சிரியுங்கள்! சிரியுங்கள்! ஹாஹா! அதுதான் சரி! – நான் வருகிறேன்! குழந்தைகளே! உலகெலா மீந்த காளி தேவி உங்களையும் உங்கள் பிரஜைகளையும, எல்லோரையும் காப்பாற்றுவார்களாக! – காளிதேவிக்கு ஜெய்!

(மற்றவர்கள்) காளிதேவிக்கு ஜெய்! 

கர்ப்பகிரஹத்திற்குள் நுழைகிறார். கதவு சாத்தப்படுகிறது.

காட்சி முடிகிறது. 

நாடகம் முற்றிற்று. 

– தீயின் சிறு திவலை (ஓர் தமிழ் நாடகம்), நாடகப்பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்களால் இயற்றப்பட்டது, முதற் பதிப்பு: 1947, இரத்தின விலாஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *