தீண்டாத சர்ப்பங்கள்
கதையாசிரியர்: சந்திரகாந்தா முருகானந்தன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 177
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீல நாட்களாகவே மனதுக்குள் நிலைகொண்டிருந்த பவன அமுக்கம், இன்று சூறாவளியாய் வெளிக்கொண்டது. இத்தனை நாட்கள் பொறுத்துப்பொறுத்து, பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டாள் பிரேமினி. “பிரிந்து போகத்தான் வேண்டும்”.
சம்பாத்தியத்தைக் கொடுத்து, சமைத்துப் போட்டு, சுகத்தைக் கொடுத்து, அடிமையாக வாழ்வதுதான் இல்லறமா? பெண்ணுக்கும் மனம் ஒன்றிருப்பதை ஏற்றக் கொள்ளாமல், பணம் ஒன்றுதான் குறி என்று நினைத்துச் செயற்படும் கோகுலனுடன் இனியும் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை என அவளுக்குத் தோன்றியது. குடும்ப கெளரவத்திற்காக, சமூகம் சேற்றை வாரி இறைக்கும் என்பதற்காக, தினமும் நரகத்தில் இருந்து கொண்டு, விதியை நொத்து கொண்டு, விருப்பமில்லாத வாழ்க்கையைத் தொடர வேண்டுமா?
நான்கு வருட தாம்பத்திய வாழ்வில் முதல் நான்கு மாதங்கள் போக, பிரேமினி மகிழ்ச்சியாக இருந்ததில்லை. வாழ்க்கை பற்றிய வண்ணக் கனவுகள் எல்லாம் மின்மினியாய் ஒளிர்ந்து, பின்னர் மறைந்த வானவில் போல் ஒவ்வொன்றாய் சிதைய, அவள் உடைந்து போனாள்.
திருமண வாழ்வின் மூலம் இமாலய உச்சத்தை எட்டிப்பிடிக்கும் எண்ணம், எண்ணையில்லா விளக்குப் போல மெல்ல மெல்ல மங்கி ஒளியிழந்து, ஏதோ ஒரு சூனிய இருளில் தனியே அஞ்ஞாதவாசம் செய்வது போல் கடந்த சில நாட்களாக உணர்ந்தாள்.
கோகுலனைச் சந்தித்துப் பழகிய நாட்களின் ஆரம்பத்தில், பருவ ஈர்ப்பு என்ற முகமூடியை உணராது, அவனோடு வாழப்போவதில் கிடைக்கப்போகின்ற எதிர்கால சுபிட்சம், பல நிறநிறக் கனவுகளாய் மனதில் வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகடிக்க, எண்ணிக்கையில்லா சின்னச் சின்ன ஆசைகள் எல்லாம் இனி நிறைவேறும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவனது காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாள்.
அவள் பொறுப்பு வைத்தியராக பதவி பெற்று சென்ற மருத்துவ மனையில், உதவி வைத்தியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, அவளிலும் பார்க்க ஐந்தே வயது அதிகமான கோகுலனின் அதிர்ந்து பேசாத, அமைதியான, சுபாவமும், மருத்துவதுறையிலே அவனுக்கிருந்த துல்லியமான அறிவும், கைராசியும், அதனால் மக்கள் மத்தியிலும், பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் அவனுக்கிருந்த புகழும், பெருமதிப்பும் அவன் மீது ஒருவித பிடிப்பை ஏற்படுத்திவிட்டது.
பெண்களைக் கண்டு சலனப்படாத அவனது போக்கும், பெண்களை மதிக்கும் பாங்கும், அவன் மீது ஏற்பட்ட பிடிப்பைத் தூண்டிவிட, அவனது விம்பம், அவள் மனதில் சுடர்விட்டுப் பிரகாசித்துத் தொடங்கியது.
கடந்து போன கால்நூற்றாண்டு, பெற்றோருடன் வாழ்ந்த சிறை வாழ்க்கை தகர்ந்து, ஒரு சுதந்திரப் பறவை போல அவனோடு வானில் இணையாகச் சிறகடித்துப் பறப்பது போல பிரேமினி உணர்ந்தாள்.
அப்பாவின் கட்டுப்பாட்டிற்குள்ளும், அம்மாவின் பண்பாட்டுப் போலிகளின் தாக்கங்களின் தகர்த்தெறியப்பட வேண்டிய சிறைவைப்புக் குள்ளும் இருந்து இனி விடுதலை கிடைத்துவிடும் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண்போல், சுதந்திரவாழ்வில் காலடி எடுத்து வைக்கப் போவதாகவும், சாதனைகள் படைக்கப் போவதாகவும், அவற்றிற்கெல்லாம் தூண்டியாக இருக்கக்கூடிய ஒரு யுகபுருசனைத் தரிசித்து விட்டதாகவும் கோகுலனின் அறிமுகத்தில் உணர்ந்தாள்.
கனவுகளில் வாழ்ந்து, மௌனச் சிறகடிப்புகளுடன், வெறும் எதிர்பார்ப்புக்களுடனும் மட்டுமே இமைகள் சோர்ந்து, இதயம் ஏங்கிய காலங்களுக்கு இனி முடிவுகாலம் வந்து விட்டதாகவும், தூரத்துப் பச்சைகளாய் காட்சியளித்த எதிர்கால விருட்சங்கள் எல்லாம் எட்டும் தூரத்திற்குள் வந்து விட்டதாகவும் அவளது இதயக் கூட்டுக்குள்ளே தென்றல் வீசியது.
அவளது எதிர்பார்புகளை நியாயப்படுத்தும் அவனது பெண்ணியக் கவிதைகளும், பெண்விடுதலைச் சிறுகதைகளும், ஆழமான பெண்ணடிமை விலங்கொடிக்கும் கட்டுரைகளும், அவள் நினைப்பு நிதர்சனமானது தான் எனக் கட்டியம்கூறி நின்றன.
முகமறியா ஒரு எழுத்தாளனாக மட்டும் அறிந்திருந்த கோகுலன், இதோ அவளாடு பணிபுரிகிறான். என்ற யதார்த்தம் ஏற்படுத்திய பெரு மகிழ்வில் அவள் மெல்ல மெல்ல தன் மனதில் அவனைக் குடியேற்றினாள்.
எப்போதாவது சில கவிதைகள் எழுதுகின்ற பிரேமினி , இனி தானும் சிறந்த படைப்பாளியாக உருவாகிட, இவனது ஒத்துழைப்பும், ஊக்கியும் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தன்னைத் தாமரைச்செல்வியாகவும், கோகிலா மகேந்திரனாகவும் உணர்ந்தாள்.
அவள், அவனது மேலதிகாரி என்ற நிலைகளையும் தாண்டி ஒரு இனிய நட்பாக அவர்களது உறவு மாறியபோது, அவளைப் போலவே, அவனும் மிகவும் மகிழ்ந்தான். அந்த நட்பு காதலான போது, அதை வெளிக்காட்டுவதில் இருவரும் தயங்கி நின்றனர்.
அவனது தகைமையும், ஊதியமும், பதவியும், ஏன் குடும்ப அந்தஸ்தும் கூட அவளைவிட ஒருபடி குறைந்தது என்பதால் அவனிக்கிருந்த தயக்கத்தை பிரேமினி புரிந்து கொண்டாள். எனவே மனதுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்ட அவனில் ஏற்பட்டு விட்ட காதலை அவள்தான் முதலில் வார்த்தைகளில் வடித்தாள். அவள் சிறிது தயத்துடனேயே சம்மதித்தான்.
அவனது மனதிலே இருந்த தாழ்வுச் சிக்கலை இவள் தனது ஆழமான அன்பு வெளிப்படுத்தலால் தகர்த்தெறிந்தாள்.
“பிரேமினி, நான் தகுதியில், அந்தஸ்தில், சாதியில், எதிலுமே உங்களுக்குப் பொருத்தமில்லாதவன்” என்று அவன் தயங்கித் தயங்கிக் கூறினான்.
“கோகுலன்… ஏன் உங்களைப் பற்றிக் குறைவாக நினைக்கின்றீர்கள்? நீங்களும் படித்தவர், பண்பானவர், செயல் திறன்மிக்கவர், எனக்கு கோகுலன் என்ற இளைஞனைப் பிடித்திருக்கிறது… அவனது எழுத்துக்களைப் பிடித்திருக்கிறது… உங்களது எண்ணங்கள், குறிப்பாக பெண்கள் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற சமூகச் சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதற்கு மேல் உங்களிடம் வேறு என்ன தகுதியை ஒரு பெண் எதிர்பார்க்கப்போகிறாள்?… பொய்யான போலிக் கௌரவங்களையும், சுயநல எண்ணங்களையும் விட, மெய்யான தேவைகளான உரிமைகளும், புரிந்துணர்வும் உங்களிடம் இருக்கிறது. மனிதநேயம் மிக்க ஒரு மனித இதயத்தின் முன்னே மற்றவை யாவும் தூசியே” என அவள் அழுத்தம் திருத்தமாகக் கூறியபோது ஒரு மெற்றிக் தொன் மகிழ்வில் அவனும் மிதந்தான்.
அப்படித் தொடங்கிய உறவுக்கு இப்படி ஒரு சிதைவு இவ்வளது குறுகிய காலத்தில் வருமென அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக் கவில்லை. ஒரு மனிதனின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளி இவ்வளவு அகன்றதாக இருக்கின்ற யதார்த்தத்தை தரிசித்தபோது அவள் மெல்ல மெல்ல உடைந்து, முற்றாக நொருங்கிப் போனாள். செட்டை கழற்றிய பாம்பாக, ஒரு சாதாரண ஆணாதிக்கக் கணவனாக அவனைக் கண்டபோது, காதற் கால இளவேனிற் கனவுகள் மின்சாரம் இழந்த மின்குமிழ் களாகின.
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவோ, நியாயங்களைச் செவிமடுக்கவோ தயாரில்லாத, அவளை ஒரு சாதனமாக மட்டும் நோக்கும் அவனது போகப் பார்வையில் எரிந்து சாம்பலானாள் பிரேமினி. விடியலின் தேடலில் ஆரம்பித்த அவளது இல்வாழ்வு, விடிவெள்ளியைத் தரையில் தேடிய கதையாய் அர்த்தமற்று அறுந்து, குற்றுயிரானது. ஈன்றபொழுது முதல் விலங்கிடப்படாது சிறையிடப்பட்டதாய், நரகத்தினுள்ளே இருந்து விட்ட இருளான கடந்த காலத்தை விட, நிகழ்காலத்தில் இன்னமும் காரிருள் சூழ்ந்தது.
பிரேமினியின் வீட்டில் இந்தக் காதல் விவகாரம் தெரிந்த நாட்களில், வீட்டில் உள்ள அனைவரும் ருத்திரத்தாண்டவமாடி அவளுக்கு மறுப்புக் கொடி காட்டினர். உனது அழகுக்கும், படிப்புக்கும், பதவிக்கும் எத்தனையோ மாப்பிள்ளைகளை விலை கொடுத்தே வாங்கக் கூடிய நிலையில் அப்பா இருக்கும் போது, இவனிலே எதைக் கண்டு மயங்கினாய்?” எனது அம்மா பிடிவாதமாக மறுத்து நின்ற போதும், இறுதியில் இவளது அழுகையும், கண்ணீரும், வீம்பும் தான் அவர்களைத் தகர்த்தது; அவர்களைச் சமாதானப்படுத்திச் சம்மதம் வாங்கித் தந்தது.
இவ்வளவு பிடிவாதமாக நின்று, தான் விரும்பிய வாழ்வைத் தேடிக் கொண்டவள், இன்று எந்த முகத்துடன் அவர்கள் முன் போய் நிற்பது?
சீதனம் வாங்காத காதல் திருமணம் என்ற வெறும் பெயர் மட்டும் தான்! அவளது பெயரிலே வங்கி இருப்பாக இருப்பது போக, அவள் ஒரே மகள் என்பதால் ஏனைய சொத்துக்கள் கூட அவளுக்குத் தான். திருமணச் செலவுகள் முதல் கொழும்பில் சொந்த வீடு, கார், முழுமையாகத் தளபாட, மின்சார, மற்றும் உபகரணங்கள் வாங்கிய தெல்லாம் அவளது பெற்றோரின் பொறுப்புத்தான்.
அவனும் கூட ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்த போதும், அவளிடம் வரும் போது வெறும் கையோடுதான் வந்தான். அவனது வங்கி இருப்புக் கூட திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னர் தான் காலியாகியிருந்தது. எனினும் அவள் எதையுமே எதிர்பார்க்கவில்லை. அவனிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் பூரணமான அன்பையும், புரிந்துணர்வையும், விட்டுக்கொடுப்பையும்தான்.
ஆனால் அவையேதும் இன்று இல்லை என்று தெரிய வருகின்றபோது, விமானத்தாக்குதலுக்குள்ளான பென்ரகன் கட்டடமாய், அவள் கட்டிய கோட்டைகள் எல்லாம் இடிந்து சரிந்தன.
ஆரம்பத் தேன்நிலவு எல்லாம் இனிப்பாய்ந்தான் இருந்தது. எல்லாம் இன்பமயம் என்ற மாயை தகர்ந்து போக ஒரு மாறுதல்கள் தான் தேவைப்பட்டது.
அடுத்த மாதம் வழக்கம் போல் சம்பளம் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்ததும் “சம்பளக் காசைத் தா” என்று அவன் கறாராகக் கேட்டபோது அவனது சுயரூபம் நிதர்சனமாக ஆரம்பித்தது.
அவன் தனது சம்பளத்தையும் அவளிடமே கொண்டு வந்து தருவான் என்று எதிர்பார்த்த அவளுக்கு, அவனது நேர் எதிரான செய்கை அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தாலும் மறு பேச்சின்றி அவனிடம் சம்பளப் பணம் முழுவதையும் கொடுத்தாள். அவனோ “என்ன, காசு குறைகிதே? என்று கேட்டபோது அவமானத்தில் குன்றிப்போனாள். மறுத்தால் வீணாக முரண்பட நேரிடலாம் என்று அவள் கருதியால் அவள் பொறுமையைக் கடைப்பிடித்தாள்.
அவள் தனது சிறுசிறு தேவைகளுக்குக் கூட அவனிடம் கேட்டுப் பெறவேண்டியிருந்தது. அது கூடப் பரவாயில்லை அதற்கெல்லாம் அவனுக்குக் காரணம் சொல்லவேண்டியிருந்தது. அவன் எல்லாப் பணத்தையும் என்ன செய்கிறான் என்று அவளிடம் கூறுவதில்லை. அவனோடு வாழ ஆரம்பித்த பின்னர் தான், இந்த உலகமே சுயநலம் என்ற அச்சாணியில் சுழல்வதை பிரேமினி உணர்ந்தாள். சிறப்பாக வாழவேண்டிய ஒரு இனிய இல்வாழ்வை, கோகுலனுடைய நடவடிக்கைகள் அதலபாதாளத்திற்குத் தள்ளியது.
வாழ்நாள் முழுவதும், ஒரு பூப்போல உன்னைப் பூசிப்பேன் என்று அவளுடன் காதல் வசனம் பேசிய கோகுலன் தான், இப்போது அவளது அபிலாசைகளை எல்லாம் அரும்பிலேயே கிள்ளி. எறிகிறான்.
குழந்தை ஒன்று கிடைத்து விட்டால் அவன் திருந்தி பாசமுள்ள குடும்பத் தலைவனாகி விடுவான் என்ற அவளது எதிர்பார்ப்பும் பொய்த்துப் போயிற்று. அவளுக்கு மட்டுமல்ல, அவளது குழந்தைக்கும் கூட எதிர்காலம் கானல்நீரானது.
இத்தனைக்கும் வேடிக்கை என்ன என்றால் அவன் இன்னமும் கதைகள் எழுதிக்கொண்டிருப்பது தான்!. கதையில் வரும் வார்ப்புக்களில் பெண்களைப் போற்றி, பெண்ணியம் சிறப்புற எழுதிக்கொண்டிருக்கின்றான்.
அவள் தானும் எழுத வேண்டும் என நினைத்தபோதெல்லாம், அதை மழுங்கடிக்குமாப் போல, “எழுதி மினைக்கடுறதை விட்டுட்டு வீட்டு வேலைகளைக் கவனி… பிள்ளையைப் பார்…” என்று பூச்சாண்டி காட்டினான்.
வீட்டு வேலைகள் எதிலுமே அவளுக்கு உதவியாக இருப்பதில்லை. வெளிவேளைகள் கூட சொல்லி வற்புறுத்தினால் தான் வேண்டா வெறுப்பாகச் செய்வான். அவளும் வேலைக்குப் போய் வருவதால் வீட்டிலிருக்கும் வேளைகளில், வேலைகள் மலை போல் குவிந்திருக்கும் அவனது உடுப்புகளைக் கூட அவள் தான் தோய்க்க வேண்டும். வேலை செய்யும் போது குழந்தை அழுதால் கூட தேற்றமாட்டான். ஏதாவது எழுதிக் கொண்டு அல்லது ஏதாவது ஒரு புத்தகமே கதி என்று உட்கார்ந்திருப்பான். குடும்பப் பொறுப்பு துளி கூடக்கிடையாது.
இரவு படுக்கையில் மட்டும் அவள் நித்தம் வேண்டும்! ஆரம்பத்தில், பரஸ்பர தேவை காரணமாக, ரசித்தவள், பின்னர் தனது கடமை என சகித்துக் கொண்டாள். அவனோ அவளது மனதுக்கு ஒத்தடம் ஏதும் கொடுக்காமல், அவளது உடலே குறியாக எப்போதும் அணுகும் போது, அவளுக்குத் தாம்பத்திய வாழ்வில் கூட வெறுப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக கோகுலன் எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பான். சின்னச் சின்ன விடயங்களை எல்லாம் தூக்கிப்பிடிப்பான். அவள் ஏதாவது சொன்னால் கூட, “உனக்கு வாய்க்கொழுப்படி… ஆம்பிளை என்ற மட்டு மரியாதை இல்லை…. உனக்கு என்னிலை அன்பில்லையடி… நீ பெரிசு என்கிற எண்ணம்…” என்று குதர்க்கமாகப் பேசுவான்.
அண்மையிலே பத்திரிகை ஒன்றின் சிறுகதைப் போட்டிக்கு அவள் தனது முதலாவது சிறுகதையை எழுதி, அனுப்புவதற்கு முன்னதாக அவனிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டாள். அவனோ அந்தக் கதையை ஒப்புக்குப் பார்ப்பது போல் பார்த்து விட்டு, ‘நிறைய திருந்தங்கள் செய்ய வேண்டும்’ என்று கூறினான். எனினும் அவள் கேட்டும், அவன் இவற்றைப் திருத்திட முன்வரவில்லை. இது பிரேமினிக்கு அதிக ஏமாற்றத்தைக் கொடுத்தது, எனினும் அனுப்பினான்.
சிறுகதைப் போட்டியின் முடிவு வெளியான போது, அவள் சற்றும் எதிர்பாராதவாறு அவளது சிறுகதை முதற்பரிசைப் பெற்றிருந்தது. எல்லையில்லா மகிழ்வுடன் அதைப் பகிர்ந்து கொள்ள அவள் அவனிடம் வந்தபோது, அவன் ஒரு வார்த்தை தானும் பாராட்டாதது அவளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அவனது ஒவ்வொரு கதையையும் விமர்சிக்கும் அவளுக்கு இது ஏமாற்றமளித்தது.
அவனது முரண்பாடுகளுக்கெல்லாம் காரணம் தாழ்வுச் சிக்கல்தான் என்பது அவளுக்குப் புரிந்தமையினால், அவள் மிகவும் கவனத்துடன் செயற்பட்டாள். எனினும் பயனற்றுப் போகவே நொடிந்து போனாள் பிரேமினி.
மனதில் அமைதி, நிம்மதி தேவையென்றால் அது கணவனிடமிருந்து தான் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்று அவள் உணர்ந்ததால், தனக்குப் பிடித்த விடயங்களில் அக்கறை செலுத்தி அமைதியைத் தேட முயன்றாள். தனது பணியிலும், தாயக விடுதலைப் போராட்டத்திற்கு உதவு வதிலும் சமூகப் பணிகளுமாகத் தன்னை ஈடுபடுத்தி ஆறுதல் காணமுயன்றாள்.
அவள் ஒன்று நினைக்க, அவன் வேறாக நினைத்தான். அவளது பணிகளில் கிடைத்த புகழ் அவனது மனதை உறுத்தியது.
மனமுடைந்த பிரேமினி அம்மாவிடம் சென்று தனது மனக்குறையைச் சொல்லி ஆறுதல் பெற முயன்றாள். அம்மாவோ, “நீயும் சில சமயங்களில் எதிர்த்துப் பேசுவதாகக் கூறுகிறாய். அது வேறு. என்ன இருந்தாலும் அவர் ஆண், நாம் தான் பொறுத்துப்போகவேண்டும். முழுநேரமும் அன்பாய் பழகு. அன்புக்கு அடிபணியாதவர் யாருமில்லை. காலப்போக்கில் உன்னை அவர் புரிந்து கொள்வார்.” என ஆணாதிக்க சிந்தனையின் பாற்பட்டவராகப் பதிலளிக்கவே பிரேமினிக்கு ஏமாற்றமாகிப் போய்விட்டது.
எனினும் அம்மாவின் ஆலோசனையை எடுத்தெறியாமல், அவனது வதைகளையும் பொறுத்துக்கொண்டு, அவனைப் புரியவைக்க முயன்றாள். எனினும் அதிலும் தோல்வியே கண்டாள்.
குடும்ப விவகாரங்கள் வெளியாருக்குத் தெரியக் கூடாது என்பதால், நான்கு சுவர்களுக்குள் எதையும் பேசித் தீர்த்துக் கொள்ள முயன்று வரும் அவளது நினைப்பும் இன்று தகர்ந்தது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவள் இன்று புதிதாக அவள் மீது சந்தேகச் சேற்றை வாரி இறைத்தபோது துடிதுடித்துப் போனாள். ஆண்கள், பெண்களை அடக்கிப் பாவிக்கின்ற இலகுவான வழியாக இதையே காலம் காலமாகப் பாவித்து வருவதை இவள் அறிவாள். எனினும் இவளால் இதைத் தாங்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட தர்க்கமே இன்று எரிமலை வெடித்ததற்கான காரணம்.
வாய்த்தர்க்கம் சண்டையாக கைப்பரிமாறலில் முடிந்த போது அது அயல் பிளாற்றிலுள்ளவர்களுக்கும் தெரிந்து போனது.
கோகுலன் வெளியே போய்விட்டான். வீங்கிய முகத்துடன் அழுத கண்களுடனும் பகல் பொழுது நகந்தது. மாலையில் இவளது தோழியும் அடுத்த வீட்டில் வசிப்பவளுமான தாட்சாயினி வந்திருந்தாள். அவள் விசாரித்ததும் மனதிலிருந்தவை எல்லாம் வெடித்துக்கிளம்பியது. மன ஆறுதல் தேடி அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் பிரேமினி.
தாட்சாயினி அன்போடு அவளை நோக்கினாள். ”கவலைப்படாதே பிரேமினி. வீட்டுக்கு வீடு வாசற்படிதான். ஆணாதிக்க சிந்தனைகளை ஒரே நாளில் இவ்வுலகிலிருந்து அழித்தொழித்தல் அசாத்தியமானது. மெல்ல மெல்லத்தான் உலகம் மாறவேண்டும். அவர் கோபமாக இருக்கும் போது நீ தர்க்கம் செய்யாதே. எனினும் உனக்கும் கோபம் வரும் என்பதைச் செயலில் காட்டலாம். குட்டக் குட்டக் குனிதலும் தவறுதான். அவர் கோபம் தணிந்திருக்கும் வேளைகளில் வேண்டுமாயின் குரலை உயர்த்தி வாதிடலாம்.” தாட்சாயினி சிரித்தாள். பிரேமினி அவள் சொல்வதையே செவிமடுத்துக் கொண்டிருந்தாள்.
தாட்சாயினிதான் தொடர்ந்தாள்.
“பெண்கள் அடங்கிப் போகும் மண்புளுவாகவோ, கடிக்கும் பாம்பாகவோ இருக்கக் கூடாது என அண்மையில் வாசித்தேன். அது உண்மையான கூற்று. நாமும் சமயத்தில் சீறிப்பாய்கின்ற பாம்பாக இருக்க வேண்டும். ஆனால் கடித்து விடக் கூடாது. கடித்துவிடும் என்ற பயம் இருந்தால் போதும். ஆண்களின் மூர்க்கத்தனம் படிப்படியாகக் கட்டுப்படும். கணவன் என்பவர் எமக்கு எதிரியல்ல. எமது சுகதுக்கங்களில் இணைந்து வாழ்வு முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டியவர் அல்லவா?” தாட்சாயினி பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.
பிரேமியின் மனதில் தெளிவு ஏற்படலாயிற்று. எனினும் உதடு பிரித்து எதுவும் பேசாமல் இருந்தாள். தாட்சாயினி தொடர்ந்து கூறினாள்.
“ஒப்பீட்டளவில் உனது கணவர் நல்லவர்தான். மோசமான வரல்ல. ஆணாதிக்க சமூகத்தின் மரபில் ஊறிய தன்மைகள்தான் அவரது முரண்பாடுகளுக்குக் காரணம். சில ஆண்களைப் போல குடி, கூத்தி எதுவும் அவரிடம் இல்லை. சந்தேகச் சேற்றை வாரி இறைத்ததும் உன் மீதுள்ள அளவுக்கதிகமான அன்பினால்தான். உண்மையிலேயே உன் மீது அவருக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரியவில்லை. வழிக்குக் கொண்டு வரக் கூடியவர் போலவே தெரிகிறது..”
சினேகிதியின் கூற்றில் அவள் மனம் லேசாகிலேசாகி ஏதோ புரிவது போலிருந்தது. முள்ளை முள்ளால் எடுப்போம். எனினும் விறைப்பு ஊசி போட்டு நோகாமல் எடுப்போம். என எண்ணிக் கொண்டாள்.
விடுதலை என்பது பிரிதல் அல்ல. புரிதல் தான் என்று பிரேமினிக்குப் புரிந்தது. அவள் புதிய நம்பிக்கையோடு கணவனை எதிர்கொள்ளத் தயாராக இருந்தாள்.
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)
திருமதி சந்திரகாந்தா முருகானந்தன் புதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் எழுத்துலகில் காலடி பதித்தவர். குறிப்பாக பெண்ணிய எழுத்துக்களுக்காகப் பெரிதும் பேசப்படுபவர்: கவிதை, சிறுகதை ஆக்கங்களை எழுதிவருகின்றார். கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் கொழும்புக்கிளையின் துணைச் செயலாளராக இருந்து கல்லூரியின் கல்விப் பணிக்கு செயலாற்றிவருகின்றார். பல சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் இவர் ஒரு சமாதான நீதவானுமாவார்.
‘தமிழ் அலை’ நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிகம், ‘விபவி கலாசார மையம்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்வுப் பரிகம், ‘உலகமாணவர் பேரவை’ யினரின் கவிதைப் போட்டியில் முதற்பரிகம், மாவீரர் தினக் கவிதைப்போட்டியில் பாராட்டுப் பரிகம் பெற்றுள்ளார். பெண்ணிய எழுத்தாளரான இவர் “பெண் விடுதலையும் சமத்துவமும்” என்னும் நூலின் ஆசிரியருமாவார்.
– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.