தியாக உள்ளம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 1,958 
 
 

இந்து தன்னைப்பார்த்து சிரித்த போது மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது கந்தனுக்கு. நட்பாகக்கூட இதுவரை எந்தப்பெண்ணும் தன்னிடம் பழக வராதது வருத்தமாகவே இருந்தது.  “இங்க வாங்க” என மரியாதையாக அழைத்தது இனம் புரியாமல் தன்னிலை மறந்து நிற்கச்செய்தது!

“உங்களைத்தானே. காது கேட்கலையா…? மரக்கிளை முறியப்போகுதூ…….” என தூ எனும் வார்த்தையை சத்தமாக நீடித்து ஒலித்தபடி  பதற்றத்துடன் கூறிக்கொண்டே அருகில் ஓடி வந்தவள் தன் கைகளைப்பிடித்து, ஒரு தாய் தன் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்ற இழுத்துச்செல்வது போல் இழுத்து நான்கடி வைத்ததும் சொல்லியபடி மரக்கிளை முறிந்து கீழே விழுந்தது!

“கடவுளாட்ட வந்து காப்பாத்தீட்டே இந்து. நீ மட்டும் என்ற கையப்புடிச்சு இழுக்காமப்போயிருந்தா நான் இன்னேரம் உசுரோட இருப்பனான்னு தெரியலை” என வெகுளியாகப்பேசி ஆனந்தக்கண்ணீர் விட்ட படி தன் காலில் விழ வந்தவனைத்தடுத்தாள்.

இந்து படித்து முடித்து நல்ல சம்பளத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். ஒரே ஊரை சேர்ந்தவனான கந்தனை சிறு வயதிலிருந்தே தெரியும். அவனது தந்தை இறந்து விட நோயாளியான தாயை காப்பாற்றும் பொருட்டு படிக்காமல் வேலைக்குப்போனதால் படித்தவர்கள் யாரும் அவனை மதிப்பதில்லை. இன்று மரக்கிளை முறிந்து விழவிருந்த நிலையில் பேருந்து நிறுத்தத்தில் பலர் இருந்தும் கந்தனினின் கையைப்பிடித்து காப்பாற்றியதை பாராட்டாமல் கலாய்த்தனர்.

“டேய்….மச்சி…. பதினாறு வயதுல படம் பாத்திருக்கியா…?” என்றான் ஒருவன்.

“பதினாறு வயதிலே படம் பார்க்கலே. இதோ இப்பத்தான் பதினாறு வயதினிலே படத்த நேர்லயே ஷூட்டிங்கா பார்த்தேன். சப்பாணி கமல  ஶ்ரீ தேவி காப்பாத்துன காட்சிய பார்த்தோமே…” என்றான் இன்னொருவன்.

இந்து அவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. அவள் ஊருக்கு வந்து செல்லும் ஒவ்வொரு வாரமும் கந்தனை சந்திக்கும் படியான சூழ்நிலைகள் உருவாவதால் அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு தனக்குள் வந்திருப்பதை உணர்ந்தாள். உள் மனம் அவனைப்பார்க்க ஏக்கப்படுவதை தெரிந்து அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமடைந்தாள். 

“இந்து, நீ கந்தனை இனிமேல் பார்க்காதே. அவன் நல்லவனா இருந்தாலும் வல்லவனா இல்லை. வெகுளி, வெள்ளச்சோளம்னு ஊர்ல பேசிக்கறாங்க. சொந்தமா குடியிருக்கிறதுக்கு ஒரு வீடுங்கூட இல்லை”  அவனைப்பற்றி தரக்குறைவாக பேசினால் மறந்து விடுவாள், வெறுத்து விடுவாள் என அக்கா பேசியதை வெறுத்தாள்.

“ஒரு பையன் ஒரு பொண்ணப்பார்த்தாலே லவ், பேசினாலே லவ் னு இன்னும் ஹைதர்அலி காலத்துலயே இருக்கீங்க. நட்பா பழக கத்துக்கல. நட்பு வேற, காதல் வேற, கல்யாணம் வேறங்கிற புரிதல் இன்னும் வரல” சகோதரியிடம் கோபித்துக்கொண்டாள்.

வேலைக்கு சென்ற பின்பும் அடிக்கடி கந்தன் மீது ஞாபகம் வர ஒரு முடிவுடன் ஊருக்கு வந்தவள் கந்தனை தன்னுடன் நகரத்துக்கு வருமாறு கூற, அவனும் மறுப்பு சொல்லாமல் அவளுடன் பேருந்தில் ஏறிக்கொண்டவன் சிறு குழந்தையைப்போல பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான்!

அவனைப்பற்றி தான் எடுத்திருக்கும் முடிவு தவறாகி விடுமோ எனவும் பயந்தாள். ஆனால் சுதாரித்துக்கொண்டு அவனை நகரத்தில் ஒரு சிறந்த பியூட்டி பார்லருக்கு கூட்டிச்சென்று சிகையலங்காரம் செய்ய வைத்தாள். ரெடிமேட் ஆடைகளை வாங்கி கொடுத்தாள். ஹோட்டலில் இது வரை சாப்பிட்டு பழகியிராத கந்தனை சொல்லிக்கொடுத்து சாப்பிட வைத்தாள். 

‘நடப்பது கனவா? நனவா?’ என நினைத்தவனுக்கு பேச்சே வரவில்லை. பூம்பூம் மாடு போல அவள் சொல்வதையெல்லாம் செய்தான். அவனது மாற்றத்துக்கு இதுவே போதுமானதாக இருப்பதாக புரிந்து நம்பிக்கை கொண்டாள். ஊருக்கு கந்தனை கூட்டிச்செல்ல விரும்பாமல் நகரத்திலேயே தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகாவின் தந்தை நடத்தும் பேக்கரியில் வேலைக்கு சேர்த்து விட்டாள். ஒரு வாரத்தில் வேலையை கற்றுக்கொண்டான்‌ என தெரிந்து மகிழ்ந்தாள்.

அவன் தங்கியிருக்கும் வீட்டிலேயே டியூசன் வைத்து அவனுக்கு மிக முக்கியமான, தேவையான பாடங்களை படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்ததையும் மறுக்காமல் கற்றுக்கொண்டவன் ஒரு வருடத்தில் கூடுதலாக இந்தியும் கற்றுக்கொண்டான். பைக், கார் என வாகனங்களையும் ஓட்ட பழகிக்கொண்டான். அனைத்திற்கும் மேலாக பேக்கரியைதனியாக நடத்தும் அளவுக்கு தகுதி பெற்றதால் தான் வேலை பார்க்கும் நிறுனத்தில் லோன் வாங்கி தனது பெயரில் பேக்கரியை அவனுக்கு வைத்துக்கொடுத்தாள்!

பேக்கரி தொழில் நல்ல லாபம் தர, வேறு ஊர்களில் நான்கு பேக்கரிகளைத்திறந்தவள் அவனையும் பேக்கரியில் கூட்டாளியாக்கி தனது வேலையை விட்டு விட்டு தொழிலை கந்தனோடு கவனித்ததோடு உயர் தரத்தில் உணவுகளை தயாரித்து பேக்கரியை ஹோட்டலாகத்தரம் உயர்த்தி கோடிக்கணக்கில் லாபம் வரச்செய்தாள். சொந்த வீடு, கார், ஹோட்டலுக்கான சொந்த கட்டிடங்கள் வாங்கி அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கும் படி சாதித்துக்காட்டினாள். கந்தனுக்கும் சொந்த வீடு வாங்கிக்கொடுத்தாள்.

கந்தனின் திறமையையும், அழகையும் பார்த்த பெரிய தொழிலதிபர்கள் பெண் கொடுக்க முன் வந்த போது இந்து மகிழ்ந்தாள். 

எதற்குமே லாயக்கில்லாதவன் என ஒருவனை ஊரே சொன்ன போது அவனை பெரிய அறிவாளியாக, தொழிலதிபராக உருவாக்கிக்காட்ட வேண்டும் என நினைத்தவள் தற்போது சாதித்தும் விட்டாள். ஒரு நல்ல நாளில் நகரில் உள்ள பெரிய திருமண மண்டபத்தில் பெரிய தொழிலதிபரின் ஒரே பெண்ணுடன் கந்தனுக்கு நடந்த திருமணத்தை சிறப்பாக நடத்தி தன் பூர்வீக கிராமத்து ஊரையே திருமணத்துக்கு அழைத்து விருந்து வைத்தாள்.

கந்தனைத்தான் இந்து திருமணம் செய்து கொள்ளப்போகிறாள் என நினைத்திருந்த உறவுகளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதே திருமண விழாவில் தனது வருங்கால கணவர் எனக்காட்டி ஒருவரை அறிமுகப்படுத்திய போது கூடியிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.

எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன் வராத கால்கள் ஊனமான, தனது மாமன் மகன் ரகுவைத்தான் இந்து மணந்து கொள்ளப்போவதாக கூறியதை ரகுவின் பெற்றோரே ஏற்கவில்லை.

‘அவனுக்கு பிறப்புலயே ஊனமானது விதி. அதுக்காக நீ உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம்’ என ரகுவின் தந்தையான தன் மாமாவே கூறிய போது மறுத்து 

பிடிவாதமாக தனது முடிவில் உறுதியாக இருந்தாள்.

“என்னோட தந்தையே ஊனமுள்ளவர் தான். அவரை எனது தாய் திருமணம் செய்ய மறுத்திருந்தால் நான் பிறந்திருப்பேனா? ரகு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவன். சிறு வயதிலிருந்து எனக்கு மிகவும் இணக்கமானவன். கந்தன் ஒரு வெகுளி. ஆனால் திறமைசாலி, நல்லவன். அவனைத்திருமணம் செய்ய வேண்டும் என ஒரு நாளும் யோசிக்கவில்லை. உதவ வேண்டும் என்றுதான் யோசித்தேன். இப்படிப்பட்ட நல்லவன் ஒருவனின் வாழ்க்கை வீணாகப்போய்விடக்கூடாது என நினைத்துதான் நகரத்துக்கு கூட்டிட்டு போய் வழி காட்டினேன். அவனை தொழில் கூட்டாளியா ஏத்துகிட்டேன். ரகு எனது வாழ்க்கை கூட்டாளி. என்னோட வாழ்க்கைக்கு இவர்கள் போதுமானவர்கள். உலகத்தில் பிறந்த அனைவரும் நமக்கு இணக்கமானவர்களாக பிரியம் காட்ட வாய்ப்பில்லை. எனக்கு சரியென பட்டதில் மற்றவர்கள் உடன்பாடு கொண்டிருக்க வேண்டுமென நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எனது முடிவு எனக்கு மனநிறைவு. அவ்வளவுதான்” என இந்து பேசியபோது அவளது தியாகத்தை நினைத்து அதிசயத்த கூட்டத்தினரின் மௌனத்தால் திருமண மண்டபமே ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமானது!

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *