திருவடியும் சிற்றுணவும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே திருவடி என்னும் பெயரையுடைய ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு அகவை பதினான்கு. அவன் ஒரு செல்வனுடைய மகன். நினைத்த பொழுதெல்லாம் அகப்பட்ட சிற்றுணவுகளைக் கண்டபடி தின்பான். அதனால் அவனுடைய உடல் நன்கு பருத்துப்போய் இருந்தது. உடல் பருத்திருந்த காரணத்தை முன்னிட்டுப் பலரும் திருவடியைத் தடியன் என்றே கூறுவது வழக்கம்.
திருவடி தன் தந்தைக்கு ஒரே மகனாக இருந் தான். ஆகையால், அவனுடைய உடலுக்கு யாதேனும் நோய் நொடிகள் வந்துவிடக் கூடாதே என்று தந்தை மிகவும் பாதுகாப்பாக இருந்தான். ‘கண்டபடி சிற்றுண்டிகளைக் கொடுக்கக் கூடாது’ என்று தன்னுடைய வீட்டிலே சட்ட திட்டங்கள் செய்திருந்தான்.
ஒருநாள் திருவடிக்குத் தீனியிலே மிகுந்த அவா உண்டாயிற்று. தாயிடம் பொய்யான ஒரு காரணத் தைச் சொல்லி ஒரு ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஒரு சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றான். அங்கு வடை, முதலிய சிற்றுண்டிகள் செய்துவைக்கப்பட் டிருந்தன. அவைகள் கடலையெண்ணெய்யில் செய் யப் பெற்றவை. திருவடி தன்னிடம் இருந்த ஒரு ரூபாவுக்கும் கண்டபடி சிற்றுண்டிகளை வாங்கித் தின்று விட்டான். அவன் தின்றவைகள் செரிக்கவில்லை. திருவடி தின்ற சிற்றுணவுகள் மிகுதியாக உப்பிப் போய்விட்டன.
திருவடி திணறினான். அஞ்சத் தக்கவாறு பெருங் கூச்சலிட்டான். திருவடியின் தந்தை மருத்துவர் களுக்கு ஆள்விட்டான். மருத்துவர்கள் வந்து பார்த்தனர். செரிப்பதற்குச் சில மருந்துகளைக் கொடுத் தனர். அதனாலும் குணம் ஏற்படவில்லை. மூச்சுவிட முடியாமல் திருவடி தத்தளித்தான். திடீரென்று அவனுடைய மார்பை அடைத்தது. மார்பையடைக்கவே திருவடி இறைவனுடைய திருவடியை அடைந்து விட்டான். திருவடிக்கு நேர்ந்த இறப்பைக் குறித்துப் பலரும் வருந்தினர். சிற்றுண்டிகளை மிகுதியாகத் தின்றால், இவ்வாறுதான் இடுக்கண் ஏற்படும்.
‘நுண்மை நுகரேல்” (இ – ள்.) நுண்மை – நோயைத் தருகிற சிற்றுண்டிகளை; நுகரேல் – உண்ணாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,