திருட்டில் ஒரு தந்திரம்
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
பட்டணத்திலிருந்து ஒரு வியாபாரி ஒரு சிற்றூருக்கு வந்தான் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தான். பழைய பொருள்கள் எதுவானாலும் விலைக்கு வாங்கினான். எந்தப் பொருளானாலும் நான்கணா, எட்டணா, ஒரு ரூபாய் அதற்குமேல் வாங்குவதில்லை. இந்தச் செய்தி ஊர் முழுதும் பரவியது. தினமும் மக்கள் வந்து பொருளை விற்று, பனம் வாங்கிச் சென்றனர்.
வியாபாரிக்கு , வீட்டை வாடகைக்கு விட்டவர், “இந்தப் பொருள்களை வாங்கி நீர் என்ன செய்வீர்?” என்று கேட்டார்.
“இந்தப் பொருள்களை லாரியில் ஏற்றி, மலைப்பகுதி, மற்றும் ஆதிவாசிகள் வசிக்கும் இடத்தில் போட்டு விற்பனை செய்வேன். எத்தனையோ வியாபாரத்தில் இது ஒரு விதம்” என்றான் வியாபாரி.
பழைய பொருள்களை வாங்கிக் குவித்ததில் வீடு நிறைந்துவிட்டது.
அந்த ஊரில் இருந்த ஒருவனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை வியாபாரியின் வீட்டின் பின்புறம் சுவரில் ஏறி, ஏதாவது ஒரு பொருளை எடுத்து, முன்புறம் வந்து, வியாபாரியிடம் கொடுத்து எட்டணா அல்லது ஒரு ரூபாய் பெற்றுச் செல்வான். இப்படி பலநாட்கள் ஓடின.
அவனுடைய திருட்டுத் தனத்தை ஒருவன் கண்டுபிடித்தான். “நீ செய்யும் திருட்டு வேலை எனக்குத் தெரியும். ஆகையால், எனக்கு அதில் பாதி கொடுத்து விடு” என்று மிரட்டினான் அவன். “என்னுடைய தந்திரத்தால் நான் செய்கிறேன்” உன்னால் முடிந்தால், நீ செய்யலாமே? நான் தடையாக இருக்கமாட்டேன்” என்றான் அவன்.
மறுநாள் வியாபாரியிடம் சென்று அவனுடைய திருட்டுத் தனத்தைக் கூறிவிட்டான். வியாபாரி திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் வீட்டுக்குக் காவல் புரிய ஒருவனை ஏற்பாடு செய்தான் வியாபாரி.
திருட்டில் பங்கு கொடுத்திருந்தால் அவன் காட்டிக் கொடுத்திருப்பானா?
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.